இணையத்தில் புத்தக பிரியர்களுக்கு சுவாரஸ்யம் அளிக்ககூடிய இணையதளங்கள் அநேகம் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். புத்தகங்களை வாங்க உதவும் அமேசன், பிலிப்கார்ட் போன்ற மின்வணிக தளங்கள் தவிர, லைப்ரரிதிங், குட்ரீட்ஸ் போன்ற புத்தகம் சார்ந்த சமூக வலைப்பின்னல் தளங்கள் இருக்கின்றன. இந்த தளங்கள் மூலம் புத்தக புழுக்கள் தங்களுக்குள் நட்பு வளர்த்துக்கொள்ளலாம் என்பதோடு தாங்கள் வாசிப்பு அனுபவம் அடிப்படையில் படிக்க வேண்டிய புதிய புத்தகங்களையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.
பேஸ்புக்கை மட்டுமே அறிந்திருக்கும் இணையவாசிகள் லைப்ரரிதிங் மற்றும் குட்ரீட்ஸ் தளங்களை குறித்து வைத்துக்கொள்வது நல்லது. ஆனால் இந்த தளங்கள் எல்லாம், முதல் வகை புத்தக பிரியர்களுக்கானது. இரண்டாவது வகை புத்தக பிரியர்களுக்கு இந்த தளங்கள் உற்சாகத்தை தரும் அளவுக்கு வாசிப்பில் கைகொடுக்காது.
புத்தக பிரியர்களில் இரண்டு ரகமா என யோசிக்கலாம். புத்தக பிரியர்கள் ஒரே ரகம் தான். தேடித்தேடி புத்தகங்களை படிப்பது அவர்கள் குணம். தங்களுக்கு ஆர்வம் அளிக்கும் எந்த புத்தகத்தையும் எப்படியாவது படித்துவிடுவார்கள். எப்போதும் அடுத்து என்ன படிக்கலாம் என அலைபாய்ந்து கொண்டே இருப்பார்கள். இவர்கள் உண்மையான புத்தக புழுக்கள்.
இரண்டாவது ரகத்தினர், புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள்- ஆனால் பல்வேறு காரணங்களினால் விரும்பிய வேகத்தில் புத்தகத்தை படித்து முடிக்க முடியாமல் தவிப்பவர்கள். புத்தக வாசிப்பு மூலம் அறிவை பெருக்கி கொள்ள வேண்டும் என்ற விருப்பம் கொண்ட இவர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கியும் வைத்துக்கொள்வதுண்டு. ஆனால் அவற்றை படிப்பதற்கான நேரம் இல்லை என சொல்லிக்கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர், புத்தகங்களை படிக்க விருப்பம் தான், ஆனால் அது சாத்தியமாவதில்லை என வெளிப்படையாகவே ஒப்புக்கொள்வார்கள்.
இன்னும் சிலரோ, வாசிக்கும் ஆர்வம் இருந்தாலும், ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்களை மொழித்தடை காரணமாக படிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள். இந்த இரண்டாம் பிரிவினரின் வாசிப்பு ஆர்வத்திற்கு உதவும் வகையில் புத்தக சுருக்க சேவை இணையதளங்கள் அமைந்துள்ளன. புத்தகங்களின் சாரம்சத்தை சுருக்கமாக தருவது தான் இந்த தளங்களின் நோக்கம்.
அதாவது முழு புத்தகத்தையும் வாசிக்காமலேயே அதில் உள்ள விஷயங்களை சுருக்கமாக தெரிந்து கொள்ள இந்த தளங்களின் அறிமுகம் உதவுகிறது.
புத்தகம் தொடர்பான மதிப்புரை அல்லது விமர்சனங்கள் பிரபலமாக இருந்தாலும் இவை புத்தகத்தின் நிறைகுறைகளை அறிந்து கொள்ள உதவும் அளவுக்கு அவற்றின் சாரம்சத்தை முழுவதுமாக உணர்த்துவதில்லை. ஆனால், புத்தக சுருக்க தளங்கள், ஒரு புத்தகத்தை சாறு பிழிந்து தருவது போல அவற்றின் மையக்கருத்தை சட்டென்று உணர்ந்து கொள்ளும் வகையில் சுருக்கமாக வழங்குகின்றன. இவை வாசிக்கவும் எளிதானது. ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள் படித்து முடித்துவிடலாம். இதன் மூலம் குறிப்பிட்ட அந்த புத்தகம் சொல்ல வரும் விஷயத்தை நன்றாகவே உள்வாங்கிக்கொள்ளலாம்.
சர்வதேச அளவில் பிளின்கிஸ்ட் (https://www.blinkist.com/ ) தளம் இந்த பிரிவில் பிரபலமாக இருக்கிறது. 1800 க்கும் மேற்பட்ட புனைகதை அல்லாத புத்தகங்களை 15 நிமிட நேரத்தில் படித்து விடக்கூடிய வகையில் சுருக்கமாக இந்த தளம் வழங்குகிறது. பெரும்பாலும் தொழில்முறையாக உதவக்கூடிய புத்தகங்களாக தேர்வு செய்து அவற்றின் சுருக்கத்தை இந்த தளம் அளிக்கிறது. சுய முன்னேற்றம் சார்ந்த நூல்கள் அதிகம் இருப்பதை பார்க்கலாம்.
இந்த தளத்தின் அடிப்படை சேவை இலவசமானது. ஆனால் கட்டண வசதியும் இருக்கிறது. மின்னஞ்சல் மூலம் சுருக்கங்களை பெறலாம். ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் செயலி வடிவிலும் இந்த சேவையை அணுகலாம். புத்தகத்தின் முக்கிய அம்சங்களை விளக்கும் வகையில் சுருக்கம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு தலைப்புகளின் கீழ் புத்தக சுருக்கத்தை தேர்வு செய்து கொள்ளலாம். ஒலிப்புத்தக வடிவில் கேட்கும் வசதியும் இருக்கிறது.
ஆக்ஷனபில் புகஸ் (http://www.actionablebooks.com/en-ca/ ) தளமும் இதே ரகம் தான் என்றாலும், இது முழுக்க முழுக்க வர்த்தக வழிகாட்டுதல் வகை புத்தகங்களுக்கானது. வர்த்தக உலகின் வெற்றிக்கு வழிகாட்டக்கூடிய எண்ணற்ற புத்தகங்கள் இருக்கின்றன அல்லவா? நிறுவன சி.இ.ஓக்கள் கூட இவற்றை விழுந்து விழுந்து படிப்பதுண்டு. இத்தகைய வர்த்தக ஆலோசனை புத்தகங்களை தேர்வு செய்து அவற்றின் முக்கிய கோட்பாடுகளை சுருக்கமாக இந்த தளம் வழங்குகிறது. இந்த சுருக்கங்களை வாசித்து அவற்றின் ஆலோசனையை செயல்படுத்தியும் பார்க்கலாம் என்பது தான் இந்த தளத்தின் சிறப்பம்சம். இதை தான் தளத்தின் பெயரும் குறிக்கிறது.
வர்த்தக உலகின் பிரபலமான புத்தகங்களை இந்த தளம் முலம் அறிமுகம் செய்து கொள்ளலாம்.
கெட்நக்கட் (http://www.getnugget.co/ ) இதே ரகம் தான் என்றாலும் கொஞ்சம் வித்தியாசமானது,. மிகச்சிறந்த புத்தகங்களை சுருக்கமாக அளிக்கும் இந்த தளம் அதை காட்சிரீதியாகவும் அளிக்கிறது. எனவே இந்த எளிதாக வாசிக்கலாம் என்பதோடு மற்றவர்களுடன் எளிதாக பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம். அதற்கேற்ப சாரம்சத்தின் சுருக்கம், அதில் உள்ள மேற்கோள்கள் என சுருக்கம் அமைகிறது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் சில நிமிடங்களில் இந்த சுருக்கங்களை வாசத்துவிடலாம். பின்னர் இவற்றை தங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம். பத்தாயிரம் புத்தகங்களுக்கு மேல் சுருக்க வடிவில அணுகலாம்.
விக்கிபீடியாவின் துணை தளமான விக்கிசம்மரீஸ் மூலமும் இதே வசதியை பெறலாம்.- http://www.wikisummaries.org/wiki/Main_Page. விக்கிபீடியா போலவே இதுவும் இணைய பயனாளிகளின் பங்களிப்பால் உருவான சேவை. எனவே நீங்கள் வாசிப்பதோடு விரும்பினால் புத்தக சுருக்க சேவையிலும் பங்களிப்பு செலுத்தலாம்.
இவை எல்லாம் சர்வதேச தளங்கள் என்றால், இந்தியர்களுக்கான பிரத்யேக சேவைகளும் இல்லாமல் இல்லை. அம்ருத் தேஷ்முக் எனும் இளைஞர் உருவாக்கியுள்ள புக்லெட் (Booklet ) செயலி இதில் ஒன்று. இந்த தளம் புகழ்பெற்ற புனை கதை அல்லாத நூல்களை சுருக்கமாக படித்து புரிந்து கொள்ள வழி செய்கிறது.
தனது நண்பர்களில் பலர் வாசிப்பு ஆர்வம் கொண்டிருந்தும் கூட, புத்தகங்களை படிக்க முடியாமல் தவிப்பதை பார்த்து அவர்களைப்போன்றவர்களுக்கு உதவும் வகையில் இந்த சேவையை துவக்கியதாக தேஷ்முக் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஒரு முறை திரையரங்கிற்கு சென்றிருந்த போது நண்பர்களிடம் தான் வாசித்து ரசித்த புத்தகம் பற்றி விவரித்துக்கொண்டிருந்த போது, அவர்களில் பலரும் ஈர்க்கப்பட்டதை அறிந்த போது, இப்படி விவரிக்கும் ஆற்றலை மற்றவர்கள் புத்தக வாசிப்புக்கு தூண்டுகோளாக இருக்கும் வகையில் பயன்படுத்த தீர்மானித்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்தியர்களுக்கு ஆர்வம் அளிக்க கூடிய புத்தகங்களை புக்லெட் சேவை மூலம் அறிமுகம் செய்து கொள்ளலாம். இந்த தளத்தில் ஒலிபுத்தக வடிவில் கேட்கும் வசதியும் இருக்கிறது. வாரம் ஒரு புத்தகம் எனும் விதத்தில் எளிமையாக படிக்க கூடிய ஆங்கிலத்தில் புத்தகங்களை இவர் அறிமுகம் செய்து வருகிறார்.
இதே போலவே புக்பிஹுக் (http://bookbhook.com/ ) தளமும் புத்தக சுருக்க சேவையை வழங்கு வருகிறது. தேர்ந்தெடுத்த புத்தகங்களின் சுருக்கமான அறிமுகங்களை இதில் காணலாம். இந்தியா சார்ந்த புத்தகங்கள் அதிகம் உள்ளன. கவுதம் குப்தா என்பவர் இந்த சேவையை வழங்கு வருகிறார். வர்த்தக நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த கவுதம், வாசிப்பில் எப்போதுமே தனக்கு ஆர்வம் இருந்தது என்கிறார். ஆனால் தனது குழுவில் இருந்த இளைஞர்கள் பலருக்கு வாசிப்பு பழ்ககம் இல்லாமல் இருப்பதை கவனித்தவர், அவர்களைப்போல புத்தகங்களை வாசிக்கும் பொறுமை இல்லாதவர்களுக்காக புத்தகங்களை சுருக்கி த்தரும் வசதியை அளித்து வருகிறார்.
இந்த தளங்கள் வாசிப்பு சுமை கொண்டவர்களுக்கு நிச்சயம் உதவும். அதே நேரத்தில் புத்தக புழுக்களும் கூட, அடுத்து வாசிக்க கூடிய புத்தகங்களுக்கான பரிந்துரையாக இவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இக்கால தலைமுறை மத்தியில் வாசிப்பு ஆர்வத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த தளங்கள் செயல்பட்டு வருகின்றன.
வணிகமணி இதழில் இனி எல்லாம் இணையமே தொடரில் எழுதியது.