Category Archives: இன்டெர்நெட்

குடும்பத்தை இணைக்கும் நெட்

 

பிரச்சனைகளை எதிர்கொள்ள எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது என்பதை வைத்தே நவீன தொழில்நுட்பத்தின் பயனை கணக்கிட வேண்டும். அந்த வகையில் பார்த்தால் வியட்நாம் நாட்டை பொறுத்தவரை இன்டெர்நெட் பேரூதவியாக அமைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். காரணம் அந்நாட்டில் நவீன வாழ்க்கையின் நெருக்கடி காரணமாக குடும்ப உறவுகளை பேணிக் காப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஆபத்பாந்தவன் போல இன்டெர்நெட் அமைந்திருக்கிறது.

சதாசர்வகாலம் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்கும் நிலையில் இது போல குடும்ப உறுப்பினர்கள் அன்பை பரிமாறிக் கொள்ள நேரமும், வாய்ப்பும் குறைந்திருக்கும் கால கட்டத்தில் இன்டெர்நெட் குடும்ப பந்தத்தை வளர்த்துக் கொள்வதற்கான வழியாக அமைந்திருக்கிறது.

வியட்நாமை சேர்ந்த பல தம்பதிகள், தங்களது குடும்ப வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்ள இன்டெர்நெட், இமெயில், எஸ்.எம்.எஸ். போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கு அழகான உதாரணமாக குயன் ஹாது எனும் பெண்மணியின் கதையை சொல்லலாம்.

இவர் வியட்நாமின் தலைநகரில் உள்ள தபால் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்.
இவர் தினமும் 9 மணிக்கு வேலைக்கு செல்கிறார். வாரத்தில் பல நாட்கள் இரவு நேரத்தில் பணி புரிய வேண்டும். இவரது மகனுக்கோ காலையில் பள்ளி நேரம் துவங்குகிறது.

இவரது கணவர் 6.30 மணிக்கு மகனை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்று அப்படியே வேலைக்கு போய் விடுகிறார். அவர் திரும்பி வரும் நேரத்தில் மனைவி இரவு ஷிப்ட் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். இப்படியிருந்தால் குடும்பம் என்ன ஆவது?

ஆனால் நல்லவேளையாக இன்டெர்நெட் உதவியோடு இந்த தம்பதி தங்களது உறவை உயிர்ப்போடு வைத்திருக்கின்றனர். கணவன் காலையில் புறப்பட்டுச் சென்றதும், மகனை பள்ளியில் விட்டு விட்டதாக ஒரு எஸ்எம்எஸ்சை தட்டி விடுகிறார்.

அதன் பிறகு மனைவி தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எஸ்எம்எஸ் மூலம் கணவன் மற்றும் மகன் பற்றி விசாரித்து செய்தி அனுப்புகிறார். இதற்கான பதிலும் எஸ்எம்எஸ் மூலமே வந்து சேர்கிறது.

இந்த உரையாடலை சுவாரசியமாக்குவதற்காகவும் சுலபமாக தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காகவும் ஸ்மைலி என்று சொல்லப்படும் இன்டெர்நெட் அடையாள குறிகளை இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

உதாரணமாக முரண்டு பிடிக்கும் ஒரு முகத்தை கணவர் அனுப்பி வைத்தார் என்றால் மகன் சாப்பிட மறுப்பதாக அர்த்தம். அதே போல பலமாக தலையசைக்கும் படம் வந்தது என்றால் இப்போது விவாதத்துக்கு நேரமில்லை என்று அர்த்தம்.

இப்படியாக வேலைப்பளுவுக்கு இடையே அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டு பரஸ்பரம் தொடர்பில் இருக்கின்றனர். சில நேரங்களில் மனைவி வழக்கத்தை விட முன்னதாக வீட்டுக்கு வந்து விட்டால் கணவனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி மகனை பள்ளியிலிருந்து தான் அழைத்து வந்து விடுவதாக கூறுகிறார்.

இமெயில் மூலமும் இந்த செய்திகளை பரிமாறிக் கொள்கின்றனர். கணவன், மனைவி இருவருமே அலுவலகம் சென்றதும் செய்யும் முதல் வேலை இன்டெர்நெட் முன் அமர்ந்து இமெயிலை அனுப்புவதாகத்தான் இருக்கிறது.

மனைவிக்கு செய்தித்தாள்களை படிக்க நேரமில்லை என்பதால் கணவன் சுவாரசியமான செய்திகள் இருந்தால் அதையும் இமெயிலில் அனுப்பி வைக்கிறார். இதே போல மற்றொரு தம்பதியினர் தங்களது மகளுக்கு செல்போனை வாங்கிக் கொடுத்து எஸ்எம்எஸ் அனுப்பும் கலையை கற்றுத் தந்து வருகிறார்கள்.

குடும்பத்தோடு தொடர்பு கொள்ள இதை விட வேறு சிறந்த வழியில்லை என்று இவர்கள் கருதுகின்றனர். எஸ்எம்எஸ் செய்தி மூலம் நேரில் பார்ப்பது போல தகவல்களை தெரிந்து கொள்ள முடியாது என்று ஒரு கருத்து இருக்கிறது.

ஆனால் இந்த தம்பதியோ மகள் எஸ்எம்எஸ் அனுப்ப எடுத்துக் கொள்ளும் நேரத்தை வைத்தே அவள் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறாள் என்பதை கண்டுபிடித்து விட முடிவதாக கூறுகின்றனர்.

அந்த அளவுக்கு இவர்கள் இடையே தொழில்நுட்பம் பற்றிய புரிதல் இருக்கிறது. கம்யூனிச நாடான வியட்நாம் ஆரம்பத்தில் இன்டெர்நெட்டுக்கு கட்டுப்பாடு விதித்திருந்தது. ஆனால் பிறகு அதனை தளர்த்திக் கொண்டது.

இதன் விளைவாக சில ஆண்டுகளுக்கு முன்னர் இன்டெர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5 ஆயிரமாகவே இருந்தது. தற்போது இது 50 லட்சத்தை தொட்டு இருக்கிறது.
வியட்நாமில் உள்ளவர்கள் தங்களது வாழ்க்கையை நடத்த இன்டெர்நெட்டை பெருமளவு பயன்படுத்திக் கொள்வதே இதற்கு முக்கிய காரணம்.

பிரிண்டர் போராட்டம்

அமெரிக்கர்கள் கருத்து சுதந்திரத்தை எந்த அளவுக்கு முக்கிய மாக கருதுகின்றனர் என்பதற்கு பிரிண்டரின் பின்னே ஒளிந்து கொண்டிருக்கும் உளவாளியை எதிர்த்து அவர்கள் தொடங்கி யிருக்கும் போராட்டமே சான்று. பிரிண்டருக்குள் உளவாளி ஒளிந்து இருப்பதாக கூறினால் நம்ப முடியாமல் இருக்கும். ஆனால் உண்மை அதுதான். பெரும்பாலான லேசர் பிரிண்டர்கள் உளவாளி களுடனே வருகிறது. அதாவது உங்கள் பிரிண்டர் மூலம் உங்களை அரசு உளவு பார்க்க முடியும் என்பதே விஷயம்.

.
இன்னமும் நம்ப முடியாமல் இருக்கிறதே என்றால் பிரிண்டரில் அச்சாகும் காகிதத்தின் பின்னே பதிவாகும் கண்ணுக்கு தெரியாத மஞ்சள் புள்ளிகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அநேக லேசர் பிரிண்டர்கள் அச்சிடும் காகிதத்தில் நமக்கு தேவையான தகவல்களை அச்சிட்டு தருவதோடு, அதன் பின்பக்கத்தில் மஞ்சள் புள்ளிகளையும் அச்சிட்டு வைக்கின்றனர். 

இந்த மஞ்சள் புள்ளிகளை சாதாரணமாக பார்த்தால் தெரியாது. ஆனால் நீலநிற விளக்கொளியிலோ அல்லது நுண்நோக்கி மூலம் பார்த்தாலோ பளிச்சென்று தெரியும்.
அப்போதும் கூட இந்த மஞ்சள் புள்ளிகளுக்கு என்ன அர்த்தம் என்பது விளங்காது. ஏதோ அலங்காரம் அல்லது தற்செயலாக பதிவான புள்ளிகள் என்று நினைக்க தோன்றும்.
உண்மை அதுவல்ல. அந்த புள்ளிகள் தெளிவான ஒரு விஷயத்தை உணர்த்துகின்றன. அவை குறிப்பிட்ட அந்த காகிதம் எந்த பிரிண்டரில் அச்சிடப்பட்டது என்பதற்கான சங்கேத குறிப்புகளை உள்ளடக்கி இருக்கிறது. அதன் மூலம் எந்த பிரிண்டரிலிருந்து அது அச்சிடப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

வேறுவிதமாக கூறுவதாயின் அச்சிடப்பட்ட எந்த காகிதத்தையும் அதன் பின்னே உள்ள மஞ்சள் புள்ளிகளின் மூலம் அதனை அச்சிட்டது யார் என்பதை கண்டுபிடித்து விடலாம்.
பொதுவாக அரசு அமைப்புகள், இந்த வசதியை தேவைப்படும் காலத்தில் பயன்படுத்திக் கொள்கின்றன. லேசர் பிரிண்டர்களின் நேர்த்தியான தன்மையை சாதகமாக்கிக் கொண்டு போலி ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க வாய்ப்பு இருப்பதால் அதனை கண்டுபிடிக்க ஒரு வழி தேவை என்பதால் அமெரிக்க அரசாங்கம் தனது உளவு அமைப்பின் மூலம் இத்தகைய வழியை ஏற்படுத்தி தருமாறு பிரிண்டர் தயாரிப்பு நிறுவனங் களிடம் கேட்டுக் கொண்டது.
அதன் பலனாகவே பெரும்பாலான பிரிண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மஞ்சள் புள்ளிகளை அச்சடிக்கும் வசதியை தங்கள் பிரிண்டர்களில் பொருத்தி விடுகின்றனர்.

இதன் பின்னே உள்ள நோக்கம் பொதுநலன் கருதியதுதான் என்றாலும் பல அமெரிக்கர்கள் இதனை ஒரு பிரச்சனையாக கருதுகின்றனர். அரசாங்கத்தால் ஒரு காகிதத்தை வைத்துக் கொண்டே அதனை அச்சிடுபவரை கண்டுபிடித்து விடக் கூடிய வசதி தங்கள் அந்தரங்கத்தின் மீதான தாக்குதல் என்று கருதுகின்றனர்.

அதோடு இந்த விஷயத்தை வெளிப்படையாக குறிப்பிடாமல் நிறுவனங்கள் ரகசியமாக வைத்திருப்பதும் மாபெரும் தவறு என்று கருதுகின்றனர். மேலும் யாராவது ஒருவர் இந்த மஞ்சள் புள்ளிகள் விஷயத்தை கண்டுபிடித்து இது தொடர்பாக தங்களது பிரிண்டர் தயாரிப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் செய்தால் உடனே உளவுத் துறை அமைப்பு அவர்களை தேடிக் கொண்டு வந்து விசாரணை நடத்த தொடங்கி விடுகிறது.
மஞ்சள் புள்ளிகள் பற்றி புகார் செய்பவர், தவறான நோக்கம் கொண்டவராக இருக்க வேண்டும் எனும் கருத்தே இதற்கு காரணம். இதனையும் தனிநபர் சுதந்திரத்தில் குறுக்கிடுவதாக அமெரிக்கர்கள் கருதுகின்றனர்.

இதற்கு எதிராக தங்கள் மனஉணர்வை வெளிப்படுத்து வதற்காக அமெரிக்காவின் புகழ் பெற்ற எம்ஐடி பல்கலையை சேர்ந்த மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து சீயிங் எல்லோ பிராஜக்ட் எனும் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். தங்களது பிரிண்டரில் அச்சாகும் காகிதத்தில் மஞ்சள் புள்ளிகள் தென்பட்டால் அது பற்றி உடனடியாக பிரிண்டர் நிறுவனத்திற்கு புகார் செய்யுமாறு இதன் மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இப்படி நூற்றுக்கணக்கானவர்கள் புகார் செய்யும் போது உளவுத் துறை யாரிடம் என்று விசாரணை நடத்தும் பார்க்கலாம் என்பதே இந்த பிரச்சாரத்தின் நோக்கம். இதற்காக தனியே இணைய தளத்தை அமைத்து இந்த பிரச்சனை யின் பின்னணியை விளக்கி
மஞ்சள்  புள்ளிகள் பற்றி புகார் செய்யுமாறு வேண்டுகோள் வைத்துள்ளனர். இதுவரை நூற்றுக்கணக்கானோர் இதனை படித்து விட்டு மஞ்சள் புள்ளிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர்.

 
| |

கண்டேன் காதலியை

அது ஒரு நம்ப முடியாத காதல் கதை. ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு வாலிபர், அந்த பெட்டியின் மூலையில் அமர்ந்திருக்கும் அழகான இளம்பெண்ணை பார்க்கிறார். பார்த்தவுடன் மனதை பறிகொடுத்து விடுகிறார். அந்த பெண் யார்?, அவரது பெயர் என்ன?, எங்கே இருக்கிறார்? என்றெல்லாம் கேட்டு தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே அவள் அவரது மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகளை பறக்கச் செய்துவிட்டு, ரெயிலிலிருந்து இறங்கி கூட்டத்தோடு, கூட்டமாக கலந்து விடுகிறார்.
.
கண்டதும் காதல் கொண்டு விட்ட அந்த வாலிபர், தனது மனதை கொள்ளை கொண்ட அந்த பெண்ணை தேடத் தொடங்குகிறார்… இது, நம்ப முடியாத கதை அல்லவே, தமிழ் சினிமாவில் பார்த்து சலித்துப் போன கதை தானே என்று அலுத்துக் கொள்வ தற்கு முன் சில தகவல்கள். 

