இணைய வீடியோவின் கதை

இணைய வீடியோ, லைவ்ஸ்டிரீங் வரை முன்னேறி வந்திருக்கிறது. இன்று கையில் இருக்கும் ஸ்மார்ட்போனிலேயே, படம் பார்க்க முடிகிறது. ஆனால், இதன் பின்னே நீண்ட தொழில்நுட்ப பயணம் இருப்பது தெரியுமா?

ணைய உலகின் முதல் வீடியோ எது எனத்தெரியுமா? வலை பொதுமக்களுக்கு அறிமுகமான 1993 ம் ஆண்டு, சிவியர் டயர் டேமேஜ் (Severe Tire Damage) எனும் இசைக்குழு இணையத்தின் மூலம் முதல் நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தியது.

ஜெராக்ஸ் பார்க் மற்றும் ஆப்பிள் கம்ப்யூட்டர் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் ஒன்று சேர்ந்து எஸ்.டி.டீ இசைக்குழுவை உண்டாக்கியிருந்தனர். 1993 ல், வலை எனும் விஷயமே பெரும்பாலானோருக்கு தெரிந்திராத காலத்தில் இந்த இசைக்குழு இணையத்தில் நேரலை செய்தது.

இணைய வரலாற்றின் மைல்கல் நிகழ்வு என்று வர்ணிக்க கூடிய இந்த நேரலையை நிகழ்த்திய இசைக்குழுவின் இணையதளம் இன்னமும் உள்ளது. - https://www.std.org/

இந்த இணையதளத்தின் ஆதிகால தன்மையை மீறி, இதை சாதனை தளம் என்றே கருத வேண்டும். - 1993 ம் ஆண்டு தான் இணையத்தில் முதல் வெப்கேமும் அறிமுகமானது. ஆக்ஸ்போர்டின் காபிபானையில் பொருத்தப்பட்ட வெப்கேமே இந்த பெருமைக்குறியது.