Category Archives: நெட்சத்திரங்கள்

இணையதளம் வைத்திருக்கும் ஆட்டோக்காரர்

சென்னையைச்சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாம்ஸன் பற்றி நீங்கள் டைமஸ் அல்லது ஹிண்டு நாளிதழில் படித்திருக்கலாம்.படிக்காதவர்களுக்காக இந்த பதிவு.

சாம்ஸன் தனக்கென சொந்தமாக இணையதளம் வைத்திருக்கிறார்.அநேகமாக ஆசியாவிலேயே இணையதளம் வைத்திருக்கும் ஒரே ஆட்டோ டிரைவர் என்று சாம்ஸனை சொல்லலாம்.ஏன் உலகிலேயே கூட இவர் ஒருவராக தான் இருக்க வேண்டும்.கூகுலில் சொந்தமாக இணையதளம் வைத்திருக்கும் ஆட்டோ டிரைவர் என்று தேடிப்பார்த்தால் சாம்சன் தான் முதலில் வருகிறார். வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை.

அப்படியே இருந்தாலும் சாம்ஸனின் சிறப்பு ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை.

இண்டெர்நெட்டை அவ‌ர் த‌ன‌து தொழிலை மேம்ப‌டுத்திக்கொள்ள‌ ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தே பாராட்ட‌த்த‌க்க‌து.அதோடு ஆட்டோ டிரைவ‌ர் ஒருவ‌ர் இண்டெர்நெட்டின் அருமையை உண‌ர்ந்திருப்ப‌தும் இணைய‌த‌ள‌ம் மூல‌ம் த‌ன‌க்கான‌ வாடிக்கையாள‌ர்க‌ளை தேடிக்கொள்வ‌தும் ந‌ல்ல‌ விஷ‌ய‌ம் தானே.
சாம்ஸ‌னின் இணைய‌த‌ள‌ம் எந்த‌வித‌ அல‌ங்கார‌மும் இல்லாம‌ல் எளிமையாக‌ இருக்கிற‌து.சுய‌புராண‌த்துக்கு இட‌ம் கொடுக்காம‌ல் த‌ன்னைப்ப‌ற்றி சுருக்க‌மாக‌ அறிமுக‌ம் செய்து கொள்ளும் சாம்ஸ‌ன் பாதுகாப்பான‌ ஆட்டோ ப‌யண‌த்திற்கு த‌ன்னை நாட‌லாம் என்று குறிப்பிட்டுள்ளார்.நுங்கம்பாக்கம் தாஜ் ஓட்டல் வாசலில் தனது ஸ்டான்ட் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னை ந‌க‌ரை த‌ன‌க்கு ந‌ன்றாக‌த்தெரியும் என்று பெருமைபட்டுக்கொள்ளும் அவ‌ர் ந‌ல்ல‌ ஒட்ட‌லில் இருந்து ந‌ல்ல‌ க‌டைக‌ள் வ‌ரை எல்லாவ‌ற்றுக்கும் அழைத்துச்செல்வேன் என்று அழைப்பு விடுக்கிறார்.அதே நேர‌த்தில் டாக்சியை விட‌ ஆட்டோ ம‌லிவான‌து என்றும் பெருமைப்ப‌ட்டுக்கொள்கிறார்.
முக‌ப்பு ப‌க்க‌த்தின் மைய‌த்தில் இப்ப‌டி ர‌த்தின‌ச்சுருக்க‌மாக‌ அறிமுக‌ம் செய்து கொள்ப‌வ‌ர் அருகே கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ த‌லைப்புகளில் ந‌க‌ர‌ச்சுற்றி பார்ப்ப‌து, த‌ன‌து ந‌ண்ப‌ர்க‌ள்,ஷாப்பிங் ப‌ற்றியெல்லாம் குறிப்பிடுகிறார். எல்லாமே சுருக்க‌மாக‌த்தான்.

அவரைப்பற்றி வாடிக்கயாள‌ர்க‌ள் கூறியவை த‌னித‌லைப்பில் இட‌ம்பெறுகிற‌து.அவ‌ரை தொட‌ர்பு கொள‌வ‌த‌ற்கான‌ இமெயில் முக‌வ‌ரியும் கொடுக்கப்ப‌ட்டுள்ள‌து.

இந்திய‌ வ‌ருகை த‌ரும் வெளிநாட்டு ப‌ய‌ணிக‌ள் முன்கூட்டியே எல்லாவ‌ற்றையும் திட்ட‌மிடும் ப‌ழ‌க்க‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள் என்ப‌தால் சென்னைக்கு வ‌ருப‌வ‌ர்க‌ள் இந்த‌ த‌ள‌த்தின் மூல‌மே சாம்ஸ‌னை புக் செய்து கொள்ள‌ வாய்ப்புள்ள‌து.வெளிநாட்டு ப‌ய‌ணிகளுக்கும் இது ந‌ம்பிக்கையான‌து.
ப‌ல‌ ப‌ய‌ணிக‌ள் இப்ப‌டி இணைய‌த‌ள‌த்தின் மூல‌ம் த‌ன்னை நாடுவ‌தாக‌ சாம்ஸ‌ன் கூறியுள்ளார்.

எல்லாம் ச‌ரி சாம்ஸ‌னின் இந்த‌ இணைய‌ ப‌ய‌ண‌ம் எப்ப‌டி துவ‌ங்கிய‌து.சில‌ ஆண்டுக‌ளூக்கு முன் ஜ‌ப்பானிய‌ ப‌யணி ஒருவ‌ர் சாம்ஸ‌னுக்கு இமெயில் முக‌வ‌ரியை உருவாக்கித்த‌ந்துள்ளார்.அத‌ பிற‌கு ம‌ற்றொரு வெளிநாட்டு ப‌ய‌ணி அவ‌ரது இணைய‌த‌ள‌த்தை வ‌டிவ‌மைத்து த‌ந்துள்ளார்.இன்னொருவ‌ர் அவ‌ருக்கு லேப்டாப்பை ப‌ரிச‌ளித்துள்ளார்.

இப்போது சாம்ஸ‌ன் த‌ன‌து இணைய‌த‌ள‌த்தால் மிக‌வும் பிஸியாக் இருக்கிறார்.
சாவாரியைத்தேடி ஓடி அலையாம‌ல் இணைய‌ம் மூல‌மே அவ‌ர் ச‌ர்வ‌தேச‌ வாடிகாகையாள‌ர்க‌ளை க‌வ‌ர்ந்திழுத்து கொண்டிருக்கிறார்.
சாம்ஸ‌னின் இணைய‌ முக‌வ‌ரி. ட‌க் டாஸ்டிக் டாட் காம்.வெளிநாடு ப‌ய‌ணிக‌ள் ஆட்டோவை ட‌க் ட‌க் என்றே  குறிப்பிடுவதால் இந்த‌ பெய‌ராம்.
 —-

http://www.tuktastic.com/index.htm

இணைய செய்தி உலகை உலுக்கிய 19 வயது வாலிபர்

bnoபிரேக்கிங் நியுஸ் என்றதும் சி.என்.என், பிபிசி,நியூயார்க் டைம்ஸ் போன்ற பெரிய மீடியா நிறுவனங்களே நினைவுக்கு வரக்கூடும்.ஆனால் இணைய உலகைப்பொருத்தவரை பிரேக்கிங் நியுஸ் என்றதும் நினைவுக்கு வருபவர் மைக்கேல் வான் பாப்பல் என்னும் வாலிபர் தான்.

ஹாலந்து நாட்டைச்சேர்ந்த பாப்பலுக்கு 19 வயது தான் ஆகிறது.ஆனால் அதற்குள் இண்டெர்நெட் உலகில் முக்கிய புள்ளிகளில் ஒருவர் என்னும் அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.இணைய செய்தி உலகை தீர்மாணிக்க கூடிய செல்வாக்கு மிக்க நபர் என்றும் அடையாளம் காட்டப்படிருக்கிறார்.

பாப்பலுக்கு சொந்தமாக ஒரு செய்தி தளம் இருக்கிறது. அந்த தளம் ஒரு செய்தி நிறுவனமாக வளர்ந்திருப்பதோடு சர்வதேச செய்தி அமைப்பு ஒன்றையும் நிறுவ இருப்பதாகவும் மீடியா நிறுவனங்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் பெருமையோடு அறிவித்துள்ளது.

செய்திக்கடலில் பெரிய திமிங்கலங்கள் எல்லாம் நீந்த முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கும் போது வாலிபரான பாப்பல் இணைய செய்தி உலகில் தனக்கென தனி இடத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பதோடு புதிய ஏஜென்சியை துவக்க இருபதாகவும் அறிவுத்துள்ளார்.

எப்படி சாத்தியமானது இந்த வளர்ச்சி.செய்தி உலகில் பாப்பல் வயதில் இருப்பவர்களை பொதுவாக குழந்தை என்றே கருத பலரும் தயாராக உள்ள நிலையில் இவர் மட்டும் எப்படி ஒரு நட்சத்திரமாக உருவானார்.

எளிமையான ஆனால் சுவாரஸ்யமான கதை அது.இண்டெர்நெட்டை புரிந்து கொண்ட ஒரு இளைஞனின் வெற்றிக்கதை .

மற்ற வாலிபர்களைப்போல பாப்பலுக்கும் இண்டெர்நெட்டில் உலா வருவது பிடித்தமான பொழுது போக்காக இருந்தது.குறிப்பாக அவருக்கு செய்திகளில் ஆர்வம் இருந்தது.இண்டெர்நெட்டில் தான் தளத்திற்கு தளம் தாவிக்கொண்டிருக்க முடியுமே.இப்படி பல செய்தி தளங்களையும் அவற்றில் அவப்போது வெளியாகும் பிரேக்கிங் செய்திகளையும் பார்த்துக்கொண்டிருந்த போது பாப்பலுக்கு ஒரு எளிமையான எண்ணம் தோன்றியது.

பலருக்கும் தோன்றக்கூடிய எண்ணம் தான்.எல்லா பிரேக்கிங் செய்திகலையும் ஒரே இடத்தில் தொகுத்து வைத்து படிக்க முடிந்தால் எப்படி இருக்கும்.இது தான் அந்த எண்ணம்.இப்படி ஒரே இடத்தில் உடனுக்குடன் பிரேக்கிங் செய்திகளை படிப்பதன் மூலம் புதிய பெரிய செய்திகளை அவைவெளியாகும் போதே தெரிந்துகொள்ளலாம்.இதற்காக வெவ்வேறு செய்தி தளங்களுக்கு சென்று நேரத்தை விரயமாக்க வேண்டியதில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த எண்ணம் அவருக்கு உதயமாயிற்று.ஆனால் அப்போது செய்திகளை திரட்டித்தரும் தலங்கள் இருந்தனவே தவிர பிரேக்கிங் செய்திகளுக்கான திரட்டி எதுவும் இல்லை.பாப்பல் தானே அத்தகைய சேவையை துவக்க முடிவு செய்தார்.

இப்போது பிரப்லமாக இருக்கும் டிவிட்டர் குறும்பதிவு செவையை இதற்காக பயன்படுத்திக்கொள்ள தீர்மாணித்தார்.இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் இரன்டு ஆண்டுகளுக்கு முன் டிவிட்டர் இத்தனை பிரபலமாகவில்லை என்பது தான்.

டிவிட்டர் பயன்பாடு ஒஅரவலாகாத நிலையில் அதன் அருமையை உணர்ந்திருந்த பாப்பல் டிவிட்டரில் ஒரு கனக்கு துவக்கி தான் பார்க்கும் பிரேக்கிங் செய்திகளை பகிர்ந்து கொள்ள துவங்கினார்.

ப்ரேக்கிங் நியுஸ் என்னும் டிவிட்டர் முகவரியில் அவர் செய்திகளை பகிர்ந்து கொண்டார்.புதிய பெரிய செய்திக்காக வலை வீசிக்கொண்டே இருப்பது அவை கண்ணில் பட்டவுடன் டிவிட்டரில் தெரிவிப்பது என அவர் தீவிரம் காட்டினார்.

இந்த சேவை சுவாரஸ்யமாக இருக்கவே பலரும் அவர் டிவிட்டர் பக்கத்தை பின் தொடர தொடங்கினர்.மற்றவர்களுக்கும் பரிந்துரைக்க துவங்கினர்.விளைவு இந்தசேவை விரைவிலேயே பிரபலமாக்த்துவங்கியது.

இந்த சேவையை எதிர்கொண்டவர்கள் அட நல்ல சேவையாக இருக்கிறதே என்று வியந்து போயினார். செய்திப்பசி கொன்டவர்கள் இந்த சேவையை பயன்படுத்தினால் போதும் என்று நினைத்தனர்.இந்த நேரத்தில் தான் ஒசாமா பின் லேடனின் வீடியோ கோப்பு ஒன்று எப்படியோ பாப்பலின் கைகளில் கிடைத்தது.மற்ற செய்தி நிறுவனங்களுக்கெல்லாம் கிடைக்காமல் தனது கைகளில் க்டைத்தாந்த வீடியோவை அவர் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் பெரும் தொகைக்கு விற்றுவிட்டர்.

அப்பொது தான் அவருக்கு தீவிரமாக செயல்பட்டால் பெரிய நிறூவனங்களை முந்திக்கொண்டு செயல் பட முடியும் என்ற நம்பிகை ஏற்பட்டது.செய்தியை தொகுத்து தருவதே சிறந்த வழி என்ற உறுதியும் உண்டானது.

தொடர்ந்து பிரேக்கிங் செய்திகளை தொகுத்து அளித்து வந்தவருக்கு பல நாடுகளில் இருந்து வாசகர்கள் கிடைத்தனர்.இதனையடுத்து பிரேக்கிங் நியுஸான்லைன் என்னும் இணையதளத்தை ஏற்படுத்தினார்.

வரவேற்பு பிரமாதமாக் இருந்த்தை அடுத்து தனது கீழ் பணியாற்ற செய்தி ஆசிரியர்களையும் நியமித்துக்கொண்டார். இன்று முழுவீச்சிலான செய்தி தளமாக உருவாகியுள்ளது. சர்வதேச செய்தி ஏஜென்சியை துவக்கப்போவதாக அறிவிக்கும் அலவுக்கு அவர் வளர்ந்துள்ளார்.

குறிப்பிட்ட நாளில் எந்த செய்தி நிறூவனம் வேண்டுமானால் பிரேக்கிங் செய்தியை வெளியிடலாம். எந்த நிறுவனம் வேணுமானால் கோட்டை விடலாம். ஆனால் அவற்றை தொகுத்து அளிப்பதன் மூலம் பி என் ஓ மட்டும் முன்னிலைல் இருக்கும் எண்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இண்டெர்நெட் செய்தி மற்றும் நாளிதழ்களின் வருவாயை பாதித்து அவற்றின் செயல்பாட்டிற்கே வேட்டு வைத்து வருவதாக கருதப்படும் நிலையில் பாப்பல் புதிய பெரிய செய்திகளை ஒரே இடத்தில் தொகுத்து வழங்கி தனக்கென ஒரு செய்தி சம்பிராஜ்யத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

(

நன்றி;யூத்புல் விகடன் மின்னிதழ்)

——–

link;
http://www.bnonews.com/

ஒரு நூறு முத்த‌ங்க‌ளும் ஒரு ‘நெட்’ச‌த்திர‌மும்

taiwanஇண்ட்நெர்நெட் தினம் ஒரு நட்சத்திரத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது.இண்றைய நட்சத்திரம் யார் தெரியுமா?தைவானைச்சேர்ந்த இளம்பெண் ஒருவர்.

பாரிசில் வசிக்கும் யாங் யா சிங் என்னும் பெயர் கொண்ட அந்த பெண்மணி தனது முத்தங்களால் இண்டெர்நெட் உலகை பற்றிக்கொள்ள வைத்திருக்கிறார்.

ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் என்பது போல இந்த இளம்பெண்ணுக்கும் ஒரு லட்சியம் உண்டானது. விநோதமானது,விவகாரமானது,துணிச்சலானது , என எப்படி வேண்டுமானாலும் அந்த லட்சியத்தை வர்ணிக்கலாம்.

பாரிஸ் நகரில் வசிக்கும் நூறு பேரை முத்தமிட வேண்டும் .இது தான் அவரது லட்சியம்.இது வரை 54 பெரை முத்தமிட்டிருக்கிறார்.

இந்த‌ முத்த‌ யாத்திரை ப‌ற்றி அவ‌ர் த‌ன‌து வ‌லைப்ப‌திவு த‌ள‌த்தில் புகைப்ப‌ட‌த்தோடு த‌க‌வ‌ல்க‌ளை ப‌கிர்ந்து கொண்டு வ‌ருகிறார்.இது வ‌ரை 20 ல‌ட்ச‌ம் பேர் அந்த‌ வ‌லைப்ப‌திவை பார்த்திருக்கின்ற‌ன‌ர். க‌ட‌ந்த‌ திங்க‌ள் கிழ‌மை ப‌ட்டும் 22000 பேர் பார்த்திருக்கின்ற‌ன‌ர்.

