All posts by CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

இசையால் உலகை இணைத்த ஸ்முல் செயலியின் பூர்வ கதை!

http-mashable.comwp-contentuploads201208Singஸ்முல் செயலியை எல்லோரும் கரோக்கி செயலி என குறிப்பிடுவதை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. இப்படி சொல்வதில் எந்த தவறும் இல்லை என்றாலும், இது ஸ்முலுக்கான சரியான அறிமுகம் இல்லை- முழமையான அறிமுகமும் இல்லை. இசைப்பிரியர்களுக்காக ஸ்முல் உருவாக்கி வரும் பரந்து விரிந்த இசைப்பரப்பில் கரோக்கி செயலி ஒரு அங்கம் அவ்வளவு தான். மற்றபடி ஸ்முலில் தெரிந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது.

ஸ்முல் நிறுவனத்திற்கான விக்கிபீடியா பக்கம் சமூக இசை செயலிகளை உருவாக்குவதில் விஷேச கவனம் செலுத்தி வரும் அமெரிக்க நிறுவனம் என்றே ஸ்முலை குறிப்பிடுகிறது. இசை மூலம் உலகை இணைக்கும் முயற்சியாக ஸ்முல் இணையதளத்தின் அறிமுக வாசகம் தெரிவிக்கிறது.

ஆம், ஸ்முல் சாதாரண இசை சார்ந்த செயலி அல்ல; இசை மூலம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் இணைக்க உதவும் சமூக வலைப்பின்னலாக அது உருவாகி வலுப்பெற்று வருகிறது. அதனால் தான், போர்ப்ஸ் பத்திரிகை கட்டுரை, சந்தேகத்திற்கு இடமில்லாமல் உலகின் சக்தி வாய்ந்த சமூக ஊடகங்களில் ஒன்றாக ஸ்முல் உருவாகி இருப்பதாக குறிப்பிடுகிறது. சும்மாயில்லை, உலக மக்கள் தொகையில் 4 சதவீதம் பேர் இதன் சேவையில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

’’இசை என்பது கேட்டு ரசிப்பதற்கானது மட்டும் அல்ல, என ஸ்முல் நிறுவனம் கருதுகிறது. இசை என்பது உருவாக்குவது, பகிர்வது, கண்டறிவது, பங்கேற்பது மற்றும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது என்று ஸ்முல் நம்புகிறது’ என மற்றொரு கட்டுரை ஸ்முலை வர்ணிக்கிறது.

’உங்களை இசைமயமாக்கும் இயந்திரம்’ என இன்னொரு பத்திரிகை கட்டுரை வர்ணிக்கிறது. ஸ்முல் சேவையில் மூழ்கி திளைத்திருக்கும் இசை பிரியர்களுக்கு இந்த வர்ணனை ஜாலம் எல்லாம் தேவையே இல்லை. ஏனெனில் இவற்றை எல்லாம் நடைமுறையில் அவர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். அதனால் தான் ஸ்முலின் அபிமானிகளாக இருக்கின்றனர்.

யூடியூப்பை போல ஸ்முல் இசையை ஜனநாயகமயமாக்கி இருப்பதாக பாராட்டப்படுகிறது. ரசிகர்கள் வெற்று தாளம் போட்டி, கைத்தட்டி இசையை கேட்டு மகிழந்தவர்களாக இருந்த காலம் மாறி, அவர்களும் இசையை உருவாக்கி, தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு, இசைமயமான உரையாடலையும், நட்பையும் வளர்த்துக்கொள்ள ஸ்முல் தனது செயலிகள் வாயிலாக வழி செய்திருப்பதாக கருதப்படுகிறது. இன்னும் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் எனில், ஸ்முலை இசைப்பிரியர்களுக்கான பேஸ்புக் எனலாம். அல்லது இசைக்கான இன்ஸ்டாகிராம் என புரிந்து கொள்ளலாம். இன்ஸ்டாகிராம் எப்படி சாதாரண மக்கள் கூட புகைப்படங்களை எடுத்து அவற்றை பில்டர்கள் மூலம் மெருகேற்றி மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்றனரோ அதே போல ஸ்மூல் செயலிகள் மூலம் சாதாரண ரசிகர்கள் இசையை உருவாக்கி பகிர்ந்து கொண்டு நட்பு வளர்த்துக்கொள்கின்றனர்.

இந்த வகை ஸ்முல் செயலிகளில் ’சிங்! கரோக்கி’ மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. இப்போது செய்திகளிலும் அடிபடத்துவங்கியிருக்கும் இந்த செயலி கரோக்கி முறையில் பாட வழி செய்கிறது. ஒரு பாடலின் பின்னணி இசை மட்டும் ஒலிக்க, அதில் பாடியவர் குரலுக்கு பதிலாக ரசிகர்கள் தங்கள் குரலில் பாடிக்கொள்ளும் வசதியே கரோக்கி என குறிப்பிடப்படுகிறது. ஜப்பானில் கரோக்கி இசை மிகவும் பிரபலம். அங்கு கரோக்கி பாட உதவும் பார்கள் எல்லாம் இருக்கிறது. நமக்காக ஆர்க்கெஸ்ட்ரா ஒன்று இசை அமைக்க நடுவே நாம் மைக் பிடித்து பாட முடிந்தால் எப்படி இருக்கும்! இந்த அனந்த அனுபவத்தை தான் கரோக்கி இசை வழங்குகிறது.

இணையத்தில் இதை சாத்தியமாக்கும் இணையதளங்களும், செயலிகளும் அநேகம் இருக்கின்றன. இந்த இடத்தில் ஸ்முல் செயலி வருகிறது. ஸ்முலின் கரோக்கி செயலி, பிரபலமான மெட்டுகளுக்கு ரசிகர்கள் பாட வழி செய்வதோடு, அந்த ஒலிப்பதிவை பலவிதங்களில் பகிர்ந்து கொள்ளவும் வழி செய்கிறது. இந்த பகிர்வுகள் விதவிதமான உரையாடலாகவும் மலந்து நட்பு வலை விரியச்செய்கிறது.

இவையே ஸ்முலை இசை சமூக ஊடகம் என சொல்ல வைக்கிறது. ஸ்முலின் இந்த தன்மையை புரிந்து கொள்ள அதன் பூர்வ கதையையும், முக்கியமாக அதன் நிறுவனர்களாக இசை பிரம்மாக்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு கரோக்கி ஸ்முலின் முதல் செயலி அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

2008 ல், ஸ்முல் ஒரு இசை ஸ்டார்ட் அப் நிறுவனமாக அமெரிக்காவில் உருவானது. ஆப்பிளின் ஐபோன் அறிமுகமான அடுத்த ஆண்டில் தான் ஸ்முல் அறிமுகமான ஆண்டு என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில் ஸ்முல் உருவானதில் ஐபோனுக்கு முக்கிய பங்கிருக்கிறது. ஐபோன் இல்லாமல் ஸ்முல் இல்லை. அதோடு புதுயுக போனாக ஐபோன் பிரபலமாகி பெரும் வரவேற்பை பெறுவதற்கு காரணமாக அமைந்த ஆரம்ப கால அருமையான செயலிகளில் ஸ்மூலும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

27smule2-popupஅமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த ஜி வாங் என்பவரும், அவரது மாணவருமான ஜெப் ஸ்மித் என்பவரும் இணைந்து தான் ஸ்முல் நிறுவனத்தை துவக்கினர். வாங்கை இசை திறனும், தொழில்நுட்ப அறிவும் இணைந்த கில்லாடி என்று தான் சொல்ல வேண்டும். இசையையும், தொழில்நுட்பத்தையும் இணைந்து பல ஜாலங்களை செய்யலாம் என்று அறிந்திருந்த வாங், இசை சார்ந்த புரோகிராம்களை உருவாக்குவதற்காக என்றே சங்க் எனும் கம்ப்யூட்டர் மொழியையும் உருவாக்கி இருந்தார். அதோடு லேப்டால் கம்ப்யூட்டர்களில் உள்ள ஆக்சலரேட்டர் எனும் கருவியை கொண்டு ஒலிக்குறிப்புகளை உண்டாக்கும் லேப்டாப் ஆர்க்கெஸ்ட்ராவையும் உருவாக்கி இருந்தார்.

ஒருமுறை வாங் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது அங்கு பிஎச்டி மாணவராக இருந்த ஜெப் ஸ்மித், அதைக்கேட்டு அசந்து போய்விட்டார். அந்த தாக்கத்தோடு, வாங் எண்ணங்களை வர்த்தக நோக்கிலான செயலி மூலம் மக்களிடம் கொண்டு செல்லலாம் என்று கூறினார். இதன் பயனாக வாங்கை இணை நிறுவனராகவும், ஸ்மித் சி.இ.ஓ. வாகவும் கொண்டு ஸ்முல் நிறுவனம் துவங்கியது. இசை உருவாக்கத்தை மையமாக கொண்ட புதுமையான சமூக வலைப்பின்னல் சேவையை உருவாக்க வேண்டும் என்பது தான் ஸ்மித்தின் நோக்கமாக இருந்தது. அந்த நோக்கத்தை கூறி நிறுவனத்திற்கான முதல் கட்ட நிதியையும் எப்படியோ திரட்டி பணிகளையும் துவக்கிவிட்டார்.

அவர்கள் உருவாக்கிய முதல் செயலி நோக்கியா போனுக்காக இருந்தது. ஆனால் அதற்குள் ஆப்பிள் நிறுவனம் ஐபோனை அறிமுகம் செய்தது. ஒரு கையடக்க கம்ப்யூட்டர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஐபோன் அற்புதமாக இருக்கவே அதற்கேற்ற செயலியை வாங் மற்றும் ஸ்மித் உருவாக்கத்துவங்கினர். இப்படி அறிமுகமானது தான் சோனிக்லைட்டர் செயலி. இதற்குள் ஆப்பிள் நிறுவனமும் செயலிகளுக்கான ஐஸ்டோர் கடையையும் திறந்துவிடவே சோனிக்லைட்டர் அறிமுகமாகி அட்டகாசமான வரவேற்பை பெற்றது.

சோனிக்லைட்டரை விளையாட்டான செயலி என்று தான் சொல்ல வேண்டும். போனுக்குள் ஒரு லைட்டர் இருந்து அதை அப்படியே ஏற்றி ஜோதியாக ஒளிரச்செய்தால் எப்படி இருக்கும். போனில் லைட்டர் ஒளி எரிவது போன்ற தோற்றம் சுவாரஸ்யமாக இருந்தது என்றால், போனை பக்கவாட்டில் அசைதால் லைட்டர் ஒளியும் அதற்கேற்ப வளைந்து கொடுத்தது இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது. அது மட்டும் அல்ல, இந்த லைட்டர் ஒளியை ஐபோன் திரை மீது ஊதி அணைக்கவும் செய்யலாம். அப்போது திரையில் இருந்து புகை வருவது போன்ற தோற்றமும் உண்டாகும். இந்த சாக்சங்களால் வியக்க வைத்த சோனிக்லைட்டர் செயலி லட்சக்கணக்கில் தரவிறக்கம் செய்யப்பட்டு பிரபலமானது. இந்த லைட்டர் தோற்றத்தை ஐபோன் பயனாளிகள் உலகின் எந்த மூளையில் உள்ள சக ஐபோன் பயனாளிகளுடனும் பகிர்ந்து கொள்ள முடிந்தது. இந்த பகிர்வுத்தன்மையே சோனிக்லைட்டர் செயலியை மேலும் சுவாரஸ்யமாக்கி அதன் மீதான ஈர்ப்பை அதிகமாக்கியது.

ஐபோன் அற்புதத்தை உணர்த்திய வெற்றிகரமான செயலிகளில் இதுவும் ஒன்றாக அமைந்தது. சோனிக்லைட்டரின் வெற்றியை அடுத்து மேலும் அசத்தலான ஆக்கரினா செயலியை ஸ்முல் அறிமுகம் செய்தது.  ( ஆக்கரினா என்பது ஒரு பழங்கால இசைக்கருவி)

ஆக்கரினா, ஐபோனையே ஒரு இசைக்கருவியாக மாற்றும் செயலியாக அமைந்தது. ஐபோனை வாயருகே வைத்துக்கொண்டு அதன் மீது ஊதினால், குழலில் இருந்து ஒலி வருவது போல இந்த செயலி உருவாக்கப்பட்டிருந்தது. அது மட்டும் அல்ல, திரையில் உள்ள நான்கு துளைகளின் மீது விரல்களை மாற்றி மாற்றி வைத்துக்கொண்டிருந்தால் ஒலியின் தாள லயத்தை மாற்றலாம். கொஞ்சம் பழகிவிட்டால், இந்த இசை செயலியை இயக்குவதில் தேர்ச்சி பெற்று இனிமையான இசையை உருவாக்குவதும் கூட சாத்தியம் தான்.

ஆக்கரினா செயலி அறிமுகமான போது, ஐபோனை ஒரு இசைக்கருவியாக மாற்றும் தன்மைக்காக அமோக வரவேற்பை பெற்றது. கையில் இருக்கும் போனை இசைக்கருவியாக மாற்றுவதே ஒரு புதுமை தான். இன்று ஸ்மார்ட்போன் சார்ந்த கித்தார் உள்ளிட்ட இசைக்கருவி செயலிகளுக்கு எல்லாம் முன்னோடியாக அமைந்த ஆரம்ப கால ஐபோன் இசை செயலிகளில் ஆக்கரினாவும் ஒன்று. ஆனால் ஆக்கரினா செயலி மற்ற செயலிகள் போல முன் தீர்மானிக்கப்பட்ட ஒலிக்கோவைகளை வழங்காமல், பயனாளிகளின் ஊதும் போது வரும் காற்றின் போக்கிற்கு ஏற்ப தனித்தன்மை வாய்ந்த ஒலியை உருவாக்கி தரக்கூடியதாக இருந்தது. அந்த அளவுக்கு மைக்ரோபோனின் உணரும் தன்மையை நன்றாக பயன்படுத்திக்கொண்டு இந்த செயலி உருவாக்கப்பட்டிருந்தது.

ஆனால், இசைப்பது என்பது இதன் ஒரு பகுதி தான். இந்த இசையை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியும் என்பது தான் ஆக்கரினாவின் இன்னொரு தனிச்சிறப்பாக அமைந்தது. ஆம், ஆக்கரினா பயனாளிகள் தங்களைப்போலவே மற்ற பயனாளிகள் உருவாக்கும் ஒலிக்கோவைகளை கேட்டு மகிழலாம். செயலியில் உள்ள பூமி உருண்டை பகுதியில், இப்போது உலகில் எந்த மூளையில் எல்லாம் பயனாளிகள் ஆக்கரினாவை இசைத்துக்கொண்டிருக்கின்றர் என்பதை பார்த்து, அங்கி கிளிக் செய்து கேட்டு மகிழலாம். அதே போல தாங்கள் உருவாக்கும் இசையையும் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் இசையை சேமித்தும் வைக்கலாம். இதற்கான பக்கத்தை ஆக்கரினா வலைமனையிலேயே உருவாக்கி கொள்ளலாம். இமெயில் மற்றும் பேஸ்புக் வாயிலாக நட்பு வட்டத்திலும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த சமூகத்தன்மையே ஆக்கரினா செயலியை இசைப்பிரியர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

உண்மையில், ஐபோனின் கையடக்க கணிணி ஆற்றல் மற்றும் இணையத்தின் வலைப்பின்னல் தன்மை இரண்டையும் அழகாக பயன்படுத்திக்கொண்ட இசை செயலியாக ஆக்கரினா அமைந்தது.

இந்த செயலியின் வெற்றிக்கு பிறகு ஸ்முல் மேலும் பல செயலிகளை அறிமுகம் செய்துள்ளது. எல்லாமே சமூக பகிர்வு தன்மையை கொண்டவை. இவற்றில் ஒன்று தான் கரோக்கி செயலி. கரோக்கி செயலியில் இளம் பாடகர்கள் மற்றும் இசை ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் குரலில் மெட்டுக்கு ஏற்ப பாடி பதிவு செய்து கொள்ளலாம். குரல் வளத்தை விட்டுத்தள்ளுங்கள், இசை சூழலில் தன்னை மறந்து பாடுவதே ஒரு பரசவமான அனுபவம் தான். இந்த அனுபவத்தை பெறுவதோடு, இப்படி பாடியதை பதிவு செய்து நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம். ஸ்முல் பயனாளிகளோடும் பகிர்ந்து கொள்ளலாம். விரும்பினால் ஒரு பாடலை மற்றவர்களோடு சேர்ந்தும் பாடலாம். இது நல்ல இசை பயிற்சியாகவும் அமையும். யூடியூப்பில் போய் பார்த்தல் இப்படி இணைந்து பாடப்பட்ட பாடல்களின் வீடியோக்களை பார்க்கலாம். பாடும் திறனை மெருகேற்றிக்கொள்வதற்கான அம்சமும் இந்த செயலியிலேயே இருக்கிறது.

பிரபலமான பாடகர்களுடன் ரசிகர்கள் ஒரு பாடலை டூயட்டாக சேர்ந்து பாடிய அனுபவத்தையும் ஸ்முல் வழங்கியிருக்கிறது. இதில் ஒரு சில ரசிகர்கள் லட்சக்கணக்கானோரை கவர்ந்து இணைய நட்சத்திரமாகவும் உருவாகி இருக்கின்றனர். 2011 ல் ஜப்பானின் சக்திவாய்ந்த பூகம்பம் உலுக்கிய போது, உலகம் முழுவதும் உள்ளவர்கள் ஸ்முலில் ஒன்றிணைந்து என் தோள் மீது சாய்ந்து கொள்ளுங்கள் என பொருள்படும் லீன் ஆன் மீ பாடலை பாடி நெகிழ வைத்தனர்.

இசைப்பிரியர்கள் இசை மூலம் தங்களுக்குள் தொடர்பு கொள்வதையும், இசையால் பேசிக்கொள்வதையும் ஸ்முல் சாத்தியமாக்குகிறது. இசையை கேட்டு ரசிப்பது மட்டும் ரசிகர்களின் வேலை அல்ல, அவர்கள் இசையை உருவாக்கலாம், பகிர்ந்து கொள்ளலாம், புதிய இசையை கண்டறிலாம் என்கிறது ஸ்முல். அதுவே அதன் பலமாக இருக்கிறது.

 

இணைப்புகள்:

  1. ஸ்முல் ஆக்கரீனா பற்றி அறிய: https://www.smule.com/ocarina/original
  2. ஸ்முல் பற்றிய போர்ப்ஸ் கட்டுரை; https://www.forbes.com/sites/mnewlands/2016/09/20/smule-has-changed-the-music-industry-completely-heres-how/#5e20381b41c0
  3. ஸ்முல் சி.இ.ஒ பேட்டி- http://techblogwriter.co.uk/107-jeff-smith-smule-founder-ceo-talks-rise-social-music-apps/
  4. ஸ்முல் தொடர்பான நியூயார்க் டைம்ஸ் கட்டுரை- http://www.nytimes.com/2011/11/27/magazine/smule.html?mcubz=1

=

நன்றி. யுவர் ஸ்டோரி தமிழ் இணைய இதழில் எழுதியது

 

 

இமெயிலில் இடம்பெற வேண்டிய சுருக்கங்கள்!


Inbox-Zero
மெயில் வாயிலாக தொடர்பு கொள்ளும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. உதாரணமாக யாருக்கு மெயில் அனுப்புவதாக இருந்தாலும் சரி, மெயிலில் என்ன இருக்கிறது என்பதை அதன் உள்ளட்டக்க தலைப்பு பகுதியிலேயே தெரிவித்துவிட வேண்டும். இமெயிலை பெறுபவர் இதன் மூலம் தலைப்பை பார்த்ததுமே மெயிலின் தன்மையை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படலாம். அதே போல, ரிப்லை ஆல், எனும் அனைவருக்கும் பதில் அளிக்கும் வசதியை கவனமாக பயன்படுத்த வேண்டும். அலுவலகத்தில் குழு மெயில் அனுப்பும் போது, தேவையில்லாமல் மேலதிகாரியையையும் அதில் இணைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் கொத்தாக மெயில் அனுப்பும் போது, பிசிசி (BCC ) வசதியை பயன்படுத்தினால், வேறு யாருக்கு எல்லாம் அதே மெயில் அனுப்ப பட்டுள்ளது என்பதை மெயிலை பெறுபவர்கள் பார்க்க முடியாது.

இப்படி இமெயில் தொடர்பான நுணுக்கங்களை அடுக்கி கொண்டே போகலாம். இவை பொதுவாக இமெயில் நாகரீகம் என குறிப்பிடப்படுகின்றன. நீங்கள் அனுப்பும் இமெயில் தவறாமல் வாசிக்கப்பட்டு பதில் அளிக்கப்பட விரும்பினால் இந்த இமெயில் நாகரீங்களை அறிந்து வைத்திருப்பது நல்லது.

இந்த பட்டியலில் இமெயிலுக்கான சுருக்க பெயர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதென்ன இமெயில் சுருக்க பெயர்கள்? இமெயிலின் உள்ளடக்க தலைப்புடன் ஒட்டிக்கொள்ளும் வகையில் இடம்பெறச்செய்யும் முதல் எழுத்து சுருக்கங்களை தான் இப்படி குறிப்பிடுகின்றனர். நீங்களே கூட, இ.ஒ.டி ( ), என்றோ அல்லது எல்.எம்.கே ( ) போன்ற சுருக்கங்களை இமெயிலில் பார்த்திருக்கலாம்.  மெயிலை பார்க்கும் போதே அதன் உள்ளடக்கம். மெயிலின் நோக்கம் தொடர்பான தகவல்களை உணர்த்துவதற்காகவே இந்த சுருக்க பெயர்களை பயன்படுத்துகின்றனர்.

இதன் பயன்பாட்டில் நீங்களும் தேர்ச்சி பெற விரும்பினால், மெயிலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சுருக்க பெயர்களுக்கான விளக்கம் இதோ:

அலுவலகத்தில் இல்லை:

இமெயிலில் உள்ள அணுகூலம் என்னவெனில் எந்த இடத்தில் இருந்தும், எந்த நேரத்திலும் பதில் அளிக்கலாம் என்பது தான். ஆக, அலுவலக மெயிலுக்கு நீங்கள் வீட்டில் இருந்தும் பதில் அளிக்கலாம். விடுமுறை பயணத்திற்கு இடையிலும் பதில் அளிக்கலாம். ஆனால், இவ்வாறு அலுவலகத்திற்கு வெளியில் இருந்து பதில் அளிக்கும் போது, நீங்கள் அலுவலகத்தில் இல்லை என்பதை உணர்த்துவிடுவது நல்லது. ஏனெனில், மெயிலை பெறுபவர் உடனடியாக பதிலை எதிர்பார்த்தால் அல்லது உங்களுடன் தொடர்பு கொண்டு பேச முடிந்தால் சிக்கலாகலாம்.

எனவே, நீங்கள் அலுவலகத்திற்கு வெளியே இருந்து மெயில் அனுப்புவதை குறிப்பிடுவது அவசியமாகிறது. இமெயில் தலைப்புடன், அலுவலகத்தில் இல்லை என்பதை (அவுட் ஆப் ஆபிஸ்) OOO எனும் சுருக்க எழுத்துகளை சேர்த்துக்கொள்வது மூலம் இதை உணர்த்திவிடலாம்.  இதை தானியங்கி பதிலாகவும் அமைத்துக்கொள்ளலாம்.

இதே போலவே, வீட்டில் இருந்து பணியாற்றினால், ஒர்கிங் பிரம் ஹோம் என்பதை WFH மூலம் உணர்த்தலாம்.

தலைப்பே செய்தி

சில நேரங்களில் இமெயில் செய்தியை ரத்தினச்சுருக்கமாக சில வரிகளில் அனுபலாம். இன்னும் சில நேரங்களில் தலைப்பிலேயே செய்தியை சொல்லிவிடலாம். அப்படியிருக்க மெயிலை பெறுபவர் அதை தேவையில்லாமல் ஓபன் செய்ய வேண்டாமே. எனவே தான், தலைப்பில் செய்தியை சொல்லிவிட்டு, இறுதியில், எண்ட் ஆப் மெசேஜ் (EOM ) என குறிப்பிட்டுவிடலாம்.

இதே போல மெயிலுக்கு நிச்சயம் பதில் தேவை எனில் தயவு செய்து பதில் அளிக்கவும் என்பதை PRB என குறிப்பிடலாம். தேவை எனில் பதில் எதிர்பார்க்கும் நேரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். இதற்கு மாறாக நீங்கள் தகவல் தான் தெரிவிக்கிறீர்கள், அதற்கு அவசியம் பதில் எதிர்பார்க்கவில்லை எனிலை அதையும், நோ ரிப்ளை நெசஸரி- NRN என தெரிவிக்கலாம். உதாரணத்திற்கு மதியம் உணவுவேளையில் சந்திக்கிறேன், NRN  என குறிப்பிடலாம்.

வில்லங்க மெயில்

சில நேரகங்களில் அலுவலக சகாவுக்கு சும்மா ஜாலியான அல்லது கேளிக்கை மெயிலை அனுப்பி வைக்கலாம். அந்த மெயிலை உங்கள் சகா விஷயம் தெரியாமல் பலர் முன்னிலையில் திறந்து படித்தால் வில்லங்கமாகிவிடாதா? அது தான், இது போன்ற மெயிலை அனுப்பும் போது அலுவலக சூழலில் பிரிப்பது பாதுகாப்பானது அல்லது என்பதை NSFW என உணர்த்தலாம். நாட் சேப் டூ ஓபன் இன் ஒர்க் என்பதன் சுருக்கம் இது. இன்னும் சில நேரங்களில் பார்ப்பதற்கு வில்லங்கமாக தோன்றினாலும் பணிச்சூழலில் படிக்கும் வகையான தகவல்களை சேப் டூ ஓபன் (SFW) என உணர்த்தலாம். இதே போலவே பெறுபவருக்கு மட்டுமான தகவல் என்பதை பார் யுவர் இன்பமேஷன் ( FYI) என குறிப்பிடலாம். இதற்கு மாறாக இமெயில் தொடர்பான நடவடிக்கை தேவை எனில் அதையும் ஆக்‌ஷன் ரிக்வயர்டு (AR) என குறிப்பிடலாம்.

வெளியே செல்கிறேன்.

அலுவலக விஷயம் தொடர்பாக காலையில் மெயில் அனுப்புகிறீர்கள். ஆனால் மாலையில் நீங்கள் சீக்கிரம் வீட்டிற்கு செல்ல இருக்கிறீர்கள் எனில், அந்த தகவலையும் மெயிலில் லீவிங் ஏர்லி டுடே (LET ) என குறிப்பிடலாம். முக்கியமாக தொடர்பு கொள்ள வேண்டும் எனில் சக ஊழியர்கள் மாலை வரை காத்திருந்து ஏமாறாமல் இருக்க இந்த குறிப்பு உதவும்.

மிக முக்கியமான விஷயங்களை நீளமான மெயிலை அனுப்புவதாக இருந்தால் டூ லாங் டூ ரீட் (TLTR) என குறிப்பால் உணர்த்தலாம். முதலில் அனுப்பிய மெயிலில் குறிப்பிட மறந்த விஷயத்தை தெரிவிக்க அடுத்ததாக ஒரு மெயில் அனுப்புவதாக இருந்தால், பை தி வே (BTW ) மூலம் அதை தெளிவுபடுத்திவிடலாம்.

