வாட்ஸ் அப் சர்ச்சையும், பேஸ்புக் விளம்பர வலையும்!

whatsapp-android-e14_082816100319வாட்ஸ் அப் பயனாளிகளின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்திருப்பது இணைய உலகில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் வஞ்சித்துவிட்டது என்பதில் துவங்கி, அந்தரங்க மீறலுக்கு இது வழி வகுக்கும் என்பது வரை பல்வேறு விதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. வாட்ஸ் அப் இப்படி செய்யலாமா? என்று ஒரு தரப்பினரும், வாட்ஸ் அப் இப்படி செய்யும் என்பது எதிர்பார்த்து தானே என்று இன்னொரு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தனியுரிமை ஆர்வலர்கள், பேஸ்புக்குடனான வாட்ஸ் அப்பின் தகவல் பகிர்வு முடிவால், பயனாளிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி கவலையோடு பேசி வருகின்றனர். வாட்ஸ் அப்பின் இந்த முடிவால் பேஸ்புக்கிற்கு என்ன ஆதாயம் எனும் கேள்விக்கு நடுவே, நமக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்ற கவலையும் சராசரி பயனாளிகளை வாட்டிக்கொண்டிருக்கிறது.

அதிலும் வாட்ஸ் அப் பயனாளிகளின் திறன்பேசிகளில், புதிய விதிமுறைகளை ஏற்பதற்கான அறிவிப்பு பெட்டிச்ச்செய்தியாக தோன்றத்துவங்கியிருக்கும் நிலையில், இது பற்றி பலருக்கும் குழப்பம் ஏற்படுவது இயல்பானது தான். எனவே முதலில் பிரச்சனையின் பின்னணியை சுருக்கமான பார்த்துவிட்டு, இந்த முடிவின் பின்னணி மற்றும் அதனால் ஏற்படக்கூடிய தாக்கம் பற்றி பார்க்கலாம்.
திறன்பேசிகளில் பயன்படுத்தப்படும் மெசேஜிங் சேவைகளில் பிரபலமானதாகவும், அதிகம் பயன்படுத்தப்படும் சேவையாகவும் இருக்கும் வாட்ஸ் அப், அகஸ்ட் 25 ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன் வலைப்பதிவில் வெளியான இந்த அறிவிப்பு புதிய விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை (பிரைவசி) பற்றிய விவரங்களை கொண்டிருந்தது.

பேஸ்புக் ஒப்பந்தம்!
வாட்ஸ் அப் இணைய உலகின் வெற்றிக்கதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் அடையாளமாக தான் கடந்த 2014 ம் ஆண்டில் முன்னணி வலைப்பின்னல் நிறுவனமான பேஸ்புக் அதை 19 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கியது. பேஸ்புக் வசமான பிறகு வாட்ஸ் அப் அதன் கீழ் தனி நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது. இடையே பேஸ்புக் தனது தரப்பில் மெசேஜிங் சேவையை அறிமுகம் செய்தாலும் வாட்ஸ் அப் சேவை தனக்கான பாதையில் முன்னேறிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தான் வாட்ஸ் அப் புதிய தனியுரிமை கொள்கையை வெளியிட்டுள்ளது. இதில் தான், தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பயனாளிகளின் தொலைபேசி எண் மற்றும் அவர்கள் சாதனத்தை பயன்படுத்தும் விதம் தொடர்பான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளது. பேஸ்புக் தனது பயனாளிகளுக்கு பொருத்தமான விளம்பரங்கள் மற்றும் நட்பு கோரிக்கையை வழங்க இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் வழங்கும் தகவல்கள் பேஸ்புக்குடன் மேலும் பலவிதங்களில் ஒருங்கிணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
whatsapp_001
எதிர்பார்க்க கூடியது போலவே இந்த அறிவிப்பு எதிர்ப்புக்கும், சர்ச்சைக்கும் இலக்காகி உள்ளது. பேஸ்புக்குடன் வாட்ஸ் அப் பயனாளிகளின் தொலைபேசியை பகிர்வது, அந்தரங்க மீறலுக்கும், விளம்பர தாக்குதலுக்கும் வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது. தனியுரிமை ஆர்வலர்கள் இதை கடுமையாக எதிர்க்கின்றனர்.
வாட்ஸ் அப், பேஸ்புக்கிற்கு சொந்தமான நிறுவனம் எனும் போது அது தனது பயனாளிகள் தொடர்பான தகவல்களை தாய் நிறுவனத்திடம் பகிர்வதில் என்ன தவறு என்று கேட்கலாம். இந்த கேள்விக்கான பதிலில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. முதல் சிக்கல், வாட்ஸ் அப் பயனாளிகளுக்கு அளித்த உறுதிமொழியை மீறி நடந்து கொண்டிருக்கிறது என்பது தான். பேஸ்புக்கால் வாங்கப்பட்ட போது, அதன் இணை நிறுவனர் ஜான் கவும் (Jon Koum ) பயனாளிகளின் தனியுரிமை காக்கப்படும் என உறுதி அளித்திருந்தார். ”உங்கள் பெயரை எங்களுக்கு நீங்கள் தெரிவிப்பதில்லை. உங்கள் இமெயில் முகவரியையும் நாங்கள் கேட்பதில்லை. உங்கள் பிறந்த நாள் எங்களுக்கு தெரியாது. நீங்கள் பணியாற்றும் இடம் தெரியாது. உங்கள் விருப்பங்கள், இணையத்தில் உங்கள் தேடல் எங்களுக்கு தெரியாது. உங்கள் ஜிபிஎஸ் இருப்பிடத்தையும் சேகரிப்பதில்லை. எந்த வகையான தகவலும் சேகரிக்கப்பட்டு சேமிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் மாற்றம் இருக்காது” என அவர் கூறியிருந்தார்.

உறுதிமொழி மீறல்
தற்போது பேஸ்புக்குடன், தொலைபேசி எண்ணை பகிர்ந்து கொள்ள முடிவு செய்திருப்பதன் மூலம் இதில் இருந்து வாட்ஸ் அப் விலகி இருக்கிறது எனும் கோபம் பலருக்கு இருக்கிறது. வாட்ஸ் அப் துரோகம் செய்துவிட்டதாகவும் பலர் ஆவேசம் கொள்கின்றனர். அதிலும், பேஸ்புக்கை பொருத்தவரை பயனாளிகளின் விருப்பங்கள், இணைய உலாவல், அவர்கள் பிறந்த நாள், பணியாற்றும் இடம் என முழு ஜாதகமே தெரியும் என்ற நிலையில், வாட்ஸ் அப்பின் இந்த முடிவு கூடுதல் அதிர்ச்சியை அளிக்கவே செய்கிறது. அது மட்டும் அல்லாமல் வாட்ஸ் அப் தனது சேவை வழியே பரிமாறிக்கொள்ளப்படும் செய்திகள் அனைத்தும் என்கிரிப்ட் செய்யப்பட்டு பாதுகாப்பானதாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்து பாராட்டை பெற்ற நிலையில் அதற்கு விரோதமாகவும் புதிய முடிவு அமைகிறது. இரண்டாவது சிக்கல், வாட்ஸ் அப் அளிக்கும் தகவல்களை விளம்பர வருவாய் பசி கொண்ட பேஸ்புக் எப்படி பயன்படுத்தக்கூடிய விதம் தொடர்பானது. பேஸ்புக்கின் விளம்பர வலை ஏற்கனவே ஆழமாகவும், அழுத்தமாகவும் விரிந்திருக்கும் நிலையில், பயனாளிகளின் தொலைபேசி எண்களும் அதன் கையில் கிடைத்தால் என்ன ஆகும் எனும் கவலை தனியுரிமை ஆர்வலர்களுக்கு அதிகம் இருக்கிறது.

இந்த கவலை பற்றி பார்ப்பதற்கு முன், இந்த பகிர்தலில் இருந்து விலகிக்கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதையும் தெரிந்து கொள்வது நல்லது. அதாவது வாட்ஸ் அப் தொலைபேசி எண்ணை பேஸ்புக்குடன் பகிர விருப்பம் இல்லை என பயனாளிகள் தெரிவிக்கலாம். வாட்ஸ் அப்பில் தோன்றிக்கொண்டிருக்கும் பெட்டி அறிவிப்பு, அதன் புதிய விதிமுறைகளை ஏற்க கோருகிறது. அதை ஏற்பதற்கு முன், மேலும் விரிவாக படிக்க விருப்பம் எனும் வாய்ப்பை கிளிக் செய்தால், தொலைபேசி எண்ணை பகிர விருப்பம் தொடர்பான சிறிய கட்டம் தோன்றும். அதில் உள்ள ரைட் குறியை கிளிக் செய்து நீக்குவதன் மூலம் இதற்கு உடன்படாமல் இருக்கலாம். இதை அறியாமல் ஏற்கனவே புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொண்டவர்கள் கவலைப்பட வேண்டாம், செட்டிங் பகுதிக்குச்சென்று இந்த வாய்ப்பை கிளிக் செய்தி, தொலைபேசி எண் பகிர்வில் இருந்து வெளியேறலாம். ஆனால் ஒன்று, இதன் மூலம் தொலைபேசி எண் பகிர்வில் இருந்து தான் விலக முடியுமேத்தவிர, பயனாளிகளின் மற்ற விவரங்களை வாட்ஸ் அப் பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்வதை தடுக்க முடியாது. அதற்கு பயனாளிகளுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

உங்கள் விவரங்கள்
வாட்ஸ் அப் சேவையை கடைசியாக பயன்படுத்திய விவரம், மற்ற பயனாளிகளுடன் தொடர்பு கொண்ட விதம், பயன்படுத்திய இணையதளங்கள், சேவை நிறுவப்பட்ட நாள், பயன்படுத்தும் காலம், பயன்படுத்தும் சாதனம், அதில் உள்ள இயங்குதளம், பிரவுசர் விவரம், மொபைல் சேவை உள்ளிட்ட விவரங்கள் பகிரப்படும் வாய்ப்பு இருக்கிறது. இவை பேஸ்புக்குடன் மட்டும் அல்ல, பேஸ்புக் குடும்பத்தில் உள்ள நிறுவனங்களுடனும் பகிரப்படும்.
மற்றபடி, பயனாளிகளின் செய்திகள் தொடர்ந்து என்கிரிப்ஷன் பாதுக்காப்புடன் இருக்கும் என்றும் பயனாளிகள் தொடர்பான தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிர மாட்டோம் என்றும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
ஆனால், பேஸ்புக்குடன் இணைந்த பிறகும், எங்கள் தனியுரிமை கொள்கையில் மாற்றம் இருக்காது எனும் வாட்ஸ் அப்பின் உறுதி மொழி மீறப்பட்டுவிட்டது.

சரி, இதனால் பேஸ்புக்கிற்கு என்ன லாபம்? பயனாளிகளுக்கு என்ன பாதிப்பு?
பேஸ்புக் தனது சேவையை இலவசமாக வழங்கி, இணையவாசிகளை வளைத்துப்போட்டு க்கொண்டுள்ளது. ஆனால், பயனாளிகள் மூலம் அதற்கு விளம்பர வருவாய் கொட்டுகிறது. பேஸ்புக்கை பயன்படுத்த பதிவு செய்யும் போதே, அவர்களின் பெயர், இமெயில் முகவரி உள்ளிட்ட விவரங்களை சேகரித்துக்கொள்ளும் பேஸ்புக், அதன் பிறகு பயனாளிகள் பற்றிய கூடை கூடையாக விவரங்களை சேகரித்துக்கொள்கிறது. ஒருவர் எந்த பக்கங்களை எல்லாம் லைக் செய்கிறார் என்பதில் துவங்கி அவர் எந்த இணைய பக்கங்களை சென்று பார்க்கிறார், எந்த வகையான சார்பு கொண்டிருக்கிறார் என எண்ணற்ற விவரங்களை பேஸ்புக் சேகரித்து வைத்திருக்கிறது. இவ்வாறு பயனாளிகள் பற்றி 92 வகையான காரணிகளை திரட்டுவதாக அன்மையில் பேஸ்புக்கே தகவல் வெளியிட்டுள்ளது. பேஸ்புக்கை நட்பு வலையாக பயன்படுத்தும் அப்பாவி பயனாளிகள், தங்களைப்பற்றி பேஸ்புக் தெரிந்து வைத்திருக்கும் தகவல்களின் அளவை தெரிந்து கொண்டால் திடுக்கிட்டு போய்விடுவார்.
facebook whatsapp flickr sam azgor
பேஸ்புக் கண்காணிப்பு
பயனாளிகளின் ஒவ்வொரு அடியையும் பேஸ்புக் கண்காணித்து, அவர்களின் இணைய பழக்கங்கள் பற்றிய தகவல்களை சேகரித்துக்கொண்டிருப்பதாக தனியுரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கான உரிமையை பயனாளிகள் விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் பேஸ்புக்கிற்கு வழங்கியுள்ளனர் என்பதால் இதில் சட்ட விரோதம் என எதுவுமில்லை. பயனாளிகள் மீது பேஸ்புக்கிற்கு ஏன் இத்தனை அக்கறை என்றால், எல்லாம் விளம்பர வருவாய் ஈட்டுவதற்கான மெனக்கெடல் தான். பொத்தம் பொதுவான விளம்பரங்களால் இணைய உலகில் அதிக பலன் இல்லை என தெரிந்துவிட்ட நிலையில், வாடிக்கையாளருக்கு ஏற்ற இலக்கு சார்ந்த விளம்பரங்கள் தான் ஏற்றதாக கருதப்படுகின்றன. இப்படி குறி பார்த்து நெத்தியடி விளம்பரங்களை வழங்க பயனாளிகள் தொடர்பான தகவல்கள் தேவைப்படுகின்றன. இதனால் தான் பேஸ்புக், தனது பயனாளிகள் எதை எல்லாம் லைக் செய்கின்றனர், இணையத்தில் எங்கெல்லாம் செல்கின்றனர் என விடாமல் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதன் மூலம் திரட்டும் தகவல்களை கொண்டு, தனிப்பட்ட பயனாளிகளை குறி வைத்து அவரது டைம் லைன் அருகே விளம்பரங்களை வெளியிடுகிறது. பெரும்பாலான நேரங்களில் பயனாளிகள் தங்களை அறியாமல் கிளிக் செய்யத்தூண்டும் அளவிற்கு அவர்கள் ஆர்வம் சார்ந்தவையாகவே இந்த விளம்பரங்கள் அமைந்திருக்கும். உதாரணத்திற்கு மின்வணிக தளத்தில் நவீன ஆடை வாங்கிய பயனாளியின் டைம்லைனில் பேஷன் நிறுவன விளம்பரம் தோன்றும்.
இத்தகைய விளம்பரங்கள் மூலம் தான் பேஸ்புக் வருவாயை குவித்துக்கொண்டிருக்கிறது.

விளம்பர வலை
இந்த விளம்பர வலையை மேலும் ஆழமாக விரிப்பது தான், பேஸ்புக்குடன் வாட்ஸ் அப் தகவல் பகிர்வின் நோக்கமாக அமைகிறது. வாட்ஸ் அப்பே கூறியுள்ளது போல, இது பேஸ்புக் மேலும் சிறந்த முறையில் இலக்கு விளம்பரத்தை வழங்கவும், பொருத்தமான நட்பு கோரிக்கை பரிந்துரை செய்யவும் உதவும். இதில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம் என்ன என்றால், பேஸ்புக்கிடம் பயனாளிகள் தொடர்பான தகவல்கள் கொட்டிக்கிடந்தாலும், அவர்களின் பலரது தொலைபேசி எண்கள் கிடையாது. இருக்கும் எண்களும் பயன்படுத்தப்படும் எண்ணா என்பது தெரியாது. பயனாளிகள் பேஸ்புக்கிடம் தங்கள் தொலைபேசி எண்ணை பகிராமல் இருக்கும் வசதி உள்ளது. வாட்ஸ் அப், தகவல் பகிர்வின் மூலம் அந்த பயனாளி பேஸ்புக் பயனாளியாகவும் இருந்தால், இரண்டையும் தொடர்பு படுத்தி பேஸ்புக் அவரது தொலைபேசி எண்ணை குறித்துக்கொள்ளும். இது பேஸ்புக்கிற்கு மிகவும் அவசியம் தெரியுமா?

ஏனெனில், பேஸ்புக் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து அவர்களின் வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை வாங்கி வைத்துக்கொண்டு அதற்கேற்ற விளம்பரங்களை வெளியிடுவதாக ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் பிரச்சனை என்ன என்றால் வர்த்தக நிறுவனங்கள் பொத்தம் பொதுவாக இந்த எண்களை திரட்டியிருப்பதால், அந்த எண்களை பேஸ்புக் பயனாளிகளுடன் தொடர்பு படுத்த முடியாமல் இருக்கிறது. இந்த இடைவெளியை வாட்ஸ் அப் தகவலால் நிரப்ப முடியும் என்பதால் தான் பேஸ்புக் இதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. வாட்ஸ் அப் தொலைபேசி எண் கொண்டு, பேஸ்புக் பயனாளியை அவருக்கான தொலைபேசி எண்ணுடன் இணைப்பது, விளம்பர சேவை வழங்குவதில் கச்சிதமாக பொருந்தும்.
சரி, இது பயனாளிகளை எப்படி பாதிக்கும்? பல விதங்களில் பாதிக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றனர். முதலில், குறிப்பிட்ட பயனாளி பேஸ்புக் வசம் தனது தொலைபேசி எண்ணை சமர்பிக்க விரும்பாத நிலையில், அவருடன் வாட்ஸ் அப்பில் தொடர்பில் உள்ள ஒருவரின் தொலைபேசி எண் கிடைக்கும் பட்சத்தில் அதன் மூலமே இவரது தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் கிடைத்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.

தேவை விழிப்புணர்வு
பொருத்தமான விளம்பரங்கள் பயனாளிகளுக்கும் ஏற்றது என்று கூறப்பட்டாலும், இதில் பல சிக்கல்கள் இல்லாமல் இல்லை. அதிலும் குறிப்பாக பயனாளிகளுக்கு தங்களைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுவது மற்றும் தாங்கள் குறி வைக்கப்படுவது தொடர்பாக அறியாமல் இருக்கும் போது, இத்தகைய இலக்கு விளம்பரங்கள் கேள்வியை எழுப்புகின்றன. மேலும் இணையவாசிகளின் அந்தரங்கத்தின் மீதான ஊடுருவலாக இது அமையலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த விளம்பர உத்தி எந்த அளவுக்கு செல்லக்கூடியதை என்பதை புரிந்து கொள்ள, கடந்த 2015 ம் ஆண்டு பேஸ்புக் விளம்பரம் தொடர்பான சர்ச்சையை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது, ஆஸ்திரியாவைச்சேர்ந்த டேனியல் கேப் எனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிதர் ஒருவருக்கு சவப்பெட்டி சேவை தொடர்பான விளம்பரத்தை அவரது டைம்லைன் பக்கத்தில் பேஸ்புக் பக்கத்தில் தோன்றச்செய்தது பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் உண்டாக்கியது.

ஆனால், இந்த விளம்பர உத்தி பேஸ்புக்கால் மட்டும் பின்பற்றப்படவில்லை. தேடியந்திரமான கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள், பயனாளிகள் தொடர்பான தகவல்களை திரட்டி அதற்கேற்ற பொருத்தமான விளம்பரங்களை அளித்து வரும் உத்தியை வெற்றிகரமான பின் பற்றி வருகின்றன. குறிப்பாக 2004 ம் ஆண்டில் ஜிமெயில் சேவையில் இமெயிலின் உள்ளடக்கம் தொடர்பான விளம்பரங்கள் தோன்றும் ஏற்பாடு தனியுரிமை சர்ச்சையில் சிக்கியது. இமெயில் உள்ளடக்கம், மனிதர்களால் படிக்கப்படவில்லை, கம்ப்யூட்டர்களால் ஸ்கேன் செய்யப்படுவதாக கூகுள் பதில் அளித்தது. இணைய உலகில் இது போன்ற சர்ச்சைகள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில், வாட்ஸ் அப் பகிர்வு பிரச்சனை வெடித்திருக்கிறது.

இதில் பயனாளிகள் செய்யக்கூடியது என்ன எனில், வாட்ஸ் அப் தவிர உள்ள மாற்று மேசேஜிங் சேவை பற்றி தெரிந்து கொள்வது தான். ஹைக், டெலிகிராம், சிக்னல், வீசாட்,லைன் உள்ளிட்ட பல சேவைகள் இருக்கின்றன. ஒரு சில வாட்ஸ் அப் பயனாளிகள் வேறு மேசேஜிங் சேவைக்கு மாற இருப்பதாக அறிவிப்பதன் மூலம் தங்கள் அதிருப்தியை டிவிட்டர் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இதைவிட முக்கியமான விஷயம், இணைய யுகத்தில் தங்கள் தனியுரிமை பலவிதங்களில் ஊடுருவப்படுவது தொடர்பாக விழிப்புணர்வை பெற்றிருப்பது தான்.

——–

நன்றி. தமிழ் இந்துவில் எழுதியது!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *