Category Archives: இணைய செய்திகள்

இணையத்தை உலுக்கிய ரான்சம்வேர் தாக்குதல்

ransomசாப்ட்வேர், ஸ்பைவேர், மால்வேர் வரிசையில் இப்போது, ரான்சம்வேர் என்பதும் பெரும்பாலானோர் அறிந்த வார்த்தையாகி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இணையத்தில் தலைகாட்டி கம்ப்யூட்டர்களை முடக்கி போட்டு பினைத்தொகை கேட்டு மிரட்டும் வகையில் நடத்தப்பட்ட ரான்சம்வேர் இணையதாக்குதலே இதற்கு காரணம். 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்கள் இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டதால், இணைய உலகம் முழுவதும் பீதி பரவியது. இந்தியாவில் உள்ள கம்ப்யூட்டர்களும் தாக்குதலுக்கு இலக்காயின. சென்னையிலும் கூட பாதிப்பு உண்டானது.

வான்னா கிரை எனும் பெயரிலான வார்ம் மூலம் பரவிய இந்த வைரஸ் அரசு அமைப்புகள், வர்த்தக நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை முடக்கி போட்ட விதம் இணைய உலகில் மறைந்திருக்கும் ஆபத்துகளை மீண்டும் ஒரு முறை வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளது. நாளிதழ் செய்தி ஒன்றின் தலைப்பு குறிப்பிட்டது போலவே, இமெயிலில் பெட்டியில் கன்னி வெடிகள் மறைந்திருப்பதையே இந்த தாக்குதல் உணர்த்தியுள்ளது.

ரான்சம்வேர் தாக்குதல் புதிதல்ல என்றாலும், இந்த அளவுக்கு உலகம் தழுவிய அளவில் தாக்குதல் இதற்கு முன்னர் நடைபெற்றதில்லை. இது பற்றி மேற்கொண்டு பார்ப்பதற்கு முன், இணைய உலகில் அண்மையில் நிகழந்த இன்னொரு தாக்குதலை நினைவில் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

கூகுள் டாக்ஸ் சேவை தொடர்பாக நடந்த தாக்குதல் இது. பிஷிங் மோசடி வகையை சேர்ந்ததாக அமைந்திருந்தது. இந்த சேவையின் பயனாளிகள் பலருக்கு, புதிய பிரதியை பார்க்குமாறு கோரிக்கை இமெயில் மூலம் வந்து சேர்ந்தது. இதை ஏற்று இணைப்பை கிளிக் செய்தால், கூகுளின் அனுமதி பக்கம் போலவே தோன்றும் போலியான பக்கத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அந்த பக்கத்தில் நுழைந்தவுடன், பயனாளியின் ஜிமெயில் கணக்கை அணுகும் அனுமதி கோரப்பட்டது.

இந்த கட்டத்திலும் ஏமாந்து அனுமதி அளித்தால், இந்த போலியான இணையதளம் பயனாளியின் ஜிமெயில் கணக்கிற்குள் நுழைந்து தகவல் திருட்டில் ஈடுபடும் அபாயம் உண்டு. வேகமாக பரவிய இந்த மோசடி இமெயில் உடனடியாக கண்டறியப்பட்டு பயனாளிகள் எச்சரிக்கப்பட்டனர். ஜிமெயில் பயனாளிகளில் சொற்பமானவர்களையே இந்த மோசடி பாதித்ததாக கூகுள் தெரிவித்தது. விஷயம் அதுவல்ல, ஆவலை தூண்டக்கூடிய ஒரு இமெயில் மூலம் போலி தளங்களுக்கு இணையவாசிகள் அழைத்துச்செல்லப்பட்டு அவர்களிடம் இருந்து முக்கியமான தகவல்கள் திருடப்படும் அபாயம் இருக்கிறது என்பதும், பெரும்பாலனோர் இத்தகைய வலையில் தங்களை அறியாமல் சிக்கி கொள்ளும் நிலை இருக்கிறது என்பதுமே இணையத்தின் திகிலான யதார்த்தமாக இருக்கிறது.

இந்த யதார்த்தத்தின் இன்னொரு இருண்ட அம்சம் தான் ரான்சம்வேர் தாக்குதல்!

ரான்சம்வேர் வைரஸ் என்றால் என்ன?

ரான்சம்வேர் என்பது தீய நோக்கம் கொண்ட மென்பொருள்களாக அறியப்படும் மால்வேர்களில் ஒரு வகை. பொதுவாக மால்வேர்கள் இமெயில் அல்லது தரவிறக்க வசதியின் பின்னே ஒளிந்து கொண்டு பயனாளிகளின் கம்ப்யூட்டருக்குள் ஊடுருவி வில்லங்கத்தை ஏற்படுத்துகின்றன. மால்வேர்கள் பெரும்பாலும் பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்களை குறி வைக்கின்றன.

ரான்சம்வேர் கொஞ்சம் மாறுபட்டது. இந்த வகை மால்வேர் கம்ப்யூட்டருக்குள் நுழைந்ததும், அதில் உள்ள தரவுகளை என்கிரிப்ட் செய்து முடக்கி விடுகிறது. கம்ப்யூட்டரை அணுக முடியாதபடி முடக்கப்படுவதும் உண்டு. இப்படி தரவுகளை பயன்படுத்த முடியாமல் முடக்கிய பிறகு, இதிலிருந்து விடுபட வேண்டும் எனில், குறிப்பிட்ட தொகையை பினையாக அளிக்க வேண்டும் எனும் வாசகம் மட்டுமே கம்ப்யூட்டரில் தோன்றும். அனாமதேய பரிவர்த்தனைக்கான இணைய நாணயமான பிட்காயின் வடிவில் பினைத்தொகை கேட்கப்படும்.

நிஜ உலகில் யாரையாவது கடத்தி வைத்துக்கொண்டு விடுவிக்க பினைத்தொகை கேட்கப்படுவது போல, கம்ப்யூட்டர் உலகில் தரவுகளை பூட்டு போட்டு முடக்கி விட்டு, அதை மீட்க பணம் கேட்டு மிரட்டுவது தான் ரான்சம்வேரின் பின்னே உள்ள திகிலான உத்தி. கம்ப்யூட்டர் முடக்கப்பட்ட பின் அதை விடுவிக்க அநேகமாக வழி இருக்காது என்பதும், பினைத்தொகை கொடுத்தாலும் தரவுகள் விடுதலைக்கு உத்தரவாதம் கிடையாது என்பதும் மோசமான அம்சங்கள்.

தற்போது இணையத்தை உலுக்கியிருக்கும் வான்னகிரை தாக்குதலிலும் இது தான் பெரிய அளவில் நடந்திருக்கிறது. அமெரிக்காவின் என்.எஸ்.ஏ அமைப்பு உருவாக்கி வைத்திருந்த இணைய தகவல்களை திருடுவதற்கான டூல் எப்படியோ இணையத்தில் கசிந்து அதைக்கொண்டு தாக்காளர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக அறிய முடிகிறது. ஒரு கம்ப்யூட்டரில் இருந்து இன்னொரு கம்ப்யூட்டருக்கு தானாக பரவும் வகையில் உருவாக்கப்பட்டதால் இந்த வில்லங்க வைரசும் வைரலாகி விபரீத்ததை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான மென்பொருள் பேட்சை மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

இதுவரை பசையுள்ள தனி மனிதர்களும், வர்த்தக நிறுவனங்களும் இந்த வகை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. ஆனால் முதல் முறையாக இப்படி மெகா அளவில் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இது போன்ற தாக்குதல்கள் இனி அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது என சைபர் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

அது மட்டும் அல்ல, இந்த தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிகளையும் முன் வைக்கின்றனர். மால்வேர்கள் இமெயிலை வாகனமாக கொள்வதால், சந்தேகத்திற்குறிய இமெயில்கள் எனில் அவற்றை கிளிக் செய்யாமல் டெலிட் செய்வது நல்லது என்கின்றனர். அதைவிட முக்கியம், இது போன்ற மெயில்களில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்யாமல் கையை கட்டிக்கொண்டிருப்பது.

இணைப்புகளை கிளிக் செய்வதை விட முழு முகவரியை டைப் செய்து இணையதளத்தை அணுக வேண்டும். இமெயில் உள்ள இணைப்புகள் பற்றி உறுதியாக தெரியவில்லை எனில், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு அத்தகைய இமெயில் அனுப்பட்டதாக் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இவை அநேகமாக பிரபலமான தளங்கள் போல தோன்றும் போலி தளங்களுக்கு அழைத்துச்செல்லும் வகையிலே அமைந்திருக்கும் என்பதால் கவனம் தேவை.

