All posts by CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

தினம் ஒரு கால் பந்து

தானத்தில் சிறந்தது எது என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒரு பதிலை தரக்கூடும். அமெரிக்கா பத்திரிகையாளரான ஸ்டீபன் டப்ஸ், இந்த கேள்விக்கு, தானத்தில் சிறந்தது கால்பந்து தானம்தான் என்று சொல்லக்கூடும்.

 

இதனை செயல்படுத்தி காட்டுவதற்காகவென்றே அவர் லிட்டில் ஃபீட் டாட்காம் என்னும் இணைய தளத்தை நடத்தி வருகிறார். இந்த தளத்தின் மூலமாக கால்பந்து களை சேகரித்து உலகம் முழுவதும் உள்ள ஏழை எளியவர்களுக்கு அனுப்பி வைத்து வருகிறார்.  

கிரிக்கெட் மீது மோகம் கொண்ட நம்மவர்களுக்கு கால்பந்தின் அருமை உடனடியாக விளங்கிவிட வாய்ப்பில்லை. இங்கே கிரிக்கெட் என்பது மதமாக இருக்கலாம்.  ஆனால் இந்தியாவுக்கு வெளியே சென்று விட்டால்  கால்பந்துதான் மதம்.
அதிலும் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில், கால்பந்து என்பது சகலமுமாக இருக்கிறது. 

ஈராக் உள்ளிட்ட நாடுகளிலும்  இதே நிலைதான். கால்பந்து மீது இந்நாட்டு மக்களுக்கு தீராத பற்று இருப்பதோடு, அதனை விளையாடி மகிழ்வது என்பது  சுதந்திரத்தின் வெளிப்பாடாகவும் அமைகிறது. 

அது மட்டுமல்லாமல்  ஏர்டெல் விளம்பரம் ஒன்றில் வருவது போல கால்பந்து என்பது பகைமையை மறந்து நட்பை வளர்ப்பதாகவும் இருக்கிறது. 

குறிப்பிட்ட அந்த விளம்பரத்தில்  முள்கம்பிகள் எல்லையை பிரிக்கும் விதத்தில் இரண்டு சிறுவர்கள் கால்பந்தாடுவதன் மூலம் நண்பர்களாவார்கள். பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கும் பல நாடுகளில் இது நடைமுறை எதார்த்தம். கால்பந்து பலரை ஒன்றிணைத்து இருக்கிறது. 

மேலும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள ரசிகர்கள், கால்பந்து போட்டிகளில் தங்கள் அணி சிறப்பாக விளையாடுவதை  தேசத்தின்  சார்பில் தெரிவிக்கப்படும் செய்தியாகவே கருதுகின்றனர்.  உலக கோப்பையில்  பெயர் தெரியாத ஒரு ஆப்பிரிக்க தேசம், ஒரே ஒரு போட்டியில்  வெற்றி பெற்றால் கூட  அந்நாட்டவர்  முழுவதும் கொண்டாடி மகிழ்வது இதன் காரணமாகத்தான்.

இப்படி கால்பந்து என்பது ஒரு விளையாட்டுக்கும்  மேற்பட்டதாக இருக்கிறது.  தவிர இயல்பாகவே கால்பந்து விளையாட்டின் மீது அசாத்தியமான ஈடுபாடும் நிலவுகிறது. ஆனால் பரிதாபம் என்னவென்றால் வறுமை மற்றும் போரால் பாதிக்கப்பட்ட பல ஏழை நாடுகளில் சிறுவர்களுக்கு கால்பந்து என்பது எட்டா கனியாகவே இருக்கிறது. கால்பந்தை  காசு கொடுத்து வாங்க முடியாத நிலையில் இருப்பதால் பல ஏழை சிறுவர்கள் அந்த 
விளையாட்டில் ஈடுபட முடியாத நிலையும் இருக்கிறது.

அமெரிக்க விமானப்படையில் பைலட்டாக பணியாற்றிய டிரேவர் ஸ்லேவிக் இதனை நெகிழ்ச்சியான முறையில் உணர்ந்து கொண்டார். அவரே ஒரு கால்பந்தாட்ட பிரியர். எப்போது  பணிநிமித்தமாக பறந்து சென்றாலும்,  தன்னோடு அவர் கால்பந்து ஒன்றை எடுத்து செல்வார்.  ஓய்வு கிடைக்கும் நேரத்தில் கால்பந்தாடுவது அவரது வழக்கம்.  ஒருமுறை ஹான்டூராஸ் நாட்டுக்கு சென்றிருந்த போது அவர் தன்னோடு வைத்திருந்த கால்பந்தை  தெருவோர சிறுவர்களுக்கு வழங்கினார்.  

பந்தை வாங்கியதுமே சிறுவர்கள், தங்களது வேலையை மறந்துவிட்டு விமான நிலையம் அருகிலேயே  மிகுந்த மகிழ்ச்சியோடு கால்பந்து ஆடத் தொடங்கிவிட்டனர்.
இந்த சம்பவம் அவரது மனதில் ஆழப்பதிந்து விட்டது. அதன் பிறகு  ஈராக்கில் அவர் பணியாற்றி கொண்டிருந்த போது அங்கிருந்த சிறுவர்கள்  அவரிடம் கேட்கும் பரிசு பொருள் என்பது கால்பந்தாகவே இருக்கிறது. 

ஈராக்கில் அவர் தங்கியிருந்த காலத்தில் அமெரிக்க பத்திரிகையாளரான ஸ்டீபன் டப்ஸ், அமெரிக்க படைகளோடு நெருங்கி செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. ஒருநாள் சிறுவர்களின் கால்பந்து மோகம் பற்றி குறிப்பிட்ட டிரேவர், பத்திரிகையாளர் டப்சிடம், அமெரிக்கா திரும்பியதும்  முடிந்தால் கால்பந்து களை சேகரித்து அனுப்புமாறு கேட்டு கொண்டார். 

டப்ஸ் நிச்சயம் செய்வதாக உறுதி அளித்தார். ஆனால் அவர் அமெரிக்கா திரும்பிய சில நாட்கள் கழித்து டிரேவர் குண்டுவெடிப்பில் பலியானதாக செய்தி கிடைத்தது. 

இருப்பினும் டிரேவரின் கடைசி ஆசையாக அதனை ஏற்று கொண்டு  கால்பந்துகளை சேகரித்து அனுப்பும் முயற்சியை அவர் மேற்கொண்டார்.  

இதற்காக  லிட்டில் ஃபீட் டாட்காம் என்னும் பெயரில் இணைய தளத்தை அமைத்து கால்பந்துகளை சேகரித்து ஈராக்கிற்கு அனுப்பி வைத்தார். ஈராக்கோடு நின்றுவிடாமல், ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளுக் கெல்லாம் கால்பந்துகளை அனுப்பி வைக்கத் தொடங்கினார்.  வசதி படைத்தவர்கள் புதிய கால்பந்தை வாங்கி இந்த தளத்திற்கு அனுப்பி வைக்கலாம்.  இவ்வாறு சேகரிக்கப்படும் கால்பந்துகளை தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள். 

கால்பந்து கிடைக்கப்பெறும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அதனை  பொக்கிஷமாக கருதி மகிழ்கின்றனர். அவர்கள் வாழ்க்கையில் கால்பந்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதற்கான சிறிய பங்களிப்பை செய்யுமாறு லிட்டில்ஃபீட் இணைய தளம் அனைவரையும் கேட்டு கொள்கிறது.

மைஸ்பேஸ் புத்தகம்

மைஸ்பேஸ் புத்தகம் எழுதப் போகிறது தெரியுமா? அதாவது மைஸ்பேஸ் உதவியோடு புத்தகம் எழுதப்பட உள்ளது. மைஸ்பேசை அறிந்தவர்களுக்கு இந்த செய்தியின் முக்கியத்துவம் நன்கு விளங்கும். சமூக வலைப்பின்னல் தளங்களில் முதன்மையானதாக கருதப்படும் மைஸ்பேஸ், இளைஞர்களின் கூடாரம் என்று பாராட்டப்படுகிறது. இளைஞர்கள் மனதில் பட்டதை பதிவு செய்து, புதிய நண்பர்களை தேடிக்கொள்ள மைஸ்பேஸ் பேருதவியாக இருக்கிறது. அதுதான் பிரச்சனையே.

மனதில் பட்டதை எல்லாம் எழுதி விடுவதால் அந்தரங்கத்தின் எல்லைக்கோடு மறைந்து, எல்லாமே பகிரங்கமாகி விடுகிறது. இதனால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்ட கதைகளும் அநேகம் இருக்கின்றன. இதன் விளைவாக  மைஸ்பேஸ் சர்ச்சைக்கு இலக்காகி இந்த போக்கிற்கு கட்டுப் பாடு தேவை என்றும் பேசப்பட்டு வருகிறது.

இந்த சர்ச்சைகளை மீறி மைஸ் பேசின் சக்தி அற்புதமானதாக இருக்கிறது. புதிய நண்பர்களை தேடித்தரும் அதன் ஆற்றலை எந்த ஒரு  விஷயத்திற்கு வேண்டுமானால் ஆதரவு திரட்ட பயன்படுத்திக் கொள்ளலாம். முதன் முதலில் இதனை உணர்ந்து பயன்படுத்திக் கொண்டது இசைக் கலைஞர்கள் தான். புதிய பாடகர்கள் மைஸ்பேஸ் தளத்தில் ஒரு பக்கத்தை அமைத்து அதன் மூலம் தங்களுக்கான ரசிகர்களை தேடிக் கொள்வதில் வெற்றி பெற்றுள்ளனர். 

இந்த வெற்றிக்கதைகள் மைஸ்பேஸ் தளத்தை மிகவும் பிரபலமாக்கியதன் விளைவாக பல துறையை சேர்ந்தவர் களும் மைஸ்பேசில் இடம்பிடித்து வருகின்றனர். குறிப்பாக பல எழுத்தாளர்கள் மைஸ்பேஸ் பக்கம் மூலம் வாசகர்களுடன் தொடர்பு கொள்ள முயன்று வருகின்றனர். மைஸ்பேஸ் இதற்கான சுலபமான மற்றும் செலவு குறைந்த வழியாக கருதப்படுகிறது.

இந்த பின்னணியில் தான் மைஸ்பேஸ் தளத்துடன் புகழ்பெற்ற ஹார்ப்பர் அண்டு காலின்ஸ் பதிப்பகம் கைகோர்த்துள்ளது. மைஸ்பேஸ் உறுப்பினர்கள் உதவியோடு புத்தகம் ஒன்றை வெளியிட இந்த பதிப்பகத்தின் சிறுவர் புத்தக பிரிவு தீர்மானித்துள்ளது. 

சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான இந்த புத்தகத்தை பத்திரிகையாளரான ஜேகா டாடே என்பவர் எழுத இருக்கிறார். இந்த புத்தகம் தொடர் பான கருத்துக்களை மைஸ்பேஸ் உறுப்பினர்கள் தெரிவிக்கலாம்.

மைஸ்பேசில் எண்ணற்ற சமூகங்கள் இருக்கின்றன. இவற்றில் சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களை சமூக நோக்கில் விவாதிப்பதற்காக என்றே அவர் பிளேனட் என்னும் சமூகமும் இருக்கிறது.

இந்த பகுதியில் தான் புத்தகத்திற் கான ஆலோசனைகளை பதிவு செய்ய வேண்டும். இணையவாசிகள் வழங்கும் ஆலோசனைகளில் இருந்து மிகச் சிறந்த 40 கருத்துக்களை தேர்வு செய்து புத்தகத்தில் பொருத்தமான இடத்தில் பயன்படுத்திக்கொள்வது என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது ஆய்வு நூல்களில் ஆங்காங்கே நிபுணர்களின் கருத்துக் கள் மேற்கோள் காட்டப்படும் அல்லவா, அதேபோல இணைய வாசிகள் சமர்ப்பிக்கும் கருத்துக்கள் எடுத்தாளப்படும்.

புத்தகத்தின் முடிவில் ஆலோசனை வழங்கியவர்களின் பட்டியலும் இடம் பெற்றிருக்கும். ஆலோசனைகள் ஒரு வரியாகவும் இருக்கலாம்! ஒரு பத்திரிகையாகவும் இருக்கலாம்.
மைஸ்பேஸ்/அவர் பிளேனட் என்னும் பெயரில் வெளியிடப்பட உள்ள இந்த புத்தகம் முதல் கட்டமாக இரண்டு லட்சம் பிரதிகள் அச்சிடப்பட உள்ளது.  அடுத்த  ஆண்டு ஏப்ரல் 22ந் தேதி புத்தகம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று உலக பூமி தினம் என்பது விசேஷம்.

மைஸ்பேஸ் தளத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான டாம் ஆண்டர்சன் இந்த திட்டத்தை குறிப்பிடத்தக்க முயற்சி என்று வர்ணிக்கிறார். இளைஞர்களை சுற்றுச்சூழல் விவாதத்தில் ஆர்வம் கொள்ள வைக்க இந்த புத்தக திட்டம் உதவியாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை யோடு சொல்கிறார். மைஸ்பேஸ்  மூலம் உருவாக உள்ள முதல் புத்தகமாகவும் இது அமையும் என்கிறார். ஏற்னவே மைஸ்பேஸ் எம்.டிவியோடு இது போன்ற ஒரு கூட்டு முயற்சியை மேற்கொண்டது. தற்போது பதிப்பக நிறுவனத்துடன் கைகோர்த்துக் கொண்டுள்ளது.

இதனிடையே மைஸ்பேஸ் மற்றொரு கூட்டு முயற்சியையும் அறிவித்திருக் கிறது. தற்போது வீடியோ கேம்கள் அனைத்து தரப்பினரிடையேயும் பிரபலமாகி வருவதால், வீடியோ கேம்களை உருவாக்குவதற்காக என்று வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனமான ஒபிரான் மீடியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த கூட்டு முயற்சியில் 5 நிமிடத்தில் விளையாடி முடிக்க கூடிய குறைந்த நேரத்திலான வீடியோ கேம்கள் உருவாக்கப்பட உள்ளன. போகிற போக்கில் ஆடக் கூடிய எளிமையான கேம்களாக இவை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மைஸ்பேஸ் பற்றி மற்றொரு செய்தி. பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹாங்க்ஸ் தனது ரசிகர்களுக்காக என்று மைஸ்பேஸ் தளத்தில் ஒரு பிரத்யேக வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில் எலக்ட்ரிக் கள்  தொடர்பான தனது கருத்துக்களை கூறி அதற்கு தெரிவித்துள்ளார்.

