Category Archives: ஐபோன்

உங்கள் மூளையின் சுறுசுறுப்பை அறிய உதவும் செயலி

உங்கள் மூளை எப்போது சுறுசுறுப்பாக செயல்படுகிறது என்பது உங்களுக்கே தெரியாத ரகசியமாக இருக்கலாம். ஆனால் அதை கண்டுபிடித்து சொல்ல ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது தெரியுமா?
பிரிட்டனை சேர்ந்த உளவியல் வல்லுனர்கள் உருவாக்கியுள்ள மூ-கியூ ( ஐகியூ போல இது மனநிலைக்கானது) எனும் இந்த செயலியை பயன்படுத்தினால் உங்கள் மூளை எப்போது சுறுசுறுபாக செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதற்காக, இந்த செயலியை டவுண்லோடு செய்து , அது கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து, அதன் பின்னர் வைக்கப்படும் சோதனையில் பங்கேற்க வேண்டும். கேள்விகள் உங்கள் மனநிலையை அறிந்து கொள்ளும் வகையில் அமைந்திருக்கும். அதாவது உற்சாக மனநிலையில் இருக்கிறீர்களா? அல்லது வாடிப்போன மலர்களாக இருக்கிறீர்களா என இந்த செயலி அனுமானித்துகொண்டு அதன் பிறகு உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் கேள்விகளை கேட்டு சோதனை வைக்கும்.

மொத்தம் ஐந்து முறை இந்த சோதனையில் பங்கேற்றால் போதும் அதனடிப்படையில் உங்கள் செயல்பாட்டை புரிந்து கொண்டு , அறிக்கையை அளிக்கும். அந்த அறிக்கை உங்கள் மூளையின் செயல்பாடு எந்த நேரத்தில் சிறந்ததாக இருக்கிறது என்பதை உணர்த்தும். அழகாக வரைபட விவரங்களுடன் ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில் உங்கள் செயல்பாடு எப்படி அமைந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எந்த நேரத்தில் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது என இந்த செயலி சுட்டிக்காட்டுகிறதோ , அந்த நேரத்தில் உங்களது முக்கியமான பணிகளை வைத்துக்கொள்ளலாம்.

பொதுவாக மனநிலைக்கும்,மூளையின் செயல்பாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக உளவியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். இது குறித்தி ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த செயலியின் பின்னே உள்ள ஹங்க்ரி மைண்ட்ஸ் லேப் குழுவினர் இது தொடர்பான ஆய்வை நடத்தி மூ-கியூ செயலியை உருவாக்கி உள்ளனர். உங்கள் மூளையின் ஆற்றல் பற்றி இந்த செயலி தகவல் தருவதோடு , மூளைக்கான பயிற்சியையும் பரிந்துரைக்கிறது. ஆம் மூளைக்கும் பயிற்சி அவசியம் என்கின்றனர்.
இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மூளை உற்சாகமாக இருக்கும் நேரத்தை தெரிந்து கொள்வதோடு, இந்த ஆய்விலும் பங்கேற்ற பெருமையை நீங்கள் பெறலாம்.

சுவாரஸ்யமான செயலி தான். ஆனால் இப்போதைக்கு ஐபோனுக்காக தான் அறிமுகமாகி இருக்கிறது. ஆண்ட்ராய்டு வடிவம் இன்னும் வரவில்லை.

