Category Archives: இமெயில்

விநாடிக்கு 24 லட்சம் இமெயில்!

email
இமெயில் பழங்காலத்து சங்கதி என்னும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? எனில் மேக்ஸ் யூஸ் ஆப் தொழில்நுட்ப செய்தி தளம் பட்டியலிட்டிருக்கும் இமெயில் தொடர்பான புள்ளி விவரங்கள் உங்களுக்கு இரட்டிப்பு ஆச்சர்ய்த்தை அளிக்க கூடும். ;http://www.makeuseof.com/tag/5-staggering-email-stats-that-are-hard-to-believe/
முதல் புள்ளிவிவரத்தை பார்ப்போமா? தினந்தோறும் பரிமாறிக்கொள்ளப்படும் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 20,500 கோடி மெயில்கள் ஆகும். அதாவது விநாடிக்கு 24 லட்சம் இமெயில்கள் பறந்து கொண்டிருக்கின்றன.நம்ப முடியாமல் இருக்கிறதா? 2015ம் ஆண்டு கணக்கு இது. இப்போது இன்னும் கூட அதிகமாகி இருக்கலாம்.ஆனால் இன்று, இந்த மெயில்களில் பெரும்பாலானவை(90சதவீதம்)ஸ்பேம் என்படும் குப்பை மெயில்கள் மற்றும் வைரஸ் வாகனமாக மாறிவிடும் வில்லங்க மெயில்களாகும்.

ஆனாலும் கூட தினமும் 250 கோடி பயனாளிகள் உண்மையான மெயில்களை அனுப்பிக்கொண்டிருக்கின்றனர்.
இன்னொரு கணக்கு படி இமெயில் பயனாளிகளில் 91 சதவீதம் பேர் தினம் ஒரு முறையேனும் தங்கள் முகவரி பெட்டியை பார்க்கும் வழக்கம் கொண்டுள்ளனர்.

இமெயில் சேவைகளில் பிரபலமாக இருக்கும் ஜிமெயில் 100 கோடி தீவிர பயனாளிகளை கொண்டிருக்கிறது. ஆக இமெயிலின் பளபளப்பு வேண்டுமானால் குறைந்திருக்கலாம்,அதன் பயன்பாடு அல்ல என்பதை இந்த புள்ளிவிவரங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் இல்லையா?

——
590ccd51-c884-428a-bcc0-2eadaeb0a378
தளம் புதிது: கோகோ தோட்டம்
புதிதாக தொழில் துவங்கலாம் என்ற எண்ணம் இருக்கிறதா? அப்படி என்றால் ஏதாவது ஒரு கட்டத்தில் உங்கள் வர்த்தகத்திற்கான லோகோவை உருவாக்கியாக வேண்டும். லோகோ உருவாக்கத்தில் உங்களுக்கு உதவி தேவை என்றால் லோலோகார்டன் தளம் அதற்காக என்றே இருக்கிறது. இந்த தளத்தில் பயனாளிகள் தங்களுக்கான இலவச லோகோவை எளிதாக உருவாக்கி கொள்ளலாம். லோகோ உருவாக்கத்திற்கான சாதங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்னதாக இந்த தளத்தில் உள்ள மாதிரி லோகோக்களை பார்த்து உங்களுக்கான லோகோ எப்படி இருக்கலாம் என்பது தொடர்பான ஊக்கத்தையும் பெறலாம்.தனித்தனி தலைப்புகளில் பலவிதமான துறைகளைச்சேர்ந்த லோகோக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தொழில்முனைவோருக்கு உதவுவதற்காக என்றே இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையதள முகவரி; http://www.logogarden.com

———–

செயலி புதிது; காற்றின் தரம் அறிய

helpchat_airqualityindex_main
ஹெல்ப்சேட் செயலியை நீங்கள் அறிந்திருக்கலாம். ஸ்மார்ட்போன் பயனாளிகளின் டிஜிட்டல் உதவியாளராக செயல்பட்டு பயனுள்ள தகவல்களை அளிக்க கூடிய இந்த செயலி தற்போது இந்திய நகரங்களில் காற்றின் தரத்தை அறிந்து கொள்ள வழி செய்யும் தகவல்களையு அளிக்கத்துவங்கியிருக்கிறது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல்களை பிரதானமாக வைத்துக்கொண்டு இந்த சேவையை ஹெல்ப்சேட் அளிக்கிறது. காற்றின் தரம் பற்றிய விவரம் ஆறு பிரிவுகளில் பச்சை முதல் சிவப்பு வரையான வண்ணங்களில் உணர்த்தப்படுகிறது. காற்று மாசு அடிபடையில் எந்த எந்த இடங்களை தவிர்க்கலாம் என்று முடிவு செய்ய இது உதவலாம்.திரைப்படங்கள்,டீல்கள்,வானிலை ஆகிய விவரங்களுடன் காற்று மாசு பற்றிய தகவலை முகப்புத்திரையிலேயே அளிக்கிறது.
சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு:https://www.helpchat.in/

=======
prehistoric-68074_640வீடியோ புதிது; டைனோசர் நிறம் என்ன?
ஒரு காலத்தில் பூமியில் இருந்து மறைந்த பிரம்மாண்ட விலங்கினமான டைனோசர்கள் ஆய்வில் அறிந்து கொள்ள சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன.டைனோசர்களின் படிமங்களை கொண்டு அவை எப்படி இருந்திருக்கும் என விஞ்ஞானிகள் பல தகவல்களை கண்டறிகின்றனர். ஆனால் டைனோசர்கள் என்ன நிறத்தில் இருந்திருக்கும்? அதை எப்படி அறிவது? இந்த கேள்விக்கு விஞ்ஞானிகள் எப்படி விடை அறிகின்றனர் என்பதி டெட் அமைப்பின் புதிய வீடியோ விளக்குகிறது. படிம ஆய்வில் துவங்கி ஒளியில் வரை பல விஷயங்களை இதில் ஆய்வாளரான லென் பிலாக் விளக்குகிறார். டைனோசர்கள் பற்றி மட்டும் அல்ல இயற்பியலின் அடிப்படைகளையும் சுவாரஸ்யமாக தெரிந்து கொள்ளலாம்.

வீடியோவை காண; http://ed.ted.com/lessons/how-do-we-know-what-color-dinosaurs-were-len-bloch#review

——–

index

உங்கள் இ-மெயிலில் பணிவு இருக்கிறதா?

இ-மெயிலை எப்படி பயன்படுத்துவது எப்படி? என பாடம் நடத்துவது எல்லாம் இனியும் தேவையில்லாத விஷயம் என்று தான் நம்மில் பலர் நினைக்கலாம்.ஆனால் இ-மெயிலை சரியாக பயன்படுத்துவது எப்படி என்பது என்பது தொடர்பாக எல்லோரும் கற்றுக்கொள்வதற்கான விஷயங்கள் இருக்கவே செய்கின்றன.சரியாக எனும் போது மறுமுனையில் இருப்பவர் அதிருப்தியோ,ஆவேசமோ அடையாத வகையில் வாசகங்களை மெயிலில் இடம்பெறச்செய்வது!

ஏனெனில் மெயிலில் நாம் பயன்படுத்திம் தொனி அதை வாசிப்பவர் மனதில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.அதிலும் போகிற போக்கில் அதிகம் யோசிக்காமல் அனுப்பி வைக்கப்படும் மெயில்கள் வர்த்தக முறிவுகளை கூட உண்டாக்கலாம்.

இதற்கு முக்கிய காரணம், கடிதம் எழுதும் போது அதற்கென ஒரு வடிவத்தை,அலுவல் மொழியை பயன்படுத்த பழகியிருப்பது போல அதன் நவீன கால வடிவமான ஈ-மெயிலுக்கு என ஒரு அமைப்புக்கு நாம் பழகியிருக்கவில்லை என்பது தான்.

அலுவலகத்தில் உடன் பார்க்கும் நண்பருக்கு மெயில் அனுப்பும் போது, கோப்பு தேவை அனுப்பவும் என ஒற்றை வரியை டைப் செய்வதற்கும், தயவு செய்து,இந்த கோப்பை உடனே அனுப்பி வைக்கவும் என கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

இப்படி இ-மெயில் அனுப்பும் போது அதில் இடம்பெறும் வாசகங்களில் அலட்சியம்,ஆணவம் போன்ற தொனி கேட்பதை தவிர்கக்ச்செய்யும் சேவையை பாக்ஸ்டைப் அறிமுகம் செய்துள்ளது.இ-மெயில் திருத்தச்சேவையான இதில் நாம் உத்தேசித்துள்ள வாசகங்களை டைப் செய்தால் அவற்றை சரி பார்த்து பணிவம்சம் கொண்ட வாசகங்களாக மாற்றித்தருகிறது.

மெயிலில் உள்ள வார்த்தைகளில் எவை பணிவற்றவை என சுட்டிக்காட்டி அவற்றை எப்படி மாற்றலாம் எனும் ஆலோசனை சொல்கிறது. நண்பர்களுக்கு அனுப்பும் மெயில்களை கூட விட்டுவிடலாம் ஆனால் வர்த்தக நோக்கிலான மற்றும் அலுவல் நோக்கிலான மெயில்களில் இந்த கவனம் மிகவும் அவசியம்.இந்த சரி பார்த்தல் சேவையை ஜிமெயிலுடன் இணைந்து பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது.

இதன் பரிந்துரைகள் 100 சதவீதம் துல்லியமானவை என்று சொல்ல முடியாது என்றாலும் இ-மெயில் நாகரீகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சேவை.ஆங்கில மொழியில் உள்ள வாசகங்களை மட்டுமே இந்த சேவை திருத்தி தருகிறது என்றாலும் கூட இதன் பின்னே இருக்கும் அடிப்படை அம்சங்கள் எந்த மொழியில் இ-மெயில் அனுப்பும் போதும் கவனிக்க வேண்டியவை தான்.

இணைய முகவரி: https://labs.foxtype.com/politeness

—–

gmail

மெயிலை திரும்ப பெறும் வசதி ஜிமெயிலில் அறிமுகம்

எப்போதாவது அனுப்பிய மெயிலை திரும்ப பெற வேண்டும் என்று நினைத்து அதற்கான வசதியை தேடியிருக்கிறீர்களா? இனி அந்த கவலையே இல்லை. இமெயிலை அனுப்பிய பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை திரும்ப பெறும் வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்துள்ளது.

இமெயிலை பயன்படுத்துவது எளிதாக இருக்கிறது. இமெயிலில் பல அணுகூலங்கள் இருந்தாலும் சில நேரங்களில் மெயிலை அனுப்பிய பின் அதை ரத்து செய்ய வேண்டும் என நினைக்கும் நிலை வரலாம். அவசரத்தில் அல்லது உணர்வெழுச்சியில் ஒரு மெயிலை அனுப்பி விட்டு பின்னர் அவ்வாறு செய்திருக்க வேண்டாம் என நினைப்பது, அல்லது தகவல் பிழை மற்றும் விடுபட்ட தகவல் என பல காரணங்களுக்காகவும் இவ்வாறு நினைக்கலாம்.
இது போன்ற நேரங்களில் கைகொடுப்பதற்காக என்று ஜிமெயிலில் இப்போது அன் செண்ட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் வசதி!

கூகுள் ஏற்கனவே ஜிமெயில் லேப்ஸ் மூலம் சோதனை முறையில் இந்த வசதியை அளித்து வருகிறது. அதன் புதிய மெயில் சேவை செயலியான இன்பாக்சிலும் இந்த வசதி இருக்கிறது. இப்போது ஜிமெயில் பயனாளிகளுக்கு இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜிமெயிலை பயன்படுத்தும் போது மெயிலை அனுப்பிய பிறகு ,அன் செண்ட் வசதி கொண்ட ஒரு பெட்டி எட்டிப்பார்க்கும். மெயிலில் ஏதேனும் தவறு இருப்பதாக நினைத்தால் அல்லது அதை அனுப்ப வேண்டாம் என நினைத்தால் உடனே அந்த பட்டனை கிளிக் செய்தால் , மெயில் சுவற்றில் அடித்த பந்து போல அனுப்ப படாமல் திரும்பி வந்துவிடும்.

