Category Archives: இணைய செய்திகள்

வெற்றி நூலகம்: லிங்க்டுஇன் தொடங்கிய தத்துவ மாணவர்

linkedin_3150669fஇணையவாசிகள் முழுக்க முழுக்க தொழில்முறையாகத் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான இடமாக லிங்க்டுஇன் இருக்கிறது. வேலைவாய்ப்புக்குக் காத்திருக்கும் இளம் பட்டதாரிகளும், தங்கள் துறையில் முன்னேறத் துடிக்கும் பணியாளர்களும், வல்லுநர்களும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வலைப்பின்னலாகவும் விளங்குகிறது. நிறுவன விளம்பரங்களைப் பார்த்து விண்ணப்பிக்கும் பழைய முறைக்குப் பதிலாக, பயனாளிகள் தங்களுக்கான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் திறமைக்கேற்ற வாய்ப்புகளை அடையாளம் காண உதவுகிறது.

தொடர்புகளின் அருமையை உணர்ந்தவர்!

பயிற்சி மாணவர்களுக்கு அவர்களுடைய துறையில் வழிகாட்டும் வல்லுநர்களின் அறிமுகம் தேவையா? தற்போதைய வேலையிலிருந்து அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டுமா? சொந்தமாக நிறுவனம் தொடங்க ஆலோசனை தேவையா? எல்லாவற்றுக்கும் லிங்க்டுஇன் வலைப்பின்னல் மூலம் வழிகாணலாம். அதே நேரத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகளும், நிறுவன உயர் அதிகாரிகளும் திறமைமிக்க இளம் வல்லுநர்களை அடையாளம் கண்டுகொள்ளவும் லிங்க்டுஇன் வழிசெய்கிறது.

சமூக வலைப்பின்னல் யுகத்தின் தொடக்கப் புள்ளிகளில் ஒன்றாக லிங்க்டுஇன் விளங்குகிறது. ஃபேஸ்புக் அறிமுகமாவதற்கு முன்பே லிங்க்டுஇன் உதயமாகிவிட்டது. அதன் நிறுவனரான, ரீட் ஹாஃப்மன் (Reid Hoffman) தொடர்புகளின் அருமையை உணர்ந்திருந்ததே லிங்க்டுஇன் தோற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்தது. ஹாஃப்மன், கல்லூரிகாலத்தில் தத்துவ அறிஞராக வேண்டும் என விரும்பினார். உலகில் மாற்றத்தை ஏற்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் எனத் துடித்துக்கொண்டிருந்தவர், பின்னர்ச் சாஃப்ட்வேர் துறைக்கு வந்துவிட்டார்.

எப்படி, எதற்காகப் பகிரப்படுகின்றன?

ரீட் ஹாப்மன், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பாலே ஆல்டோவில் பிறந்து பெர்க்ளியில் வளர்ந்தவர். அவருடைய பெற்றோர் இருவருமே முற்போக்கு எண்ணம் கொண்ட வழக்கறிஞர்கள். குழந்தையாக இருக்கும்போதே பெற்றோர் அவரை ஆர்ப்பாட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் அழைத்துச் சென்றனர். பத்து வயதில் அவருக்குக் கணினி விளையாட்டு அறிமுகமானது.

தத்துவம், உளவியல், கணினி அறிவியல், மொழியியல் ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்த சிம்பாலிக் சிஸ்டம்ஸ் படிப்பை ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். அந்தப் பாடத்திட்டம் தத்துவம் மற்றும் உலக நடப்புகள் குறித்து அவரை யோசிக்கவைத்தது.

ஸ்டான்ஃபோர்டில் படித்தபோது தீவிரமாக அரசியல் சார்ந்த விவாதங்களில் ஈடுபட்டார். இங்குதான் அவருக்கு எதிர்காலத்தில் ‘பே பால்’ (Paypal) நிறுவனத்தைத் தொடங்கவிருந்த பீட்டர் தியலின் அறிமுகமும் கிடைத்தது. பொதுவாகவே எண்ணங்களை வெளிப்படுத்துவதிலும், கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. கருத்துகள் எப்படிப் பகிரப்படுகின்றன என்பதில் மட்டுமல்ல, எந்தக் கருத்துகள், எதற்காகப் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன என்பதிலும் கவனம் செலுத்தினார்.

1990-ல் பட்டப்படிப்பை முடித்தவுடன், புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஊக்கத்தொகை யுடன் மேற்படிப்பைத் தொடர்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. பேராசிரியராக, எழுத்தாளராக, தத்துவவாதியாக உருவாகும் எண்ணம் அப்போது ஏற்பட்டது. மேலும் உலகம் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினார். இதற்குக் கல்வித் துறையைவிட மென்பொருள் துறையே ஏற்றது எனத் தீர்மானித்தவர், ஆக்ஸ்ஃபோர்டில் படிப்பை முடித்தவுடன் ஸ்டான்ஃபோர்ட் திரும்பினார்.

பணமும் படிப்பினையும்

நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவது பற்றி நிறைய புத்தகங்களைப் படித்தார். மற்ற நேரங்களில் முக்கிய நிதி முதலீட்டாளர்களை சந்தித்தபோதெல்லாம், “முதலில் ஏதாவது சேவையை உருவாக்கிவிட்டு வா…” என்று அறிவுரை கூறி அனுப்பினர். இதனிடையே ஆப்பிளின் இணையப் பிரிவான இ-வேர்ல்டி வேலை கிடைத்தது. ஆப்பிளில் பணியாற்றியபோதே புதிய நிறுவனத்தைத் தொடங்கத் தனக்கு என்னவெல்லாம் தெரிய வேண்டும் எனப் பட்டியலிட்டு அதை நோக்கி உழைத்தார்.

1997-ல் தன்னுடைய முதல் ஸ்டார்ட் அப் நிறுவனமான சோஷியல்நெட்-ஐ தொடங்கினார். டேட்டிங் தளமாக இயங்கினாலும் எதிர்பார்த்த விதத்தில் அந்நிறுவனம் வளரவில்லை. அதில் கிடைத்த பணத்தையும் படிப்பினையையும் வைத்து அடுத்த ஸ்டார்ட் அப்புக்குத் தயாரானார். அப்போது இணையப் பணப் பரிவர்த்தனை நிறுவனமான பே பாலை அவருடைய நண்பர் பீட்டர் தியல் தொடங்கியிருந்தார். அதில் சில காலம் பணியாற்றிப் பணி அனுபவத்தைச் சேகரித்துக்கொண்டார்.

தொடர்பின் முக்கியத்துவம்

பே பாலில் இணையம் மூலமான பணப் பரிவர்த்தனை சேவை காலத்தால் முந்தையதாக இருந்ததோடு, கிரெடிட் கார்டு நிறுவனங்கள், வங்கி அமைப்புகளுடன் போராட வேண்டியிருந்தது. இத்தகைய சவால்களைச் சமாளிக்கும் பொறுப்பை ஹாப்மன் ஏற்றுக்கொண்டார். இந்த அனுபவம் அவருக்குத் தொடர்புகளின் முக்கியத்துவத்தை அழுத்தமாக உணர்த்தியது. 2002-ல் பே பால் நிறுவனத்தைப் பிரபல ஏல நிறுவனமான இபே விலைக்கு வாங்கியது.

அதன் மூலம் கையில் கணிசமான பணம் கிடைத்தது. அடுத்து, ஸ்டான் ஃபோர்ட் நண்பர்கள் உள்ளிட்ட நான்கு இணை நிறுவனங்களுடன் சேர்ந்து தொழில்முறையில் செயல்படக் கூடிய சமூக வலைப்பின்னல் சேவையான லிங்க்டுஇன் தளத்தைத் தொடங்கினார்.

ஆரம்பத்தில் அதன் வளர்ச்சி எதிர்பார்த்த வேகத்தில் அமைய வில்லை. பலருக்கும் லிங்க்டுஇன் சேவையின் பயன்பாடு சரியாகப் புரியவில்லை. பயோடேட்டா போன்ற விவரங்களைப் பதிவேற்றுவது தவிர, அதில் என்ன செய்ய முடியும் புரியாமல் தவித்தனர்.

இந்தக் கட்டத்தில்தான் ஹாப்மன், பயனாளிகள் தங்கள் இமெயில் தொடர்புப் பட்டியலை அப்படியே பதிவேற்ற வழிசெய்தார். இதன் வழியாகப் புதிய தொடர்புகள் கண்டறியப்பட வழி பிறந்தது. முன்பின் தெரியாதவர்களிடமிருந்து இ-மெயில்கள் வருவது எரிச்சலை ஏற்படுத்தினாலும், புதிய தொடர்புகளுக்கு இது வழி வகுத்தது.

தேவதை முதலீட்டாளர்

அடுத்ததாக, நிறுவனங்கள் வேலைவாய்ப்புத் தகவல்களைப் பறித்துக்கொள்ளும் வசதிகளையும் இத்தளத்தில் ஏற்படுத்தினார் ஹாஃப்மன். அதோடு லிங்க்டுஇன் தகவல்களை மற்றவர்கள் பொதுவில் பார்க்கவும் வழிசெய்தார். இதனால் கூகுளில் ஒருவரின் பெயர் தேடப்படும்போது, அவரது லிங்கடுஇன் பக்க விவரமும் தேடல் முடிவுகளில் தோன்றுவது சாத்தியமானது.

இதனை அடுத்து, அமெரிக்கா மட்டுமல்லாமல் 200-க்கும் அதிகமான நாடுகளில் வேலைவாய்ப்பு நாடுபவர்கள் மற்றும் தொழில்முறை தொடர்புகளை நாடுபவர்கள் விரும்பிப் பயன்படுத்தும் சேவையாக உருவெடுத்தது. 2016 மத்தியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் லிங்க்டுஇன் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது தொழில்முறை வலைப்பின்னல் சேவையாக அதன் முக்கியத்துவத்தை உணர்த்தியது.

லிங்க்டுஇன் நிறுவனராக அதன் வளர்ச்சிக்காகத் தீவிரமாகச் செயல் பட்டுக்கொண்டிருந்த அதே நேரத்தில் ஹாஃப்மன், தேவதை முதலீட்டாளராகப் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும் முதலீடு செய்துவருகிறார். சிலிக்கான் பள்ளத்தாக்கில் இளம் தொழில்முனைவோருக்கான வழிகாட்டியாகவும் விளங்குகிறார். அந்த வகையில் சிலிக்கான் பள்ளத்தாக்கின் வலைப்பின்னல் மனிதராகப் புகழப்படுகிறார்.

சைபர் சிம்மன் எழுதிய ‘நம் காலத்து நாயகர்கள்’ புத்தகத்தில் இடம்பெற்ற ‘ரீட் ஹாப்மன்’ கட்டுரையின் சுருக்கம். (புதிய தலைமுறை பதிப்பகம்)


தமிழ் இந்துவின் அறிமுகத்திற்கு நன்றி!

ஒரு இளம் ஹேக்கரின் கதை!

ld7n_XX4குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர் எனும் திருவிளையாடல் திரைப்பட வசனம் போல, இணைய உலகில் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்கள் மட்டும் அல்ல, பணம் சம்பாதிக்கும் கில்லாடிகள் இருக்கின்றனர் தெரியுமா?. நல்லெண்ண ஹேக்கர்கள் தான் இந்த கில்லாடிகள். இணைய நிறுவனங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களில் மறைந்துள்ள குற்றம் குறைகளை கண்டுபிடித்து சொல்வது தான் இவர்களுடைய வேலை. அதாவது நிறுவன அமைப்புகளில் உள்ள புரோகிராமிங் ஓட்டைகளை (பக்ஸ்) கண்டுபிடித்து சொல்வது. இதற்காக நிறுவனங்கள் இவர்களுக்கு ரொக்கமாக பரிசளித்து ஊக்குவிக்கின்றன. பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இப்படி புரோகிராமிங் ஓட்டைகளை கண்டறியப்படுவதை ஊக்குவிப்பதற்காக என்றே பரிசு திட்டங்கள் எல்லாம் வைத்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பக் ஹண்டிங் என இவை குறிப்பிடப்படுகின்றன.
மென்பொருள் அமைப்பில் உள்ள ஓட்டைகளை தேடி கண்டுபிடிக்க வைத்தல் என இதை புரிந்து கொள்ளலாம். இதனால் நிறுவனங்களுக்கு என்ன பயன்? என கேட்கலாம். பொதுநலம் கலந்த சுயநலன் என வைத்துக்கொள்ளுங்களேன்.
தாக்காளர்கள் என சொல்லப்படும் ஹேக்கர்களின் கைவரிசைத்திறன் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இணையதளம் உள்பட பலவிதமான இணைய அமைப்புகளுக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து விடும் ஆற்றல் கொண்டவர்களே இப்படி ஹேக்கர்கள் என குறிப்பிடப்படுகின்றனர்.

