Fill in some text

Fill in some text

Fill in some text

Fill in some text

டிவிட்டர் ஒரு சுருக்கமான அறிமுகம்!

Fillசமூக ஊடகம் எனும் போது எப்போதும், பேஸ்புக்கிற்கு அடுத்ததாக சொல்லப்படும் அளவுக்கு டிவிட்டர் பிரபலமானதாக இருக்கிறது. பேஸ்புக் போலவே, சமூக வலைப்பின்னல் ரகத்தைச்சேர்ந்தது என்றாலும் டிவிட்டர் தன்னளவில் தனித்தன்மையானது. டிவிட்டர் உண்மையில் குறும்பதிவு சேவை என வகைப்படுத்தப்படுகிறது.

வலைப்பதிவு என்பதை இணைய நாட்குறிப்பு அல்லது இணைய சஞ்சிகை என புரிந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் இதை வெப்லாக் என்கின்றனர். இதன் சுருக்கமே பிலாக்.

இணையத்தில் எழுதப்படும் தனிப்பட்ட கருத்துகளின் பதிவு என்பதாக வலைப்பதிவுக்கான வரையறை அமைந்தாலும், நடைமுறையில் வலைப்பதிவுகள் பதிப்பு சாதனமாக அறியப்பட்டு அவற்றின் ஆற்றலும், வீச்சும் இணையவெளி மூலம் உணரப்பட்டுள்ளது.

எவரும், எதையும் எழுதலாம் எனும் சுதந்திரம் வலைப்பதிவுகளின் ஆதார தன்மையாக அமைந்தாலும், எந்த நீளத்திலும் எழுதலாம் என்பதும் அதனுள் இருக்கிறது. மாறாக, அளவில் சிறிய பதிவுகளை வெளியிடுவதற்கான மேடையாக டிவிட்டர் அறிமுகமானதால், குறும்பதிவு சேவை என அறியப்படுகிறது.

டிவிட்டர் மூலம் அதிகபட்சம் 140 எழுத்துக்களுக்குள் கருத்துக்களை பகிரலாம் என்பதே அதன் அடையாளமாக இருக்கிறது. ( தற்போது 280 எழுத்துகள் வரை பகிரலாம்.) டிவிட்டரின் இந்த வரம்பே அதை பிரபலமாக்கியது.

டிவிட்டரில் பகிரப்படும் கருத்துகள் குறும்பதிவுகள் என அழைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் டிவீட் (tweet) என்கின்றனர். இதே முறையில் தமிழில் கீச்சுகள் என்றும் பயன்படுத்தப்படுகிறது.

டிவிட்டர் அறிமுகமான காலத்தில், 140 எழுத்துக்களில் அர்த்தமுள்ளதாக என்ன பகிர்ந்துவிட முடியும் எனும் கேள்வியும் சந்தேகமும் பரவலாக இருந்தாலும், இந்த வரம்பு காரணமாகவே டிவிட்டர் பிரபலமானது. ஏனெனில், நீள் பதிவுகளுக்கு மாறாக, தகவல்களையும் கருத்துகளையும் குறுகிய பதிவுகளாக வெளியிடுவதும், அவற்றை வாசிப்பதும் பல விதங்களில் ஏற்றதாக அமைந்தது.

நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? (what are you doing) எனும் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக, பயனாளிகள் தங்கள் செய்து கொண்டிருக்கும் செயல்களை பகிர வழி செய்த டிவிட்டர் பின்னர் மெல்ல குணம் மாறி உடனடி செய்திகள், நிகழ் நேர தகவல்கள் அல்லது கருத்துகளை பகிர்வதற்கான மேடையாக வளர்ந்தது.

டிவிட்டரின் இந்த மாற்றம் அதன் பயணத்தில் குறிப்பிடத்தக்கது. டிவிட்டர் அறிமுகமான காலத்தில், அதில் பகிரப்படும் காலை உணவு தகவல்களால் என்ன பயன் என கேட்கப்பட்டது. ஆனால், டிவிட்டரின் இந்த குறும்பதிவுகள், காலை உணவு தகவல்களை மட்டும் அல்லாமல் உடனடியாக பகிரக்கூடிய எல்லா வகை விவரங்களுக்கும் பொருந்தும் என்பது அதன் பயன்பாட்டு அம்சத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

டிவிட்டர் உடனடி செய்திகளுக்கான மேடையாக பயனாளிகளால் கருதப்பட்ட நிலையில், அதன் ஆதார வாசகமும், இப்போது என்ன நிகழ்கிறது? (what is happenuing now ) என்பதாக மாற்றப்பட்டது.

டிவிட்டர் பதிவுகள் குறும்பதிவுகள் என அழைக்கப்படுவது போலவே, அந்த பதிவுகளை பெற விரும்புகிறவர்கள், பின் தொடர்பாளர்கள் (followers) என அழைக்கப்படுகின்றனர். பேஸ்புக்கில் நண்பர்கள் என்றால், டிவிட்டர் பாலோயர்கள். மேலும் இது நட்பு வலை சார்ந்தது அல்ல, பகிரப்பரும் கருத்துகள் மீதான விருப்பம் சார்ந்தது.

டிவிட்டரில் பகிரப்படும் பதிவுகள், மறு பதிவிடப்படலாம், அதற்கு ரீடிவீட் (Retweet.) என்று பெயர். ரீடிவீட் செய்வது அந்த கருத்தை முன்மொழிவதாகாது எனும் வாசகம் டிவிட்டரில் பலரால் பயன்படுத்தப்படுவது.

ரீடிவீட் தவிர டிவிட்டரில் அதிகம் பயன்படுத்தப்படுவது ஹாஷ்டேக் (hashtags ) ஆகும். குறிப்பிட்ட தலைப்பிலான குறும்பதிவுகளை தொடர் இழையாக பார்க்க ஹாஷ்டேக் உதவுகிறது. ஹாஷ்டேக் ஒரு இயக்கமாகவே வளர்ந்திருக்கிறது.

டிவிட்டரில் பதில் அளிக்கலாம். இந்த வசதியை கொண்டு துவக்கத்தில் இதழாளர்கள் டிவிட்டரில் நேர்காணல் எல்லாம் செய்திருக்கின்றனர். டிவிட்டரில் எல்லாமே பொதுவெளியில் தோன்றும் என்பதால் ஒரு பயனாளியிடம் தனிப்பட்ட உரையாடல் விரும்பினால், மேசேஜிங் வசதியை நாடலாம்.