செயலி பற்றிய விவரங்களுக்கு: http://www.hungrymindlab.com/moo-q/

—–

ikea1

ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் மேஜை, நாற்காலிகள்

ஸ்மார்ட்போனில் சார்ஜ் தீர்ந்து போவதும், அந்த நேரத்தில் சார்ஜர் தேடி அலைவதோ அல்லது சார்ஜரை பொருத்த மின்சார வசதியை தேடி அலைவதோ பரவலாக எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம் தான். ஆனால் வருங்காலத்தில் இந்த பிரச்சனை அநேகமாக இல்லாமல் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது. எப்போது போனில் சார்ஜ் இல்லாமல் போனாலும் இருந்த இடத்திலேயே சார்ஜ செய்து கொண்டு விடலாம். இதற்கு சார்ஜரே தேவை இருக்காது. அதெப்படி என்று ஆர்வத்தோடு கேட்டீர்கள் என்றால் எல்லாம் வயர்லெஸ் செய்யும் மாயம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆம், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களை வயர்லெஸ் மூலம் சார்ஜ் செய்து கொள்ளும் முறை தற்போது மெல்ல பிரபலமாகி கொண்டு வருகிறது. இதன் அடையாளமாக ஸ்பைனின் பார்சிலோனாவில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் எனும் கேட்ஜெட் கண்காட்சியில், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களை சார்ஜ் செய்ய வழி செய்யும் மேஜை, நாற்காலி மற்றும் மின்விளக்கு ஆகியவை அறிமுகம் ஆகியிருக்கிறது. பர்னீச்சர்கள் உலகில் புகழ்பெற்ற ஸ்வீடன் நிறுவனமான ஐகியா இந்த மேஜை நாற்காலிகளை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த நவீன பர்னீச்சர்கள் ஒவ்வொன்றிலும் வயர்லெஸ் சார்ஜிங் பேட் இணைக்கப்பட்டிருக்கும். அவற்றின் மீது போனை வைத்தால் போதும் வயர்லெஸ் உயிர்பெற்று போன் சார்ஜாகத்துவங்கிவிடும். தனியே கேபிள்களை பயன்படுத்தும் அவசியம் எல்லாம் கிடையாது.

மேஜை, நாற்காலி என்றால் அவற்றுடன் மின்சார் கேபிளை இணைக்க வேண்டும். மின் விளக்கு என்றால் அந்த தேவையும் இல்லை.
ikea_3214675b
இவை தவிர தனியே சார்ஜிங் பேடையும் ஐகியா அறிமுகம் செய்திருக்கிறது. அவற்றை சுவற்றிலோ அல்லது வேறு எந்த பரப்பிலோ பொருத்தி , வயர்லெஸ் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
வயர்லெஸ் மூலம் சார்ஜிங் செய்யும் வசதி நவீன வாழ்க்கைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்றாலும் இதை சாத்தியமாக்கும் தொழில்நுட்பம் நூற்றாண்டு பழைமையானது என்பது தான் சுவாரஸ்யமான விஷயம்.
வயர்லெஸ் சார்ஜிங் முறை மேக்னட்டிக் இண்டக்‌ஷன் எனும் முறையில் செயல்படுகிறது. இந்த வகை வயர்லெஸ் சாதனத்தில் டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசிவர் என இரண்டு பகுதிகள் இருக்கும். டிரான்ஸ்மிட்டரில் பாயும் மின்சாரம் காந்த மண்டலைத்தை உருவாக்கும். இதன் மூலம் ரிசிவரில் வோல்டேஜ் உண்டாகும். இந்த மின்சாரம் தான் சாதனங்களை சார்ஜ் செய்ய கைகொடுக்கிறது.

வயர்லெஸ் சாரிஜிங் முறையில் கேபிலுக்கே வேலை கிடையாது.
நவீன சாதனங்களில் அடிக்கடி சார்ஜ் தீர்ந்து போகும் பிரச்சனைக்கு தீர்வு காண பலவகையான பேக்கப் வழிகள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் வயர்லெஸ் சார்ஜிங் இதற்கான சரியான தீர்வாக அமையும் என கருதப்படுகிறது.

ஆனால் ஒன்று இந்த வகையில் சார்ஜிங் செய்து கொள்ள ஸ்மார்ட்போனில் அதற்கு ஏற்ற வசதி இருக்க வேண்டும். புதிய போன்கள் எல்லாம் இந்த அம்சத்துடன் தான் வருகின்றன. பார்சிலோனா கண்காட்சியில் அறிமுகமாகும் சாம்சங் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட புதிய போன்களில் இந்த வசதி இருக்கிறது.
பழைய போனாக இருந்தாலும் கவலையில்லை, பொருத்தமான சார்ஜிங் கேஸ் மூலம் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை பயன்படுத்தலாம்.

வயர்லெஸ் சார்ஜிங் பேட்களும் தனியே சந்தையில் இருக்கும் நிலையில் ஐகியா இதை பர்னீச்சர்களுடன் இணைத்து வீட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

முதல் கட்டமாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இந்த வயர்லெஸ் சாதங்கள் அறிமுகமாகி பின்னர் மற்ற நாடுகளுக்கு வர உள்ளது. அநேகமாக மற்ற நிறுவனங்களும் இந்த பாதையை பின்பற்றலாம்.
இவை தவிர ஸ்டார்பக்ஸ் மற்றும் மெக்டோனால்ட்ஸ் போன்ற நிறுவனங்களும் வயலெஸ் சார்ஜிங் வசதியை தங்கள் மையங்களில் அமைத்து வருகின்றன. வருங்காலத்தில் மேலும் பல பொதுஇடங்களில் வயர்லெஸ் சார்ஜிங் மையங்கள் உருவாகலாம்.

ஆகையால் போனில் சார்ஜ் தீரும் பிரச்சனையை மறந்தே போகலாம்.,
ஆனால் இதில் உள்ள ஒரே சிக்கல் என்ன என்றால், இப்படி வயலெஸ் மூலம் சார்ஜ் செய்யும் வசதியை வழங்க மூன்று வகையான முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. மூன்று அமைப்புகள் இவற்றை உருவாக்கி பிரபலமாக்கி வருகின்றன. இவற்றில் கியூஐ எனும் முறையை தான் ஐகியா பின்பற்றுகிறது. வயலெஸ் பவர் கன்சார்டியம் அமைப்பு இதன் பின்னே இருக்கிறது. சாம்சங் போன்றவை இதில் உறுப்பினர்கள்.

இந்த மூன்று அமைப்புகளும் வயர்லெஸ் சார்ஜ் வசதிக்கான பொது வரையறையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இல்லை என்றால் ஒரு முறையில் செயல்படும் சார்ஜிங் இன்னொரு முறையில் செயல்படாமல் போகும்.

———

விகடன்.காமில் எழுதியது

ஷூ அளவை அறிய ஒரு செயலி

screen568x568ஷூ அளவை கண்டறிந்து சொல்வதற்காக என்றே புதிய செயலி அறிமுகமாகி இருக்கிறது. நம் ஷூ அளவு நமக்கு தெரியாதா/ இதற்கெல்லாம் ஒரு செயலியா ? என்று கேட்பதற்கு முன் இணையம் மூலம் ஷூ வாங்கவோ அல்லது வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் போது ஷூ வாங்கவோ முற்படும் நிலையை கற்பனை செய்து பாருங்கள். உள்ளூரிலேயே ஷூக்களின் அளவு நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது. அப்படி இருக்க வெளிநாடுகளில் சொல்லவா வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் ஷூக்களுக்கு ஒரு அளவை பின்பற்றலாம் தானே. எனில் இணையம் மூலம் வெளிநாட்டு ஷூவை வாங்கும் போது உங்கள் ஷூவின் அளவு அந்நாட்டு கணக்கில் எந்த அளவு வருகிறது என தெரிந்து கொள்வது அவசியம் தானே. அதை தான் இந்த செயலி செய்கிறது. இதில் உங்கள் ஷூ அளவையும் , உங்கள் நாட்டையும் தெரிவித்தால் , அதற்கேற்ப நீங்கள் ஷூ வாங்க உள்ள நாட்டில் அதன் அளவு என்ன என்று கணக்கிட்டு சொல்கிறது. நீங்கள் வெளிநாட்டு ஷூவை வாங்கா விட்டாலும் கூட , அயல்நாட்டில் இருக்கும் நண்பரோ உறவினரோ உங்களுக்கு ஷூ வாங்கி பரிசளிக்க விரும்பினால் இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும் அல்லவா? இப்போதைக்கு ஐபோனுக்கான வடிவம் மட்டுமே இருக்கிறது.
பாருங்கள் , எப்படி எல்லாம் செயலிகளை உருவாக்குகின்றனர் !

செயலியை டவுண்லோடு செய்ய: http://www.mercurydesign.in/convert-my-shoe-size/

ஸ்லிம்மா,சூப்பரா,ஐபேட்ஏர் அறிமுகம்!.

>வர்ணனைகள் இல்லாமல் ஆப்பில் அறிமுகமா? மேலும் மெலிதானது,மேலும் லேசானது,மேலும் செயல்திறன் வாய்ந்தது எனும் வர்ணனையோடு ஆப்பிளின் ஐபேட் ஆர் அறிமுகமாகியுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவி நடைபெற்ற ஆப்பிளின் வருடந்திர தொழில்நுட்ப திருவிழாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஐபேடின் அடுத்த மேம்பட்ட மாதிரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2010 ம் ஆண்டு அறிமுகமான பலகை கணணி என்று சொல்லப்படும் டேப்லெட் வகையை சேர்ந்த ஐபேடின் ஐந்தாம் தலைமுறை வடிவமாக இது அமைந்துள்ளது. இதற்கு புதிய பெயரும் சூட்டப்பட்டிருக்கிறது. ஐபேட் ஏர். புதிய பெயர் கொஞ்சம் பொருத்தமானது தான். காரணம் ஐபேட் ஏர் அதற்கு முந்தைய மாதிரிகளை விட மெலிதானது மற்றும் லேசானது. இதன் அடை ஒரு பவுன்ட் தான் என்கிறது ஆப்பிள்.அதவாது 500 கிராமுக்கும் குறைவு. இதை கையில் வைத்து பார்த்தால் தான் இந்த அருமை தெரியும் என்றும் ஆப்பிள் சொல்கிறது.

எடையில் இளைத்திருப்பதோடு அளவிலும் மெலிந்திருக்கிறது.இந்த அகலம் 7.5 மி.மி தான். வழக்கமான அகலத்தை விட 20 சதவீதம் குறைவு . மொத்த அளவு 9.7 இன்ச்.( 24.6 செ.மி).மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல அளவிலும் சிறிதானாலும் ஐபேட் ஏரின் செயல்திறன் கூடியிருக்கிறது என்கிறது ஆப்பிள்.சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 5 ல் உள்ள ஆற்றல் மிக்க ஏ 7 சிப் இதன் இதயமாக இருக்கிறது.டெஸ்க்டாப் பக்கம் போகாமலே வழக்கமான சிபியூவை விட இரண்டு மடங்கு செய‌ல்திறன் சாத்தியம் என்கிறது ஆப்பிள்.கிராபிக்ஸ் போன்ற செயல்பாடுகளுக்கு அசத்தலாக் இருக்குமாம்.

அதோடு ரெடினா டிஸ்பிலே திரை தகவல்களை பார்ப்பதிலும் படிப்பதிலும் மேம்பட்ட அனுபவததை தரக்கூடியது. மேலும் பேட்டரி ஆற்றலும் குறைவாகவே பயன்படுத்தப்படுமாம்.

மேம்ப்ட்ட வயர்லெஸ் வசதி மற்றும் சக்தி வாய்ந்த அப்கள்( செயலிகள்) இதன் மற்ற சிறப்பம்சங்களாக சொல்லப்படுகிற‌து. 5 மெகாபிக்சல் ஐசைட் காமிரா இருக்கிறது.

நவம்பர் மாதம் சந்தைக்கு வருகிறது. இப்பொதே முன் பதிவு துவங்கியிருக்கிறது.

ஆப்பிள் அறிமுகம் என்றாலே அதன் அபிமானிகள் கொண்டாடவும் செய்வார்கள். ஒரு திரைப்படத்தை விமர்சிப்பதை விட அதிக நுணுக்கத்தோடு அதன் குறை நிறைகளை அலசி ஆராயவார்கள்.பார்ப்போம் தொழில்நுட்ப விமர்சக்ர்களிடம் ஐபேட் ஏர் என்ன மதிப்பெண் வாங்குகிறது என்று.

ஆப்பிளின் இணையதளம்;http://www.apple.com/ipad-air/

 ———

நன்றி; தமிழ்ஹிந்து இணையதளம்

ஆன்ட்ராய்டு போன்களில் மால்வேர் பாதுப்புகளை கண்டறிவது எப்படி?

டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் இருந்து பலரும் ஐபோன்களுக்கும் ஆன்ட்ராய்டு போன்களுக்கும் மாறிக்கொண்டிருக்கின்றனர். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கு முழுமையாக முழுக்கு போடும் நிலை இன்னும் வராவிட்டாலும் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலமே இமெயில் பார்ப்பதும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட் போடுவதும்,கூகுலில் தேடுவதும் அதிகரித்திருக்கிறது.

இப்படி ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன்கள் பக்கம் வந்திருப்பது இணைய பயனாளிகள் மட்டும் அல்ல, சாப்ட்வேர் வில்லன்களும் தான். ஆம்,டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை பாதிக்கும் மால்வேர்கள் இப்போது உங்கள் ஆன்ட்ராய்டு போன்களை குறி வைக்க துவங்கியிருக்கின்றன.

தீய நோக்கம் கொண்ட சாப்ட்வேர்களே மால்வேர் என்று இணைய உலகில் இகழ்ச்சியோடு குறிப்பிடப்படுகின்றன.விஷமத்தனமான வைரஸ்களை கம்ப்யூட்டருக்குள் நுழைப்பது,பாஸ்வேர்டு திருட்டு போன்றவற்றில் ஈடுபடுவது, பயனாளிகளின் இணைய நடவடிக்களைகளை உளவு பார்ப்பது, கிரிடிட் கார்ட் பயன்பாடு உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை திரட்டுவது என பல்வேறு இணைய குற்றங்களுக்கு மால்வேர்கள் தான் நுழைவு சீட்டாக இருக்கின்றன.

பொதுவாக விண்டோஸ் சார்ந்த கம்ப்யூட்டர்களுக்கு வேட்டு வைத்டு வந்த இந்த வில்லங்கமான சாப்ட்வேர்கள் இப்போது ஸ்மார்ட்போன்களை பதம் பார்த்து வருவது தான் கவலை தரும் விஷயம்.குறிப்பாக ஆன்ராய்டு போன்களை மால்வேர்கள் அதிகம் தாக்குவதாக தெரிய வந்துள்ளது.ஸ்மார்ட் போன் சார்ந்த பயன்பாட்டை மேம்படுத்த கைகொடுக்கும் அப் எனப்படும் செயலிகள் வழியாக மால்வேர்கள் உள்ளே நுழைந்து விடுவதாக கருதப்படுகிறது.

எனவே நீங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன் வைத்திருப்பவராக இருந்தால் மால்வேர் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. எல்லாம் சரி, உங்கள் போனில் மால்வேட்ர் குடிகொண்டிருக்கிறதா என எப்படி கண்டு பிடிப்பது? மால்வேர்களின் ஸ்டைலே உங்களுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக போனுக்குள் நுழைந்து விடுவதாக இருக்கின்றன.எனவே அவை போனில் தங்கள் வேலை காட்டத்துவங்கும் போது தான் அவற்றை கண்டுபிடிக்க முடியும்.

ஸ்மார்ட் போனின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களில் இருந்தே மால்வேர்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றனவா என்பதை தெரிந்து கொண்டு விடலாம். உதாரணத்திற்கு உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து வழக்கத்துக்கு அதிகமான தகவல்கள் (டேட்டா) பயன்படுத்தப்படுகின்றன என்றால் அது மால்வேரின் வேலையாக இருக்கலாம். பெரும்பாலான மால்வேர்கள் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கவே உருவாக்கப்படுவதால் அவை போனின் பின்னணியில் இருந்து தகவலகளை திரட்டிக்கொண்டே இருக்கும்.எனவே உங்கள் போனில் இருந்து தகவல் பயன்பாடு அதிகரித்தால் மால்வேர் ஸ்கேன் செய்து பார்ப்பது நல்லது.

