Tag Archives: எஸ்.எம்.எஸ்

அதி விரைவு எஸ் எம் எஸ்

textquickசெல்போன் திரை இத்தூனுன்டாக இருக்கலாம், ஆனால் அதனை மையமாக‌ கொண்டு எத்தனையோ விதமான சேவைகளை உருவாக்கலாம். செல்போனுக்கான சேவைகளின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு புதிய பயன்களை வழங்க முடியும்.

டெக்ஸ்ட்குவிக் இத்தகைய சேவை தான்.

இந்த சேவை அதி விரைவாக எஸ்.எம்.எஸ். செய்திகளை அனுப்பி வைக்க உதவுகிறது.

தொலைபேசியில் ஸ்பீட் டயலிங் என்று சொல்வது போல செல் போனுக்கு அதி விரைவு எஸ்.எம்.எஸ். என்று வைத்துக் கொள்ளுங்களேன். அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பி வைப்பவர்களுக்கு இதன் அருமை உடனடியாக புரிந்து விடும்.

அதிலும் பலருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும் பழக்கம் கொண்டவர் களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த சேவை உங்கள் செல்போனில் உள்ள தொலைபேசி எண்களை அவற்றை நீங்கள் தொடர்புகொள்ளும் அளவிற்கு ஏற்ப வரிசைப்படுத்தி வைக்கிறது. நீங்கள் யாருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப விரும்பினாலும் நேரடியாக இந்த பகுதியை கிளிக் செய்தால் வரிசையாக தொடர்புகள் வந்து நிற்கும். எந்த எண்ணுக்கு அனுப்ப வேண்டுமோ அந்த எண்ணை கிளிக் செய்தால் எஸ்.எம்.எஸ். போய் சேர்ந்து விடும்.

தனியே பெயர் பட்டியலுக்கு சென்று ஒவ்வொரு பெயராக தேடி நீங்கள் விரும்பும் தொலைபேசி எண்ணை தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.

ஆனால் ஒன்று மிகவும் மேம்பட்ட செல்போன்களில்தான் இது வேலை செய்யும். அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ் உட்ஸ் என்பவர் மைண்ட் பிளிப் என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

செல்போனுக்கான புதிய சேவைகளை உருவாக்கி வரும் இந்நிறுவனத்தின் சார்பாக அவர் அறிமுகம் செய்திருக்கும் சேவைதான் இந்த டெக்ஸ்ட் குவிக்.

உட்ஸ் தனது சேவையின் த‌ன்மையை புரிய வைக்க தனது குடும்பத்தை கொண்டு அழகான உதாரணத்தை கூறியுள்ளார்.

தன்னிடம் எஸ் எம் எஸ் அனுப்பும் பழக்கம் அதிகம் இருப்பதாகவும் குடும்பத்தினருக்கு அடிக்கடி எஸ் எம் எஸ் அனுப்புவதாகவும் கூறும் அவர், தனது குடும்ப பெயர் வுட்ஸ் என முடிவதால் ஆங்கில அகர வரிசைபடி கடைசியில் இருப்பதால் ஒவ்வொரு முறையும் பெயர் பட்டியலில் கடைசி வரை சென்று குடும்ப உறுப்பினர்கள் பெயர்களை தேட வேண்டியிருப்பதாகவும் , ஆனால் தனது சேவை இதனை புரிந்துகொண்டு தான் அதிகம் பயன்படுத்தும் குடும்ப உறுப்பினர்கள் பெயருக்கு முன்னுரிமை த‌ந்து காட்டும் என்றும் கூறுகிறார்.

செல்போனுக்கான மற்றொரு சேவையையும் உருவாக்கி வருவதாக கூறும் வுட்ஸ் அது என்ன சேவை என்பது இப்போதைக்கு ரகசியம் என்கிறார்.

நிற்க, வுட்சின் சேவை பெரும்பாலும் அமெரிக்க சந்தையை மையமாக கொண்டது என்றாலும் செல்போன் சேவையின் பரந்து விரிந்த தன்மை பற்றி சுட்டிகாட்டவே இந்த பதிவு.