அதோடு, இமெயிலில் உள்ள முகவரியையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும். ஒரு சில எழுத்துக்களை மட்டும் மாற்றி ஏமாற்ற முயற்சிக்கப்படலாம்.

இதே போலவே அதிகார பூர்வமம் அல்லாத தளங்கள் தவிர மற்ற இடங்களில் எந்த கோப்பையும் தரவிறக்கம் செய்யாமல் இருப்பது நல்லது.

இவை மட்டும் போதாது. கம்ப்யூட்டரில் உள்ள இயங்குதளத்தை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும். புதிய அப்டேட்கள் வந்தால் அதை செயல்படுத்த வேண்டும். வைரஸ் தருப்பு மென்பொருள் பாதுகாப்பு அவசியம் என்பதோடு அதுவும் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இவற்றையும் மீறி தாக்குதல் நடக்கும் அபாயம் இருக்கவே செய்கிறது. எனவே கம்ப்யூட்டரில் உள்ள முக்கிய தரவுகளை எப்போதுமே பாதுகாப்பாக பேக்கப் செய்து கொள்ள வேண்டும். இப்படி பேக்கப் இருந்தால் கம்ப்யூட்டர் முடக்கப்பட்டால் கூட, பதற்றம் அடையாமல் பணிகளை தொடர்ந்து, தாக்குதலில் இருந்து மீளும் வழியை யோசிக்கலாம்.

நிற்க, இந்த வகை தாக்குதலின் விபரீதத்தை உணர்ந்து யூரோபோல் மற்றும் நெதர்லாந்து காவல்துறை, வைரஸ் தடுப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கை மற்றும் இண்டெல் செக்யூரிட்டி ஆகியவற்றுடன் இணைந்து நோமோர்ரேன்சம்.ஆர்க் எனும் விழிப்புணர்வு தளத்தை அமைதுள்ளன. இந்த தளத்தில் ரான்சம்வேருக்கு எதிரான தற்காப்பு வழிகள் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே நடைபெற்ற தாக்குதல்களில் இருந்து விடுபடுவதற்கான வழிகளும் இடம்பெற்றுள்ளன. தாக்காளர்களின் மிரட்டலுக்கு பணியாமல் இருங்கள், இணைய பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பெறுங்கள் என வழிகாட்டுகிறது இந்த தளம்: https://www.nomoreransom.org/index.html

ரான்சம்வேர் தாக்குதல்: தப்பிக்க என்ன வழி?

rஇணையத்தை உலுக்கி இருக்கும் வான்னகிரை ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் இணையவாசிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நோமோர்ரேன்சம்.ஆர்க் இணையதளத்தை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மால்வேர் எனும் தீய நோக்கிலான மென்பொருள்கள் வடிவில் கம்ப்யூட்டருக்குள் நுழைந்து, அதனை தற்காலிகமாக முடக்கி அல்லது, அதில் உள்ள கோப்புகளை அணுக முடியாமல் செய்து விட்டு, இந்த தாக்குதலில் இருந்து விடுபட பினைத்தொகை கேட்டு மிரட்டும் உத்தியுடன் நடைபெறும் தாக்குதல் ரான்சம்வேர் என குறிப்பிடப்படுகிறது.

இந்த வகையான தாக்குதலுக்கு இலக்காகும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கான புகலிடமாக உருவாக்கப்பட்டது நோமோர்ரேன்சம்.ஆர்க் இணையதளம். யூரோப்போல் ,நெதர்லாந்து காவல்துறை மற்றும் வைரஸ் தடுப்பு நிறுவனங்களான காஸ்பர்ஸ்கை, இண்டெல் செக்யூரிட்டி ஆகியவை இணைந்து இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளன.

ரான்சம்வேர் தாக்கினால், பினைத்தொகை கொடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தும் இந்த தளம், ஏற்கனவே நன்கறியப்பட்ட ரான்சம்வேர் தாக்குதல்களில் இருந்து விடுபடுவதற்கான சாவியை வழங்குகிறது. புதிய தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளையும் தெரிவித்துள்ளது.

இந்த வகை தாக்குதல்களுக்கு தற்காப்பே சிறந்தது என்றாலும், தற்போதைய வான்ன கிரை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த தளம் சில முக்கிய குறிப்புகளை வெளியிட்டுள்ளது.

அவற்றில் முதன்மையானது, mb v1 செயலிழக்கச்செய்வதன் மூலம் இந்த வைரஸ் பரவுவதை தடுக்கலாம் என்பதாகும். மேலும் மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள பாதுகாப்பு பேட்சை உடனே பயன்படுத்த வேண்டும்.

மேலும் சில தற்காப்பு வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது: https://www.nomoreransom.org/prevention-advice.html

 

இது தொடர்பான முந்தைய கட்டுரை: http://bit.ly/2pOjlVU

உலக மோதல்களை அறிய ஒரு இணையதளம்

3FB5A48B00000578-4453666-image-a-9_1493410960407உலகில் ஏதாவது ஒரு பகுதியில் இப்போது உள் நாட்டு போரோ அல்லது ஆயுத மோதலோ நடைபெற்றுக்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தகைய ஆயுத மோதல்கள் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள விரும்பினால் இரின் (IRIN ) அமைப்பு உருவாக்கியுள்ள இணைய வரைபடம் பேரூதவியாக இருக்கும். உலகின் மூளை முடுக்கிகளில் நடைபெற்று வரும் மோதல்களையும், அவற்றுக்கான காரணங்களையும் இந்த வரைபடம் விளக்குகிறது.

உலகில் நடைபெறும் போர்கள் என்றதும் ஆப்கானிஸ்தானும், சிரியாவும் உடனடியாக நினைவுக்கு வரும். ஊடக செய்திகளால் இந்த போர்கள் தொடர்பான செய்தியும், அவற்றின் பாதிப்புகளும் உலகின் பார்வைக்கு தெரிய வருகிறது.  ஆனால் மீடியாவின் கவனத்தில் இருந்து விலகிய நிலையில் உலகின் பல பகுதிகளில் உள்நாட்டு போர்களும், ஆயுத மோதல்களும் நடைபெற்று கொண்டிருகின்றன என்பது வேதனையான நிஜம்.

இவற்றில் பெரும்பாலான மோதல்கள் பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றன என்பது இந்த வேதனையை இன்னும் தீவிரமாக்க கூடியது. இப்படி உலகம் மறந்த மோதல்களையும் இந்த வரைபடம் அடையாளம் காட்டுகிறது.

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான மனிதநேய நோக்கிலான உதவிகளை வழங்கி வரும் சேவை அமைப்பான இரின், உலகம் மறந்து விட்ட மோதல்கள் குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. ஆழமான தகவல்களை கொண்டுள்ள இந்த கட்டுரை தொடர் வரிசையில் தற்போது உலகை உலுக்கும் மோதல்களை சுட்டிக்காட்டும் இணைய வரைபடத்தை இரின் அமைப்பு உருவாக்கி வெளியிட்டுள்ளது.

இதில் உலக வரைபடத்தில் உள்ள நாடுகளில் மோதல் அல்லது போரால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் சிவப்பு புள்ளியால் கவனத்தை ஈர்க்கின்றனர். மோதல் நடைபெறும் இடத்தை இந்த சிவப்பு புள்ளி குறிக்கிறது. மோதல் எவ்வளவு காலமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதை புள்ளியின் அளவு குறிக்கிறது. ஒரு சில இடங்களில் சிவப்பு புள்ளி சற்று பெரிதாக இருப்பதை பார்க்கலாம். அந்த இடங்களில் எல்லாம் ஆண்டு கணக்கில் மோதல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு புள்ளியை கிளிக் செய்வதுவுடன் மோதல் தொடர்பான மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ளலாம். மோதலுக்கான காரணம், எவ்வளவு காலமாக நடைபெறுகிறது மற்றும் மோதலின் தற்போதைய நிலை ஆகியவை தனியே பெட்டிச்செய்தியாக தோன்றுகின்றன.

