ஒரே பக்க நகைச்சுவை இணைய தளம்

firstlife3குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களைப் போல நையாண்டி செய்தே புகழ் பெற்று வில் கில்லாடிகள் இன்டெர்நெட் உலகில் நிறைய பேர் இருக்கின்றனர். கனடா வாலிபர் டோன் பேர்புட் டும் இந்த வரிசையில் தான் வருகிறார்.
.
ஆனால் மற்ற கிண்டல் கில்லாடிகளை விட இவர் விசேஷமானவர் என்றே சொல்ல வேண்டும். பேர்புட் ஒரே பக்கத்தில் தனது நகைச்சுவை வெளிப்பாட்டினை முடித்துக் கொண்டு ரசிப்பதையும் எளிமையாக்கி விடுகிறார். அந்த வகையில் அவர் சமீபத்தில் உருவாக்கியிருக்கும் நகைச்சுவை பாத்திரம் செகண்ட் லைப் கேம் தொடர்பானது.

நகைச்சுவை என்பது எளிதான விஷயம் அல்ல. அதிலும் பிரபலமாக இருக்கும் ஒரு நிகழ்வை கேலி செய்து மற்றவர்களை புன்னகைக்க வைப்பதற்கு தனிதிறமை வேண்டும்.
புன்னகைக்க வைப்பதோடு, கேலிக்குள்ளாக்கப்படும் விஷயம் தொடர்பாக விமர்சன ரீதியாக புதிய புரிதலையும் ஏற்படுத்துவதே நல்ல நையாண்டி.

பல நேரங்களில் இதற்கு விஸ்தாரமாக செயல்பட வேண்டியிருக்கும். இணைய தளங்கள் போன்றவற்றை கிண்டல் செய்யும் போது, அவற்றுக்கு இணையான கேலி தளத்தை அமைக்க வேண்டியிருக்கும்.

ஆப்பிள் நிறுவனம் பசுமை கொள்கையை பின்பற்றவில்லை என்பதை உணர்த்துவதற்காக கிரீன்பீஸ் இயக்கம், அந்நிறுவனத்தின் இணையதளம் போலவே தோற்றம் தரக்கூடியவகையில் ஆனால் உள்ளடக்கத்தில் நுட்பமான வேறுபாட்டோடு அமைத்த இணைய தளத்தை இதற்கான உதாரணமாக சொல்லலாம்.

இது போன்ற நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் பேர்புட் இப்படியெல்லாம் கஷ்டப் படுவதில்லை. மிக எளிமையாக ஒரே பக்கத்தில் தனது செய்தியை அவர் சொல்லிவிடுகிறார்.

செகண்ட்லைப், உலகையே வியப்பில் ஆழ்த்தியிருக்கும் ஆன் லைன் விளையாட்டாக உருவாகியிருக்கிறது. செகண்ட் லைப் என்றால் 2-வது வாழ்க்கை என்று அர்த்தமாகும். அதனை மெய்ப்பிக்கும் வகையில் பலருக்கு செகண்ட் லைப் என்பது உள்ளபடியே 2-வது வாழ்க்கையாகத் தான் மாறியிருக்கிறது.

மாபெரும் கலாச்சார நிகழ்வாக, மாற்று ஆளுமையின் வெளிப்பாடாக என்றெல்லாம், செகண்ட்லைப் பாதிப்பு பேசப்பட்டு வருகிறது. செகண்ட்லைப்பின் தனிச்சிறப்புகளில் ஒன்று அதில் உங்களுக் கான உலகத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம் என்பது. இதனை பயன்படுத்தி கொண்டு செகண்ட் லைப் உலகினுள் தனி நாணயம், அதற்கே உரிய பொருளா தாரம் எல்லாம் உருவாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ராய்டர்ஸ் செய்தி நிறுவனம், செகண்ட் லைப்பிற் கென்று தனியே செய்தி பிரிவை துவக்கியது. பல நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு செகண்ட் லைப்பில், தங்கள் இருப்பை உணர்த்தி வருகின்றன.

செகண்ட் லைப்பின் இந்த அதிகரித்து வரும் செல்வாக்கால் அதிருப்தி அடைந்த பேர்புட், அதற்காகவென்று ஒரு இணைய தளத்தை அமைத்திருக்கிறார். செகண்ட் லைப்பை மறந்து விடுங்கள், முதலில் உங்கள் முதல் வாழ்க்கையை பாருங்கள் என்று சொல்லும் வகையில், கெட் எ பர்ஸ் லைப் என்னும் பெயரில் அந்த தளத்தை அவர் அமைத்திருக்கிறார்.

செகண்ட் லைப் முகப்பு பக்கம் போலவே தோற்றம் தரும் இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் அவர் செகண்ட் லைப் தொடர்பான சங்கதிகளை நுட்பமாக கிண்டல் செய்யும் வாசகங்களை இடம் பெற வைத்திருக்கிறார்.

செகண்ட் லைப் தொடர்பான பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து நிஜவாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள் என்று மிக நேர்த்தியாக அவர் புரியவைக்கிறார். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்த பக்கத்தின் நகைச்சுவை உணர்வை புரிந்து கொண்டு செகண்ட் லைப் நிறுவனமும் கூட அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் கடிதத்தை அனுப்பி வைத்திருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

பேர்புட் ஏற்கனவே இப்படி ஆப்பிள் நிறுவனத்துக்காக ஒரு பக்க கேலி படத்தை அமைத்திருக்கிறார். தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட அவர் தனது பெயரிலேயே பிலாக் தளம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

—————

www;
www.getafirstlife.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *