Category Archives: ஐபோன்

ஸ்னேப்சேட் வெற்றிக்கதை- புதுயுக செயலியை உருவாக்கிய ஸ்பிஜெல் !

sn1ஸ்னேப்சேட் இணை நிறுவனர் இவ்ணைான்ய ஸ்பிஜெல்  உலகின் புதிய பில்லினராக உருவாகி இருக்கிறார். அவரது ஸ்னேன் நிறுவனம் பங்குச்சந்தைக்கு வந்திருப்பதன் மூலம் இதை அவர் சாதித்திருக்கிறார். கோடிகளை அள்ளியது மட்டும் அவரது சாதனையல்ல. இணைய உலகின் எதிர்கால போக்கை புரிந்து கொண்டு, புது யுக செயலியாக ஸ்னேப்சேட்டை உருவாக்கும் தொலைநோக்கு அவரிடம் இருந்தது. நம் காலத்து நாயகர்கள் தொடரில் ஸ்இஜெல் ஸ்னேப்சேட்டை உருவாக்கிய கதை விவரிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் இருந்து….

ஸ்னேப்சேட் போன்ற செயலியை இவான் ஸ்பிஜெல் போன்ற ஒருவரால் தான் உருவாக்க முடியும். இதை ஸ்பிஜெல்லும் நன்கு அறிந்திருக்கிறார். அதனால் தான் ஸ்னேப்சாட் சேவையை பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க் விலைக்கு வாங்க முயன்ற போது அவரால் அந்த கோரிக்கையை நிராகரிக்க முடிந்தது. ஸ்பிஜெல் நிராகரித்தது ஜக்கர்பர்கின் கோரிக்கையை மட்டும் அல்ல: அதற்காக அவர் தருவதாக சொன்ன 3 பில்லியன் டாலர்களையும் தான். ஜக்கர்பர்கே இதை நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் ஸ்பிஜெல் என் வழி தனி வழி எனக்கூறிவிட்டார்.

புதிய சேவை மூலம் கவனத்தை ஈர்க்கும் வளர்ந்து வரும் நிறுவனங்கள், திடிரென பெரிய நிறுவனங்களால் விலைக்கு வாங்கப்படுவது இணைய உலகில் அடிக்கடி நிகழ்வது தான். ஆனால் பெரிய நிறுவனம் ஒன்று விலைபேச வரும் போது புதிய நிறுவனம் அதை நிராகரிப்பது என்பது அபூர்வம் தான். எனவே தான், 2013 ம் ஆண்டின் துவக்கத்தில் பேஸ்புக் வாங்க முயற்சி செய்து, அதை ஸ்பிஜெல் நிராகரித்துவிட்டதாக செய்தி கசிந்த போது, இப்படி கூட ஒருவரால் செய்ய முடியுமா என இணைய உலகம் திகைத்துப்போனது. ஸ்பிஜெல் எடுத்தது சரியான முடிவு தானா? எனும் விவாதமும் தீவிரமாக நடைபெற்றது. ஸ்பிஜெல்லின் முடிவு முட்டாள்த்தனமானது, இதற்காக அவர் வருந்தும் நிலை வரும் என்று கூட பலரும் கருதினர். இந்த இளைஞருக்கு இத்தனை தலைக்கணமா என்றும் கூட கருத்து தெரிவிக்கப்பட்டது. ஏனெனில் அப்போது ஸ்பிஜெல்லுக்கு 23 வயது தான்.

இருந்தாலும் என்ன, இன்று ஜக்கர்பர்க் போல ஸ்பிஜெல்லும் இளம் கோடீஸ்வரர். அவரது ஸ்னேப்சேட் நிறுவனம் ( இப்போது ஸ்னேன் ஐஎன்சி) அசாதரணமான வளர்ச்சியை பெற்றிருக்கிறது. தினந்தோறும் அந்த சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை எப்போதோ 100 மில்லியனை கடந்துவிட்டது. அதோடு ஸ்னேப்சேட் புதிய அம்சங்களையும், வசதிகளையும் தொடர்ந்து அறிமுகம் செய்து, அதன் ஆதார பயனாளிகளான பதின்பருவத்தினரையும், இணையத்தின் இளைய தலைமுறையையும் கவர்ந்திழுத்து வருவதோடு, இந்த ரசிகர் பரப்பிற்காக வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிராண்ட்களையும் தன்னிடம் தஞ்சமடைய வைத்திருக்கிறது. அன்மையில் ஸ்னேப்சேட் தனது முதல் வன்பொருளான ஸ்னேப்சேட் கண்ணாடியையும் அறிமுகம் செய்துள்ளது. ஸ்னேப்சேட் சேவை பயன்படுத்தப்படும் விதம், அது ஏற்படுத்திவரும் தாக்கம் பற்றியும், அதற்கான காரணங்கள் பற்றியும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இவை எல்லாம் சேர்ந்து தான் ஸ்னேப்சேட் வெற்றிக்கதையை விஷேசமானதாக ஆக்குகிறது. சுவாரஸ்யமும், புதிர்த்தன்மையும் நிறந்த வெற்றிக்கதை அது!

இந்த கதையை புரிந்து கொள்ள ஸ்னேப்சேட் தலைமுறையை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன்னர் ஸ்னேப்சேட் சேவையை புரிந்து கொள்ள வேண்டும்.

முதன் முதலில் ஸ்னேப்சேட் சேவையை அறிமுகம் செய்து கொள்பவர்களுக்கு அது புரியாத புதிராக தான் இருக்கும். அதிலும் பழைய தலைமுறையினருக்கு இப்படி ஒரு சேவை எதற்காக என்று தான் கேட்கத்தோன்றும். உண்மையில் ஸ்னேப்சேட் செயலி அறிமுகமான போது பலரும் இப்படி தான் கேட்டனர். அப்போது ஸ்னேப்சேட்டால் என்ன பயன் என்று பெரும்பாலானோருக்கு புரியவில்லை. ஏனெனில், புகைப்பட பகிர்வு வகை செயலியான ஸ்னேப்சேட், அனுப்பியபின் பார்த்ததும் மறைந்துவிடும் படத்தை பகிர்ந்து கொள்ள வழி செய்தது. இன்று தானாக மறையும் படங்களை அனுப்பி வைக்கும் சேவை என பிரபலமாக குறிப்பிடப்பட்டாலும், அறிமுகமான புதிதில் ஸ்னேப்சேட் குழப்பத்தையே ஏற்படுத்தியது. பார்த்தவுடன் மறையும் படங்களை அனுப்பி வைப்பதற்கான தேவை என்ன எனும் கேள்வியையும் எழுப்பியது.

அதற்கு முன் இணைய உலகம் பல வகையான புகைப்பட மற்றும் தகவல் பகிர்வு செயலிகளை பார்த்திருக்கிறது. ஆனால் அவற்றில் இருந்தெல்லாம் ஸ்னேப்சேட் முற்றிலும் மாறுபட்டிருந்தது. பயனாளிகள் தங்களை அல்லது தங்கள் சுற்றுப்புறத்தை படம் எடுத்து அனுப்பி வைக்க அது வழி செய்தது. ஆனால் இந்த படங்களை பெறுபவர்கள் அவற்றை பத்து நொடிகள் வரை தான் பார்க்க முடியும். அதன் பிறகு அவை தானாக அழிக்கப்பட்டுவிடும். இது தான் ஸ்னேப்சேட்டின் தனித்தன்மையாக இருந்தது. எல்லாம் சரி, ஆனால் எடுக்கும் படங்கள் ஏன் மறைந்து போகவேண்டும். இப்படி மறையும் படங்களை அனுப்பி வைப்பதால் என்ன பயன்? இந்த கேள்விகள் எல்லோரையும் குழப்பியது.

காமிரா கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதல் படங்களை பாதுகாத்து வைப்பது தான் உலக வழக்கமாக இருந்தது. இணைய யுகத்தில் படங்களை எடுக்கும் வழிகள் மற்றும் பகிர்ந்து கொள்ளும் வழிகள் அதிகரித்திருந்தாலும், சேமித்து வைப்பது என்பது தான் படங்களின் பயன்பாட்டிற்கான முக்கிய தேவையாக கருதப்பட்டது. புகைப்பட பகிர்வில் புதிய பாதை காட்டிய இன்ஸ்டாகிராம் செயலியும் சரி, அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே அறிமுகமாகி பிரபலமாக புகைப்பட பகிர்வு சேவையான பிளிக்கரும் சரி, படங்களை சேமித்து வைப்பதான் தான் பிரதான அம்சமாக கொண்டிருந்தன. அப்படி இருக்க, மறைந்து போகும் படங்களை அனுப்பி வைக்கும் சேவை என்பது விசித்திரமாக அமைந்திருந்தோடு, தேவையில்லாத ஒன்று என்றும் கருதப்பட்டது. அதற்கேற்பவே ஸ்னேப்சேட்டை ஸ்பிஜெல் உருவாக்கியபோது இந்த சேவை தோல்வியை தழுவும் என்றே பலரும் கருதினர். ஆனால் இந்த ஆருடங்களை எல்லாம் அலட்சியம் செய்யும் துணிச்சல் ஸ்பிஜெல்லிடம் இருந்தது. தான் உருவாக்க முற்பட்ட சேவை மீது அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அதுவே ஸ்னேப்சேட்டின் வெற்றிக்கும் வழிவகுத்திருக்கிறது.

snஸ்னேப்சேட்டின் இணை நிறுவனர் மற்றும் அதன் சி.இ.ஒ, அதிலும் சர்வாதிகார் தன்மை கொண்ட சி.இ.ஓ என அறியப்படும் ஸ்பிஜெல், வைய விரிவு வலைக்கான கருத்தாக்கம் முன்வைக்கப்பட்ட அடுத்த ஆண்டு (1990) பிறந்தவர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தான் அவர் பிறந்து வளர்ந்தார். அவருடன் உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். (சகோதரிகள்). ஸ்பிஜெல் சீமான் வீட்டு செல்லக்குட்டி போல எந்தக்குறையும் இல்லாமல் வளர்ந்தார். அவரது தந்தை ஜான் ஸ்பிஜெல் மற்றும் தாய் மெலிசா இருவருமே வெற்றிகரமான வழக்கறிஞர்கள். என்வே வீட்டில் செல்வத்திற்கோ வசதிக்கோ அந்த குறையும் இல்லை. வழக்கறிஞர்கள் என்பதால் சமூகத்திலும் செல்வாக்கு இருந்தது. சொகுசு கார், டென்னிஸ் பயிற்சி, தனிப்பட்ட சமையல்காரர், ஐரோப்பிய விடுமுறை என அவரது சிறுவயது பருவம் இன்பமயமாக கழிந்தது. அதோடு சமூக நிகழ்வுகள் மற்றும் தன்னார்வ பணிகளும் அதிகம் இருந்தன.

ஸ்பிஜெல்லுக்கு தொழில்நுட்பத்திலும் ஆர்வம் இருந்த்து. ஆறாவது படிக்கும் போதே கம்ப்யூட்டர் அறிமுகமாகிவிட்டது. அதன் பின் போட்டோஷாப் மென்பொருளில் விளையாடுவது அவருக்கு கைவந்த கலையானது. வார இறுதி நாட்களை உள்ளூர் பள்ளியின் கலைக்கூடத்தில் அவர் செலவிட்டார். உயர் நிலை வகுப்பை அடைந்ததும் ரெட்புல் எனும் நிறுவனத்தில் அவர் பயிற்சி ஊழியராக பணியாற்றினார். ஊதியம் இல்லாத வேலை என்றாலும் அந்த நிறுவனத்தின் மீது இருந்த அபிமானம் காரணமாக நண்பர் ஒருவரின் சிபாரிசு மூலம் அந்த பணியை பெற்று ஈடுபாட்டுடன் செய்து வந்தார். ரெட்புல் நிறுவனத்திற்காக போட்டோஷாப் மூலம் சில விளம்பர பணிகளையும் மேற்கொண்டார். இந்த அனுபவம் அவருக்கு தொழில்முனைவின் அரிச்சுவடியை அறிமுகமாக்கியது. குறிப்பாக மார்க்கெட்டிங் பற்றி நிறைய கற்றுக்கொண்டார். இதற்கு முன்பாகவே ஒரு கோடை விடுமுறையில் உள்ளூர் கல்லூரி ஒன்றில் வரைகலை வடிவமைப்பு உள்ளிட்ட இரண்டு பாடங்களில் பகுதிநேர சான்றிதழ் வகுப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்றிருந்தார்.

வரைகலை வடிவமைப்பு பயிற்சி வடிவமைப்பு சார்ந்த சிந்தனையை வளர்த்து ஒரு மாணவனாக தன்னை மாற்றியது என பின்னர் அவர் இது பற்றி உற்சாகமாக குறிப்பிட்டிருக்கிறார். இதனிடையே உள்ளூர் நாளிதழ் ஒன்றிலும் அவர் பணியாற்றினார். அப்போது அவர் கட்டுரைகள் எழுதுவதில் மட்டும் அல்லாமல் விளம்பரங்கள் வாங்குவதிலும் பளிச்சிட்டார். ஆக, ஆடம்பர வாழ்க்கைக்கு பழக்கப்பட்டிருந்தாலும் அவர் படிப்பிலும், பகுதி நேர பணி மூலம் திறன் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தினார். அதே நேரத்தில் கேளிக்கைகளிலும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அவருக்கு 17 வயது ஆன போது பெற்றோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். முதலில் ஸ்பிஜெல் தனது தந்தையோடி வசித்தார். ஆனால், தந்தையிடம் செலவுக்கு அதிக பணம் கேட்டும், விருந்துகளுக்கு செல்ல பி.எம்.டபிள்யூ கார் கேட்டும் பிடிவாதம் பிடித்தார். இதற்கு தந்தை மறுக்கவே கோபித்துக்கொண்டு அம்மாவிடமே சென்றுவிட்டார். அம்மா அவருக்கு பி.எம்.டபிள்யூ காரை குத்தகைக்கு எடுத்து தந்தார். பின்னர் கல்லூரி நாட்களில் தந்தையிடமே திரும்பி வந்துவிட்டார்.

பள்ளி படிப்பை முடித்ததும் அவர் புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயிலத்துவங்கினார். ஸ்டான்போர்டிலும் அவரது விருந்துகளும் கேளிக்கைகளும் தொடர்ந்தன. படிப்பிலும் ஆர்வம் குறைந்துவிடவில்லை. மற்ற விஷயங்களிலும் துடிப்புடன் இருந்தார். வடிவமைப்பில் இருந்த ஆர்வத்தோடு, திடிரென ஆசிரியர் பணியிலும் ஈடுபாடு ஏற்பட்டு, தென்னாப்பிரிக்கா சென்று மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவது தொடர்பாக பாடம் நடத்தினார்.

இதனிடையே நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில், இண்டியூட் நிறுவன நிறுவனர் ஸ்காட் குக் நடத்தி வந்த வகுப்பில் பங்கேற்றார். இந்த வகுப்பு அவரது மனத்தை தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு நோக்கி இழுத்தது. இதன் பயனாக குக் அப்போது உருவாக்கி கொண்டிருந்த டெக்ஸ்ட்வெப் எனும் திட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றார். பிராட்பேண்ட் இணையவசதி இல்லாத பகுதிகளில் இணைய தகவல்களை குறுஞ்செய்தி மூலம் வழங்க முற்பட்டது.

புதிதாக ஏதாவது செய்ய செய்ய வேண்டும் எனும் துடிப்புடன் பாபி மர்பி எனும் நண்பருடன் இணைந்து, புதிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்லூர் சேர்க்கை தொடர்பாக வழிகாட்டும் பியூச்சர்பிரெஷ்மேன்.காம் எனும் இணையதளத்தை உண்டாக்கினார். இந்த இணையதளம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. இந்நிலையில் தான் ரெகி பிரவுன் எனும் மாணவர் அறிமுகமானார். கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து பேசிய போது, பிரவுன் குறிப்பிட்ட ஒரு எண்ணம் ஸ்பிஜெல்லை கவர்ந்தது. தானாக மறையும் புகைப்படங்களை அனுப்பும் வசதி தான் பிரவுன் குறிப்பிட்ட யோசனை. உடனே அதை செயல்படுத்த துவங்கினார். இந்த சேவைக்கான புரோகிராமிங் எழுதும் பணியை மர்பியிடம் ஒப்படைத்தார். 2011 ம் ஆண்டு ஜூலை மாதம் பிக்கபூ எனும் பெயரில் இந்த சேவை அறிமுகமானது. ஆனால், இந்த சேவை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. முதலீட்டாளர்களை அணுகிய போது, டெலிட் செய்யப்படும் படங்களை அனுப்பும் சேவைக்கான தேவை என்ன? என நிராகரித்தனர். இதனிடையே, நண்பர்களிடையே கருத்து வேறுபாடும் ஏற்பட்டிருந்தது. இதனால் ரெகி பிரவுனுக்கு 30 சதவீத பங்குகளை கொடுத்து நிறுவனத்தில் இருந்து வெளியேற்றினர். மேலும் பிக்கபூ எனும் பெயரை பயன்படுத்துவதில்லை என்றும் ஒப்புக்கொண்டனர்.

அந்த சேவையில் மேலும் சில அம்சங்களை சேர்த்து ஸ்னேப்சேட் எனும் பெயரில் சில மாதங்கள் கழித்து அறிமுகம் செய்தனர். ஐபோனில் பயன்படுத்தக்கூடிய செயலியாக அது அறிமுகமானது. இந்த செயலிக்கான பேய் வடிவ லோகோவை ஸ்பிஜெல் வடிவமைத்திருந்தார். அதன் பிறகு தான் அந்த மாயம் நிகழ்ந்தது. அழிக்கப்பட்டுவிடும் படங்களை அனுப்பும் செயலியால் என்ன பயன் என்று கேட்கப்பட்டதற்கு மாறாக, பதின் பருவத்தினர் அதை ஆர்வத்துடன் பயன்படுத்த துவங்கினர். சமூக ஊடகங்களின் தாக்கம் உச்சத்தில் இருந்த நிலையில், செல்பேசியில் செயலிகளை பயன்படுத்துவது அதிகரித்து வந்த நிலையில், இளம் தலைமுறையினர், ஒரு படத்தை அனுப்பி வைத்தால் அது பார்க்கப்பட்டவுடன் அழிக்கப்பட்டுவிடும் எனும் கருத்தை மிகவும் விரும்பினர். இதை ஒரு கேளிக்கை அம்சமாக கருதியதோடு, சிக்கல் இல்லாத வழியாகவும் கருதினர். நினைத்தவுடன் ஒரு படத்தை கிளிக் செய்து நண்பர்களுக்கு அனுப்பி வைக்கலாம் எனும் வசதியுடன், அது டெலிட் ஆகிவிடும் எனும் உறுதி, தயக்கமில்லாமல் பகிர்வதை ஊக்குவித்தது.

img005அதற்கேற்பவே ஸ்னேப்சேட் செயலியின் வடிவமைப்பும் அமைந்திருந்தது. செயலியை திறந்ததுமே செல்போன் காமிரா திரை முகப்பு பக்கமாக தோன்றும். அதில் படத்தை கிளிக் செய்து, தொடர்பில் உள்ள நண்பர்களுக்கு அனுப்பி வைக்கலாம். தேவை எனில் உடன் ஒரு குறிப்பையும் இடம்பெற வைக்கலாம். மறுமுனையில் பார்த்தவுடன் 1 முதல் 10 விநாடிக்குள் படம் மறைந்துபோகச்செய்யலாம். இந்த வசதி மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான புதுவித வழியாக அமைந்தது. சுயபடம் முதல் தாங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி வரை எதை வேண்டுமானாலும் கிளிக் செய்து அனுப்பி வைக்கலாம். இதோ இந்த நொடியில் நான் இதை செய்து கொண்டிருக்கிறேன் அல்லது இந்த இடத்தில் இருக்கிறேன் என தெரிவிக்கும் வகையில் அமைந்த்து. அதோடு அந்த நொடி அதன் பிறகு மறைந்து விடுவதாகவும் இருந்தது. விளைவு, இளசுகள் விரும்பி பயன்படுத்தப்படும் சேவையாக ஸ்னேப்சேட் உருவானது.

படங்களை பாதுகாத்து பழகிய பழைய தலைமுறைக்கு தானாக மறையும் படங்களை அனுப்பும் வசதி வீணானது என தோன்றினாலும் இணைய போக்குகள் மற்றும் வளர்ச்சிக்கு பழகிய இளம் தலைமுறைக்கு இந்த வசதி புதுயுக தகவல் தொடர்பாக தோன்றியது. அதோடு பேஸ்புக் போன்ற சமுக வலைப்பின்னல் தளங்களில் தனிப்பட்ட எல்லா விவரங்களையும் சமர்பிக்க வேண்டியிருந்ததற்கு மாறாக ஸ்னேப்சேட் சுதந்திரமான தகவல் பரிமாற்றத்திற்கு வழி செய்தது. மேலும் பேஸ்புக் வலைப்பின்னல் சேவை பிரலமாக இருந்தாலும், அதில் பகிரும் நிலைத்தகவல்களை தங்கள் பெற்றோர்களும் எட்டிப்பார்ப்பதை இளம் தலைமுறை விரும்பவில்லை. இதற்கு மாறாக உடனடி படங்கள் மூலம் (பின்னர் வீடியோ வசதியும் அறிமுகமானது) தொடர்பு கொள்ள முடிந்த்து சுவாரஸ்யத்தை மட்டும் அல்லாமல், தங்கள் செயல்பாடுகள் கண்காணிக்க முடியாத பாதுகாப்பையும் அளித்தது. இவற்றின் காரணமாக பதின் பருவத்தினர் மற்றும் இளம் வயதினர் மத்தியில் ஸ்னேப்சேட் வேகமாக பிரபலமாகி அதன் பயனாளிகள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்தது.

முதலில் பழைய தலைமுறைக்கு இது புரியாமல் குழப்பத்தை அளித்தாலும் இக்கால இளசுகள் ஸ்னேப்சேட்டை தங்களுக்கான இயல்பாக சேவையாக பயன்படுத்தியவிதம் அதன் அருமையை புரியவைத்தது. ஆபாசமான செய்திகளுக்காக பயன்படுத்தப்படும் வாய்ப்பே அதிகம் எனும் குற்றச்சாட்டை மீறி ஸ்னேப்சேட் புதிய வகை தகவல் மொழியாக உருவானது.

ஸ்னேப்சேட்டை எப்படி புரிந்து கொள்வது என ஸ்பிஜெல் அழகாக வழிகாட்டுகிறார்.” நிழல்படங்கள் பயன்பாடு மாறிவருவதை தான் ஸ்னேப்சேட் உணர்த்துகிறது. வரலாற்று நோக்கில் நிழல்படங்கள் முக்கிய தருணங்கள் பாதுகாக்க பயன்பட்டு வருகின்றன. ஆனால், இன்று புகைப்படங்கள் பேசுவதற்கான கருவியாக இருக்கின்றன. அதனான் தான் இளசுகள் லட்சக்கணக்கில் படம் எடுத்து வருகின்றனர். அவர்கள் படங்கள் மூலம் பேசுகின்றனர்”.

செல்போன்கள் உடனடி வெளிப்பாட்டிற்கு வழி செய்துள்ள நிலையில் ,நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், என்ன உணர்கிறீர்கள் என்பதை உணர்த்த படங்கள் வழி செய்வதாகவும் அவர் விளக்கியுள்ளார். உடனடி பகிர்வு என்பது, இப்போது இருப்பது தான் என்னுடைய அடையாளம் என மாற்றி அமைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

புகைப்படங்கள் மூலம் இக்கால தலைமுறை பேசிக்கொள்கின்றனர் என்பதாலேயே ஸ்னேப்சேட் வெற்றி பெற்றுள்ளது. அதன் காரணமாகவே பிராண்ட்களும் வர்த்தக நிறுவனங்களும் அதன் பின்னே படையெடுக்கின்றன.

ஸ்னேப்சேட்டின் தன்மையை புரிந்து கொண்டதால் தான் ஸ்பிஜெல் அதை மேலும் வளர்த்தெடுக்க விரும்புகிறார். அந்த நம்பிக்கை இருப்பதால் தான் அவர் ஜக்கர்பர்க் கோரிக்கையை நிராகரித்தார். இது போன்ற வர்த்தகத்தை உருவாக்கும் வாய்ப்பு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். அந்த வாய்ப்பை குறுகிய கால பலனுக்காக இழக்க வேண்டுமா? என்று அவர் நம்பிக்கையோடு கூறினார். அந்த நம்பிக்கை தான் ஸ்னேப்சேட்டை விற்று கோடிகளை பார்க்க நினைக்காமல், அதனை மேலும் வளர்த்து கோடிகளை உருவாக்கும் பாதையில் முன்னேற வைத்திருக்கிறது.


நம் காலத்து நாயகர்கள் ,

புதிய தலைமுறை வெளியீடு

விலை ரூ.140.

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை எளிதாக்குக்கும் பீம் செயலி

BHIM-Detailsபண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பிறகு ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை அரசு பெரிய அளவில் ஊக்குவித்து வருகிறது. இதற்கு உதவும் வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவதற்கான புதிய வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அன்மையில் அறிமுகமான பீம் செயலி துவக்க நிலையிலேயே அதிக வரவேற்பை பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது. தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்ட இந்த செயலியை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார். பாரத் பேமெண்ட் இண்டர்பேஸ் பார் மணி என்பதன் சுருக்கமான பீம் செயலி சட்ட மேதை அம்பேத்கர் பெயரையும் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படக்கூடிய இந்த செயலி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள யூனிபைடு பேமெண்ட் இண்ட்பர்பேஸ் எனப்படும் யு.பி.ஐ தொழில்நுட்ப மேடையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. யு.பி,ஐ. வசதி ஸ்மார்ட் போன் மூலம் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பணபரிவர்த்தனை செய்ய வழி செய்கிறது. இந்த பரிவர்த்தனைகளின் போது வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை சமர்பிக்க வேண்டிய அல்லது ஊள்ளீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பது இந்த வசதியின் சிறப்பாக அமைகிறது.

யு.பி.ஐ வசதி சார்ந்து முன்னணி வங்கிகள் தனி செயலிகளை அறிமுகம் செய்துள்ளன. அந்த வரிசையில் பீம் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டாலும், எளிமையான பயன்பாட்டில் இது மற்ற செயலிகளில் இருந்தெல்லாம் வேறுபட்டிருக்கிறது. யு.பி.ஐ செயலியின் இலகுவான வடிவமாக வெகுமக்களை மனதில் கொண்டு மிகவும் எளிமையாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. எளிமையான இடைமுகம் மற்றும் மொபைல் வங்கிச்சேவைக்கு பதிவு செய்திருக்க வேண்டிய அவசியமில்லை ஆகிய அம்சங்கள் பீம் செயலியின் பயன்பாட்டை எளிதாக்குகிறது.

வங்கி கணக்கு (யு.பி.ஐ இடைமுகத்தில் இணைந்துள்ள வங்கி) மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் கொண்ட எல்லோரும் பீம் செயலியை பயன்படுத்தலாம். பீம் செயலி மூலம் எளிதான பண பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.

பீம் செயலியை பயன்படுத்த ஆண்ட்ராய்டு போன் வழியே கூகுள் பிளேஸ்டோரில் இருந்து இந்த செயலியை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள வேண்டும். பீம் செயலியை தரவிறக்கம் செய்யும் போது, அதிகாரபூர்வமான செயலியை தான் தரவிறக்கம் செய்கிறோம் என்பதை உறுதி செய்து கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் பீம் பெயர் போலவே பல போலி செயலிகள் உலாவிகின்றன. எனவே செயலியை தரவிறக்கம் செய்யும் முன் அது தேசிய பேமனெட் கார்ப்பரேஷன் உருவாக்கிய செயலியா என்பதை கண்டறிய வேண்டும். அதிகார பூர்வ இணைப்பு மூலம் இதை நாடுவது நலம். பொதுவாகவே வங்கி மற்றும் நிதிச்சேவை செயலிகளை பயன்படுத்துவதற்கு முன், அவை அதிகாரபூர்வ செயலி தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இமெயில் அல்லது குறுஞ்செய்தி மூலம் வரும் இணைப்புகளை எல்லாம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

bhimsசெயலியை நிறுவிய பின் விருப்ப மொழியை தேர்வு செய்ய வேண்டும். இப்போது முதல் கட்டமாக ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகள் மட்டுமே உள்ளன. வரும் வாரங்களில் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன் பிறகு பயனாளியின் போன் மற்றும் குறுஞ்செய்திகளை அணுகும் அனுமதியை கேட்கும். இதற்கு அனுமதி அளித்தவுடன், பயனாளியின் போன் எண்ணை உறுதி செய்து கொள்ளும். இரட்டை சிம் கார்டு கொண்ட போன் எனில் எது பரிவர்த்தனைக்கான சிம்கார்டு என குறிப்பிட வேண்டும். அடுத்த கட்டமாக நான்கு இலக்க பாஸ்கோடை உருவாக்கி கொள்ள வேண்டும். இந்த பாஸ்கோடை தான் தொடர்ந்து கடவுச்சொல்லாக பயன்படுத்துவோம். பாஸ்கோடை உருவாக்கிய பிறகு வங்கியை தேர்வு செய்ய வேண்டும். யு.பி.ஐ பட்டியலில் உள்ள 31 வங்கிகளில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு வங்கி கணக்கை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும். வங்கி கணக்கை இணைத்தவுடன், டெபிட் கார்டின் கடைசி ஆறு இலக்கத்தை தெரிவித்து, யு.பி.ஐ பரிவர்த்தனை பின் எண்ணை உருவாக்கி கொள்ள வேண்டும். இதன் பிறகு பரிவர்த்தனைக்கான வி.பி.ஏ எனப்படும் விர்ச்சுவல் பேமெண்ட் அட்ரஸ் எனும் முகவரியை உருவாக்கி கொள்ள வேண்டும். இது மொபைல் எண் அல்லது பெயராக இருக்கலாம். பணம் அனுப்ப அல்லது கோர இந்த முகவரி அவசியம். வி.பி.ஏவை உருவாக்கி கொண்ட பிறகு, பரிவர்த்தனைக்கான பக்கம் தோன்றும். அதில் அனுப்ப ( செண்ட்), கோர ( ரிக்வஸ்ட்) மற்றும் ஸ்கேன் ஆகிய மூன்று பகுதிகள் இருக்கும். செண்ட் பகுதி மூலம் பணம் அனுப்பலாம். ரிக்வஸ்ட் பகுதி மூலம் பணம் அனுப்ப கோரலாம்.

பணம் அனுப்ப, பெறுபவரின் மொபைல் எண் அல்லது பரிவர்த்தனையை முகவரியை குறிப்பிட வேண்டும். உடனே அதை பரிசோதித்து உறுதி செய்யும். அதன் பிறகு தொகையை தெரிவித்து பின் எண்ணை அடித்தவுடன் பணம் பரிவர்த்தனை செய்யப்படும். பணம் பெறுபவர் யு.பி.ஐ பரிவர்த்தனை முகவரி கொண்டவராக இருக்க வேண்டும். இல்லை எனில் அவரது வங்கி கணக்கு மற்றும் ஐ.எப்.எஸ்.சி கோடு தெரிவித்து பரிவர்த்தனை செய்யலாம். பரிவர்த்தனை முகவரி கொண்டவர்கள் எனில், எளிதாக பரிவர்த்தனை செய்யலாம். ஸ்கேன் செய்வது மூலமும் பரிவர்த்தனை செய்யலாம். பணம் அனுப்புவதற்கான கியூ.ஆர் கோடையும் உருவாக்கி அதனை பகிர்ந்து கொள்ளலாம். மற்றவர்கள் உருவாக்கிய கோடை ஸ்கேன் செய்தும் பணம் செலுத்தலாம்.

சாதாரண போனில் *99# என்ற எண்ணை அணுகுவது மூலமும் இந்த வசதியை பயன்படுத்தலாம். பண பரிவர்த்தனை தவிர கணக்கில் உள்ள தொகையை அறியவும் இந்த வசதியை பயன்படுத்தலாம். ஆனால் மற்ற யு.பி.ஐ செயலியில் உள்ளது போல காசோலை கோருவது போன்ற மற்ற வசதிகளை அணுக முடியாது. பீம் செயலி மூலமான பரிவர்த்தனை நேரடியான வங்கி கணக்கிற்கு சென்றுவிடும். இதை பயன்படுத்த கட்டணம் கிடையாது. ஆனால் வங்கிகள் தரப்பில் சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படலாம்.

தற்போது பண பரிவர்த்தனை செயலிகளை விட பீம் செயலி மிகவும் எளிதானதாக கருதப்படுகிறது. முதல் முறை பயனாளிகளை டிஜிட்டல் பரிவர்த்தனை உலகிற்குள் ஊக்குவிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கருதப்படுகிறது. இந்த செயலி பாதுகாப்பான செயல்பாடுகளை கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று அடுக்கு பாதுகாப்பை கொண்டுள்ளது. ஒரு முறை 10,000 ரூ வரை பணம் அனுப்பலாம். நாள் ஒன்றுக்கு 20,000 எனும் வரம்பு உள்ளது.

நேரடி பண பரிவர்த்தனைக்கு இது மிகவும் ஏற்றது. இந்த செயலி பரிவர்த்தனையை ஏற்கும் வர்த்தர்களிடமும் இதை பயன்படுத்தலாம். வருங்காலத்தில் இந்த எண்ணிக்கை தற்போதுள்ளதைவிட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீம் செயலி பயன்பாட்டில் சில சிறிய இடர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்பேம் கோரிக்கைகளும் தொல்லை தருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இவற்றை சரி செய்யும் வகையில் அப்டேட் வர்ஷன் வெளியாகியுள்ளது. ஸ்பேம் தொலைக்கு குறித்து புகார் தெரிவிக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு; https://upi.npci.org.in/static/faq/en_US/

நன்றி : தமிழ் இந்துவில் எழுதியது

e

வேலை வாய்ப்பிற்கான நேர்க்காணல் செயலி அறிமுகம்

வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலிகளும் , வேலைவாய்ப்பு நேர்க்காணலுக்கு தயாராக உதவும் செயலிகளும் இருக்கின்றன. இப்போது வேலைவாய்ப்பிற்கான நேர்காணலில் பங்கேற்க உதவும் செயலி அறிமுகமாகி இருக்கிறது.

இ-பாய்ஸ் எனும் இந்த செயலி மூலம் வேலை தேடுபவர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனங்களுடன் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம்.

வழக்கமாக வேலை வாய்ப்பு நாடும் இளைஞர்கள் முதலில் தங்களுக்கு பொருதமான வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்து விண்ணப்பிப்பார்கள். அதன் பிறகு அந்த நிறுவனங்களிடம் இருந்து நேர்க்காணலுக்கான அழைப்பு வர காத்திருக்க வேண்டும்.

இந்த காத்திருக்கலான அவசியத்தை நீக்கி நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்க வழி செய்கிறது இ-பாய்ஸ் செயலி. வேலை தேடுபவர்கள் முதலில் இந்த செயலியை டவுண்லோடு செய்து தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த தளத்தில் உள்ள நிறுவன வேலைவாய்ப்புகளில் தங்களுக்கு பொருத்தமானதை தேர்வு செய்ய வேண்டும்.

இந்த செயலியில் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் தங்களுக்கான நேர்க்காணல் கேள்விகளை சமர்பித்துள்ளன. எனவே விண்ணப்பித்தவுடன் இந்த கேள்விகளுக்கு பதில் அளித்து நேர்க்காணலில் பங்கேற்கலாம்.ஆடியோ மற்றும் வீடியோவில் பதில்கள் பதிவாகும். நிறுவனம் பின்னர் இந்த வீடியோ நேர்க்காணலை பரிசீலித்து அதனடிப்படையில் தொடர்பு கொள்ளும். இந்த நேர்க்காணல் முதல் கட்டமாகவே அமையும். தேர்வு செய்யப்படுபவர்களை அடுத்த கட்டன் தேர்வுக்கு அழைத்து பரிசீலினை செய்யும். எனினும் வேலை தேடுபவர்கள் மற்றும் வேலைகாக தகுதியானவர்களை நியமிக்க விரும்பும் நிறுவனங்கள் என இருதரப்பினருக்குமே இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும். வேலை தேடுபவர்களை பொருத்தவரை அழைப்பிற்கு காத்திருக்காமல், தங்களுக்கு விருப்பமான நேரத்தில் விரும்பிய இடத்தில் இருந்து நேர்க்காணலில் பங்கேற்கலாம்.

மேலும் நேர்க்காணலுக்கு அழைக்கப்பட்ட நேரம் பொருத்தமானது தானா? என்பது பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. பயணம் செய்யும் தேவையும் இல்லை. நிறுவனங்களை பொருத்தவரை தகுதியான நபர்களை தேர்வு செய்ய ஆயிரக்கணக்கில் விண்ணபங்களை பரிசீலித்து அவர்களில் பலரை நேர்முகத்தேர்வுக்கு அழைத்து வடிகட்டி தேர்வு செய்யும் தேவை இல்லாமல் விண்ணபித்தவர்களின் தகுதையை நேர்க்காணல் மூலம் மதிப்பிட்டு அடுத்த கட்ட நடவைக்கை மேற்கொள்ளலாம். சச்சின் அகர்வால் மற்றும் பிஷன் சிங் ஆகிய தொழில்முனைவோர் இந்த செயலியை உருவாக்கியுள்ளனர். சாப்ட்வேர் நிறுவனங்களுக்கான அமைப்பான நாஸ்காமின் இளம் ஸ்டார்ட் அப்கள் திட்டத்தில் இந்த செயலி தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேலை வாய்ப்பை நாடுபவர்கள் இந்த செயலியை முயற்சி செய்து பார்க்கலாம். செயலி இணையதளம்; http://www.epoise.com/ ——-

உங்கள் மூளையின் சுறுசுறுப்பை அறிய உதவும் செயலி

உங்கள் மூளை எப்போது சுறுசுறுப்பாக செயல்படுகிறது என்பது உங்களுக்கே தெரியாத ரகசியமாக இருக்கலாம். ஆனால் அதை கண்டுபிடித்து சொல்ல ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது தெரியுமா?
பிரிட்டனை சேர்ந்த உளவியல் வல்லுனர்கள் உருவாக்கியுள்ள மூ-கியூ ( ஐகியூ போல இது மனநிலைக்கானது) எனும் இந்த செயலியை பயன்படுத்தினால் உங்கள் மூளை எப்போது சுறுசுறுபாக செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதற்காக, இந்த செயலியை டவுண்லோடு செய்து , அது கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து, அதன் பின்னர் வைக்கப்படும் சோதனையில் பங்கேற்க வேண்டும். கேள்விகள் உங்கள் மனநிலையை அறிந்து கொள்ளும் வகையில் அமைந்திருக்கும். அதாவது உற்சாக மனநிலையில் இருக்கிறீர்களா? அல்லது வாடிப்போன மலர்களாக இருக்கிறீர்களா என இந்த செயலி அனுமானித்துகொண்டு அதன் பிறகு உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் கேள்விகளை கேட்டு சோதனை வைக்கும்.

மொத்தம் ஐந்து முறை இந்த சோதனையில் பங்கேற்றால் போதும் அதனடிப்படையில் உங்கள் செயல்பாட்டை புரிந்து கொண்டு , அறிக்கையை அளிக்கும். அந்த அறிக்கை உங்கள் மூளையின் செயல்பாடு எந்த நேரத்தில் சிறந்ததாக இருக்கிறது என்பதை உணர்த்தும். அழகாக வரைபட விவரங்களுடன் ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில் உங்கள் செயல்பாடு எப்படி அமைந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எந்த நேரத்தில் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது என இந்த செயலி சுட்டிக்காட்டுகிறதோ , அந்த நேரத்தில் உங்களது முக்கியமான பணிகளை வைத்துக்கொள்ளலாம்.

பொதுவாக மனநிலைக்கும்,மூளையின் செயல்பாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக உளவியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். இது குறித்தி ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த செயலியின் பின்னே உள்ள ஹங்க்ரி மைண்ட்ஸ் லேப் குழுவினர் இது தொடர்பான ஆய்வை நடத்தி மூ-கியூ செயலியை உருவாக்கி உள்ளனர். உங்கள் மூளையின் ஆற்றல் பற்றி இந்த செயலி தகவல் தருவதோடு , மூளைக்கான பயிற்சியையும் பரிந்துரைக்கிறது. ஆம் மூளைக்கும் பயிற்சி அவசியம் என்கின்றனர்.
இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மூளை உற்சாகமாக இருக்கும் நேரத்தை தெரிந்து கொள்வதோடு, இந்த ஆய்விலும் பங்கேற்ற பெருமையை நீங்கள் பெறலாம்.

சுவாரஸ்யமான செயலி தான். ஆனால் இப்போதைக்கு ஐபோனுக்காக தான் அறிமுகமாகி இருக்கிறது. ஆண்ட்ராய்டு வடிவம் இன்னும் வரவில்லை.