இமெயில் இன்னல்

இமெயில் கலாச்சாரம்  பிடிபடவில்லை என்ற எண்ணம் கொண்டவர்களா நீங்கள்? அப்படி என்றால் அதை நினைத்து சந்தோஷப்படுங்கள்! இமெயில் தொடர்பான நுணுக்கங்கள் அனைத்தும் அத்துபடி என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் தகுதி உங்களுக்கு இல்லாமல் போகலாம்.  எதற்கெடுத்தாலும் இமெயில் அமைப்பு என்று சொல்லும் பழக்கமும், தேவையும் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம்

 

அப்படி இருந்தால் ஒருவிதத்தில் அது நல்லதுதான். இமெயில் விஷயங் களில் பரிட்சயம் பெற்றிருப்பது, நவீன வாழ்க்கைக்கு ஏற்றவராக  உங்களை கருதப்பட வைக்கும் என்றாலும், இமெயிலுக்கென்று சில குறைகள் இருக்கவே செய்கிறது.

அந்த குறைகளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிதான் இப்போது இன்டர்நெட் உலகில் கவலையோடு பேசத் தொடங்கியிருக்கின்றனர்.

 

இமெயில் கலாச்சாரம், ஈடுசெய்ய முடியாத சில இழப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும், இது குறித்து நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர். அது மட்டுமல்ல, இமெயில் அனுப்புவதை கொஞ்சம் குறைத்து கொண்டாலும் நல்லதுதான் என்கின்றனர்.

கடிதங்களுக்கு இல்லாத சவுகர்யங்களும், சுலபத்தன்மையும் இமெயிலுக்கு இருக்கலாம்.  ஆனால்  கடிதங்களால் ஏற்பட வாய்ப்பு இல்லாத இன்னல்கள் இமெயில்களால் ஏற்படுகின்றன  என்பதுதான் விஷயம்.

அலுவலக தொடர்புகளுக்கு சர்வசகஜமாக இமெயிலை பயன்படுத்துபவர்கள் இருக்கின்றனர். நண்பர்களோடு கருத்துப்பரிமாற்றம் செய்வதற்கும், கண்ணில்படும் தகவல்களை தட்டிவிடுவதற்கும்  இமெயிலை நாடுபவர்கள் இருக்கின்றனர்.

 

இவ்வளவு ஏன் ஒரே அலுவலகத்தில் பக்கத்து  அறையில் இருப்பவருக்கு  ஒரு தகவலை சொல்ல வேண்டும் என்றால், இமெயிலை  அனுப்பி வைக்கும் நபர்களும் இருக்கவே செய்கின்றனர். 

இங்கேதான் பிரச்சனை வருகிறது என்று சொல்கின்றனர். கூப்பிடும் தூரத்தில் இருக்கும் நபருக்கு  தகவலை சொல்ல வேண்டும் என்றால், எழுந்து சென்றால் போயிற்று அல்லது குறைந்த பட்சம் போனை கையில் எடுத்து பேசினாலாவது பரவாயில்லை. மாறாக இருந்த இடத்தில் இருந்தே இமெயிலில் நாலு வரியை டைப் செய்வது சுலபமாக இருக்கலாம். ஆனால் பிரச்சனைக்குரியதாக மாறிவிடுகிறது. காரணம் தகவல் தொடர்பு சாதனங்களில் இமெயில் மிகவும் வறட்டுத்தனமானதாக கருதப்படுகிறது. 

அதாவது இமெயில் உணர்வு ரீதியான குறிப்புகளை தாங்கி செல்லும் ஆற்றல் இல்லாத வாகனமாகவே இருக்கிறது.  நேரிலோ அல்லது போனிலோ சொல்லத் தயங்கும் விஷயங்களை நாம் இமெயிலில் தெரிவித்து வம்பில் மாட்டி கொள்கிறோம் என்று கூறப்பட்டு வருகிறது.

அதே போல இமெயில் வாசகங்கள் நாம் எதை நினைத்து சொல்கிறோமோ அவற்றுக்கான தன்மையை உணர்த்தாமல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு இமெயிலில் ஒரு வாசகத்தை படிக்கும் போது, அதனை படிப்பவர் தான் மரியாதை குறைவாக நடத்தப்பட்டதாக உணரலாம்.  அல்லது  மிகுந்த கோபத்தோடு அந்த வாசகம் எழுதப்பட்டதாக உணரலாம்.

