Tag Archives: ஐபாடு

உலக நுகர்வோரே ஒன்றுபடுங்கள்-1

iphoneஉலக புகழ் பெற்ற கடிதங்களின் வரிசையில் ஸ்டீவ் ஜாப்சுக்கு ஜேம்ஸ் ஹேலன் எழுதிய கடிதத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஸ்டீவ் ஜாப்ஸ் தெரியும்! ஐபாடு நாயகன், ஐபோன் பிதாமகன்: ஆப்பிளுக்கு மறுவாழ்வு தந்த நிர்வாக மேதை. ஆனால் யார் இந்த ஜேம்ஸ் ஹேலன்?
.
ஹேலன் ஆப்பிளின் அபிமானி. ஐபாடு உபாசகர். ஐபோன் ரசிகர். அதை விட கனடா நாட்டின் லட்சக்கணக்கான சாமானியர்களில் ஒருவர்.

நுகர்வோர் என்ற முறையில், தன்னுடைய மற்றும் தன்னை போன்ற மற்ற நுகர்வோர் அனைவரின் உரிமைகளையும் அவர் அழகாக வலியுறுத்தி ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார்.

இந்த கடிதம் எளிமையாகவும், வலிமையாகவும் இருப்பதுதான் விசேஷமானது. ஸ்டீவ் ஜாப்சுக்கு ஒரு திறந்த மடல் எனும் அந்த கடிதத்தில் அவர், ‘என் பெயர் ஜேம்ஸ். ஐபோன் எனும் அற்புதமான சாதனத்தை உருவாக்கியதற்காக உங்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஐபாடு மூலம் உலகை எப்படி மாற்றினீர்களோ அதே போல, ஐபோன் மூலமும் உலகை நீங்கள் மாற்றியமைத்ததாக நம்புகிறோம்.

ஜூலை 11-ந் தேதி நாங்களும் ஐபோனை வாங்கி கனடாவில் பயன்படுத்த முடியும் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுவரை ஆப்பிள் மீது அதன் அதிபரான ஸ்டீவ் ஜாப்ஸ் மீதும் அவர் கொண்டிருக்கும் அபிமானம் புரிகிறது. கடிதத்தின் 2-வது பாதியில்தான் விஷயமே இருக்கிறது.

‘மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையில் ரோஜர்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம்-, அமெரிக்காவோடு ஒப்பிடும் போது அநியாயமான விலையை ஐபோன் சேவைக்காக நிர்ணயித்துள்ளது.

இதன் விளைவாக ஐபோன் சேவையின் அநியாய கட்டணத்தை எதிர்த்து ஒரு நுகர்வோர் இயக்கம் தொடங்கி இருக்கிறது. 20 ஆயிரம் பேர் இதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து கொண்டே போகிறது…

… இத்தகைய ஏமாற்றமான நுகர்வோர்களை பற்றி நீங்களே தெரிந்து கொள்ள ரூயூன்ட் ஐபோன் டாட் காம் தளத்தை பாருங்கள்’ என்று அவர் குறிப்பிட்டு விட்டு, எனக்கும், என் காதலிக்கும், என் குடும்பத்துக்கும் ஐபோன் வாங்க இருந்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக இப்போது என்னால் ஐபோன்களை வாங்க முடியாமல் இருக்கிறது என்று எழுதியிருந்தார்.

‘எனவே உங்களால் ஏதாவது செய்ய முடியும் என்று நம்புகிறேன். விசுவாசமான நுகர்வோராகிய நாங்கள் உங்கள் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம்’ என்று அவர் அந்த கடிதத்தை முடித்திருந்தார்.

கனடாவில் அறிமுகமாகவுள்ள ஐபோனுக்கான கட்டணம் அளவுக்கதிகமாக இருக்கிறது என்பதால் அதிருப்தியடைந்த நுகர்வோர்கள் அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கி, சம்பந்தப்பட்ட நிறுவனத்தை பணிய வைப்பதற்காக இணைய இயக்கம் ஒன்றை தொடங்கி உள்ளனர்.

அந்த இயக்கத்தில் மையமாக விளங்கும் ரூயூன்ட் ஐபோன் டாட் காம் தளத்தில்தான் இந்த கடிதம் வெளியானது. வர்த்தக நிறுவனம் ஒன்றின் சேவை, நுகர்வோரின் கையை கடிக்கக் கூடிய அளவில் இருக்கக் கூடாது என்பதையும், அதிலும் குறிப்பாக மற்ற சந்தையோடு ஒப்பிடும் போது பாரபட்சமாக இருக்குமாயின் அது நுகர்வோருக்கு இழைக்கப்படும் அநீதி என்பதையும் இந்த கடிதம் அழகாக சுட்டிக்காட்டுகிறது.

ஒரு விதத்தில் இந்த அநீதியை எதிர்க்கும் நுகர்வோர் இயக்கத்தின் தீவிரத்தையும் இந்த கடிதம் உணர்த்துகிறது. ஆப்பிள் நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோனை அமெரிக்காவில் அறிமுகம் செய்து அது பெரிய அளவில் வெற்றி பெற்றதையடுத்து மற்ற நாடுகளிலும் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

கனடாவில் ஐபோன் 11-ந் தேதி அறிமுகமாகிறது. இதற்கான உரிமையை அந்நாட்டை சேர்ந்த ரோஜர்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

ஐபோன் வாங்க விரும்புபவர்களுக்கு அந்நிறுவனம் நிர்ணயித்துள்ள சேவை கட்டணம் அளவுக்கதிகமாக இருக்கிறது. அதிலும் பக்கத்து நாடான அமெரிக்காவில் இருப்பதை விட அந்த கட்டணம் பல மடங்கு அதிகமாக இருக்கிறது.

இத்தகைய நிலையில் நாம் வெற்று புலம்பலோடு நிறுத்திக் கொண்டிருப்போம். ஆனால் கனடா நுகர்வோர் அப்படி விடுவதாக இல்லை.

இந்த நிலையை மாற்ற வேண்டும் எனும் உத்வேகத்தோடு, இன்டெர்நெட் மூலம் ரோஜர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் பின்பற்றப்படும் வழி மிகவும் எளிமையானது. ரோஜர்சின் கட்டணம் அநியாயமானது என்பதை தெரிவித்து அதற்கு எதிராக சக நுகர்வோரின் ஆதரவை திரட்டி, இன்டெர்நெட் மூலம் ஒரு விண்ணப்பத்தை நிறுவனத்திற்கு சமர்ப்பிப்பதுதான் போராட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

ஐபோன் அறிமுக தினத்தன்று இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் உத்தேசத்தோடு, அதற்கு முன்பாக இயன்ற வரை அதிக நுகர்வோரின் கையெழுத்துக்களை திரட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக www.ruinediphone.com என்ற இணையதளம் அமைக்கப் பட்டது. இந்த தளம் நுகர்வோரின் கவனத்தை ஈர்த்ததோடு மீடியாவையும் கவர்ந்து மிகவும் பிரபலமானது.

பல நுகர்வோர் உண்மையில் 20 ஆயிரம் பேருக்கு மேல் சில நாட்களில் இதற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனர்.

இன்டெர்நெட் மூலமான நுகர்வோர் இயக்கத்தின் சக்தியை உணர்த்தக் கூடிய வகையில் மேலும் பல இடங்களிலிருந்தும் ஆதரவு குவிந்தது.
அதை பற்றி நாளை…
————-
link;
www.ruinediphone.com

————-
ip

குறிப்பு;ஐபோன் அறீமுகமான போது எழுதியது

இமெயில் கால பாதிப்பு

முகத்தை  நேருக்கு நேராக பார்த்து பேசுவது ஒருகலைதான். அதிலும் அரிதாகிவரும் கலை. அதுதான் கவலையாக இருக்கிறது என்கிறார் அமெரிக்க ஆய்வாளரான ராபின் ஆப்ரஹாம்ஸ்.  அரசியல் ஊழல் மயமாகி வருவதாக கவலைப்படுவது போல, சமூகம் குற்றமயமாகிவருவதாக விசனப் படுவதை போல, தற்கால தலைமுறை தொட்டாச்சிணுங்கி மயமாகி வருவதாக வருத்தப்படுகிறார் ஆப்ரஹாம்ஸ்

புகழ் பெற்ற ஹார்வர்டு பிஸ்னஸ் பள்ளியை சேர்ந்த ஆய்வாளரும்,  உளவியல் நிபுணருமான  ஆப்பிரஹாம்ஸ்  நடைமுறை வாழ்க்கையில்  நாம் பின்பற்ற வேண்டிய  நுணுக்கங்களை, கற்றுத்தேர்ந்தவர்.  இதுபற்றி அவர் அவ்வப்போது அவர் எழுதியும் வருகிறார். 

தினசரி சமூக நிகழ்வுகளையும், அதில் நாம் கவனிக்கத்தவறும் மாற்றங்களையும் அவர் உன்னிப்பாக கவனித்து வருபவர்.  அதன் பயனாக பேச்சுக்கலை மெல்ல மறக்கப்பட்டு வருவதாக அவர் கண்டறிந்து எச்சரித்துள்ளார். பேச்சுக்கலை என்றதும் மேடையில் நின்றபடி மைக்முன்  நின்று கூட்டத்தினரை மயக்கும் வகையில் சொற்பொழிவாற்றுவதை நினைத்து விட வேண்டாம்.  அல்லது அரங்கிலோ, பலர் முன்னிலையிலோ உணர்ச்சி பொங்க பேசி, உள்ளத்தில் இருப்பதை புரிய வைப்பதையோ நினைக்க வேண்டாம். 

அவர் சொல்வது, தினமும் நாம் பார்க்கும் நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்களோடு முகத்தோடு முகம் பார்த்தபடி பேசும் சாதாரண உரையாடல் கலையைத்தான். இப்படி முகத்தை நோக்கியபடி பேசும் ஆற்றல் அருகி வருவதாக அவர்  தெரிவிக்கிறார். 
இமெயில், எஸ்.எம்.எஸ்., போன்றவை மூலம் தொடர்பு கொள்வது அதிகரித்து வருவதன் காரணமாக நேருக்கு நேர் பேசுவது குறைந்து கொண்டே போவதாக  அவர்  கூறுகிறார். 
எதற்கெடுத்தாலும், இமெயில் அனுப்பும் பழக்கம் உண்டாகிவிட்டது. இமெயில்  இல்லாத நேரத்தில் செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ்.சில் தொடர்பு கொள்வது சகஜமாக இருக்கிறது. 
இது மட்டுமல்லாமல், ஐபாடுகளில் பாட்டு கேட்டபடி பயணிக்கிறார்கள்.  இதன் விளைவாக பேசுவதற்கான  வாய்ப்புகள் குறைந்து கொண்டே  போகின்றன. 

இது அநேகமாக பலரும் அறிந்ததுதான். ஆனால் இதனால் ஏற்பட்டுவரும் பாதிப்பைத்தான் யாரும் இன்னமும் உணர்ந்ததாக தெரியவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி, தகவல் தொடர்புக்கான சாதனங்களையும், வழிகளையும் அதிகமாக்கி தந்திருப்பதால்  சிக்கலான சமூக சூழலில் இருந்து விலகிக்கொள்ளும் மனப்போக்கு  உண்டாகியிருக்கிறது.  இது, பலரை மற்றவர்களிடமிருந்து சுருங்கி தங்களுக்குள் அடைபட்டு கொள்ளும் தன்மை கொண்டவர்களாக  மாற்றி வருகிறது. 

இத்தகைய நபர்களை பொதுவாக தொட்டாச்சிணுங்கிகள் என்று கூறுவோம். ஆனால் இன்று பலர் இப்படி தொட்டாச்சிணுங்கி களாகத்தான் இருக்கின்றனர். இமெயில் உலகத்தில் இயல்பாக இருக்கும் அவர்களால் சமூக சூழலில் சகஜமாக இருக்க முடிவதில்லை.  இத்தகைய போக்கு கவலைத்தரக்கூடியது என்று சொல்லும்  ப்பிரஹாம்ஸ், சமூக சூழலில் இருந்து விலகிக்கொள்ளும்  தன்மையானது ஒரு நோய்கூறாகவே  உருவாகியிருக்கிறது என்கிறார். இதில் மேலும் பிரச்சனை என்னவென்றால் இந்த நோயை குணமாக்க மருந்து மாத்திரையை நாட முடியாது என்பதுதான்.

இமெயில் காலத்துக்கு முன்பாக முகம்பார்த்து பேச முடியாத குறை வெகு சிலருக்கு மட்டுமே இருந்தது. இன்றோ பலர் இந்த குறைக்கு ஆளாகியிருக்கின்றனர்.  எனவே வரும் காலத்தில், சமூக உறவுகளை மேம்படுத்தி கொள்ள பழகும் கலையை தனியே  பயிற்றுவிக்க வேண்டி வரலாம் என்கிறார் அவர். 

கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுப்பது போல, சமூக சூழலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தர வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்கிறார்.
ஆகவே இமெயில்களையும், எஸ்.எம்.எஸ்.களையும் கொஞ்சம் மறந்துவிட்டு, சமூக நிகழ்ச்சிகளில் அதிக அக்கறை செலுத்தினால், நமக்கும் நல்லது, நாம் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும் நல்லது.  இதைத்தான்  தனது ஆய்வு உணர்த்துவதாக அழுத்தம், திருத்தமாக  ஆப்பிரஹாம்ஸ் கூறுகிறார்.