என்ன பதில்?

எல்லா மெயில்களும் பதில் வேண்டி நிற்பவை அல்ல. இன்னும் சில மெயில்களுக்கு பதிலை ஆம் அல்லது இல்லை என தெரிவித்தால் போதும். பெரும்பாலும் மெயில் மூலம் கேள்வி கேட்கும் போது, ஆம் அல்லது இல்லை எனும் பதில் போதும் எனில், Y/N (Yes or No?) என குறிப்பிட்டால் விஷயம் முடிந்தது.

அலுவல் நோக்கிலோ அல்லது தனிப்பட்ட நோக்கிலோ இமெயிலை பயன்படுத்தும் போது, தகவல் தொடர்பை இன்னும் சிறப்பாக்கி கொள்ள இந்த குறிப்புகள் உதவும் என்கின்றன் இமெயில் வல்லுனர்கள். Y/N!

படிவங்களுக்கான இணையதளம்

TidyForm-670x459விண்ணப்ப படிவங்கள் அல்லது ஆவணங்களுக்கான இணைய காப்பகமாக டைடிபார்ம் இணையதளம் விளங்குகிறது. இந்த தளத்தில் பல வகையான படிவங்களை காணலாம். எக்செல் கோப்புகள், வேலைவாய்ப்பு விண்ணப்ப படிவம், வரவு செலவு வடிவங்கள் என பல வகையான ஆவண வடிவ நகல்களை இந்த தளத்தில் காணலாம். 2,000 க்கும் மேற்பட்ட வகைகளில் 20,000 க்கும் மேற்பட்ட படிவங்கள், ஆவணங்களின் நகல்கள் இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

செலவு கணக்கு அறிக்கை, வாராந்திர அறிக்கை, இன்வாய்ஸ், குடும்ப பட்ஜெட் என பலவிதமான வடிவங்கள் இந்த பட்டியலில் உள்ளன. வர்த்தக தேவை முதல் வாழ்க்கை வரை எல்லா விதமான தேவைகளுக்கும் இவை கைகொடுக்கும்.

பயணர்கள் தங்களுக்கு தேவையான வகையை கிளிக் செய்து அதில் உள்ள வடிவங்களில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.

ஒவ்வொரு தலைப்பாக கிளிக் செய்து பார்க்கலாம் அல்லது தேவையான குறிச்சொல்லை குறிப்பிட்டு தேடிப்பார்க்கலாம். குறிப்பிட்ட ஆவண நகல் வடிவத்தை தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது.

இணைய முகவரி: https://www.tidyform.com/

 

——-\

 

செயலி புதிது: புதுமையான உரையாடலுக்கு உதவும் செயலி

மெசேஜிங் பரப்பில் புதிய செயலியாக எக்சேட்லி.மி செயலி அறிமுகம் ஆகியுள்ளது. ஐபோன்களுக்கான அறிமுகம் ஆகியுள்ள இந்த செயலி புதுமையான முறையில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதை சாத்தியமாக்குவதாக தெரிவிக்கிறது.

மேசேஜிங் செயலிகள் பொதுவாக ஏற்கனவே அறிந்த நபர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகின்றன. இந்த செயலி மாறுபட்ட வகையில், ஒத்த கருத்துள்ளவர்களி அறிந்து தொடர்பு கொள்ள வழி செய்வதாக தெரிவிக்கிறது.

இந்த செயலியில் ஒளிப்படத்தை பதிவேற்றிவிட்டு, பயனாளிகள் தங்களைப்பற்றி தெரிவித்து அதனடிப்படையில் தங்களைப்போலவே உள்ளவர்களை தேடலாம். பின்னர் அவர்களுடன் தொடர்பு கொண்டு உரையாடலில் ஈடுபடலாம்.

மெசேஜிங் பரப்பில் ஏற்கனவே அதிக செயலிகள் இருக்கும் நிலையில், இந்த புதுமையான செயலியால் எந்த அளவு வரவேற்பை பெற முடியும் என பார்க்கலாம்./

மேலும் தகவல்களுக்கு: http://exactly.me/

பாஸ்வேர்டு விதிமுறைகளில் புதிய மாற்றம்!

 

BN-UO739_80807p_HD_20170807010616பாஸ்வேர்டு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றால் அது அடிப்படையில் வலுவானதாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருக்கலாம். வலுவான பாஸ்வேர்டை உருவாக்க பல்வேறு வழிமுறைகள் முன்வைக்கப்படுவதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த வழிமுறைகளில் பல மீறப்படாத விதிமுறைகள் போலவே அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த விதிகள் உருவாக காரணமாக இருந்தவரே இவற்றில் சில தவறானவை என ஒப்புக்கொண்டிருப்பதை அடுத்து பாஸ்வேர்டு பாதுகாப்பிற்கான மூல விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

ஆக, இனியும் நீங்கள் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அதே போல பாஸ்வேர்டை சிக்கலானதாக மாற்றுவதற்காக எண்களையும் சிறப்பு எழுத்துக்களையும் இடையே நுழைத்து கஷ்டப்பட வேண்டியதில்லை. இதன் பொருள் எளிதாக நினைவில் கொள்ளக்கூடிய வலுவான பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ளலாம் மற்றும் ஒரே பாஸ்வேர்டை தொடர்ந்து தயக்கம் இல்லாமல் பயன்படுத்தலாம் என்பதும் தான். சிக்கலான பாஸ்வேர்டை உருவாக்குவதை விட அதை நினைவில் நிறுத்திக்கொள்வது இன்னும் கடினமாக இருக்கிறது என புலம்பிக்கொண்டிருப்பவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்.

அதற்காக பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியாக இருக்கலாம் என்றில்லை: பாஸ்வேர்டு உருவாக்கம் தொடர்பாக வலியுறுத்தப்படும் சில விதிகள் மாறியிருக்கின்றன என்பதே விஷயம்.

இணைய சேவைகளில் நுழைய பயன்படுத்தும் பாஸ்வேர்ட்களை ஹேக்கர்கள் என குறிப்பிடப்படும் தாக்களார்கள் களவாடுவதை தவிர்ப்பதற்காக பலவித முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிப்பது அவசியமாகிறது. தாக்காளர்கள் பாஸ்வேர்டு திருடவும், கொள்ளையடிக்கவும் (ஆயிரக்கணக்கில் கொத்தாக பாஸ்வேர்டு திருடப்படுவது) அதிகரித்து வந்த நிலையில் பாஸ்வேர்டு பாதுகாப்பில் கவனம் செலுத்துவது அவசியமானது. இதை மனதில் கொண்டே பாஸ்வேர்டு உருவாக்கத்திற்கான வழிமுறைகள் முன்வைக்கப்பட்டன. இதனடிப்படையில் தான் எளிதில் ஊகிக்க முடியாத பாஸ்வேர்ட்களை அமைக்க வேண்டும், வழக்கமான பாஸ்வேர்டுகளை தவிர்க்க வேண்டும், ஒரே பாஸ்வேர்டை பல சேவைகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் சொல்லப்படுகின்றன.

இந்த வரிசையில் தான், சிக்கான பாஸ்வேர்டை உருவாக்குவது மற்றும் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றுவது ஆகிய ஆலோசனைகளும் இடம்பெறுகின்றன. பயனாளிகள் பார்வையில் இரண்டுமே கடினமானவை தான். ஏனெனில், பாஸ்வேர்டு வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காக எழுத்துக்களுக்கு நடுவே எண்கள், அடைப்பு குறிகள், குறீயீடுகள் உள்ளிட்ட சிறப்பு எழுத்துகளை நுழைத்து அவற்றை சிக்கலாக தோன்றச்செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், இப்படி உருவாக்கிய பாஸ்வேர்டை நினைவில் கொள்வது கடினமாகி விடுகிறது. அதே போல தாக்களர்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக பாஸ்வேர்டை 3 மாதங்கள் அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றிக்கொண்டே இருந்தால், எந்த பாஸ்வேர்டை இப்போது பயன்படுத்துகிறோம் என குழம்பும் நிலை வரலாம் அல்லவா?

ஆனால் நல்லவேளையாக இந்த இரண்டு விதிகளும் தவறானவை என பில் பர் (Bill Burr ) இப்போது கூறியிருக்கிறார். இவர் தான் பாஸ்வேர்டு பாதுகாப்பிற்காக வலியுறுத்தப்படும் வழிமுறைகளுக்கு காரணமானவர். அமெரிக்காவின் தரநிர்ணயம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய கழகம் (என்.ஐ.எஸ்.டி) எனும் அமைப்பில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, பில் பர் பாஸ்வேர்டு நிர்வாகத்திற்கான வழிமுறைகளை உருவாக்கி வெளியிட்டார். 2003 ல் வெளியான இந்த எட்டு பக்க ஆவணம் தான் அதன் பிறகு பாஸ்வேர்டு பாதுகாப்பிற்கான வழிகாட்டி விதிமுறைகளாக அமைந்தன.

பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்த வழிமுறைகள் கோலோச்சிய நிலையில், அண்மையில் இந்த வழிகாட்டி ஆவணம் திருத்தி அமைக்கப்பட்டு என்.ஐ.எஸ்.டி அமைப்பால் புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. பாஸ்வேர்டு சிக்கலானதாக இருக்க வேண்டும், அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும் ஆகிய விதிகள் புதிய ஆவணத்தில் கைவிடப்பட்டுள்ளன.

அதற்கேற்ப பில் பர்ரும், இந்த விதிகளை சேர்த்ததற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்காவின் ’வால்ஸ்டிரீட் ஜர்னல்’ இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், பாஸ்வேர்டை 90 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்பதற்காக பலரும் பழைய பாஸ்வேர்டில் ஒரு சின்ன திருத்தம் செய்து கொள்கின்றனர். இதனால் பெரிய அளவில் பலன் ஏற்படுவதில்லை என கூறியிருக்கிறார். அதே போல கடினமான பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான வழிமுறை பயனாளிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ஆனால் ஒன்று பில் பர் தவறாக வழிநடத்திவிட்டார் என்றெல்லாம் அவர் மீது பழி சொல்ல முடியாது. 2003 ல் அவருக்கு கிடைத்த பாஸ்வேர்டு தொடர்பான தரவுகளின் அடிப்படையில் இந்த வழிமுறைகளை அவர் முன்வைத்தார். பாஸ்வேர்டு பற்றிய ஆழமான புரிதலுக்காக தனது அமைப்பில் உள்ளவர்கள் பயன்படுத்திய பாஸ்வேர்டுகளை பார்க்க அவர் அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால் யாரும் இதற்கு உடன்படவில்லை. அதோடு பாஸ்வேர்டை பார்க்க அனுமதி கேட்டதற்காகவே சகாக்கள் தன்னை நம்ப முடியாமல் வியப்புடன் பார்த்ததாக அவர் கூறுகிறார். பிறகு வேறுவழியில்லாமல் அப்போது கிடைத்த தகவல்களை கொண்டு பாஸ்வேர்டு பாதுகாப்பு வழிமுறைகளை வகுத்துக்கொடுத்தார்.

அது மட்டும் அல்ல, அதன் பிறகு இணைய உலகிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. எனவே பாதுகாப்பான பாஸ்வேர்டு என்பதற்கான வரையறையும் மாறியிருக்கிறது. மேலும், இடைப்பட்ட காலத்தில் தாக்காளர்கள் வசம் சிக்கிய பாஸ்வேர்டுகள் லட்சக்கணக்கில் பொதுவெளியில் வீசப்பட்டிருக்கின்றன. இத்தகைய பட்டியல் பில் பர் கையில் கிடைத்திருந்தால் மனிதர் இன்னும் துல்லியமான விதிகளை வகுத்திருக்கலாம் என நம்பலாம்.

அது மட்டும் அல்ல, புதிய ஆவணத்தை உருவாக்கிய குழுவுக்கு பொறுப்பேற்ற பால் கிராஸி, தனது சகா பில் பர் வருத்தம் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை, இத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடித்த வழிமுறைகளை உருவாக்கியதே பெரிய விஷயம் எனக்கூறியுள்ளார். இது போல் நீடித்திருக்ககூடிய ஆவணத்தை உருவாக்குவது பற்றி தன்னால் கனவு தான் காண முடியும் எனக்கூறியிருக்கிறார்.

எப்படியோ, பாஸ்வேர்டு விதிமுறைகள் கொஞ்சம் மாறியிருக்கின்றன. இனியும் அடைப்புக்குறிகள், கேள்விக்குறிகள், எண்களை எல்லாம் சேர்த்து பாஸ்வேர்டை சிக்கலாக அமைக்க மெனக்கெட வேண்டாம். அதைவிட, பாஸ்பிரேஸ் என சொல்லப்படும் சொற்றொடர் ஒன்றை எடுத்துக்கொண்டு அதன் வார்த்தைகளில் உள்ள முதல் எழுத்துக்களை சேர்த்து உருவாக்கும் பாஸ்வேர்டு வலுவானதாக அமையும். அதே போல, பாஸ்வேர்டை அடிக்கடி மாற்ற வேண்டிய கட்டாயமும் இல்லை. பாஸ்வேர்டு தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம் எனும் சந்தேகம் ஏற்பட்டால் மட்டும் மாற்றிக்கொண்டால் போதுமானது என்கின்றனர். அதே போலவே ஒரே பாஸ்வேர்டை எல்லா சேவைகளுக்கும் பயன்படுத்தக்கூடாது எனும் விதியும் கொஞ்சம் தளர்த்தப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமான சேவைகளுக்கு வேண்டுமானால் தனித்தனி பாஸ்வேர்ட்களை அமைத்துக்கொள்ள வேண்டுமேத்தவிர, மற்றபடி அவ்வளவாக முக்கியமில்லாத சேவைகளில் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்தினாலும் தவறில்லை என்கின்றனர்.

பேஸ்புக் நட்பு இலக்கணம்

People are seen as silhouettes as they check mobile devices whilst standing against an illuminated wall bearing Facebook Inc.s logo in this arranged photograph in London, U.K., on Wednesday, Dec. 23, 2015. Facebook Inc.s WhatsApp messaging service, with more than 100 million local users, is the most-used app in Brazil, according to an Ibope poll published on Dec. 15. Photographer: Chris Ratcliffe/Bloomberg via Getty Images
People are seen as silhouettes as they check mobile devices whilst standing against an illuminated wall bearing Facebook Inc.s logo in this arranged photograph in London, U.K., on Wednesday, Dec. 23, 2015. Facebook Inc.s WhatsApp messaging service, with more than 100 million local users, is the most-used app in Brazil, according to an Ibope poll published on Dec. 15. Photographer: Chris Ratcliffe/Bloomberg via Getty Images

திருவிளையாடல் திரைப்படத்தின் சிவபெருமான் –புலவர் தருமி உரையாடலை இணைய யுகத்திற்கு ஏற்ப அப்டேட் செய்ய வேண்டும் எனில், பேஸ்புக்கில் செய்யக்கூடிவையும், செய்யக்கூடாதவையும் என தருமி கேட்பதாக சேர்த்துக்கொள்ளலாம். அந்த அளவுக்கு பேஸ்புக் பயன்பாட்டில் கவனம் கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. புதிய நட்பை தேடிக்கொள்ளவும், நண்பர்களோடு உரையாடவும் பேஸ்புக் அருமையான வழி தான். ஆனால் பேஸ்புக்கில் பகிரும் தகவல்கள் நட்பையும், விருப்பங்களையும் (லைக்ஸ்) மட்டும் பெற்றுத்தருவதில்லை. பல நேரங்களில் வில்லங்கத்தையும் தேடித்தரலாம்.

பேஸ்புக் நட்புக்கான வலைப்பின்னல் சேவை என்றாலும், பெரும்பாலானோரால் அது ஒரு வெளியீட்டு சாதனமாகவும் பயன்படுத்தப்படுகிறது. மனதில் உள்ள எண்ணங்களை பகிரவும், நாட்டு நடப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கவும் பேஸ்புக் சுவற்றை பயன்படுத்துவது என்பது அதன் பயனாளிகளுக்கு இயல்பாக இருக்கிறது. பலரும் ஆழமான கருத்துக்களை நீள் பதிவுகளாக வெளியிடவும் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். வலைப்பதிவு உலகில் இயங்கி வந்தவர்களில் பலர் பேஸ்புக்கிற்கு மாறிவிட்டதாகவும் தெரிகிறது.

மிகை பகிர்வு!

எதை எடுத்தாலும் பேஸ்புக்கில் வெளியிடுவது என்பது மிகை பகிர்வு பழக்கமாக மாறி இருப்பது மற்றும் கலாய்த்தால், கேலி செய்தல், சண்டையிடுதல், துவேஷம் கக்குதல், தனிமனித தாக்குதல் உள்ளிட்டவை பேஸ்புக் பயன்பாடு தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பேஸ்புக்கில் நல்லவையும் உண்டு, தீயவையும் உண்டு எனும் நிலையில், அந்த சேவையை சரியாக பயன்படுத்துவது என்பது பயனாளிகளின் கைகளில் தான் இருக்கிறது.

பேஸ்புக் நிலைத்தகவல்களை எப்படி வெளியிடுவது என்பதும், மற்றவர்கள் தகவல்களுக்கு எவ்வாறு எதிர்வினை ஆற்றுவதும் அவரவர் விருப்பமும், உரிமையும் சார்ந்தது. பேஸ்புக் சேவையை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பாக விதிமுறைகளை எல்லாம் உருவாக்க முடியாது என்றாலும், பயனாளிகள் தங்கள் நலன் கருதி (மற்றவர்கள் நலனுக்காகவும் தான்) பேஸ்புக்கில் சில அடிப்படையான நெறிமுறைகளை கடைப்பிடிப்பது நல்லது என இணைய வல்லுனர்கள் கருதுகின்றனர்.

நண்பர்கள் மட்டும்

முதல் விஷயம், சமூக வலைப்பின்னல் சேவையாக பேஸ்புக்கின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். பேஸ்புக்கை நண்பர்களின் இருப்பிடம் என நீங்கள் கருதினாலும், உங்கள் பதிவுகளை கவனித்துக்கொண்டிருப்பது நண்பர்கள் மட்டும் அல்ல; அறிமுகம் இல்லாதவர்களும் தான். நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் என விரியும் நட்பு வலையில் நேரடியாக அறிமுகம் இல்லாதவர்களும் இருக்கலாம். எனவே பொதுவெளியில் எதை எல்லாம் பகிர்வோமோ அவற்றை மட்டுமே பேஸ்புக் சுவற்றில் பகிர்வது சரியாக இருக்கும். புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதையே எடுத்துக்கொள்வோம். ஒருவர் தன்னுடைய திருமண ஆல்பத்தை சாலையில் சென்று கொண்டிருப்பவர்களிடம் எல்லாம் காண்பிக்க விரும்புவாரா, என்ன? ஆனால் பேஸ்புக்கில் இதற்கு நிகரான செயலை தான் பலரும் செய்கின்றனர். ஊருக்கு போன படத்தையும், வீட்டில் பிறந்த நாள் அல்லது திருமண நாள் கொண்டாடிய படத்தையும் உடனுக்குடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

இப்படி படத்தை பகிர்வதன் நோக்கத்தை விமர்சிப்பதோ, கேலி செய்வதே அல்ல நம் நோக்கம்; இந்த பகிர்வால் ஏற்படக்கூடிய வில்லங்களும், விபரீதங்களும் தான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. எத்தனையோ படங்களை இதுவரை வெளியிட்டிருக்கிறோம், எந்த பிரச்சனையும் வந்தது இல்லையே என நீங்கள் கேட்கலாம். வராத வரை சந்தோஷம் என நினைத்துக்கொள்ளுங்கள். ஆனால் தனிப்பட்ட படங்களை பேஸ்புக் போன்ற பொதுவெளியில் பகிர்வது எப்போதுமே ஆபத்தானது தான். எப்போது என்ன நோக்கில் அவை பயன்படுத்தப்படலாம் எனத்தெரியாது.