இது நிஜத்தில் நடந்த கதை. அந்த வாலிபரின் பெயர் பாட்ரிக் மொபர்க். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக் லைன் பகுதியை சேர்ந்தவர். 21 வயதான பாட்ரிக் அண்மையில் நியூயார்க் ரெயிலில் சென்றபோது தான் இந்த பரவசமான அனுபவத்துக்கு ஆளானார்.

அவர் மனதை பறிகொடுத்த இளம்பெண் அந்த பயணத்தின் போது தனது டைரியில் குறிப்புக்களை எழுதியிருந்தார். அப்படியே அவரது சித்திரத்தை பாட்ரிக்கின் மனதில் எழுதி வைத்து விட்டு போய்விட்டார்.
ரெயிலிலிருந்து இறங்கிய பிறகு தனது மனதை கவர்ந்த காதலியை தேடும் படலத்தில் பாட்ரிக் ஈடு பட்டார்.  இதுபோன்ற தருணத் தில் பாட்ரிக் போன்ற வாலிபர்கள் செய்யக்கூடியது என்ன? பாட்ரிக், வேறெதையும்   செய்யாமல் தனது காதலையும், நியூயார்க் வாசி களையும் நம்ப தீர்மானித்தார்.

அதாவது, தனது காதலியை தேடி கண்டுபிடித்த நியூயார்க் வாசிகளின் உதவியைக்கேட்டு nygirlofmydreams.com’ என்னும் இணையதளத்தை அமைத்தார்.
அந்த தளத்தில் தான் பார்த்த இளம்பெண்ணின் தோற்றத்தை கார்ட்டூன் சித்திரம்போல வரைந்து வைத்து அதன் அருகே தன்னுடைய தோற்றத்தையும் வரைந்தார்.

இளம்பெண் அன்று அணிந்தி ருந்த உடையின் நிறத்தையும் குறிப்பிட்டிருந்த அவர், தன்னுடைய நிலையை சுருக்க மாக ஆனால் அழுத்தமாக குறிப் பிட்டு அதன் கீழே செல்போன் எண்ணையும் குறிப்பிட்டிருந் தார். இந்த பெண்ணை யாராவது பார்த்தால் எனக்கு சொல்லுங்கள் என்று அவர் காவியமயமான வேண்டுகோளையும் வைத்து இருந்தார்.

இதன்பிறகு நம்பமுடியாத வேகத்தில் எல்லாம் நடந்தது. இந்த தளம் அரங்கேறிய சில மணி நேரங்களில் எல்லாம் பேட்ரிக் கின் செல்போன் இடை விடாமல் ஒலிக்கத் தொடங்கியது.
அவரது இமெயில் முகவரி பெட்டியில் மெயில்களாக வந்து குவிந்தன. ஒருசிலர் அவருடைய காதல் தேடலில் உதவுவதாக உற்சாகம் அளித்தனர் என்றால், இன்னும் சிலரோ அவரது காதலி கிடைத்து விடுவாள் என நம்பிக்கை அளித்தனர்.

அவரது செல்போனில் தொடர்பு கொண்டசில இளம்பெண்கள் தான் அந்த பெண் அல்ல. ஆனால் அவளுக்கு பதிலாக தன்னைக் காதலிக்கலாமே என்று கேட்டுக் கொண்டனர்.
இத்தகைய கோரிக்கைகளால் திக்குமுக்காடிப் போயிருந்த பேட்ரிக்கை பெண்மணி ஒருவர் தொடர்புகொண்டு குறிப்பிட்ட அந்த பெண்ணை தனக்கு தெரியும் என்று கூறி அவரது புகைப்படத்தையும் அனுப்பி வைத்திருந்தார். என்ன ஆச்சர்யம் அந்த பெண்தான் ரெயிலில் பாட்ரிக்கின் மனதை கொள்ளை கொண்ட இளம்பெண்.

இதனையடுத்து பாட்ரிக் அவரது செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு முதல் சந்திப்புக்கு நாள் குறித்திருக்கிறார். இது நம்ப முடியாத ஆச்சர்யம். ஒரே வார காலத்தில் பெயர் தெரியாத தன்னுடைய காதலியை கண்டுபிடிக்க முடியும் என்று நினைத்துக்கூட பார்க்க முடிய வில்லை என்று மகிழ்ச்சியோடு பாட்ரிக் கூறுகிறார்.

இதனிடையே தன்னுடைய இணையதளத்தில் இந்த தகவலை குறிப்பிட்டு உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி, ஆனால் இனிமேல் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கி றார். எல்லோர் நலன் கருதியும் இந்த காதல் தேடல் படலத்தை இத்தோடு முடித்துக்கொள்கிறேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தனது காதலியை சந்தித்து பேசிய பிறகு என்ன ஆகிறது என்பதையாவது அவர் இணையதளத்தில் தெரிவிப்பாரா என்று நியூயார்க் வாசிகள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.