அதே போல் உங்கள் ஸ்மார்ட் போனின் செயல்பாடு ஸ்மார்ட்டாக‌ இல்லாமல் போவதும் கூட மால்வேர் வேலையாக இருக்கலாம்.எனவே திடிரென காரணமே இல்லாமல் உங்கள் போன் செயல்பாடு மந்தமானாலோ அல்லது ஒவ்வொரு செயலுக்கும் வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்து கொண்டால் மால்வேர் பிரச்ச்னையாக இருக்கலாம்.

போனின் பேட்டரி அடிக்கடி சார்ஜ் தீர்ந்து போவதும் அழைப்புகளை சரியாக பேச முடியாமல் போவதும
் கூட மால்வேரின் காரணமாக இருக்கலாம்.

ஆக உங்கள்  போனின் செயல்பாடு பிரச்சனைக்குறியதாக இருந்தால் மால்வேர் பாதிப்பாக இருக்கலாம் என யூகித்து கொள்ளலாம். சரி, மால்வேர் பாதிப்பை கண்டுபிடித்தாகி விட்டது. அடுத்ததாக அவற்றை நிக்குவது எப்படி? இது குறித்து கவலையே வேண்டாம். காரணம் மால்வேர்களை நீக்குவதற்கான செயலிகள் இருக்கின்றன. இந்த செயலிகளை கூகுல் ஸ்டோரிலேயே டவுண்லோடு செய்யலாம். 360 மொபைல் செக்யீரிட்டு, அவாஸ்ட் ஆகியவை பிரபலமாக இருக்கின்றன.நார்ட்டன்,காஸ்பர்ஸ்கி போன்ற பிரப‌ல வைரஸ் தடுப்பு சேவை நிறுவங்களும் இத்தகைய செயலிகளை வழங்குகின்றன.

ஆனால் மால்வேர்களை அப்புறப்படுவத்துவதை காட்டிலும் அவற்றை உள்ளே விடாமல் இருப்பது சிறந்த வழி. இதற்கும் மால்வேர்கள் போனுக்குள் எட்டிப்பார்க்க வழியில்லாமல் செய்ய வேண்டும். மால்வேர்களுக்கு செயலிகள் தான் வாகனம். கூகுல் பிலே ஸ்டோர் செயலிகளை அலசிப்பார்த்தே அனுமதித்தாலும் வில்லங்கமான செயலிகள் எப்படியோ உள்ளே நுழைந்து விடுகின்றன.எனவே செயலிகளை டவுண்லோடு செய்யும் முன் நீங்கள் விழிப்போடு இருப்பது நல்லது.

புதிய செயலிகளை தேடிப்பார்த்து பயன்படுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால் எந்த ஒரு செயலியையும் டவுண்லோடு செய்யும் முன் அவை ஆபத்தில்லாதவையா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.இதற்கு எளிய வழி செயலி பற்றி மற்ற பயனாளிகள் தெரிவித்துள்ள விமர்சனங்களை படித்து பாருங்கள். அந்த செயலி பிரச்ச‌னைக்குறியது என்றால் பயனாளிகள் அவை பற்றி குறிப்பிட்டிருக்கலாம். 

அடுத்ததாக செயலியை உருவாக்கிய சாப்ட்வேர் நிபுணர் அல்லது சாப்ட்வேர் நிறுவனத்தின் பின்னணி பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவரது அல்லது அந்நிறுவனத்தின் பிற செயலிகள் பற்றியும் தகவல் தெரிந்து கொள்ளுங்கள். இந்த தகவல்கள் மூலமே அவை நம்பகமானவையா என தெரிந்து கொள்ளலாம்.

மற்ற இடங்களில் இருந்து செயலிகளை டவுண்லோடு செய்யும் போது கூடுதல் கவனத்துடன் இருங்கள்.சில செயலிகள் சூப்பர் யூசர் அந்தஸ்து வழங்குவதாக ஆசை காட்டும் . இவை கூட சில நேரங்களின் மால்வேருக்கான வழியாகிவிடலாம்.

எல்லாவற்றுக்கும் மேல் கம்ப்யூட்டரில் வைரஸ் ஸ்கேன் செய்வது போல ஸ்மார்ட்ட் போனிலும் அடிக்கடி வைரஸ் ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.