ஐபோனே உன் விலை என்ன?

yஐபோன் விலை உயர்ந்தது என்பது அதை வாங்க விரும்புகிறவர்களுக்கும் தெரியும். அந்த காரணத்திற்காகவே அதை வாங்க நினைக்காதவர்களுக்கும் தெரியும். ஆகவே, இந்த கட்டுரையின் நோக்கம் ஐபோனையோ அல்லது அதன் விலையை விமர்சிப்பது அல்ல. ஆனால் ஐபோனின் உண்மையான விலை என்னத்தெரியுமா? எனும் கேள்வி தொடர்பாக சிந்திக்க வைப்பது தான் இதன் உண்மையான நோக்கம்.

இந்த கேள்வியும் கூட நான் எழுப்பவில்லை. பிலிப் ஸ்கிமிட் எனும் மென்பொருள் வல்லுனர் எழுப்பியிருக்கிறார். இந்த கேள்வியை அவர் எழுப்பியிருக்கும் விதம் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் அவரது கேள்வி சிந்திக்கவும் வைக்கிறது.

ஐபோனின் ஒவ்வொரு புதிய மாதிரி அறிமுகமாகும் போதும் அதைச்சுற்றி எழும் எதிர்பார்ப்பும், பரபரப்பும் ஆப்பிள் சாதனங்களுக்கே உரியது. புதிய ஐபோன் விற்பனைக்கு வரும் முதல் நாளில் ஆப்பிள் அபிமானிகள் அதை வாங்க வரிசைகட்டி காத்திருப்பதும் வழக்கமானது தான். தீவிர ஐபோன் அபிமானிகள் புதிய போனை வாங்குவதற்காகவே ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பறந்து சென்று வரிசையில் நின்ற விநோத கதைகள் எல்லாம் இருக்கின்றன.

ஐபோன் மீதான இந்த அபிமானத்திற்கான காரணங்களை தனியே ஆராயலாம். இப்போதைக்கு அதன் விலை அம்சத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம். கட்டுரை துவக்கத்திலேயே குறிப்பிட்டபடி அது அதிகமானது என்பது எல்லோருக்கும் தெரியும். அதை மீறி தான் வாங்க விரும்புகின்றனர். நம் நாட்டைப்பொருத்தவரை ஐபோன் என்பது அந்தஸ்த்தின் அடையாளமாக கருதப்படுவதும் இதற்கான காரணமாக அமைகிறது.

எல்லாம் சரி, ஐபோனின் உண்மையான விலை என்ன தெரியுமா? இந்த கேள்வியை தான், மென்பொருள் வல்லுனர் பிலிப் தனது இணைய பக்கத்தின் மூலம் எழுப்பி அதற்கான பதிலை அவரவரே தெரிந்து கொள்ளவும் வைத்திருக்கிறார். கொஞ்சம் தகவல், கொஞ்சம் புள்ளிவிவரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பின்னணியில் கொஞ்சம் புரோகிராமிங் கலந்து இதை கச்சிதமாக செய்திருக்கிறார்.

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஐபோன் எக்ஸ் மாதிரியின் அமெரிக்க விலை 999 டாலர் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதை ஒவ்வொருவரும் தங்கள் நாட்டு பணத்தின் மதிப்பிற்கு மாற்றிப்பார்த்தால் அதன் விலையை உள்ளூர் மதிப்பில் தெரிந்து கொள்ளலாம். அதன் மூலம் அது தங்களுக்கு கட்டுப்படியாகுமா? அல்லது எட்டாக்கனியா என்றும் முடிவு செய்யலாம். இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால், பிலிப் இந்த எண்ணிக்கையை வேறு ஒரு கோணத்தில் பார்க்க வைத்திருக்கிறார்.