உதாரணத்திற்கு கேளிக்கை விருந்து நிகழ்ச்சியில் ஒருவர் உற்சாகமாக மது அருந்தும் புகைப்படத்தை தனது நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் அந்த படத்தை அலுவலக மேலதிகாரி பார்க்கும் நிலை ஏற்பட்டால் என்னாகும் யோசித்துப்பாருங்கள். அதிலும், அவர் உடல்நிலை சரியில்லை என காரணம் கூறி அலுவலகத்தில் விடுப்பு கோரியிருந்தால், நிலைமை மோசமாகிவிடும் அல்லாவா! அது மட்டும் அல்ல, இந்த புகைப்படம் காப்பீடு நிறுவனத்தின் பார்வையில் பட்டாலும் சிக்கலாகலாம். குடிப்பழக்கம் என்பது காப்பீடு கோரிக்கை நிராகரக்கப்படுவதற்கான காரணமாக கூட அமையலாம். நிஜ வாழ்க்கையில் இப்படி பாதிப்பு ஏற்பட்டதற்கான கதைகள் இருக்கின்றன. அது மட்டும் அல்ல, புகைப்படங்களில் உள்ளவர்கள் எல்லாம் எங்கங்கோ டேக் செய்யப்படுவதும், முகம் உணர் தொழில்நுட்பம் காரணமாக, புகைப்படங்களில் உள்ளவர்கள் அடையாளம் காணப்படும் சாத்தியத்தையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

புகைப்படம் பகிரும் முன்!

எனவே, புகைப்படங்களை பகிரும் முன், இது அவசியமா? என ஒரு முறை கேட்டுக்கொள்ளுங்கள், புகைப்படத்தை வேறு மாற்று வழியில் நண்பர்களுடன் பகிரலாமா? என்றும் யோசித்துப்பாருங்கள். பல நேரங்களில் நண்பர்களுக்கு இமெயில் மூலம் படங்களை அனுப்பி வைப்பது சரியாக இருக்கும்.

இதே போலவே பணி நிமித்தமாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ வெளியூர் பயணங்களுக்கு செல்லும் போது, எல்லோருக்கும் சொல்லிக்கொள்வது போல அந்த செய்தியை பகிர்வது தவிர்க்கப்பட வேண்டியது. ஏனெனில் ஒருவர் ஊரில் இல்லை என்பதை அவரது நண்பர்கள் மட்டும் அல்ல, விஷமிகள் யாரேனும் கூட தெரிந்து கொண்டு அந்த தகவலை தவறாக பயன்படுத்த முற்படலாம். பேஸ்புக்கில் வெளியூர் சென்ற தகவலை பார்த்துவிட்டு அவரது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் எல்லாம் மேலைநாட்டில் நடந்திருக்கின்றன.  பொதுவாகவே இருப்பிடத்தை காட்டும் தகவல்களை பேஸ்புக்கில் மட்டும் அல்ல, இணையத்தில் பகிராமல் இருப்பதே நல்லது. எப்படியும் இணைய நிறுவனங்களும், உளவு மென்பொருள்களும் ஓயாமல் இணையவாசிகளை பின் தொடர்ந்து அவர்கள் இணைய சுவடுகளை கண்காணித்து தகவல்களை சேகரிக்கின்றன. இதில் நம் பங்கிற்கு நாமும் இருப்பிடம் சார் தகவல்களை இணைய சுவடாக பதிவு செய்ய வேண்டுமா?

இருப்பிடம் சார் தகவல்களை தவிர்ப்பது போலவே, தொலைபேசி எண் அல்லது இல்ல முகவரியையும் டைம்லைனில் பகிரக்கூடாது. தொலைபேசி எண் போன்றவை தேவை எனில், இன்பாக்ஸ் வழியே தனியே செய்தி அனுப்பிக்கொள்ளலாம்.

நம்மைப்பற்றிய தகவல்களை பகிர்வதில் கவனமாக இருப்பது போலவே நண்பர்கள், உறவினர்கள் தொடர்பான தகவல்களை பகிர்வதிலும் கவனம் தேவை. அவர்கள் பொதுவெளியில் பகிர விரும்பாத தகவல்களை நாம் வெளியிடாமல் இருப்பதே சரியானது.

துவேஷம் வேண்டாம்

பொதுவாக மற்றவர்கள் மீது துவேஷம் கொண்ட கருத்துகள், மிரட்டல், சீண்டல் கருத்துக்களை வெளியிடாமல் இருக்க வேண்டும். எதிர் கருத்தை கூறினாலும், கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். தேவையில்லாத கேலி, கிண்டலை தவிர்த்தல் நல்லது.

ஒரே விஷயம் தொடர்பாக பதிவுகளை வெளியிடுவதும் ஏற்றதல்ல. இது நண்பர்களை வெறுப்புக்குள்ளாக்கும். உங்கள் ஆர்வம் சார்ந்த கருத்துகள் நிறைய இருந்தால் அதற்கென தனியே ஒரு பேஸ்புக் பக்கம் துவங்கி பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

அதே போல், அறிமுகம் இல்லாதவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டாம். முதலில் அவர்களைப்பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பிறகு முடிவு செய்யுங்கள். நண்பர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை பெருமையாக கருத வேண்டாம். அர்த்தமுள்ள உரையாடல் சாத்தியமாக வேண்டும் என்பதே முக்கியம்.

பேஸ்புக்கில் எட்டிப்பார்க்கும் சுவாரஸ்யமான விளையாட்டுகள் மற்றும் செயலிகளை பயன்படுத்தும் முன், அவை உங்களைப்பற்றிய தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க கூடியவை என்பதை மனதில் கொள்ளுங்கள். 20 வருடம் கழித்து நீங்கள் எப்படி தோற்றம் அளிப்பீர்கள் அல்லது நீங்கள் எந்த பிரபலம் போல இருக்கிறீர்கள் என உணர்த்தும் செயலிகள் சுவாரஸ்யமாக இருக்கலாம். ஆனால் அந்த செயலிகளை பயன்படுத்தும் போது உங்கள் முழு டைம்லைனையும் அவற்றின் வசம் ஒப்படைக்கு நிலை இருக்கலாம் என்பதை பலரும் கவனிப்பதில்லை.

மேலும் பணியிடத்து சிக்கல்கள் குறித்து புலம்புவதும் தேவையில்லாத வம்பை விலை கொடுத்து வாங்குவது போன்றது தான்.

இவைத்தவிர, பேஸ்புக்கின் பிரைவசி செட்டிங் வசதி பற்றியும் அறிந்திருக்க வேண்டும். நிலைத்தகவல்கள் பொது வெளியில் பகிரப்பட வேண்டியவையா அல்லது நண்பர்கள் வட்டத்தில் மட்டும் தெரிய வேண்டியவையா என்பதை தீர்மானிக்கும் வசதி செட்டிங் பகுதியில் இருக்கிறது. தனிப்பட்ட பகிர்வு எனில் அவற்றை நண்பர்கள் வட்டத்தில் மட்டுமே பகிர்ந்து கொள்வது சரியாக இருக்கும். பேஸ்புக் வழங்கும் பிரைவஸி அமைப்புகள் பற்றி தெரிந்து கொள்வதோடு, பொறுமையாக நேரம் எடுத்துக்கொண்டு பேஸ்புக்கின் பிரைவசி கொள்கை பற்றியும் கூட படித்துப்பார்ப்பது பல விஷயங்களை புரிய வைக்கும்.

 

நன்றி; புதிய தலைமுறை இதழில் நிறைவடைந்த எண்டெர்.நெட் தொடருக்கான எழுதியது.