காதல் கசக்குதய்யா…

vday1காதலர் தினத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி எதிர்ப்பு கத்திகளை தீட்டி கொண்டிருப்பவர்கள் கொஞ்சம் நிதானிக்க வேண்டும். இல்லாத இந்த தினத்தை புதுவழக்கமாக பிரபலமாக்க உற்சாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் விளைவாக சமீபகாலமாக இந்தியாவிலும், காதலர் தின கொண்டாட்டம் நிலை பெற்று விட்டது.
.
இதன் முன்னே மற்றும் பின்னே இருப்பது வர்த்தக நோக்கம்தான். எனினும் புதுமையை விரும்பும் பலர் குறிப்பாக இளைய தலைமுறையினர் நமது கலாச்சார வாசனை இல்லாத போதும் காதலர் தினத்தை விரும்பி கொண்டாட தொடங்கிவிட்டனர்.

பழமையை நேசிப்பவர்களுக்கு இந்த பிப்ரவரி மாதத்துக்கு பரபரப்பும், கொண்டாட்டமும் அன்னியமாக மட்டுமல்ல, அதிருப்தி அளிக்கக் கூடியதாகவும் இருக்கவே செய்யும்.

அதற்காக காதலர் தினத்துக்கு எதிராக செயல்படுவதோ, கொண்டாட் டத்திற்கு தடை உத்தரவு போட நினைப்பதோ, தேவையில்லாத தாகவே தோன்றுகிறது. காரணம் கண்டுகொள்ளாமல் விட்டால் இந்த காதலர் தினம் தன்னளவிலேயே காணாமல் போய் விடும். அல்லது அதன் முக்கியத்துவம் காலப்போக்கில் குறைந்துபோய் விடும்.

இப்படி சொல்வதற்கு ஆதாரம் இல்லாமல் இல்லை. காதலர் தினத்தை உலகம் தழுவிய நிகழ்வாக்கியதில் பெரும்பங்காற்றிய அமெரிக்கா விலேயே இதற்கு எதிர்ப்பு நிலவி வருகிறது என்பதே விஷயம்.

இங்கு போல வரிந்துகட்டி கொண்டு காட்டப்படும் எதிர்ப்பு அல்ல. இது எங்கள் தினம் அல்ல என்னும் உணர்வு தலைகாட்டும் இயல்பான எதிர்ப்பு. காதலர்களும், காதலை கொண்டாடுபவர்களும் பிப்ரவரி 14-ந் தேதியை ஏதோ புனித தினம் போல கொண்டாடி வந்தாலும், அமெரிக்கர்கள் பலர் இந்த கொண்டாட்டத்தை வெறுப் போடு பார்க்கவே செய்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் மணவாழ்க்கையிலோ அல்லது காதல் வாழ்க்கையிலோ ஈடுபடாமல் தனியே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். மற்றவர்கள் காதலர் தினத்தின் பரபரப்பை உள்ளபடியே வெறுப் பவர்கள். இவர்களில் சிலர் தங்கள் மன உணர்வை வெளிப்படையாக காட்டத் தவறவில்லை.

காதலர் தினத்தின் அருமை பெருமையை பறைசாற்ற இணைய தளங்கள் இருப்பது போல, இவர்கள் சார்பிலும் இணைய தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காதலர் தின பரிசு பொருட்களை போல அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பரிசு பொருட்களும் கூட புழக்கத்தில் இருக்கின்றன.

இவ்வளவு ஏன் காதலர் தினம் என்றவுடன் வாழ்த்து அட்டைகள் தானே நினைவுக்கு வரும். வாழ்த்து அட்டை தயாரிப்பில் முன்னிலையில் இருக்கும் அமெரிக்கன் கிரீட்டிங்ஸ் டாட்காம் நிறுவனம் காதலர் தினத்தின் போது பிரத்யேக வாழ்த்து அட்டை களை விநியோகித்து வருகிறது.

சமீபகாலமாக இதற்கு எதிராக உண்டாகியிருக்கும் மன உணர்வை புரிந்து கொண்டு காதலர் தின எதிர்ப்பு வாழ்த்து அட்டைகளையும் இந்நிறுவனம் தயாரிக்கத் தொடங்கியுள்ளது.

காதல் கசக்குதய்யா… என்னும் பாடல் வரிகளை போல காதலை நிந்திக்கக் கூடிய வாசகங்கள் அடங்கிய வாழ்த்து அட்டைகள்பரபரப்பாக விற்பனையா கின்றன. காதல் மெல்ல கொல்லும் போன்ற வாசகங்கள் தாங்கிய வாழ்த்து அட்டைகளும் பிரபலமாக இருக்கின்றன.

காதலர் தினத்தின் பரபரப்புக்கு நடுவே தங்களது எதிர்ப்பு உணர்வை காட்ட விரும்புபவர்கள் கணிசமாக இருப்பதை புரிந்து கொண்ட இந்நிறுவனம் அந்த சந்தையை விட்டு விட மனமில்லாமல் இந்த காரியத்தில் இறங்கியுள்ளது.

வர்த்தகம் பிரபலமாக்கிய காதலர் தினத்துக்கு எதிராக அதே வர்த்தகம் தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதனால் தான் நம்முடைய கலாச்சார காவலர்கள், காதலர் தினத்தை வர்த்தகத்தின் கைகளில் ஒப்படைத்து விட்டு வேறு முக்கிய வேலைகளை பார்ப்பது நல்லது என்று சொல்கிறோம்.

காதலர் தினத்துக்கு எதிரான கருத்துக் களை விவாதிப்பதற் காகவென்றே ஆன்ட்டி வீடே டாட்காம் என்னும் தளமும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

——–

0 thoughts on “காதல் கசக்குதய்யா…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *