Category Archives: இணைய செய்திகள்

கமலின் ’மய்யம்விசில்’ செயலி எப்படி இருக்கும்?

kamal1_13104அரசியல் பிரவேசம் குறித்து கமல் ஏமாற்றவில்லை; ஆனால் முழுவதுமாக எதிர்பார்ப்பை நிறைவேற்றவும் இல்லை. தெளிவான சமிஞ்சைகளை வெளியிட்டாலும், இன்னும் பல யூகங்களை தன்னிடமே வைத்துக்கொண்டிருக்கிறார். அரசியலுக்கு வருவாரா? எனும் கேள்வியை வைத்துக்கொண்டு ஆர்வத்தை தூண்டிக் கொண்டிருக்காமல், அரசியலுக்கு வந்துவிட்டேன் எனச்சொல்லி ஆர்வத்தை தூண்டியிருக்கிறார். ஆனால், கட்சியின் பெயர், அதன் கொள்கை, எப்போது ஆரம்பம் போன்ற கேள்விகளுக்கு எல்லாம் உடனடி பதில் சொல்லாமல், கட்சி அமைப்புக்கான தயாரிப்பு பணிகள் நடந்து கொண்டிருப்பதாக மட்டும் கூறியிருக்கிறார்.

பிறந்த நாளை முன்னிட்டி செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், எதிர்பார்த்தபடியே அரசியல் பிரவசத்தை உறுதிப்படுத்திவிட்டு, கட்சி துவங்கும் முன் மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்யப்போவதாக கூறியிருக்கிறார். இது நல்ல உத்தி மட்டும் அல்ல, சரியான செயலும் தான். உலக நாயகன் உள்ளூர் மக்களின் கருத்துக்களை நேரில் கேட்டறியட்டும்!

கமல் அறிவிப்பில் கவனத்தை ஈர்த்து விவாதிக்கும் வகையில் பல அம்சங்கள் இருந்தாலும், கட்சிக்கான பிரத்யேக செயலி அறிவிப்பும், இயக்கத்திற்கான பிரத்யேக ஹேஷ்டேகுகள் வெளியிட்டிருப்பதும் கூடுதலாக கவனத்தை ஈர்க்கின்றன. #theditheerpomvaa, #virtuouscycles, #maiamwhistle   ஆகிய மூன்று ஹேஷ்டேகுகளை கமல் அறிவித்திருக்கிறார். இதில் ’மய்யம்விசில்’ ஏற்கனவே டிவிட்டரில் டிரெண்டிங் ஆகத்துவங்கிவிட்டது. இணையத்தில் ஹேஷ்டேக் என்பது முக்கியமான ஆயுதங்கள் அல்லது கருவிகள். பொருத்தமான ஹேஷ்டேக் மூலம் ஒத்த கருத்துக்களை சமூக ஊடக வெளியில் திரட்டுவதோடு, அர்த்தமுள்ள உரையாடலையும் சாத்தியமாக்கலாம். அந்த வகையில் தனக்கான ஹேஷ்டேகுகளை கமலே தேர்வு செய்து வெளியிட்டுள்ளது சரியான டிஜிட்டல் உத்தி தான். ஆனால் இந்த ஹேஷ்டேகுகள் சார்ந்த அர்த்தமுள்ள விவாதம் நடைபெறுவதை உறுதி செய்வது கமலின் கைகளில் தான் இருக்கிறது. அவரது டிவிட்டர் பக்கத்தில் இருந்தே இதை செய்யலாம். பொருத்திருந்து பார்க்கலாம் என்ன செய்கிறார் என!

அவரது சுற்றுப்பயணத்திற்கான முன்னேற்பாடாக கூட இந்த பகிர்வுகள் அமையலாம்.

ஹேஷ்டேக் தவிர ’மய்யம்விசில்’ எனும் பெயரிலான செயலியை அறிவித்திருக்கிறார். ஆனால் இந்த செயலி பீட்டா வடிவில் இருப்பதாக கூறியவர், ஜனவரியில் தான் இது அறிமுகமாகும் என கூறிவிட்டார். செயலியின் அம்சங்கள் குறித்தும் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. கதை திருட்டு போல செயலி திருட்டும் நடைபெறலாம் என அஞ்சுகிறார் போலும்!

செயலியின் முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டிருந்தால் கமலின் அரசியல் திட்டம் குறித்து அலசியிருக்கலாம். ஆனால் இந்த செயலி ஊழல் குறித்த தகவல்களை பகிர்வதற்கான வழியாக இருக்கும் என்று மட்டுமே கமல் கூறியிருக்கிறார். தன் மீதான தவறுகளையும் சுட்டிக்காட்டலாம் என கூறியிருக்கிறார். மேலதிக விவரங்கள் இல்லை. ஆனால், இந்த செயலி எப்படி இருக்க கூடும் என்று அனுமானிப்பதைவிட, இந்த செயலி எப்படி இருக்க வேண்டும் என்று யோசித்துப்பார்க்கலாம்.

அதற்கு முன்னர், ஒரு புதிய அரசியல் கட்சிக்கு செயலியால் என்ன பயன்? எனும் கேள்வியை கேட்டுக்கொள்ளலாம். ஸ்மார்ட்போன்கள் மூலம், உலகம் உண்மையிலேயே உள்ளங்கையில் வந்திருக்கும் காலகட்டத்தில் மொபைல் செயலிகளின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. வர்த்தகம் உள்பட எல்லாத்துறைகளிலும் செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. அரசியலிலும் செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் அரசியல் கட்சிகளுக்கும் செயலி ஒரு அருமையான கருவி தான். ஆனால் ஒன்று, கட்சியின் செயலி என்பது வேறுபட்டதாக இருக்க வேண்டும். அதாவது, ஏற்கனவே உள்ள பிரச்சார சங்கதிகளின் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட வடிவமாக செயலி இருப்பதால் அதிக பயன் இல்லை. அவை அலுப்பையே ஏற்படுத்தும். டிஜிட்டல் தலைமுறையை விலகிச்செல்ல செய்துவிடும். மாறாக ஒரு செயலி துடிப்புடன் இருக்க வேண்டும். தொழில்நுட்ப மொழியில் சொல்வதனால் டைனமிக்காக இருக்க வேண்டும்.

டிஜிட்டல் யுகத்தில் அரசியல் கட்சிகள் செயலிகளை நாடுவதற்கான முக்கிய காரணங்கள் என டெக்யுகோ வலைப்பதிவில் வெளியான கட்டுரை ஒன்று கீழ் கண்டவற்றை பட்டியலிடுகிறது.

  • விழிப்புணர்வு- பொதுமக்கள் மத்தியில் அரசியல் கட்சியின் நோக்கம் பற்றி தெளிவாக உணர்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  • நிதி – செயலி நிதி திரட்டுவதற்கான மேடையாக அமையலாம்.
  • செய்தி- செயலி தகவல் தெரிவிப்பதற்கான சிறந்த வழி.
  • தொடர்பு- செய்தி என்பது ஒருவழிப்பாதையாக இல்லாமல், உரையாடலாக இருக்க வேண்டும்.
  • மீடியா- செய்திகளை வெளியிடுவதற்கான வாகனம்
  • கல்வி- மக்கள் பிரச்சனைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
  • சமூக ஊடகம்- சமூக ஊடக பகிர்வுகள்
  • சர்வே- மக்கள் கருத்துக்களை சர்வேக்கள் மூலம் அறியலாம்.

 

விதிவிலக்கான சந்தர்பங்கள் தவிர பொதுவாக அரசியல் கட்சிகள் ஒரு வழிப்பாதை தகவல் தொடர்பையே பயன்படுத்துகின்றன. மக்களுக்கும், தொண்டர்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படும் அளவிற்கு அவர்கள் கருத்துக்களை அறிய முயற்சி மேற்கொள்ளப்படுவதில்லை. ஆனால் செயலி மூலம் இதை மாற்றலாம். மக்களுடன் வெளிப்படையாக தொடர்பு கொண்டு அவர்கள் கருத்துக்களை அறியலாம். அரசியல் கட்சிகள் பெரும்பாலும் நிர்வாகிகளின் ஜால்ரா கருத்துக்களையே கேட்க நேரிடுகிறது. செயலி மூலம் மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை பட்டவர்த்தனமாக தெரிந்து கொள்ளலாம். இதற்கு பதிலும் அளிக்கத்துவங்கினால் இரு தரப்பினருக்குமே அது நலன் பயக்கும்.

முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக கட்சி கருத்தை மட்டும் திணிக்காமல் முதலில் மக்கள் மன ஓட்டத்தை அறிந்து அதற்கேற்க கட்சி நிலைப்பாட்டை வகுப்பது ஜனநாயகமயமானதாக இருக்கும். முக்கிய பிரச்சனைகளை மக்களையே பரிந்துரைக்க செய்யலாம்.

வெளிப்படையாக தொடர்பு கொள்வது மூலம் மக்களிடம் நம்பகத்தன்மையை அதிகமாக்கி கொள்ளலாம். நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய கருத்துக்களையும் அறியலாம். இது கட்சியையை ஜனநாயகபூர்வமாக வைத்திருக்கும்.

செயலி மூலம் இன்னும் பல விஷயங்களை செய்யலாம். ஆனால் ஒன்று பயணர் இடைமுகம் முக்கியம். அது நட்பானதாக இருக்க வேண்டும். எதையும் வெளிப்படையாக பகிர முடிய வேண்டும். அதைவிட முக்கியமாக கருத்துக்கள் ஒரு வழிப்பாதையாக நின்றுவிடாமல் அவற்றுக்கு முறையாக பதில் அளிக்கப்பட வேண்டும்.

சமூக ஊடக பகிர்வு வசதி, பேஸ்புக் வைவ் வசதி, அரட்டை வசதி, அறிக்கை வெளியீடு உள்ளிட்ட அம்சங்கள் இருக்க வாய்ப்புள்ளது. இவை எல்லாவற்றையும் விட, மக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அவர்கள் கருத்துக்களை அறிந்து செயல்படும் வழியில் செயலி இருக்க வேண்டும். நிதி திரட்டுவது பற்றி கமல் பேசியது, எல்லாவற்றையும் பதிவு செய்யும் முறையை சுட்டிக்காட்டுகிறது.

கமல் செயலி பற்றி தனியே பேசாமல் மக்கள் தொடர்புக்கான டிஜிட்டல் அரங்கின் ஒரு அம்சமாக இதை சொல்லியிருப்பது நிறைய எதிர்பார்க்க வைக்கிறது. தொழில்நுட்ப போக்குகளை நன்கறிந்த கமல், டிஜிட்டல் உலக சாத்தியங்களை தனது இயக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் மேடையை உருவாக்கினார் என்றால் அது நிச்சயம் ஒரு முன்னோடி முயற்சியாக இருக்கும்.

செயலி, டிஜிட்டல் அரங்கம் எல்லாம் நவீன உத்திகள் தான். ஆனால் இவை மட்டும் போதாது. களத்தில் எப்படி செயல்படுகிறார் என்பதை கொண்டே இந்த உத்திகள் பயன் தரும்.

கமல் நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதை தக்க வைத்துக்கொள்கிறாரா என்பது தான் முக்கியமான கேள்வி!

 

=—

நன்றி; யுவர்ஸ்டோரி தமிழ் இணையதளத்தில் எழுதியது

ஸ்டீபன் ஹாகிங் ஆய்வை ஆய்வு செய்ய அரிய வாய்ப்பு!

hawking_with_newtons_copy_of_principia_mathematica_please_credit_graham_copekogaஇணையத்தில் நட்சத்திரங்களுக்கும், பிரபலங்களுக்கும் தான் ரசிகர்கள் இருப்பதாக நினைத்துவிட வேண்டாம், விஞ்ஞானிகளுக்கும் அபிமானிகள் இருக்கின்றனர். ஸ்டீபன் ஹாக்கிங் ஆய்வுக்கட்டுரையை வாசிக்கு ஆர்வத்தால் அவரது அதி தீவிர ரசிகர்கள் முற்றுகையால், அதை வெளியிட்ட இணையதளம் முடங்கியதாக வெளியான செய்தியே இதற்கு சான்று.

வாழும் விஞ்ஞானிகளில் மகத்தானவர்களில் ஒருவராக போற்றப்படும் ஸ்டீபன் ஹாகிங், அறிவியலும் அற்புதமானது, அதைவிட வாழ்க்கை அதி அற்புதமானது. மோட்டார் நியூரான் கோளாறால் பாதிக்கப்பட்டதன் விளைவாக சக்கர நாற்காலியில் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டாலும் அவரது அறிவியல் செயல்பாடுகள் தளர்வில்லாமல் துடிப்பாகவே தொடர்கிறது. நோயின் தாக்கம் காரணமாக அவரால் பேச முடியாவிட்டாலும், தனக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பேச்சு மாற்று மென்பொருள் மூலம் உலகுடன் தொடர்பு கொண்டு தனது அறிவியல் சிந்தனைகள் மற்றும் ஆய்வு கருத்துகளை அவர் தொடர்ந்து உற்சாகமாக பகிர்ந்து கொண்டு வருகிறார்.

பிரபஞ்சத்தின் தோற்றம், கருந்துளைகளின் ரகசியம் பற்றி எல்லாம் தீவிரமாக ஆய்வு செய்து வரும் ஹாக்கிங் செயற்கை நுண்ணறிவு பற்றி எல்லாமும் தொடர்ந்து பேசி வருகிறார். அவரைப்போலவே அவரது ஆய்வுகளும், பேச்சுகளும் ஊக்கம் அளிக்க கூடியது. அறிவியல் வழியே, பிரபஞ்ச ரகசியத்தை அறிந்து கொள்ள துடிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஹாக்கிங்கின் கருத்துக்கள் கலங்கரை விளக்கம் போன்றவை.

காலத்தின் சுருக்கமான வரலாறு போன்ற பெஸ்ட் செல்லர் புத்தகங்கள் மூலம் வெகுமக்கள் மத்தியிலும் பிரபலமாக விளங்கும் ஹாக்கிங், பேசினாலோ அல்லது மாநாட்டில் உரையாற்றினாலோ அவை தப்பாமல் தலைப்புச்செய்தியாகிவிடும். அப்படி இருக்க அவரது பிஎச்டி ஆய்வை கட்டுரையை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவரது அபிமானிகள் சும்மா இருந்துவிடுவார்களா என்ன? அதை பயன்படுத்திக்கொள்ள படையெடுத்துவிட மாட்டார்களா என்ன?

அது தான் இப்போது நடந்திருக்கிறது.

இங்கிலாந்தின் கேம்பிர்ட்ஜில் பிறந்து வளர்ந்த ஹாக்கிங், ஆக்ஸ்போர்ட் பல்கலையில் படித்து முடித்த பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலையில் பிஎச்டி பட்டம் பெற்றார். பிஎச்டிக்காக அவர் விரிவடையும் பிரபஞ்சத்தின் கூறுகள் எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரையை சமர்பித்தார். இது பழைய கதை என்று வைத்துக்கொள்ளுங்களேன். அதன் பிறகு அவர் டாக்டர் பட்டம் பெற்று ஒரு பக்கம் தன்னை வறுத்தி முடக்கிக்கொண்டிருக்கும் நோயுடன் விடாமல் போராடியபடி, பிரபஞ்சத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு தன்னை மகத்தான விஞ்ஞானியாக உயர்த்திக்கொண்டு விட்டார்.

இந்நிலையில், அந்த மகத்தான விஞ்ஞானியின் பிஎச்டி ஆய்வுக்கட்டுரையை படித்துப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்றால் சும்மாவா? அதிலும் சும்மாவே கிடைக்கிறது என்றால் எப்படி!

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் பொக்கிஷமாக பாதுகாக்கப்படும் அந்த ஆய்வுக்கட்டுரையை அண்மையில் பல்கலைகழக இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டது. 134 பக்கங்கள் கொண்ட அந்த கட்டுரையை வாசிக்க வேண்டும் எனில் இதற்கு முன்னர் 65 பவுண்ட் கட்டணம் செலுத்தினால் மட்டுமே சாத்தியம். அதையும் மீறி பலரும் அந்த கட்டுரையை ஆர்வத்துடன் வாசித்து வந்த நிலையில், ஆய்வுக்கட்டுரைகளை அனைவரும் எளிதாக அணுகும் வசதியை உறுதி செய்யும் கருத்தாக்கத்தை கொண்டாடும் வாரத்தை முன்னிட்டு பல்கலைக்கழகம் கடந்த 24 ம் தேதி இந்த கட்டுரையை அனைவரும் தரவிறக்கம் செய்து வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.

அடுத்த 24 மணி நேரத்தில் 60,000 பேருக்கு மேல் இந்த கட்டுரையை தரவிறக்கம் செய்யும் ஆர்வத்துடன் இணையதளத்திற்கு வருகை தந்தனர். இந்த எதிர்பாராத படையெடுப்பால் இணையதளம் தாக்குபிடிக்க முடியாமல் தற்காலிகமாக முடங்கிப்போனது. ஹாக்கிங் ஆய்வுக்கட்டுரைக்கு பெருமளவு ஆதரவு குவிந்ததால் இணையதளம் தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாக பல்கலைக்கழக செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

010080586023நிச்சயம் இந்த வரவேற்பு பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும். அது மட்டும் அல்ல, ஹாக்கிங்கும் மகிழ்ந்திருப்பார். ஏனெனில் ஆய்வுக்கட்டுரையை இலவசமாக அணுக வழி செய்ய அனுமதி கேட்கப்பட்ட போது ஹாக்கிங் அதற்கு உற்சாகமாக ஒப்புக்கொண்டதோடு, அறிவியல் ஆர்வலர்களுக்கான செய்தியையும் அறிக்கையாக வெளியிட்டார். என்னுடைய கட்டுரையை எல்லோரும் அணுகி படிக்க வழி செய்திருப்பதன் மூலம் உலகம் முழுவதும் உள்ளவர்கள் குணிந்து கீழே பார்க்காமல், வானத்தை நோக்கி நட்சத்திரங்களை பார்ப்பதற்கான ஊக்கத்தை பெறுவார்கள் என நம்புகிறேன் என துவங்கும் அந்த அறிக்கையில், பிரபஞ்சத்தில் நம்முடைய இடம் பற்றி யோசித்து, பேரண்டம் பற்றியும் யோசிக்க இது தூண்டுதலாக அமையும் என குறிப்பிடுகிறார். உலகில் எந்த மூளையில் இருப்பவரும் என்னுடைய ஆய்வை மட்டும் எல்லா அனைத்து ஆய்வுகளையும் எளிதாக அணுகி படித்துப்பார்க்கும் வாய்ப்பை பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹாக்கிங்கின் இந்த அறைகூவலை அறிவியல் ஆர்வலர்கள் தட்டாமல் ஏற்றுக்கொண்டுள்ளனர். நீங்களும் கூட அறிவியல் கடலில் நீந்த விரும்பினால் ஹாக்கிங் ஆய்வுக்கட்டுரையை தரவிறக்கம் செய்து படித்துப்பார்க்கலாம்.

எல்லாம் சரி இந்த ஆய்வுக்கட்டுரையில் ஹாக்கிங் என்ன எல்லாம் எழுதியிருக்கிறார்? பிரபஞ்ச உருவாக்கத்தில் ஈர்ப்பு விசையின் பங்கு, ஆதியில் நிகழ்ந்ததாக கருதப்படும் சிங்குலாரிட்டி, கருந்துளைகள், ஈர்ப்புவிசை கதிர்கள் பற்றி எல்லாம் விவரித்திருக்கிறார். இது அவரது ஆரம்ப கால ஆய்வு. ஹாக்கிங்கே இதை கடந்து வெகுதூரம் வந்துவிட்டார் என்றாலும், ஒரு மேதையின் தீர்க தரிசனத்தின் கீற்றுகளை கொண்ட இந்த ஆய்வுக்கட்டுரையை வாசித்து பார்க்கும் வாய்ப்பு அறிவியல் மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் கிடைத்துள்ள வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.

வால்; ஸ்டீபன் ஹாக்கிங் ஆய்வுக்கட்டுரைக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பு பரபரபுக்கு மத்தியில் இந்த கட்டுரையை வாசித்த வாசகர் ஒருவர் அதன் முதல் பக்கத்திலேயே எழுத்துப்பிழை இருப்பதை கண்டுபிடித்து சுட்டிக்காட்டிய தன் பங்கிற்கு கவனத்தை ஈர்க்க முற்பட்டார்.

 

 

ஹாக்கிங் ஆய்வுக்கட்டுரையை அணுக: http://schema.lib.cam.ac.uk/PR-PHD-05437_CUDL2017-reduced.pdf

 

நன்றி; மின்னம்பலம் இதழில் எழுதியது

 

இணைய வரலாற்றுக்கு இங்கே கிளிக் செய்யவும்!

 

browser-2-800x594இணையத்தின் வரலாற்றை திரும்பி பார்ப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? அது அலுப்பூட்டும் என்ற எண்ணமோ அல்லது இணையம் நாளுக்கு நாள் அப்டேடாகி கொண்டிருக்கும் நிலையில் பழைய கதை எல்லாம் எதற்கு என்ற எண்ணமோ உண்டானால், உங்களுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது.- இணையம் கதைகளால் நிரம்பியிருக்கிறது என்பதும், அந்த கதைகள் அனைத்துமே சுவாரஸ்யமானவை என்பதும் தான் அது.

அது மட்டும் அல்ல, இணைய வரலாற்றில் அறியாத விஷயங்கள் இத்தனை இருக்கின்றனவா? என்ற வியப்பும் உண்டாகும். அதோடு இணையம் எத்தனை மகத்தான கண்டுபிடிப்பு என்பதும், அந்த தொழில்நுட்ப அற்புதம் எத்தனை எளிமையாக கருக்கொண்டு வளர்ந்துள்ளது என்பதும் உங்களுக்கு புரிய வரும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக இதற்கு உதாரணமாக இணையத்தின் ஆதி கதைகளில் மிக சுவாரஸ்யமான கதை ஒன்றை பார்ப்பதற்கு முன் அமெரிக்க புரோகிரமரான ஜே ஹாப்மனை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவர் தான் இணையத்தின் மறக்கப்பட்ட கதைகளை எல்லாம் அகழ்வராய்ச்சி செய்து கண்டெடுத்து பகிர்ந்து கொண்டு வருகிறார்.

ஹாப்மன், ’திஹிஸ்டரிஆப்திவெப்’ எனும் பெயரில் வலையின் வரலாற்றை பதிவு செய்வதற்கான இணையதளத்தை அமைத்திருக்கிறார். ( இணையமும், வலையும் ஒன்றாக புரிந்து கொள்ளப்பட்டாலும் இரண்டும் ஒன்றல்ல. இணையம் வலைப்பின்னல்களின் வலைப்பின்னல். வலை அதில் ஒரு அங்கம். இணையத்தை எளிதாக அணுகக்கூடிய மூல செயலியாக வலையை புரிந்து கொள்ளலாம். எனினும் நடைமுறையில் இரண்டையும் ஒன்றென கொள்வதில் தவறில்லை). அதாவது வேர்ல்டு வைட் வெப் எனப்படும் வலை உருவான கதைகளை அவர் இந்த தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

வலையின் வரலாற்றை கூகுளில் தேடினால் படித்துவிடலாமே என நினைப்பவர்கள் ஹாப்மன் தளத்திற்கு கட்டாயம் விஜயம் செய்து பார்க்க வேண்டும். பரவலாக அறியப்பட்ட வலையின் தோற்றம், வளர்ச்சி, விஸ்விரூப வெற்றி சார்ந்த தகவல்கள் மற்றும் காலவரிசை விவரங்களை எல்லாம் கடந்து, வலையின் உருவாக்கத்தில் இன்னும் தெரிந்து கொள்ள எத்தனை விஷயங்கள் இருக்கின்றன என்பதை இந்த தளத்தின் மூலம் உணரலாம். ஹாப்மனே இப்படி உணர்ந்ததால் தான் இந்த தளத்தை அமைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

browser-3அவர் ஒரு வரலாற்று மாணவராம். படிக்கும் காலத்திலேயே இணையதள உருவாக்கத்தில் பகுதிநேரமாக ஈடுபட்டிருக்கிறார். பின்னர் அதுவே முழு நேர பணியாக மாறிவிட்டாலும் மனிதருக்கு வலை உருவான வரலாற்றின் மீதான காதல் மாறாமல் இருந்திருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக வலை தொடர்பான கதைகளை படித்தவருக்கு அதன் ஆரம்பமும் அடுத்தடுத்து நிகழும் பாய்ச்சல்களும் வசீகரித்தன. அந்த ஆர்வத்தில் தான் கண்டெடுத்த கதைகளையும், அவற்றுக்கான இணைப்புகளையும் சேகரித்து வைக்கத்துவங்கினார்.

இந்த வரலாறு தனித்துவம் மிக்கதாக இருக்கிறது என்கிறார் அவர். அது மட்டும் அல்ல, வலை ஆவணங்களின் பக்கமாக உருவானது என்றும், இந்த பக்கங்கள் காணாமல் போகும் தன்மை கொண்டவை என்றும் அவர் குறிப்பிடுகிறார். அதன்படியே எண்ணற்ற பக்கங்கள் காணாமல் போயிருக்கின்றன என்கிறார். அதிலும் குறிப்பாக நாம் அறிந்த வகையில் வலை வேகமாக வளர்ந்து கொண்டே வரும் நிலையில் அதன் பாதையில் ஒரு சில தருணங்கள் மைல்கற்களாக அமைந்து மற்ற தருணங்கள் பின்னுக்குத்தள்ளப்பட்டுவிடும் நிலை உள்ளது.

இந்த தருணங்கள் அனைத்தையும் திரட்டி தொகுத்து வலையின் முழுமையான கால வரிசையை உருவாக்கும் நோக்கத்துடன் இதற்கான இணையதளத்தை அமைத்து, இணையக்கடலில் தான் தேடி கண்டுபிடிக்கும் கதைகளை பகிர்ந்து கொண்டு வருகிறார். இணையத்தின் அங்கமாக வலை கருக்கொண்ட 1988 ம் ஆண்டு முதல் இந்த கதைகளை காலவரிசையாக படித்துப்பார்க்கலாம்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் வலையின் முக்கிய தருணங்களாக விளங்கிய நிகழ்வுகளின் பின்னே உள்ள கதைகள் படு சுவாரஸ்யமாக இருப்பதோடு, அதைவிட சுவையான வரலாற்றுப்பாடங்களையும் கொண்டிருக்கின்றன.

இதற்கு உதாரணமாக கதையை இனி பார்க்கலாம். வேர்ல்டு வைடு வெப் என குறிப்பிடப்படும் வலையை உருவாக்கியது பிரிட்டனைச்சேர்ந்த டிம் பெர்னர்ஸ் லீ என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். விஞ்ஞானியான அவர் சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, 1989 ம் ஆண்டில் வலையை உருவாக்குவதற்கான யோசனையை முன் வைத்து, அது பின்னர் ஏற்கப்பட்டு 1991 ல் வலை பிரவுசர் மற்றும் எச்டிஎம்.எல் இணைப்பு வசதி உள்ளிட்ட அம்சங்களோடு உதயமானது எனும் சுருக்கமான வரலாற்றையும் பலரும் அறிந்திருக்கலாம்.

ஆனால் இதற்கான யோசனையை லீ, உலக அளவிலான போன் புத்தகமாக முன்வைத்து தான் வெற்றி பெற்றார் என்பது உங்களுக்குத்தெரியுமா?

லீ அப்போது பணியாற்றிக்கொண்டிருந்த செர்ன் ஆய்வுக்கூடம் நவீன இயற்பியல் ஆய்வில் ஈடுபட்டிருந்தது. இயற்பியல் சார்ந்த ஆய்வு தவிர வேறு விஷயங்களுக்கு அங்கு முக்கியத்துவம் இல்லை. ஆனால், லீயோ உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு தகவல்களை எளிதாக பகிர்ந்து கொள்வதற்கான வழியை எச்.டிம்.எம்.எல் உள்ளிட்ட அம்சங்களோடு உருவாக்க கனவு கண்டார். ஆனால் செர்ன் போன்ற ஆய்வுக்கூடத்தில் இத்தகைய திட்டத்திற்கான அனுமதி கிடைப்பது கடினம். இதை எல்லாம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு ஆய்வு வேலையை கவனியுங்கள் என்றே எச்சரிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.

ஆனால் நல்லவேளையாக டிம் பெர்னர்ஸ் லீ முன் வைத்த யோசனைக்கு அந்த கதி ஏற்படவில்லை. அவரது தலைமை அதிகாரியான மைக் செண்டல், இந்த யோசனையை ஆதரிக்க விரும்பினார். எனினும் மூல வடிவில் அது அதிகார மேல் அடுக்குகளில் செல்லுபடியாகாது என அறிந்திருந்தவர் இதற்கான மாற்று வழியை முன்வைத்தார். இந்த யோசனையை அப்படியே முன்வைக்காமல் செர்ன் ஆய்வு கூடத்திற்கு மிகவும் அவசியமான போன் புத்தகத்தை இணையத்தில் உருவாக்கித்தரும் திட்டமாக முன்வைக்குமாறு கூறினார். செர்ன் ஆய்வாளர்கள் உலகம் முழுவதும் இருந்ததால் அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க கூடிய ஒரு போன் புத்தகம் தேவைப்பட்டது என்பதால் இந்த போர்வையில் ஐடியாவை சொன்னால் யாரும் மறுக்க மாட்டார்கள் என அவர் நம்பினார். அதன்படியே இணைய போன் புத்தகத்தை உருவாக்கும் முயற்சியாக வலை துவங்கி பின்னர் மெல்ல நிலைப்பெற்று இன்று வலையில்லாமல் வாழ்க்கை இல்லை எனச்சொல்லும் நிலையை உருவாக்கும் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது.

இது போன்ற வரலாற்று கதைகளை தெரிந்து கொள்ள: https://thehistoryoftheweb.com/

 

பலூன் வரும் முன்னே, இணையம் வரும் பின்னே!

 

lபியூர்ட்டோ ரிக்கோ மக்கள் அந்த பலூன்கள் எப்போது வந்து சேரும் என ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். அந்நாட்டு அரசாங்கமும், தொண்டு அமைப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் கூட அந்த பலூன்கள் எப்போது தங்கள் வானில் மிதக்கத்துவங்கும் என எதிர்பார்த்திருக்கின்றனர். மற்ற நாடுகளும் கூட இந்த பலூன்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கின்றன.

ஒரு பலூன் மீது இத்தனை எதிர்பார்ப்பா? என்று கேட்கலாம். அதிலும், அண்மையில் சூறாவளியில் சிக்கி அதன் கோரத்தாண்டவத்தில் இருந்து மீள முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் பியூர்டோ ரிக்கோ மக்கள் ஏன், ஒரு பலூனுக்காக காத்திருக்க வேண்டும் என கேட்கத்தோன்றலாம். அந்த பலூன்கள் சாதாரன பலூன்கள் அல்ல, வானிலிருந்து மண்ணுக்கு இணைய இணைப்பை வழங்க கூடிய அதி நவீன பலூன்கள் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.

முன்னணி தேடியந்திர நிறுவனமான கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் லூன் திட்டத்தின் சார்பில் இந்த வகை பலூன்கள் பறக்க விடப்படுகின்றன. சாகச விளையாட்டாக கருதக்கூடிய ஹாட் ஏர் பலூன் ரகத்தைச்சேர்ந்த இந்த பலூன்கள் காற்றுவெளி மண்டத்தில் மிதந்தபடி தொலைத்தொடர்பு வசதி மற்றும் இணைய வசதியை கீழே உள்ள பகுதிக்கு அளிக்க வல்லவை. அதனால் தான், பியூர்ட்டோ ரிக்கோ மக்கள் இந்த பலூன்கள் வரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சூறாவளி தாக்குதலால் அந்நாட்டு செல்போன் கோபுரங்களும், தொலைத்தொடர்பு வசதியும் முறித்து போய் கிடக்கின்றன. எனவே அங்கு தகவல் தொடர்பு வசதி முற்றிலும் செயலிழந்து போயிருக்கிறது. இதனால் மீட்பு பணிகளை ஒருங்கிணைப்பது முதல் நிவராண உதவிகளை அளிப்பது வரை எல்லாவற்றிலும் சிக்கல் இருக்கிறது.

தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு வசதியை சீரமைக்க மாதக்கணக்கில் ஆகலாம் எனும் நிலையில், அத்தியாவசிய பணிகளை ஒருங்கிணைக்கவும், பொதுமக்கள் தொடர்பு கொள்ளவும் அடிப்படை தொலைத்தொடர்பு வசதி உடனடி தேவை.

இந்த பின்னணியில் தான் ஆல்பபெட் நிறுவனம் தனது லூன் திட்டத்தின் இணைய பலூன்கள் பியூர்ட்டோ ரிக்கோவில் பறக்கவிட திட்டமிட்டு இதற்காக அமெரிக்க அரசின் அனுமதியையும் பெற்றிருக்கிறது. பியூர்ட்டோ ரிக்கோவில் பலூன்களை பறக்கவிட்ட பிறகு உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு, செல்போன் இணைப்பு மற்றும் இணைய வசதியை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உறவினர்களை தொடர்பு கொள்ளவும், உதவிகளை பெறவும் செல்போன் இணைப்பு கிடைக்காமல் அல்லாடிக்கொண்டிருக்கும் பியூர்ட்டோ ரிக்கோ மக்களுக்கு இந்த சேவை பேரூதவியாக இருக்கும்.

கூகுளின் தாய் நிறுவனம் இந்த பலூன் திட்டத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகள் உள்பட உலகில் இணைய வசதி இல்லாத தொலைதூர பகுதிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இந்த பலூன்கள் மூலம் இணைய வசதி அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் வானில் இந்த பலூன்களை வரிசையாக பறக்கவிட்டு அவற்றை வயர்லெஸ் முறையில் வலைப்பின்னலாக இணைப்பதன் மூலம் தரைப்பகுதியில் உள்ளவர்களுக்கு இணைய வசதியை அளிக்கும்.

பலூன்கள் மூலம் எப்படி இணைய வசதி அளிக்க முடியும் என பார்ப்பதற்கு முன், இந்த திட்டம் பற்றி சுருக்கமான அறிமுகம். தேடியந்திரமான கூகுள் பிரவுசர்கள், இமெயில், மொபைல் இயங்குதளம் என பல்வேறு சேவைகளை வழங்கு வருகிறது. இவைத்தவிர கூகுள் நிறுவனம் பல்வேறு ஆய்வு திட்டங்கள் மற்றும் சோதனை திட்டங்களையும் கொண்டிருந்தது. இப்படி கூகுள் குழுவால் பிராஜெக்ட் எக்ஸ் எனும் பெயரில் துவங்கப்பட்டது தான் இணைய பலூன் திட்டம்.

இணையம் மூலம் செய்திகளை தெரிந்து கொள்வது முதல் ஷாப்பிங் செய்வது வரை எண்ணற்ற வசதிகள் சாத்தியமாகி இணையம் இல்லாத வாழ்க்கைக்கு நாம் பழகிவிட்டோம். கம்ப்யூட்டர்கள், லேப்டாப் மட்டும் அல்லாமல், ஸ்மார்ட்போன் மூலம் உள்ளங்கையிலேயே இணைய வசதி சாத்தியமாகிறது. ஆனால், இணைய வசதி என்பது இன்னமும் உலகம் முழுவதும் பரவலாகிவிடவில்லை. உலகில் இணைய வசதி எட்டிப்பார்க்காத பகுதிகளும் அநேகம் இருக்கின்றன. இணைய வசதி மோசமாக உள்ள பகுதிகளும் உள்ளன. மலைப்பகுதி, குக்கிராமங்கள் போன்ற இடங்களுக்கு இணைய வசதியை அளிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

இன்னமும் தொலைத்தொடர்பு வசதி எட்டிப்பார்க்காத இடங்களில் இணைய வசதியை அளிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தி தருவது பெருட்செலவு மிக்கதாகும். இதற்கான லாபமும் குறைவு என்பதால் வர்த்தக நிறுவனங்கள் இதில் அதிக முனைப்பு காட்டவும் தயங்குகின்றன.

இந்த சிக்கலுக்கான தீரவாக தான் பலூன் மூலம் தொலைதூர பகுதிகளில் இணைய வசதி அளிக்கும் திட்டத்தை கூகுள் சோதனை முறையில் துவங்கியது. 2013 ம் ஆண்டு, அதிகாரபூர்வமாக இந்த திட்டம் துவங்கியது. கூகுள் செயல்படுத்தி வந்த பல்வேறு துணை திட்டங்களில் ஒன்றாக விளங்கிய இந்த திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கூகுளுக்கு என தனியே ஆல்பபெட் எனும் தாய் நிறுவனம் உருவாக்கப்பட்ட போது தனியே பிரிக்கப்பட்டு, அதன் கீழ் இயங்கி வருகிறது. இடைப்பட்ட காலத்தில் கூகுள் தனது பலூன் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அதற்கான வெள்ளோட்டங்களையும் நிகழ்த்தி வருகிறது. இதற்கான முதல் சோதனை சில ஆண்டுகளுக்கு முன் நியூசிலாந்து நாட்டில் மேற்கொள்ளப்பட்டது.

தொலைத்தொடர்பு வசதி இல்லாத இடங்களில் வானில் இந்த பலூன்களை பறக்கவிட்டு அவற்றை வலைப்பின்னலாக இணைத்து இணைய இணைப்பை வழங்குவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இந்த பலூன்கள் காற்றின் போக்கில் இயங்கி அதற்கேற்ப நிலைநிறுத்திக்கொள்ளும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. வானிலை நிகழ்வு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படாத அளவுக்கு பாதுகாப்பானவை. மேலும் விமானங்கள் போன்றவற்றுக்கு இடைஞ்சல் இல்லாத அளவுக்கு காற்று மண்டத்தில் 15 முதல் 20 கிமீ எல்லையில் இவை இயக்கப்படுகின்றன.

உயர்தரமான பிளாஸ்டிக்கால் ஆன இந்த பலூன்கள் ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்டு அதன் மூலம் இயங்குகின்றன. ஒவ்வொரு பலூனும் ஒரு டென்னிஸ் மைதானம் அளவு பெரிதானவை. பூமியில் உள்ள ராட்சத டிரெக்கில் இருந்து இவை விண்ணில் செலுத்தப்படுகின்றன. 30 நிமிடத்திற்கு ஒரு பலூனை இப்படி செலுத்த முடியும். பின்னர், வானில் மிதந்தபடி இவை தங்களுக்கான இடத்தில் நிலைப்பெறும். வரிசையாக பலூன்கள் செலுத்தப்படும் போது பரஸ்பரம் வயர்லெஸ் மூலம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு வானில் வலைப்பின்னல் அமைத்துக்கொள்ளும். இந்த பலூன்கள் சராசரியாக 100 நாட்கள் செயல்படக்கூடியவை. அதன் பிறகு தானாக இறங்கி வந்துவிடும். அதுவரை இயங்குவதற்கான ஆற்றலை உருவாக்கி கொள்ளும் சோலார் வசதியை பெற்றுள்ளன.

பூமியில் உள்ள செல்போன் கோபுரங்கள் மற்றும் செல்பான் பயனாளிகளை இணைக்கும் பாலமாக பலூன் வலைப்பின்னல் செயல்படுவதால் செல்போனில் பேசுவது மற்றும் இணையத்தில் உலாவுவது சாத்தியமாகும். பலூனில் வயர்லெஸ் வசதி இருக்கிறது. 4 ஜி சேவையை இதன் மூலம் பெறலாம் என்றாலும், உண்மையில் இந்த பலூன்கள் இணைய வசதியை அளிப்பதில்லை. இவை செல்போன் கோபுரங்களாக மட்டுமே செயல்படுகின்றன. தரைப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரங்கள் இந்த மிதக்கும் கோபுரங்களுடன் இணைக்கப்படுவதால் இடைவெளி இல்லாத இணைய இணைப்பு உண்டாகிறது. எனவே லூன் திட்டம் உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளுடன் இணைந்தே இந்த சேவையை வழங்க முடியும். கரடுமுரடான பகுதியில் செல்போன் கோபுரங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதியை அமைப்பதைவிட பலூன்களை செல்போன் கோபுரமாக்கி இணைய இணைப்பு வழங்குவது எளிதானதாக கருதப்படுகிறது.

இந்த நம்பிக்கையுடன் தான், கூகுளின் தாய் நிறுவனம் இணைய பலூன்களை உருவாக்கி வருகிறது. அண்மையில் இந்த திட்டம் தனி நிறுவனமாக அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக வர்த்தக நோக்கில் இந்த சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. இதனிடையே பேரிடர் பாதித்த பகுதிகளில் அவசர கால உதவியாக இணைய இணைப்பை வழங்க இந்த பலூன்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன் தென்னமரிக்க நாடான பெருவில் வெள்ள பாதிப்பு உண்டான போது, இணைய பலூன்கள் மூலம் தொலைத்தொடர்பு வசதி அளிக்கப்பட்டது. தற்போது பேரிடர் பாதித்த பியூர்ட்டோ ரிக்கோவில் இந்த பலூனள் வலம் வந்து மிகவும் அவசியமான இணைப்பு சேவையை அளிக்க உள்ளன.

உலகம் முழுவதும் இணைய வசதியில் ஏற்றத்தாழ்வு நிலவி வரும் சூழலில், தொலைதூர பிராந்தியங்களில் இணைய வசதியை அமைக்க லூன் பலூன்கள் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. சமூக வலைப்பின்னல் தளமான பேஸ்புக்கும், இதே போலவே ஆளில்லா விமானம் மூலம் தொலைதூர பகுதிகளில் இணைய வசதியை வழங்கும் சோதனை திட்டத்தில் கவனம் செலுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சைபர்சிம்மன்

 

 

எந்திரன்களிடம் எப்படி பேச வேண்டும்?

 

maxresdefaultஎந்திரன் படத்தில் சந்தானமும், கர்ணாசும் சிட்டி ரோபோவிடம் இடக்காகவும், ஆபாசமாகவும் பேசி விட்டு அதற்காக நாயகன் ரஜினியிடன் வாங்கி கட்டிக்கொள்வது போல ஒரு காட்சி வரும். வெறும் நகைச்சுவை என்பதை மீறி இந்தக்காட்சி எதிர்காலத்தில் நினைவில் கொள்ள வேண்டிய செய்தியை கொண்டிருக்கிறது தெரியுமா? எந்திரன்களிடம் கன்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் அந்த செய்தி. இல்லை எனில் விளைவுகள் விபரீதமாக இருக்கலாம். வேலையை இழக்கும் அபாயமும் ஏற்படலாம்!

உடனே எந்திரன் போன்ற சூப்பர் ரோபோ நடைமுறையில் இப்போதைக்கு சாத்தியமில்லையே என்று வாதாட  முற்பட வேண்டாம்.  இத்தகைய எந்திரன்கள் பழக்கத்திற்கு வர காலம் ஆகலாம் என்றாலும், நம்முடன் உரையாடல் நடத்தக்கூடிய, கேள்விகளுக்கு பதில் சொல்லகூடிய மென்பொருள் எந்திரன்கள் நிச்சயம் சர்வ சகஜமாக இருக்கும்.

இந்த போக்கு ஏற்கனவே துவங்கிவிட்டது. ஆப்பிளின் சிறியும், மைக்ரோசாப்டின் கார்ட்டனாவும், அமேசானின் அலெக்சாவும் இதற்கான உதாரணங்கள். அரட்டை இயந்திரங்கள் ( சாட் பாட்) என குறிப்பிடப்படும்  மென்பொருள்களில் இவை டிஜிட்டல் உதவியாளர்கள் எனும் பிரிவின் கீழ் வருகின்றன. போனுக்குள் வீற்றிருக்கும் உதவியாளர்கள். இந்த மென்பொருள்கள் அடிப்படையான செயற்கை அறிவை கொண்டிருப்பதோடு, எந்திர கற்றல் ஆற்றலையும் கொண்டுள்ளன. எனவே, இவை பயனாளின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர்களுடன் உரையாடும் ஆற்றல் பெற்றிருப்பதோடு, காலப்போக்கில் பயனாளிகளின் விருப்பு வெறுப்புகளை புரிந்து கொண்டு, அதற்கேற்ப  பரிந்துரகளை வழங்க கூடியவையாக இருக்கும். உதாரணத்திற்கு, தொடர்ந்து இளையராஜா பாடல்களை விரும்பிக்கேட்டால், இந்த மென்பொருள்கள் அதை புரிந்து கொண்டு, ஓய்வு நேரத்தில் ராஜாவின் பாடலை ஒலிக்கச்செய்யலாம்.

கூகுளும் கூட இந்த பிரிவில் ஒரு மென்பொருளை பெற்றிருக்கிறது. பேஸ்புக்கும் இந்த பிரிவில் விஷேச கவனம் செலுத்தி வருகிறது. அதோடு  வாடிக்கையாளர் சேவையில் இருந்து, காப்பீடு அல்லது முதலீடு பரிந்துரை போன்றவற்றை மென்பொருள்கள்வழங்கத்துவங்கியிருக்கின்றன. வங்கிகள், இகாமர்ஸ் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் இது போன்ற மென்பொருள் எந்திரன்களை பயன்படுத்த துவங்கியுள்ளன.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் கூட இத்தகைய எந்திரன்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக நிதிச்சேவை பிரிவில் பல வகையான அரட்டை மென்பொருள் எந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ரோபோ அட்வைசர் என குறிப்பிடப்படும் இவை, கேள்விகளுக்கு முதலீட்டாளர்கள் அளிக்கும் பதில்களின் அடிப்படையில் அவர்களுக்கு ஏற்ற முதலீட்டு வாய்ப்புகளை பரிந்துரைக்கின்றன. நிதிச்சேவைகளுக்கான செலவை குறைக்கவும், அவற்றை பரவலாக்கவும் இந்த வகை ’பாட்க’ள் கைகொடுக்கும் என்று கருத்தும் உற்சாகமாக முன்வைக்கப்படுகிறது.

இவ்வளவு ஏன் செய்தி சேகரிப்புக்கு கூட இத்தகைய மென்பொருள்களை உருவாக்கி களமிறக்கலாம். அலுவலக பணிகளுக்கும் இவை உருவாக்கப்படலாம். இன்னும் பலவிதங்களில் இவற்றை பயன்படுத்தலாம். நாமும் கூட இவற்றை பலவிதங்களில் பயன்படுத்தலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எனவே தான் நாம் இவற்றிடம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இவற்றிடம் வாய்த்துடுக்கு காட்டுவதோ அல்லது வசை பாடுவதோ வில்லங்கமாக அமையலாம். இப்படி தான் ஹார்வர்டு பிஸ்னஸ் ரிவ்யூ கட்டுரை ஒன்று எச்சரிக்கிறது.

எல்லாம் சரி மென்பொருள்களிடம் நாம் ஏன் வாய் கொடுக்கப்போகிறோம் என்று கேட்பதற்கில்லை. ஏனெனில் ஏற்கனவே பலர் இதை தான் செய்து கொண்டிருக்கின்றனர். டிஜிட்டல் உதவியாளர் மென்பொருள்கள் அளிக்கும் பதில் திருப்தி அளிக்கவில்லை அல்லது ஏமாற்றம் தரும் விதமாக இருந்தால், அதன் பயனாளிகள் கடுப்பாகி கோபத்தை வார்த்தைகளாக வெளிப்படுத்துவது அடிக்கடி நடக்கவே செய்கிறது. ஆப்பிளின் சிறி மென்பொருள் மீதோ, மைக்ரோட்சாப்டின் கார்ட்டனா மென்பொருள் மீதோ பயனாளிகள் கோபம் கொண்டதற்கான எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. மேலும் தெளிவு தேவை எனில் இது தொடர்பாக கூகுளில் தேடிப்பாருங்கள்.

பொதுவாக டிஜிட்டல் உதவியாளர் மென்பொருள்கள் புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் போதாமைகள் அதிகம். இன்றைய வானிலை எப்படி இருக்கும் என்றோ, நகரில் குறிப்பிட்ட திரையரங்கில் என்ன திரைப்படம் பார்க்கலாம் என்றோ பொதுவாக கேட்டால் இவை சரியாக பதில் சொல்லிவிடும். ஆனால் குறிப்பிட்ட கேள்விகளுக்கு இவை சொதப்பிவிடலாம். இது போன்ற நேரங்களில் பலருக்கு சிரிப்பு வரலாம். இன்னும் சிலருக்கு கோபம் வரலாம். அதனால் ஆபாசமாக திட்டவும் செய்யலாம்.

மென்பொருள் தானே திட்டினால் என்ன ஆகிவிடும் என்றும் கேட்கத்தோன்றலாம். இந்த மென்பொருள்கள் உணர்வில்லாதவையாக இருக்கலாம், ஆனால் பதில் பேசாமல் இருக்கக்கூடியவை அல்ல. மோசமான வார்த்தைகள் பேசப்படும் போது, கொஞ்சம் பார்த்துப்பேசுங்கள் என்று இவை பதிலுக்கு சொல்லக்கூடும். ’ஒரு போன் நம்மை பார்த்து வாயை மூடச்சொல்கிறதே’ என இது போன்ற ஒரு சம்பவத்தை உதாரணம் காட்டுகிறது ’மெட்ரோ’ பத்திரிகை கட்டுரை.

பெரும்பாலான நவீன அரட்டை மென்பொருள்கள் பயனாளிகள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு, அவர்கள் சொல்லும் வார்த்தைகளை புரிந்து கொள்ளும் தன்மையும் கொண்டிருக்கின்றன. அதாவது பயனாளிகள் நடவடிக்கையை பார்த்து அவையும் கற்றுக்கொண்டு தங்களை மேம்படுத்திக்கொள்கின்றன. ஆப்பிளின் சிறி மென்பொருள், ஆபாச வார்த்தைகள் இனங்கண்டு கொண்டு, கொஞ்சம் பார்த்து பேசுங்கள் என்று சொன்னது இப்படி தான்.

ஆக, நாம் விவாதிக்கும் விஷயத்திற்கு வந்துவிட்டோம். அரட்டை மென்பொருள்கள் பயனாளிகளுடனான உரையாடல் மூலம் கற்றுக்கொள்ளும் எந்திர கற்றல்( மிஷின் லேர்னிங்) ஆற்றலுடன் உருவாக்கப்பட்டிருப்பதால் அவை காலப்போக்கில் மேலும் மேலும் புத்திசாலி ஆகிவிடும் எனும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆக நாம் நல்லவிதமாக பேசினால் மென்பொருள்கள் அதற்கேற்ப கற்றுக்கொண்டு, அடுத்த முறை தொடர்புடைய கேள்விகள் வரும் போது பொருத்தமாக பதில் அளிக்கும். மாறாக அவற்றிடம் மோசமாக பேசினால் அவை தப்பும் தவறுமான விஷயங்கள் கற்றுக்கொள்ளும்.

மைரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்த ’டே’ எனும் செயற்கை அறிவு சார்ந்த மென்பொருள், மற்றவர்களுடன் பேசத்துவங்கியவுடன், நாசிசம் பற்றி பேசவும், ஹிட்லர் நல்லவர் என கூறவும் கற்றுக்கொண்டுவிட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இயந்திர கற்றலில் உள்ள சிக்கல்களை உணர்த்தியது. ஒரு சில விஷமத்தனமான பயனாளிகள் அதனிடம் விவகாரமான முறையில் உரையாடியதன் விளைவு இது.

இப்படி தான் பலரும், நடந்து கொள்வதாக டாக்டர்.ஷெரில் பிரானம் எனும் ஆய்வாளரும் கூறுகிறார். மென்பொருள்களுடனான மனிதர்கள் உரையாடல் பற்றி விரிவாக ஆய்வு நடத்தியிருக்கும் ஷெரில், 50 சதவீதம் வரையான இத்தகையை உரைடால்கள் அவதூறான வகையில் இருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆக, மனிதர்களாகிய நம்முடைய நயத்தக்க நாகரீகம் இவ்வளவு தான். பாட்களிடம் பேசும் போது நம்மில் பலர், எந்திரன் சந்தானம் போலவே நடந்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.

ஆனால், இது பாட்களுக்கும் நல்லதல்ல. நமக்கும் நல்லதல்ல.

பாட்களுக்கு ஏன் நல்லதல்ல என எளிதாக புரிந்து கொள்ளலாம். நாம் வசைபாடினால் அவை நல்ல விஷயங்களை எப்படி கற்றுக்கொள்ள முடியும். சரி, இதனால் பயனாளிகளுக்கு என்ன பிரச்சனை? என்று கேட்கலாம்.

இந்த பாட் வகை மென்பொருள்கள் உருவாக்கத்திலும், ஆய்விலும் அமேசான், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் செல்வத்தையும், உழைப்பையும் முதலீடு செய்துள்ளன. இவற்றின் மீது மிகுந்த நம்பிக்கையும் வைத்துள்ளன. ஆகவே அவை தங்கள் மென்பொருள் படைப்புகள் பயனாளிகளால் மோசமாக நடத்தப்படுவதை விரும்பாது என்பதோடு இவ்வாறு நிகழ்வதை தவிர்க்கவே முயற்சிக்கும். அது மட்டும் அல்ல, மோசமாக நடத்தப்படும் போது அதை உணர்ந்து கொண்டு, புகார் செய்யவும் இவை புரோகிராம் செய்யப்படலாம் என்கிறது ஹார்வர்டு பிஸ்னஸ் ரிவ்யூ கட்டுரை.

நிறுவனங்களில் பலவிதமான பணிகளுக்கு டிஜிட்டல் உதவியாளர்கள் பயன்படுத்தப்படும் போது, பலரும் பழக்க தோஷத்தில் அவற்றை வசை பாடலாம், வம்புக்கு இழுக்கலாம், மோசமான வார்த்தைகளை பேசலாம். ஆனால் நிறுவனங்கள் இவற்றை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்கிறது இந்தக்கட்டுரை. மோசமான உரையாடல்கள் தங்கள் மென்பொருள்களின் ஆற்றலை பாதிக்கும் என்பதால் நிறுவனங்கள் அவற்றிடம் தரக்குறைவாக நடந்து கொள்ளும் ஊழியர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விஷமத்தனம் கொண்ட ஊழியர்கள் பாட்களிடம் ஆபாசமாக பேசுவது தெரியவந்தால், மனிதவள அதிகாரியிடம் இருந்து அழைப்பு வந்து வேலையில் இருந்து நீக்கப்படலாம்.

எனவே தான் நாளைய அலுவலகங்களில் பாட்களிடம் மோசமாக நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ளப்படாத விஷயமாக இருக்கும் என்றும் இந்தக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாட்களிடம் எப்படி பேச வேண்டும் என நாம் கற்றுக்கொள்வதும் நல்லது தான்.

எச்.பி.ஆர் கட்டுரை: https://hbr.org/2016/10/why-you-shouldnt-swear-at-siri

மெட்ரோ செய்தி; http://metro.co.uk/2017/10/05/heres-what-happens-when-you-swear-at-or-insult-apples-siri-6942091/

 

நன்றி; யுவர்ஸ்டோரிக்காக எழுதியது