All posts by CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

சைக்கிள் மீது லேப்டாப்

லேப்டாப் கம்ப்யூட்டர் என்றதும் சைக்கிள்களை நினைத்து பார்க்க தோன்றாது, கார்களைத் தான் நினைத்து பார்க்க தோன்றும். அதிலும் வசதியான சொகுசு கார்கள். ஆனால் இனியும் அப்படியிருக்க வேண்டியதில்லை.  இப்போது காரில் செல்பவர்கள் தங்களது மடி மீது லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்து கொண்டு பணியாற்றியபடி செல்வதை பார்ப்பது போல, வரும் காலத்தில் சைக்கிள் மீது லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்திருப்பதையும் சர்வசகஜமாக பார்க்க நேரிடலாம்

இதன் அர்த்தம் சைக்கிள் வைத்திருப்பவர்கள்  எல்லாம் லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்கி விடுவார்கள் என்பதல்ல.  அதற்கு  புரட்சிகரமான மாற்றம் முதலில் ஏற்பட்டாக வேண்டும்.
அப்போதுதான் சைக்கிளில் செல்பவர்கள் எல்லாம்  லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்கக் கூடிய நிலை உண்டாகும்.

இப்போது லேப்டாப் வைத்திருப்பவர்கள் எல்லாம் சைக்கிள்  வாங்கி அதன் மீது லேப்டாப்பை வைத்து பயன்படுத்தும் நிலை வரக்கூடும் என்பதே விஷயம்.
சைக்கிள் என்றால் சாதாரண சைக்கிள் இல்லை. உடற்பயிற்சிக்காக பயன்படுத்தக் கூடிய சைக்கிள்.

சைக்கிள் மீது  ஏன் லேப்டாப்பை வைத்து கொள்ள வேண்டும் என்ற  சந்தேகம் உங்களுக்கு ஏற்படலாம். ஒரே கல்லில் 2 மாங்காயை அடிப்பது போல, ஒரே செயலில் 2 பலன்களை பெறுவதற்காகத்தான் இந்த ஏற்பாடு. அதாவது லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கு  தேவையான மின்சக்தியை பெறுவதற்காக சார்ஜ் செய்ய வேண்டிய  பிரச்சனைக்கும் தீர்வு கண்டுவிடலாம்.

அதே நேரத்தில் அதிக முயற்சி இல்லாமல் தீவிர முயற்சி செய்து நல்ல உடல் தகுதியோடு இருப்பதையும் உறுதி செய்து கொள்ளலாம்.  இந்த இரண்டுமே லேப்டாப் மற்றும் சைக்கிள் ஒன்றிணைவதால்  சாத்தியமாகிறது என்பதுதான்  மிகவும் விசேஷமானது.

எப்படி என்றால் சைக்கிள் ஓட்டும் போது ஏற்படக் கூடிய விசையை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வழியை உருவாக்கியுள்ளனர். இதன் மூலமாக லேப்டாப் பேட்டரியை சார்ஜ் செய்து விடலாம்.  ஆக சைக்கிளை மிதித்து கொண்டே இருந்தால் போதும் உடற்பயிற்சி செய்ததுபோல்  இருக்கும். அதே நேரத்தில்  லேப்டாப்புக்கு தேவையான மின்சாரத்தையும் உற்பத்தி செய்து விடலாம்.

இந்த புதுமையான வழியை அமெரிக்காவில் உள்ள  கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.  பாராட்டத்தக்க முயற்சி  என்று சொல்லத் தோன்றுகிறதா? இதில் விசேஷம் என்னவென்றால், இதன் பின்னே உள்ள முக்கிய ஆய்வாளர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து  அமெரிக்காவில் குடியேறிய லஷ்மி ராவ் என்பவர், எம்ஐடியில்  உயர் பதவியில் இருக்கிறார். உலகம் முழுவதும் ஆய்வுப்பணிகளுக்காக புகழ் பெற்ற எம்ஐடி பல்கலைக்கழகத்தில் அவர் தகவல் தொழில்நுட்ப எரிபொருள் ஒருங்கிணைப்பாளர் என்னும் பதவியை வகித்து வருகிறார். 

எரிபொருள் சிக்கனத்திற்கான புதிய வழிகளை கண்டறிவது இவரது முக்கியபணியாக இருக்கிறது. அதிலும் தற்போது நீக்கமற நிறைய தொடங்கிய இருக்கும் கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப்களை இயக்க தேவைப்படும் மின்சாரத்தின் அளவை  குறைத்து அதற்கான மாற்று வழிகளை கண்டுபிடிப்பது அவரது முக்கிய ஆய்வாக இருக்கிறது. 

இந்த திசையில் தீவிரமாக பணியாற்றி வரும் அவரை, அமெரிக்காவின் கல்லூரி மாணவர்கள் குழு ஒன்று தங்களது கல்லூரி ஆய்வுக்காக அணுகியது.  லேப்டாப் கம்யூட்டரை இயக்க சைக்கிளின் விசையை பயன்படுத்த முடியுமா என்று அந்த குழு அறிய விரும்பியது.  லஷ்மி ராவ் அந்த குழுவினரோடு  இணைந்து பணியாற்றி இதற்கான வழியை உருவாக்கி கொடுத்திருக்கிறார். 

உடற்பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் சைக்கிளில் தேவையான  மாற்றத்தை செய்து அதில் லேப்டாப்பை வைத்து கொண்டு பெடலை மிதிக்கக் கூடிய வகையில் வடிவமைப்பில் மாற்றம் செய்து கொடுத்தார்.

இதன் விளைவாக பெடலை மிதித்து கொண்டிருக்கும் போதே மின்சாரம் உற்பத்தியாகி விடுகிறது. அந்த மின்சாரம் பேட்டரியில் சேமிக்கப்பட்டு, அங்கிருந்து லேப்டாப்புக்கு மாற்றப்படும். ஒரு அரை மணி நேரம்  சைக்கிளிளை மிதித்தால் போதும் லேப்டாப்பை இயக்குவதற்கு  தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து விடலாம்.  லேப்டாப்பை தனியே சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமிருக்காது. 

அதே நேரத்தில் உடற்பயிற்சி செய்த பலனையும் பெற்று விடலாம். சோதனை முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முறை,  பரவலான கவனத்தை பெற்றுள்ளது.  நடைமுறைக்கு ஏற்றதாக இருந்தால் நாளை அனைவராலும் பயன்படுத்தக் கூடிய  நிலை வரலாம்.

தொட்டால் இசை மலரும்

எல்லாம் உங்கள் கைகளில் தான் இருக்கிறது என்று சொல்வது தன்னம்பிக்கையின் அடையாள மாகவும் இருக்கலாம். எதிர்பார்ப்பின் விளைவாகவும் இருக்கலாம். இதே வாசகத்தை ஆப்பிள் நிறுவனம்  சொல்லும் போது “ஐபோன்’ல் சாத்தியமாகக் கூடிய தொழில்நுட்ப அற்புதமாக  பொருள்கொள்ள வேண்டும்.
.

 ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாடு இசை கேட்பு  சாதனமாகட்டும், அதன் அடுத்த அவதாரமான ஐபோன்  ஆகட்டும், இரண்டு டச்ஸ்கிரீன் என்று சொல்லப்படும் தொடுதிரையின் அற்புதத்தை  அடிப்படையாக கொண்டு இயங்குபவை.

 ஐபாடு (அ) ஐபோனை இயக்க அவற்றின் திரையின்  மீது கை வைத்து அப்படியும் இப்படியும் கோலம் போடுவது போல் விரல்களை  நகர்த்தினாலே போதும்.

 

ஐபோன்  புரட்சிகரமானது. இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் மேம்பட்ட  சாப்ட்வேரை  கொண்டது.  இதன் தொடுதிரை  வசதியை கொண்டு,  உங்கள் கைவிரல்கள் மூலமே  எல்லாவற்றையும்  நீங்கள் கட்டுப்படுத்த முடியும்.

ஆப்பிள்  ஐபோன்  மற்றும் அதன் நீட்சியான  ஐடச் பற்றி இப்படிதான் பெருமை பட்டுக்கொள்கிறது.

என்றாலும் நாம் தொடர்ந்து பார்க்க இருப்பது ஐபோன்  பெருமை பற்றி அல்ல. “ஐபேன்ட்’ பெருமை பற்றி!

“ஐபோன்’ போன்ற உச்சரிப்பை  கொண்டிருந்தாலும் “ஐபேன்ட்’ இன்னொரு டிஜிட்டல் சாதனமும் அல்ல’ ஆப்பிள் நிறுவனத்திற்கும், அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஐபேன்ட் ஒரு இசைக்குழு நவீன இசைக்குழு! மற்ற எந்த இசைக்கருவியிலிருந்தும் முற்றிலும் வேறுபட்ட இசைக்குழு ஐபோனை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட, புதுயுக இசைக்குழு!
 ஒரு இசைக்குழுவை  அமைக்க ஒரு சில இசைக் கலைஞர்களும், ஒரு சில இசைக்கருவிகளும் கட்டாயம் தேவை.  ஐபேன்ட் இசைக்குழுவில் இசைக்கலைஞர்கள் உண்டு. ஆனால் இசைக் கருவிகள்  கிடையாது.  அவற்றுக்கு பதிலாக  ஐபோன்கள் தான் இருக்கின்றன.

 ஆஸ்திரியாவைச் சேர்ந்த   செப், ரோஜர், மற்றும் மரீனா ஆகிய மூவர் ஒன்று சேர்ந்து ஐபேன்ட் இசைக் குழுவை உருவாக்கி உள்ளனர்.  மூவரும் கலை கல்லூரி  மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப விஷயத்தில் தேர்ச்சிமிக்கவர்கள். அதனால் தான் இசைக்கருவிகள் ஏதுமில்லாமல், ஆப்பிளின்  ஐபோனை மட்டுமே வைத்துக் கொண்டு இசையை  உருவாக்கி அதன் மூலம் இன்டெர் நெட்  உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

கையுறையை மாட்டிக் கொண்டு ஐபோனில் தொடு திரை மீது இரண்டு  விரல்களை  தொட்டு  அசைப்பதன் மூலமே  இசை ஒலிகளை உண்டாக்கி சங்கீத சாகசத்தை நிகழ்த்திக் காட்டி உள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் இந்த இசை வீடியோ  கோப்பை, புகழ் பெற்ற வீடியோ கோப்பு பகிர்வு தளமான யூடியூப்பில்  பதிவேற்றினர். மேஜை ஒன்றின் மீது மூன்று ஐபோன்கள் வைக்கப் பட்டிருக்கு, அவற்றின் பளிச்சிடும் தொடுதிரை மீது மூன்று ஜோடி  விரல்கள் விளையாடிக் கொண்டிருக்க இசை அலையை எழுப்பிய இந்த காட்சி யூடியூப்  ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த காட்சியை பார்த்தவர்கள் எல்லாம் மெய் மறந்துப்போக, ஒரு சில  நாட்களில்  இரண்டு லட்சம் முறைக்கும் மேல் பார்த்து ரசிக்கப்பட்டது.

“வாழ்க்கை இன்டெர்நெட்டை விட பெரியது’ என்னும் வர்ணனையோடு  வெளியான இந்த இசைக் கோப்பு  காட்சியை பார்த்து வியந்து ரசித்தவர்கள் எல்லாம் எப்படி இது சாத்தியம் என்று இமெயில் மூலம் விசாரிக்கத் தொடங்கி விட்டனர்.

ஐபோனை மட்டும் வைத்துக் கொண்டு  இசையை உருவாக்க  முடிந்தது எப்படி என்று பலரும் அறிய விரும்பினர். இந்த வரவேற்பும், ஆர்வமும் மூவர் குழுவை வியப்பில் ஆழ்த்தியது. இத்தனைக்கும் அவர்கள் உருவாக்கிய இசை பாட்டுடன் மெட்டு போன்ற  ஒலியாக  இருந்ததே தவிர துல்லியமான இசையாக இல்லை. ஆனால் வெறும் ஐபோனை கொண்டு உருவாக்கப் பட்டதால் அனை வருக்கும் அது பிடித்துப் போய் விட்டது.

 இதனையடுத்து  ஐபோனில் செயல்படக் கூடிய இசை சார்ந்த செயல்களை  கொண்டு  என்ன செய்யலாம் என உணர்த்தவே  இந்த இசையை  உருவாக்கினோம் என்றும் ஐபோன்களை  கொண்டே “ஐபோன்ட்’ என்னும் இசைக்குழுவை  நடத்துவதே எங்கள் நோக்கம் என்றும்
இசைக் குழுவின் சார்பில் ரசிகர்களுக்கு பதில் அளிக்கப்பட்டது.

யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட இசைக்  கோப்பின் எம்பி3வடிவத்தை தரு மாறும் பவர் கேட்டிருந்தனர். அதன் தரம் மிகவும் மோசமானது என சங்கடத்துடன்  தெரிவித்த “ஐபோன்ட்’ குழுவினர் ஓரளவு மேம்படுத்தப்பட்ட  இசைக் கோப்பை உருவாக்கி தங்கள்  இணைய தளத்தின் மூலம் டவுண்லோடு செய்து கொள்ளலாம் என தெரிவித்தது.  தொடர்ந்து சில  வீடியோக்களும், ரசிகர்களுக்கான போட்டியும் கூட பதிவேற்றப்பட்டது.  இன்று ஐபோன்ட் 
இணைய தளம்  இசைப்பிரியர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது.

 ஐபேன்ட் இசைக்குழுவின்  இசை   மாயத்தின் பின்னே  இருப்பது, “மூகௌமியுசிக்’ சாப்ட்வேராகும். ஐபோன்களை இசைக் கருவியாக இந்த சாப்ட்வேர் மாற்றி விடுகிறது.
 இந்த சாப்ட்வேரை  பொறுத்துவதன் மூலும் ஐபோனை பியானோவாகவோ, டிரம்சாகவோ மாற்றி இசையை உருவாக்கலாம்.

ஆனால் ஒன்று இந்த சாப்ட்வேருக்கும், ஆப்பிள் நிறுவனத்திற்கும்  தொடர்பு இல்லை.
ஆப்பிள்  இத்தகைய  முயற்சிகளை  ஆதரிப்பது இல்லை.  உண்மையில் இவற்றை ஆப்பிள் சட்ட விரோதம்  என்று சொல்லி வருகிறது. மேலும் இந்தஅனுமதி இல்லாத சாப்ட்வேரை பொருத்த ஐபோனை  ஹேக் செய்ய வேண்டும். இது சுலபமானது மற்றும்  இதற்கு வழிகாட்டும் குறிப்புகள் இன்டெர்நெட்டில்  தாராளமாக கிடைக்கிறது. 

என்றாலும், இவ்வாறு அத்துமீறி உள்ளே நுழைந்து வேறு சாப்ட்வேரை பொருத்தினால் அந்த ஐபோனின் செயல்பாட்டிற்கு நாங்கள்  பொறுபல்ல என்று ஆப்பிள் ஒதுங்கி கொள்கிறது. இதனையும் மீறி பல தொழில்நுட்ப கில்லாடிகள் போனில்  அனுமதி இல்லாமல் செயல்படக் கூடிய சாப்ட்வேர்களை உருவாக்கிய வண்ணம் உள்ளனர்.

இத்தகைய  முயற்சிகளுக்கு சிகரம் வைத்தது போல அமைந்திருப்பது தான் ஐபோன்ட் குழு!

| |


ஸ்பேமை விரும்பும் பூமியிலே…

சந்தேகப்படும் படியான  இமெயில் வந்து சேர்ந்தால் கொஞ்சம் கூட யோசிக்காமல் அதனை டெலிட் செய்து விடுங்கள் என்பதே இன்டெர்நெட் உலகில் அழுத்தம், திருத்தமாக நிபுணர்கள் வழங்கும் ஆலோசனையாக இருக்கிறது.

.
இந்த ஆலோசனைக்கு  செவி சாய்க்க மறுத்தால், அதன் பிறகு மாட்டிக் கொண்டு விழிக்க நேரிடும். பலர் இப்படி கையை சுட்டுக் கொண்ட பிறகு இமெயில் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க கற்று கொண்டுள்ளனர்.

அதாவது  அழைப்பு இல்லாமல் வந்து சேரும் இமெயில்கள் என்று பொருள். இன்டெர்நெட் உலகில் இத்தகைய இமெயில்கள் ஸ்பேம் என்று  மிகுந்த வெறுப்போடு குறிப்பிடப்படுகின்றன.

அழையா விருந்தாளியாக  வந்து சேரும் கதைக்கு உதவாத  இமெயில் செய்திகள் இப்படி ஸ்பேம் என்று குறிப்பிடப்படுகின்றன.  ஸ்பேம்  எனும் வார்த்தைக்குள் அடங்கக்கூடிய இமெயில்கள் எண்ணிலடங்கா ரகங்களை சேர்ந்தவையாக இருக்கின்றன.
ஆரம்ப காலத்தில்  விளம்பர வாசகங்களை தாங்கி வந்த இத்தகைய  மெயில்கள், வெறும் தொல்லையாக மட்டுமே கருதப்பட்டன.

வயக்ராவை வாங்குங்கள், ஒரே நாளில் கோடீஸ்வரராவதற்கான வழி, அதிர்ஷ்டம் அழைக்கிறது, உடல் இளைக்க  எளிய முறை என்பது போன்ற விஷயங்களை தாங்கி வந்த  இந்த மெயில்கள், அதிகபட்சமாக  இணையவாசிகளின் நேரத்தை மட்டுமே வீணடித்து வந்தன.

பெரும்பாலும்  பலர் இந்த மெயில்களை அலட்சியம் செய்து விடுவது உண்டு.  ஆயிரத்தில் ஒருவர்,  ஆர்வத்தின் காரணமாக இதனை கிளிக் செய்தால், தொடர்ந்து  வீண் மெயில்களின் தாக்குதலுக்கு அவர் இலக்காக வேண்டியிருக்கும்.

இதெல்லாம் தொடக்க கால அனுபவங்கள். ஸ்பேம் பெருமை பரவ பரவ இணையவாசிகள் விவரமானவர்களாகி இத்தகைய மெயில்களை பார்த்தாலே  யோசிக்காமல் டெலிட் பட்டனை அழுத்த கற்று கொண்டுவிட்டனர்.

ஆனால் போகப்போக ஸ்பேம் மெயில்கள் ஆபத்தான வடிவில் வந்து சேரத் தொடங்கின. இணையவாசி களுக்கு  எப்படியாவது ஆசை வார்த்தை காட்டி அவர்களுக்கு மோசடி வலைவிரிக்கும்  முயற்சிகளாக இவை அமைந்தன.  இதில் பலர் ஏமாந்து தங்களது பணத்தை பறிகொடுத்திருக் கின்றனர். 

இந்த கட்டத்தில் ஸ்பேம் மெயில்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. இவை தொல்லை மட்டுமில்லை, ஆபத்தும் கூட என்று எச்சரிக்கப்பட்டது.

இதுவரை ஸ்பேம் மெயில்களை டெலிட் செய்வதால்  நேரம் இழப்பு மட்டுமே ஏற்பட்டு வந்தது.  உருப்படியான  இமெயில்களை  தேடிப்படிப்பதற்கு முன்பாக பயனில்லா இமெயில்களை  எல்லாம்  டெலிட் செய்வது என்பதே முக்கிய வேலையாக அமைந்து, இணையவாசிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த அனுபவமே மேல் என்று சொல்லக்கூடிய வகையில் இணையவாசிகளை  ஏமாற்றி  மோசடி செய்யும்  விதவிதமான ஸ்பேம்கள், இமெயில் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பதே நல்லது என்னும் எண்ணத்தைஏற்படுத்தி உள்ளன.
இப்போது ஸ்பேம் விஷயத்தில் அநேகமாக எல்லோருமே உஷாராகி விட்டார்கள் என்று சொல்லலாம்.  தெரியாதவர்களிடமிருந்து வந்திருக்கும் இமெயில்கள் என்றால் உடனே டெலிட் செய்யும் பழக்கம்  பலருக்கு வந்து விட்டது.

இந்நிலையில் ஸ்பேம் மெயில்களை  பார்த்தவுடன் டெலிட் செய்யாமல் அவற்றை ஆர்வத்தோடு பிரித்து, படித்து தொடர்பு கொள்ளும் வேலையை  இணையவாசிகள் பலர் செய்துள்ளனர்.

அந்த பலரை அடிமுட்டாள்கள் என்று நினைக்கவேண்டியதில்லை. அவர்கள் அனைவரும் இவற்றால் மோச மான  விளைவு ஏற்படலாம் என்பதை  நன்கு தெரிந்த நிலை யிலேயே ஸ்பேம் மெயில்களுக்கு பதிலளித்திருக்கின்றனர்.

ஸ்பேம் மெயில்களால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை  தெரிந்து கொள்வதற்காக வைரஸ் தடுப்பில்  புகழ் பெற்ற மெக் அஃபி என்னும் நிறுவனம் புதுமையான பரிசோதனை ஒன்றை நடத்த தீர்மானித்தது. அதன்படி  ஸ்பேம் மெயில்களை வரவேற்று  பதிலளிக்கும் போது என்னாகும் என  அறிந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

சூப்பர் ஸ்பேம் மீ என்னும் பெயரில் இதற்காக ஒரு திட்டம் தயார் செய்யப்பட்டு 50 இணையவாசிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தான் ஸ்பேம் மெயில்களுக்கு விரும்பி பதிலளித்திருக்கின்றனர்.
இதனை ஒரு விஷப்பரீட்சை என்று கூட சொல்லலாம். ஒரு மாத காலம் நடைபெற்ற இந்த

பரிசோதனையில் சில சுவாரஸ்யமான விஷயங்கள் தெரிய வந்துள்ளன.
ஸ்பேம் மெயிலுக்கு பதிலளித்தால் நாளென்றுக்கு 70 மெயில்கள் வரை வந்து சேர்வதாக தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல்  இப்படி தொடர்பு கொள்பவர்கள் இணையவாசிகளின்  கண்களில் மண்ணை தூவிவிடக்கூடிய அளவுக்கு மிகவும் புத்திசாலித்தனமான முறையில் வாசகங்களை எழுதி அனுப்புவதும் தெரிய வந்துள்ளது.

இணையவாசிகளுக்கு கொஞ்சம் கூட சந்தேகம் ஏற்படாத வழிமுறைகளை இவர்கள் புதிது புதிதாக கண்டறிந்து வருவதும் இந்த சோதனையின் மூலம்  நிபுணர்களுக்கு  தெரிய வந்துள்ளது.

இதுவரை ஆங்கிலத்தையே பிரதான மொழியாக பயன்படுத்தி வந்தநிலை மாறி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாட்டு மொழிகளையும் பயன் படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.
காலப்போக்கில் மேலும் பல மொழிகளும் சேர்ந்து கொள்ளலாம் என அஞ்சப்படுகிறது.
இதன் காரணமாக ஸ்பேம் தடுப்பில் புதிய அணுகுமுறை வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது.

ஸ்பேம் பெறுபவர்கள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2வது இடத்திலும், இத்தாலி 3வது இடத்திலும் உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா முன்னிலை பெறாதது கண்டு பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்.

 

இனி ரசிகர்கள் ராஜ்ஜியம்

இந்தியா இன்னொரு அணியோடு  கிரிக்கெட் போட்டியில் ஆடிக் கொண்டிருக்கிறது. போட்டியின் பரபரப்பான கட்டம். ஆடுகளத்தின் நடுவே இருக்கும் அந்த நட்சத்திர ஆட்டக்காரர் அடுத்த பந்தை எப்படி ஆடப்போகிறார் என்பது அவருக்கே தெரியாது.  அதை அவர்  பவுண்டரிக்கு விளாசப்போகிறாரா, அல்லது சிக்சர் அடிக்கப்போகிறாரா, இல்லை அருகே தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்கப்போகிறாரா என்பதை யாரோ தீர்மானிக்கப்போகிறார்கள்.

.
அடுத்த அரை மணி நேரத்திற்கு அவர் நின்று நிதானமாக ஆட வேண்டுமா அல்லது அடித்து நொறுக்க வேண்டுமா என்று தீர்மானிப்பதும் அவரது கையில் இல்லை.  அதையும் வேறு யாரோதான் தீர்மானிக்கப்போகிறார்கள்.

அந்த யாரோ, வேறு யாருமல்ல, சாட்சாத் ரசிகர்களேதான்.  ஒவ்வொரு பந்துக்கும் அல்லது ஒவ்வொரு முக்கியமான கட்டத்துக்கும் முன்பாக அவர்கள், அணியின் அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானித்து சொல்லப்போகிறார்கள்.  அதைத்தான் வீரர்கள் பின்பற்ற வேண்டும்.

இந்த முடிவை ரசிகர்கள் தன்னிச்சையாக எடுக்க முடியாது. அவர்களுக்குள் விவாதித்து, வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்தாக வேண்டும். ஏகமனதாக கருதப்படும் அந்த முடிவை வீரர்கள் செயல்படுத்த வேண்டும்.

இப்படியொரு காட்சியை விவரித்தால் நம்ப முடியாததாக தோன்றலாம்.  ஆனால் இன்டெர்நெட் புண்ணியத்தால் இது சாத்தியமாக வாய்ப்புள்ளது. அதற்கான முதல்படி ஏற்கனவே  எடுத்துவைத்தாகிவிட்டது.பிரிட்டனில் உள்ள கால்பந்து குழு ஒன்றை ரசிகர்களே  விலைக்கு வாங்கியிருக்கின்றனர்.

இன்டெர்நெட் மூலம் விவாதம் நடத்தி, அந்த குழுவின் செயல்பாடுகளை  வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கும் உத்தேசத்தோடு, அதனை  இன்டெர்நெட் மூலமே விலைக்கு வாங்கியிருக்கின்றனர். இன்டெர்நெட் மூலம் மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சிக்கு கிடைத்த  பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.

இன்டெர்நெட் மூலம் ரசிகர்களே ஒன்றிணைந்து தங்கள் கையில் கூடுதல் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை எடுத்து கொள்வது  இப்போது வேகமாக பிரபலமாகி வருகிறது.
இந்த பின்னணியில், பிரிட்டனில் உள்ள கால்பந்து குழு ஒன்றை ரசிகர்கள் சார்பில்  விலைக்கு வாங்குவதற்காக  மைஃபுட்பால் கிளப் என்னும் பெயரில் இணைய தளம் ஒன்று உருவாக்கப்பட்டது.

இந்த தளத்தின் நோக்கம் குறிப்பிடப்பட்டு, ரசிகர்களிடமிருந்து பங்குத் தொகை கோரப்பட்டது. குறிப்பிட்ட அளவிலான  தொகை சேர்ந்ததும் கால்பந்து குழுவை விலைக்கு வாங்கி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. எந்த குழுவை வாங்குவது என ரசிகர்களே வாக்களித்து முடிவு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதே போல குழுவின் ஒவ்வொரு செயலையும் ரசிகர்களே தீர்மானிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

வீரர்களுக்கு எப்படி பயிற்சி அளிக்கப்பட வேண்டும், எந்த வீரரை அணியில் சேர்க்க வேண்டும், அணியின் வியூகம், அணுகுமுறை என்னவாக இருக்க வேண்டும் போன்ற விஷயங்களையெல்லாம் இந்த இணைய தளம் மூலம் ரசிகர்களே விவாதித்து முடிவெடுப்பார்கள்.

