Tag Archives: வலைப்பின்னல்

லஞ்சுக்கு முன் ஒரு கிளிக்

சாப்பிடுவது  என்பது பசியாறுவதற்கான செயலாக இருந்தாலும் சாப்பிட செல்வது என்பது ஒரு சமூக நிகழ்வுதான். உறவினர்கள் புடைசூழ விருந்து சாப்பிடுவது ஒருவகை மகிழ்ச்சி என்றால் நண்பர்கள் குழõமோடு சென்று மதிய உணவு சாப்பிடுவது மற்றொரு வகையான மகிழ்ச்சி. அதிலும் நகரத்து மாந்தர்களுக்கு வாரந்தோறும் அல்லது மாதத்தில் ஒருமுறையேனும் நண்பர்களோடு சென்று மதிய உணவு சாப்பிடுவது என்பது மட்டற்ற மகிழ்ச்சி தரக்கூடியதாகவே இருக்கிறது.  இப்படி லஞ்சுக்கு செல்வதை ஒரு இனிமையான சமூக நிகழ்வு என்றும் சொல்லலாம்.
.
நட்பை பரிமாறிக் கொண்டு பசியாறுவதில் உள்ள சுகமே தனிதான்.  ஆனால் இப்படி லஞ்சுக்கு ஏற்பாடு செய்து நண்பர்களை திரட்டிச் செல்வதில் நடைமுறை சிக்கல் இல்லாமல் இல்லை.  நண்பர்களை தொலைபேசியில் தேடிப்பிடிக்க வேண்டும். சிக்காதவர்களுக்கு இமெயில் அல்லது எஸ்எம்எஸ்சில் தகவல் சொல்ல வேண்டும். அதன் பிறகு எல்லோருக்கும் பிடித்தமான ஓட்டலை தேர்வு செய்ய வேண்டும்.  அதன் பிறகுதான் லஞ்சுக்கு செல்ல முடியும்.

சரியாக திட்டமிடாவிட்டால் எல்லாமே பாழாகி விடும்.  குறித்த நேரத்துக்குள் எல்லோருக்கும் தகவல் சொல்லி அனைவரது ஒப்புதலையும் பெற்று சாப்பாட்டு படையெடுப்பை ஆரம்பிப்பதற்குள் சில நேரங்களில் போதும் போதும் என்றாகிவிடும்.
இதற்கு மாறாக உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஒருசில கிளிக்குகளில் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்ய முடிந்தால் எப்படி இருக்கும். லஞ்ச் வாலா டாட்காம் இணையதளம் இதைத்தான் செய்கிறது.

லஞ்சுக்கு என்ன என்னும் கேள்விக்கு விடையளிப்பதற்காக துவக்கப்பட்டுள்ள இந்த இணைய தளம் நண்பர்களோடு சாப்பிட செல்லும் நிகழ்வை சுலபமாக்கி இனிமையாகவும்  மாற்றி தருகிறது.  ஒன்றாக சாப்பிட செல்லும் முன்  ஏற்படக்கூடிய கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் இந்த தளத்தின் மூலமே எளிதாக விடை கண்டுவிடலாம்.

சாப்பிடச் செல்லும் முன் எழக்கூடிய முதல் கேள்வி எந்த ஓட்டலுக்கு செல்வது? இந்த தளத்தில் ஒவ்வொரு நகரிலும் உள்ள ஓட்டல்கள், அவற்றின்  முகவரியோடு பட்டியலிடப்பட்டது. அந்த பட்டியலை பார்த்து விரும்பிய ஓட்டலை தேர்வு செய்யலாம்.
அந்த ஓட்டல் தொடர்பாக சக சாப்பாட்டு பிரியர்களின் விமர்சன குறிப்புகளும் இதற்கு கை கொடுக்கலாம். புதிய ஓட்டல் என்றால் அங்கு செல்வதற்கான வழியும் வரைபடம் போட்டு காட்டப்பட்டு விடுகிறது.  அடுத்த பிரச்சனை நண்பர்களை அழைப்பது தானே? இதற்காக போனுக்கு மேல் போன் செய்து விட்டு, அடுத்தடுத்து  இமெயில் அனுப்ப வேண்டிய அவசியம் எல்லாம்  இல்லை. யாரையெல்லாம் அழைக்க வேண்டுமோ அவர்களுக்கெல்லாம் ஒரே கிளிக்கில் அழைப்பை அனுப்பி வைக்கலாம்.
இந்த தளத்தில் உறுப்பினராக சேரும் போது, வலைப்பின்னல் சேவையான பேஸ் புக் கணக்கை கொண்டு உள்ளே நுழைவதால் நம்முடைய நண்பர்கள் பட்டியலில் இருப்பவர்களுக்கெல்லாம் அழைப்பு அனுப்புவது மிகவும் சுலபம்.

அழைப்பை பெற்றவர்கள்  அதனை ஏற்பதும், மறுப்பதும் இன்னும் சுலபமானது. சம்மதம் என்று கிளிக் செய்தால் அவர்கள் வருவதாக பொருள்.  இல்லை வர முடியாது என்றோ, வேறு  ஓட்டலுக்கு செல்லலாம் என்றோ அவர்கள் பரிந்துரைக்கலாம்.  இதனை வாக்களிக்கும் வசதி என்று லஞ்ச்வாலா குறிப்பிடுகிறது. இந்த வசதியின் மூலம் எல்லோருக்கும் ஏற்புடைய ஓட்டலை தேர்வு செய்து விருந்துண்ண செல்லலாம். ஆக ஒரு சில கிளிக்கிலேயே இன்று எந்த ஓட்டலுக்கு  செல்லலாம் என்பதை நண்பர்கள் அழகாக திட்டமிடும் வசதியை இந்த தளம் வழங்குகிறது.

இணைய ரிசர்வேஷனை வழங்கும் ஓபன் டேபிள் தளத்தோடு ஒப்பந்தம் இருப்பதால் இந்த தளத்தின் மூலமே கூடசாப்பிட செல்லும் ஓட்டலில் நமக்கான இடத்தைமுன்பதிவு செய்துகொள்ளலாம்.  அதோடு ஓட்டல்களில் வழங்கப்படும் சலுகை கூப்பன்களையும் இந்த தளத்தின் மூலம் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தளத்தை உருவாக்கிய அமெரிக்க நண்பர்கள் மதிய உணவுக்கு சரியாக திட்டமிட தடுமாறிக் கொண்டிருந்த போது இந்தியாவின் மும்பையில் மதிய உணவு சேவையை மிக அழகாக வழங்கி கொண்டிருக்கும் டப்பா வாலாக்கள் பற்றி யோசித்து அதே போல ஒரு சேவையை இன்டர்நெட் மூலம் வழங்க முடியாதா என்று யோசித்து அதன் பயனாக, லஞ்சுவாலாவை உருவாக்கியுள்ளனராம்.

இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்து நண்பர்களையும் உறுப்பினராக்கி கொண்டால் மதிய உணவுக்கான திட்டமிடலை சுலபமாகமேற்கொள்ளலாம். மதிய உணவு என்றில்லை. இந்த வசதியை வேறு எந்த சமூக நிகழ்வுகளை திட்டமிடவும் தாராளமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

 

http://www.lunchwalla.com/

ஃபேஸ்புக்+டிவிட்ட‌ர்+யூடியூப்=புதுமை திருமணம்

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படலாம்.ஆனால் அவை யுடியூப்பில் ஒளிபரப்படுகின்றன.ஃபேஸ்புக்கில் அறிவிக்கப்படுகின்றன.டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

ஹைடெக் காலத்து திருமணங்கள் இப்படி தான் இருக்கின்றன.

இதற்கான உதாரணமாக அமெரிக்காவின் டான ஹன்னா திருமணத்தை குறிப்பிடலாம்.ஹன்னா சமீபத்தில் டிரேசி என்பவரை மணந்து கொண்டார்.திருமணம் சுற்றத்தாறும் நண்பர்களும் வாழ்த்த சிறப்பாகவே நடந்தேறியது.

திருமணத்தின் நடுவே ஹன்னா தனது செல்போனை கையில் எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்திற்கு ஒரு செய்தியை அனுப்பி வைத்தார்.

ஃபேஸ்புக் ப‌ய‌னாளிக‌ளுக்கு அவ‌ர் என்ன‌ செய்தி அனுப்பி வைத்திருப்பார் என‌ யூகிப்ப‌து க‌டினமாக‌ இருக்காது.ச‌மூக‌ வ‌லைப்பின்ன‌ல் த‌ள‌மான‌ ஃபேஸ்புக் கண‌க்கின் இல‌க்கண‌ப்ப‌டி ஒவ்வொருவ‌ரின் அறிமுக ப‌க்க‌த்தில் த‌ங்க‌ள் பிற‌ந்த‌ தேதி ம‌ற்றும் வாழ் நிலையை குறிப்பிட‌ வேண்டும்.அதாவ‌து திரும‌ண‌மாகி விட்ட‌தா அல்ல‌து த‌னி ந‌ப‌ரா (ஆங்கில‌த்தில் சிங்கில்)என‌ தெரிவிக்க‌ வேண்டும்.

என‌வே திரும‌ண‌மாகாம‌ல் இருப்ப‌வ‌ர்க‌ள் இல‌வாழ்கக்கையில் நுழைந்த‌தும் த‌ங்க‌ள் ஃபேஸ்புக் நிலையை மாற்றிக்கொள்வ‌து தான் ச‌ரி.என‌க்கு திரும‌ண‌மாகி விட்ட‌து என்னும் ம‌கிழ்ச்சியோடு ஃபேஸ்புக்கில் இந்த‌ த‌க‌வ‌லை தெரிவிப்ப‌து ஒரு ஆன‌ந்த‌மான‌ விஷ‌ய‌ம் தான்.

இத‌ உட‌னேவும் செய்ய‌லாம் கொஞ்ச‌ம் அவ‌காச‌ம் எடுத்துக்கொண்டும் செய்ய‌லாம்.

ஹ‌ன்னா ம‌ண‌மேடையிலிருந்தே செய்திருக்கிறார்.ஆம் த‌ன‌து செல்போன் மூல‌ம் அவ‌ர் ஃபேஸ்புக் ப‌க்க‌த்தில் தான் திரும‌ண‌மாகி விட்ட‌ த‌க‌வ‌லை ப‌திவு செய்தார்.அதோடு டிவிட்ட‌ருக்கு சென்று திரும‌ண‌ம் ஆகிவிட்ட‌தை அறிவித்தார்.

டிரேசியொடு ம‌ணமேடையில் நின்றுக்கொண்டிருக்கிறேன்.அவ‌ள் என் ம‌னைவியாகி ஒரு க‌ண‌ம் தான் ஆகிற‌து என‌ ஆன‌ந்த‌ம‌ய‌மாக‌ அந்த‌ அறிவிப்பு அமைந்திருந்த‌து.

இப்ப‌டி த‌ன‌து வ‌லையுல‌க‌ தொட‌ர்புக‌ளுக்கு திரும‌ண‌ செய்தியை ம‌ண‌க்கோல்த்திலேயே ப‌கிர்ந்து கொண்ட‌தோடு இந்த‌ காட்சியை அப்ப‌டியோ விடியோவாக்கி யுடியூப்பிலும் ப‌திவேற்றினார்.

க‌ல்யான‌த்திற்கு புகைப்ப‌ட‌ம் விடியோ எடுப்ப‌து போல‌ ஃபேஸ்புக் ம‌ற்றும் டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளும் இனி புதிய‌ ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளாக‌லாம்.

(நிற்க . ஃபேஸ்புக் வாழ்நிலை த‌க‌வ‌ல் மாற்ற்ம் விவாக‌ர‌த்துக்கும் ஏன் கொலைக்கும் வித்திட்ட‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் உண்டு .அவை ப‌ற்றி விரைவில்…)

——

link;
http://mashable.com/2009/12/01/groom-facebook-update/

டிவிட்டர்;ஒரு அறிமுகம்

டிவிட்டர் என்றால் என்ன?

டிவிட்டர் என்பது அடிப்படையில் ஒரு குறும் வலைப்பதிவு சேவை.அதாவது எஸ் எம் எஸ் வடிவிலான வலைப்பதிவு என வைத்துக்கொள்ளலாம்.

140 எழுத்துக்கள் என்னும் கட்டுப்பாடும், ‘இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்னும் கேள்விக்கான பதிலுமே டிவிட்டரின் பிரதான அம்சங்கள்.

டிவிட்டரை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. இமெயில் கணக்கு துவக்குவது போல டிவிட்டர் இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயரில் ஒரு டிவிட்டர் பக்கத்தை அமைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு டிவிட்டர் செய்ய துவங்க வேண்டியது தான்.

அதிகபட்சம் 140 எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்தலாம் என்பது தவிர டிவிட்டரில் வேறு எந்த கட்டுப்பாடும் கிடையாது.நீங்கள் நினைக்கும் எதனையும் டிவிட்டரில் பகிர்ந்துக்கொள்ளலாம்.டிவிட்டர் இலக்கணப்படி இவை நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்னும் கேள்விக்கு பதிலளிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

இதற்கு காரணம் இந்த சேவை துவங்கப்பட்டதன் நோக்கமே நீங்கள் இப்போது என்ன என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்பதை உங்கள் நட்பு வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ள வழி செய்வதற்காகதான்.

டிவிட்டர் முகப்பு பக்கத்தில் உள்ள கட்டத்தில் இதற்கான பதிலை டைப் செய்தீர்கள் எனறால் இந்த தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.உங்கள் விருப்பத்திற்கேற்ப இவற்றை உங்கள் நண்பர்களோடு மட்டும் பகிர்ந்து கொள்ளலாம்.இல்லை உலகம் முழுவதோடும் பகிர்ந்து கொள்ளலாம்.

நான் டீ சாப்பிட போகிறேன் , சினிமாவுக்கு போகிறேன் , என எந்த வகையான தகவல்களையும் டிவிட்டரில் வெளியிடலாம்.அவை முக்கியமனதாக இருக்க வேண்டும் எனறோ பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றோ கட்டாயமில்லை.

இதனால் யாருக்கு என்ன பயன் என்னும் கேள்வி ஆரம்பத்தில் பலமுறை கேட்கப்பட்டு அலுத்துப்போகும் அளவுக்கு பதிலளிக்கப்பட்டு விட்டது.இப்போது டிவிட்டரால் என்ன பயன் என்று யாரும் கேட்பதில்லை.

இருப்பினும் டிவிட்டரின் உண்மையான பயனை புரிந்துகொள்ள இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

இருப்பினும் டிவிட்டரின் உண்மையான பயனை புரிந்துகொள்ள இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளப்படும் அந்தரங்கமான , அலப விவரங்களால் யாருக்கு என்ன பயன்? எனபது டிவிட்டரை அறிமுகம் செய்து கொள்ளும் எவருக்கும் எழக்கூடிய முதல் கேள்வி.

டிவிட்டர் அடிப்படையில் ஒரு சமுக வலைப்பின்னல் சேவை என்பதை கருத்தில் கொண்டு பார்த்தால் இதற்கான அவசியம் புரியும். நட்பு வட்டாரத்தோடு தொடர்பு கொள்ளவும் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளாவும் டிவிட்டர் துவங்கப்பட்டது.கருத்துக்களை எப்படி வேன்டுமானலும் பகிர்ந்துக்கொள்ளலாம்.டிவிட்டர் நிறுவனர்கள் தேர்வு செய்த வழி நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்னும் கேள்வியாகும்.

இந்த கேள்விக்கான பதிலின் மூலம் ஒருவர் நணபர்களுக்கு தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சுலபமாக தெரிவிக்க முடியும்.உதாரணத்திற்கு ஒரு கல்லூரி மாணவர் , தான் உடற்பயிற்ச்சி கூடத்திற்கு செல்வதாக கூறலாம்.இல்லை காதலியை பார்க்க செல்வதாக தெரிவிக்கலாம்.அவருடைய நண்பர்களுக்கு இது பயனுள்ளதாக அமையலாம்.

நண்பன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ள முடிவதோடு அதற்கேற்ப திட்டங்களையும் வகுத்துக்கொள்ளலாம்.உதாரணத்திற்கு நணபன் சினமாவுக்கு செல்வதாக வைத்துக்கொள்வோம் உடனே மற்ற் நண்பர்கள் தாங்களும் வரத்தாயார் என தெரிவித்து சேர்ந்துக்கொள்ளலாம்.இல்லை நண்பனை பாரக்கச்செல்லாலாம் என நினைத்துக்கொண்டிருப்பவர் அவர் வேறு வேலையாக இருப்பதைதெரிந்துக்கொண்டு அதற்கேற்ப செயல்படலாம்.
இதை போனில் கூட தான் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.ஆனால் டிவிட்டரில் எந்த முயற்சியும் இல்லாமலேயே நண்பர்களை பின்தொடர முடியும் என்பதே விஷயம்.

போனில் சொல்லும் போது சிலரிடம் மட்டுமே தெரிவிக்க முடியும். சிலரை மறந்துவிடலாம்.என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று யாராவது கேட்கலாம்.மன்னிக்கவும் மரந்துவிட்டேன் என்று சமாளிக்க வேண்டும்.டிவிட்டரில் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் போது அந்த கவலையே வேண்டாம். டிவிட்டர் பக்கத்தில் தகவலை பகிர்ந்து கொன்டால் போதும் மற்றவர்கள் அதை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

மேலும் ஒருவர் டிவிட்டரில் தெரிவிக்கும் தகவல்கள் மூலம் அவரின் அப்போதைய மன நிலையை தெரிந்துகொள்ளலாம். நிச்சயம் நண்பர்களுக்கு இது தேவையானது.டிவிட்டர் இதை தான் செய்ய முறபட்டது.

மேலும் டிவிட்டரை பயன்படுத்துவர் பிரபலம் என்னும் போது அவரது ஒவ்வொரு செயலும் ரசிகர்களுக்கு பயன் மிக்கதாக இருக்கும் அல்லவா?

இப்படிதான் டிவிட்டர் துவங்கியது.

செல்போன் உறவுகள்-2

l11‘லூப்ட்’ சேவையை செல்போனில் பயன்படுத்தும்போது, ஒருவருடைய நண்பர்கள் இருக்கும் இடத்தை நகர வரைபடத்தின் நடுவே சுட்டிக்காட்டி அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள வைக்கும். நண்பர்களின் இருப்பிடத்தை தெரிந்துகொள்ள முடிவதே பெரிய விஷயம் தான்! ஆனால் லூப்ட் இதோடு நின்று விடுவதில்லை. இதன் பிறகுதான் லூப்ட்டின் சேவைகள் ஆரம்பமாகிறது.
.
‘லூப்ட்’ போலவே மற்றவர்களின் இருப்பிடத்தை உணரும் சேவையை வழங்கும். ‘விர்ல்’ (whrrl) பட்டிபீக்கன் பட்டிபீக்கன் (buddybeacon) போன்றவற்றில் இருந்து லூப்ட்டை வேறுபடுத்தி உயர்த்துவதும் இந்த விஷயங்கள் தான்!

செல்போன் திரையை பார்த்தாலே நண்பர்கள் இருக்கும் இடங்களை தெரிந்து கொள்ளலாம் – லூப்ட் வழங்கும் இந்த சேவை பழகிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் நண்பர்களின் இருப்பிடத்தை அறிய செல்போனை பார்க்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. உங்கள் நண்பர்கள் அருகாமையில் வரும் பட்சத்தில் ‘லூப்ட்’ சேவையை அது பற்றி தகவலை தெரிவித்து உங்களை உஷார் படுத்திவிடும்.

உதாரணத்திற்கு ஒருவர் ரெயிலில் போய்க்கொண்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவரது நெருங்கிய நண்பர் ஒருவரும்அதே ரெயிலில் கடைசி பெட்டியில் ஏறியிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். (அ) 4 ஸ்டேஷன்கள் தள்ளி காத்திருக்கிறார் என வைத்துக்கொள்வோம்.

‘லூப்ட்’ விசுவாசமான உதவியாளரைப் போல இந்த தகவலை அவருக்கு தெரிவித்து விடும். நண்பர் மிக அருகாமையில் இருப்பது தெரிந்த பின் தேவைப்பட்டால் அவரை தொடர்புகொண்டு பேசலாம். சந்தித்துப்பேசவும் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

‘அடடா நீ அங்கு வந்தது தெரிந்தால் நான் பார்த்து பேசியிருப்பேனோ’ என்று வருந்தும் அவசியமும் இருக்காது. சரி, நண்பர்கள் அருகாமையை தெரிந்துகொள்ள முடிகிறது! பல நேரங்களில் இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அந்த நண்பரோடு தொடர்புகொள்ள விரும்பலாம். அப்படி என்றால் தனியே அந்த நபரை அழைக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. அப்படியே ஒரு எஸ்எம்எஸ் செய்தியை அந்த நண்பருக்கு தட்டி விடலாம். தொடர்ந்து எஸ்எம்எஸ் மூலமே கருத்தும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

புதிய இடத்திற்கு செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த இடத்தின் அருமை பெருமைகளை குறிப்பிட்டு நண்பர்களுக்கு ‘லூப்ட்’ மூலமே தகவல் அனுப்பலாம். நண்பர்கள் லூப்ட் வரைபடத்தில் அந்த இடத்தை பார்த்து விட்டு அங்கு நேரடியாக விஜயம் செய்து பார்க்கலாம். இப்படி நண்பர்கள் பார்த்து பரிந்துரைக்கும் இடங்களையும் லூப்ட் மூலம் தெரிந்து கொண்டு அங்கு சென்று பார்க்கலாம்.

இருப்பிடம் உணர் சேவையை அடிப்படையாக கொண்டு நண்பர்கள் பரஸ்பரம் தொடர்புகொண்டு கருத்துக்களை பரிமாறிக்கொண்டு நட்பு வட்டத்தை உயிரோடு வைத்துக்கொள்ள பல விதங்களில் உதவுவதே லூப்டின் தனித்தன்மையாக இருக்கிறது. அதனால் தான் இந்த சேவையை லூப்ட்டின் நிறுவனர் ஆல்ட்மேன் சமூக காம்பஸ் என்று வர்ணிக்கிறார்.

இன்டெர்நெட் மூலம் நண்பர்கள் தொடர்புகொள்ள உதவும் வலைப்பின்னல் சேவையைப் போல லூப்ட் செல்போனுக்கான வலைப் பின்னல் சேவையை அமைந்திருக்கிறது. ஆனால் வழக்கமான வலைப்பின்னல் சேவைகளில் மாய உலகில் தான் தொடர்பு கொள்வது நிகழ்கிறது. அதாவது வலைமூலம் தான் தொடர்புகொள்ள முடிகிறதே தவிர நேரடியாக சந்திப்பது நிகழ்வதில்லை. மாறாக, ‘லூப்ட்’ நண்பர்கள் நேரில் சந்திக்க உதவி செய்து வலைப்பின்னல் சேவையை உயிரோட்டம் மிக்கதாக ஆக்குவதாக ஆல்ட்மேன் கொஞ்சம் பெருமிதத்தோடு கூறுகிறார்.

வலைப்பின்னல் தளம் போலவே இதிலும் ஒருவர் தனக்கான சுய அறிமுக பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம். நண்பர்களோடு தொடர்புகொள்ளலாம். கருத்துப் பரிமாற்றம் மூலம் நட்பை வளர்த்துக் கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் அடிப்படையில் இருப்பிடம் உணர் சேவை இருக்கிறது என்பதால் இதனை பயன்படுத்துவது மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்கின்றனர்.

ஆனால் இருப்பிடம் உணர் சேவை எதிர்பாராத சங்கடங்களைத் தரலாம். இள வட்டங்கள் தங்கள் ஆருயிர் தோழர் (அ) தோழிகள் எங்கே இருக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்வதை விரும்பலாம். ஆனால் பெற்றோர்களோ (அ) அலுவலக உயர் அதிகாரியோ இப்படி இருப்பிடத்தை தெரிந்து கொள்வதை பிள்ளைகளோ (அ) அலுவலகத்தில் பணியாற்றுபவர்களோ விரும்பி வரவேற்பதற்கான வாய்ப்புண்டா? மகன் தியேட்டருக்கு அருகில் நிற்பதை அப்பா தனது செல்போனில் பார்த்து தெரிந்து கொண்டால் என்னாகும்? அலுவலக ஊழியர் தான் பணி நிமித்தமாக சென்றுவேலையை கவனிக்காமல் ஓட்டலில் அமர்ந்து சாப்பிடுவதை மேலாளர் செல்போனில் பார்த்து ஊகித்து விட்டால் என்னாகும்?

இருப்பிடம் உணர் சேவை இத்தகைய ‘சமூக சங்கடங்களை உண்டாக்கி நெளிய வைக்கலாம். அதே நேரத்தில் சிறுவர்களின் பெற்றோர்களுககு இந்த சேவை மன நிம்மதியைத் தரலாம். நமது இருப்பிடத்தை எப்போதுமே எல்லோருமே தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுவது அந்தரங்கத்தின் மீதான ஊடுருவலாக அமையலாம் என்றும் சிலர் எச்சரிக்கின்றனர்.

இதை புரிந்துகொள்வதும் எளிதானதே! அலுவலகத்திற்கோ, (அ) குறிப்பிட்ட இடத்திற்கோ செல்ல தாமதமாகும்போது தற்போது இதோ வந்து கொண்டே இருக்கிறேன் என கூசாமல் பொய் சொல்கிறோம். ஆனால் லூப்ட் சேவை கையில் இருக்கும் போது நாம் தொடர்புகொள்ளும் நபர் நமது இருப்பிடத்தை பார்க்கும்போது அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரிந்துகொண்டு விட முடியுமே!

இத்தகைய சங்கடங்களை தவிர்க்க ‘லூப்ட்டில்’ விரும்பினால் ஒருவர் தனது இருப்பிடத்தை தெரியப் படுத்தாமல் மறைத்துக்கொள்ளும் வசதியும் அளிக்கப்படுகிறது. எப்படியோ செல்போன் சார்ந்த சுவாரசியமான உலகிற்கான நுழைவு வாயிலாக லூப்ட் அமைந்துள்ளது!
——–

link;
www.loopt.com

கலைஞர்களின் மைஸ்பேஸ்

“மைஆர்ட் இன்போ’ என்றொரு இணையதளம் இருக்கிறது. அந்த தளத்தின் பக்கம் போனால் ஒரே நேரத்தில் பிரமிப்பும், ஏக்கமும் ஏற்பட்டு விடும். அதற்கு முன் ஒரு எச்சரிக்கை குறிப்பு. நீங்கள் கலை ஆர்வம் மிக்கவர் என்றால் இந்த தளம் உங்கள் நேரத்தை குடித்துவிடும். அது மட்டும் அல்ல, மீண்டும் மீண்டும் இந்த தளத்திற்கு விஜயம் செய்யும் அளவிற்கு இதற்கு அடிமையாகி விடுவீர்கள்.

.
ஆனால் இதனால் ஒன்றும் பாதகமில்லை. உண்மையான கலா ரசிகனுக்கு இதைவிட மகிழ்ச்சியை தரக்கூடியது வேறு இல்லை. ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் விதவிதமான கலைஞர்களையும், அவர்கள் படைப்புகளையும் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைப்பதைவிட சந்தோஷமானது வேறு என்ன இருக்க முடியும்?

இதனால் பிரமிப்பு ஏற்படும் என்றால், அட நம்மூர் கலைஞர்களுக்கு என்று இப்படி ஒரு இணைய தளம் இல்லையே என்ற ஏக்கம் ஏற்படும்? அந்த அளவுக்கு கலைஞர்களுக்கான இருப்பிடமாக அவர்களின் படைப்பிற்கான கலைகூடமாக இந்த தளம் விளங்குகிறது.
இதில் மேலும் விஷேசமானது என்னவென்றால் “மை ஆர்ட் இன்போ’, கலா ரசிகர்களுக்கானது என்பதை விட கலைஞர்களுக்கானது தான்!.

மைஸ்பேஸ் மற்றும் பேஸ்புக் போன்றவை எப்படி இளைஞர்களுக்கான வலைப்பின்னல் தளமாக இருக்கின்றனவோ அதே போல் கலைஞர்களுக்கான வலைப்பின்னல் தளமாக மைஆர்ட் இன்போ டாட் காம் தளத்தை லூயிஸ் மெக்பெயின் என்னும் கனடா நாட்டு பிரமுகர் அமைத்திருக்கிறார்.

பதிப்பக அதிபரும், கொடை வள்ளலுமான மெக்பெயின் கலை ஆர்வம் மிக்கவர். ஓவியம் உள்ளிட்ட கலைகளில் பெருமளவு முதலீடும் செய்திருப்பவர். கலைஞர்களுக்காக என்று “ஆர்ட் இன்போ’ என்னும் பெயரில் இணைய வழிகாட்டியையும் நடத்தி வருபவர்.

“மைஸ்பேஸ்’ உள்ளிட்ட வலைப்பின்னல் தளங்கள் உண்டாக்கி விடும் அலைகளை உள்வாங்கி கொண்ட மெக்பெயின், கலைஞர்களுக்கும் இத்தகைய வலைப்பின்னல் தளம் இருக்க வேண்டும் என்னும் உந்துதலோடு “மைஆர்ட் இன்போ’ தளத்தை ஏற்படுத்தி யிருக்கிறார். கலைஞர்கள் குறிப்பாக இளம் மற்றும் புதிய கலைஞர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான உலகளாவிய தளமாக இந்த தளம் அமைய வேண்டும் என்பது அவரது விருப்பம்.

தளத்தின் வடிவமைப்பும், உள்ள டக்கமும் இந்த விருப்பத்தை கச்சிதமாக பிரதிபலிக்கிறது. மைஸ்பேசில் எப்படி, ஒருவர் தங்களுக்கான பக்கத்தை உருவாக்கி கொண்டு சுய அறிமுகம் செய்து கொண்டு நண்பர்களை தேடிக் கொள்ளலாமோ அவ்விதமே இதில் கலைஞர்கள் தங்கள் படைப்புகளை இடம் பெறச் செய்து, உலகின் பார்வைக்கு படைப்புத் திறனை காட்சிக்கு வைக்கலாம். மைஸ்பேஸ் மகத்தானதுதான். ஆனால் அதன் வடிவமைப்பில் கொஞ்சம் சிக்கலாக இருக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் தகவல்கள் கொட்டப்பட்டு ஒருவித குழப்பம் ஏற்படும். ஆனால் இந்த தளத்தில் அத்தகைய குழப்பம் இல்லாமல், மிக எளிமையாக ஒருவித நேர்த்தியோடு, முகப்புபக்கம் அமைந்துள்ளது.

அற்புதமான கலைப்படைப்புகள் மற்றும் அவற்றை உருவாக்கிய கலைஞர்களின் படங்கள், முகப்பு பக்கத்தில் பளிச்சிடுகின்றன. குறிப்பிட்ட தினத்திற்கான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு முகப்பு பக்கத்தில் முன்னிறுத்தப் படுவதோடு, மற்ற கலைஞர்கள் பற்றிய அறிமுகமும் பக்கத்திலேயே மின்னுகின்றன.

முதல் பார்வைக்கு ஓவியங்களே பிரதானமாக தோன்றினாலும் ஓவியம் மட்டும் அல்லாமல், புகைப்படங்கள், சிற்பங்கள், வீடியோ காட்சிகள், பேஷன், கட்டிட கலை, கவிதை, வடிவமைப்பு, கண்ணாடி வேலைப்பாடுகள் என சகலவிதமான கலைப்படைப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.

மேலோட்டமான ஒரு பார்வைக்கு பின், கண்ணை கவரும் ஏதாவது ஒரு படத்தை கிளிக் செய்யும் போது நீண்ட கலை பயணத்திற்கு தயாராகி விட வேண்டும். கிளிக் செய்த அந்த படம் பெரிதாகி அருகிலேயே அது பற்றிய குறிப்புகள் விரிவதோடு, அந்த கலைஞரின் மற்ற படைப்புகளும் வரிசையாக வந்து நிற்கும். ஒவ்வொரு படமும் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளன என்ற குறிப்புடன் கலைஞரைப் பற்றிய சுயசரிதை விவரங்கள் மற்றும் அவர் பங்கேற்ற கண்காட்சி தொடர்பான தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.

அவரது படைப்பு கருத்தை ஈர்த்தது என்றால் அந்த கலைஞரை பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அவரோடு தொடர்பு கொள்ள விரும்பினால், பிலாக் பதிவு எழுதி வைக்கலாம் (அ) உடனடியாக இன்டெர்நெட் மூலமே உரையாடலாம். பிலாக் பதிவில் மற்ற கலைஞர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கூடுதல் புரிதலை ஏற்படுத்தக் கூடியவையாக அமைந்திருப்பது மற்றொரு சிறப்பம்சம்.

ஒரு கலைஞரை பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டிருக்கும் போதே,அடுத்தடுத்த கலைஞர்களை அறிமுகம் செய்து கொண்டே போகலாம். படைப்புகளின் வண்ணமும், வகைகளும் வியக்க வைக்கும் கலை பயணமாக அது அமையும்.

இதைத்தவிர, கலைஞர்கள், கலைப்படைப்புகள் கலை கூடங்கள் என எந்த தலைப்பின் கீழும் புதிய கலைஞர்களை தேடும் வசதி உண்டு. மேலும் இந்த வார கலைஞர் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட கலைஞர் என்னும் அடைமொழியோடும், கலைஞர்கள் அறிமுகம் செய்யப்படுகின்றனர்.

தொடர்ந்து தளத்திற்கு விஜயம் செய்யும் போது, இந்த அம்சங்கள், புதிய கலைஞர்களை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். கலைஞர்கள் பரஸ்பரம் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்துக்கொள்ள உதவக்கூடிய இந்த தளம், அவர்களின் படைப்புகள் உலகளாவிய அறிமுகத்தை பெறவும் வழிசெய்கிறது.

அதிலும் குறிப்பாக புதிய கலைஞர்கள் தங்களை உலகிற்கு உணர்த்த இந்த தளம் சரியான நுழைவு வாயிலாக இருக்கும். இதுவரை 800க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதில் உறுப்பினர்களாகி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகளை இடம் பெற வைத்துள்ளனர். இன்னும் பெரிதாக இந்த தளம் வளரும் என்றே தோன்றுகிறது.
————
link;
www.myartinfo.com