அந்த‌ வ‌லைப்ப‌திவு அவ‌ர‌து சொந்த‌ மொழியில் இருப்ப‌தால் அவ‌ர‌து முத்த‌ யாத்திரையின் நோக்க‌ம் குறித்து அறிய‌ முடிய‌வில்லை. ஆனால் இந்த‌ ப‌ய‌ன‌ம் அவ‌ரை இண்டெர்நெட் ந‌ட்ச‌த்திரமாக‌ ஆக்கியிருக்கிற‌து என்ப‌தை ம‌ட்டும் தெரிந்து கொள்ள‌ முடிகிற‌து.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍—-
link;
http://www.wretch.cc/blog/angelduck777/24982946
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

——

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
இந்த இளம்பெண்ணைப்பற்றி படிக்கும் போது ,கண்ணில் படுபவர்களை எல்லாம் அரவணைத்து அன்பின் செய்தியை இண்டெர்நெட்டின் மூலம் சொன்ன ஜுவான் ம‌ன் ப‌ற்றி நினைக்க‌த்தோன்றுகிற‌து.இது ப‌ற்றிய‌ என் முந்தைய‌ ப‌திவான ‘நான் அர‌வணைக்க‌ வ‌ந்தேன் ‘ இணைப்பு கிழே…

————
link;
http://cybersimman.wordpress.com/2008/12/09/star/

வேலை வேட்டையில் புதுமை

jonஅமெரிக்காவின் ஜான் கோல்பே நட்சத்திரமோ பிரபலமானவரோ இல்லை.அவர் அந்நாட்டின் கோடிககணக்கான சாமன்யர்களில் ஒருவர்.அதிலும் வேலை இல்லாதவர். ஆனால் அவர் வேலை இல்லாமல் இருப்பதையும் தற்போது வேலை தேடுவதையும் உலக்மே அறிந்திருக்கிற‌து.அனேகமாக அவருக்கு வேலை கிடைப்பதையும் உலகம் உடனே தெரிந்துக்கொள்ள வாய்ப்பிருக்கிற‌து.

காரணம் கோல்பே வேலை தேடுவதற்காக என்றே தனியே இணையதள‌த்தை அமைத்திருப்பதுதான்.

அநேக‌மாக‌ வேலை தேடுவ‌த‌ற்காக‌ என்று சொந்த‌மாக‌ இணைய‌த‌ள‌ம் அமைத்திருக்கும் முத‌ல் ம‌னித‌ராக‌ அவ‌ர் இருக்க‌லாம்.

வேலைவாய்ப்புக‌ளை தேட‌ உத‌வுத‌ற்காக‌ என்றே எண்ண‌ற்ற‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.பெரும்பாலான‌வை முத‌ல் முறையாக‌ வேலை தேடுப‌வ‌ர்க‌ளுக்கான‌து.வேலை இழ‌ந்த‌வ‌ர்க‌ளும் இவ‌ற்றை ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம் என்ப‌தோடு இவ‌ர்க‌ளுக்காக‌ என்றே பிர‌த்யேக‌ த‌ள‌ங்க‌ளும் இருக்கின்ற‌ன‌.

எத‌த‌னை தள‌ங்க‌ள் இருந்தென்ன‌ இப்போது வேலை கிடைப்ப‌து சுல‌ப‌மாக‌ இல்லை என்ப‌தே அமெரிக்க‌ நிலைமை.அதிலும் பொருளாதார‌ சீர்குலைவுக்கு பிற‌கு அங்கு வேலை இழ‌ப்பு அதிக‌ரித்திருப்ப‌தால் வேலை கிடைப்ப‌து குதிரைகொம்பாகிவிட்ட‌து.

என‌வே இணைய‌த‌ள‌ங்க‌ள் மூல‌ம் வேலை தேடுவ‌து என்ப‌து உட‌ன‌டியாக‌ ப‌ய‌ன் த‌ருவ‌தில்லை.வேலைக்கு விண்ண‌ப்பிப்ப‌து சுல‌ப‌மாக‌ உள்ள‌தே த‌விர‌ வேலை கிடைப்ப‌து சுல‌ப‌மாக் இல்லை.

இத‌னால் வேலை தேடுப‌வ‌ர்க‌ள் புதுமையான‌ வ‌ழிமுறைக‌ளை கையாள‌ வேண்டியிருக்கிற‌து.வேலை வாய்ப்பு த‌ள‌ங்க‌ளை ம‌ட்டும் ந‌ம்பிக்கொண்டிருக்காம‌ல் வ‌லைப்பின்ன‌ல் த‌ள‌ங்களின் மூல‌மும் வேலை தேடி வ‌ருகின்ற‌ன‌ர்.இன்னும் சில‌ர் டிவிட்ட‌ர் மூல‌ம் வேலை தேடி வ‌ருகின்ற‌ன‌ர்.

ஜான் கோல்பேவும் இப்ப‌டி தான் வேலை தேடுவ‌த‌ற்கு புதிய‌ வ‌ழிக‌ளை க‌டைப்பிடித்து வ‌ருகிறார்.இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான அவர் ஒவ்வொரு வேலைவாய்ப்பு த‌ள‌மாக‌ விண்ண‌ப்ப‌ங்க‌ளை ச‌ம‌ர்பித்து ச‌ரியான‌ ப‌தில் கிடைக்காம‌ல் வெறுத்துப்போன‌ நிலையில் சொந்தமாக‌ இணைய‌த‌ள‌ம் அமைத்து வேலை தேடுவ‌து என‌ தீர்மானித்தார்.

ஜான்கோல்பே டாட் காம் என்னும் பெயரில் மிக எளிமையாகவே அந்த‌ தள‌ம் அமைந்துள்ள‌து.அதில் அவர‌து சுய‌புராண‌மோ ப‌யோடேட்டாவோ கூட‌ இல்லை.

ஆனால் அத‌ற்கு ப‌திலாக‌ அவ‌ருடைய‌ வ‌லைப்ப‌திவு,பேஸ்புக முக‌வ‌ரி,லின்க்ட் முக‌வ‌ர் ஆகிய‌வ‌ற்றை கொடுத்துள்ளார்.

என் பெய‌ர் ஜான் கோல்பே . வேலையில்லாத‌ ல‌ட்ச‌க்க‌ண‌க்கானோரில் நானும் ஒருவ‌ர்.ஆனால் எதையும் ந‌ல்ல‌விதாமாக‌ எடுத்த்க்கொள்வ‌து என் ப‌ழ‌க்க‌ம்.தொழில்நுட்ப‌ துறையில் துவ‌ங்கி ரிய‌ல் எஸ்டேட் உட்ப‌ட‌ ப‌ல‌ துறைக‌ளில் ப‌ணியாற்றியுள்ளேன். இப்ப‌டி சுருக்க்மாக‌ த‌ன்னை அறிமுக‌ம் செய்து கொண்டு ந‌ன்றாக‌ உழைக்க‌க்கூடிய‌ த‌ன‌க்கு வேலை கிடைக்க‌ உத‌வுங்க‌ள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.குற‌ந்த‌து நேர்முக‌த்தேர்வு வ‌ரை செல்லாவாவ‌து உத‌வுங்க‌ள் என்றும் கேட்டுள்ளார்.

அது ம‌ட்டுமல்ல‌ வேலை வாய்ப்புக்கு உத‌வுகின்ற‌வ‌ர்க‌ளுக்காக‌ என்று ப‌ரிசு போட்டி ஒன்ற‌யும் அறிவித்துள்ளார்.ஆம் வேலை வாங்கி கொடுத்தால் ஒரு வீடியோ காமிரா ப‌ரிசாக‌ கிடைக்குமாம். ஆனால் என்ன‌ மாதிரியான‌ வேலை என்று சில‌ நிப‌ந்த‌னைக‌ளையும் விதித்துள்ளார்.த‌ற்காலிக‌ வேலையாக‌வோ ம‌ல்டி லெவ‌ல் மார்க்கெட்டிங் ப‌ணியாக‌வோ இருக்க‌க்கூடாதாம்.நியாய‌ம் தானே.
கூகுலில் ஜான் கோல்பே என்னும் பெயரை டைப் செய்தால் கோல்பே வேலை தேடுகிறார் என்னும் வாசகத்தோடு இந்த தள‌ம் தான் முதலில் வந்து நிற்கிறது.

இந்த‌ த‌ள‌த்தில் தான் புதுமையாக‌ வேலை தேடுவ‌து ப‌ற்றி வெளிவ‌ந்த‌ செய்திகளூக்கும் இணைப்பு கொடுத்துள்ளார்.]
அவ‌ற்றுக்கு கீழே ச‌ர்ச்சிலின் மொன்பொழி ஒன்றையும் கொடுத்துள்ளார்.

ந‌ம்பிக்கை இல்லாத‌வ‌ர்க‌ள் வாய்ப்புக‌ளில் பிர‌ச்ச‌னையை பார்க்கின்ற‌ன‌ர்.ந‌ம்பிக்கை உள்ள‌வ‌ர்க‌ள் பிர‌ச்ச‌னைக‌ளில் வாய்ப்புக‌ளை காண்கின்ற‌ன‌ர் என்ப‌து தான் அந்த‌ வாச‌க‌ம்.

ம‌னித‌ர் உண்மையில் இந்த‌ வாச‌க‌த்திற்கு உதார‌ண‌மாக‌ தான் இருக்கிறார் இல்லையா?


link;
http://jonkolbe.com/

உலகை உலுக்கிய கடைசி உரை!

hm_collageஅமெரிக்க பேராசிரியர் ராண்டி பாஷின் கதை மிகவும் மோசமானது. இருப்பினும் ராண்டி பாஷை பற்றி தெரிந்து கொண்டால் துயரமோ, பரிதாபமோ ஏற்படாது. அதற்கு பதிலாக புதிய உத்வேகமும், உள்ளத்தில் உறுதியுமே ஏற்படும். காரணம் பாஷ் தனது முடிவின் மூலம் மற்றவர்களுக்கு வாழ்க்கையின் மகத்துவத்தை கற்றுக் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார்.
ஒரு விதத்தில் அவர் தனது மரணத்தின் மூலம் மரணத்தை வென்று சாகாவரம் பெற்றிருக்கிறார்.
அவருடைய வாழ்க்கை எதிர்பாராவிதமாக பாதியில் முடிந்து விட்டாலும் கூட அந்த வேதனையையும், வலியையும் சக மனிதர்களுக்கான நம்பிக்கையாகவும் மேம்பட்ட வாழ்க்கைக்கான வேட்கையாகவும் மாற்றி தந்து இருக்கிறார்.
நெருக்கடி மிக்கவர்களும், பிரச்னையில் சிக்கித் தவிப்பவர்களும் அவரது வாழ்க்கையை அறிந்து கொண்டால் கவலைகளை உதறித் தள்ளி உற்சாகம் பெறுவார்கள். அதிலும் குறிப்பாக அவரது கடைசி உரையை கேட்க நேர்ந்தால் உள்ளத்தில் எழுச்சி பெறுவதோடு விரோதம், வன்மம், பொறாமை போன்ற வேண்டாத குணங்களுக்கும் விடை கொடுத்து விடுவார்கள். தன்னம்பிக்கை இல்லாதவர்களும் தன் முனைப்பு கொண்டவர்களும் கூட இந்த உரையை கேட்டால் மாறி விடுவார்கள்.
ஏற்கனவே 60 லட்சம் பேருக்கு மேல் இந்த உரையை கேட்டு மகிழ்ந்திருக்கின்றனர். நெகிழ்ந்து போயிருக்கின்றனர். பலர் அடிப்படையில் மாறியிருக்கின்றனர். இன்னமும் கூட ஆயிரக்கணக்கானோர் அவரது உரையை கேட்டு உருகிக் கொண்டிருக்கின்றனர். உணர்வு ரீதியாக ஒரு ரசவாதத்தை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது என்னும் வகையில் பாஷ் நிகழ்த்திய அந்த உரையை உலகப் பேரூரை என்றே சொல்லலாம். சரித்திர பேரூரைகளில் சமகாலத்து சாதனை உரையாக இதனை சேர்த்துக் கொள்ளலாம்.
ராண்டி பாஷ் இந்த உரையை திட்டமிட்டும் நிகழ்த்தவில்லை. தனது உரை இப்படி லட்சக்கணக்கானோரை பாதிக்கும் என்றும் அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. காலம் அவரது கணக்கை முடித்துக் கொள்ள முற்பட்டபோது தான் மிக மிக நேசித்தவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொள்ளும் நோக்கத்துடனே அந்த உரையை நிகழ்த்தினார். அதில் இருந்த உண்மையும், வாழ்வின் சாரம்சத்தை பிழிந்து தந்த தன்மையும் அனைவரையும் ஆட்கொண்டு விட்டது.
பாஷ் எந்த சூழ்நிலையில் இந்த உரையை நிகழ்த்தினார் என்பதை தெரிந்து கொண்டால் அதன் உன்னதத்தை உள்ளபடியே புரிந்து கொள்ளலாம்.
அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற பல்கலைகளில் ஒன்றான கார்னகி மெலான் பல்கலையில் கம்ப்யூட்டர் துறை பேராசிரியராக பணியாற்றி வந்தவர் பாஷ். பால்டிமோர் நகரில் பிறந்து கொலம்பியாவில் வளர்ந்த அவர், கார்னகி மெலான் பல்கலையில் கம்ப்யூட்டர் அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்ற பிறகு வர்ஜினியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார்.
1988 முதல் 1997 வரை அங்கு பணியாற்றிய பாஷ், 1997ல் கார்னகி மெலான் பல்கலையில் பேராசிரியரானார். கம்ப்யூட்டர் இடைமுகம் சார்ந்த பிரிவில் அவரது அறிவும், அனுபவமும் விசாலமானது. அலைஸ் சாப்ட்வேர் திட்டம் உட்பட பல்வேறு தொழில்நுட்ப பணிகளில் முக்கிய பங்காற்றிய அவர் தனது வட்டத்தில் ஒரு நட்சத்திர பேராசிரியராகவே திகழ்ந்தார்.
கம்ப்யூட்டர் சார்ந்த ஆய்விலும், தனது ஞானத்தை மாணவர்களோடு பகிர்ந்து கொள்வதிலும் மட்டுமே பாஷ் கவனம் செலுத்தி வந்த நேரத்தில்தான் சோதனை சூறாவளி அவர் வாழ்க்கையை உலுக்கியது.
2006 ஆம் ஆண்டில் அவர் கணையப்பகுதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு பயன்தராத நிலையில் 2007 ஆகஸ்டு மாதம் ஆறு மாதம் மட்டுமே அதிகபட்சமாக அவரால் உயிரோடு இருக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறினர்.
இந்தச் செய்தி பாஷை நிலைக்குலைய வைத்தது. உடனே வேலையை ராஜினாமா செய்து விட்டு உயிரோடு இருக்கப் போகும் நாட்கள் முழுவதையும் மனைவியோடும், மூன்று பிள்ளைகளோடும் செலவிட வேண்டும் என்றும் முடிவுக்கு வந்தார். வாழ்க்கை முடியப் போகிறது. தான் இல்லாமல் போகிறோம் என்ற நிலையில் தகப்பனாகவும், கணவனாகவும் தனது கடமைகளை இயன்றவரை நிறைவேற்றி விட்டு குடும்பத்தினரிடம் இருந்து விடைபெற விரும்பினார்.
இந்த நிலையில்தான் பல்கலையில் உரை நிகழ்த்துவதற்கான அழைப்பு வந்தது. குடும்பத்தோடு ஒவ்வொரு நொடியையும் செலவிட விரும்பிய போதும் பாஷ் கடைசியாக ஒரேயொரு முறை உரை நிகழ்த்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விரும்பினார். அவரது மனைவிக்கு இதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் கணவரின் மனதை புரிந்து கொண்டதால் தயக்கத்தோடு சம்மதித்தார்.
அந்த உரை எத்தனை உன்னதமானதாக அமையப் போகிறது என்பதை ‘பாஷ்’ உட்பட யாரும் அறிந்திருக்கவில்லை. தனக்கு பின்னால் பிள்ளைகளுக்கு தான் சொல்ல விரும்பும் செய்தியாக அந்த கடைசி உரை அமைய வேண்டும் என பாஷ் நினைத்திருந்தார். மற்றபடி யாருக்கும் அறிவுரை கூறவோ, வாழ்க்கையை புரிய வைக்கவோ அவர் முயலவில்லை.
உரையின் கருப்பொருளும் கூட கடைசி வரை என்பதுதான். ஆம் கார்னகி மெலான் பல்கலையில் அப்படியொரு பழக்கம் இருந்தது. ஆண்டுதோறும் அனுபவம் வாய்ந்த பேராசிரியரை அழைத்து உங்கள் வாழ்க்கை முடிய 6 மாதங்களே உள்ளது என்றால் நீங்கள் பகிர்ந்து கொள்ளப் போகும் விஷயங்கள் என்னவாக இருக்கும் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்த கேட்டுக் கொள்ளப்படுவார்கள். ராண்டி பாஷ் விஷயத்திலோ உண்மையிலேயே அவருக்கு உயிர் வாழ ஆறு மாத காலமே அவகாசம் இருந்தது.
ஆக எல்லாவிதத்திலும் கடைசி உரையாற்ற அவர் மேடையேறினார். தனது உரையை கேட்க அதிகபட்சமாக 50 பேர் வருவார்கள் என அவர் நினைத்திருந்தார். ஆனால் நானூறு பேர் அமரக் கூடிய அரங்கம் நிரம்பி வழிந்ததோடு அவர் உள்ளே நுழைந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்றனர். இந்த வரவேற்பால் நெகிழ்ந்து போன பேராசிரியர் மிகவும் அடக்கமாக தனது உரை இத்தகைய வரவேற்புக்கு தகுதியாக அமைய வேண்டும் என கூறி விட்டு பேசத் தொடங்கினார்.
அவரது பேச்சில் வருத்தத்தின் சாயலோ, வேதனையின் வெளிப்பாடோ துளியும் இல்லை. தன்னை பாதித்த நோய் பற்றி அவர் குறிப்பிடக்கூட இல்லை.
அதற்கு மாறாக பேராசிரியர் பாஷ், தனது வாழ்க்கையை திரும்பிப் பார்த்து அதில் கற்றுக் கொண்ட பாடங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக குழந்தை பருவத்து கனவுகளை உற்சாகமாக குறிப்பிட்டார்.
சிறு வயதில் சுவற்றில் தான் கிறுக்கித் தள்ளிய போதும், ஓவியங்களை வரைந்த போதும், பெற்றோர்கள் தடுக்காமல், தண்டிக்காமல் ஊக்குவித்ததை நினைவு கூர்ந்த அவர், தன்னுடைய திறமைகள் வளர இதுவே காரணமாக அமைந்தது என்று கூறி விட்டு உங்கள் பிள்ளைகள் சுவற்றில் கிறுக்க விரும்பினால் தயவு செய்து அனுமதியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
மற்றவர்களிடம் கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படியும் கேட்டுக் கொண்டார். தேவையான அளவு பொறுமையாக இருந்தால் மற்றவர்களிடம் ஆச்சரியப்படும் வகையில் மாற்றத்தை காணலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பின்னடைவுகளையும், தோல்வி களையும் கண்டு துவண்டு விடக் கூடாது என்று கூறிய பாஷ், செங்கல் சுவர்கள் ஒன்றும் வெற்றுச் சுவர்கள் இல்லை. அவை ஒரு விஷயத்தை பெற நாம் எந்த அளவுக்கு துடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்துவதாகவும் குறிப்பிட்டார்.
உணர்ச்சி பெருக்கான இந்த உரைக்கு நடுவே நோயின் தாக்கத்தை மீறி தன்னுடைய உள்ள உறுதியை காட்டுவதற்கான அங்கேயே உடற்பயிற்சியும் செய்து காட்டி மெய்சிலிர்க்க வைத்தார்.
கிட்டத்தட்ட 70 நிமிடம் நீடித்த அந்த உரையின் போது அங்கு கூடியிருந்தவர்கள் தங்களது நோக்கங்களையும் லட்சியங்களை யும் மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டியதற்கான காரணங்களை தெரிவித்ததோடு மற்றவர்களுடைய திறமைகளையும், குறைகளையும் புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்றார்.
தனக்கு ஊக்கமளித்த முன்னோடிகளை குறிப்பிட்டு அவர் திறந்த மனேதாடு தன்னை பாதித்த மேதைகள் பற்றிய கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். எல்லா வற்றுக்கும் மேல் வாழ்க்கையின் அன்பின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார். புன்சிரிப்போடு அவர் அனுபவங்களை விவரித்து வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுத்ததை கேட்ட பார்வையாளர்கள் அனைவரும் நெகிழ்ந்து போயினர். மரணத்தின் நிதர்சனத்தை எதிர்கொள்பவரால்தான் வாழ்வின் அருமையை புரிந்து கொள்ள முடியும். ஆறு மாதங்களில் மரணம் என்பது உறுதியாக தெரிந்து விட்ட நிலையில் உயிரோடு உள்ள ஒவ்வொரு நொடியின் முக்கியத் துவத்தையும் அவர் உணர்ந்து பேசினார். இது போன்ற நேரத்தில் பொறாமைக்கும் பகைமைக்கும் இடம் கொடுக்கத்தோன்றுமா என சிந்திக்க வைத்து அன்பின் மகத்துவத்தை புரிய வைத்தார். அரங்கில் இருந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை அவர் பேச்சு புரட்டிப் போட்டதாக உணர்ந்தனர்.
பாஷின் அந்த இறுதி உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்த பார்வையாளர்களை கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்ல வேண்டும்.
அத்தகைய அதிர்ஷ்டசாலிகளிடம் பத்திரிகையாளர் ஜெப்ரே ஜாஸ்லோவும் ஒருவர். ஜாஸ்லோ, புகழ் பெற்ற “வால்ஸ்டீரிட் ஜர்னல்’ நாளிதழில் சிறப்பு பத்தி எழுதுபவராக பணியாற்றி வருபவர். வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தே அவர் அதிகம் எழுதியிருக்கிறார். எனவே தான் அவருடைய நாளிதழ் ஆசிரியர்களில் ஒருவர் ராண்டி பாஷ் கடைசியாக உரையாற்ற இருப்பதை தெரிவித்து அவரைப் பற்றி எழுதலாமே என்று யோசனை கூறியிருந்தார். ஜாஸ்லோவும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போதே அவர் துயரமோ, வலியின் சாயலோ இல்லாமல் உற்சாகமாக பேசியிருக்கிறார். தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோதே ஜாஸ்லோ எப்படியும் அவரது உரையை நேரில் கேட்க வேண்டும் என தீர்மானித்தார்.
ஆனால் சோதனையாக அவரால் பேராசிரியரின் உரையை நேரில் கேட்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஜாஸ்லோ இருந்தது வாஷிங்டனில் அங்கிருந்து பிட்ஸ்பர்கில் உள்ள பல்கலைக்கு விமானத்தில் செல்ல வேண்டும். ஜாஸ்லோவின் ஆசிரியரோ, விமான செலவை நிறுவனத்தால் ஏற்க முடியாது. எனவே உரை நிகழ்த்திய பின் தொலைபேசியிலேயே பேசிக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். ஜாஸ்லோவுக்கு பேராசிரியரின் உரையை தவற விடக் கூடாது என உள்ளுணர்வு கூற காரிலேயே 300 மைல் பயணித்து பல்கலைக்கு சென்று விட்டார்.
பேராசிரியரின் உரை அவரை உருக வைத்தது. தன்னுள் ஏற்பட்ட பாதிப்பை அழகிய கட்டுரையாக்கி விட்டு அந்த பேரூரைக்கான வீடியோ இணைப்பையும் கட்டுரை வெளியானவுடன் நாளிதழ் இணைய தளத்தில் கொடுத்திருந்தார்.
வீடியோ இணைப்பு மூலம் உரையை கேட்டவர்களும் உருகிப் போயினர். அதைக் கேட்ட மாத்திரத்திலேயே வாழ்க்கையின் தன்மை மாறியதை உணர்ந்தனர். பலர் பேராசிரியரை இமெயில் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் உள்ளத்து உணர்வுகளை தெரிவித்தனர். ஒரு சிலர் பேராசிரியருக்கு ஆறுதல் கூறினர் என்றால் பெரும்பாலானவர்கள் தங்கள் அகக் கண்களை அவர் திறந்து விட்டதாக தெரிவித்தனர். சிலர் இனி தங்கள் பிள்ளைகள் சுவரில் கிறுக்கினால் தடுக்க மாட்டோம் என உறுதி அளித்தனர். இன்னும் சிலரோ மற்றவர்களின் குறைகளை பெரிதாக நினைக்க மாட்டோம் என உறுதி அளித்தனர். சிலரோ எல்லோரிடமும் இன்முகத்துடன் பேசுவோம் என்றனர். ஒவ்வொருவரிடமும் பேராசிரியரின் சொற்கள் ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.
கொடிய நோய்கள் பாதிக்கப்பட்டவர்கள் அவரது பேச்சை கேட்டு ஊக்கம் பெற்றதாக கண்ணீர் விட்டனர்.
அதே உணர்வோடு தங்கள் நண்பர்களுக்கு அந்த உரையை பரிந்துரைத்தனர். அவர்கள் மற்றவர்களுக்கு பரிந்துரைத்தனர். விரைவில் பேராசிரியரின் உரை யூடியுப்பில் பதிவேற்றப்பட்டு ஆயிரக் கணக்கானோரால் பார்க்கப்பட்டது. வெகு சீக்கிரத்தில் இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டி பல லட்சங்களை தொட்டது. நூற்றுக்கணக்கான வலைப்பதிவாளர்கள் பேராசிரியர் பாஷின் உள்ள உறுதி மற்றும் அவர் வழங்கிய உள்ளொளியை போற்றினர்.
பாஷ் குறிப்பிட்ட செங்கல் சுவர் ஒரு குறியீடானது. பலர் தங்கள் விலை மனைகளில் செங்கல் சுவரை வரைந்து பாஷ் சொன்னதை எழுதி வைத்தனர்.
பாஷின் உரை பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. பல ஊர்களில் வீடியோ பதிவு திரையிடப்பட்டது. இந்தியாவில் கூட ஒரு பல்கலையில் இந்த வீடியோ காட்சி காண்பிக்கப்பட்டது. அமெரிக்க ஊடகங்கள் இந்த எழுச்சியான எதிர்வினையை செய்தியாக்கி பேராசிரியரை சாகாவரம் பெற வைத்தன.
பேராசிரியர் பாஷ், இத்தகைய பாதிப்பை தனது உரை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. மற்றவர்களின் அன்பால் அவர் திக்குமுக்காடிப் போனார்.
மீடியா அவரது உரையை மிகச் சிறந்த பேரூரை, வாழ்வின் உன்னதமான விஷயம், ஒவ்வொரு நொடியின் மதிப்பை உணர்த்தும் உரை என்றெல்லாம் வர்ணித்தன.
பேராசிரியரிடம் வாழ்க்கையை கற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தின. பேராசிரியர் தனது கருத்துக்களையும், வாழ்க்கைக்கான வழிமுறைகளையும் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பேராசிரியரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னரே இந்த கோரிக்கையை கணவரிடம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் பாஷோ தனக்கென எஞ்சியிருக்கும் நாட்களை மனவை மற்றும் பிள்ளைகளோடு செலவிட விரும்பினார். குடும்பத்தை விட்டு ஒரு நொடி கூட பிரிந்திருக்க கூடாது என நினைத்தவர் புத்தகம் எழுதுவது அதற்கு பெரும் தடையாகி விடுமே என அஞ்சி நடுங்கினார்.
எல்லோருக்கும் இது புரிந்தது. ஆனாலும் கூட பேராசிரியரின் அனுபவ பொக்கிஷம் புத்தகமாக பதிவு செய்யப்பட்டால் வருங்கால தலைமுறைக்கெல்லாம் வழிகாட்டுமே என நினைத்தனர்.
இறுதியில் பாஷோ ஒரு யோசனையை கூறி இதற்கு ஒப்புக் கொண்டார். சிகிச்சையின் பலனாக அவரது நோயின் தீவிரம் தற்காலிகமாக குறைந்திருந்தது. கதிரியக்க சிகிச்சையை தாங்க அவர் தினமும் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டும் பயிற்சியை மேற்கொண்டு வந்தார்.
அந்த ஒரு மணி நேரத்தை புத்தகம் எழுத ஒதுக்க ஒப்புக் கொண்டார். சைக்கிள் ஓட்டியபடி அவர் புத்தகத்திற்கான விஷயங்களை கூற, பத்திரிகையாளர் ஜாஸ்லோ அதை கேட்டு குறிப்புகள் எடுத்து எழுத வேண்டும் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இப்படியாக காதில் மைக்கை மாட்டிக் கொண்டு ஜாஸ்லோ பேராசிரியர் எண்ண ஓட்டங்களை குறிப்பெடுத்து புத்தகத்தை எழுதி முடித்தார். புத்தகத்தின் தலைப்பும் “கடைசி உரை” தான்
————-

(

இந்த கட்டுரையை முதலில் வெளியிட்ட யூத்புல் விகடனுக்கு எனது மனமார்ந்த‌ நன்றி

)
————–

அந்த எழுச்சி உரையை கேட்க…

link;
http://www.youtube.com/watch?v=ji5_MqicxSo