வில் புரூக்ஸ் என்னும் பத்திரிகையாளர் மனதில் உதித்த இந்த எண்ணத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்த கால்பந்து ரசிகர்களின் ஆதரவு கிடைத்து, எதிர்பார்த்ததை விட அதிக நிதி சேர்ந்து விட்டது. இதன் பயனாக பிரிட்டனில் உள்ள  எப்ஸ்பிலீட் யுனைடெட் என்னும் அணியை  இந்த தளம் விலைக்கு வாங்கியிருக்கிறது. இந்த  குழுவில் 51 சதவிகித பங்குகளை  ரசிகர்கள் கட்டுப்படுத்த உள்ளனர்.

இந்த குழுவின் இயக்குனர் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். முற்றிலும் புதிய விஷயம் என்று இதனை அவர் வர்ணித்துள்ளார். ரசிகர்களால் ஒரு குழு வாங்கப்பட்டு நடத்த இருப்பது புதியபாதையாக அமையலாம் என்று அவர் கூறியிருக்கிறார். இதே போல வேறு கால்பந்து குழுக்களும்  ரசிகர்களால் வாங்கப்படுமா? வாங்கப்பட்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்றெல்லாம்  விவாதம் நடைபெற்று வருகிறது.

ரசிகர்களும் தங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றியால் மகிழ்ந்து போயிருக்கின்றனர்.
அடுத்த போட்டி தொடங்குவதற்கு முன் அவர்கள் தங்கள் அணிக்கான வியூகங்களை வகுத்துத்தர உள்ளனர்.

வீரர்கள் தேர்வு, பயிற்சியாளர் கடைப்பிடிக்க வேண்டிய உத்தி ஆகியவைகளை அவர்கள் விவாதித்து, முன்வைக்க உள்ளனர். அதோடு போட்டியை இன்டெர்நெட் மூலம் நேரடியாக  அவர்கள் கண்டு ரசிக்க முடியும். (மைஃபுட்பால் கிளப் தளத்தின் மூலம்தான்).
அதோடு போட்டி முடிந்த பிறகு வீரர்கள் அவர்களோடு இமெயில் மூலம் உரையாடுவார்கள்.
போட்டி குறித்து வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையிலான விவாதமாக இது அமையும்.
இப்போதைக்கு போட்டியின் போது ரசிகர்கள் குறுக்கிட அனுமதிக்கப்படவில்லை. இந்த முறை வெற்றிபெற்றால் நாளை அதுவும் சாத்தியமாகும். அப்போது,  விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் விதமே மாறிவிடலாம்.  எப்படியும் சூதாட்ட தரகர்கள் மற்றும் வர்த்தக சக்திகள்  வீரர்கள் இயக்குவதை விட, ரசிகர்களே ஆட்டிவைப்பது மேலானதுதானே!

செல்போனை மீட்கும் சாப்ட்வேர்

செல்போன் காணாமல் போய்விட்டது என்றால் உங்களால் அதிகபட்சம் செய்யக்கூடியது என்ன? வருத்தப்படுவது மற்றும் புலம்புவதை எல்லாம் செய்து முடித்த பிறகு, அல்லது அதற்கு முன்பாகவோ செல்போன் சேவை நிறுவனத்தை தொடர்பு கொண்டு உங்கள் எண்ணை செயல்படாமல் முடக்கி வைப்பது மட்டும் தான்.

.
தொலைந்த/திருடப்பட்ட செல்போன் திரும்ப கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்து ஒரு எப்ஐஆர் பதிவு செய்து கொள்ளலாம்.

ஒருசில செல்போன் சேவை நிறுவனங்கள் செல்போன் நம்பரை முடக்குவதற்கே எப்ஐஆர் நகலை கேட்கின்றன. எனவே, செல்போன் திரும்ப கிடைக்கும் இல்லாவிட்டாலும் இதற்காகவேனும் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்.

இதற்கு மேல் அதிகம் செய்வதற்கு இல்லை. வேண்டுமானால் செல்போனை திருடிச் சென்ற நபரை மனதார வசைபாடலாம்.  செல்போன் உரிமையாளர்கள் பலருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இப்படி செல்போனை பறிகொடுப்பவர்கள், அதனை நினைத்து நொந்து கொள்ள வேண்டிய நிலை இனி இல்லை.
தொலைந்த செல்போன்களை மீட்டுத் தரக்கூடிய விசேஷ சாப்ட்வேர்கள் தற்போது அறிமுகமாகி இருக்கின்றன. இந்த சாப்ட்வேர்களை செல்போனில் டவுன்லோடு செய்து கொண்டால், செல்போன் உங்கள் கையை விட்டு போகும் நேரத்தில் அது இருக்கும் இடத்தை சாப்ட்வேர் காண்பித்து விடும்தொலைந்து போகும் செல்போன்கள் நவீன வாழ்க்கையின் புதிய பிரச்சனையாக உருவாகியிருக்கும் நிலை இவற்றுக்கு தீர்வு காண தொழில்நுட்பத்தை உதவிக்கு அழைக்கும் நோக்கத்தோடு செல்போன் மீட்பு சாப்ட்வேர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மும்பையை சேர்ந்த மைக்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனம் லாஸ்ட் மொபைல் டிராகிங் சாப்ட்வேர் என்னும் பெயரில் இத்தகைய விசேஷ சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது.

இந்த சாப்ட்வேரை செல்போனில் டவுன்லோடு செய்து கொண்டால், அது செல்போன் காணாமல் போவதை கண்காணித்து கொண்டே இருக்கும். அதாவது, உங்களுடைய போன் வேறொருவர் கைக்கு சென்று அவர் அதிலிருந்த சிம்கார்டை தூக்கியெறிந்து விட்டு புதிய சிம்கார்டை பயன்படுத்த தொடங்குவார் அல்லவா? இப்படி புதிய சிம்கார்டு நுழைக்க பட்டதுமே இந்த சாப்ட்வேர் உங்களுக்கு எஸ்எம்எஸ் அல்லது இமெயில் மூலம் தகவல் அனுப்பிவிடும்.

இதற்காக பதிவு செய்யும் போதே மாற்று தொலைபேசி எண் மற்றும் இமெயில் முகவரியை சமர்ப்பிக்க வேண்டும். புதிய சிம்கார்டு பயன்படுத்தப்படுகிறது என்னும் தகவல் தெரிவிக்கப்படுவதோடு, அந்த போன் எந்த இடத்தில் இருக்கிறது என்னும் விவரமும் தெரிவிக்கப்படும்.

அந்த விவரத்தை காவல் நிலையத்தில் தெரிவித்து செல்போனை மீட்க முயற்சிக்கலாம். ஆச்சரியப்படும் வகையில் இந்த சாப்ட்வேரை பயன்படுத்திய ஒருசிலர் தொலைந்த செல்போனை மீட்டியிருக்கின்றனர்.

ஆனால் ஒன்று இதற்கு சேவை கட்டணமாக வருடத்திற்கு 399 ரூபாய் செலுத்த வேண்டும்.
இதேபோல் பிபிஎல் மொபைல்ஸ், ஜிஎஸ்எம் போன்களுக்காக ஒரு சாப்ட்வேரை அறிமுகம் செய்துள்ளது. ஒரேமுறை 149 ரூபாய் கட்டணம் செலுத்தி இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கட்டணம் செலுத்த தயங்குபவர்களுக்காக என்று டெக்ஸ் மொபைல், எம் கார்டு என்னும் இலவச சாப்ட்வேரை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சாப்ட்வேர்களை எல்லாம் மிஞ்சும் வகையில் செயல்படக்கூடிய வர்ச்சுவல் மொபைல் செக்யூரிட்டி சாப்ட்வேரை இன்னோவா டெக்னாலஜிஸ் அறிமுகம் செய்திருக்கிறது.

இந்த சாப்ட்வேர், உங்களது போனில் இருந்தால் அது தொலைந்து/திருடப்பட்டு வேறொருவரால் பயன்படுத்தப்படும் போது அதுபற்றிய விவரம் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படுவதோடு, போனிலிருந்த செல்போன் முகவரிகள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவையும் பாதுகாக்கப்படுகிறது.

இந்த சாப்ட்வேர் செல்போனை பயன்படுத்துபவர் இருப்பிடத்தை தெரிவிப்பதோடு, அவர் எந்த எண்ணுக்கெல்லாம் அழைத்து பேசுகிறார் என்ற விவரத்தையும் அனுப்பி வைக்கிறது. அதுமட்டுமல்ல லவுடு ஸ்பீக்கர் வசதி மூலம் போனை எடுத்தவர் என்னவெல்லாம் பேசுகிறார் என்பதையும் கண்காணிக்க முடியும்.

இந்த தகவல்களை எல்லாம் காவலர்களிடம் தெரிவித்து போனை மீட்பது சுலபம். ஒரேமுறை 349 ரூபாய் கட்டணம் செலுத்தி இதனை பயன்படுத்தலாம். அற்புதமான சாப்ட்வேராக இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் ஒரே பிரச்சனை என்னவென்றால் இந்த சாப்ட்வேர்கள் பெரும்பாலும் நவீன வசதி கொண்ட செல்போன்களில் மட்டுமே செயல்படக் கூடியவை என்பது மட்டும்தான்.
எனவே இவற்றை வாங்குவதற்கு முன்பாக இந்த சாப்ட்வேர் உங்கள் செல்போனில் செல்லுபடியாகுமா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.

இல்லையென்றால்,  முதலில் இத்தகைய கண்காணிப்பு சாப்ட்வேர் செயல்படக்கூடிய நவீன போன்களை வாங்கிக் கொள்ள வேண்டும.