அதன் பிறகு அந்த மெயிலில் திருத்தம் செய்யலாம் அல்லது டெலிட் செய்துவிடலாம்.
இந்த வசதியை பயன்படுத்த ஜிமெயிலில் செட்டிங் பகுதிக்கு சென்று அன்செண்டில் 5 முதல் 30 விநாடிகள் வரையான அவகாசத்தில் அமைத்துக்கொள்ளலாம். அதாவது 30 விநாடிகள் வரை அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் அவகாசம் இருக்கும். ஆக, இனி தவறான முகவரிக்கு இமெயிலை அனுப்பி வருந்தும் நிலை இனி இருக்காது.
Criptext-ActivityPanel_1434388452232
கிரிப்டெக்ஸ்ட் சேவை
இதே போல மெயிலை திரும்ப பெறும் வசதியை கிர்ப்டெக்ஸ்ட் எனும் புதிய மெயில் சேவையும் அளிக்கிறது. ஜிமெயிலை விட ஒரு படி மேலே சென்று படிக்கப்பட்ட பிறகும் கூட அது மெயிலை திரும்ப பெற வழி செய்கிறது.
இன்பாக்சில் வந்த மெயிலை படிப்பவர் டெலிட் செய்வது போல அனுப்பியவர் டெலிட் செய்ய இது வழி செய்கிறது. ஆக நாம் அனுப்பிய மெயிலை நாம் கட்டுப்படுத்த முடியும். தகவலை பரிமாறிக்கொண்ட பின் அந்த தகவல் ஆவணமாக இன்னொருவர் கம்ப்யூட்டரில் இருப்பதை இது தவிர்க்கிறது. ஒரு மெயில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் தானாக மறைந்துவிடச்செய்யும் வசதியும் இது அளிக்கிறது.

ரகசிய மற்றும் மிகவும் நம்பகமான தகவல் கொண்ட மெயில்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.பின்னாளில் வரக்கூடிய வில்லங்கத்தையும் தவிர்க்க உதவலாம். ஆனால் மெயில் பெறுபவர் இதை எப்படி எடுத்துக்கொள்வார் என தெரியாது.

அதே போல அனுப்பிய மெயில் படிக்கப்ப்பட்டு விட்டதா என்பதையும் இதன் மூலம் கண்காணிக்கலாம். மெயிலை என்கிர்ப்ட் செய்தும் அனுப்பலாம்.
இமெயில் பரிமாற்றம் ரகசியமானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த சேவை ஏற்றதாக இருக்கும்.

ஜிமெயில் அறிவிப்பு: http://googleappsupdates.blogspot.co.uk/2015/06/undo-send-for-gmail-on-web.html

கிர்ப்டெக்ஸ்ட் சேவைக்கு: http://www.criptext.com/email/

———-


விகடன்.காமில் எழுதியது

email-etiquette-mistakes

இமெயில் நாகரீகம் உங்களுக்குத்தெரியுமா?

இமெயில் நாகரீகம் (Email Etiquette ) பற்றி உங்களுக்குத்தெரியுமா? இமெயில் அனுப்பும் போது பின்பற்ற வேண்டிய பொதுவான நெறிமுறைகளை தான் இப்படி குறிப்பிடுகின்றனர்.இமெயில் அறிமுகமாகி பரவலாக புழக்கத்திற்கு வந்த காலத்தில் இந்த நெறிமுறைகள் பற்றி பேசுவதும் நினைவூட்டுவதும் பிரபலமாக இருந்தது. ஆனால் இமெயில் பயன்பாடு இயல்பான பிறகு இந்த நெறிமுறைகள் பற்றி பெரிதாக பேசப்படுவதில்லை.

அதற்காக இமெயில் நெறிமுறைகள் தேவையில்லை என்றோ அல்லது எல்லோரும் இந்த நெறிமுறைகள் கடைபிடிக்கத்துவங்கிவிட்டனர் என்றோ பொருள் இல்லை. இன்றளவும் கூட இமெயில் நெறிமுறைகளை மீறும் வகையில் தான் பலரும் மெயில் அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். ஏன் நீங்களும் கூட இந்த தவற்றை செய்து கொண்டிருக்கலாம்.

அது மட்டும் அல்ல, சரியான முறையில் அமையாத இமெயில்கள் உங்களுக்கு பாதிப்பையும் உண்டாக்கலாம். எனவே இமெயில் நெறிமுறைகளை அறிந்திருப்பதும் அல்லது; அவற்றை மனதில் கொண்டு செயல்படுவது இன்னும் நல்லது.

சரி, இமெயில் நெறிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? இதற்காக பல இணையதளங்கள் இருக்கின்றன என்றாலும் இதன் முக்கிய அம்சங்களை அவுட்பாக்ஸ் டாக்குமண்ட்ஸ் இணைதளம அழகான வரைபட சித்திரமாக வெளியிட்டுள்ளது. பார்த்தவுடன் பளிச்சென புரியும் அந்த நெறிமுறைகள் வருமாறு;

தலைப்பு முக்கியம்;
மெயில் அனுப்பும் போது அதன் உள்ளடக்கத்தை குறிக்கும் தலைப்பு அதற்கான கட்டத்தில் இருக்க வேண்டும். இதன் மூலம் மெயிலின் உள்ள்டக்கத்தை தெளிவுபடுத்துவதோடு அதை உடனடியாக படிக்க வேண்டும் என்பதையும் உணர்த்தலாம். அலுவல் மெயில் என்றால் அதற்குறிய தலைப்பு தேவை. எப்போது வேண்டுமானாலும் படிக்க கூடிய மெயில் என்றால் அதையும் தலைப்பு மூலம் உணர்த்துங்கள். இல்லை என்றால் உங்களிடம் இருந்து முக்கிய மெயில் வந்தால் கூட அலட்சியப்படுத்த தோன்றலாம்.

மரியாதை அவசியம்
மெயிலை எப்படி துவங்குகிறீர்கள் என்பது முகவும் முக்கியம். நண்பர்கள் என்றால் வெறும் பெயருடன் கூட துவங்கலாம். ஆனால் அலுவல் நோக்கிலான தொடர்பு என்றால் மரியாதையுடன் துவங்க வேண்டும். டியர் என்றோ ஹலோ என்றோ துவங்கலாம்.

எழுத்துப்பிழை
எழுத்து பிழை மற்றும் இலக்கணப்பிழை கொண்ட வாசகங்கள் இடம்பெற்றிருக்கும் மெயில் அனுப்புவது பலரும் செய்யக்கூடிய தவறு தான். நண்பர்கள் என்றால் பொறுத்துக்கொள்வார்கள். ஆனால் வேலைக்கு விணப்பிக்கும் போது இத்தகைய தவறுகள் உங்களைப்பற்றிய மோசமான சித்திரத்தை அளிக்கும். எனவே டைப் செய்த பிறகு தகவல் பிழைகளை சரி பார்ப்பது போலவே எழுத்து பிழைகளையும் சரி பார்த்து திருத்த வேண்டும்.

கடைசியில் முகவரி
இமெயிலை கம்போஸ் செய்யத்துவங்கும் போது முதலிலேயே பெறுபவரின் மெயில் முகவரியை டைப் செய்வது பலரது பழக்கம். ஆனால் முழு மெயிலையும் அடித்துவிட்டு அதன் பிறகே கடைசியாக பெறுபவர் மெயில் முகவரியை அடிக்க வேண்டும். ஏனெனில் சில நேரங்களில் பாதி மெயில் அடித்துக்கொண்டிருக்கும் போது தவறுதலாக செண்ட் பட்டனை அனுப்பி அரைகுறை வடிவிலான மெயில் அனுப்ப படுவதை இதன் மூலம் தவிர்க்கலாம். அதோடு முழுவதும் சரி பார்த்த பிறகே மெயிலை அனுப்ப வேண்டும் என்பதால் முகவரியை கடைசியில் வைத்துக்கொள்வது நல்லது.

மறுமெயில் வேண்டாம்
இமெயில் அனுப்பிய பிறகு அதை படித்துவிட்டனரா? என்று அறியும் ஆர்வம் ஏற்படுவதில் தப்பில்லை. ஆனால் அதற்காக உடனே இன்னொரு மெயிலை அனுப்பக்கூடாது. ஒன்று பொறுமை காக்க வேண்டும். மிகவும் அவசரம் அல்லது முக்கியம் என்றால் போன் அல்லது குறுஞ்செய்தியில் நினைவூட்டலாம்.
அதே போல மெயிலுக்கான தலைப்பில் அவசரம் என்றோ மிகவும் முக்கியம் என்றோ எல்லாம் குறிப்பிட்டு கலவரத்தை ஏற்படுத்த வேண்டாம். அந்த பொருளை தலைப்பு மூலம் உணர்த்தினால் போதுமானது.

எல்லோருக்குமா?
ரிப்ளை ஆல் அம்சம் வசதியானது தான். ஆனால் எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் பதில் அளிக்கும் வசதியை பயன்படுத்தினால் அபத்தமாக முடியும். இந்த வசதியை பொருத்தமான நேரங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இமெயில் நாகரீகம் பற்றிய இன்போகிராபிக்; http://www.outboxdocuments.co.uk/email-etiquette-checklist/
—-

சொல்ல முடியாததை சொல்ல ஒரு இமெயில் சேவை

email-798x310சொல்லத்தான் நினைக்கிறேன் என நினைக்கும் விஷயங்கள் எல்லோருக்குமே உண்டு . ஆனால் தயக்கம் கருதியோ , விளைவுகளுக்கு பயந்தோ சொல்லாமல் இருந்து விடுகிறோம். இவற்றை சொல்லியிருந்தால் நாம் எதிர்பார்க்காத மாற்றங்கள் கூட நிகழ்ந்திருக்கலாம். ஆனாலும் கூட பலவற்றை முகத்திற்கு நேராக சொல்லத்தயங்கி சொல்லாமலே இருந்து விடுகிறோம்! இப்படி சொல்லாமலே விடப்படும் விஷயங்களுக்கு எல்லாம் வடிகாலாக ஒரு இமெயில் சேவை அறிமுகமாகி இருக்கிறது. லீக் எனும் அந்த இமெயில் சேவை மூலம் நாம் யார் என்பதை வெளிப்படுத்திக்கொள்ளலாமலேயே நாம் சொல்ல நினைக்கும் சங்கடமான விஷயங்களை மெயிலாக அனுப்பி வைக்கலாம்.

இந்த விஷயத்தில் மற்ற அனாமதேய சேவைகளை விட லீக் நன்றாக இருக்கிறது. லீக் எப்படி செயல்படுகிறது?

லிக் மற்ற இமெயில் சேவை போல தான்.முதலில் யாருக்கு மெயில் அனுப்ப வேண்டுமோ அவர்கள் முகவரியை குறிப்பிட வேண்டும். அதன் பின் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தியை டைப் செய்ய வேண்டும்.இப்போது மெயிலை அனுப்புவதற்கு முன் உங்கள் அனாமதேய அடையாளத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதாவது சக ஊழியர் என்றோ, உறவினர் என்றோ , நண்பரின் நண்பர் என்றோ உங்களை குறிப்பிட்டுக்கொள்ளலாம்.இனி மெயிலை அனுப்ப வேண்டியது தான்.

மெயிலை பெறும் நண்பருக்கு அனுப்பியது யார் என்று தெரியாது. ஆனால் அவரிடம் நீங்கள் சொல்ல நினைத்ததை சொல்லி விடலாம்.

எந்த வகையில் எல்லாம் இந்த சேவையை பயன்படுத்தலாம்?

லீக் தளத்திள் இதற்காக கொடுக்க்கப்பட்டூள்ள மாதிரி பயன்பாடுகள் சில:

’நான் உனது பள்ளித்தோழன்.நீ திறமைனானவன்,ஆனால் தப்பான இடத்தில் இருக்கிறாய்’- நண்பனின் நண்பன்.

’நான் உன்னோடு பழக காரணம் உனக்கு தொடர்புகள் அதிகம் என்பது தான்’.- சக ஊழியர்.

’உன்னோடு இருப்பது முதல் முறை கோக் குடித்தது போல இருக்கிறது’ .சக ஊழியர்.

’நாம் அலுவலகத்தில் எதிரிகள்.ஆனால் கடந்த பிராஜக்டில் நீங்கள் அசத்தி விட்டீர்கள் என சொல்ல விரும்புகிறேன்’. சக ஊழியர்.

இவை எல்லாம் மாதிரிகள். இந்த சேவையை அன்பாக எச்சரிக்கவும், சங்கடமான உண்மையை சொல்லவும் பயன்படுத்தலாம். தமிழ் சினிமா பாணியில் சொல்ல முடியாத காதலை சொல்லவும் பயன்படுத்தலாம். ஆனால் யாரையும் வெறுப்பேற்றவோ ,சீண்டி விடவோ பயன்படுத்த வேண்டாம்.நல்ல நோக்கத்துடனேயே இந்த சேவையை பயன்படுத்தவும். இதற்கான செய் மற்றும் செய்யக்கூடாத பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையில் உங்கள் இமெயில் முகவரி இடம்பெறுவதில்லை. எனவே நீங்கள் யார் என தெரிய வாய்ப்பில்லை. ஆனால் தொழில்நுட்ப் நோக்கில் பார்க்கும் போது முழு அனாமதேயம் சாத்தியம் இல்லை. ஐ.பி முகவரி போன்றவை மூலம் ஒருவர் அடையாளம் காணப்படும் வாய்ப்புண்டு. இது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் மனதை லேசாக்க கூடிய நல்ல நோக்கத்திற்காக அனாமதேய மெயில் அனுப்பும் போது இந்த கவலை எல்லாம் வேண்டாம்.
——
சொல்ல முடியாததை சொல்ல : http://justleak.it/index