இவர்களில் இருபிரிவினர் உண்டு. தங்கள் திறனை தீய நோக்கத்துடன் பயன்படுத்துபவர்கள் பிளேக்ஹேட் ஹேக்கர்கள் என சொல்லப்படுகின்றனர். இன்னொரு பிரிவினர் தங்கள் திறனை நல்ல நோக்கத்துடன் பயன்படுத்துபவர்கள். ஒயிட் ஹேட் ஹேக்கர்கள் என இவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். நல்லெண்ண ஹேக்கர்கள் என வைத்துக்கொள்வோம்.
நிறுவன அமைப்புகளில் உள்ள ஒட்டைகளை கண்டறிந்து, அவற்றில் ஊடுருவ முடியும் என உணர்த்துவது தான் இவர்களின் நோக்கம். இப்படி செய்வதன் மூலம், தீய நோக்கிலான நபர்கள் இந்த ஓட்டையை பயன்படுத்துவதற்கு முன்னரே இது பற்றி சம்பந்தப்பட்ட நிறுவனங்களை எச்சரிக்கின்றனர். எனவே தான், நிறுவனங்கள் இவர்களுக்கு பரிசளித்து ஊக்குவிக்கின்றன. பாதுகாப்பை முக்கியமாக கருதும் மென்பொருள் நிறுவனங்கள், இப்படி குறைகளை கண்டறிந்து சொல்வதை ஊக்குவிப்பதற்காக என்றே தனி பரிசுத்திட்டங்களை வைத்திருக்கின்றன. பல நிறுவனங்களில் உள்ளுக்குள்ளேயே, மென்பொருள் ஓட்டைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை அளிக்கும் பாதுகாப்பு குழுவினர் உண்டு. ஆனால், அவர்கள் கண்ணில் படாமலும் கூட பிரச்சனைகள் இருக்கலாம். எனவே தான், யார் வேண்டுமானாலும் இவற்றை கண்டறிந்து சொல்லலாம் என பரிசுத்திட்டங்களை அறிவிக்கின்றனர். தொழில்நுட்ப கில்லாடிகள் பலர் இதை ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். கைநிறைய சம்பாதிக்கவும் செய்கின்றனர்.
பெங்களூருவைச்சேர்ந்த 23 வயது இளைஞரான ஆனந்த் பிராகாஷும் இத்தகைய நல்லெண்ண ஹேக்கர் தான். இந்த வகையில் பிரகாஷை சாதனையாளர் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இதுவரை அவர் நிறுவன மென்பொருள் அமைப்புகளின் பின்னணியில் உள்ள ஓட்டைகளை கண்டுபிடித்து கூறியதற்கான பரிசுத்தொகையாகவே 2 கோடிக்கும் மேல் பெற்றிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
பிளிப்கார்ட் நிறுவனத்தில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய ஆனந்த் பிரகாஷ் இப்போது, முழு நேர வேட்டைக்காரராக மாறியிருக்கிறார். அதாவது பேஸ்பும், டிவிட்டர் உள்ளிட்ட முன்னணி சேவைகளின் பின்னணியில் இருக்க கூடிய ஓட்டைகளை கண்டறிந்து சொல்வதில் ஈடுபட்டு வருகிறார். இது அவருக்கு கைவந்த கலையாகவும் இருக்கிறது. அன்மையில் கூட, இணைய கால்டாக்சி நிறுவனமான உபெர் சேவையில் உள்ள ஓட்டையை கண்டறிந்து கூறியதற்காக 5,000 டாலர் பரிசு பெற்றார். உபெர் சேவையை பயன்படுத்தும் போது, அதில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதியில் லேசான விஷமத்தனத்தை செய்து பணம் கொடுக்காமாலேயே பயணம் செய்யும் வாய்ப்பு இருப்பதை அவர் நிறுவனத்திற்கு சுட்டிக்காட்டி சபாஷ் வாங்கியிருக்கிறார். மற்றவர்கள் இந்த குறையை பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் எச்சரிக்கை செய்ததால் உபெர் நிறுவனம் அவருக்கு ரொக்கப்பரிசு அளித்துள்ளது.’
இதே போலவே பேஸ்புக் நிறுவன சேவையில் உள்ள குறைகளை உணர்த்தி பலமுறை பரிசு பெற்றிருக்கிறார். பேஸ்புக் நிறுவனம் ஊக்குவிக்கும் நல்லெண்ண ஹேக்கர்கள் பட்டியலில் அவர் முன்னணியில் இருக்கிறார்.
நிறுவன சேவைகளில் உள்ள பாதுகாப்பு ஓட்டகளை தேடி கண்டுபிடித்து அது குறித்து எச்சரிக்கும் பிரகாஷ் பின்னர் தனது சாகசங்கள் பற்றி நிறுவன அனுமதியுடன் தனது வலைப்பதிவிலும் பகிர்ந்து கொண்டு வருகிறார். உபெர் சம்பவத்திற்கு பிறகு பி.ஜி.ஆர் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப தளங்கள் பிரகாஷி பேட்டி கண்டுள்ளன.
நிறுவன சேவைகளில் உள்ள ஓட்டைகளை கண்டுபிடிக்கும் திட்டங்களில் பங்கேற்பதால் பணம் கிடைக்கிறது என்றாலும், உண்மையில் தரவுகளை பாதுகாப்பதில் உள்ள ஆர்வமே தன்னை இயக்குவதாக அவர் கூறியுள்ளார். ஒரு காலத்தில் நல்லெண்ண ஹேக்கர்களாக செயல்படும் போது இந்திய நிறுவனங்களிடம் இருந்து மிரட்டலை சந்திக்கும் நிலை இருந்ததாகவும், ஆனால் இப்போது நிலைமை மாறியிருக்கிறது பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொண்டிருப்பதாக கூறுகிறார். எனினும் நிறுவனங்கள் பாதுகாப்பில் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்கிறார். குறிப்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்தவில்லை என்கிறார்.
எல்லாம் சரி, பிரகாஷுக்கு நல்லெண்ண ஹேக்கராகும் எண்ணம் எப்படி வந்தது? இந்த திறனை எப்படி வளர்த்துக்கொண்டார்? போன்ற கேள்விகளுக்கு அவரிடம் சுவாரஸ்யமான பதில் இருக்கிறது. வி.ஐ.டி பல்கலைகழகத்தில் படித்து பட்டம் பெற்ற பிரகாஷ் ஒருமுறை தனது சகாவிடம் அவரது ஆர்குட் வலைப்பின்னல் கணக்கை உடைத்து காட்டுகிறேன் என சவால் விட்டிருக்கிறார். அப்போது அவருக்கு ஹேக்கிங் செய்வது எப்படி என்றெல்லாம் தெரியாது. இந்த சவாலுக்குப்பிறகு கூகுளில் தேடிப்பார்த்து ஹேக்கிங் வழிகாட்டியை கண்டுபிடித்து அதன் மூலம் வெற்றியும் பெற்றிருக்கிறார். இதன் பிறகே ஹேக்கிங் நுட்பத்தில் ஆர்வம் உண்டானது. தொடர்ந்து இணையத்தில் உள்ள தரவுகளை படித்துப்பார்த்து தனது திறனை பட்டைத்தீட்டிக்கொண்டுள்ளார்.
இணைய பாதுகாப்பு தொடர்பான நிறுவனம் ஒன்றை சொந்தமாக துவக்க திட்டமிட்டுள்ளதாக கூறும் பிரகாஷ் நிறுவனங்கள் பாதுகாப்பில் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும், பயனாளிகள் வலுவான பாஸ்வேர்டை உருவாக்குவது, ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்தாமல் இருப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்.
ஆனந்த பிரகாஷ் டிவிட்டர் பக்கம்: @sehacure
வலைப்பதிவு: anandpraka.sh

 

– நன்றி. தமிழ் இந்துவில் எழுதியது.

ஒரு இணைய கையேடு மூடப்படுகிறது, கொஞ்சம் வருந்தலாமே பிளிஸ்!

C6ifJ90VwAAatO4டி.எம்.ஒ.இசட் தளம் முடப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் இது எனக்கு வருத்தம் தரும் செய்தி என்றாலும், அதைவிட முக்கியமானது, இணையத்தின் மகத்தான ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது என்பது தான். அது மட்டுமா, இணைய தேடலின் ஒரு முக்கிய அத்தியாயம் முடிவுக்கு வந்திருக்கிறது. மறக்கப்பட்ட அத்தியாம் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அதனால் தான் இந்த செய்தி இன்னும் வேதனை தருகிறது.
டி.எம்.ஒ.இசட் தளமா அது என்ன? என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், இந்த தளம் பற்றி ஒரு சுருக்கமான அறிமுகம். இணையத்தின் ஆதிகால கையேடு இது. அதாவது இணையதளங்களை பட்டியலிட்டு பரிந்துரைத்த தளம். யாஹு கையேட்டை போல என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
யாஹூ கையேடா? அது என்ன என்றும் கேட்கலாம். என்ன செய்ய? கூகுள் அலையில் காணாமல் போன சேவையில் யாஹூ கையேடும் ஒன்று! இருந்தாலும் என்ன யாஹு கையேடு தான் இரு காலத்தில் இணையவாசிகளுக்கு புதிய பயனுள்ள இணையதளங்களை அடையாளம் காட்டும் சேவையாக இருந்தது. இணையத்தின் கலங்கரை விளக்கம் என்றும் சொல்லலாம். அதாவது கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த இணையதளங்கள், அவற்றின் தன்மைக்கேற்ப பலவித தலைப்புகளில் பட்டியலிடப்பட்டிருக்கும். புதிய தளங்களை நாடுபவர்கள் இந்த பட்டியலில் தங்களுக்கு தேவையான பிரிவில் விரும்பிய தலைப்பை கிளிக் செய்து, புதிய தளங்களை தெரிந்து கொள்ளலாம். இதுவும் ஒரு தேடியந்திரம் தான்!
இணையத்தின் துவக்கத்தில் இதுவே இணையதளங்களை கண்டறிவதற்கான வழியாக இருந்தது. லைகோஸ், அல்டாவிஸ்டா போன்ற தேடியந்திரங்களுக்கு மத்தியிலும் இது பிரபலமாக இருந்தது. எனினும், தேடியந்திரமாக கூகுள் எழுச்சி பெற்று இணையத்தில் எதையும் தேடுவதை சுலபமாக்கிய பிறகு, யாஹூ கையேடு செல்வாக்கை இழந்து பின்னர் மூடப்பட்டது.
யாஹூ கையேடு மூடப்பட்டாலும், அதே போன்ற இணைய கையேடான , ஓபன் டைரக்டரி எனப்படும் டி.எம்.ஓ.இசட் தளம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்தது. சிறந்த இணையதளங்களை அறிந்து கொள்ள உதவும் இந்த தளம், தன்னார்வலர்களின் பங்களிப்புடன் இணைய கூட்டு முயற்சியாக பளிச்சிட்டுக்கொண்டிருந்தது. இடையே இந்த தளத்தின் வடிவமைப்பும் புதுப்பிக்கப்பட்டு சிறந்த தோற்றத்தை பெற்றிருந்தது.
இந்நிலையில் தான், இந்த சேவை மார்ச் 14 க்கு பிறகு செயல்படாது என கடந்த மாதம் ஏ.ஓல்.எல் நிறுவனம் அறிவித்தது. ஏ.ஓ.எல் தான் ஓபன் டைரக்டரி தளத்தின் உரிமையாளர்.
தேடியந்திர முடிவுகளை பட்டியலிடுவது உட்பட பலவற்றில் மென்பொருள்கள் இயக்கும் அல்கோரிதம் ஆதிக்கம் செலுத்தும் இணைய உலகில், கைகுத்தல் அரசி போல, மனிதர்கள் பார்த்து கவனமாக தேர்வு செய்த இணையதளங்களின் தொகுப்பாக ஓபன் டைரக்டரி இருந்தது என்பது அதன் தனிச்சிறப்பு. தன்னார்வர்லர்கள் பார்த்து பார்த்து தொகுத்து வழிகாட்டிய அந்த சேவை மூடுவிழா கண்டிருக்கிறது என்பது வருத்தமாக உள்ளது. ஒருவிதத்தில் இணையத்தில் இனி மனிதர்கள் தேர்வுக்கு மதிப்பில்லையோ எனும் கேள்வியையும் எழுப்புகிறது.
கூகுள் ஆதிக்கத்தால் மற்ற மாற்று தேடியந்திரங்களே கவனிப்பாரற்று கிடக்கும் போது, ஓபன் டைரக்டரி சேவை ஈர்ப்பில்லாமல் போனதில் வியப்பென்ன என நினைக்கலாம். இன்னொரு கோணத்தில் பார்த்தால், இணைய கையேடு எனும் கருத்தாக்கத்தின் தேவை முடிந்துவிட்டதே என்றும் கூறலாம்.
இந்த சேவை மூடப்படுவது பற்றிய இரங்கற்பா செய்திகளில் கூட, எப்படியும் ஓபன் டைரக்டரி சேவையை இப்போது யாரும் கண்டுகொள்வதில்லை, மேலும் அது அடிக்கடி சரியாக அப்டேட் செய்யப்படுவதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாராமுகத்தை மீறி, ஓபன் டைரக்டரி சேவை முக்கியமானது என்பதை, அது தொடர்பான குறும்பதிவுகள் உணர்த்துகின்றன. (#DMOZ ) . அது மட்டும் அல்ல, இந்த சேவை மூடப்பட்டது ஏ.ஓ.எல் நிறுவனத்தின் தனிப்பட்ட முடிவு என்றும், இந்த திடீர் முடிவு அதன் தன்னார்வலர்கள் சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றும் மதர்போர்ட் செய்தி தளம் தெரிவிக்கிறது. இது பற்றி ஏ.ஓ.எல் விரிவான விளக்கம் அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏ.ஓ.எல் மூடிவிட்டாலும் தன்னார்வலர்கள் ஒன்று கூடி ஏதேனும் ஒரு வகையில் இதை காப்பாற்றலாம் என எதிர்பார்க்க தோன்றுகிறது.
நிற்க அதே செய்தியில், இந்த தளத்தின் முக்கியத்துவம் பற்றிய ஒரு குறிப்பும் வருகிறது. தன்னார்வலர்கள் கூட்டு முயற்சியால் செயல்படும் இந்த தளம், கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவுக்கு முன்னோடியும் கூட. இந்த சேவை தங்களுக்கு ஊக்கம் அளித்ததாக விக்கிபீடியா இணை நிறுவனர் லாரி சாங்கர் ஒரு முறை கூறியுள்ளார்.
ஏ.ஒ.எல் நிறுவனம் விலைக்கு வாங்கி இருந்தாலும், இதன் தன்னார்வலர்கள் தங்களுக்குள் சமூக ஒப்பந்தம் செய்து கொண்டே செயல்பட்டு வந்தனர்..
ஆக, விக்கிபிடியாவுக்கு முன்னுதாரணமாக இருந்த இந்த சேவை ஏதேனும் ஒரு வகையில் மறு அவதாரம் எடுக்கட்டும்.
இணையத்தில் எப்போதும் கூட்டு முயற்சியின் கை ஓங்கியிருக்க வேண்டும்.

குறிப்பு1; டி,எம்.ஓ.இசட் சேவை பற்றி தமிழ் இந்து இணைய பதிப்பில் எழுதிய ஆவலை விசுவோம் தொடரில் விரிவாக எழுதியுள்ளேன்.- http://bit.ly/2d8rMHm

 

மன்னிக்கவும் நண்பர்களே, பேஸ்புக் டிஸ்லைக் பட்டன் வரவே வராது!

gj1ecksvaqddhjnufzpnசூப்பர் ஸ்டார் அரசிலுக்கு வருவதாக சொல்லப்படுவது போல தான், இணைய உலகில் பேஸ்புக் டிஸ்லைக் பட்டன் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் சொல்லப்படுவது. அவ்வப்போது, இது பற்றிய செய்தி கசியும், பரபரப்பு உண்டாகும். தோழர் மார்க், மறுப்பு வெளியிட்டு விளக்கம் அளிப்பார். சூப்பர்ஸ்டார் போலவே அவரும், டிஸ்லைக் பட்டன் வராவே வராது என சொல்லிவிட மாட்டார் என்றாலும், அதில் உள்ள சிக்கலை நன்றாகவே விளக்குவார்.

இது பேஸ்புக பயனாளிகளுக்கு பழக்கமான படலம் தான். இப்போது மீண்டும் பேஸ்புக் டிஸ்லைக் பட்டன் தொடர்பான செய்தி வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் பேஸ்புக் வெகு விரைவில். லைக் பட்டன் போலவே டிஸ்லைக் பட்டனையும் அறிமுகம் செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் அரசியல் பிரச்சாரம் பற்றிய ஸ்கூப்களை நம்புவதைவிட அதிக் ஆர்வத்தோடு டிஸ்லைக் பட்டன் அறிமுகம் தொடர்பான செய்திகள் டைம்லைனில் எட்டிப்பார்க்கின்றன. இந்த பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் மீறி, ஒருபோதும் டிஸ்லைக் பட்டன் அறிமுகமாக வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.  இது என் தனிப்பட்ட கருத்தல்ல: இணைய வல்லுனர்கள் பலரின் பொதுவான கருத்தை இப்படி உள்வாங்கி கொள்கிறேன்.

இதற்கான காரணங்களை பார்க்கும் முன் தற்போதைய செய்திக்கான ஆதாரம் பற்றி பார்க்கலாம். பேஸ்புக்கின் மெசஞ்சர் சேவைக்குள் , டிஸ்லைக் பட்டனுக்கு நிகரான ஒரு வசதி சோதனை முறையில் எட்டிப்பார்ப்பதாக பிரபல தொழில்நுட்ப வலைதளமான டெக்கிரஞ்ச் செய்தி வெளியிட்டுள்ளது. பயனாளிகள் சிலர் இந்த வசதியை கண்டறிந்து தகவல் தெரிவித்ததாக அந்த தளம் தெரிவிக்கிறது.

ரஜினி தனது புதிய திரைப்படம் வெளியாகும் அரசியல் பற்றி கொளுத்திப்போடுவது போலவே பேஸ்புக்கின் இது போன்ற சோதனைகளும் தொழில்நுட்ப உலகில் ஸ்கூப் போன்றது தான். எனவே டெக்கிரஞ்ச் வெளியிட்ட இந்த செய்தி இணைய உலகில் பல செய்தி தளங்களால் எடுத்தாளப்பட்டு, அடுத்த கட்டமாக பேஸ்புக் டிஸ்லைக் பட்டனை அறிமுகம் செய்ய இருப்பதாக ஒரு விவாத சரடு உருவாகி இருக்கிறது.

உள்ளபடியே பேஸ்புக் டிஸ்லைக் பட்டனை அறிமுகம் செய்யக்கூடும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு. பேஸ்புக்கில் லைக் செய்வதும் , ஷேர் செய்வதும் தனி மொழியாக பிரபலமாகி இருக்கிறது என்றாலும், இதன் எதிர்பதமான டிஸ்லைக் வசதி என்பது வேறு விஷயம். எதையும் லைக் செய்யும் வசதி என்பது வேறு. ஆனால் டிஸ்லைக் செய்வது என்பது வேறு. இந்த வசதி பிரச்சனையின் பெட்டியை திறப்பது போலாகிவிடும். இதை பேஸ்புக்கும், அதன் நிறுவனர் மார்க்கும் நன்கறிந்திருக்கின்றனர்.

மறுபடியும் சூப்பர்ஸ்டார் உதாரணத்திற்கே வருவோம். சூப்பர்ஸ்டார் கபாலிடாவுக்கு இத்தனை லட்சம் லைக்குகள் என சொல்வது சிறப்பாக இருக்கும். ஆனால் அதே படத்திற்கு இத்தனை ஆயிரம் டிஸ்லைக் என்று சொல்வது கேடாகவே முடியும். அரசியல், சமூகம் போன்ற எந்த விஷயத்திலும் டிஸ்லைக் செய்யும் வசதி , சர்ச்சைக்கும், துவேஷத்திற்கும் வழிவகுக்கும் அபாயம் உள்ளது.

ஆனால் லைக் வசதியில் போதாமை உள்ளது. எல்லாவற்றையும் லைக் செய முடியாது. லைக் தவிர வேறு வசதி தேவை தான். இதை உணர்ந்தே பேஸ்புக் கடந்த ஆண்டு லைக் தவிர வேறு சில இமோஜிகளை அறிமுகம் செய்தது. அதில் கையை கீழே காண்பிக்கும் டிஸ்லைக கிடையாது என்பதை மனதில் கொள்ளவும்.

டிஸ்லைக் பட்டன் பேஸ்புக் பயன்பாட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதை தோழர் மார்க் அறிந்தே இருக்கிறார். எனவே தான் இது தொடர்பாக அவர் மிகவும் கவனமாக இருக்கிறார்.

இப்போதே கூட, பேஸ்புக் மெசஞ்சர் சேவையில் இது போன்ற வசதி சோதிக்கப்படுவடுவது என்பது வேறு விஷயம். மெஞ்சர் பரப்பு சிறியது. அது பேஸ்புக்கின் பரந்த உலகிற்கு பொருந்தாது. மேலும் மெசஞ்சர் போன்ற தனிப்பட்ட அரட்டைகளில் டிஸ்லைக் செய்வதும், பேஸ்புக் தளத்தில் அதையே செய்வதும் ஒன்றாகிவிடாது.

தொழில்நுட்ப தளமான மாஷபில் இப்படி எல்லாம் வாதிடுகிறது. நானும் அதை நம்புகிறேன். எனவேதாம், ஒருபோதும் பேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டன் வராது என்கிறேன். வரக்கூடாது என்றும் நினக்கிறேன். ஏனெனில் நம்முடைய உரையாடல் எதிர்வினைகளை லைக் பட்டனில் குறுக்கியதே மோசமான விஷயம். அதை டிஸ்லைக் பட்டன் மூலம் எதிர்மறையாக விரிவுபடுத்துவது இணைய அபத்தமாகி விடலாம்.

எனவே தான் துணிந்து பேஸ்புக் டிஸ்லைக் பட்டன் அறிமுகமாது என்கிறேன். அப்படி மீறி அறிமுகமானால், அதை டிஸ்லைக் செய்து விட்டுப்போகிறேன் நண்பர்களே!

 

 


தொடர்புடைய முந்தைய பதிவுhttp://cybersimman.com/2015/09/16/facebook-65/

 

 

 

டிரம்பிற்கு எதிராக ஒலிக்கும் குரல்

அமெரிக்காவை விமர்சிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அதன் சுந்திர உணர்வும், குடியேறிவர்களின் தேசமாக விளங்கும் பரந்த தன்மையும் போற்றத்தக்கது. ஆனால், புதிய அதிபர் டிரம்பின் அதிரடி அறிவிப்பால் இந்த தன்மைக்கு சோதனை வந்துள்ளது. இது அமெரிக்காவின் பிரச்சனை என்பதைவிட, வந்தவர்களை அரவணைத்து வாழ வைக்கும் கோட்பாட்டிற்கு விடப்பட்டுள்ள சவால் என்றே கருத வேண்டும்.

இந்த அறிவிப்பிற்கு எதிராக சிலிக்கான் வேலி பிரமுகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர், அமெரிக்க குடியேறியவர்களின் தேசம் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு இருக்கும் பொறியாளர் படை பற்றாக்குறையை போக்க குடியேறிகளாக வரும் திறனாளர்களே கைகொடுக்கின்றனர் என பிளிக்கர் மற்றும் ஸ்லேக் இணை நிறுவனர் ஸ்டூவர்ட் கூறியுள்ளார். என் தாத்தா போலந்தில் இருந்து 17 வயதில் உலக போரின் போது அமெரிக்கா வந்தடைந்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்,

இந்த குரல்களுக்கு மத்தியில் ஏர்பிஎன்பி நிறுவனர் பிரைன் செஸ்கி, அதிபர் அறிவிப்பால்ம் இடம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு தனது இணையதளம் மூலம் தங்குமிடம் அளிக்கப்படும் என கூறியுள்ளார்,.

சாமானியர்கள் தங்கள் இருப்பிடத்தை தங்குமிட வசதியாக பகிர்ந்து கொள்ள வழி செய்யும் புதுமையான சேவையாக ஏர்பிஎன்பி தளத்தை அறிமுகம் செய்து தங்குமிட சேவை தொழிலையே புரட்டிப்போட்டவர் செஸ்கி.

சாமானியர்கள் இட வசதி அளிப்பதே இந்த சேவையின் மையமாக இருப்பதால், அதை கொண்டே குடியேறியவர்களுக்கு உதவுவதாக அவர் அறிவித்திருப்பது எதிர்ப்பின் ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு மட்டும் அல்ல அவர் உருவாக்கிய சேவையின் மகத்துவத்தையும் உணர்த்துகிறது. புதிய தலைமுறை கல்வியில் ’நம் காலத்து நாயகர்கள்’ தொடரை எழுதிய போது, முதல் அத்தியாயமே செஸ்கி மற்றும் அவரது நண்பர்கள் ஏர்பிஎன்பி தளத்தை துவக்கிய விதம் பற்றி விளக்குவதாக அமைந்திருந்தது. செஸ்கி எனக்கு பிடித்தமான நாயகர்களில் ஒருவர். டிரம்பிற்கு எதிராக ஒலிக்கும் அவரது குரலுக்கு ஆதரவு பெருகட்டும்.

புதிய தலைமுறை வெளியீடாக புத்தகமாக வந்திருக்கும் நம் காலத்து நாயகர்கள் நூலில் செஸ்கி போன்ற சாதனையாளர்கள் பற்றி விரிவாக வாசிக்கலாம்.