கனடாவில் டொமைன் அலை

இந்தியர்கள் இப்படி யோசித் திருக்கின்றனரா என்று தெரியவில்லை. அப்படி யோசிக்காத பட்சத்தில் அவர்கள் மகத்தான வாய்ப்பை கைநழுவ விடுவதாகவே தோன்றுகிறது.
இப்போது விழித்துக் கொண்டாலும் பரவாயில்லை. அவர்கள் தங்களுக்கான சொந்த முகவரியை பதிவு செய்து கொண்டு விடலாம்.இந்தியர்கள் எப்படியோ, கனடா நாட்டை சேர்ந்தவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். அந்நாட்டில் உள்ள பலர் இன்டெர்நெட்டில் தங் களுக்கென தனி அடை யாளத்தை உறுதி செய்து கொள்ளும் சொந்த இணையதள முகவரிகளை உருவாக்கி வருகின்றனராம்.

இதனை படித்ததும் சொந்த இணையதளமெல்லாம் நமக்கு எதற்கு என்று உங்களில் பெரும்பாலானோர் நினைக் கலாம். நாம் அதை வைத்து வியாபாரமா செய்யப் போகிறோம். அல்லது சொந்த இணையதளம் வைத்துக் கொள்ளும் அளவுக்கு நாம் என்ன பெரிய ஆளா? என்று நினைக்கலாம்.

விஷயம் அதுவல்ல. நீங்கள் சாமானிய மனிதராக இருந்தாலும் கூட உங்கள் பெயருக்கான இணையதள முகவரியை பதிவு செய்து கொண்டு விடுவது மிகவும் நல்லது. காரணம் உங்கள் பெயரில் ஒரேயொரு இணைய தள முகவரியைத்தான் பதிவு செய்ய முடியும்.

ஆனால் உங்கள் பெயர் உள்ளவர் நூற்றுக்கணக்கில், ஏன் ஆயிரக்கணக்கில் கூட இருக்கலாம். அவர்களில் ஒருவர் முந்திக் கொண்டாலும் நீங்கள் உங்கள் பெயரில் இணையதள முகவரியை பதிவு செய்ய முடியாது.

ஆங்கிலத்தை பொறுத்தவரை இது இப்போதே சாத்திய மில்லாமல் போய் விட்டது. இந்த பிரச்சனையை நீங்கள் இமெயில் முகவரியை பதிவு செய்யும் போது நன்றாக உணர்ந்திருக்கலாம்.

ஆனால் சொந்த இணைய முகவரி வேண்டுமென்று பலரும் நினைத்ததில்லை. தேவைப்படும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விடுகின்றனர். ஆனால் இப்போதே இணைய முகவரியை பதிவு செய்து கொள்வது மிகவும் புத்திசாலித் தனமாக இருக்கும்.

கனடா நாட்டை பொறுத்தவரை அந்நாட்டு இணையவாசிகள் இப்போது விழிப்புணர்வு பெற்று தங்களது பெயரில் இணையதள முகவரியை உருவாக்கி கொண்டு வருகின்றனர். அண்மையில் ஜோஸ்மித் என்பவர் தனது பெயரில் முகவரியை பதிவு செய்ய முயற்சி செய்தார். அப்போது அந்த முகவரி அதுவரை பதிவு செய்யப்படாமல் இருப்பது கண்டு வியப்பின் உச்சிக்கே சென்று விட்டார்.

இப்படியொரு அதிர்ஷ்டம் தனக்கு இருக்கும் என்று கருதாத அவர் அந்த முகவரியை பதிவு செய்து கொண்டார். பிற்காலத்தில் சொந்த இணையதளம் தேவைப்படும் போது, அப்போது தேடிப் பார்த்து இணைய தள முகவரி கிடைக்காமல் திண்டாடுவதை விட இப்போதே அதனை பதிவு செய்து விடுவது நல்லதுதான்.

சொந்த இணையதளம் என்பது கிட்டத்தட்ட ஒரு டிஜிட்டல் சூட்கேஸ் போன்றது என்று சொல்கின்றனர். தனிநபர் பற்றிய விவரங்களை அதில் எவ்வளவு வேண்டுமானாலும் திணிக்கலாம்.

அது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் சொந்த பெயரில் இணையதளம் வைத்திருப்பது என்பது பல்வேறு விதங்களில் கைகொடுக்கலாம். மேலும் அது சரியான இணைய அடையாள மாகவும் விளங்கும்.

டாட் காம் என்று முடியும் முகவரிகளை இனி சொந்த பெயர்களில் பதிவு செய்வது சாத்தியமில்லை. காரணம் அநேகமாக அவை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும்.

ஆனால் குறிப்பிட்ட நாட்டின் முகவரியோடு முடியும் டொமைன் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். கனடா நாட்டி யினர் இப்படித்தான் தங்கள் நாட்டின் டொமைன் பெயரான டாட் சிஏ என்று முடியும் இணையதள முகவரிகளை வெகு வேகமாக பதிவு செய்து வருகின்றனர். இந்தியர்களும் கூட டாட் இன் என்று முடியும் முகவரிகளை பதிவு செய்து கொள்ளலாம்.

அது மட்டுமல்ல, கனடா நாட்டினருக்கு இல்லாத மற்றொரு சவுகரியம் நமக்கு உண்டு. நம்முடைய பெயர்களோடு முடியும் டாட் காம் முகவரிகளில் பல இதுவரை பதிவு செய்யப்படாமலே இருக்கும்.

காரணம் ஜோஸ்மித் டாட் காம் என்று அமெரிக்காவில் பலர் பதிவு செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் ராமசாமி டாட் காம் என்பது போன்ற இந்திய பெயருக்கு மேலை நாட்டினர் போட்டிக்கு வர மாட்டார்கள் இல்லையா?

எனவே தான் இந்தியர்களுக்கு சொந்த இணையதள முகவரிகளை பொறுத்தவரை அருமையான வாய்ப்பு இன்னமும் காத்திருக்கிறது. அதனை உணர்ந்து அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் அதன் பயனை அனுபவிக்கலாம்.

————–

இன்டெர்நெட் தேடலும், விவாதமும்

இன்டெர்நெட் மூலம் சாமானியர்கள் உலகம் முழுவதும் அறிந்தவர்களாக ஆகி விடும் கதைகள் அநேகம் உண்டு. எந்தவித திட்டமிடலோ, பிரபலமாக வேண்டும் என்ற நோக்கமோ இல்லாமல் இன்டெர்நெட் மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் ஆர்வம் ஒன்றின் மட்டும் விளைவாக இவர்கள் உலகப் புகழ் பெற்று விடுவதுண்டு. இத்தகைய “நெட்’சத்திரங்களுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. சில நேரங்களில் சாமானியர்கள் இன்டெர்நெட்டில் தங்களை வெளிப்படுத்தி கொண்டதன் விளைவாக விமர்சன சூழலில் சிக்கி சர்ச்சை நாயகர்களாகவும் ஆகி விடுவதுண்டு

எதிர்பாராத புகழை விட, எதிர்பாராத விமர்சனம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இப்படி இன்டெர்நெட்டில் தனது மனதை திறந்து விட்டு இப்போது உலகம் முழுவதும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் நபராகி இருக்கிறார்.

தனது மனதுக்கு பொருத்தமான கணவனை தேடிக் கொள்வதற்கான முயற்சி சர்வதேச அளவில் பேசு பொருளாகும் என்று அவர் எப்படி நினைத்துப் பார்த்திருப்பார். ஆனால் அதுதான் நடந்திருக்கிறது.

டேட்டிங் தளம் என்று பிரபலமாக குறிப்பிடப்படும் வாழ்க்கை துணையை தேடிக் கொள்வதற்கான தளங்கள் இன்டெர்நெட்டில் அநேகம் இருக்கின்றன. அவற்றில் லட்சக்கணக்கானோர் தங்களது விருப்பத்தை குறிப்பிட்டு வருங்கால கணவர்/மனைவி எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் குறிப்பிட்டு வாழ்க்கைத் துணையை தேடுகின்றனர்.

இதே போலத்தான் அந்த அமெரிக்க இளம்பெண்ணும் தனக்கு எப்படிப்பட்ட கணவர் வேண்டும் என்று கிரைக்லிஸ்ட் தளத்தில் குறிப்பிட்டிருந்தார். கிரைக்லிஸ்ட் வரி விளம்பர தளங்களில் முன்னிலையில் இருக்கும் முன்னோடி தளம்.

இதன் மூலம் வேலைவாய்ப்பையும், வாழ்க்கையையும் தேடிக் கொண்டவர்கள் லட்சக்கணக்கில் உண்டு. தொடர்புகளை ஏற்படுத்தி தருவதில் இந்த தளத்திற்கு இருக்கும் ஆற்றலை அறிந்து கொண்டு வாழ்க்கைத் துணைக்கான தேடலுக்கும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த எதிர்பார்ப்போடுதான் குறிப்பிட்ட அந்த இளம்பெண், தனது வாழ்க்கைத் துணை தேடலை இந்த தளத்தில் குறிப்பிட்டிருந்தார். “நான் அழகான இளம்பெண். மிகவும் அழகான இளம்பெண். எனக்கு 25 வயதாகிறது. ஒயிலான தோற்றம் கொண்ட நேர்த்தியானவள்’ இது அந்த பெண் தன்னைப் பற்றி செய்து கொண்ட அறிமுகம்.