தெற்கு சுடானின் எல்லைப்பகுதியில் புளு நைல் எனும் மோதல் கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போர் மூன்றாவது சூடான் உள்நாட்டுப்போர் என்றும் அழைக்கப்படுகிறது. தெற்கு சூடான் தனி நாடாக உருவாக வழிவகுத்த இந்த போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட அமைதி பேச்சு வார்த்தை முயற்சிகள் தோல்வியில் முடிந்திருக்கின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மோதலால் மக்கள் கடும் நெருக்கடிக்கு இலக்காகி வருவதாகவும், பசி பட்டிணி என அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைபடத்தில் பார்த்தால் ஆப்பிரிக்காவில் மட்டும் ஒரே சிவப்பு வட்டங்களாக காட்சி அளிக்கின்றது. அந்த அளவுக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் மோதல்கள் நிகழ்கின்றன. மேற்காசியா, ஆசியா மற்றும் பசுபிக் பிராந்திய பகுதிகளிலும் அதிக மோதல்களை காண முடிகிறது.

இந்த வரைபடத்தில் இந்தியாவில் மாவோயிஸ்ட்கள் நடத்தி வரும் மோதலும் இந்த வரைபடத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காஷ்மீர் பிரச்சனையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வட கொரியா மற்றும் தென் கொரியா இடையிலான மோதல், யுக்ரைன் பிரச்சனை என இந்த மோதல்கள் விரிகின்றன. இந்த வரைபடம் மூலம் உலக மோதல்களை ஒரு பறவை பார்வையாக அறிந்து கொள்ளலாம் என்பதோடு, மேலும் ஆழமான புரிதல் தேவை எனில், மறக்கப்பட்ட மோதல்கள் பிரிவில் உள்ள கட்டுரைகளை படித்துப்பார்க்கலாம். இந்த கட்டுரைகள் உலகம் மறந்த மோதல்கள் தொடர்பான விரிவான தகவல்களை அளிக்கிறது. பல்வேறு சிறப்பு கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. பிலிப்பைன்ஸ், தெற்கு தாய்லாந்து , மியான்மர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் தனிக்கட்டுரைகள் விவரிக்கின்றன.

உலக மோதல்கள் பற்றி அறிய:  http://www.irinnews.org/in-depth/forgotten-conflicts

இணைய உலகில் அன்மையில் இன்னொரு வரைபடமும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வரைபடம் இணையத்திற்காக உருவாக்கப்பட்டது. உலகின் முதல் இணைய அட்லஸ் என இந்த வரைபடம் வர்ணிக்கப்படுகிறது. இணையத்தின் பெளதீக உள்கட்டமைப்பை விவரிக்கும் வகையில் இந்த வரைபடம் அமைந்துள்ளது.

இணையம் என்பது வலைப்பின்னல்களின், வலைப்பின்னல் என்பது நமக்குத்தெரியும். அது உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களாகவும், சர்வர்களாகவும் பரவியிருக்கிறது. டேட்டா செண்டர்களால் இணைக்கப்பட்டு, கடலுக்கடியிலான கேபிள்களும் அதன் இணைப்புகளாக அமைந்துள்ளன. ஆனால் இந்த பெளதீக உள்கட்டமைப்பின் விவரம் மிகவும் சிக்கலானது.

இந்த விவரங்களை சித்தரிக்கும் வரைபடத்தை அமெரிக்காவில் விஸ்கான்சின் – மேடிசன் பல்கலையில் உள்ள ஆய்வாளர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கியுள்ளனர். இந்தியாவை சேர்ந்த ஆயவாளர் ராமகிருஷ்ணன் துரைராஜன் என்பவரும் இந்த வரைபட உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

இந்த இணைய வரைபடம் இணைய உள்கட்டமைப்பு தொடர்பான புரிதலை அளிப்பதோடு, பருவநிலை பாதிப்பு மற்றும் தீவிரவாத தாக்குதல் போன்றவற்றில் இருந்து இணையத்தை பாதுக்காக்கவும் உதவும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வரைபடங்களை வைத்துக்கொண்டு அவற்றில் உள்ள தகவல்களை இணையம் மூலம் ஒருங்கிணைத்து இந்த இணைய அட்லஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இணையத்தின் அமைப்பை காட்சிரீதியாக இந்த அடல்ஸ் விளக்குகிறது.

இணைய அடல்ஸ் முகவரி: http://internetatlas.org/

 

இந்த தளம் இணைய களஞ்சியம்

tஎந்த துறையிலேமே தொழில்நுட்ப பதங்கள் புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தலாம். இணைய உலகில் இத்தகைய பதங்கள் இன்னும் அதிகம். அதோடு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய பதங்கள் வேறு அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. இந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து இணையவாசிகளுக்கு வழிகாட்டும் வகையில் வெப்போபீடியா தளம் செயல்பட்டு வருகிறது.

இந்த தளத்தை நவீன தொழில்நுட்ப பதங்களுக்கான இணைய அகராதி என்று சொல்லலாம். தொழில்நுட்ப தேடியந்திரம் என்றும் சொல்லலாம். இணையம், கம்ப்யூட்டர் சார்ந்த தொழில்நுட்ப பதங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை இந்த தளத்தில் சமர்பித்து பொருள் அறியலாம்.

இதன் முகப்பு பக்கத்தில் மேலே உள்ள தேடல் கட்டத்தில் தொழில்நுட்ப பதத்தை டைப் செய்தால் போதும் அதற்கான விரிவான விளக்கம் தோன்றும். இவைத்தவிர முகப்பு பக்கத்திலேயே தினம் ஒரு தொழில்நுட்ப பதத்திற்கான அர்த்தம் இடம்பெறுகிறது. சமீபத்திய தொழில்நுட்ப பதங்களின் பட்டியலையும் பார்க்கலாம்.

ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் இணைவாசிகள் ஆகியோருக்கு பயன் தரும் வகையில் தொழில்நுட்ப பதங்களுக்கான விளக்கம் எளிமையான முறையில் தரப்படுவது இந்த தளத்தின் சிறப்பம்சம். தினமும் புதுப்புது வார்த்தைகளுடன் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்பட்டு வருவது இன்னும் சிறப்பு.

எனவே இப்போது தான் புதிதாக அறிமுகமாகியிருக்கும் தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தைகள் என்றாலும் அதற்கான விளக்கத்தை இதில் காணலாம். இதுத்தவிர தொழில்நுட்பம் சார்ந்த ஆழமான விளக்க மற்றும் வழிகாட்டுதல் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

இணையத்தில் ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் புக்மார்க் செய்து கொள்ள வேண்டிய தளம் இது: http://www.webopedia.com/

இதே போலவே வாட் ஈஸ் (http://whatis.techtarget.com/ ) இணையதளம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தைகள் மற்றும் சொற்றடர்களின் விளக்கம் அளிக்கும் தளமாக இருக்கிறது.

 

டெக்டெர்ம்ஸ் (techterms.com ) தளமும் இதே போலவே தொழில்நுட்ப பதங்களுக்கு பொருள் அறிய உதவுகிறது. இதையும் தொழில்நுட்ப தேடியந்திரமாக பயன்படுத்தலாம்.

வைஸ்கீக் (wisegeek.com ) தளத்தையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.தொழில்நுட்பம் தொடர்பான கட்டுரைகளும் தனித்தனி தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன. இந்த தளம் புதுப்பிக்கப்படாமல் இருந்தாலும் பழைய கட்டுரைகள் பயனுள்ளவை.

 

 

இணைய அகராதி

இணையம் தனக்கான தனி மொழியையும் உருவாக்கியிருக்கிறது. இணையத்தில் பயன்படுத்தப்படும் புதிய சொற்களும், சுருக்கங்களும் அநேகம் இருக்கின்றன. இணையத்திலேயே புழங்குபவர்களுக்கு இந்த வார்த்தைகளும் இணைய மொழிகளும் அத்துமடி என்றாலும் சராசரி இணையவாசிகளுக்கு இவை புரியாத புதிராக இருக்கலாம். அதிலும் குறிப்பாக இணைய அரட்டை மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்தப்படும் குறிப்புகள் குழப்பத்தை அளிக்கலாம். இத்தகைய இணைய மொழிகளுக்கான விளக்கத்தை அளிக்கிறது நெட்லிங்கோ இணையதளம்.

இணையத்தின் குறுக்கெழுத்தாக அமையும் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை இதில் தேடிக்கொள்ளலாம். இணைய குறிப்புகள் பலவும் இடம்பெற்றுள்ளன. தினம் ஒரு வார்த்தை விளக்கமும் அளிக்கப்படுகிறது. இந்த விளக்கத்தை இமெயில் மூலமும் பெறலாம்.

இணைய முகவரி: http://www.netlingo.com/

 

வாட்ஸ் அப் சேவையை இப்படியும் பயன்படுத்தலாம்!

 

WhatsApp-568x500முன்னணி மேசேஜிங் சேவையான வாட்ஸ் அப்பின் பலவித பயன்களை நீங்கள் நன்றாக அறிந்திருக்கலாம். தகவல் தொடர்புக்கு, வீடியோக்களையும், செய்திகளையும் பகிர்ந்து கொள்ள, உங்களுக்கான குழுவை உருவாக்கி கருத்துக்களை பகிர்ந்து கொள்ள என வாட்ஸ் அப்பை பலவிதங்களில் பயன்படுத்தலாம். அழைப்பிதழ்களை அனுப்ப, பள்ளி மாணவர்கள் வீட்டுப்பாட குறிப்புகளை பகிர்ந்து கொள்ள என எல்லாவற்றுக்கும் வாட்ஸ் அப் கைகொடுக்கிறது.

நீங்கள் வாட்ஸ் அப் சேவையை அதிகம் பயன்படுத்துபவர் என்றால், குறிப்பெடுக்கும் சேவையாகவும் அதை பயன்படுத்திக்கொள்ளலாம் தெரியுமா? இதற்கான எளிய வழியை தொழில்நுட்ப செய்தி தளமான மேக் யூஸ் ஆப் அழகாக விவரித்துள்ளது.

உங்களுக்கான குழுவை உருவாக்கி கொண்டு அதில் நீங்கள் மட்டுமே உறுப்பினராக இருப்பது தான் அந்த வழி. இது எப்படி சாத்தியம் என கேட்கலாம். இதற்கான வழி இதோ: முதலில் வாட்ஸ் அப் பக்கத்திற்கு சென்று அதில் உள்ள சாட் பகுதியை கிளிக் செய்யவும். பின்னர் அதில் உள்ள புதிய குழுவை உருவாக்கும் பகுதியை கிளிக் செய்யவும். குழுவை உருவாக்க முதலில் நீங்கள் அதில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். எனவே உங்கள் தொடர்பு பட்டியலில் இருக்கும் ஒருவரை உறுப்பினராக சேர்த்துக்கொள்ளவும்.

அடுத்த கட்டமாக இந்த குழுவுக்கு பெயர் சூட்ட வேண்டும். உங்கள் குறிப்புகளை மையமாக கொண்டு ஒரு பெயரை சூட்டவும். ஏனெனில் இந்த குழுவை குறிப்புகளுக்கு மட்டும் தான் பயன்படுத்த போகிறீர்கள். இதன் பிறகு குழுவின் மேல் பகுதிக்கு சென்று கிளிக் செய்யவும். குழு உறுப்பினர் பட்டியல், புதிய உறுப்பினரை சேர்க்கும் வசதி ஆகியவற்றுக்கான பட்டியல் தோன்றும்.

நீங்கள் புதிதாக யாரையும் உறுப்பினராக சேர்க்க வேண்டாம். மாறாக ஏற்கனவே சேர்த்துள்ள அந்த ஒற்றை உறுப்பினரையும் நீக்கி விட வேண்டும். உறுப்பினர் பெயரின் மீது கிளிக் செய்தால் அவரை நீக்குவதற்கான வசதி தோன்றும்.

இருந்த ஒரே ஒரு உறுப்பினரையும் நீக்கிய பின், இந்த குழுவில் நீங்கள் மட்டும் தான் இருப்பீர்கள். இனி ஏதேனும் குறிப்புகளை சேர்க்க விரும்பினால், இந்த குழுவின் குறிப்பு பகுதிக்க்சென்று மனதில் உள்ள கருத்துகக்ளை குறித்து வைக்கலாம். இவை உங்களுக்கே வாட்ஸ் அப் செய்தியாக வரும்.

இவ்விதமாக தகவல்கள், நினைவூட்டல்கள், சின்ன சின்ன ஐடியாக்களை உங்களுக்கு நீங்களே அனுப்பிக்கொள்ளலாம். ஆடியோ மற்றும் வீடியோ குறிப்புகளையும் அனுப்பி  வைக்கலாம். மற்ற குழுக்கள் போல இந்த குழு உங்கள் நேரத்தை வீணாக்காது. மாறாக பயனுள்ள தகவல்களை எளிதாக அணுக வழி செய்யும். உங்கள் தேவைக்கேற்ப திட்டமிட இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த குழுவில் யாரையும் நீங்கள் உறுப்பினராக அழைக்க வேண்டாம். நண்பர்களிடம் வேண்டுமானால் அவர்களுக்கான குழுவை உருவாக்கி கொள்ளுமாறு ஆலோசனை கூறலாம்.

