சமூக ஊடக உலகில், பேஸ்புக்கிற்கு முன்னர் மைஸ்பேஸ் இருந்தது மட்டும் அல்ல, அந்த சேவை முன்னணியில் இருந்த காலத்தில், சமூக வலைப்பின்னல் தளங்களுக்கான அளவுகோளாகவும், அடைமொழியாகவும் விளங்கியது. அதாவது, புதிதாக அறிமுகமான சமூக வலைப்பின்னல் சேவையை கவனத்திற்கு உரியது எனில், குறிப்பிட்ட துறைக்கான மைஸ்பேஸ் என வர்ணிக்கப்படும் வழக்கம் இருந்தது.
மைஸ்பேசின் செல்வாக்கும், தாக்கமும் இதன் மூலம் அறியலாம்.
இந்த அறிமுகத்தோடு, கிறிஸ்த்துவ மைஸ்பேஸ் என வர்ணிக்கப்பட்ட பழைய சமூக வலைப்பின்னல் சேவை ஒன்றை திரும்பி பார்க்கலாம். ஷவுட்லைப் (shoutlife) எனும் இந்த சமூக வலைப்பின்னல் தளம், 2006 ம் ஆண்டு இறுதியில் துவக்கப்பட்டு அடுத்த ஒராண்டு காலத்திற்கு பின் மூடப்பட்டு விட்டது.
இடைப்பட்ட காலத்தில் ஷவுட்லைப் சேவை சமூக ஊடக உலகில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், சமூக ஊடக வரலாற்றில் இரண்டு விதங்களில் இந்த சேவை முக்கியமானதாக அமைகிறது. ஒன்று, சமூக வலைப்பின்னல் சேவைகளின் பரப்பு எத்தனை பரந்து விரிந்தது என்பதை உணர்த்தும் எண்ணற்ற உதாரணங்களில் ஒன்றாக இந்த தளம் விளங்குவது.
பேஸ்புக் அலை வீசத்துவங்கி, சமூக வலைப்பின்னல் உலகை அது சுருட்டி விழுங்கத்துவங்குவதற்கு முன் ( விக்கிபீடியா கட்டுரையில் இதற்கு சான்று தேவை என குறிப்பிடப்படுவது போல இதற்கு விரிவான விளக்கம் தேவை), எல்லாவற்றுக்கும் ஒரு சமூக வலைப்பின்னல் சேவை இருந்தது. அதாவது, குறிப்பிட்ட ஆர்வம் அல்லது நோக்கத்திற்கு என்றெல்லாம் கூட சமூக வலைப்பின்னல் சேவை துவக்குவது இயல்பாக இருந்தது. அந்த வகையில் தான் ஷவுட்லைப் சேவையும் துவங்கப்பட்டது.
ஷவுட்லைப் சேவையை துவக்கியவர்களில் ஒருவரான பால் மெக்லெலான் (Paul McLellan), இந்த அனுபவம் பற்றி விரிவான பதிவு எழுதியிருக்கிறார். பால் நீ ஒரு சமூக வலைப்பின்னல் தளத்தை துவக்க வேண்டும் என தன்னுடன் இணைந்து பணியாற்றும் சகோதரர் ஸ்டீவ் ஒரு நாள் பேச்சு வாக்கில் கூறியதாக பால் இந்த பதிவை துவக்கியுள்ளார்.
ஆக, விளையாட்டாக சமூக வலைப்பின்னல் தளம் பற்றி யோசிக்கத்துவங்கியுள்ளனர். ஆனால், இந்த யோசனையை கூறிய ஸ்டீவ் சமூக ஊடக உலகம் பற்றி அறியாதவர் அல்ல. சமூக ஊடகத்தின் முன்னோடி சேவையான தகவல் பலகை அமைப்புகளில் அவர் ஆர்வமும், அனுபவமும் கொண்டிருந்தார்.
பின்னர் இருவரும் சேர்ந்து இந்த யோசனைக்கு செயல்வடிவம் கொடுத்தனர். முதலில், பொருத்தமான பெயரை தேடியுள்ளனர். தங்களது சமூக வலைப்பின்னல் சேவை குடும்பங்களுக்கு நட்பானதாக இருக்க வேண்டும் எனும் அடிப்படையில், பல்வேறு பெயர்களை பரிசீலித்து ஷவுட்லைப்பை தேர்வு செய்தனர்.
ஏற்கனவே உண்டாக்கியிருந்த ஒரு பழைய இணையதளத்தின் வடிவமைப்பை தூசித்தட்டி புதிய தளமாக்கி அதில் சமூக வலைப்பின்னல் அம்சங்களை சேர்த்தனர். உறுப்பினர்கள் பதிவு செய்வது, அறிமுக பக்கத்தை உருவாக்கி கொள்வது, எண்ணங்களை வலைப்பதிவு வடிவில் பகிர்வது, புகைப்படங்களை பதிவேற்றுவது, குழுக்களை உருவாக்குவது, இமெயில் அனுப்புவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
வீடியோ உள்ளிட்ட மல்டி மீடியா அம்சத்தையும், நிகழ்நேர அரட்டை வசதியையும் கொண்டிருந்தது.