செயலி பற்றிய விவரங்களுக்கு: http://www.hungrymindlab.com/moo-q/

—–

ikea1

ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் மேஜை, நாற்காலிகள்

ஸ்மார்ட்போனில் சார்ஜ் தீர்ந்து போவதும், அந்த நேரத்தில் சார்ஜர் தேடி அலைவதோ அல்லது சார்ஜரை பொருத்த மின்சார வசதியை தேடி அலைவதோ பரவலாக எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம் தான். ஆனால் வருங்காலத்தில் இந்த பிரச்சனை அநேகமாக இல்லாமல் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது. எப்போது போனில் சார்ஜ் இல்லாமல் போனாலும் இருந்த இடத்திலேயே சார்ஜ செய்து கொண்டு விடலாம். இதற்கு சார்ஜரே தேவை இருக்காது. அதெப்படி என்று ஆர்வத்தோடு கேட்டீர்கள் என்றால் எல்லாம் வயர்லெஸ் செய்யும் மாயம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆம், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களை வயர்லெஸ் மூலம் சார்ஜ் செய்து கொள்ளும் முறை தற்போது மெல்ல பிரபலமாகி கொண்டு வருகிறது. இதன் அடையாளமாக ஸ்பைனின் பார்சிலோனாவில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் எனும் கேட்ஜெட் கண்காட்சியில், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களை சார்ஜ் செய்ய வழி செய்யும் மேஜை, நாற்காலி மற்றும் மின்விளக்கு ஆகியவை அறிமுகம் ஆகியிருக்கிறது. பர்னீச்சர்கள் உலகில் புகழ்பெற்ற ஸ்வீடன் நிறுவனமான ஐகியா இந்த மேஜை நாற்காலிகளை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த நவீன பர்னீச்சர்கள் ஒவ்வொன்றிலும் வயர்லெஸ் சார்ஜிங் பேட் இணைக்கப்பட்டிருக்கும். அவற்றின் மீது போனை வைத்தால் போதும் வயர்லெஸ் உயிர்பெற்று போன் சார்ஜாகத்துவங்கிவிடும். தனியே கேபிள்களை பயன்படுத்தும் அவசியம் எல்லாம் கிடையாது.

மேஜை, நாற்காலி என்றால் அவற்றுடன் மின்சார் கேபிளை இணைக்க வேண்டும். மின் விளக்கு என்றால் அந்த தேவையும் இல்லை.
ikea_3214675b
இவை தவிர தனியே சார்ஜிங் பேடையும் ஐகியா அறிமுகம் செய்திருக்கிறது. அவற்றை சுவற்றிலோ அல்லது வேறு எந்த பரப்பிலோ பொருத்தி , வயர்லெஸ் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
வயர்லெஸ் மூலம் சார்ஜிங் செய்யும் வசதி நவீன வாழ்க்கைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்றாலும் இதை சாத்தியமாக்கும் தொழில்நுட்பம் நூற்றாண்டு பழைமையானது என்பது தான் சுவாரஸ்யமான விஷயம்.
வயர்லெஸ் சார்ஜிங் முறை மேக்னட்டிக் இண்டக்‌ஷன் எனும் முறையில் செயல்படுகிறது. இந்த வகை வயர்லெஸ் சாதனத்தில் டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசிவர் என இரண்டு பகுதிகள் இருக்கும். டிரான்ஸ்மிட்டரில் பாயும் மின்சாரம் காந்த மண்டலைத்தை உருவாக்கும். இதன் மூலம் ரிசிவரில் வோல்டேஜ் உண்டாகும். இந்த மின்சாரம் தான் சாதனங்களை சார்ஜ் செய்ய கைகொடுக்கிறது.

வயர்லெஸ் சாரிஜிங் முறையில் கேபிலுக்கே வேலை கிடையாது.
நவீன சாதனங்களில் அடிக்கடி சார்ஜ் தீர்ந்து போகும் பிரச்சனைக்கு தீர்வு காண பலவகையான பேக்கப் வழிகள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் வயர்லெஸ் சார்ஜிங் இதற்கான சரியான தீர்வாக அமையும் என கருதப்படுகிறது.

ஆனால் ஒன்று இந்த வகையில் சார்ஜிங் செய்து கொள்ள ஸ்மார்ட்போனில் அதற்கு ஏற்ற வசதி இருக்க வேண்டும். புதிய போன்கள் எல்லாம் இந்த அம்சத்துடன் தான் வருகின்றன. பார்சிலோனா கண்காட்சியில் அறிமுகமாகும் சாம்சங் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட புதிய போன்களில் இந்த வசதி இருக்கிறது.
பழைய போனாக இருந்தாலும் கவலையில்லை, பொருத்தமான சார்ஜிங் கேஸ் மூலம் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை பயன்படுத்தலாம்.

வயர்லெஸ் சார்ஜிங் பேட்களும் தனியே சந்தையில் இருக்கும் நிலையில் ஐகியா இதை பர்னீச்சர்களுடன் இணைத்து வீட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

முதல் கட்டமாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இந்த வயர்லெஸ் சாதங்கள் அறிமுகமாகி பின்னர் மற்ற நாடுகளுக்கு வர உள்ளது. அநேகமாக மற்ற நிறுவனங்களும் இந்த பாதையை பின்பற்றலாம்.
இவை தவிர ஸ்டார்பக்ஸ் மற்றும் மெக்டோனால்ட்ஸ் போன்ற நிறுவனங்களும் வயலெஸ் சார்ஜிங் வசதியை தங்கள் மையங்களில் அமைத்து வருகின்றன. வருங்காலத்தில் மேலும் பல பொதுஇடங்களில் வயர்லெஸ் சார்ஜிங் மையங்கள் உருவாகலாம்.

ஆகையால் போனில் சார்ஜ் தீரும் பிரச்சனையை மறந்தே போகலாம்.,
ஆனால் இதில் உள்ள ஒரே சிக்கல் என்ன என்றால், இப்படி வயலெஸ் மூலம் சார்ஜ் செய்யும் வசதியை வழங்க மூன்று வகையான முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. மூன்று அமைப்புகள் இவற்றை உருவாக்கி பிரபலமாக்கி வருகின்றன. இவற்றில் கியூஐ எனும் முறையை தான் ஐகியா பின்பற்றுகிறது. வயலெஸ் பவர் கன்சார்டியம் அமைப்பு இதன் பின்னே இருக்கிறது. சாம்சங் போன்றவை இதில் உறுப்பினர்கள்.

இந்த மூன்று அமைப்புகளும் வயர்லெஸ் சார்ஜ் வசதிக்கான பொது வரையறையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இல்லை என்றால் ஒரு முறையில் செயல்படும் சார்ஜிங் இன்னொரு முறையில் செயல்படாமல் போகும்.

———

விகடன்.காமில் எழுதியது