நான் லட்சாதிபதியை கணவராக தேடிக் கொண்டிருக்கிறேன். இது அந்த பெண் குறிப்பிட்டிருந்த எதிர்பார்ப்பு. கிரைக்லிஸ்ட் போன்ற தளங்களில் இதே போன்ற லட்சக்கணக்கானோர் தங்களது விருப்பத்தை குறிப்பிடுகின்றனர். அவை நிறைவேறுவது தொடர்பாக விதவிதமான அனுபவங்கள் ஏற்படுகின்றன.

ஆனால் யாருக்கும் ஏற்பட்டிராத அனுபவத்திற்கு இந்த இளம்பெண் இலக்காக நேர்ந்தது. தன் மனதில் பட்டதை மிகவும் வெளிப்படையாக குறிப்பிட்டு விட்டதாலோ என்னவோ அவருடைய குறிப்பு யார் யாருடைய கவனத்தையெல்லாமோ ஈர்த்து ஒரு பெரும் விவாதத்தை தொடங்கி வைத்தது.

அந்த பெண், லட்சாதிபதி கணவர் தேவை என்று சொல்லியதோடு விட்டிருக்கலாம். அத்தகைய கணவனை எப்படி தேடிக் கண்டுபிடிப்பது என்பதற்கான ஆலோசனையையும் கேட்டிருந்தார்.

அவ்வளவுதான். அவருடைய கோரிக்கையில் விருப்பம் இல்லாதவர்கள் கூட அவருக்கு பதிலளிக்க முற்பட்டனர். இது தேவையா? இப்படியொரு கோரிக்கையை வைக்கலாமா? என்பது போல சிலர் கருத்து தெரிவித்தனர்.

ஒரு சிலர் அவருக்கு ஆலோசனை வழங்க முன் வந்தனர். தொழிலதிபர்கள் கூடும் விருந்து நிகழ்ச்சிக்கு சென்று பல்லை இளித்து நின்றால் உங்கள் விருப்பம் நிறைவேற வாய்ப்பு இருக்கிறது என்று ஒருவர் எழுதியிருந்தார்.

இன்னொருவரோ லட்சாதிபதிகளை சந்திக்கக் கூடிய இடங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார். மற்றொருவர், என் அருமை பெண்ணே லட்சாதிபதியை மணந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதை விட லட்சாதிபதியாக வரக் கூடியவரை மணந்து கொள்ளேன் என்று அறிவுரை கூறியிருந்தார்.

இன்னொரு நபரோ பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கும் பெண் என்னை பொறுத்தவரை அழகானவரல்ல என்று குறிப்பிட்டிருந்தார். பெண்ணியவாதி ஒருவரோ, வசதி படைத்த வாழ்க்கை வேண்டுமென்றால் பெண்ணே நீயே தொழில் தொடங்கி சம்பாதிக்க வேண்டியதுதானே. ஏன் ஆணின் கையை எதிர்பார்த்து நிற்கிறாய் என்று கேட்டிருந்தார்.

இன்னொருவரோ அவருக்கு பதிலளிப்பது போல இதிலென்ன தவறு. ஒரு பெண் தானே சம்பாதிக்கலாம் அல்லது சம்பாதிப்பவரை திருமணம் செய்து கொள்ளலாம். அது அவளது உரிமை என்று எழுதியிருந்தார்.

இப்படியாக அந்த இளம்பெண்ணின் தேடல் இன்டெர்நெட் உலகில் அவரை மையமாக கொண்டு ஒரு தொடர் விவாதத்தை ஏற்படுத்தி பெரும் சர்ச்சையின் நாயகியாக அவரை உருவாக்கி விட்டது. இதை நிச்சயம் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

———–

டொமைன் வெற்றிக்கதை

டொமைன் வெற்றிக் கதைகள் முடிந்துவிடவில்லை. இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக் கின்றன என்பதை கிரிஸ் கிளார்க் லட்சாதிபதியாகி இருப்பது உணர்த்துகிறது.வெறும் 20 டாலர் முதலீட்டில் கிளார்க் லட்சாதிபதியாகி இருக்கிறார் என்று சொன்னால் வியப்புக்கு நடுவே இதெப்படி சாத்தியம் என்று கேட்கத் தோன்றும். ஆனால் 14 ஆண்டுகளுக்கு முன் கிளார்க் 20 டாலர் முதலீடு செய்த போது அவரே கூட இது தன்னை லட்சாதிபதியாக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்.

இன்று அந்த முதலீடு தான் அவருக்கு 26 லட்சம் டாலர்களை பெற்றுத் தந்திருக்கிறது.
இந்த அற்புதம் சாத்தியமாக அவர் செய்தது எல்லாம் புதுப்பித்தலும், காத்திருத்தலும் தான்.
ஆம், கிளார்க் 1994ம் ஆண்டு இணையதள முகவரி ஒன்றை பதிவு செய்துவிட்டு, ஆண்டு தோறும் அதனை புதுப்பித்து வந்தார். அந்த முகவரிதான் இன்று 26 லட்சம் டாலருக்கு விலை போயிருக்கிறது. அது நம்ப முடியாத வியப்பாக இருக்கிறது என்று கிளார்க்கே அதிசயித்து நிற்கிறார்.

டொமைன் நேம்ஸ் என்று குறிப்பிடப்படும் இணையதள முகவரிகள் அதன் உரிமையாளர்களை லட்சாதிபதிகளாகவும், ஏன் கோட்டீஸ்வரர்களாகவும் ஆக்கியுள்ள கதைகள் ஒன்றும் புதிதல்ல. 1999ம் ஆண்டில் 75 லட்சம் டாலர்களுக்கு விற்பனையான பிஸ்ன் டாட்காம் முகவரியை, இதன் சிகரம் என்று குறிப்பிடலாம். அதற்கு முன்னும், பின்னும் கூட பல இணையதள முகவரிகள் பெரும் தொகைக்கு விற்கப்பட்டன.

உலகில் 1500 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைய தள முகவரிகள் இருப்பதாக ஒரு கணக்கு சொல்லப்படுகிறது. இந்த கடலுக்கு நடுவில், அபூர்வ இணைய தள முகவரிகளை தேடி எடுப்பது என்பது முத்தெடுப்பது போல தான்.

இத்தகைய முத்துகளை பதிவு செய்து கொண்டிருப்பவர்களிடம் இருந்து, வர்த்தக நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து அவற்றை வாங்க தயாராக உள்ளன. பொதுவாக ஒரு இணைய தள முகவரிக்கு சராசரியாக 2,000 டாலர் வரை விற்பனை ஆகின்றன. ஆனால் அபூர்வத்திலும் அபூர்வமான இணைய தள முகவரிகள் மட்டும் லட்சக்கணக்கில் பெற்றுத் தரும்.

தனித்தன்மை வாய்ந்த இணைய தள முகவரிகள் இப்படி அள்ளித் தருகின்றன. பிஸ்னஸ் டாட் காமிலோ, அதன் பிறகு விற்பனைக்கு வந்த கோடிகளை கொட்டிய டைமன்ட் டாட் காமிலோ அல்லது புகழ் பெற்ற புத்தக விற்பனை நிலையமான பார்னர்ஸ் அண்டு நோபுள் நிறுவனத்தால் வாங்கப்பட்ட புக்ஸ் டாட் காமிலோ என்ன புதுமையும், தனித்தன்மையும் இருக்கிறது என கேட்கலாம். இந்த பெயர்களில் எல்லாம் வேறு ஒரு முகவரியை பதிவு செய்ய முடியாது என்பதே விஷயம். முதலில் பதிவு செய்தவர்களைத் தவிர, வேறு யாரும் அவர் எத்தனை பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் கூட இவற்றை மீண்டும் பதிவு செய்ய முடியாது. எனவே தான், தேவைப்படும் நிறுவனங்கள் இவற்றை என்ன விலை கொடுத்தேனும் வாங்க தயாராக உள்ளன.

அமெரிக்காவில் வசிக்கும் கிரிஸ் கிளார்க் 14 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்து வைத்திருந்த பிட்சா டாட் காம் முகவரியும் இதே போல் தான் தற்போது 26 லட்சம் டாலருக்கு விற்பனை ஆகியுள்ளது.

1994ம் ஆண்டில் பெரிய திட்டங்கள் ஏதும் இல்லாமலேயே கிளார்க் இந்த முகவரியை பதிவு செய்து வைத்தார். டாட்காம் அலைக்கு முந்தைய காலம் என்பதால் இந்த முகவரி மூலம் ஜாக்பாட் அடிக்கும் அதிர்ஷ்டம் இருப்பதையும் அவர் அறிந்திருக்கவில்லை.

இணைய தள முகவரிகளை பதிவு செய்வது ஒரு புதுமையாக கருதப்பட்ட நிலையில், பிட்சா டாட் காமை வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று அவருக்குத் தோன்றியது. அப்போது அவர் இன்டெர்நெட் ஆலோசனை வழங்குவதை தொழிலாக கொண்டிருந்தார்.
இந்த இணைய முகவரி மூலம் பிட்சா நிறுவனம் ஏதாவது ஒன்றின் ஒப்பந்தம் தனக்கு கிடைக்கலாம் என அவர் எதிர்பார்த்தார். அப்படி எதுவும் நடக்கவில்லை. பின்னர் ஆலோசனை நிறுவனத்தையே விற்று விட்டார். ஆனால் இணைய தள முகவரியை மட்டும் விற்காமல் வைத்துக் கொண்டிருந்தார். ஆண்டு தோறும் அதன் உரிமையை தவறாமல் புதுப்பித்தும் கொண்டிருந்தார்.

இதனிடையே டாட்காம் அலைவீசி, பிஸ்னஸ் டாட்காம் போன்ற பொதுப் பெயர்கள் பொக்கிஷமாக கருதப்பட்ட போதெல்லாம் கூட, தன்னிடமும் தங்கம் இருப்பதைஅவர் உணரவில்லை.

டாட்காம் அலை ஓய்ந்து பல டொமைன் பெயர்கள் செல்லாக்காசாகி, பிறகு மீண்டும் அபூர்வ இணைய தள முகவரிகளுக்கு மதிப்பு ஏற்பட்ட போதும் கூட அவர் தனது முகவரியை விற்க முடியும் என நினைக்கவில்லை.

இந்நிலையில் தான் ஓட்கா டாட்காம் முகவரியை ரஷ்ய ஓட்கா நிறுவனம் ஒன்று பெருந்தொகை கொடுத்து வாங்கியதை கேள்விப்பட்டார். அப்போது தான் அவருக்கு தன்னிடம் உள்ள பிட்சா டாட்காம் முகவரியையும் தள்ளிவிடலாமே என்று தோன்றியது.

டொமைன் பெயர் விற்பனைக்கான ஏல தளத்தில் இந்த முகவரியை விற்பதாக தெரிவித்துவிட்டு காத்திருந்தார். முதலில் 100 டாலருக்கு கேட்கப்பட்டது. பின்னர் ஆயிரம் டாலரானது. 24 மணி நேரத்தில் பார்த்தால் போட்டா போட்டி ஏற்பட்டு, லட்சம் டாலருக்கு வாங்க தயாராக இருந்தனர். பின்னர் இந்த தொகை 20 லட்சம் டாலரை தாண்டிவிட்டது. இறுதியாக 26 லட்சம் டாலருக்கு விற்பனை செய்ய கிளார்க் ஒப்புக் கொண்டார்.

இந்த தொகை தான் எதிர்பார்த்திராத அதிர்ஷ்டம் என்று அவர் நம்ப முடியாத வியப்புடன் கூறுகிறார்.

நிற்க, பிட்சா டாட்காம் போன்ற முகவரிகளை ஏன் இவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டும் என்று கேட்கலாம்.

தேடியந்திர யுகத்தில், பிட்சா டாட்காம் போன்ற பொதுவான முகவரிகள் தேடல் முடிவு பட்டியலில் முந்தி நிற்கும் திறன் பெற்றவை என்பதே விசேஷம்.

சந்தேகம் இருந்தால் “பிட்சா’ என்னும் சொல்லை டைப் செய்து பாருங்கள் பிட்சா டாட்காம் முதலில் வந்து நிற்கும். இதனால் அந்த தளம் எளிதாக கிளிக் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. வர்த்தக நிறுவனங் களுக்கு இந்த தன்மை வருவாயை கொடுக்கும்.

ஒன்றுமே தகவல் இல்லாத ஓட்கா டாட்காம் தளத்தை தினந்தோறும் 17 ஆயிரம் பேர் கிளிக் செய்து பார்க்கின்றனர் என்பதை அறிந்தே ரஷ்ய நிறுவனம் அதனை வாங்க முன் வந்தது.

அந்த வரிசையில் அடுத்த பம்பர் பரிசு எந்த முகவரிக்கு என்று தெரியவில்லை?

—————

இது கூகுல் திரைப்படம்

நடிகராக இருந்து இயக்குனராக மாறிய அமெரிக்காவின் ஜிம் கில்லீன் (பெயர் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா, அதில்தான் விஷயமும் இருக்கிறது) படம் ஒன்றை எடுத்திருக்கிறார்.இந்த படம் உலக மகா காவியமோ அல்லது வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றிபெற்ற படமோ இல்லை. சாதாரண செய்திப்பட வகையை சேர்ந்ததுதான். ஆனால் இந்த செய்திப் படத்தை பலரும் பார்க்கக்கூடிய வகையில் மிகவும் சுவாரசியமான முறையில் அதனை எடுத்திருக்கிறார்.

இந்த செய்திப்படத்தின் உள்ளடக்கமும், அது எடுக்கப்பட்ட விதமும்தான் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த ஜிம் கில்லீனை நடிகர் என்று சொல்வதை விட, நடிகராக முயற்சித்தவர் என்றோ அல்லது முயற்சித்து தோல்வி யடைந்தவர் என்றோ கூறலாம்.

ஹாலிவுட் கனவு நிறைவேறாததால், வெறுத்துப்போன அவர் மசாஜ் செய்பவராக பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தார். இதன் நடுவேதான் அவர் கூகுலில் தன்னைத்தானே தேடும் செயலில் ஈடுபடுத்திக் கொண்டார்.

அதாவது, கூகுல் தேடியந்திரத்தில் தனது பெயரை டைப் செய்துவிட்டு, அது தரும் முடிவுகளில் தன்னைப் பற்றிய அறிமுகம் எத்தகையதாக இருக்கிறது என பார்த்துக் கொண்டிருந்தார்.

ஜிம் கில்லீனைப்போல உலகம் முழுவதும் பலர் இப்படி கூகுலில் தங்களைத்தாங்களே தேடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஈகோ சர்பிங் என்று பெயரும் சூட்டப் பட்டுள்ளது. தமிழில் சொல்வதானால், தன்முனைப்புத்தேடல்.

தன்முனைப்பு தாகம் தீர்வதற்கான செயல் அல்லது நேரத்தை கொல்வதற்கான முயற்சி என்றெல்லாம் இது குறிப்பிடப்படுகிறது. என்றாலும் பலர் இந்த செயலில் ஆர்வத்தோடு ஈடுபடுகின்றனர். ஒரு சிலர் தேடலை தங்களோடு முடித்துக் கொள்ளாமல், தங்களை போன்ற பெயரைக்கொண்டவர்கள் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள முற்படுவதும் உண்டு.

இப்படித்தான் அமெரிக்காவை சேர்ந்த ஆமி ஸ்மித் என்பவர் தன் பெயர் கொண்டவர்களை கூகுல் மூலம் தேடி சந்தித்து அதுபற்றி சுவையான கட்டுரை ஒன்றை எழுதினார்.
தற்போது கில்லீன், இதேபோன்ற செயலில் ஈடுபட்டு கூகுல் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு செய்திப்படம்ஒன்றை எடுத்திருக்கிறார்.

இந்த படம் மிகவும் சுவாரசியமாக வந்துள்ளது. இதற்கான எண்ணம் அவருக்கு ஏற்பட்ட விதமும் சுவாரசியமானதுதான். ஒருநாள் இலக்கில்லாமல் இன்டெர்நெட்டில் உலாவிக்கொண்டிருந்தபோது,உலகில் தன்னுடைய நிலையை அறிந்துகொள்ளும் உத்தேசத்தோடு கூகுல் தேடியந்திரத்தில் தனது பெயரை டைப் செய்து பார்த்தார்.

தன்னைப்பற்றிய அறிமுகம் எப்படி இருக்கிறது என தெரிந்துகொள்வதுதான் அவருடைய எண்ணம். ஆனால் அவரே சற்றும் எதிர்பாராத வகையில், அவரது பெயரில் பல ஜிம் கில்லீன்கள் இருப்பதை கூகுல் முடிவுகள் பட்டியலிட்டுக்காட்டின. அது மட்டுமல்லாமல், அவர்கள் ஒவ்வொருவரும் வேறு வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த நொடியிலேயே அவருக்கு தனது பெயரைக்கொண்டவர்கள் என்பதாலேயே அவர்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டானது. அவர்களையெல்லாம் சந்தித்து பேச வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது.

அடுத்த நிமிடமே, அவர்களைத்தேடி புறப்பட்டுவிட்டார். முதலில் அயர்லாந்தில் உள்ள ஜிம்கில்லீனை தேடிச்சென்றார். இப்படி கூகுல் மூலம் தனக்கு தெரிய வந்த 26 ஜிம் கில்லீன்களில் பலரை தேடிச்சென்று பார்த்தார்.

ஒவ்வொருவரிடமும் குறிப்பிட்ட சில கேள்விகளைக் கேட்டு அவர்கள் அளித்த பதில்களை பதிவு செய்துகொண்டார். இந்த காட்சிகளையெல்லாம் ஒன்றாக சேர்த்து “கூகுல்மீ’ என்னும் செய்திப்படத்தை உருவாக்கினார்.

இந்த படத்தை யூ டியூப் தளத்தின் மூலம் அவர் வெளியிட்டு பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறார். இதற்காகவென்று தனியே ஒரு இணையதளத்தையும் உருவாக்கி அதில் இந்த செய்திப்படத்தின் டிவிடிக்களையும் விற்பனை செய்வதாக அறிவித்திருக்கிறார். முகம் தெரியாத நடிகராக இருந்த அவர், இந்த முயற்சியின் மூலம் ஒரு இயக்குனராக பலருக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார்.

அவருடைய இந்த செய்திப்படம் சிந்தனையை தூண்டுவதாக இருப்பதாக பாராட்டப்பட்டிருக்கிறது. இன்டெர்நெட் யுகத்தில் சாத்தியமாகும் புதுமையான அனுபவத்தை இந்த முயற்சி உணர்த்துவதாக பலரும் கருதுகின்றனர்.

இந்த முயற்சியில் ஈடுபட்ட ஜிம் கில்லீனே கூட தனக்கு புதிய உலகிற்கான வாசல்கள் இதன்மூலம் திறந்துவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். “பெயரளவில்’ மட்டுமே தொடர்புடைய அறிமுகம் இல்லாத நபர்களை சந்தித்து பேசிய அனுபவம் புதிய விஷயங்களை புரிய வைத்திருக்கிறது என்று கூறிய அவர், பெயர் என்பதன் பின்னே உள்ள முக்கியத்துவம் மற்றும் அர்த்தம் பற்றிய புரிதலும் மாறியிருக்கிறது என்கிறார்.

கில்லீனைப்போல யார் வேண்டுமானாலும் கூகுலில் சுய தேடலில் ஈடுபடலாம். ஆனால் அதற்கு பெயர் ராசி மிகவும் முக்கியம். அதவாது அந்த பெயர் மிகவும் பரவலாக வைக்கப்படும் பெயராக இருக்கக்கூடாது.

அதேநேரத்தில், யாரோ சிலர் மட்டுமே வைத்திருக்கக்கூடிய பெயராக இருக்கக்கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட அளவுக்கு இருந்தால்தான் கூகுலில் தேடி சந்தித்துப்பேசுவது சாத்தியம். ஜிம் கில்லீன் அத்தகைய பெயர்தான்.
————-
LINK;www.googlemethemovie.com

பாட்காஸ்டிங் கேட்க வா

பாட்காஸ்டிங் பிரியர்களுக்கு நற்செய்தியாகவும், அதேபோல செல்போன் வைத்திருப்பவர்களுக்கும் நல்ல செய்தியாக புதியதொரு சேவை அறிமுகமாகியிருக்கிறது.
பாட்காஸ்டிங் மற்றும் செல்போன் இந்த இரண்டையும் இணைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவை கொஞ்சம் தாமதமாக அறிமுக மாகியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் பாட்காஸ்டிங் பிரபலமானபோதே இந்த சேவை அறிமுகமாகியிருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் செல்போனில் பாடல்கள் கேட்பது, பிரபலமான உடனேயேனும் இந்த சேவை அறிமுகாகியிருக்க வேண்டும்

யாருக்கும் தோன்றவில்லையா? என்ன என்று தெரியவில்லை. செல்போன் மூலம் பாட்காஸ்டிங்கை கேட்க வழி செய்யும் இந்த சேவை தற்போதுதான் அறிமுகமாகியிருக் கிறது. ஃபோன் ஷோ டாட்காம் என்னும் இணையதளம் இந்த சேவையை அறிமுகம் செய்திருக்கிறது.

பாட்காஸ்டிங் பற்றி அறிந்தவர்க ளுக்கு இந்த சேவையின் மகத்துவம் எளிதாக புரிந்துவிடும். இன்டெர்நெட் மூலம் ஆடியோ நிகழ்ச்சிகளை தருவித்து கேட்கும் வசதி பாட்காஸ்டிங் என்று குறிப்பிடப் படுகிறது.

தனி நபர்கள் வானொலி என்றும் வர்ணிக்கப்படும் பாட்காஸ்டிங் பற்றி பரபரப்பாக பேசப்பட்டாலும், இந்த பிரிவில் புதுமையான பல நிகழ்ச்சிகள் அறிமுகமானாலும், எதிர்பார்த்த அளவுக்கு பாட்காஸ்டிங் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.

ஆரம்ப கால பரபரப்பு அடங்கிப்போய் பாட்காஸ்டிங் பற்றி பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தான் ஃபோன் ஷோ சேவை மீண்டும் பாட்காஸ்டிங்கை முன்னுக்கு கொண்டு வந்திருக்கிறது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாட் காஸ்டிங் வகைகள் இருந்தாலும், அதன் நிகழ்ச்சிகளை டவுன்லோடு செய்து கேட்பதற்கான முறை என்னவோ ஒன்றுதான். பாட்காஸ்டிங் சேவை வழங்கும் தளங்களில் உறுப்பினராக பகிர்ந்துகொண்டால், அந்த ஆடியோ கோப்பை செய்தி யோடை வசதியாக டவுன்லோடு செய்து விரும்பும் நேரத்தில் கேட்கலாம். நல்ல பாட் காஸ்டிங் நிகழ்ச்சிகளை தொகுத்தளிப்ப தற்கான சிறந்த திரட்டிகளும் இருக்கின்றன.

ஆனால் பாட்காஸ்டிங்கை பொதுவாக நம்முடைய கம்ப்யூட்டர் மூலம்தான் கேட்கலாம். இப்போது செல் போன்களில் எம்பி3 கோப்புகள் மூலம் பாடல்களை கேட்டு ரசிப்பது மிகவும் பரவலாகி இருக்கும் நிலையில், செல்போனிலேயே பாட்காஸ்டிங் நிகழ்ச்சிகளை கேட்க முடிவது உண்மை யிலேயே பயனுள்ள சேவைதான்.

ஃபோன் ஷோ இணையதளம் இந்த சேவையைதான் வழங்குகிறது. தங்களுடைய செல்போனில் பாட் காஸ்டிங் நிகழ்ச்சிகளை கேட்டு ரசிக்க விரும்புகிறவர்கள் இந்த தளத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும்.

பதிவு செய்து கொள்வதற்காக செல்போன் நம்பரை மட்டும் குறிப்பிட் டால் போதும் வேறு எந்த விவரங்களை யும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதன்பிறகு பாட்காஸ்டிங் நிகழ்ச்சி பற்றிய தகவல் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் எஸ்எம்எஸ் ல் குறிப்பிடப்பட்டுள்ள பாட்காஸ்டிங் நிகழ்ச்சியை கேட்க விரும்பினால் அதில் உள்ள தொலை பேசி எண்ணுக்கு டயல் செய்தால் பாட்காஸ்டிங் நிகழ்ச்சி செல்போனில் கேட்கத்தொடங்கி விடும்.

அதன்பிறகு செல்போனில் உள்ள பட்டன்களை அழுத்துவதன் மூலம் அடுத்த நிகழ்ச்சியை கேட்பதோ அல்லது முந்தைய நிகழ்ச்சிக்கு செல்வதோ அல்லது வேறு நிகழ்ச்சிக்கு தாவுவதோ சுலபமானது.

கேட்கும் நிகழ்ச்சி பிடித்திருந்தால், நண்பர்களுக்கு அதனை பார்வர்டு செய்யலாம்.
பாட் காஸ்டிங் ஏற்படுத்தி தரும் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு வித விதமான நிகழ்ச்சிகளை தனி நபர்கள் பாட்காஸ்ட் செய்து வருகின்றனர்.

வெறும் பாட்டு கேட்பதைவிட இத்தகைய நிகழ்ச்சிகளை செல்போன் மூலம் கேட்டு ரசிக்க முடிவது சிறப்பானதுதானே. அமெரிக்காவை சேர்ந்த எரிக் ஸ்குவாட்ஸ் மற்றும் மிக் வால்ப் ஆகிய தொழில்நுட்ப நிபுணர்கள் இந்த சேவையை உருவாக்கியுள்ளனர்.

வீடியோ கோப்புகளை டவுன்லோடு செய்து பார்ப்பது பரவலாக உள்ள நிலையில், ஆடியோ கோப்புகளுக்கு இத்தகைய முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதை உணர்ந்து இந்த இருவரும் ஃபோன் ஷோ சேவையை உருவாக்கியதாக தெரிவிக்கின்றனர். முதல்கட்டமாக அமெரிக்காவில் உள்ள செல்போன் பயனீட்டாளர்களுக்கு இந்த சேவை அறிமுகமாகி
இருக்கிறது.

இதன் வெற்றியைப்பொறுத்து மற்ற நாடுகளிலும் இந்த சேவை அறிமுகம் ஆகலாம்.
ஃபோன் ஷோ தளத்தின் மூலம் பாட்காஸ்டிங்கை செல்போனில் டவுன்லோடு செய்து கொள்வது சுலபமானது. அது மட்டுமல்லாமல், பாட்காஸ்டிங் நிகழ்ச்சிகளை தேடிப் பார்ப்பதும் மிகவும் சுலபமானது.

பாட்காஸ்டிங் நிகழ்ச்சிகளின் வகைகளை குறிப்பிடும் பல்வேறு தலைப்புகளின் கீழ் நிகழ்ச்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை கிளிக் செய்து விருப்பமான நிகழ்ச்சி களை தேர்வு செய்து கொள்ளலாம்.

அது மட்டுமல்லாமல் பாட்காஸ்டிங் செய்து வருபவர்கள் தங்களது நிகழ்ச்சிகளையும் இதில் சமர்ப்பிக்கலாம். அந்த வகையில் பாட்காஸ்டிங் தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகிய இருவருக்கு இடையே யான பாலமாகவும் இந்த தளம் செயல்படுகிறது. விளம்பரத்தின் மூலம் வருவாயை தேடிக்கொள்ளும் நம்பிக்கை இருப்ப தால் இந்த சேவையை ஃபோன் ஷோ இலவசமாகவே வழங்குகிறது.
————–

link;www.foneshow.com