பயன்படுத்த எளிதானது என்பதோடு, மிகவும் பாதுகாப்பானது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. குடும்பங்களுக்கு ஏற்றது என்பதே இந்த சேவையின் முக்கிய தன்மையாக இருந்தது. விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் இந்த தன்மையே தளத்தின் நோக்கமாக முன்வைக்கப்பட்டதாலும், கிறிஸ்துவ ஊடகங்களில் முதலில் அறிமுகம் செய்யப்பட்டதாலும், முன்னணி வலைப்பதிவான ’மாஷபில்’ இந்த தளத்தை கிறிஸ்துவ மைஸ்பேஸ்- “ShoutLife – Excellent Christian MySpace”. – என வர்ணித்தது.
ஒரளவு வரவேற்பை பெற்ற இந்த தளம் தொடர முடியாமல் மூடப்பட்டது.
அந்த கால சமூக வலைப்பின்னல் தளங்கள் எப்படி இருந்தன, அவற்றின் பொது தன்மை என்ன?, மாறுபட்ட அம்சங்கள் என்ன போன்றவற்றை அறிய இந்த தளம் உதவுகிறது. அந்த வகையில் சமூக ஊடக வரலாற்றில் முக்கியமான தளம் தான்.
குடும்பங்களுக்கான வலைப்பின்னல் எனும் கருத்தாக்கத்தை வலியுறுத்திய ஒரு தளத்திற்கு தேவை இருந்தது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
இரண்டாவது முக்கிய விஷயம், இந்த தளத்தில் நியூஸ்ஃபீட் (News Feed ) எனும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருப்பது தான். சமூக ஊடக உலகில் நியூஸ்ஃபீட் என்றதும் பேஸ்புக் தான் நினைவுக்கு வரும். பேஸ்புக்கை பயனுள்ளதாகவும், ஈர்ப்புடையதாகவும் மாற்றிய வசதிகளில் நியூஸ்ஃபீட் ஒன்று என்பதோடு, பேஸ்புக் கண்ணுக்குத்தெரியாத மாயவலையாக விரிவடைய முக்கிய காரணம் என்பதும் கவனிக்கத்தக்கது.
நியூஸ்ஃபீட் அம்சத்தின் முழு வீச்சையும் பேஸ்புக் பயன்படுத்திக்கொண்டாலும், இதை முதலில் அறிமுகம் செய்தது பேஸ்புக் அல்ல என கருதப்படுகிறது. ஏற்கனவே ஒரு சில சமூக வலைப்பின்னல் சேவைகளில் இந்த அம்சம் அறிமுகம் ஆகியிருந்தது. பேஸ்புக்கை இதை வளர்த்தெடுத்து வியாபித்தது. ( ஷவுட்லைப் அறிமுகமான ஆண்டில் தான், பேஸ்புக் கல்லூரி மாணவர்களுக்கான பிரத்யேக சேவை என்பதில் இருந்து பொதுமக்களுக்கு அறிமுகமானது. அதற்கு சில ஆண்டுகளுக்கு பின் தான் நியூஸ்ஃபீட் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டு வந்தது.)
இந்த பின்னணியில், நியூஸ்ஃபீட் அம்சத்தை பேஸ்புக் பிரபலமாவதற்கு முன்னர் நாங்கள் அறிமுகம் செய்தோம் என ஷவுட்லைப் நிறுவனர் குறிப்பிட்டிருப்பது முக்கியமானது. உறுப்பினர் உள்ளே நுழைந்ததும், நண்பர்களின் புதிய நடவடிக்கைகள், கருத்துகள், பதிவுகள், படங்கள் எல்லாம் ஒரே இடத்தில் தோன்றும் வசதி என இந்த அம்சத்தை சரியாகவும் அவர் விவரித்திருக்கிறார்.
பேஸ்புக்கின் வளர்ச்சிக்கும், ஆதிக்கத்திற்கும் வழி வகுத்த நியூஸ்ஃபீட் அம்சம், ஷவுட்லைப்பில் இருந்தது என்பதை அறியும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை. அதோடு சமூக ஊடக வரலாற்றில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களையும் இது உணர்த்துகிறது. பேஸ்புக்மயமாகிவிட்ட சமூக ஊடக பரப்பில் மறக்கப்பட்ட விஷயங்கள்.
பி.கு: கிறிஸ்துவ மைஸ்பேஸாக விளங்கிய வேறு சில சேவைகளும் இருந்தன. உதாரணம்: JCFaith, christianspaceonline.com, Xianz.com.