Category Archives: நெட்சத்திரங்கள்

இணையம் மூலம் நிறவேறிய இளைஞரின் கடைசி ஆசை


இது வெற்றிக்கதை அல்ல;நெகிழ வைக்கும் கதை!

ஒரு முகம் தெரியாத வாலிபரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற அறிமுகம் இல்லாதவர்கள் நேசக்கரம் நீட்டி நிதி உதவி செய்து இணையத்தின் ஆற்றலையும் அதன் மூலம் மனிதநேயத்தின் மகத்துவத்தையும் உணர்த்திய கதை.

அந்த வாலிபரின் பெயர் ஆரான் காலின்ஸ்.கம்ப்யூட்டர் வல்லுனராக இருந்த ஆரான் 30 வயதில் இவ்வுலகை விட்டு சென்று விட்டார்.இதனால் ஆரானை துரதிர்ஷ்டசாலி என்று சொல்லலாம்.ஆனால் இந்த வர்ணனை ஆரானுக்கே பிடிக்காது.காரணம் சிறிய வயதில் இறக்க நேர்ந்தது பற்றி அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை.அதோடு அவர் தன்னைப்பற்றி நினைத்ததை விட மற்றவர்கள் பற்றியே அதிகம் கவலைப்பட்டிருக்கிறார்.

அதனால் தான் தனது கடைசி விருப்பமாக ஓட்டல் சர்வர் ஒருவருக்கு டாலர் கொடுக்க வேண்டும் என்று எழுதி வைத்திருந்தார்.டிப்ஸ் என்றால் சும்மா 2 டாலர் 5 டாலர் எல்லாம் இல்லை,ஒரு பிட்சாவை சாப்பிட்டு விட்டு அதனை கொண்டு வந்து கொடுத்த சர்வருக்கு 500 டாலர் டிப்ஸ் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அது மட்டும் அல்ல தனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை கொண்டு பெற்றோர்களுக்கான தனது கடன் தொகையையும் கொடுத்து விட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இது கொஞ்சம் விசித்திரமான விருப்பமாக தோன்றலாம்.ஆனால் ஆரானின் மனித்நேயத்தை தெரிந்து கொண்டால் இது மிகவும் இயல்பானது என்று புரியும்.

ஆரான் எதிர்பாராத கருணையின் மூலம் மட்டற்ற மகிழ்ச்சி அடைய முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தவர்.கோபத்தை கூட கொடுப்பதன் மூலமே காட்டியவர்.ஒரு முறை ஓட்டலில் மிக மோசமாக நடந்து கொண்ட சர்வருக்கு அவர் 50 டாலர் டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட ஆரான் தனது மறைவிற்கு பிறகு முகம் தெரியாத ஒரு சர்வரின் முகத்தில் எதிர்பாராத மகிழ்ச்சியின் மலர்ச்சியை ஏற்படுத்த விரும்பியிருக்கிறார்.

ஆரானின் சகோதரர் சேத காலின்ஸ் இந்த விருப்பத்தை நிறைவேற்ற முற்பட்ட போது ஆரானின் கணக்கில் பணம் எதுவும் எஞ்சியிருக்கவில்லை.கொடுத்தே பழக்கப்பட்ட ஆரான் பெரிய அளவில் சேமித்து வைத்திருக்கவில்லை.

எனவே சேத காலின்ஸ் மற்றவர்களின் உதவியோடு இந்த விருப்பத்தை நிறைவேற்ற விரும்பி அதற்காக ஒரு இணையதளத்தை(ஆலன்காலின்ஸ் ,ஆர்ஜி) அமைத்து தனது ககோதரரின் கடைசி விருப்பத்தை குறிப்பிட்டு அதற்காக நிதி உதவி அளிக்குமாறு கேட்டிருந்தார்.

மிக எளிமையாக அமைக்கப்பட்டிருந்த அந்த இணையதளத்தில் ஆரான் பற்றியும் அவரது கடைசி விருப்பம் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

மிக சுருக்கமான அந்த அறிமுகத்தில் தனக்கு மற்றவர்கள் செய்த சிறு உதவிகளை மிகப்பெரிதாக கருதியவர் ஆரான் என குறிப்பிட்டு விட்டு,தனக்குறிய வரம்புகளோடு தாராள மனதுடன் நடந்து கொண்ட ஆரான் மற்றவர்கள் மீது மாற்றத்தை எற்படுத்தும் வகையில் தனது சார்பில் தாராளமாக கொடுக்கப்படும் நிதி அமைய வேண்டும் என விரும்பியதாக தெரிவித்திருந்தார்.

இதனை படித்தவர்கள் ஆரானின் மனதையும் அதில் நிறைந்திருந்த மனித நேயத்தையும் உணர்ந்திருக்க வேண்டும்.விளைவு சிறு தொகைகளாக நிதி உதவி குவிந்தது.

இந்த தொகையை கொண்டு சேத் காலின்ஸ் சகோதரரின் கடைசி விருப்பத்தை பூர்த்தி செய்ததோடு அதனை வீடியோவில் பதிவு செய்து யூடியூப்பிலும் வெளியிட்டார்.ஓட்டலில் பிட்சா சாப்பிட்டு விட்டு சாரா வார்டு என்னும் சர்வருக்கு 500 டாலர் டிப்ஸ் அளிப்பததையும் அதை சர்வரும் எதிர்பாராத ஆச்சர்யத்தையும் மகிழ்சியையும் வெளிப்படுத்தும் வகையில் அந்த வீடியோ காட்சி அமைந்திருந்தது.

அந்த வீடியோவை பார்த்தவர்கள் ஒரு மனிதரின் கடைசி விருப்பம் எப்படி இன்னொருவருக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை தர முடிந்த மனித்நேயத்தால் நெகிழ்ந்து போய தங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டனர்.அவர்களும் இந்த காட்சியை பார்த்து நெகிழ்ந்து போய் தங்கள் பங்கிற்கு அதனை பகிர்ந்து கொள்ள அடுத்த சில நாட்களில் பல்லாயிரக்கணக்கானோர் அந்த வீடியோவை பார்த்து நெகிழந்து போயினர்.

நெகிழ்ந்தவர்கள் தாரளமாக நன்கொடையும் அளித்தனர்.500 டாலர் நிதி கோரிக்கைக்கு மாறாக முதல் நாள் அன்றே பத்தாயிரம் டாலர் நிதி திரண்டது.தொடர்ந்து நிதி குவித்த வண்ணம் இருக்கிறது.

எதிர்பார்த்த தொகையை விட பல மடங்கு நிதி குவிந்தது ஒரு புறமிருக்க ஆரானின் விருப்பம் பலரிடம் ஏற்படுத்திய பாதிப்பு அதைவிட ஆச்சர்யத்தை அளிப்பதாக இருந்தது.

இந்த பாதிப்பை இணையவாசிகள் பின்னூட்டங்கள் வாயிலாக தெரிவித்திருந்த கருத்துக்களின் வாயிலாக பார்க்க முடிந்தது.

நான் சேவையில் துறையில் இருக்கிறேன்.டிப் அளிப்பதன் அருமை எனக்கு தெரியும்.அடுத்த முறை ஏதாவது ஓட்டலுக்கு சென்றால் எனக்கு ஆரானின் நினைவே வரும் என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

இன்னொருவரோ நான் பத்து டாலர் நன்கொடை வழங்கியுள்ளேன்,ஆரானின் கருணை போரை தொடர்வேன் என கூறியிருந்தார்.

ஆஷ்லே என்பவர்,நான் சர்வராக பணியாற்றுகிறேன்,இந்த வீடியோவை பார்த்ததும் நெகிழ்ந்து போய்விட்டேன்,ஆரானை போன்றவர்களை நினைத்து மகிழ்கிறேன் என்று கூறியிருந்தார்.

இன்னொருவர் இந்த செயலை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டுள்ளேன் எல்லோருக்கும் இது பரவட்டும் என தெரிவித்திருந்தார்.

ஆஹா ஆரான் உலகில் எத்தகைய தாக்கத்தை விட்டு சென்றிருக்கிறார் என வியப்பை வெளிபடுத்தியிருந்தார்.

இனி எப்போது சாப்பிட சென்றாலும் டிப் வழங்கும் போது ஆரானை நினைத்து கொள்வோம் என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

இப்படி பின்னூட்டங்களும் நெகிழ வைக்கும் வகையிலேயே அமைந்திருக்கிறன.

ஆரானின் நல்லெண்ணம் அவரது மறைவுக்கு பின்னும் உயிர் வாழ்கிறது.

இணையதள முகவரி;http://aaroncollins.org/

3 எழுத்தில் ஒரு இணையதளம் இருக்கும்.

மூன்று வார்த்தைகளில் என்ன செய்து விட முடியும்?
அமெரிக்க வாலிபரான மார்க பவோ,மூன்று வார்த்தைகளில் இணையஉலகையை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார்.
இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தி, பாராட்டுதல்களை பெற்று, வர்த்தக ரீதியிலான  பலனும்பெற்றிருக்கிறார்.
எல்லாமே மூன்று வார்த்தைகளால் தான் ஆம், அது தான் அவர் துவக்கி,நடத்திய இணைய தளத்தின் பெயர். அந்த தளத்தின மைய கருத்தும் தான்.
அதாவது மூன்று வார்த்தைகள்…
உங்கள் நண்பர்கள் (முத்தான)  மூன்று வார்த்தைகளில் உங்களைப்பற்றி சொல்ல வாய்ப்பளிப்பது  தான் இந்த தளத்தின் நோக்கம்.
மூன்று வார்த்தைகள் அவ்வளவு தான். அவற்றின் மூலம் நண்பர்கள் உங்களைப்பற்றி  என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்த தளத்தை முதலில் பயன்படுத்துவது உங்கள் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில்  நீங்கள்அவர்களை பற்றி உங்கள் மனதில் உள்ளதை பதிவு செய்யலாம்.மூன்றே வார்த்தைகளில்.
அதாவது அவர்களிடம்இருந்து உங்களுக்கு அழைப்பு வரும். மூன்று வார்த்தைகளை கேட்டு . இந்த தளத்தின் நோக்கம், உள்ளடக்கம், செயல்பாடு எல்லாமே மிகவும் எளிதானதுசுவாரஸ்யமானது.
இதில் உறுப்பினராக சேர்ந்ததுமே, அவர்களுக்கு என ஒரு இணைய முகரியோடு தனி பக்கம் ஒதுக்கப்படும். அந்த பக்கத்தை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தால், அதில் அவர்கள் உங்களைப்பற்றி மனதில் உள்ளதை சொல்வார்கள்.
“நச்’ என்றுநாலு வார்த்தை என்பார்களே,  அதைவிட “நச்சு’என்பது மூன்றே வார்த்தைகளில் மனதில் உள்ளதை சொல்வார்கள். “நான் உன்னை நேசிக்கிறேன் ‘என்றே “உன்னை போல ஒருவன் ‘என்றோ,எப்படி வேண்டுமானாலும் கருத்துக்கள் இருக்கலாம்.
அவை உண்மையாக இருக்கலாம். பாசாங்கா இருக்கலாம்.  யோசிக்காமல்  சொன்னதாக இருக்காலம் எப்படி இருந்தாலும், சுவாரஸியமாகதான் இருக்கும். பேஸ்புக்ஆதிக்கம் செலுத்தும் இன்றைய சமூக வலைபின்னல் யுகத்தில், என்னை பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்டறிய உதவும் தளங்கள் உருவாக துவங்கி உள்ளன. பார்ம் ஸ்பிரிங்க இவற்றில் முதலும்,முன்னோடியுமானதுது.
ஆனால்.த்ரிவேர்ட்ஸ் தளத்தை பொறுத்தவரை,  மூன்று வார்த்தை என்னும் கட்டுப்பõடுதான் அதன் தனிச்சிறப்பாக உள்ளது.
நண்பர்கள் கேட்கின்றனரே என்று அதிகம் யோசிக்க வேண்டாம். என்ன சொல்வது என்று குழம்பி தவிக்க வேண்டாம். மனதில் தோன்றும் மூன்று வார்த்தைகளை சொன்னால் போதும்.
சவால் கலந்த சுவாரசியத்தை தரக்கூடிய இந்த டேக் இட் ஈஸி பலரும் விரும்பவே செய்தனர்.  விளைவு த்ரிவேர்ட்ஸ் தளம் அறிமுகமான வேகத்திலேயே பிரபலமானது.
மூன்று வார்த்தைகளால் நண்பர்களைப் பற்றி சொல்வதா? என்று ஏற்பட்ட வியப்பு இந்த சேவையை பயன்படுத்த தூண்டியது என்றால், இந்த தளத்தின் மூலம் நண்பர்களால் தொடர்பு கொள்ளப்பட்டவர்கள், அட அழகாக இருந்தது என வியந்துபோய் தாங்கள் எங்கிருக்கிறோம் என்று நண்பர்களுக்கு அனுப்பி வைக்க அவர்கள் பதிலுக்கு தங்கள் நண்பர்களை தொடர்பு கொள்ள, அப்படியே இந்த தளம் மிகவும் பிரபலமாகிவிட்டது.
இந்த வெற்றி இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட, நிலங்களை வாங்கிப்போடும் ரியல் எஸ்டேட் அதிபர்களை போல இணைய உலகில் முகவரிகளை வாங்கி வைத்துக்கொள்ளும் இணைய முதலீட்டாளரான கோடீஸ்வரர் பெருந்தொகையை கொடுத்து இணைய தளத்தை வாங்கிக்கொண்டார்.
இதுதான் மார்க் பவோவின் வெற்றிக்கதை. கொடுத்து வைத்தவர் என்று சொல்ல தோன்றுகிறதா? மார்க் பவோவிடம் வியப்பதற்கும் பாராட்டுவதற்கும் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

திரி வேர்ட்ஸ் இணையதளத்தின் மூலம் புகழ் பெற்றிருக்கும், மார்க் பவோவை தன்னம்பிக்கை மிக்கவர் என்றும் சொல்லலாம். இல்லை, தெனாவெட்டான ஆசாமி என்றும் சொல்லலாம். அவர் தன்னைப் பற்றி அறிமுகம் செய்துகொள்ளும் விதம் அப்படித்தான் சொல்ல வைக்கிறது.
“தான் மார்க் பவோ. நான் 18 வயது இணைய தொழிலதிபர். இன்டெர்நெட் உலகில் அவேகோரா, ஜெனிவைன், சாப்ட்வேர் பிரிஸ், மற்றும் இதர திட்டங்கள், புதிய நிறுவனங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்’.
அது மட்டுமல்லாமல் கொட்டை எழுத்துக்களில் மார்க் பவோ 18
வயது தொழிலதிபர் மற்றும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் என்றும் அறிவித்து விட்டு இந்த
அறிமுகத்தை துவக்குகிறார்.
மேலும் அடுத்த பத்தியிலேயே எனது இலக்கு உலகில் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் என்கிறார்.
18 வயது வாலிபர் உலகையே மாற்றுவேன் என்றெல்லாம் பேசுவது நம்ப முடியாமல் இருக்கலாம்.
ஆனால், இந்த வார்த்தைக்களை வெறும் வாய்த்துடுக்கு என்றோ, விடலை கர்வம் என்றோ அலட்சியம் செய்யக்கூடாது. பவோ தனது இலக்கில் தெளிவாக இருக்கிறார்.
உலகில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்பவர்,  தனது செல்வம், உழைப்பை மருத்துவ ஆய்வு, ஆரோக்கியம், விண்வெளி ஆய்வு, மனிதாபிமான செயல்கள் உள்ளிட்டவற்றில் செலவிடுவேன் என்று அதனை தெளிவாக விளக்கவும் செய்கிறார்.
அதோடு புதிய நிறுவனங்களையும் ஆதரித்து கைதூக்கி விடுவேன் என்றும் சொல்கிறார்.
இவருடைய இந்த தன்னம்பிக்கை மிக்க சுய அறிமுகம் ஆச்சர்யத்தை அளிக்காமல் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் பவோ, வாய்சொல்
வீரரில்லை.
பவோ ஐந்தாவது டிரேடு படித்துக் கொண்டிருந்த போதே சாப்ட்வேர் விஷயங்களில் ஆர்வம் கொண்டிருந்தார். அதன் பயனாக தனது வீட்டுப் பாடத்தை செய்து முடிப்பதற்கான ஒரு சிறிய புரோகிராமை தானே உருவாக்கவும் செய்தார். அந்த புரோகிராமை பிளாப்பி டிஸ்க்கில் காபி செய்து தனது நண்பர்களிடம் ஐந்து டாலர்களுக்கு விற்கவும் செய்தார்.
அதன் பிறகு இணையதள வடிவமைப்பை கற்றுக் கொண்ட அவர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விவாதிப்பதற்கான டிபேட்வேர் என்று சொல்லப்படும் சாப்ட்வேரையும் உருவாக்கினார்.
தொடர்ந்து இணைய நிறுவனங்களையும் அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். தனது சுய அறிமுகத்திலேயே இந்த இணைய நிறுவனங்கள் பற்றி ரத்தின சுருக்கமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவேகோரா என்னும் நிறுவனம் நாம் தொடர்பு கொள்ளும் முறையை அடிப்படையிலேயே மாற்றி அமைத்து மக்களுக்கும், தொழில்நுட்ப சாதனங்களுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்பு தன்மையை உண்டாக்கும் நோக்கம் கொண்டது என்கிறார்.
அடுத்த நிறுவனமான ஜெனிவைன் புகைப்படங்கள், தகவல்கள், நிகழ்வுகள், பிறந்தநாள், வாழ்த்துக்கள் போன்றவற்றை தனிப்பட்ட முறையில் பகிர்ந்துகெõண்டு குடும்ப உறுப்பினர்கள் நெருக்கமான
தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது என்கிறார்.
சாப்ட்வேர் பிரிஸ், இமெயில் உதவியோடு நிறுவன செயல்பாடுகளை சிறப்பாக ஒருங்கிணைந்து நிர்வகிப்பதற்கானதாகும்.  இவற்றை எல்லாம் வெற்றிகரமான நிறுவனமாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.  இந்த நிறுவனங்கள் மூலம் பெரும் தொழிலதிபராகி ஆயிரம் கோடி டாலர்களுக்கு அதிபராக வேண்டும் என்பது அவரது இலக்காம். அந்த தொகையை வைத்துக் கொண்டுதான் மருத்துவ ஆய்வுக்கு உதவுவது, தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அமைப்பது, புதிய நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்து கைதூக்கி விடுவது போன்ற திட்டங்களையெல்லாம் பவோ வைத்திருக்கிறார்.
திரி வேர்ட்ஸ் இணையதளத்தை அவர் உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தி வெற்றி பெற்ற விதத்தை பார்த்தால் அவரிடம் சரக்கு இருப்பது தெளிவாக புரிகிறது. அதற்கேற்ப தொலைநோக்கான பார்வையும் இருக்கிறது. அதனால்தான் பவோ இணைய உலகில் பலரது கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.

————-

http://threewords.me/

இது யூடியூப் பல்கலைக்கழகம்

யூடியூப் மூலம் பாடம் நடத்தும் பேராசிரியர்கள் இருக்கின்றனர். யூடியூப் மூலம் பாடங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. ஆனால் யூடியூப் மூலமே ஒருவர் பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறார் என்பதுதெரியுமா?  அதாவது தனி நபர் பல்கலைக்கழகம்.
தனிநபர் ஒருவர் பல்கலைக்கழகம் நடத்துவது என்பது நம்ப முடியாத சாதனைதான்.
ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த சல்மான்கான் எனும் 33 வயது வாலிபர் இதனைத்தான் சாதித்திருக்கிறார்.
எத்தனை பேருக்கு தங்கள் பெயரிலேயே ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தும் வாய்ப்பு சாத்தியமாகும் என தெரியவில்லை. இருப்பினும் யூடியூப் மூலம் கான்  தனது பெயரிலேயே யூடியூப் பல்கலையை  நடத்தி வருகிறார்.
கான் அகாடமி என்று அழைக்கப் படும் அந்த பல்கலையின் நிறுவன ரும் அவரே, பேராசிரியரும் அவரே, ஆனால் அவர் நடத்தும் பாடங்களுக்கு மாணவர்கள் என்னவோ உலகம் முழுவதும் இருக்கின்றனர்.
ஆச்சரியமாக இருக்கலாம். கான் மற்றும் கான் அகாடமியை பொருத்தவரை எல்லாமே ஆச்சரியம் தான்.
அமெரிக்காவைச் சேர்ந்த கான் கணிதம் மற்றும் கம்ப்யூட்டர்அறிவியலில் பட்டம் பெற்றதோடு புகழ் பெற்ற ஹாவர்டு பல்கலையில்  எம்பிஏ பட்டம் பெற்றவர். இருப்பினும் அவர் ஆசிரியருக்கான பயிற்சியோ அல்லது கற்பிப்பதற்கான சானிதழோ பெற்றவர் இல்லை.
ஆசிரியராக பணியாற்றிய அனுபவமும் அவருக்கு கிடையாது. நிதித்துறையில் ஒரு முதலீட்டு நிறுவனத்தில் பணியாற்றி இருப்பதே அவரது அனுபவம்.  அந்த வேலையை உதறி தள்ளிவிட்டு கான் யூடியூப்பில் பாடம் நடத்த வந்து அதில் வெற்றி பெறவும் செய்திருக்கிறார்.
இதுவரை 1500க்கும் மேற்பட்ட வீடியோ பாடங்களை அவர் உருவாக்கி இருக்கிறார்.  கணிதம், அறிவியல், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான அந்த வீடியோ பாடங்களை அதற்காகவே  அவர் அமைத்துள்ள இணைய தளம் (அதுதான் அவரது பல்கலையும்கூட) வாயிலாக டவுன்லோடு செய்து பயிலலாம். உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் இதைத்தான் செய்து வருகின்றனர்.
யூடியூப்பை ஒரு கல்விச் சாதனமாக  கருதுவது வியப்பில்லை. பல பேராசிரியர்கள் தங்களது பாடங்களை வீடியோ பகிர்வு இணையதளமான யூடியூப் வாயிலாக பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
யூடியூப்  தளத்தில் திரைப்பட காட்சி அல்லது விளையாட்டு நிகழ்வுகளை பார்த்து ரசிப்பதுபோலவே பேராசிரியர்கள் பதிவேற்றி உள்ள வீடியோ படங்களையும் பார்க்கலாம், படிக்கலாம்.
இப்படி யூடியூப் மூலம் பாடம் நடத்தி நட்சத்திர அந்தஸ்து பெற்ற பேராசிரியர்களும் இருக்கின்றனர். எனினும் கான் நடத்தும் வீடியோ பாடங்கள் இவற்றில் இருந்தெல்லாம் முற்றிலும் வேறுபட்டவை.
கானின்  வீடியோ பாடங்கள் வழக்கமான வகுப்பறை பாடங்கள் அல்ல. உண்மையில் கான் தனது வீட்டின் படுக்கை அறையில் இருந்துதான் பாடங்களை பதிவு செய்கிறார்.
10 முதல் 20 நிமிடங்கள் வரையே நீடிக்கும் அந்த பாடங்கள் பேராசிரியரின் உரைபோல இல்லாமல் நண்பன் ஒருவன் பக்கத்தில் இருந்து விளக்கிச் சொல்வதுபோல அமைந்துள்ளன.
அவற்றில் கான் தோன்றுவது கூட கிடையாது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.
வரைபடங்கள்  விளக்கச் சித்திரங்கள், சமன்பாடுகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டியபடி தான் எடுத்துக் கொண்ட தலைப்பை  புரிய வைக்கும் வகையிலேயே அந்த வீடியோக்கள் அமைந்துள்ளன. எல்லாமே கான்  மாணவர்களோடு நேரில் பேசுவதைப்போலவே அமைந்திருப்பதாக பயன்பெற்றவர்களால் பாராட்டப்படுகிறது.
பள்ளி  கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் என பல தரப்பட்ட மக்கள் கான் வீடியோ பாடங்களை கவனிக்கின்றனர். நாள்தோறும் 70 ஆயிரம் முறைகளுக்கு மேல் அவரது பாடங்கள்  பார்க்கப் படுகின்றன.  அதாவது படிக்கப்படு கின்றன.
அமெரிக்காவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான பெர்கிலி பல்கலையின்  இணைய பாடங்களுக்கு மொத்தமாக கிடைக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட இது  இருமடங்கானது என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
கானின் வீடியோ பாடங்கள் இணையம் மூலம் ஆர்வத்தோடு பார்க்கப்பட்டு வருவதோடு பல நாடுகளில் தன்னார்வ அமைப்புகளால் டவுன்லோடு செய்யப்பட்டு  மாணவர்களுக்கு வகுப்பறைகளில் காண்பிக் கப்படுகின்றன. இவற்றின் விளைவாக கான் புகழ்பெற்ற யூடியூப் பேராசிரியராக உருவாகி இருக்கிறார்.
கான் தேர்வு செய்த இந்த இணைய பாதைக்கு பின்னே சுவாரஸ்யமான கதை இருக்கிறது.
யூடியூப் பேராசிரியர்களால் உருவான கான்  வங்கதேசத்தைச் சேர்ந்த தந்தைக்கும் இந்தியாவை கொல்கத்தாவைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர்.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூஆர்லைன்ஸ் நகரில்வசித்து வருகிறார்.
ஒருமுறை உறவுக்கார பெண் நாடியாவுக்கு  கணித பாடத்தில் தடுமாற்றம் இருப்பதை தெரிந்துகொண்ட கான் அவருக்கு பாடம் நடத்த ஒப்புக்கொண்டார். அதற்காக தான் சொல்லும் வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதித்தார்.
நாடியாவும் அவர் சொன்னபடி செய்து முடிக்கவே கணிதத்தில் நாடியாவுக்கு இருந்த குழப்பத்தை போக்கும் வகையில் பாடம் நடத்த தொடங்கிய கான் நாடியா தனது விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பிய போது பாடம் நடத்துவதை விட்டு விடாமல் இண்டர்நெட் மூலம் அந்த பணியை தொடர்ந்தார்.
யாகூ வலைவாசல் வழங்கிய  இணைய சேவையை பயன்படுத்தி  தனது இடத்தில் இருந்தபடியே அந்த பெண்ணுக்கு பாடம் கற்றுக்கொடுத்தார்.
ஆனால் கானுக்கு தொடர்ந்து பாடம் நடத்துவதில் நேரம் ஒதுக்க முடியாது நிலை ஏற்பட்டது. அப்போது அவர் தன்னுடைய விளக்கத்தை வீடியோவில் பதிவு செய்து அதனை யூடியூப் தளத்தில் பதிவேற்றினார்.  அந்த வீடியோவை பார்த்து கற்றுக்கொள்ளுமாறு உறவுக்கார பெண்ணிடம் கூறினார். இதன் பிறகுதான் அந்த மாயம் நிகழ்ந்தது.
கானின் உறவுக்கார பெண் அந்த வீடியோ பாடங்களை விரும்பி படித்ததோடு அவற்றை தனது தோழிகளோடும் பகிர்ந்துகொண்டார். தோழிகளும் வீடியோ பாடத்தை பார்த்து விட்டு கான் விளக்கும் அளிக்கும் முறையால் கவரப்பட்டனர். எனவே  தங்களுக்கும் வீடியோ பாடம் நடத்துமாறு கெஞ்சினர்.
இதை எதிர்பார்க்காத கான் வியந்து போனாலும் அவர்கள் வேண்டுகோளை ஏற்று வீடியோ பாடங்களை உருவாக்கி தரத் தொடங்கினார்.
மெல்ல மெல்ல வீடியோ பாடங்கள் சேர்ந்துகொள்ளவே மற்றவர்களும் பயன்பெறட்டுமே என்ற நோக்கத்தில் எல்லா பாடங்களையும் இணைய தளத்தில் இடம் பெற வைத்து புதிய பாடங்களையும் உருவாக்கினார். இப்படித்தான் உருவானது கான் அகாடமி.
2004ம் ஆண்டு  கான் இதனை பகுதி நேர பணியாகத்தான் செய்து வந்தார். ஆனால் வரவேற்பும், மாணவர்களும் குவியவே தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு முழு நேர பேராசிரியராகி விட்டார்.
தனது பாடங்கள் போர் அடிக்கக் கூடிய ரகம் அல்ல என்று கான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறார். போகிற போக்கில் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை அளிப்பவை இவை என்கிறார்.
ஒரு விதத்தில் கான் சொல்வது சரிதான். வீடியோ பாடங்கள் அலுப்புக் கூடியவையாக இருக்கக்கூடாது. அவை சுவாரஸ்யம் தர வேண்டும்.  ஆனால் பிரச்சனை என்னவென்றால் வகுப்பறையில் நடத்தப்படும் பாடங்கள் அப்படியே வீடியோ பாடங்களாக மாற்றப்படுகின்றன. இணையத்திற்கென்று எந்த மாற்றமும் செய்யப்படுவதில்லை. புதுமையும் புகுத்தப்படுவதில்லை.  கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பாடங்களை கவனிப்பது என்பது சவாலான விஷயம்தானே.
கல்லூரி சூழலில் வகுப்பறை எனும் பௌதீக இடத்தில் அமர்ந்து பேராசிரியர்கள் நடத்தும் பாடத்தை கவனிப்பது வேறு, வீட்டிலிருந்து இணையம்மூலம் பாடங்களை கேட்பது என்பது வேறு. சுவாரஸ்யமாகவும் புதுமையாகவும்  இல்லாவிட்டால்மனம் வீடியோ பாடத்தில் லயிக்காது.  ஆனால் கான் நடத்தும் வீடியோ பாடங்கள் இணைய யுகத்திற்கு ஏற்றவையாக இருக்கின்றன.  அதிகபட்சம் 20 நிமிடத்தில் தனது பாடத்தை அவர் முடித்துக்கொள்கிறார்.  அதாவது சராசரியாக ஒரு யூடியூப் வீடியோ காட்சியை பார்த்து முடிக்கும் நேரத்தில் அவர் தனது பாடத்தை முடித்துக்கொள்கிறார். அவர் பாடம் நடத்தும் முறையும் வித்தியாசமானது. மற்ற பேராசிரியர்கள் போல  ஏதோ பிரசங்கம் செய்வது போல இல்லாமல் நட்புணர்வோடு  அருகே அமர்ந்து சொல்லி கொடுக்கும் வகையில் அவரது பாடங்கள் அமைந்துள்ளது.  இந்த தோழமையே கானின் பாடங்களை பிரபலமாக்கி உள்ளது. மாணவ பருவத்தில் எனக்கு எவ்வாறு கற்றுத் தரப்பட வேண்டும் என்று விரும்பினேனோ, எதிர்பார்த்தேனோ  அதே முறையில் மாணவர்களுக்கு இப்போது நான் கற்றுத் தருகிறேன் என்கிறார் கான்.
எனவே வகுப்புகளையும் பேராசிரியர்களையும் வெறுப்பவர்கள் கானை நேசிப்பது நிச்சயம். ஆனால் கான் கல்லூரியில் பாடம் பயிலலாமே தவிர பட்டம் வாங்க முடியாது. இருப்பினும் பாடங்களை நன்றாக புரிந்துகொள்வதற்காக கேள்வி கேட்டு பதில் அளிக்கும் பயிற்சிகளை வைத்திருக்கிறார். கான் பாடங்களின் வரம்பை மற்ற எவரையும் அவரது மாணவர்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளனர். கான் வகுப்பை பள்ளி, கல்லூரிகளுக்கு மாற்றாக நினைக்காமல் அவற்றுக்கு துணை செய்யக்கூடியதாகவே  மாணவர்கள் கருதுகின்றனர். வகுப்பில் சரியாக புரியாத விஷயங்களை விளங்கிக்கொள்ள கான் பாடங்களை  பயன்படுத்தி கொள்கின்றனர்.
www.khanacademy.org

இவர் கம்ப்யூட்டர் வைரஸ் பாய்ந்த மனிதர்

உலகிலேயே கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்பட்ட முதல் மனிதர் என்று இங்கிலாந்து பேராசிரியர் மார்க் காசன் தன்னை வர்ணித்துக்கொண்டுள்ளார்.இந்த முதல் மனிதர் என்பது கொஞ்சம் முக்கியமானது.இதன் பொருள் இனி வரும் காலங்களில் மேலும் பலர் கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்படலாம் என்பதே.

சொல்லப்போனால் பேராசிரியர் கசான் இந்த ஆபத்தை உணர்த்துவதற்காகவே தனது கையில் பொருத்தப்பட்ட சிப்புக்குள் வைரஸை ஏற்றிக்கொண்டிருக்கிறார்.அது மட்டுமல்ல இந்த வைரஸை மற்ற கம்ப்யூட்டர் அமைப்புகளுக்கும் பரவ விட்டு காண்பித்திருக்கிறார்.

ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த கதையாக வைரஸ் கம்ப்யூட்டர் ,லேப்டாப்,ஸ்மார்ட் போன் செல்போன் என பரவி தற்போது மனித சிப்புக்குள்ளும் நுழைந்து விட்டது.இதனை உலகிற்கு உணர்த்திய பேராசிரியரின் செயல் துணிச்சலானது;அதே நேரத்தில் தொலை நோக்கு மிக்கது.

பேராசிரியர் மனித குலத்தின் நலனுக்காக தன்னையே சோதனை கூடமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்.

எல்லாம் சரி பேராசிரியரின் உடலுக்குள் சிப் வந்தது எப்படி?அதை ஏன் அவர் விரும்பி வைரஸ் உலாவும் வாகனமாக மாற்ற வேண்டும்?

இந்த கேள்விக்கான பதில் கேசன் ஆர்வம் காட்டும் துறையில் அடங்கியிருக்கிறது.இங்கிலாந்தில் உள்ள ரீடிங் பல்கலையில் பேராசிரியார பணியாற்றும் சைபர்நெட்டிக்ஸ் துறையின் நிபுணராக அறியப்படுகிறார்.சைபர்நெட்டிக்ஸ் என்பது கம்ப்யூட்டர் சார்ந்த பொது வார்த்தை. அதற்கு பரந்து விரிந்த அர்த்தம் உண்டு.மனிதன் மற்றும் இயந்திரங்கள் சந்திக்கும் புள்ளி தொடர்பான ஆய்வும் இதில் அடங்கும்.

இந்த உறவில் ஆர்வம் கொண்டவர் தான் காசன்.

ஆம் மனித குலம் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்வதோடு நில்லாமல் அதனை தழுவிக்கொள்ளவும் முயன்று வருகிறது.இதன் பயனாக மனிதனுக்கும் இயந்திரத்துக்கும் இடையிலான தொடர்பு,உறவு மேலும் நெருக்கமாகி கொண்டிருக்கிறது.உடல் உறுப்புக்குள் கம்ப்யூட்டர் சிப்பை பொருத்திக்கொள்வது தான் இதன் முதல் படி.

ஒரு சிப்புக்குள் ஒராயிரம் விஷயங்களை அடக்கிவிடலாம் இல்லையா? இந்த ஆற்றலை பயன்படுத்தி சின்ன்சஞ்சிறு சிப்பை உடலின் ஒரு அங்கமாக்கி ஹைடெக்கான செயல்பாடுகளை சாத்தியமாக்கிகொள்ளலாம்.உதராணமாக கையில் சிப்பை வைத்து கொண்டு அதனை அடையாள அட்டையாக பயன்படுத்தாலாம்.

ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள பிரபலாமான கடற்கரை விடுதியில் விஐபி உறுப்பினர்களுக்கு இப்படி கை விரலுக்குள் பொருந்திய சிப்பை அடையாள அட்டையாக வழ்ங்கியுள்ளனர்.அந்த சிப்புக்குள் அவர்களைப்பற்றிய தனிப்பட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். விடுதிக்குள் நுழையும் போது அவர்கள் கை காட்டினால் போதும் கம்ப்யூட்டர் அவர்கள் யார் என்பதை புரிந்து கொன்டு உள்ளே அனுமதித்துவிடும்.வாயிலில் நின்று பதில் சொல்ல வேண்டியதில்லை.

அதே போல விடுதியில் இருந்து வெளியேறும் போது உறுப்பினர்கள பயன்படுத்திய வசதிகளுக்கான தோகையும் சிப்பில் தானாகவே கணக்கிடப்பட்டிருக்கும்.கட்டணம் செலுத்தக்கூட இதனையே பயன்படுத்தலாம்.

பார்சிலோனா கடற்கரை விடுதி கோடிஸ்வர வாடிக்கையாளர்களூக்கான விஷேச வசதியாக் ஒரு புதுமைக்காக இதனை அறிமுகம் செய்துள்ளது.ஆனால் காலப்போக்கில் இப்படி சிப்பை சொருகி கொள்வது மேலும் பரவலாகிவிடும் என்று கருதப்படுகிறது.
இதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.ஏற்கனெவே இத்தகைய சிப்களை விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க மற்றும் பின்தொடர்ந்து ஆய்வு செய்ய பயன்படுத்தி வருகிறோம்.

இதையே அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்று மனித செயலபாடுகளையும் சிப்புகளால் மேம்படுத்தலாமே என்று நிபுணர்கள் பலர் கருதுகின்றனர்.இது தொடர்பான பல்வேறு சோதனை மற்றும் முன்னோடி முயற்சிகளும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

அர்சி அளவுக்கு ஒரு சிப்பை கை விரல் போன்றவற்றில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்திக்கொண்டால் மந்திரக்கோல் போல மாயங்களை நிகழ்த்தலாம்.

இவ்வளவு ஏன் தனியே ஏடிஎம் கார்டுகளே தேவைப்படாது.கையில் உள்ள சிப்பையே கார்டாக பயன்படுத்தலாம். அப்படியே ஒருஅரின் பருத்துவ விவரங்களையும் சிப்பிலேமித்து வைக்கலாம்.அவசர நிலையின் போது அந்த சீப்பை ஸ்கேன் செய்தால் போதும் அவரின் மருத்துவ வரலாற்றை தெரிந்து கொண்டு அதற்கேற்ப சிகிச்சை அளிக்கலாம்.

இன்னும் எத்தனையோ வழிகள் இருக்கின்றன.விஷயம் என்னவென்றால் மனிதனும் இயந்திரமும் நெருங்கி வருகின்றன.

இப்போது பெரும்பாலும் ஆய்வு நிலையிலேயே இருந்தாலும் எதிர்காலத்தில் மனித இயந்திர கலப்பு நடைமுறை முக்கியத்துவம் பெறலாம்.அப்போது ஏற்படக்கூடிய விளைவுகளை பயன்களை ஆய்வு செய்து பார்ப்பது தான் பேராசிரியர் காசனின் நோக்கம்.

கம்ப்யூட்டர் சிப் என்றதும் வைரஸ் இல்லாமல் இருக்குமா?இந்த வைரஸ் மனித சிப்பையும் பாதிக்குமா? இப்படி ஒரு சந்தேகம் காசனுக்கு ஏற்பட்டதன் விளைவாகவே தனது கையில் பொருத்தப்பட்ட சிப்புக்குள் வைரசை ஏற்றிவிட்டார்.பின்னர் அந்த சிப்பை பயன்படுத்திய போது மற்ற கம்ப்யூட்டர் அமைப்புகளும் வைரஸ் பரவியது.

இது காசன் எதிர்பார்த்தது தான். உடலுக்குள் பொருத்தப்படும் சிப் வைரஸால் பாதிக்கப்படால் விபரீதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கருதிய அவர் இதனை நிருபித்தும் காட்டியிருக்கிறார்.

யோசித்துப்பாருங்கள் நாளை யார் வேண்டுமானாலும் கையில் வைரஸை வைத்துக்கொண்டு உலக கம்ப்யூட்டர்களை செயல் இழக்க வைக்கலாம்.தெரியாமலும் இந்த விபரீதம் நிகழலாம்

இவற்றை ஏதோ அறிவியம் புனைகதை என்றும் அலட்சியப்படுத்தமுடியாது.பேஸ்மேக்கர் போன்ற சாதனங்கள் ஏற்கனவே ம்னித உடலுக்குள் நுழைந்தாகி விட்டது.மேலும் பல மருத்துவ பயன்பாடுகள் வர உள்ளன.

ஆக எதிர்காலம் இயந்திரங்களின் அதிசயம் மற்றும் ஆபத்துக்கள் நிரைந்ததாகவே இருக்கிறது.

மனைவி அழுவதெல்லாம்… இணைய தளமாகுமே!

நீங்களும் இணைய நட்சத்திரமாக வேண்டுமா? அப்படியென்றால் வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

கூடவே உங்கள் மனைவியையும் ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக மனைவியின் குறைகளை அவரது குணமாக எடுத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.

 இப்படி மனைவியின் செயல்களை கொண்டாட முடியும் என்றால் அதற்காக ஒரு இணையதளத்தை அமைத்து உலகையே ரசிக்க வைக்கலாம். இதற்கு முன்னுதாரணம் வேண்டும் என்றால் அமெரிக்காவின் பார்கர் ஸ்டெச்சை சொல்லலாம்.

இளைஞரான ஸ்டெச்சை ஒரு இணைய நட்சத்திரம் என்றும் சொல்லலாம். மனைவியின் மூலம் அவருக்கு கிடைத்த அந்தஸ்து அது. அப்படியே ஸ்டெச்சை உலகின் அருமையான கணவன் என்றும் சொல்லலாம். மனைவியின் ஒவ்வொரு அசைவையும் நேசிக்கத் தெரிந்த கணவர். அந்த நேசிப்பை உலகோடு பகிர்ந்து கொள்ள கிரையிங் வைப் என்னும் இணையதளத்தை அவர் உருவாக்கினார்.

அநேகமாக மனைவிக்காக இணையதளத்தை உருவாக்கிய முதல் மனிதர் ஸ்டெச்சையாகத்தான் இருக்க வேண்டும். இந்த எண்ணம் வேறு யாருக்காவது ஏற்பட்டிருக்குமா என்பதும் சந்தேகமே! எல்லாம் அவருடைய மனைவியின் அழுகை பழக்கத்திலிருந்து துவங்கியது.

திரைப்படங்களை பார்க்கும் போது உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் சிந்துபவர்களை பார்த்திருக்கிறோம் அல்லவா, ஸ்டெச்சின் மனைவி ஹாலியும் இதே ரகத்தைச் சேர்ந்தவர். ஆனால் கொஞ்சம் ஓவராக உணர்ச்சிவசப்படும் ரகம்! உணர்ச்சி வசப்படலின் உச்சிக்கே செல்பவர் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

அதாவது விழுந்து விழுந்து சிரிப்பது என்று சொல்வது போல் ஸ்டெச்சின் மனைவி ஹாலி கண்ணில் நீர் வழிய வழிய அழுது கொண்டே இருப்பாராம். அதிலும் அவர் அழும் படங்களை பார்த்தால் சிரிப்பு வந்து விடுமாம். ஆம், டைட்டானிக் போன்ற சோகமான காவியங்களை பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு சிலர் படத்தோடு ஒன்றிப் போய் கண்ணீர் விடுவதுண்டு. ஆனால் ஹாலியோ அவதார் போன்ற படங்களை பார்த்தால் கூட அதில் ஒன்றிப் போய் அழுது தீர்ப்பாராம்.

பிரம்மிப்பூட்டக்கூடிய படங்களாக கருதப்படும் லார்டு ஆப் த ரிங்ஸ், பேக் டூ தி பியுச்சர் போன்ற படங்களை எல்லாம் பார்த்த பின் ஹாலி அரை மணி நேரம் அழுது தீர்த்திருக்கிறாராம். அதிலும் எப்படி தெரியுமா, படத்தில் வரும் பாத்திரங்கள் ஏதா நெருங்கிய சொந்தம் போல நினைத்து புலம்பியபடி!

இப்படி ஒரு மனைவி கிடைத்திருந்தால் மற்றவர்கள் தலையில் அடித்துக் கொள்ளவோ, திட்டித் தீர்க்கவோதான் செய்திருப்பார்கள். மனைவி மீது பாசம் மிக்கவர்கள் கவலைப்படவே செய்திருப்பார்கள்.

 ஹாலியும், ஸ்டெச்சும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதால் ஹாலியை பற்றி ஸ்டெச் நன்றாக புரிந்து வைத்திருந்தார்.

காதலிக்கும் காலத்திலேயே “எல்ப்’ என்னும் படத்தை பார்த்து ஹாலி அழுத விழிகளோடு அரற்றியதை பார்த்து ரசித்திருக்கிறார். “எல்ப்’ போன்ற ஜனரஞ்சகமான படத்தை பார்த்து கூட ஒருவரால் அழ முடியும் என்பது அவருக்கு அப்போது நம்ப முடியாத ஆச்சரியத்தை அளித்தது.

தியேட்டரில் எல்லோரும் ஜாலியாக ரசித்த ஒரு படத்தை பார்த்து தன்னுடைய காதலி மட்டும் கர்ச்சீப் நனைந்து போகும் அளவுக்கு அழுகாச்சியாக இருந்தது வியப்பை அளித்தாலும் அவருள் லயிப்பை ஏற்படுத்தவே செய்தது.

காதலின் வேகத்தில் காதலியின் வினோத குணம் ரசிக்கக் கூடியதாகவே தோன்றியது புரிந்து கொள்ளக் கூடியதே! ஆனால் திருமணத்திற்கு பின்னும் இந்த ரசனை மாறாமல் இருந்ததுதான் வியப்பு. திருமணமான பின் ஸ்டார் வார்ஸ் படத்தை வீட்டில் ஹோம் தியேட்டரில் இருவரும் சேர்ந்து பார்த்தனர். படம் முடியும் தருவாயில் ஹாலி அழுகைக்கு மாறியிருந்தார்.

ஸ்டார் வார்ஸ் படத்தை பார்த்து கூட ஒருவரால் அழ முடியுமா என அசந்துப் போன ஸ்டெச், வீடியோ காமிராவை எடுத்து மனைவி அழுது புலம்புவதை அப்படியே படம் பிடித்து விட்டார். அதன் பிறகு யுடியூப் யுகத்தில் பலரும் செய்யக் கூடியதை செய்தார். ஆம் யுடியூப் வீடியோ பகிர்வு தளத்தில் மனைவியின் அழுகை வீடியோவை பதிவேற்றி விட்டார்.

இந்த வீடியோ காட்சியை பலரும் பார்த்து ரசித்தனர். ஒரு கட்டத்தில் ஹாலிவுட் நடிகர்கள் டிம்பர்லேக் மற்றும் ஆஷ்டன் குட்சர் இந்த வீடியோவை பார்த்து ரசித்து டிவிட்டரில் குறிப்பிட்டனர்.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் ஹாலியும் இதனை ரசிக்கவே செய்தார் என்பதே! ஆசைக்கணவர் தன்னை காட்சி பொருளாக்கி விட்டாரே என்று கோபப்படாமல் தன்னைப் பார்த்து தானே சிரித்து மகிழ்ந்து கொண்டார்.

யுடியூப்பில் கிடைத்த வரவேற்பை அடுத்து ஸ்டெச் மனைவியின் அழுகை வீடியோக்களுக்காக என்றே இணையதளம் ஒன்றை உருவாக்கினார். மிகவும் பொருத்தமாக “அழும் மனைவி’ (கிரையிங் வைப்) என பெயரிடப்பட்ட அந்த தளத்தின் மூலம் மனைவி அழுகை ரியாக்ஷன்களை படம் பிடித்து பதிவேற்றி வருகிறார்.

மிக எளிதாக வடிவமைக்கப்பட்ட இந்த தளத்தில் தன்னுடைய அழும் மனைவி பற்றி சுருக்கமாகவும் அழகாகவும் குறிப்பிட்டு மனைவியை அழ வைக்கக் கூடிய அடுத்த படத்தை பரிந்துரைக்குமாறு இணையவாசிகளுக்கு வேண்டுகோளும் வைத்திருக்கிறார்.

மனைவி அழுவது நிஜம்தானா? எல்லா படங்களுக்கும் இப்படி அழுவது வழக்கமா? என வரிசையாக கேள்விகளை கேட்டு அவற்றுக்கான பதில்கள் மூலம் மனைவியை அழகாக உலகிற்கு அறிமுகம் செய்திருக்கிறார்.

இப்படி அழும் பழக்கம் நான்கு வயதிலிருந்தே இருக்கிறது. அவருடைய அழுகை நடிப்பல்ல அந்த அளவுக்கு படத்தில் ஒன்றிப் போய் விடுகிறார். மற்றபடி அவருக்கு எந்தவிதமான கோளாரும் கிடையாது. தவிர புத்தகம் படிக்கும் போதோ மற்ற நேரங்களிலோ இப்படி அழுவதில்லை என்றெல்லாம் விளக்கம் அளிக்கும் ஸ்டெச், இப்படி இணையதளம் அமைத்து தான் அழும் காட்சிகளை உலகமே பார்க்க வைத்ததற்காக மனைவி ஹாலி கோபம் கொள்ளவில்லை என்றும் இதனை அவரும் சேர்ந்தே ரசிப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வீடியோ காட்சிகள் சிரிப்பை வர வைக்கிறது என்றும், ஹாலி நினைப்பதாக கூறும் ஸ்டெச் தன்னைப் பார்த்து சிரித்து ரசிக்கும் அளவுக்கு அவருக்கு பக்குவம் இருப்பதாகவும் பெருமிதப்பட்டுக் கொண்டுள்ளார்.

 பாராட்ட வேண்டிய விஷயம் அல்லவா!

———-

http://cryingwife.com/_/home.html