அவர் உருவாக்கியுள்ள இணைய பக்கத்தில் நுழைந்ததுமே, ஐபோனின் உண்மையான விலை எனும் வாசகம் கொட்டை எழுத்தில் கண்ணில் படுகிறது. அதன் கீழ், பயனாளிகள் தாங்கள் வசிக்கும் நாட்டின் பெயரை டைப் செய்தால், அவர்கள் ஐபோனை வாங்க எத்தனை நாட்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும் எனும் தகவல் காண்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாட்டின் குறைந்த பட்ச ஊதியத்தின் அடிப்படையில் இந்த தகவல் முன்வைக்கப்படுகிறது. அதாவது, ஐபோன் விலையை டாலர் அல்லது வேறு பணத்தில் எடை போடாமல், அந்த அந்த நாட்டின் குறைந்த பட்ச ஊதியத்தின் அடிப்படையில், அதை வாங்க எத்தனை நாட்கள் உழைக்க வேண்டியிருக்கும் எனும் தகவல் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த கணக்கு படி பார்த்தால், இந்தியர்கள் புதிய ஐபோனை வாங்க வேண்டும் எனில் 416 நாட்கள் உழைக்க வேண்டியிருக்கும். அதாவது 416 நாட்கள் உழைத்தால் கிடைக்கும் தொகையை அதற்கான விலையாக கொடுக்க வேண்டும். இந்தியர்களின் குறைந்த பட்ச ஊதியம் படி பார்த்தால், புதிய ஐபோனை வாங்க ஒருவர் ஒரு ஆண்டுக்கு மேல் உழைக்க வேண்டியிருக்கும். இப்படி ஒவ்வொரு நாட்டுக்கும் ஐபோனுக்கான விலை கணக்கிட்டு சொல்லப்படுகிறது. இது தான் ஐபோனின் உண்மையான விலை என இந்த இணைய பக்கம் மூலம் புரிய வைக்க பிலிப் முயற்சிக்கிறார்.

இது கொஞ்சம் புதுமையான முயற்சி தான் இல்லையா? ஆனால், பிலிப்பின் நோக்கம் ஐபோனின் உண்மையான விலையை உழைக்கும் மணித்துளிகளாக காட்சிப்படுத்தி பார்க்க வைப்பது மட்டும் அல்ல, அப்படியே உலகில் நிலவும் ஏற்றத்தாழுவு தொடர்பாகவும் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது.

ஆம், இந்த இணைய பக்கத்தில் ஒவ்வொருவரும் தங்கள் நாட்டிற்கான ஐபோன் விலையை தெரிந்து கொள்வதோடு, உலகின் மற்ற நாடுகளில் அதன் விலை எப்படி இருக்கிறது என்றும் பார்க்கலாம். உதாரணத்த்திற்கு நெதர்லாந்து நாட்டில் 12 நாட்கள் வேலை செய்தால் ஐபோன் வாங்கிவிடலாம். ஸ்பெயினில் 23 நாட்கள் வேலை செய்தால் வாங்கிவிடலாம். ஆஸ்திரேலியாவில் 9 நாட்கள் வேலை செய்தால் வாங்கிவிடலாம். ஆனால் ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் 12487 நாட்கள் வேலை செய்தால் தான் ஐபோன் வாங்க முடியும். அதாவது கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் வேலை செய்தாக வேண்டும். இந்த ஏற்றத்தாழ்வு மலைக்க வைக்கிறது அல்லவா?

உண்மையில், உலகில் நிகழும் இந்த ஏற்றத்தாழ்வு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தனது நோக்கம் என்கிறார் பிலிப். ஆக, ஐபோன் விலையை ஒரு புள்ளியாக வைத்துக்கொண்டு, உலகில் நிகழும் ஏற்றத்தாழ்வு பற்றிய சிந்தனையை அவர் உண்டாக்கி விடுகிறார். இருக்கும் புள்ளிவிவரங்களை கொண்டு இதை அவர் எளிமையான இணையதளம் செய்திருக்கும் விதமும் பாராட்டுக்குறியது.

நல்ல இணையதளம் என்பது இப்படி தான் இருக்க வேண்டும் என இந்த தளம் சொல்லவும் வைக்கிறது.

ஐபோன் விலை அறியும் இணையதளம்: http://felipeschmitt.com/real-cost-of-an-iphone/

நன்றி; யுவர்ஸ்டோரி தமிழ் பதிப்பில் எழுதியது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *