Category Archives: வலைப்பதிவு

புதியதோர் வலைப்பதிவு சேவை!.

திமுக,அதிமுக போல காங்கிரஸ் ,பிஜேபி போல வலைப்பதிவு சேவை என்று வரும் போது பெரும்பாலானோர் பிலாகரையும்,வேர்டுபிர்சையும் மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றனர்.

ஆனால் மூன்றாம் அணி கட்சிகளும் எண்ணற்ற உதிரி கட்சிகளும் இருப்பது போல வலைப்பதிவு சேவையிலும் மேலும் பல இருக்கின்றன.

இவற்றில் டம்பலரை மாற்று சேவை என குறிப்பிடலாம்.வலைப்பதிவின் மேம்ப்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய ட‌ம்பலர் வலைப்பதிவு சேவை இணைய பகிர்வை எளிதாக்கி தருகிறது.

இதே போலவே சமூக வலைப்பின்னல் யுகத்திற்கு ஏற்ற வலைப்பதிவு சேவையாக ஓவர்பிலாக் அமைந்துள்ளது.

பிலாகர்,வேர்டுபிரஸ் போலவே இதிலும் புதிய வலைப்பதிவை துவக்குவது மிகவும் எளிதானது.

ஆனால் இதன் சிறப்பம்சம் சமூக வலைப்பின்னல் பகிர்வுக்கான வசதியாகும்.இதில் பதிவுகளை வெளியிடுவதோடு பேஸ்புக்,டிவிட்டர்,பிலிக்கர் போன்ற உங்களது சமூக வலைப்பின்னல் தளங்களில் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை இதில் எளிதாக சேர்த்து கொள்ளலாம்.

வேர்டுபிரஸ் உள்ளிட்ட சேவைகளிலும் பயனாளிகள் தங்கள் பேஸ்புக்,டிவிட்டர் பதிவுகளை இணைத்து கொள்ளும் வசதி இருந்தாலும் அவற்றை தனித்தனியே சேர்த்தாக வேண்டும்.ஆனால் ஓவர்பிலாக் சேவை எல்லா சமூக வலைப்பின்னல் பகிர்வுகளையும் தானாகவே உடனடியாக இணைக்கும் வசதியை தருகிறது.

இணையத்தில் எந்த இடத்திலும் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் இங்கே சேர்க்கப்படும் என்று இந்த சேவை பெருமையோடு குறிப்பிடுகிறது.

இந்த வசதி உட்பட மொத்தம் பத்து காரணங்களுக்காக தனது சேவையை பயன்படுத்தி வலைப்பதிவு செய்யலாம் என்று ஓவர்பிலாக் அழைக்கிற‌து.

இலவசமானது போன்ற வழக்கமான காரணங்கள் அதில் இருந்தாலும் அதிக அளவிலான வடிவமைப்பு தேர்வு வசதி மற்றும் வருவாய் பகிர்வு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.அதே போல பகிரப்படும் தகவல்கள் உடனடியாக செல்போன் வாயிலாகவும் வெளியிடப்படும் வசதியும் இருக்கிறது.

டெஸ்க்டாப்,செல்போன்,ஐப்பேட் என எல்லா வகையான சாதங்களிலும் வலைப்பதிவு அட்டகாசமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வலைப்பதிவு சேவையை மாற்றலாம் என்று நினைத்து கொண்டிருப்பவர்களும் பேஸ்புக் பிரியர்கள் டிவிட்டர் அபிமானிகளும் பயன்படுத்தி பார்க்கலாம்.தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் வலைப்பதிவில் இருந்து இதற்கு எளிதாக மாறிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.மாற்றத்திற்கு நீங்கள் தயாரா?

இணையதள முகவரி;http://en.overblog.com/

பாலுமகேந்திராவின் வலைப்பதிவு.

வலைப்பதிவு வாசகர்கள் கொஞ்சம் எழுந்து நின்று கைதட்டி வரவேற்கலாம்.இது வரை காமிரா மூலம் பேசிய பாலுமகேந்திரா வலைப்பதிவு உலகிறகு வந்திருக்கிறார்.திரைப்பட ரசிகர்களுக்கு இதை விட நல்ல செய்தி இருக்க முடியாது.

எழுதினாலும் பேசினாலும் சினிமா தான் மூச்சு என இருப்பவர் இப்போது வலைப்பதிவு மூலம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார்.

பாலு ம‌கேந்திராவின் வலைப்பதிவு தலைப்பு என்ன தெரியுமா?மூன்றாம் பிறை!(முகவரி வேறு).மூன்றாம் பிறையை கிட்டத்தட்ட பாலுமகேந்திராவிற்கு காப்புரிமை கொடுத்து விடலாம் தான்.அது அவரது சினிமா கலையின் அடையளாமாகவே மாறிவிட்டது.

இந்த தலைப்பில் அவரது வலைப்பதிவை படிப்பது பொருத்தமானது மட்டும் அல்ல;பரவசமானதும் கூட!

வலைப்பதிவின் முதல் பதிவை பாலுமகேந்திரா பேசுகிறேன் என்றே ஆரம்பித்திருக்கிறார்.(கேட்க காத்திருக்கிறோம் சார்)

அந்த பதிவில் வெளிப்படும் தெனி கவனிக்கத்தக்கது.எத்தனை பெரிய மேதை அவர்.பாலுமகேந்திரா ஸ்கூல் என்று சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவில் தனது கலையால் கவரப்பட்ட மாணவர் படையை அவர் உருவாக்கி வைத்திருக்கிறார்.திரையில் காமிராவின் நுணுக்கங்களை பார்த்து ரசிகர்கள் கைத்தட்ட வைத்தவர் அல்லவா அவர்!

அவரிடம் சினிமா பற்றி சொல்ல கடலளவு இருக்கிறது.ஆனால் அவரோ எனது சுயசரிதையை பதிவு செய்ய வேண்டும் என மாணவர்களும் நலம் விரும்பிகளும் தன்னிடம் கேட்டு கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி விட்டு சுயசரிதை எழுதும் அளவுக்கு தான் ஒன்று சாதனையாளன் அல்ல சாமான்யான் என்கிறார்.

அது மட்டும் அல்ல நான் ஒரு சேறு நிறைந்த சாக்கடை என்கிறார்.அந்த சேற்றில் பூத்த செந்தாமரைகளாக தனது மூடுபனியையும் அழியாத கோலங்களும் வீடு மற்றும் சந்தியாராகம் முன்றாம் பிறை போன்றவை மலர்ந்தன‌ என்கிறார்.

தனது வாழ்க்கை சொல்லிகொள்ளும் படியானதோ எழுதி கொள்ளும் படியானதோ அல்ல என்பவர் இருப்பினும் எழுத்தில் பதிவு செய்ய வேண்டிய அத்தியாயங்களை குறிப்பாக சினிமாவுக்கும் தனக்குமான உறவை வலைப்பதிவில் பதிவு செய்ய இருப்பதாக கூறுகிறார்.

பாலுமகேந்திராவின் கலையில் இருக்கும் உண்மையையும் நேர்மையையும் பாசாங்கற்ற தன்மையையும் இந்த அறிமுக உரையிலும் காணலாம்.அவரது கலையை கண்டு வியப்பது போலவே இந்த அறிமுகத்தையும் கண்டு வியக்கலாம்.

அறிமுகத்தில் குறிப்பிட்டது போலவே சினிமாவும் நானும் என்ற தலைப்பில் சினிமா மீது தனது காதல் ஏற்பட்ட விதத்தை விவரித்திருக்கிறார்.

13 வயதில் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதையும் ஒரு முரை பள்ளி சுற்றுலா சென்ற இடத்தில் சினிமா மேதை டேவிட் லீன் படப்பிடிப்பை பார்த்து பிரம்மித்து போன அனுபவத்தையும் அதே சிறுவயது பரவசத்தோடு விவரித்துள்ளார்.

அந்த படபிடிப்பின் போது டேவிட் லின் ரெயின் என்று கத்தியதும் மழை பெய்ததை பார்த்து ஆச்சர்யத்தில் உறைந்தவர் பெரியவனானதும் நான் சினிமா டைரக்டராக தான் வருவேன் ,நான் ரெயின் என்றால் மழை பெய்யும் என்று முடித்திருக்கிறார்.

பாலு மகேந்திரா சார் தொடர்ந்து படிக்க காத்திருக்கிறோம்.இல்லை தொடர்ந்து கற்றுகொள்ள காத்திருக்கிறோம்.எழுதுங்கள் சார்.

————-
பாலுமாகேந்திராவின் வலைப்பதிவு முகவரி;http://filmmakerbalumahendra.blogspot.in/

குறிப்பு;பாலுமகேந்திராவின் இந்த வலைப்பதிவை சுட்டிக்காட்டி உடனடியாக படிக்க சொன்ன எனது நண்பனும் சக பத்திரிகையாளனுமான பரத்திற்கு எனது நன்றிகள்.

வலைப்பதிவில் பாலுமகேந்திரா சினிமா மீது தனக்கு காதல் ஏற்பட்ட அனுபவத்தை ஒரு முறை நிகழ்ச்சி ஒன்று நேரில் விவரிக்க கேட்டு ரசித்திருக்கிறேன்.நானும் ரெயின் என்று சொன்னால் மழை வரும் என்று அவர் சொன்னதை செய்தியாக பரவசமாக பதிவும் செய்திருக்கிறேன்.

அனுபுடன் சிம்மன்

80 வ‌யது பாட்டியின் வலைப்பதிவு!

‘சொல்லுகிறேன்’ வலைப்பதிவை சாதாரண சமையல் குறிப்பு வலைப்பதிவு என்று நினைத்துவிட வாய்ப்பிருக்கிறது.அதிலும் சமையலில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு அந்த வலைப்பதிவு எந்தவித சுவாரஸ்யத்தையும் அளிக்காமல் போகலாம்.

ஆனால் அந்த வலைப்பதிவை எழுதி வருபவர் 80 வயதை கடந்த பெண்மணி என்பது ஆச்சர்யத்தை அளிக்க கூடிய விஷயம்.(அவரது பெயர் காமாட்சி.காமாட்சி பாட்டி என்று சொல்லலாம்.அல்லது மரியாதை கருதி காமாட்சி அம்மாள் எனலாம்)அதை விட ஆச்சர்யம் அந்த வலைப்பதிவை அவர் எழுதி வரும் விதம்.

ஒரு நல்ல வலைப்பதிவுக்கு சொல்லப்படக்கூடிய அடைப்படையான அம்சங்கள் அனைத்தையும் இந்த வலைப்பதிவு பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கிறது.வலைப்பதிவுக்கு என்று ஒரு மைய நோக்கம்,தொடர்ச்சியான பதிவுகள்,பின்னூட்டம் மூலமான உரையாடல் போன்ற அம்சங்களை கொண்டு பார்த்தால் தமிழின் சிறந்த வலைப்பதிவுகளின் பட்டியலில் இந்த வலைப்பதிவிற்கு சிறப்பு அனுமதியோடு இடம் அளிக்கலாம்.

அதைவிட முக்கியமாக இந்த வலைப்பதிவில் வெளிப்படும் பகிர்தலின் ஆர்வம் பாராட்டத்தக்கது.வரவேற்கத்தக்கது.அந்த பகிர்தலில் வெளிப்படும் அனுபவத்தின் கீற்றுகளும் வெளிப்பாடத தன் முனைப்பின் சாயலும் இன்னும் கூட வரவேற்கத்தக்கது.

சமையல் குறிப்புகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் இந்த வலைப்பதிவை பயனுள்ளதாக கருதுவார்கள்.கருதி தொடர்ந்து வருகை தருவார்கள்.காரணம் தொடர்ச்சியாக புதிய புதிய சமையல் குறிப்புகள் இடம் பெற்று வருவது தான்.ஏற்கனவே பதிவிடப்பட்ட குறிப்புகள் அவற்றின் பிரிவுக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டுள்ள பட்டியலை பார்த்தால் ஒரு முழுமையான‌ சமையல் குறிப்பு புத்தகத்தின் தன்மை கொண்டிருப்பதை உணரலாம்.இந்த வலைப்பதிவின் செறிவின் சான்று இது.

வலைப்பதிவின் எழுத்து நடை அலங்காரமோ மேல்பூச்சோ இல்லாமல் எளிமையானதாக இருக்கிறது.நேரிடையாக பேசும் தன்மையோடு எந்த வித நீட்டி முழக்கலும் இல்லாமல் எடுத்த எடுப்பில் விஷயத்திற்கு வந்து விடுகிறார் காமாட்சி அம்மாள்.இந்த எளிமை சமையலில் ஆர்வம் உள்ளவர்கள் புதிய உனவு வகைகளை கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்.

80 வயதில் காமாட்சி அம்மாள் இப்படி சுறுசுறுப்பாக பதிவிடுவது ஆச்சர்யமான விஷயம் தான்!.

பதிவுலகிற்கு அவர் வந்த விதத்தை விவரிக்கும் அவரது அறிமுக குறிப்பை படித்தால் இன்னும் ஆச்சர்யமாக இருக்கிறது.காலம் தந்த பணிவு,இந்த வயதிலும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இரண்டையும் அந்த குறிப்புகளில் பார்க்கலாம்.

ஒரு வருடம் முன் வரை கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரியாது ,இப்போது சிறிது தெரிகிறது என ஆரம்பித்து தான் வலைபதிவு செய்யத்துவங்கிய காரண‌த்தை காமாட்சி அம்மாள் விளக்கியிருக்கிறார்.

அந்த அறிமுக கதையில் இந்திய பெண்களின் சொல்லப்படாத சோகமும் கல்ந்திருப்பதாகவே தோன்றுகிறது.எதிர் நீச்சல் போடுவதிலும் என்ன செய்வது என யோசிப்பதிலுமே காலம் போய்விட்டதாக குறிப்பிடுவதை படிக்கும் போது மிடில் கிளாஸ் பெண்களின் கைகளில் மாட்டப்பட்ட கண்ணுக்கு தெரியாத கை விளங்களின் சுமையை உணர முடிகிறது.

இளம் வயதில் எழுத்தார்வம் மிக்கவராக இருந்தவர் கலியாண வாழ்க்கைக்கு பின் அந்த தொடர்புகள் அறவே விடுபட்டு குடும்பத்தின் பொறுப்புகளால் நேரமின்மை ஏற்பட்டதாக குறிப்பிடுகிறார்.

தற்போது கடைசி மகனோடு பனிபொழியும் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இருக்கும் காமாட்சியம்மாள் மகனின் உதவியோடு கம்ப்யூட்டர் பழகி விகடன் ஆர்வத்தால் பின்னூட்டங்களில் துவங்கி பின்னர் வலைப்பதிவு பற்றி தெரிந்து கொண்டு சொல்லுகிறேன் பதிவை துவக்கியிருக்கிறார்.

தொடர்ந்து சுறுசுறுப்போடு குறிப்புகளை பகிர்ந்து கொண்டு வருகிறார்.அத்தையாக,பாட்டியாக,தாயாக பாவித்து எனக்கு ஊக்கம் கொடுங்கள்,எழுதுகிறேன்,வலைப்பதிவை உபயோகிப்பதில் எனக்கு ஆசானாக இருந்ந்து கற்று கொடுங்கள் என்ற கோரிக்கையோடு முடித்திருக்கிறார்.80 வயதில் தனக்கு தெரியாததை பிரரிடம் இருந்து கற்றுக்கொள்ளும் ஆர்வமும் ஆசானாக இருங்கள் என்று சொல்லும் பணிவும் அசாத்தியமானது இல்லையா?

(காமாட்சி அம்மாள் உண்மையில் நாங்கள் தான் உங்களிடன் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.உங்களுக்கு கம்புயூட்டர் தான் தெரியவில்லை,வாழ்க்கை தெரிந்திருக்கிறது. )

பின்னூட்டம் ஒன்றில் பாட்டி கலக்குகிறீர்கள் என்னும் பாராட்டிற்கு கலக்கவில்லை எழுதுகிறேன் என பதில் சொல்லி இருப்பதை பார்க்கும் போது இன்னும் வியப்பாக இருக்கிறது.

சமையல் குறிப்புகளிலும் இந்த பின்னூட்ட உரையாடலை பார்க்க முடிகிறது.பலர் குறிப்புகளை படித்து சமைத்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.அவற்றுக்கெல்லாம் உற்சாகமாக கருத்து தெரிவித்திருக்கிறார். பதிவுலகில் இருக்கும் அவரது விசிறியான இன்னொரு பதிவர் ரஞ்சனியுடனான உரையாடலையும் பார்க்க முடிகிற‌து.

நமது தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும் கம்ப்யூட்டர் கற்று கொடுத்து அவர்களை வலைப்பதிவுக்கும் குறும்பதிவுக்கும் கொண்டு வந்து அவர்களில் அனுபவ பாடங்களை காத்தின் சுவடுகளை பதிவு செய்ய வைக்க வேண்டும் என்பதற்கு காமாட்சி அம்மாள் அழகான உதாரண‌ம்.

காமாட்சி அம்மாளுக்கு எனது ஒரே யோசனை ,அல்ல வேண்டுகோள் சமையல் குறிப்புகளில் இருந்து சற்றே விலகி உங்கள் வாழ்க்கை அனுபவங்களை அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்பது தான்.

வலைப்பதிவு முகவரி;http://chollukireen.wordpress.com/

வலைப்பதிவை மறக்காமல் இருக்க ஒரு இணையதளம்.

வலைப்பதிவை துவக்கும் போது இருக்கும் உற்சாகமும் வேகமும் தொடர்ந்து இருக்கும் என்று சொல்வதற்கில்லை.ஆரம்ப நாட்களில் தினம் ஒரு பதிவை போட்டு அசத்தியவர்கள் கூட போக போக வாரம் ஒரு பதிவு பின்னர் மாதம் ஒரு பதிவு என மந்தமாகி ஒரு கட்டத்தில் பதிவிடுவதையே மற‌ந்து போய்விடுவதுண்டு.

ஆரம்ப காதல் மாறி வலைபதிவு மீது இப்படி பாராமுகம் கொள்ள பல காரணங்கள் உண்டு.வேலை பளு ,சோம்பல் போன்ற காரணங்களை தவிர வலைப்பதிவின் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்காதது ,வருவாய்க்கான வழி இல்லாததது என எத்தனையோ காரணங்களை இதற்கு கூறலாம்.

எது எப்படியோ வலைப்பதிவு என்று ஒன்று இருப்பதையே மறந்து விட்டேன் என்று புலம்பித்த‌விக்கும் நிலைக்கு பல பதிவர்கள் ஆளாவதுண்டு.சிலருக்கு இது குற்ற உணர்வை கூட ஏற்படுத்தலாம்.

வலைப்பதிவு என்றில்லை;குறும்பதிவு சேவையான டிவிட்டரை பயன்படுத்துபவர்களும் தங்கள் கணக்கை மறந்து மாதக்கணக்கில் புதிய பதிவு எதனையுமே பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதும் உண்டு.

தொழில்நுட்ப யுகம் சமுக வலைப்பின்னல் சேவைகள் முலமாக பகிர்வதை சுலபமாக்கியிருக்கும் அதே நேரத்தில் இத்தகைய மன‌ உறுத்த‌ல்களுக்கும் ஆளாக்கி விடுகிறது.

நிற்க அடிக்கடி பதிவிட தவறும் வலைப்பதிவாளர்களை இடித்து காட்டுவது அல்ல இந்த பதிவின் நோக்கம்.மாறாக வலைப்பதிவு மறதிக்கான காரணம் எதுவாக இருக்குமானாலும் அதிலிருந்து விடுபடுவதற்கான தீர்வு தரும் இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்வதே ஆகும்.

கீப் ஆன் போஸ்டிங் என்னும் அந்த தளம் வலப்பதிவாளர்கள் தங்கள் வலைப்பதிவுனை ஒரேடியாக மறந்துவிடாமல் இருப்பதகான நினைவூட்டல் சேவையை வழங்குகிறது.அதாவது குறிப்பிட்ட காலத்திற்கு மேல நீங்கள் புதிய பதிவிடாமல் இருக்கும் போது இந்த சேவை அது குறித்து உங்களுக்கு நினைவூட்டி பதிவிடச்சொல்கிறது.

இதே போல டிவிட்டர் குறும்பதிவு சேவையை பயன்ப‌டுத்துபவர்களும் புதிய 140 எழுத்து பதிவுகளை வெளியிடாமல் இருந்தால் இந்த சேவை இமெயில் வாயிலாக நினைவூட்டும்.

சுறுசுறுப்பான வலைபதிவாளராக இருக்க விரும்புகிறவர்கல் இந்த சேவையை பயன்படுத்தினால் தொடர்ந்து வலைப்பதிவை புதுப்பித்து கொண்டே இருக்கலாம்.உற்ற நண்பனைப்போல இந்த சேவை நீங்கள் பதிவிட்டு நாளாச்சு என நினைவுபடுத்தி உங்களை ஊக்கப்படுத்தும்.

இணையத்தில் எத்தனையோ வகையான நினைவூட்டல் சேவைகள் இருக்கின்றன.அவற்றில் வலைப்பதிவாளர்களுக்கான நினைவூட்டல் சேவையாக கீ ஆன் போஸ்டிங் அமைந்துள்ளது.

வலைப்பதிவு அல்லது டிவிட்டர் கணக்கு வைத்திருப்பவர்கள் அவற்றை மற‌ந்துபோய்விடும் பழக்கமும் கொண்டிருந்தால் இந்த சேவையை பயன்ப‌டுத்தி பார்க்கலாம்.

தமிழில் பல நல்ல வலைப்ப‌திவுகள் தொடர்ட்ந்து புதுப்பிக்கப்பட்டாததை பார்த்து வ‌ருந்தியிருக்கிறேன்.அத்தகைய பதிவுகள் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்க இந்த சேவை கைகொடுக்கட்டுமே.

இணையதள முகவரி;http://keeponposting.com/