மேலும் சுவையான செல் சேவைகள் இருக்கு….

———-

link;
http://mind-flip.com/textquick/index.html

எஸ்.எம்.எஸ். வழி நாவல்

last1பின்லாந்தை நோக்கியா நாடு என்றும் சொல்லலாம். செல்போன் தேசம் என்றும் சொல்லலாம். இரண்டுமே பொருத்தமாகத்தான் இருக்கும். செல்போன் மற்றும் செல்போன் சார்ந்த சேவைகளை பயன்படுத் துவதில் இந்த ஸ்கான்டிநேவிய தேசம் முன்னிலையில் இருக்கிறது.
.
செல்போன் பயன்பாட்டையும், எஸ்எம்எஸ்சையும், ஆரம்பத்திலேயே கச்சிதமாக பிடித்து கொண்ட தேசங் களில் பின்லாந்தும் ஒன்று. பேசுவது போலவே, எஸ்எம்எஸ் மூலம் தொடர்பு கொள்வது பின்லாந்து வாசிகளுக்கு சர்வசகஜமாகியிருக்கிறது.

இதன் அடையாளமாக தற்போது பின்லாந்தில் எஸ்எம்எஸ் மூலமே எழுதப்பட்ட நாவல் வெளியாகியிருக்கிறது. எஸ்எம்எஸ் இலக்கிய வாகனமாக கருதப்பட்டு அந்த வகையில், அதன் பயன்பாடு, கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் வெகு பிரபலமாக இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளும் இதில் மும்முரமாக இருக்கின்றன. எஸ்எம்எஸ் மூலமே நாவல்கள் எழுதப்படும் அளவுக்கு நிலமை முன்னேறியிருக்கிறது. இந்நிலையில் பின்லாந்து, எஸ்எம்எஸ் மூலம் எழுதப்பட்ட நாவலை பதிப்பித்திருக்கிறது. எஸ்எம்எஸ் சார்ந்த பெரும்பாலான இலக்கிய முயற்சிகள், வாசகர்களிடம் படைப்புகளை கொண்டு செல்வதற்கான வாகனமாக அதனை பயன்படுத்த முற்பட்டிருக்கிறது.

எஸ்எம்எஸ் செய்திகள் மூலம் படைப்புகளை அனுப்பி விடுவது சுலபமாக இருந்து வருகிறது. ஆனால் பின்லாந்து நாவல் கொஞ்சம் வித்தியாசமானது. இது எஸ்எம்எஸ் செய்திகளாலேயே உருவாக்கப் பட்டிருக்கிறது.

தி லாஸ்ட் மெசேஜஸ் என்பது இந்த நாவலின் தலைப்பு. அதாவது கடைசி செய்திகள் என்று பொருள் வரும். பின்லாந்தை சேர்ந்த ஐடி ஆசாமி ஒருவர், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் வருகிறார்.

இந்த நாடுகளில் புதிய அனுபவத்தை பெறும் அவர், சொந்த ஊரில் உள்ள தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு தொடர்பு கொள்வதற்காக எஸ்எம்எஸ் செய்திகளை பயன்படுத்துகிறார்.

இப்படி அவர் அனுப்பி வைக்கும் எஸ்எம்எஸ் செய்திகள் மற்றும் அவருக்கு வந்து சேரும் எஸ்எம்எஸ் செய்திகள் ஆகியவற்றை மட்டும் கொண்டே இந்த முழு நாவலும் எழுதப்பட்டுள்ளது.

சற்றேறக்குறைய 332 பக்கங்களை கொண்ட இந்த நாவல், மொத்தம் 1000 எஸ்எம்எஸ் செய்திகளை கொண்டிருக்கிறது. பின்லாந்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான ஹன்னு லுன்ட்டியாலா இந்த கற்பனை பாத்திரத்தை உருவாக்கி நாவலை எழுதி முடித்திருக்கிறார்.

எஸ்எம்எஸ்சில் பார்க்கக் கூடிய இலக்கண பிழை, எழுத்து பிழை உள்ளிட்ட அனைத்து குணாதிசயங் களையும் இந்த நாவலில் அவர் பயன்படுத்தியிருக்கிறார்.

மேலோட்டமாக பார்க்கும் பொழுது எஸ்எம்எஸ் செய்திகளுக்கு வரையறை இருப்பது போல தோன்றினாலும், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் எஸ்எம்எஸ் செய்திகள் எப்படி நம்முடைய மன உணர்வுகள் மற்றும் தனி குணத்தை பிரதிபலிக்க போதுமானதாக இருக்கிறது என்பதை இந்த நாவல் உணர்த்தும் என்று அவர் கூறுகிறார்.

இந்த நாவல் வாசகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. அதன் காரணமாக இது மற்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டு வெளியிடப்பட உள்ளதாம்.

பின்லாந்துவாசிகள் எதற்கெடுத் தாலும் செல்போனை பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பது, இந்த நாவலை அவர்கள் மத்தியில் எளிதாக கொண்டு சேர்த்துள்ளது.

அண்மையில் பின்லாந்து பிரதமர், வான்ஹனன் தன்னுடைய காதலியை பிரிந்த போது, எஸ்எம்எஸ் மூலமே உறவை முறித்து கொண்டதாக ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அளவுக்கு பின்லாந்தில் எஸ்எம்எஸ் கலாச்சாரம் செழிப்பாக இருக்கிறது.
—–

செல்போன் உறவுகள்-2

l11‘லூப்ட்’ சேவையை செல்போனில் பயன்படுத்தும்போது, ஒருவருடைய நண்பர்கள் இருக்கும் இடத்தை நகர வரைபடத்தின் நடுவே சுட்டிக்காட்டி அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள வைக்கும். நண்பர்களின் இருப்பிடத்தை தெரிந்துகொள்ள முடிவதே பெரிய விஷயம் தான்! ஆனால் லூப்ட் இதோடு நின்று விடுவதில்லை. இதன் பிறகுதான் லூப்ட்டின் சேவைகள் ஆரம்பமாகிறது.
.
‘லூப்ட்’ போலவே மற்றவர்களின் இருப்பிடத்தை உணரும் சேவையை வழங்கும். ‘விர்ல்’ (whrrl) பட்டிபீக்கன் பட்டிபீக்கன் (buddybeacon) போன்றவற்றில் இருந்து லூப்ட்டை வேறுபடுத்தி உயர்த்துவதும் இந்த விஷயங்கள் தான்!

செல்போன் திரையை பார்த்தாலே நண்பர்கள் இருக்கும் இடங்களை தெரிந்து கொள்ளலாம் – லூப்ட் வழங்கும் இந்த சேவை பழகிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் நண்பர்களின் இருப்பிடத்தை அறிய செல்போனை பார்க்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. உங்கள் நண்பர்கள் அருகாமையில் வரும் பட்சத்தில் ‘லூப்ட்’ சேவையை அது பற்றி தகவலை தெரிவித்து உங்களை உஷார் படுத்திவிடும்.

உதாரணத்திற்கு ஒருவர் ரெயிலில் போய்க்கொண்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவரது நெருங்கிய நண்பர் ஒருவரும்அதே ரெயிலில் கடைசி பெட்டியில் ஏறியிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். (அ) 4 ஸ்டேஷன்கள் தள்ளி காத்திருக்கிறார் என வைத்துக்கொள்வோம்.

‘லூப்ட்’ விசுவாசமான உதவியாளரைப் போல இந்த தகவலை அவருக்கு தெரிவித்து விடும். நண்பர் மிக அருகாமையில் இருப்பது தெரிந்த பின் தேவைப்பட்டால் அவரை தொடர்புகொண்டு பேசலாம். சந்தித்துப்பேசவும் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

‘அடடா நீ அங்கு வந்தது தெரிந்தால் நான் பார்த்து பேசியிருப்பேனோ’ என்று வருந்தும் அவசியமும் இருக்காது. சரி, நண்பர்கள் அருகாமையை தெரிந்துகொள்ள முடிகிறது! பல நேரங்களில் இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அந்த நண்பரோடு தொடர்புகொள்ள விரும்பலாம். அப்படி என்றால் தனியே அந்த நபரை அழைக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. அப்படியே ஒரு எஸ்எம்எஸ் செய்தியை அந்த நண்பருக்கு தட்டி விடலாம். தொடர்ந்து எஸ்எம்எஸ் மூலமே கருத்தும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

புதிய இடத்திற்கு செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த இடத்தின் அருமை பெருமைகளை குறிப்பிட்டு நண்பர்களுக்கு ‘லூப்ட்’ மூலமே தகவல் அனுப்பலாம். நண்பர்கள் லூப்ட் வரைபடத்தில் அந்த இடத்தை பார்த்து விட்டு அங்கு நேரடியாக விஜயம் செய்து பார்க்கலாம். இப்படி நண்பர்கள் பார்த்து பரிந்துரைக்கும் இடங்களையும் லூப்ட் மூலம் தெரிந்து கொண்டு அங்கு சென்று பார்க்கலாம்.

இருப்பிடம் உணர் சேவையை அடிப்படையாக கொண்டு நண்பர்கள் பரஸ்பரம் தொடர்புகொண்டு கருத்துக்களை பரிமாறிக்கொண்டு நட்பு வட்டத்தை உயிரோடு வைத்துக்கொள்ள பல விதங்களில் உதவுவதே லூப்டின் தனித்தன்மையாக இருக்கிறது. அதனால் தான் இந்த சேவையை லூப்ட்டின் நிறுவனர் ஆல்ட்மேன் சமூக காம்பஸ் என்று வர்ணிக்கிறார்.

இன்டெர்நெட் மூலம் நண்பர்கள் தொடர்புகொள்ள உதவும் வலைப்பின்னல் சேவையைப் போல லூப்ட் செல்போனுக்கான வலைப் பின்னல் சேவையை அமைந்திருக்கிறது. ஆனால் வழக்கமான வலைப்பின்னல் சேவைகளில் மாய உலகில் தான் தொடர்பு கொள்வது நிகழ்கிறது. அதாவது வலைமூலம் தான் தொடர்புகொள்ள முடிகிறதே தவிர நேரடியாக சந்திப்பது நிகழ்வதில்லை. மாறாக, ‘லூப்ட்’ நண்பர்கள் நேரில் சந்திக்க உதவி செய்து வலைப்பின்னல் சேவையை உயிரோட்டம் மிக்கதாக ஆக்குவதாக ஆல்ட்மேன் கொஞ்சம் பெருமிதத்தோடு கூறுகிறார்.

வலைப்பின்னல் தளம் போலவே இதிலும் ஒருவர் தனக்கான சுய அறிமுக பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம். நண்பர்களோடு தொடர்புகொள்ளலாம். கருத்துப் பரிமாற்றம் மூலம் நட்பை வளர்த்துக் கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் அடிப்படையில் இருப்பிடம் உணர் சேவை இருக்கிறது என்பதால் இதனை பயன்படுத்துவது மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்கின்றனர்.

ஆனால் இருப்பிடம் உணர் சேவை எதிர்பாராத சங்கடங்களைத் தரலாம். இள வட்டங்கள் தங்கள் ஆருயிர் தோழர் (அ) தோழிகள் எங்கே இருக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்வதை விரும்பலாம். ஆனால் பெற்றோர்களோ (அ) அலுவலக உயர் அதிகாரியோ இப்படி இருப்பிடத்தை தெரிந்து கொள்வதை பிள்ளைகளோ (அ) அலுவலகத்தில் பணியாற்றுபவர்களோ விரும்பி வரவேற்பதற்கான வாய்ப்புண்டா? மகன் தியேட்டருக்கு அருகில் நிற்பதை அப்பா தனது செல்போனில் பார்த்து தெரிந்து கொண்டால் என்னாகும்? அலுவலக ஊழியர் தான் பணி நிமித்தமாக சென்றுவேலையை கவனிக்காமல் ஓட்டலில் அமர்ந்து சாப்பிடுவதை மேலாளர் செல்போனில் பார்த்து ஊகித்து விட்டால் என்னாகும்?