வாட்ஸ் அப் சேவையின் டெஸ்க்டாப் வடிவத்தை பயன்படுத்தும் வசதி மூலம், இந்த குறிப்புகளை கம்ப்யூட்டருக்கு அல்லது லேப்டாப்பிற்கு மாற்றிக்கொள்ளலாம். அங்கிருந்து போனுக்கு தகவல்களை மாற்றிக்கொள்ளலாம்.

மேலும் வாட்ஸ் அப் செய்திகள் அனைத்தும் என்கிரிப்ஷன் பாதுகாப்புக்கு உட்பட்டவை என்பதால் உங்கள் குறிப்புகளுக்கும் அந்த பாதுகாப்பு கிடைக்கும்.

ஆனால் இந்த குறிப்பேடு வசதியில் வகைப்படுத்துவது, பழைய கோப்பை எளிதாக வரிசைப்படுத்துவது போன்றவை சாத்தியம் இல்லை. தகவல்களை சேமிக்க, கோப்புகளை பரிமாற, சேமிக்க பயன்படுத்திக்கொள்ளலாம். வாட்ஸ் அப் சேவைக்கு பழகியவர்களுக்கு ஸ்மார்ட்போனிலே உள்ள பலவித குறிப்பெடுக்கும் செயலிகளை விட இந்த வசதி எளிதாக இருக்கலாம்.

வாட்ஸ் அப்பை இப்படியும் பயன்படுத்தலாமா எனும் வியப்பை ஏற்பட்டால் இந்த வசதிய பயன்படுத்திப்பாருங்கள். உங்களுக்கு சரியாக இருந்தால் செயல்திறன் மேம்பாட்டிற்கு கைகொடுக்கும்.

இதே போலவே நீங்கள் நன்கறிந்த ஜிமெயில் சேவையையும் குறிப்பெடுக்கும் வசதியாக பயன்படுத்திக்கொள்ளலாம் தெரியுமா? ஜிமெயில் உள்ள டிராப்ட் எனப்படும் வரைவு வசதி மூலம் இது சாத்தியம்.

ஜிமெயிலை குறிப்பெடுக்க பயன்படுத்த வேண்டும் எனில், வழக்கம் போல கம்போஸ் வசதியை கிளிக் செய்து புதிய மெயிலை அனுப்பும் வசதியை பெற வேண்டும். எனினும், மெயில் பெட்டியில் மெயில் வாசகத்தை டைப் செய்வதற்கு பதில், மனதில் உள்ள குறிப்புகளை டைப் செய்யத்துவங்க வேண்டும். எல்லாவற்றையும் அடித்து முடித்தவுடன், இந்த செய்தியை யாருக்கும் அனுப்பாமல் விட்டுவிட வேண்டும். தானாக சேமிக்கும் வசதி காரணமாக இந்த மெயில் வரைவு பகுதிக்கு சென்று விடும். நாமாக சேமிக்கும் வசதியை கிளிக் செய்தும் சேமிக்கலாம். பின்னர் வரைவு பகுதிக்குச்சென்று அங்கிருந்து இதை அணுகலாம்.

இந்த குறிப்புகளை அப்படியே கூகுள் டிரைவிற்கும் மாற்றிக்கொள்ளலாம். வழக்கமான மின்னஞ்சல் கட்டம் சிறியதாக இருக்கும். எனவே மின்னஞ்சல் மேல் பகுதியில் உள்ள பகுதியில், மினிமைஸ் மற்றும் சேமிக்கும் வசதிக்கு இடையே உள்ள குறியீட்டில் கிளிக் செய்தால் இன்னும் சற்று பெரிய முகவரி பெட்டி உண்டாகும்.

மின்னஞ்சல் உருவாக்க பகுதியில் மவுசை வைத்து, ஷிப்ட் கீயை டைப் செய்தால் இதை தனி பெட்டியில் பெறலாம். கண்ட்ரோல் விசை மூலம் இவ்வாறு செய்தால் புதிய விண்டோவில் இந்த வசதியை பெறலாம்.

inbox.google.comஎனும் பகுதியில் இருந்தும் வரைவு வசதியை அணுகலாம். இதன் அமைப்பு குறிப்பெடுக்க இன்னும் ஏற்றதாக இருக்கும்.