Category Archives: நெட்சத்திரங்கள்

என் பெயர் ஒபாமா!

obamamailஇண்டெர்நெட் எதிர்பாராமல் புகழ் பெற வைக்கும் என்பதற்கான சுவையான உதாரணம், இந்த கதை.

ஒபாமா அதிபராவதற்கு முன் , அமெரிக்க தேர்தல் நடைபெறுவதற்கு முன் நடந்த கதை இது .
அமெரிக்க வாழ் இந்தியரான குரு ராஜ் என்பவரை ஒரு இமெயில் முகவரி பிரபலமானவராக ஆக்கிய கதையும் கூட‌.

அதோடு பாரக் ஒபாமாவோடு தொடர்பு படுத்தி பேசப்படவும் வைத்த கதை.

ஆனால் குருராஜ் இதற்காக திட்டமிட்டு செயல்படவில்லை. இந்த திடீர் புகழை அவர் எதிர்பார்க்கவுமில்லை.

அவர் செய்ததெல்லாம் முற்றிலும் தற்செயலாக ஒபாமா பெயரில் தனக்கான இமெயில் முகவரியை பதிவு செய்து கொண்டதுதான். ஆனால் ஒபாமா அரசியல் வானில் புதிய நட்சத்திரமாக உருவான நிலையில் ஒபாமாவுடன் தொடர்பு கொள்வதாக நினைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கானோர் அவருக்கு இமெயில் அனுப்பி வைத்தனர். இதுவே குருராஜ் பற்றியும் பேச வைத் தது.

எப்படி தெரியுமா?

பிரபலமானவர்களின் பெயரில் இமெயில் முகவரியையோ (அ) இணையதள முகவரியையோ பதிவு செய்து கொண்டால் எதிர் காலத்தில் பலன் பெறலாம் என்னும் நோக்கில் திட்டமிட்டு செயல்படும் கில்லாடிகள் இருக்கவே செய்கின்றனர்.

ஒரு சிலர் மிகுந்த நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பில் எதிர்காலத்தில் பிரபலமாகக் கூடியவர்களின் பெயரில் முகவரிகளை பதிவு செய்வதுண்டு. ஆனால் இதற்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவேண்டும்.

குறிப்பிட்ட அந்த நபர், பிரபலமாவ தற்கான வாய்ப்பு ஏற்படாமலே போகலாம். எப்படிப்பார்த்தாலும் குருராஜ் இப்படி கணக்குப் போட்டெல்லாம் ஒபாமாவின் பெயரில் தனக்காக இமெயில் முகவரியை ஏற்படுத்திக்கொள்ளவில்லை.

இங்கே தனக்காக என்பதை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் குருராஜின் நோக்கம், ஒபாமா பின்னாளில் பேசப்படுபவர் ஆவார். அப்போது நாமும் பயன்பெறலாம் என்பதல்ல. உள்ளபடியே அவருக்கு ஒரு இமெயில் முகவரி தேவைப்பட்டது.

அந்த காலகட்டத்தில் அதாவது, 2004ல் ஒபாமா அத்தனை பிரபலமானவராகவும் இருக்க வில்லை. அமெரிக்க சரித்திரத்தை அவர் மாற்றியமைக்க கூடியவராக உருவாகப்போகிறார் என்பதற்கான அறிகுறியும் அதிகம் தென்படவில்லை.

எத்தனையோ அமெரிக்க எம்பிக்களில் ஒருவராக அவரும் இருந்தார். குடியரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை பெற வேண்டும் என்ற முனைப்பில் அவர் இருந்தார்.

அந்த நோக்கத்தோடு அவர் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அந்த காட்சியை மாணவரான குருராஜ் பார்த்துக் கொண்டிருந்தார். குருராஜ் அப்போது ஒரு நெருக்கடியில் இருந்தார். அவருடைய பழைய இமெயில் முகவரி காலாவதியாக இருந்தது.

கூகுல் தேடியந்திரம் ஜி மெயில் என்னும் பெயரில் புதிய இமெயில் சேவையை அறிமுகமாக்கி நான்கு மாதங்களே ஆகியிருந்தது. குருராஜ் ஜிமெயிலில் தனக்கு புதிய இமெயில் கணக்கை தொடங்க விரும்பினார். அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டபோது, முகவரியை பதிவு செய்ய விரும்புபவர்களில் பலர் எதிர்கொள்ளக்கூடிய சங்கடத்தை அவரும் எதிர்கொண்டார். அவரது பெயரில் வேறு ஒருவர் ஏற்கனவே முகவரி கணக்கை பெற்றிருந்தார்.

குருராஜ் தனது பெயரை திருப்பிப் போட்டு முகவரியை பதிவு செய்ய முயன்றார். அந்த பெயரும் பதிவு செய்யப்பட்டிருந்தது. வேறு ஏதாவது மாற்றத்தை செய்தால்தான் ஜிமெயிலில் முகவரி கணக்கு தொடங்க முடியும் என்ற நிலையில், திடீரென குருராஜிக்கு ஒபாமாவின் முகம் நினைவில் வந்தது. பாரக் ஒபாமா என்னும் அவரது பெயர் கொஞ்சம் வித்தியாசமாகவும் பட்டது. பாரக் ஒபாமா அட் ஜிமெயில் டாட் காம் என்னும் பெயரில் முகவரியை பதிவு செய்துகொண்டு அதனை பயன்படுத்த தொடங்கினார்.

நன்றாக நினைவில் கொள்ளுங்கள், 2004ல் ஒபாமாவும் பிரபலமாக வில்லை. ஜிமெயிலும் பிரபலமாக வில்லை. ஆனால் அடுத்து வந்த மாதங்களில் ஜிமெயில் மற்ற மெயில் சேவைகளையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னணிக்கு வந்தது. அதேபோல ஒபாமாவும் அரசியல் அரங்கில் மேலே வந்து ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பையும் பெற்றார்.

இதற்கிடையேதான் குருராஜ் சுவாரசியமான அனுபவத்துக்கு ஆளானார். பாரக் ஒபாமா என்னும் பெயரில் அவர் இமெயில் முகவரியை பயன்படுத்தி விட்டதால் ஒபாமாவின் ஆதரவாளர்கள் அவரைத்தொடர்பு கொள்வதாக நினைத்துக்கொண்டு குருராஜிக்கு இமெயில் செய்திகளை அனுப்பி வைக்க தொடங்கினார்.

ஒபாமா வேட்பாளர் தேர்தலில் வெற்றிபெற்றதும், இந்த மெயில் களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கவும் தொடங்கியது. இந்த எதிர்பாராத நிகழ்வு குருராஜை கவனிக்க வைத்து அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான நியூயார்க்கர் அவரைப்பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டு பிரபலமாக்கியது.

ஒபாமா பெயரில் முகவரி அமைந்தாலும் ஒருபோதும் அதனை தவறாக பயன்படுத்திக்கொள்ள நினைத்ததில்லை என்று குருராஜ் பத்திரிகை பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஒபாமா ஆதரவாளர்கள் அனுப்பிவைத்த மெயில்களைப்பார்க்கும்போது, அமெரிக்கர்களின் மனநிலைமையை புரிந்துகொள்ள முடிந்ததாக அவர் மகிழ்ச்சியோடு கூறுகிறார்.

ஒபாமாவின் ஆதரவாளர்கள், பலவிதமான செய்திகளை அனுப்பி வைத்திருக்கின்றனர். வெற்றி நிச்சயம் என்பதுபோல உற்சாகப்படுத்தும் வாசகங்களில் தொடங்கி விதவிதமான உணர்வுகளை ஆதரவாளர்கள் வெளிப்படுத்தி வந்துள்ளனர்.

இது மிகவும் சுவாரசியமானது என்று ரியல் எஸ்டேட் தரகர் ஒருவர் அனுப்பி வைத்த இமெயிலை குருராஜ் குறிப்பிடுகிறார். ஒபாமாவுக்கு வாழ்த்து தெரிவித்த அந்த தரகர், கடைசியாக உங்களுக்கு ஏதாவது வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்னை தொடர்புகொள்ளுங்கள் என்று கேட்டிருந்ததாக குருராஜ் புன்னகையோடு நினைவு கூறுகிறார்.

இப்போது ஒபாமா முகவரிக்கு சமாளிக்க முடியாத எண்ணிக்கையில் மெயில்கள் வரத்தொடங்கியிருப்ப தால் குருராஜ், புதியதொரு முகவரியை ஏற்படுத்திக்கொண்டு விட்டார்.

இப்போதோ ஒபாமா அமெரிக்க அதிபராகவும் ஆகிவிட்டார். அதிபர் பெயரில் இ‍மெயில் முகவரி வைதிருக்கும் பெருமை இன்னமும் குருராஜிடம் மிஞ்சியிருக்கிறது.

இனி என் வழி இண்டெர்நெட் வழி

10chenவாழ்க்கையே வெறுத்துப்போகும் நிலையில் என்ன செய்வீர்கள்?
சீன பெண்மணி ஒருவர் இத்தகைய நிலை ஏற்பட்ட போது இனி இண்டெர்நெட் வழி என நடப்பது என்று தீர்மானித்து அத‌னால் அவரது வழ்க்கையே மாறியிருக்கிறது.

சென் ஜியாவோ என்னும் அந்த பெண்மணி தனது வாழ்க்கை தொடர்பான முடிவுகளை இனி தான் எடுப்பதில்லை என முடிவு செய்து தனக்காக முடிவெடுக்கும் பொறுப்பை இணையவாசிகளிடம் ஒப்படைத்திருக்கிறார்.

ஒவ்வொருநாளும் என்ன செய்வது என்பதை அவர் இணையவாசிகளின் கைகளிலேயே விட்டுவிட்டார்.அவர்கள் சொல்கேட்டு தான் நடந்து வருகிறார். இதற்காக என்றே ஒரு இணைய தளத்தையும் அமைத்திருக்கிறார்.

அந்த தளம் மூலம் இணையவாசிகள் அவருக்கு கட்டளையிடலாம். அந்த பணியை அவர் செய்து முடிப்பார்.ஆனால் இந்த பணியை செய்து முடிக்க கட்டண‌ம் செலுத்த வேண்டும். ஒரு ம‌ணி நேரத்திற்கு 3 டாலர் கட்டணம்.

காய்கறி வாங்கித்தருவதிலிருந்து மதிய உன்வு தயார் செய்து தருவது வரை விதவிதமான வேலைகளை அவர் இதுவரை செய்து முடித்திருக்கிறார். வேலைகளை செய்வதற்காக பணம் கிடைப்பதோடு ஒருவித மனநிறைவும் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மற்றவர்கள் சொல்லும் சின்ன வேலைகளை செய்து முடிப்பது இத்தனை மகிழ்ச்சியாக இரூக்கும் என்பது தான் எதிர்பாராதது என்றும் அவர் சொல்கிறார்.
இதுவரை செய்த வேலைகளிலேயே பிரசவத்திற்கு துணை நின்ற சம்பவத்தை கூறுகிறார். முகம் தெரியாத அந்த ம‌னிதர் தன் குழ்ந்தை பிறக்கும் காட்சியை படம்பிடுத்து தரச்சொல்லி அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினாராம்.

எந்த விதமான வேலையை செய்ய த‌யாராக இருந்தாலும் சட்டவிரோதமான ம‌ற்றும் நெறிமுறை மீரிய செயல்கலைளை நிச்சயம் செய்யமாட்டேன் என்கிறார்.

இப்படி வந்த கோரிக்கைகளை நிராகரித்துவிட்டேன் என்கிறார்.

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து அவர் இப்படி தனது வாழ்க்கையை இணையவாசிகளிடம் ஒப்படைத்திருக்கிறார்.

கடந்த ஆண்சு தனக்கு மிகவும் சோதனையானதாக அமைந்ததாக கூறும் அவர் தான் மேற்கொண்ட ஓவ்வொரு செயலும் அத‌ற்கான முடிவுகளும் தோல்வியில் முடிவடைந்த்தால் நொந்து போன நிலையில் இனி தான் எந்த முடிவும் எடுப்பதில்லை என் தீர்மாஇனித்தாராம்.

அப்போதுதான் பேசாமல் முடிவெடுக்கும் பொறுப்பை இண்டெர்நெட் மூலம் பிறரிடம் ஒப்படைக்கும் எண்ணம் உண்டானதாம்.

இந்த பரிசோதனை முயற்சி பெரும் ம‌னமாற்ற‌த்தை அவரிடம் கொண்டு வந்துள்ளது.

அதோடு வியாபார ரீதியாகவும் தோல்வியடைந்துவிட்ட அவ‌ருக்கு இது வருவாய்க்கான வழியாகவும் அமைந்துள்ளது.

இந்த முயற்சியை என்னும் எவ்வளவு காலம் தொடர்வது என தெரியவில்லை என கூறும் அவர் மற்றவர்களுக்கு தான் தேவைப்படும் வரை தன‌க்கு கவலை இல்லை என்கிறார்.

சீனாவில் இணைய வாழ்க்கையும் நிஜ வாழ்க்கையும் இரண்டற‌ கலக்கும் பொக்கின் அடையாளமாக இந்தநிகழ்வு கருதப்படுகிறது.

வீடியோ யுகத்தின் கதை

alexi1
.

இன்டெர்நெட் மூலம் புகழ் பெற்றவர்களுக்கென்று நீண்ட பட்டியல் போடலாம். அந்த பட்டியலில் இடம் பெறக் கூடிய அலெக்சி வைனருக்கு தனி இடம் உண்டு.
.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்றவர்கள் எல்லாம், ஒருவருடைய ஆற்றலை உலகத்துக்கு உணர்த்தக் கூடிய சக்தியாக இன்டெர்நெட் இருப்பதற்கான உதாரணமாக திகழ்கின்றனர் என்றால், வைனரோ, உங்களின் பலவீனத்தையும் இன்டெர்நெட் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிடும் உஷாராக இருங்கள் என்று எச்சரிக்கும் உதாரணமாக மாறி நிற்கிறார்.

இன்டெர்நெட் மூலம் புகழ் பெற வேண்டும் என்று வைனருக்கு விருப்பம் இருப்பதாக தெரியவில்லை. அப்படி அவர் திட்டமிட்டும் செயல்படவில்லை.

எதற்காக அறியப்படுகிறாரோ, அதனை சிறப்பாக செய்திருக்கிறார் என்று விளையாட்டு வீரர்களையோ, அல்லது திரைப்பட நட்சத்திரங்களையோ அவர்கள் சரிவுக்கு பிறகு சாதிக்கும் போது பாராட்டி கூறுவது உண்டல்லவா. அது போலத்தான் வைனர், அவருக்கு எது மிக இயல்பாக வருகிறதோ அதனை எந்த முன்யோசனையும் இல்லாமல் தன்னிச்சையாக செய்தார்.

ஆனால் அந்த செயல், தன்னை எந்த அளவுக்கு புகழ் பெற வேண்டும் என்றோ, எந்த விதத்தில் பிரபலமாக்கும் என்றோ அவர் அறிந்திருக்கவில்லை. இன்டெர்நெட் அந்த காரியத்தை கச்சிதமாக செய்து முடித்தது.

அலெக்சி வைனர், உஸ்பெகிஸ் தானில் பிறந்தவர். பின்னர் அமெரிக்காவில் குடியேறிவிட்டார். அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற ‘யேல்’ பல்கலைக்கழகத்தில் மாணவராக படித்தார்.

இந்த பல்கலைக்கழகத்தில் படித்து முடித்ததும் மற்ற மாணவர்களை போலவே எதிர்காலம் பற்றிய பெரும் கனவுகளோடு அவர் முன்னணி நிறுவனம் ஒன்றில் வேலை கேட்டு விண்ணப்பம் செய்தார்.

ஆனால் வேலை வாய்ப்புக்கான விண்ணப்பத்தில் மற்ற எந்த மாணவர்களும் கையாளாத வழியை அவர் கையாண்டிருந்தார். வேலைக்கு விண்ணப்பிப்பதற் கென்று ஒரு இலக்கணம் இருக்கிறது. விண்ணப்பத்தோடு கடிதம் ஒன்று எழுதப்பட்டு, பயோடேட்டா இணைக்கப்பட்டிருக்கும்.

பயோடேட்டா விண்ணப்பிப்பவரின் திறமைகளையெல்லாம் உணர்த்தும் வகையில் பளிச்சென இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதனால் வேலை தேடுபவர்கள் பயோடேட்டாவில் தங்களது திறமையையெல்லாம் காண்பித்து விட முற்படுவது உண்டு. எனினும் சிறந்த முறையில் பயோடேட்டாவை தயார் செய்வது என்பது ஒரு தனி கலை.

சிலர் அதில் கோட்டைவிட்டு விடுவதுண்டு. இன்னும் சிலர் அதிகப்படியான உற்சாகத்தை காட்டி எல்லாவற்றையும் மிகைப்படுத்தி விடுவதுண்டு. வைனரும் இந்த ரகத்தை சேர்ந்தவராகத்தான் இருந்தார். திறமையை மிகைப்படுத்தி சொல்பவர் களையெல்லாம் மிஞ்சிவிடக்கூடிய வகையில் அவர் தன்னுடைய பயோடேட்டாவை தயாரித்திருந்தார்.

பயோடேட்டாவில் அவரது திறமைகள், மிகைப்படுத்தி கூறப்பட்டிருந்தன என்று கூறுவதை விட, தனக்கு இல்லாத வீரப்பராக் கிரமங்களை அவர் குறிப்பிட்டு மார்தட்டிக்கொண்டிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

இதில் கூட பெரிய தவறு இருப்பதாக சொல்வதற்கில்லை. அதிகபட்சம் போனால் அவருக்கு வேலை கிடைக்காமல் போயிருக்கும். ஆனால் தன்னுடைய அருமைபெருமைகளை அவர் மனதில் பதியும்படி, விளங்க வைப்பதற்காக ஒரு சிறு வீடியோ படத்தை தயாரித்து, அதனை இன்டெர்நெட்டில் இடம் பெற செய்தார். அந்த படத்தை பார்ப்பதற்கான இணைய முகவரியையும் தன்னுடைய பயோடேட்டாவில் இணைத்து வைத்திருந்தார்.

அது தான் அவரை உலகப் புகழ் பெற வைத்தது. இப்படி ஏன் செய்தோம் என நினைத்து புழுங்கக்கூடிய வகையில் அவமானத்தையும் தேடித்தந்தது. தன்னுடைய திறமைகளை பறைசாற்றும் வீடியோ கோப்பை, பயோடேட்டாவோடு அலெக்சி வைனர் இணைத்து அனுப்பியதை மிகவும் புத்திசாலித்தனமான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த யூபிஎஸ் வங்கியில் முதலீட்டு ஆலோசகர் பதவிக்குதான் வைனர் விண்ணப்பம் செய்திருந்தார். விண்ணப்பத்தோடு அனுப்பிய கடிதத்தில், தன்னுடைய வீடியோ படத்தை பார்க்குமாறு கேட்டு கொண்டிருந்தார். அதற்கான இணைய முகவரியையும் அவர் கொடுத்திருந்தார்.

அந்த வீடியோ படத்துக்கு இம்பாசிபில் ஈஸ் நத்திங், அதாவது ‘எதுவும் இல்லை முடியாதது’ என்று தலைப்பும் கொடுத்திருந்தார். நிறுவனத்தின் தலைவர் மற்றும் உயர்தரமான விளையாட்டு வீரர் என்றும் தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட அவர், நிதி ஆலோசக நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும், நன்கொடை அமைப்பு ஒன்றை நிர்வகித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அந்த வீடியோ படத்தில் 495 பவுன்ட் எடையை அவர் அனாயசமாக தூக்குவது போலவும், சர்வசகஜமாக பனிச்சறுக் கில் ஈடுபடுவது போல வும்,140 மைல் வேகத்தில் டென்னிஸ் பந்தை அடித்து சர்வீஸ் போடுவது போலவும், கவர்ச்சிகரமான பெண் மணியோடு நேர்த்தியாக நடனமாடுவது போலவும், அடுத்தடுத்து காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

7 நிமிடம் ஓடக் கூடிய அந்த வீடியோ படத்தின் இறுதியில் ‘வேலை செய் வது என்றால், வேலை செய்து கொண்டே இருங் கள், பயிற்சியின் போது பயிற்சி செய்யுங்கள், ஆடும் போது ஆடுங்கள், எதையும் ஈடுபாட்டோடு செய்யுங்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இறுதிக்காட்சியில் கராத்தே வீரர் போன்ற உடையில் தோன்றி செங்கற்களை உடைத்தெறிந்து, ‘முடியாதது என்பது வேறொருவரின் அபிப்பிராயம், என்னை பொறுத்த வரை இந்த வார்த்தைகளில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்’ என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த வீடியோ படத்தை பார்த்த நிறுவன அதிகாரிகள் விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படியெல்லாம் கூட ஒருவர் தன்னை பற்றி பெருமிதம் கொள்ள முடியுமா என்று அவர்களுக்கு வியப்பு ஏற்பட்டிருக்கும். அதோடு சொந்த நிறுவனம் நடத்தி கொண்டிருக்கும் இத்தனை திறமையான ஆள் ஏன் வேலை தேட வேண்டும் என்ற கேள்வியும் பிறந்திருக்கும்.

மனதிற்குள் வைனரை கிறுக்கன் என்று வர்ணித்தபடி அவர்கள் இந்த படத்தை ரசித்து மகிழ்ந்திருப்பார்கள். பழைய காலம் என்றால் விஷயம் இத்தோடு முடிந்திருக்கும். இல்லை யென்றால் நிறுவ னத்தின் அதிகாரி களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் இந்த ‘அற்புதமான’ வீடியோ படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

ஆனால் இது யூடியூப் யுகம் அல்லவா, வீடியோ கோப்பு களை பரிமாறிக் கொள்ளவும், பார்த்து மகிழவும் வழி செய்திருக்கும் யூடியூப் புதிய வீடியோ யுகத்தை துவக்கி வைத்திருக்கிறது.

எதற்கெடுத்தாலும் வீடியோ படத்தை தயார் செய்து உலகத்தாரோடு பகிர்ந்து கொள்வது இன்று மிகவும் சுலபமாகிவிட்டது. ஒரு நல்ல படத்தை அல்லது சுவாரஸ்யமான படத்தை பார்த்ததும் உடனே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணமும் ஏற்படுகிறது.

வைனரின் வீடியோ படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்த ஐவி லீக் என்னும் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர், தங்களுடைய பிலாக் தளத்தில் இது பற்றி குறிப்பிட்டு, அந்த வீடியோ படத்தையும் இணைத்திருந்தனர்.

எப்படி வேலைத்தேடக் கூடாது எனும் வாசகத்தோடு அவர்கள் சுட்டிக் காட்டிய இந்த படத்தை மேலும் பலர் பார்த்து ரசித்தனர். பார்த்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்து, மற்றவர்களையும் பார்க்க வைத்தனர். சில நாட்களில் அந்த வீடியோ படம் யூடியூபில் பல்லாயிரக் கணக்கானோ ரால் பார்க்கப்பட்டது, பார்த்தவர்கள் கிண்டலாக சிரிக்க தவறவில்லை.

சிலர் சிரித்ததோடு நில்லாமல் வைனரின் பராக்கிரமங்களை ஆராய்ந்து, அதன் பின்னே உள்ள பொய்யையும் அம்பலப்படுத்த துவங்கினர். அவர் தலைவராக இருக்கும் நிறுவனம் பெயரில் கொடுக்கப்பட்ட இணைய முகவரி போலியானது என ஒருவர் கண்டுபிடித்து கூறினார்.

இன்னொருவர் அவர் நடத்தி வந்த நன்கொடை நிறுவனம் இல்லவே இல்லை என்று தெரிவித்தார். இன்னும் சிலர், அவர் கூறிக்கொண்ட பனிச் சறுக்கு போன்ற திறமைகளும் பொய்யானவை என கண்டுபிடித்து கூறினர்.

இந்த கண்டுபிடிப்பு படலம் நீண்டு கொண்டே செல்ல, வைனர் பற்றிய புதிய உண்மைகள் அம்பலமாயின. வைனரின் வீடியோ பயோ டேட்டாவை பார்த்து உலகமே சிரித்து கொண்டிருந்ததற்கு நடுவே, அவரது தற்பெருமை குறித்த ஆய்விலும் இணையவாசிகள் தொடர்ந்து ஈடு பட்டனர்.

வைனர் வீடியோவில் வெளிப் படுத்திய எல்லா பெருமைகளுமே போலியானவை என்று நிரூபிக்கப் பட்டது. அது மட்டுமல்ல இப்படி தன்னை பற்றி மிகவும் மிகைப் படுத்தி சொல்லிக் கொள்வது அவரது உடன் பிறந்த குணம் என்னும் விஷயத்தையும் இணைய வாசிகள் கண்டறிந்து கூறினர்.

பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்த நாட்களிலேயே அவர் நண்பர்களிடம் இல்லாததை எல்லாம் கூறி வியக்க வைத்தவராக இருந்து இருக்கிறார். ஒருமுறை நண்பர் ஒருவருடன் தன்னை பற்றி கிட்டத்தட்ட 6 மணி நேரம் அவர் பேசி இருக்கிறார்.

அப்போது தனக்கு தலாய்லாமா கல்லூரியில் சேர சிபாரிசு செய்தார், ஹாலிவுட் நட்சத்திரம் ஹாரீசன் போர்ட்டுக்கு டென்னிஸ் பயிற்சி அளித்திருக்கிறேன், டென்னிஸ் சாம்பியன் பீட்ஸ் சாம்பிரசோடு ஒருமுறை மோதி இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறேன் என்றெல்லாம் அவர் கூறி யிருக்கிறார்.

அது மட்டும் அல்லாமல், அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ அவ்வப்போது தன் உதவியை நாடும் என்றும், அணு ஆயுத கழிவுகளை கையாளக் கூடிய ஆற்றல் படைத்த 4 பேரில் நானும் ஒருவர் என்றும் அவர் கூறி கொண்டிருக்கிறார்.

இதையெல்லாம் கேட்ட அந்த நண்பர், வியப்பின் உச்சிக்கே சென்றதோடு கல்லூரியின்
சார்பில் நடத்தப்படும் பத்திரிகையில் வைனரை பற்றி நகைச்சுவை கட்டுரை ஒன்றையும் எழுதினார்.

இந்த விஷயங்கள் எல்லாம் இப்போது வெளிச்சத்துக்கு வந்தன. வைனர், கற்பனையான விஷயங் களை சொல்கிறார் என்று கண்டு பிடித்து சொல்லப்பட்டவுடன், அப்படியெல்லாம் இல்லை. என்னை பற்றி நண்பர் ஒருவர் கட்டுரை எழுதியிருக்கிறார் என்று அவர் கூறினார்.
ஆனால் இணையவாசிகளின் விசாரணையில் இதன் பின்னே உள்ள உண்மையும் தெரியவந்தது.

இத்தனை நடந்த பிறகும் வைனர், அசராமல் யூடியூபுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைத்தார். தனது வீடியோ படத்தை ஒளிபரப்புவதை நிறுத்துமாறு அவர் கேட்டிருந்தார். ஆனால் அந்த வக்கீல் நோட்டீசும் பொய்யானது என தெரியவந்தது.

இதனால் வைனரை நினைத்து சிரிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது. இதன் நடுவே வைனர், ஒருவிதமான மனநோயால் பாதிக்கப் பட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

எப்படியோ இந்த சம்பவத்திற்கு பிறகு வைனர், ஓடி ஒளிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார். அவருக்கு ஏற்பட்டதை புகழ் என்று சொல்வதை விட, அவமானம் என்று சொல்வதே மிகவும் பொருத்தமாக இருக்கும்.

என்றாலும், வைனரை ஒரேயடியாக இகழ்ந்து விடுவதற் கில்லை. தெரிந்தோ, தெரியாமலோ அவர், ஒருவிதத்தில் முன்னோடியாகவும் மாறி யிருக்கிறார். யூடியூப் மூலம் துவங்கியுள்ள வீடியோ யுகத்தில், வீடியோ கோப்பின் மூலம் எந்த அளவுக்கு சாதிக்க முடியும் என்பதை அவர் உணர்த்தி இருக்கிறார். எதிர் மறையான விதத்தில் அவர் இந்த ஆற்றலை உணர்த்தினாலும், இப்படித்தான் நடக்கவேண்டும் என்றில்லை.

நல்ல விதத்திலும் அதாவது ஆக்கப்பூர்வமான முறையி லும் கூட வீடியோ பயோடேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். உண்மையிலேயே அந்த வழி இப்போது மெல்ல பிரபலமாகத் துவங்கியிருக்கிறது. அலெக்சி வைனர், வீடியோ கோப்பில் பயோடேட்டாவை அனுப்பி வேலை தேடியதன் மூலம் உலகம் முழுவதும் உள்ளவர்கள் மத்தியில் நகைப்புக்கு இடமாகி அவமானத்தில் தலைகுனிந்திருக்கலாம். ஆனால் தன்னை அறியாமல் அவர் எதிர்கால போக்கு ஒன்றின் தொடக்க புள்ளியாக மாறியிருக்கிறார்.

யூடியூப் யுகத்தில் வேலை தேடுவதற்கு வீடியோ கோப்பை பயன்படுத்தலாம் எனும் சிந்தனையை அவர் வலுப்பெற செய்திருக்கிறார். எப்படி வேலை தேட கூடாது என்பதற்கு அவரது வீடியோ படம் உதாரணமாக மாறியிருந்தாலும், இதனை மிகச் சரியாக செய்தால், அதற்கேற்ற பலன் கிடைக்கும் எனும் எண்ணத்தை அவர் ஏற்படுத்த தவறவில்லை.

சொல்லப்போனால் கடந்த பல ஆண்டுகளாகவே வீடியோ மூலம் பயோடேட்டாவை அனுப்புவது பழக்கத்தில் இருந்திருக்கிறது. ஆனால் இது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால் பரவலாகவில்லை. இதற்கு பல காரணங்களை கூறலாம். முதலில் வீடியோ பயோடேட்டாவை அனுப்பி வைப்பதற்கு சரியான வழி இல்லை. வீடியோ கோப்பை தயார் செய்து அதனை சிடியில் போட்டு அனுப்பி வைப்பது அத்தனை உகந்த வழியாக அமையவில்லை.

ஆனால் வீடியோ கோப்பு பகிர்வை சுலபமாக்கிய யூடியூப் வருகைக்கு பிறகு, இந்த சிக்கலுக்கு தீர்வு பிறந்து விட்டது. அழகாக வீடியோ கோப்பை தயார் செய்து, அதன் இணைய முகவரியை மட்டும் குறிப்பிட்டு விட்டால் போதும், யாருக்கு அனுப்புகிறோமோ அவர்கள் அந்த பயோடேட்டாவை பார்க்க செய்து விடலாம். இந்த வழியை அலெக்சி வைனர் தான் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேலும் கடந்த காலத்தில் தயாரிக்கப் பட்ட வீடியோ பயோடேட்டாக்கள் நிறுவன அதிகாரிகளின் கவனத்தை கவர கூடியதாக அமைந்திருக்க வில்லை.
யூடியூப் கலாச்சாரம் அறிமுகம் ஆகாததையும் இதற்கு காரணமாக சொல்லலாம்.
வீடியோ பயோடேட்டாவை தயாரித்தவர்கள் சம்பிரதாயமான நேர்முக தேர்வை எதிர்கொள்வது போல பாவனை செய்து அதனை படம் பிடித்து அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்த படங்கள் அலுப்பூட்டக் கூடியதாக இருந்ததோடு அவர்களின் தனித்தன்மையை படம் பிடித்து காட்டவும் தவறின. ஆனால் யூடியூப் வருகைக்கு பிறகு மிகவும் இயல்பான காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு, பகிர்ந்து கொள்வது சகஜமாகியிருப்பதால், ஒருவரின் தனிப்பட்ட திறமைகள் தயக்கங்கள் இன்றி வெளிப் படவும் வழி செய் திருக்கிறது.

இதனை பயன் படுத்தி கொண்டு, எவரும் தங்களை பற்றிய வீடியோ படத்தை தயார் செய்து, அந்த கோப்பை யூடியூப் பில் அரங்கேற்றி அதற்கான இணைய முகவரியை கடிதம் அல்லது இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கலாம்.

கொஞ்சம் கொஞ்சமாக பலர் இந்த வழியை பின்பற்றத் துவங்கியிருக் கின்றனர்.
அதிலும் குறிப்பாக விளையாட்டு வீரர்கள், இசை கலைஞர்கள் போன்றவர்களுக்கு வீடியோ மூலம் பயோடேட்டாவை அனுப்புவது மிகவும் ஏற்றதாக இருக்கும் என கருதப்படுகிறது.

பயிற்சியாளர் அல்லது தேர்வு குழு வினரின் கவனத்தை ஈர்க்க விரும்பும் விளையாட்டு வீரர் தன்னுடைய திறமையை அழகாக படம் பிடித்து குறிப்புகளோடு சம்பந்தப்பட்ட வருக்கு அனுப்பி வைக்கலாம்.

இசைக் கலைஞரும் அது போல தன்னுடைய இசை நிகழ்ச்சியை பதிவு செய்து அனுப்பி வைக்கலாம். இப்படி எண்ணற்ற உதாரணங்களை கூறி கொண்டே போகலாம்.
திறமையை வெளிச்சம் போட்டு காட்ட ஏற்ற வழியை தேர்வு செய்து கொண்டால் போதுமானது.

இப்போதே கூட கூகுலில் வீடியோ பயோடேட்டா என டைப் செய்தால் ஏகப்பட்ட முடிவுகள் பட்டியலிடப் படுகின்றன. அது மட்டுமல்லாமல் வீடியோ பயோடேட்டாவை தயாரிக்க உதவக் கூடிய பிரத்யேக இணைய தளங்களும் உதயமாகத் துவங்கியிருக்கின்றன.

வீடியோ ரெசியூம் டாட் காம், டாக்கிங் ரெசியூம் டாட் காம் போன்ற தளங்கள் அறிமுகமாகியிருக்கின்றன. இது தவிர வீடியோ பயோடேட்டாக்களை பரிமாறிக் கொள்வதற்காக வென்றே, யூடியூப் போன்ற ஒரு தளம் ரெக்ரிடிவி என்னும் தளம் உதயமாகியிருக்கிறது.

இனிவரும் காலத்தில் வீடியோ பயோடேட்டா பரவலாகி மேலும் பல புதுமைகளை சந்திக்கலாம். ஒரு விதத்தில் அலெக்சி வைனர்தான் இதற்கு முன்னோடியாக விளங்குகிறார்.

—————

link;
www.youtube.com/watch?v=fckOFonroQM&feature=related

இன்டெர்நெட் தேடலும், விவாதமும்

இன்டெர்நெட் மூலம் சாமானியர்கள் உலகம் முழுவதும் அறிந்தவர்களாக ஆகி விடும் கதைகள் அநேகம் உண்டு. எந்தவித திட்டமிடலோ, பிரபலமாக வேண்டும் என்ற நோக்கமோ இல்லாமல் இன்டெர்நெட் மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் ஆர்வம் ஒன்றின் மட்டும் விளைவாக இவர்கள் உலகப் புகழ் பெற்று விடுவதுண்டு. இத்தகைய “நெட்’சத்திரங்களுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. சில நேரங்களில் சாமானியர்கள் இன்டெர்நெட்டில் தங்களை வெளிப்படுத்தி கொண்டதன் விளைவாக விமர்சன சூழலில் சிக்கி சர்ச்சை நாயகர்களாகவும் ஆகி விடுவதுண்டு

எதிர்பாராத புகழை விட, எதிர்பாராத விமர்சனம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இப்படி இன்டெர்நெட்டில் தனது மனதை திறந்து விட்டு இப்போது உலகம் முழுவதும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் நபராகி இருக்கிறார்.

தனது மனதுக்கு பொருத்தமான கணவனை தேடிக் கொள்வதற்கான முயற்சி சர்வதேச அளவில் பேசு பொருளாகும் என்று அவர் எப்படி நினைத்துப் பார்த்திருப்பார். ஆனால் அதுதான் நடந்திருக்கிறது.

டேட்டிங் தளம் என்று பிரபலமாக குறிப்பிடப்படும் வாழ்க்கை துணையை தேடிக் கொள்வதற்கான தளங்கள் இன்டெர்நெட்டில் அநேகம் இருக்கின்றன. அவற்றில் லட்சக்கணக்கானோர் தங்களது விருப்பத்தை குறிப்பிட்டு வருங்கால கணவர்/மனைவி எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் குறிப்பிட்டு வாழ்க்கைத் துணையை தேடுகின்றனர்.

இதே போலத்தான் அந்த அமெரிக்க இளம்பெண்ணும் தனக்கு எப்படிப்பட்ட கணவர் வேண்டும் என்று கிரைக்லிஸ்ட் தளத்தில் குறிப்பிட்டிருந்தார். கிரைக்லிஸ்ட் வரி விளம்பர தளங்களில் முன்னிலையில் இருக்கும் முன்னோடி தளம்.

இதன் மூலம் வேலைவாய்ப்பையும், வாழ்க்கையையும் தேடிக் கொண்டவர்கள் லட்சக்கணக்கில் உண்டு. தொடர்புகளை ஏற்படுத்தி தருவதில் இந்த தளத்திற்கு இருக்கும் ஆற்றலை அறிந்து கொண்டு வாழ்க்கைத் துணைக்கான தேடலுக்கும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த எதிர்பார்ப்போடுதான் குறிப்பிட்ட அந்த இளம்பெண், தனது வாழ்க்கைத் துணை தேடலை இந்த தளத்தில் குறிப்பிட்டிருந்தார். “நான் அழகான இளம்பெண். மிகவும் அழகான இளம்பெண். எனக்கு 25 வயதாகிறது. ஒயிலான தோற்றம் கொண்ட நேர்த்தியானவள்’ இது அந்த பெண் தன்னைப் பற்றி செய்து கொண்ட அறிமுகம்.

நான் லட்சாதிபதியை கணவராக தேடிக் கொண்டிருக்கிறேன். இது அந்த பெண் குறிப்பிட்டிருந்த எதிர்பார்ப்பு. கிரைக்லிஸ்ட் போன்ற தளங்களில் இதே போன்ற லட்சக்கணக்கானோர் தங்களது விருப்பத்தை குறிப்பிடுகின்றனர். அவை நிறைவேறுவது தொடர்பாக விதவிதமான அனுபவங்கள் ஏற்படுகின்றன.

ஆனால் யாருக்கும் ஏற்பட்டிராத அனுபவத்திற்கு இந்த இளம்பெண் இலக்காக நேர்ந்தது. தன் மனதில் பட்டதை மிகவும் வெளிப்படையாக குறிப்பிட்டு விட்டதாலோ என்னவோ அவருடைய குறிப்பு யார் யாருடைய கவனத்தையெல்லாமோ ஈர்த்து ஒரு பெரும் விவாதத்தை தொடங்கி வைத்தது.

அந்த பெண், லட்சாதிபதி கணவர் தேவை என்று சொல்லியதோடு விட்டிருக்கலாம். அத்தகைய கணவனை எப்படி தேடிக் கண்டுபிடிப்பது என்பதற்கான ஆலோசனையையும் கேட்டிருந்தார்.

அவ்வளவுதான். அவருடைய கோரிக்கையில் விருப்பம் இல்லாதவர்கள் கூட அவருக்கு பதிலளிக்க முற்பட்டனர். இது தேவையா? இப்படியொரு கோரிக்கையை வைக்கலாமா? என்பது போல சிலர் கருத்து தெரிவித்தனர்.

ஒரு சிலர் அவருக்கு ஆலோசனை வழங்க முன் வந்தனர். தொழிலதிபர்கள் கூடும் விருந்து நிகழ்ச்சிக்கு சென்று பல்லை இளித்து நின்றால் உங்கள் விருப்பம் நிறைவேற வாய்ப்பு இருக்கிறது என்று ஒருவர் எழுதியிருந்தார்.

இன்னொருவரோ லட்சாதிபதிகளை சந்திக்கக் கூடிய இடங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார். மற்றொருவர், என் அருமை பெண்ணே லட்சாதிபதியை மணந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதை விட லட்சாதிபதியாக வரக் கூடியவரை மணந்து கொள்ளேன் என்று அறிவுரை கூறியிருந்தார்.

இன்னொரு நபரோ பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கும் பெண் என்னை பொறுத்தவரை அழகானவரல்ல என்று குறிப்பிட்டிருந்தார். பெண்ணியவாதி ஒருவரோ, வசதி படைத்த வாழ்க்கை வேண்டுமென்றால் பெண்ணே நீயே தொழில் தொடங்கி சம்பாதிக்க வேண்டியதுதானே. ஏன் ஆணின் கையை எதிர்பார்த்து நிற்கிறாய் என்று கேட்டிருந்தார்.

இன்னொருவரோ அவருக்கு பதிலளிப்பது போல இதிலென்ன தவறு. ஒரு பெண் தானே சம்பாதிக்கலாம் அல்லது சம்பாதிப்பவரை திருமணம் செய்து கொள்ளலாம். அது அவளது உரிமை என்று எழுதியிருந்தார்.

இப்படியாக அந்த இளம்பெண்ணின் தேடல் இன்டெர்நெட் உலகில் அவரை மையமாக கொண்டு ஒரு தொடர் விவாதத்தை ஏற்படுத்தி பெரும் சர்ச்சையின் நாயகியாக அவரை உருவாக்கி விட்டது. இதை நிச்சயம் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

———–

நான் அரவணைக்க வந்தேன்

பொது இடங்களில் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை பார்க்கும்போது உங்களுக்கு என்னத்தோன்றும்? ஆஸ்திரேலியாவின் ஜீவான் மன்னுக்கோ, அவர்களை அரவணைக்க தோன்றுகிறது. அவரைப்பற்றி அறிந்து கொண்டால் உங்களுக்கும் கூட அவ்வாறே தோன்றலாம்! ஏன் என்றால் அவரிடம் இருந்து இந்த பழக்கம் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோருக்கு தொற்றிக்கொண்டிருக்கிறது. அதன் பயனாக ஜீவானும் உலகம் அறிந்த மனிதராகி விட்டார்
முன்பின் பார்த்திராதவர்களை எல்லாம் அரவணைக்கும் செயலின் மூலம் ஜீவான் எதிர்பாராமல் பிரபலமானதோடு லட்சக் கணக்கானவரின் முகத்தில் புன்னகையை வரவைத்திருக்கிறார்.

இலக்கில்லாத வன்முறை என்று சொல்லப்படுவது பற்றி தானே கேள்விப்பட்டிருக்கிறோம். ஜீவானோ இலக்கில்லாத கருணைச் செயல்கள் பெருக வைத்து புகழை தேடிக் கொண்டிருக்கிறார்.

ஜீவான் நம்மூரின் தாயுமானவரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தாயுமானவரை அறிந்திருந்தால் ‘எல்லோரும் புன்னகைத்திருந்தால் அன்றி வேறொன்று அறியேன் பராபரமே” என்று சொல்லிய வண்ணம் இருந்திருப்பார். எப்படியும் அதைத்தான் செயல் வடிவில் காட்டியிருக்கிறார். ரெயில் நிலையங் களிலும் விமான நிலையங்களிலும் மற்றும் பிற பொது இடங்களிலும் அறிமுகம் இல்லாதவர்களை கட்டி அணைப்பதை தான் ஜீவான் செய்திருக்கிறார்.

உடனே வசூல் ராஜா படத்தில் கமலின் கட்டிப்புடி வைத்தியம் நினைவுக்கு வரலாம். கட்டி அணைத்து அன்பை தெரிவிப்பதன் மகத்துவத்தை புரிந்து கொள்ள இது உதவும் என்றாலும், தனக்கு முற்றிலும் அந்நியமானவர்களை எல்லாம் ஜீவான் இப்படி கட்டிப்பிடித்து இருக்கிறார் என்பதே கவனிக்க வேண்டிய விஷயம்.

யார் இந்த ஜீவான்? இவர் ஏன் இப்படி செய்கிறார்? இதனால் என்ன பயன். இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கலாம். இவற்றுக்கான பதிலை பார்ப்பதற்கு முன் ஒரு விஷயத்தை தெளிவு படுத்திக்கொண்டு விட வேண்டும். அதாவது ஜீவானின் நோக்கம் நல்லது!

“அறிமுகம் இல்லாத மனிதர்களின் முகங்களில் எல்லாம் புன்னகை மலரச் செய்ய வேண்டும்” என்று இந்த நோக்கத்தை அவரே அழகாக விவரித்திருக்கிறார்.
இந்த எண்ணத்தை தனது நோக்கமாக அவர் வரித்துக் கொண்டதன் பின்னே நெகிழ்ச்சியான ஒரு கதை இருக்கிறது.

2004-ம் ஆண்டு ஜீவான் லண்டனில் இருந்து தனது தாய் நாடான ஆஸ்திரேலியாவுக்கு திரும்பிய போது தான் அந்த மாற்றம் நிகழ்ந்தது. அப்போது ஜீவான் மகிழ்ச்சியான மனிதராக இருக்க வில்லை.

அதுவரை லண்டனில் வசித்து வந்த அவர், காதல் தோல்வி ஏற்பட்ட நிலையில் வேலையையும் விட்டு விட்டு சிட்னி நகரில் வந்திறங்கினார். அங்கு அவருக்கு வீடு என்றும் எதுவும் இல்லை. உறவினர்/நண்பர் என்று சொல்லிக்கொள்ளவும் யாரும் கிடையாது. நெஞ்சு நிறைய பிரச்சனைகளை சுமந்து கொண்டிருந்த அவர் கையில் ஒரு பையோடு தனியே சிட்னி விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.

மற்ற பயணிகளை எல்லாம் அவர்களுக்கு தெரிந்தவர்கள் வரவேற்றுக் கொண்டிருந்தனர். எல்லோரும் புன்னகை மலர பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர். ஜீவானுக்கு அந்த நொடியில் தனக்கென அங்கே யாராவது ஒருவர் இருக்கக்கூடாதா என நெஞ்சம் துடித்தது. தன்னைப் பார்த்தால் மகிழ்ச்சி அடையக்கூடிய ஒரு முகத்தை, தன்னைப் பார்த்து புன்னகைக்க கூடிய ஒரு முகத்தை அப்படியே கட்டி அணைத்து அன்பை பொழியக்கூடிய கரங்களை அவர் எதிர்பார்த்து ஏங்கினார்.

அப்போதுதான் அவர் அந்த எதிர்பாராத செயலை செய்தார். அட்டைப்பலகை ஒன்றை தேடி வைத்து எதிர் “பிரிஹக்ஸ்” (இலவச அணைப்புகள்) என்று இரு பக்கமும் எழுதி வைத்துக்கொண்டு விமான நிலையத்தின் நெரிசல் மிகுந்த இடத்தில் போய் நின்று விட்டார்.

முதல் பத்து பதினைந்து நிமிடத்திற்கு யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை. அவரையும் அவரது அட்டைப்பலகை வாசகத்தையும் வெறித்துப்பார்த்து விட்டு விலகிச் சென்று விட்டனர்.

பின்னர் பெண்மணி ஒருவர் அவரை நெருங்கி வந்து தோளைத் தொட்டி தட்டி அழைத்து தனது சோகங்களை எல்லாம் சொல்லி கண் கலங்கி யாருமற்ற தனிமையில் தவித்ததை தெரிவித்து, தனக்கு தேவை அன்பான அரவணைப்பு தான் என்று சொல்லி ஜீவானை கட்டி அணைத்துக் கொண்டார். பின்னர் அவர் விடை பெற்றுச் சென்றபோது முகமெல்லாம் மலர்ந்திருந்தது.

அப்போதுதான் ஜீவானுக்கு அறிமுகம் இல்லாதவர்களை கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்த லாம் என்ற எண்ணம் உண்டானது. உலகில் எல்லோருக்கும் பிரச்சனை கள் இருக்கின்றன. பிரச்சனைகளை ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால் அவர்கள் முகத்தில் புன்னகை மலரச் செய்தால் என்ன என்னும் சிந்தனையோடு ஜீவான் அதன்பிறகு ‘இலவச அணைப்புகள்’ அட்டையை கையில் வைத்துக் கொண்டு சுற்றத் தொடங்கி விட்டார். முதலில் பலர் அவரை சந்தேக கண் கொண்டு பார்த்தாலும் நாளடைவில் அவரின் நல்லெண்ணம் மற்றவர் களையும் தொற்றிக்கொண்டது.

அவரது செயலும் பிரபலமாகி அவரும் பிரபலமாகி விட்டார். புதிய இடங்களில் எல்லாம் அவரது அரவணைப்பு செயல் பரவி, ஒரு இயக்கமாகவே உருவாகியும் விட்டது.
இந்நிலையில் எதிர்பாராத திசையில் இருந்து எதிர்ப்பு வந்தது. இத்தகைய நிகழ்ச்சிக்கான அனுமதி பெறவில்லை என்று கூறி சிட்னி காவல் துறை இந்த செயலுக்கு தடை விதித்தது.

ஆனால் தனக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தி பொதுமக்கள் ஆதரவோடு காவல்துறையின் தடையை நீங்க வைத்து விட்டார். இதனிடையே சிட்னியைச் சேர்ந்த பாடகர் ஒருவர், ஜீவானால் ஈர்க்கப் பட்டு அவருக்காக பாட்டு ஒன்றை எழுதி வீடியோப் படம் ஒன்றையும் தயாரித்தார். ஜீவான் அறிமுகம் இல்லாதவர்களை கட்டி அணைக்கும் செயலை இசைமயமாக படம் பிடித்துக் காட்டிய அந்த வீடியோ ‘யூடியுப்’ தளத்திலும் அரங்கேறியது.

‘யூடியுப்’ தளத்தில் அந்த வீடியோ காட்சியை பார்த்தவர்கள் அதனை ரசித்து மகிழ்ந்ததோடு, மற்ற நண்பர்களுக்கு பரிந்துரை செய்தனர். இப்படியே லட்சக்கணக்கான முறை அந்த வீடியோ காட்சி பார்த்து ரசிக்கப்பட்டு அதன் ஆதார செய்தியும் பார்த்தவர்களை பாதித்தது. ஜீவான் சொல்வது சரியே என ஏற்றுக்கொண்டு பலரும் தங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களை கட்டி அணைக்க முன் வந்தனர்.

2007ம் ஆண்டில் ஜூலை 7-ம் தேதியை சர்வதேச இலவச அழைப்பு தினமாக கொண்டாடும்படி அழைப்பு விடுக்கும் அளவுக்கு ஜீவான் பிரபலமாகி அவருக்கு என்று ஆதரவாளர்கள் உருவாகி விட்டனர். மற்ற நாடுகளில் இது கிளை இயக்கங்களாகவும் துளிர் விட்டது.

———
link;
http://in.youtube.com/watch?v=vr3x_RRJdd4
———-