இருப்பிடம் உணர் சேவை இத்தகைய ‘சமூக சங்கடங்களை உண்டாக்கி நெளிய வைக்கலாம். அதே நேரத்தில் சிறுவர்களின் பெற்றோர்களுககு இந்த சேவை மன நிம்மதியைத் தரலாம். நமது இருப்பிடத்தை எப்போதுமே எல்லோருமே தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுவது அந்தரங்கத்தின் மீதான ஊடுருவலாக அமையலாம் என்றும் சிலர் எச்சரிக்கின்றனர்.

இதை புரிந்துகொள்வதும் எளிதானதே! அலுவலகத்திற்கோ, (அ) குறிப்பிட்ட இடத்திற்கோ செல்ல தாமதமாகும்போது தற்போது இதோ வந்து கொண்டே இருக்கிறேன் என கூசாமல் பொய் சொல்கிறோம். ஆனால் லூப்ட் சேவை கையில் இருக்கும் போது நாம் தொடர்புகொள்ளும் நபர் நமது இருப்பிடத்தை பார்க்கும்போது அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரிந்துகொண்டு விட முடியுமே!

இத்தகைய சங்கடங்களை தவிர்க்க ‘லூப்ட்டில்’ விரும்பினால் ஒருவர் தனது இருப்பிடத்தை தெரியப் படுத்தாமல் மறைத்துக்கொள்ளும் வசதியும் அளிக்கப்படுகிறது. எப்படியோ செல்போன் சார்ந்த சுவாரசியமான உலகிற்கான நுழைவு வாயிலாக லூப்ட் அமைந்துள்ளது!
——–

link;
www.loopt.com

உன்னை நான் கண்காணித்தேன்

செல்போன் யுகத்தில், பிள்ளை களுக்கு செல்போன் வாங்கித் தரலாமா? வேண்டாமா? எனும் குழப்பமும், தடுமாற்றமும் பல பெற்றோர்களை வாட்டிக் கொண்டிருக்கிறது.
.
எல்லோரும் கையில் செல்போன் வைத்திருப்பதால் பிள்ளைகள் தங்களுக்கும் ஒரு செல்போன் வேண்டும் என்று கேட்டு நச்சரிப்பதை எல்லா வீடுகளிலும் பார்க்கலாம்.

ஆனால் இந்த கோரிக்கைக்கு உடன்படுவது எல்லா பெற்றோர் களுக்கும் சாத்தியமாவதில்லை. செல்போனால் ஏற்படக் கூடிய நன்மைகளை நன்கு அறிந்திருக்கும் அதே நேரத்தில் அதனால் ஏற்படக் கூடிய தீமைகளையும் பெற்றோர்கள் அறிந்திருப்பதால் பிள்ளைகள் கையில் செல்போனை கொடுப்ப தில் நிறையவே தயக்கம் இருக்கிறது.

பிள்ளைகளுக்கு செல்போனை வாங்கிக் கொடுத்து விட்டால் அவர்கள் பாதுகாப்பு பற்றி நிம்மதியாக இருக்கலாம். எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பேசலாம் என்பதால் பிள்ளைகளின் இருப்பிடம் மற்றும் அவர்கள் செல்லுமிடம் குறித்து அறிந்து கொள்ளலாம்.

அவசரம் அவசரமாக தொடர்பு கொள்ள நினைத்தாலும் உடனே தொடர்பு கொள்ள முடியும். இந்த காரணங்களுக்காக செல்போன் வாங்கி கொடுத்தால் நல்லது என்று எண்ணத் தோன்றும்.

ஆனால் அதே நேரத்தில் பிள்ளை கள் கையில் செல்போன் வைத்திருப் பதால் அதனை அவர்கள் தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதை நினைத்து கவலைப் படவும் வேண்டியிருக்கிறது.

செல்போன் வருவதற்கு முன்பாக பிள்ளைகள் பேசுவதை வைத்துக் கொண்டே அவர்களின் பழக்க வழக்கங்களை பெற்றோர்கள் கண் காணிப்பதற்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்று பிள்ளைகள் செல்போனில் ரகசியமாக பேசிக் கொள்வதால் அவர்களின் தொடர்பு விவரங்கள் பற்றி பெற்றோர்கள் அறிந்து கொள்ள முடிவதில்லை.

மேலும் செல்போன் மூலம் யாரை வேண்டுமானாலும் எளிதாக தொடர்பு கொள்ளலாம் என்பதால் பிள்ளைகள் வம்பில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. அதோடு படிப்பு கெட்டுப் போகிறது.

அது மட்டுமல்லாமல் பிள்ளைகள் செல்போன் பேசிக் கொண்டே சாலையை கடந்து செல்வது, வாகனம் ஓட்டிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது உயி ருக்கே ஆபத்தாக முடியலாம். இதற்கு பல சோகக் கதைகள் உதாரணமாக இருக்கின்றன.
இப்படி பல பாதகமான விஷயங் கள் பெற்றோர் மனதை உலுக்கிக் கொண்டிருக்கிறது. எனவேதான் செல்போன் வாங்கித் தருவது பலருக்கு தயக்கம் இருக்கிறது.

பெற்றோர்களின் இந்த குழப்பத் திற்கு தீர்வு காணும் வகையில் அருமையான சாப்ட்வேர் ஒன்று அறிமுகமாகி இருக்கிறது.

மைகிட்ஈஸ்சேப்.காம் எனும் இணையதளம் அறிமுகம் செய் துள்ள இந்த சாப்ட்வேர் மூலம் பெற் றோர்கள் எந்தவித தயக்கமுமின்றி தங்களது பிள்ளைகளுக்கு செல் போனை வாங்கி கொடுத்து விட லாம். அதே நேரத்தில் அவர்கள் மீது ஒரு கண்ணையும் வைத்திருக்கலாம்.
இந்த சாப்ட்வேரின் உதவியோடு பெற்றோர்கள் தங்களது பிள்ளை களின் செல்போன் பயன்பாட்டை கண்காணித்துக் கொண்டே இருக்க முடியும்.

வாகனம் ஓட்டியபடி அவர்கள் போன் செய்தாலோ, சாலையை கடந்தாலோ இந்த சாப்ட்வேர் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து விடும்.

அதே போல இந்த சாப்ட்வேரில் பிள்ளைகள் எப்போது செல்போ னில் பேசலாம் என்பதை குறிப்பிட முடியும். இந்த நேரத்தை கடந்து பிள்ளைகள் செல்போனில் பேசி னால் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப் பட்டு விடும்.

பேசினால்தானே வம்பு என்று பிள்ளைகள் எஸ்எம்எஸ் செய்திக ளாக அனுப்பி வைத்தும் தப்பித்துக் கொள்ள முடியாது. எஸ்.எம்.எஸ்.சில் தவறான வார்த்தைகளை பயன் படுத்தினால் இந்த சாப்ட்வேர் கண்டுபிடித்து சொல்லி விடும். இவ்வாறு சுமார் 1500 வார்த்தை களை இந்த சாப்ட்வேர் கவனித்துக் கொண்டு இருக்கும். அவற்றில் எதை பயன்படுத்தினாலும் பெற் றோர்களுக்கு தகவல் அனுப்பி விடும்.

இந்த கட்டுப்பாட்டை மீறி தவறான எஸ்எம்எஸ் அல்லது விவ காரமான எஸ்எம்எஸ் பிள்ளைகளின் செல்போனிலிருந்து அனுப்பப்படு வதற்கான வாய்ப்பு இல்லை.
மைகிட்ஈஸ்சேப்.காம் தளத்தில் சென்று அதிலுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப் பிப்பதன் மூலம் இந்த சாப்ட்வேரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிள்ளையின் பெயர், செல்போன் மாதிரி, செல்போன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், செல்போன் சேவை நிறுவனத்தின் பெயர் ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து இந்த படிவத்தை சமர்ப்பித்தால் சாப்ட் வேரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அமெரிக்காவை மையமாக கொண்டு இந்த சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாப்ட்வேர் இருக்கும் தைரியத் தோடு பெற்றோர்கள் பிள்ளைகளின் கையில் செல்போனை ஒப்படைக்கலாம்.

நிச்சயமாக இந்த இணையதளத் தையும், இந்த சாப்ட்வேரையும் பெற்றோர்கள் விரும்பவே செய்வார்கள். ஆனால் பிள்ளைகள் இதனை நேசிப்பார்களா என்பதை உறுதியாக சொல்வதற்கில்லை.

————

link;
www.mykidissafe.com

மொழி காக்கும் சாப்ட்வேர்

ஆங்கிலத்தில்தான் எத்தனை விதமான ஆங்கிலம் இருக்கின் றன. நம்மூரில் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுவதை தமிங்கிலிஷ் என்று சொல்கின்றனர். அதே போல வடநாட்டில் இந்தி மற்றும் ஆங்கிலம் கலந்து பேசுவதை இந்திங்கிலிஷ் என்று சொல்கின்றனர்.
இப்படி ஊருக்கு ஊர், நாடுக்கு நாடு ஆங்கிலம் வேறுபடுகிறது. ஆங்கிலத்தின் ஆதிக்கம் காரண மாக உள்ளூர் மொழிகள் பாதிக்கப் படுவதாக புகார் கூறப்படுகிறது. மொழிகள் முற்றாக அழிந்து போகாவிட்டாலும், ஆங்கில கலப்பால் அவற்றின் தூய்மை குறைந்து போவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.

நவீன வாழ்க்கையில் ஆங்கி லத்தை தவிர்க்க இயலாமல் போகும்போது, இத்தகைய மொழிக்கலப்பையும் புறந்தள்ளு வதற்கு இல்லை. இத்தகைய மொழி கலப்பால் ஏற்படும் பாதிப்பு பற்றி மொழியி யல் வல்லுனர்கள் தீவிரமாக யோசனை செய்து வருகின்றனர். மொழிக்கலப்பிலிருந்து முற்றிலு மாக விடுபட முடியுமா என்று தெரியவில்லை. அதற்கான வழிகள் என்ன? அவை எந்த அளவுக்கு சாத்தியம்? என்ப தெல்லாம் விவாதத்துக்குரிய விஷயங்கள்.

ஆனால் இன்டெர்நெட் யுகத்தில் இந்த மொழி கலப்பு பற்றி கூடுத லாக கவலைப்பட வேண்டியிருக் கிறது. அல்லது வேறு விதமாக சொல்வதாயின், மொழி கலப்பு பற்றி அவ்வளவாக கவலைப்பட தேவையில்லாத நிலை ஏற்பட்டி ருக்கிறது என்று சொல்லலாம். இந்த இரண்டு கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்போல தோன்றலாம்.

ஆனால் இதில் முரண் எதுவும் இல்லை. நோய்க்கு நோயே மருந்து என்று வல்லுவர் காதல் பற்றி கூறியது போல, இந்த பிரச்சனைக்கு இன்டெர் நெட்டே மருந்தாகியிருக்கிறது.
இன்டெர்நெட்டில் ஆங்கிலத் தின் ஆதிக்கம் அதிகம் இருப்ப தாக கூறப் படுகிறது. இது
வெளிப்படையாக தெரிந்த விஷயம்தான்.

இன்டெர்நெட் முகவரிகளில் தொடங்கி, இன்டெர்நெட்டில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வரை எல்லாமே ஆங்கில மயம்தான். மற்ற உலக மொழிகள் எல்லாம் ஆங்கிலத்துக்கு அடுத்த நிலையில்தான் உள்ளன.

எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஆங்கிலத்தில் தகவல்களை தேடுவது மற்றும் ஆங்கிலத்திலேயே தகவல்களை பதிவு செய்வது என்பது வெகு இயல்பானதாக இருக்கிறது.
தாய்மொழியில் இன்டெர் நெட்டை பயன்படுத்துவது என்பது பல நாடுகளில்குறைவா கவே உள்ளது. உலகின் நாகரீக தொட்டிகளில் ஒன்றான கிரீஸ் நாட்டிலும் இதே நிலைதான்.

கிரீஸ் நாட்டில் உள்ளவர்கள் கிரேக்க மொழியை வெகு வேகமாக மறந்து வருவதாக ஒரு கருத்து இருக்கிறது. இன்டெர் நெட் யுகத்தில் இது இன்னமும் தீவிரமாகியிருப்பதாக கூறப் படுகிறது. கிரீஸ் நாட்டில் உள்ளவர்கள் குறிப்பாக இளைய தலைமுறை யினர் இமெயில் அனுப்புவதில் தொடங்கி, பிலாக் தளங்களில் கருத்துக்களை பதிவு செய்வது வரை லத்தீனும், ஆங்கிலமும் கலந்த மொழியைத்தான் பயன்படுத்துகின்றனராம்.

கிரீக்ங்கிலிஷ் என்று பிரபலமாக குறிப்பிடப்படும் இந்த மொழிக் கலப்பு செல்போனில் எஸ்எம்எஸ் செய்தி அனுப்புவதிலும் ஆதிக்கம் செலுத்துகின்றதாம். இதன் காரணமாக கிரீஸ் நாட்டில் கிரேக்க மொழியின் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. இது நிச்சயம் பிரச்சனைதான்.

ஆனால் இந்த பிரச்சனையை சமாளிக்க கிரீஸ் நாட்டில் உள்ள தொழில்நுட்ப கில்லாடிகள் ஒரு புதிய வழியை கண்டுபிடித் துள்ளனர். அவர்கள் கிரேக்க மொழியிலேயே தகவல்களை பதிவு செய்யக்கூடிய சாப்ட் வேரை உருவாக்கியுள்ளனர்.

இந்த சாப்ட்வேரை பயன்படுத்த கிரேக்க மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லோரும் தங்களுக்கு தெரிந்த கிரீக்ங்லிஷ் பாணியி லேயே தகவல்களை பதிவு செய்யலாம். இந்த சாப்ட்வேர் கிரீக்ங்லிஷ் பாணியில் உள்ள தகவல்களை தானாகவே கிரேக்க மொழியில் மாற்றித்தந்து விடும். இவ்விதமாக கிரேக்கர்கள் கிரேக்க மொழியிலேயே தகவல்களை இடம்பெறச் செய்யலாம்.

இன்டெர்நெட் மூலம் கிரேக்க மொழியின் பயன்பாட்டை ஊக்குவிக்க நினைக்கும் அமைப்பு ஆல் கிரீக் டூ மீ என்னும் பெயரில் இந்த சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது. கிரேக்கநாட்டைச் சேர்ந்த பலர் இதனை வரவேற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக வெளி நாடுகளில் வசிக்கும் கிரேக்கர்கள் இதனை இருகரம் நீட்டி வரவேற்றுள்ளனர். ஆனால் இன்னும் சில தீவிர கிரேக்க மொழி ஆர்வலர்களோ பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக இந்த சாப்ட்வேர் கிரீக்ங்லிஷ் பயன் பாட்டைத்தானே ஊக்குவிக்கும் என்று புலம்புகின்றனர்.