சுருக்கமாக சொன்னால் இமெயில் அனுப்பியவர் குறிப்பிட விரும்பிய கருத்துக்கு மாறான எந்த விஷயத்தை வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். ஏனென்றால் நாம் பேசும் போது வார்த்தைகளை மட்டுமே வைத்து ஒரு விஷயத்தை புரிந்து கொள்வதில்லை. அது சொல்லப்படும் முறை, அப்போது நமது முகத்தில் காணப்படும் உணர்ச்சி, நம்முடைய  அங்கஅசைவுகள் போன்ற பல்வேறு  குறிப்புகளை வைத்தே பேசப்படும் விஷயத்தை கிரகித்து கொள்கிறோம். 

உண்மையாக திட்டுவதற்கும், செல்லமாக திட்டுவதற்கும்  வித்தியாசம் இருக்கிறதல்லவா?
கடுமையாக நடந்து கொள்வதற்கும், கண்டிப்போடு சொல்வதற்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா?

நேரில் பேசும் போது இவற்றையெல்லாம் நாம் தானாகவே புரிந்துகொண்டு விடுகிறோம். எனவே  கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் இமெயிலில் இப்படி இல்லை.

ஒரு விஷயத்தை தவறுதலாக புரிந்துகொள்ள அனேக வாய்ப்புகள் இருக்கின்றன.
சொல்லப்போனால் இமெயில் மூலம் மட்டுமே கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் போது மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்கின்றனர். 

இமெயில் மூலம் ஜோக்குகளை அனுப்பி வைப்பது பலருக்கு  பழக்கமாக இருக்கிறதல்லவா? பொதுவாக இப்படி அனுப்பப்படும் ஜோக்குகளை பெறுபவர்கள் இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்றே நினைப்பதாக ஒரு கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.  எல்லாம்  இமெயிலால் வரும் கோளாறுதான்.

முகத்தை பார்த்து பேசும் போது, நம்முடைய மூளை பல்வேறு குறிப்புகளை புரிந்து கொண்டு பேச்சின் தன்மையை உணர்ந்துகொள்ள வழிசெய்கிறது. இமெயில் இந்த குறிப்புகள்  இல்லாமல் வெறுமையோடு வருகிறது. ஆகையால்தான் இமெயில் அனுப்புவதை விட நேரில் அல்லது குறைந்தபட்சம் போனில் பேசுவது மேலானது என்கின்றனர்.
எல்லா நேரங்களிலும் முடியா விட்டாலும், முக்கியமான மற்றும் தேவைப்படும் நேரங்களில் இமெயிலை மூடிவிட்டு,  நேர்முக பேச்சுக்கு தயாராகுங்கள்.

எப்படி எனும் கலை

ஏன் என்ற கேள்வியை விட எப்படி எனும் கேள்வி கொஞ்சம் வலுவானது. ஏன் என்ற கேள்வியை எழுப்ப அடிப்படையில் போர்க்குணம் தேவை.
.
எப்படி எனும் கேள்வி அப்படியல்ல. அது மிகவும் யதார்த்தமானது. அதற்கு ஆர்வம் மட்டுமே தேவை. தவிர நடைமுறையில் அந்த கேள்விக்கான பதில் மிகுந்த பயனை அளிக்கக் கூடியது. 

எப்படி எனும் கேள்விகளை கேட்டுக் கொண்டே இருக்கலாம்…

கார் ஓட்டுவது எப்படி, பைக் ஓட்ட கற்றுக் கொள்வது எப்படி, கைக் கடிகாரம் சரி செய்வது எப்படி… கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

இளநீர் சீவுவது எப்படி, பன நுங்கை கையால் வைத்து கீழே சிந்தாமல் லாவகமாக ஊறிஞ்சுவது எப்படி போன்ற கேள்விகளை கேட்கலாம்.

இந்த கேள்விகள் புத்திசாலித்தன மானதாகவோ,உலகை பிரட்டக் கூடியதாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப உண்டாகும் சந்தேகம் அல்லது பிரச்சனையை தீர்க்கக் கூடிய பதிலை வேண்டு வதாக இருந்தால் போதுமானது.

இத்தகைய கேள்விகளுக்கு ஒரு எல்லையே இல்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களும் இது போன்ற கேள்வியை நம்முள் எழுப்புகின்றன.
இப்போது எதற்கு இந்த “எப்படி புராணம்’ என்று கேட்கலாம். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

எப்படி எனும் கேள்விகளுக்கு விடையளிப்பதற்கு தற்போது புதிய மதிப்பு
ஏற்பட்டிருப்பதுதான் விஷயம்.

எதிர்பாராத நேரத்தில் தேள் கொட்டும் போது என்ன செய்வது,  இரண்டு நாட்களுக்கும் மேலாக துன்புறுத்திக் கொண்டிருக்கும் தசைப் பிடிப்பிற்கு தீர்வு காண்பது எப்படி? என கேட்க தோன்றும் போது, வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினரையோ அல்லது அக்கம் பக்கத்தில்இருக்கும் நண்பர் களையோ கேட்டு தெரிந்து கொள்வோம் அல்லவா. எல்லா நேரங்களிலுமே உடனடியாக பதில் கிடைத்து விடும் என்று சொல்வதற்கில்லை.

ஆனால் இன்டெர்நெட் புண்ணியத்தால் இன்று இப்படி, எந்த எப்படி கேள்வியை கேட்டாலும் பதில் சொல்வதற்கு எங்கோ ஒரு மூளையில் யாராவது இருக்கவே செய்கின்றனர்.
அந்த யாராவது ஒருவர் குறிப்பிட்ட அந்த விஷயத்தில் தேர்ச்சி பெற்ற நபராக இருக்கலாம். அந்த தேர்ச்சியின் அடிப்படையில் அவர்கள் பதிலை வாய்மொழியாக சொல்வதோடு வீடியோ மூலம் விளக்கி சொல்கின் றனர். இத்தகைய விளக்கமளிக்கும் வீடியோக்கள் இன்டெர்நெட்டில் குவிந்து கிடக்கின்றன.

பொதுவான சந்தேகங்கள் முதற்கொண்டு வினோதமான விளக்கங்கள் வரை எண்ணற்ற எப்படி வீடியோக்கள் இன்டெர்நெட்டில் கொட்டிக் கிடக்கின்றன.

சமையல் கலை குறிப்புகள், அழகு குறிப்புகள், இசை குறிப்புகள் என்று எண்ணற்ற பிரிவுகளின் கீழ் காட்சி வழியே விளக்கமளிக்கும் வீடியோக் கள் தினந்தோறும் இன்டெர் நெட்டில் பதிவேற்றப்பட்டு வருகின்றன.

உதாரணத்திற்கு தண்ணீரில் விழுந்து விட்ட செல்போனை எப்படி சரி செய்வது எனும் கேள்வி எழுகிறது என வைத்துக் கொள்வோம்.

அந்த செல்போனை எப்படி தண்ணீரிலிருந்து எடுத்து, மீண்டும் செயல்பட வைக்க வேண்டும் என்பதை அழகாக விளக்கும் வீடியோ குறிப்பை யாராவது ஒருவர் பதிவேற்றி இருக்கலாம். அதனை பார்த்து செல்போனை மீண்டும் இயங்க வைப்பது மிகவும் சுலபமானது.

இதில் என்ன குறிப்பிடத்தக்க அம்சம் என்றால் இத்தகைய வீடியோக்கள் இன்டெர்நெட்டில் நிறைந்திருப் பதோடு அவற்றை இடம் பெற வைத்த வாய்ப்பு தரும் இணையதளங்களும் அதிகரித் திருப்பதோடு இந்த வசதி சாமானியர்கள் தங்களுக்கு தெரிந்த விஷயத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு பணம் சம்பாதிப்பதற்கான வழியாகவும் மாறி வருகிறது என்பதே.

அமெரிக்காவை சேர்ந்த கதேஷா என்பவர் இது போன்ற 90க்கும் மேற்பட்ட வீடியோ விளக்கங்களை மெட்டாகேப் எனும் தளத்தில் சமர்ப்பித்துள்ளார்.

கோக் குளிர்பானத்தை இரண்டே நிமிடத்தில் சில்லிட்டு போக வைப்பது எப்படி? கம்ப்யூட்டரை எடுத்த எடுப்பிலேயே இயக்குவது எப்படி உள்ளிட்ட விளக்கங்களை அவர் சமர்ப்பித்திருக்கிறார்.

இந்த விளக்கங்கள் லட்சக்கணக்கா னோரால் விரும்பி பார்க்கப் பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக சாதாரண டார்ச் லைட்டை கொண்டு லேசர் கதிரை உருவாக்குவது எப்படி எனும் விளக்கப் படத்தை கிட்டத் தட்ட 18 லட்சம் பேர் பார்வையிட்டிருக்கின்றனர்.

மெட்டாகேப் இணையதளம் யூ டியூப்பை போல வீடியோ பகிர்வுக்கான தளம்தான் என்றாலும் பதிவேற்றப் படும் ஒவ்வொரு வீடியோவுக்கும் இந்த தளம் இணையவாசிகளுக்கு காசு கொடுக்கிறது. இதனால் கதேரா ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இந்த தளத்தின் மூலம் சம்பாதித்திருக்கிறார்.

கதேரா மட்டுமல்ல பல இணையவாசிகள் இப்படி வீடியோ விளக்கங்களை சமர்ப்பித்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

சந்தேகத்திற்கு விடை காண இன்டெர்நெட்டை நாடும் பழக்கம் அதிகமாக இருப்பதால் வீடியோ விளக்கங்களை இணையவாசிகள் அதிகம் விரும்புகின்றனர்.
இதனையடுத்து வீடியோ விளக்கங்களை ஊக்குவிப்பதற்காக என்றே ஒன்டர் ஹவ் டூ டாட் காம், எக்ஸ்பர்ட் வில்லேஜ் போன்ற தளங்கள் உருவாகி இருக்கின்றன.

இந்த தளங்கள் சாமானியர்களுக்கு எல்லாம் நிபுணர் எனும் அந்தஸ்தை பெற்றுத் தந்து வருவாயும் ஈட்டித் தருகிறது. எல்லாம் எப்படி எனும் கலையால்தான்!

கம்ப்யூட்டரே மெட்டுப் போடு

ஆர்கெஸ்ட்ரா வேண்டாம். இசைக் கலைஞர்கள்  தேவை இல்லை. கம்ப்யூட்டரை மட்டும்வைத்துக் கொண்டு மெட்டுப்போட்டு விடலாம் என்கிறார் கெர்ஷான் சில்பர்ட்.
அவர் ஒன்றும் சும்மாசொல்லவில்லை. இதற்கான சாப்ட்வேரையும்  உருவாக்கிவிட்டு தான் சொல்கிறார்.
.
அவரது சாப்ட்வேரை ஒரு டிஜிட்டல் இசையமைப்பாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள். “எம்ஓஆர்’ என்று அழைக்கப்படும் அந்த சாப்ட்வேரை  கொண்டே  புதிய மெட்டுக்களை போடச் சொல்லலாம். 

ஆர்கெஸ்ட்ரா முன் நின்றபடி, கைகளை  அசைத்து  பாட வைப்பது போல், இசை ஞானம் உள்ளவர்கள் இந்த சாப்ட்வேர் உதவியோடு  கம்ப்யூட்டர் முன் அமர்ந்தபடி இசைக் குறிப்புகளை  கட்டளைகளாக வழங்கி மெட்டுக்களை  மலர வைத்துவிட முடியும். அதற்காக  இந்த சாப்ட்வேர் இளையராஜாவுக்கோ, ஏ.ஆர். ரஹ்மானுக்கோ போட்டி என்று நினைத்து விடுவதற்கில்லை. அவர் களைப் போன்ற இசையமைப்பாளர்கள் இசைக் குறிப்புகளை  கொண்டு புதிய மெட்டுகள் அல்லது பின்னணி இசையை உருவாக்கி பார்ப்பதற்கான சாப்ட்வேர் இது.

மனதில் உள்ள மெட்டை, பாடலாக ஒலிக்கச் செய்து  கேட்டுப் பார்க்கும் ஆற்றல் திறமையான இசைக் கலைஞர்களுக்கு உண்டு என்றாலும், பாடல் பதிவுக்கு முன்பாக, இசைக் கலைஞர்கள் ஒத்திகை செய்ய வைத்து மெட்டுக்கள் ஒலிக்கும் விதம்  சரியாக இருக்கிறதா என சோதித்து பார்க்கும் தேவை இருக்கவே செய்கிறது.

 தன்னுடைய சாப்ட்வேர், இந்த ஒத்திகை பார்க்கும் பணியை  கச்சிதமாக நிறைவேற்றித்தரும் என்கிறார் சில்பர்ட்,  இசையமைப் பாளர்கள் தங்கள் மனதில்  உள்ள இசைக் குறிப்புகளை இந்த சாப்ட் வேரிடம்சொன்னால், ஆர்கெஸ்ட்ரா இசைத்து காண்பிப்பது போல, சாப்ட்வேர் மெட்டமைத்து காட்டி விடும். அதில் தேவையான மாற்றங்களை  சொன்னால், திருத்தங் களை மேற்கொண்டு  புதிதாக மெட்டமைத்து காண்பிக்கும்.

சாப்ட்வேர் உதவியுடன்  இசைய மைப்பது ஒன்றும் புதிய விஷயமல்ல.  உண்மையில் இன்றைய  டிஜிட்டல் யுகத்தில் இசை அமைப்பது என்பது முழுவதும் தொழில்நுட்ப மயமாகி இருக்கிறது.  சின்தசைசர், மின்னணு கீ போர்டு, மின்னணு கித்தார் என எல்லாமே  தொழில்நுட்பத்தை தழுவிக் கொண்டிருக்கின்றன.  இசைக் குறிப்புகளின் அடிப்படையில் ஒலி களை  உருவாக்கித்தரும் சாப்ட் வேரும்  பழக்கத்தில் இருக்கின்றன.

ஆனால் இவற்றை எல்லாம் விட, தனது சாப்ட்வேர் முற்றிலும் மாறுபட்டது, மேம்பட்டது என்கிறார் சில்பர்ட். சாப்ட்வேர் உருவாக்கும் இசை உயிரோட்டம் இல்லாமல் ஒருவித செயற்கை தன்மையோடு  இருக்கும். அதனை  கேட்கும் போதே  இயந்திரத் தனத்தை தவறாமல் உணரலாம் என்கிறார் சில்பர்ட்.

ஆனால் தான் உருவாக்கி உள்ள சாப்ட்வேர்  படைக்கும் இசை மனித தன்மை கொண்டதாக இருக்கும் என்பதை  சிறப்பு என்கிறார் இவர்.

ஒவ்வொரு இசைக் குறிப்புக்கும் ஏற்ற ஒலியை  எழுப்பவல்ல சாப்ட்வேரை உருவாக்கி விடுவது சுலபம்தான்.  அவற்றைக் கொண்டே, மெட்டுக்களையும் அமைக்கலாம்.

இந்த ஒலிகளில் ஜீவனைத்தவிர மற்ற எல்லாமும் இருக்கும் என்கிறார் சில்பர்ட். இசை என்பது வெறும் ஒலிச் சேர்க்கை அல்லவே!  நுட்பமான உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடிய உயிரோட்டம் நிரம்பியதாக அல்லவா இசை விளங்குகிறது. தேர்ச்சி பெற்ற இசைக் கலைஞரால்  சற்று அழுத்தம் கொடுப்பது அல்லது லேசான இடைவெளி விடுவதன்  மூலம் ஒரு ஒலிக்குறிப்பிற்கு  கூடுதல் உணர்வை ஏற்படுத்தி, இசை அனுபவத்தை எங்கேயோ கொண்டு போய் விட முடியும். ஐய்யோ பாவம் சாப்ட்வேரிடம் இந்த நெளிவு சுளிவுகளை எதிர்பார்க்க முடியாது.

இந்த அளவுக்கு திறமை படைத்தது என்று சொல்ல முடியாவிட்டாலும், ஓரளவுக்கு இசைக் கலைஞர்களுக்கு சாத்தியமாகும் நுணுக்கமான தன்மையை கொண்ட இசை சாப்ட்வேரை சில்பர்ட் உருவாக்கி இருக்கிறார். ஒலிக்குறிப்புகளை மட்டும் அல்லாமல் அதனுடன்  சொல்லப்படும் நுட்பமான குறிப்புகளை புரிந்து கொள்ளக் கூடிய  ஆற்றல் கொண்டதாக இதனை சில்பர்ட் உருவாக்கி உள்ளார்.

உதாரணத்திற்கு ஒலிக்குறிப்பு, சற்றே உருக்கமானதாக இருக்க வேண்டும் என தெரிவித்தால் சாப்ட்வேர்  அதனை புரிந்து கொண்டு, ஒலியின் தன்மையை அதற்கேற்ப  மாற்றித்தரும். இப்படி இசையில் உள்ள நுட்பமான சங்கதிகளை உணரும் திறன் கொண்டதால் இதற்கு மியூசிக் ஆப்ஜக்ட்ஸ் ரிககனைஷன் புரோ கிராம் என பெயரிட்டுள்ளார்.  இந்த சாப்ட்வேர் மெட்டு போட்டுத் தந்தால் அது கம்ப்யூட்டர் போட்ட மெட்டு என கண்டுபிடிக்க முடியாதபடி  இயற்கை யானதாக இருக்கும் என்கிறார் அவர்.
இதனை சோதனைக்கு உட்படுத்தி நிரூபித்தும் காட்டியிருக்கிறார்.

இளம் வயதில் பியானோ இசைக் கலைஞராக விளங்கிய சில்பர்ட் பின்னர் பியானோ பழுதுபார்க்கும் பணியையும் செய்து வந்தார். அதன் பிறகு ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த  நண் பருடன் பேசிக் கொண்டிருந்த போது, அந்நிறுவனம் மெட்டமைப்பதற்கான சாப்ட்வேரை உருவாக்குவது பற்றி கேள்விபட்டார். அப்போது ஏற்பட்ட  ஆர்வம் அவரே இத்தகைய சாப்ட்வேரை  உருவாக்கும் முயற்சி யில் ஈடுபட வைத்தது. 

இரண்டு ஆண்டு உழைப்பிற்கு பிறகு இந்த சாப்ட்வேரை  உருவாக்கினார். இப்போது தன்னுடைய சில்வர் மியூசிக் நிறுவனம் மூலம் இதனை விற்பனை செய்து வருகிறார்.
விளம்பரங்களுக்கான இசை மற்றும் பின்னணி இசை போன்றவற்றை  உருவாக்க இந்த சாப்ட்வேரை  பயன்படுத்தலாம். மெட்டு எப்படி வந்திருக்கிறது என தெரிந்து கொள்ள இது உதவியாக இருக்கும்.

இசை சாப்ட்வேரில் இது ஒரு முக்கிய  மைல்கள் என்று கூறும் சில்பர்ட் அடுத்ததாக எழுத்துக்களை  படித்து  காட்டக் கூடிய சாப்ட்வேரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.  அதாவது மனிதர்களை போலவே ஏற்ற இறக்கங்களுடன்  சொற்களின் அர்த்தத்தை புரிந்து கொண்டு  படிக்கும் சாப்ட்வேரை உருவாக்கப்போவதாக சொல்கிறார்.