இணையம் ; நேற்று, இன்று, நாளை

first_website_3532199bபத்தாயிரம் நாட்கள் என்பது எண்ணிக்கையில் ஒரு மைல்கல் தான். இணையத்தை பொருத்தவரை இந்த மைல்கல் பெரும்பாய்ச்சல் நிகழ்ந்த காலமாகவும் அமைகிறது. ஆம், இணையத்தில் நாம் நன்கறிந்த அங்கமான வெப் என பிரபலமாக குறிப்பிடப்படும் வலை உருவாக்கப்பட்டு பத்தாயிரம் நாட்கள் ஆன மைல்கல் நிகழ்வை அன்மையில் (ஜூலை 28) இணையம் கொண்டாடியது. அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் இந்த நிகழ்வு அமைந்தாலும், இணையம் எந்த அளவு விஸ்வரூபம் எடுத்து உலகையே மாற்றி இருக்கிறது எனும் பிரமிப்பை ஏற்படுத்தாமல் இல்லை.

1989 ம் ஆண்டு மார்ச் 12 ம் தேதி தான் வலைக்கான விரிவான திட்டத்தை டிம் பெர்னர்ஸ் லீ முன்வைத்தார். இதன் படி தான் வேர்ல்டு வைடு வெப் எனப்படும் வைய விரிவு வலை உதயமானது. அதன் பிறகு இணையத்தில் ஏற்பட்ட வளர்ச்சியையும், மாற்றங்களையும் நினைத்துப்பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். ஸ்மார்ட்போனில் இணையத்தை அணுகுவது படு எளிதாகி இருக்கும் இந்த காலத்தில் இருந்து இணையத்தின் ஆரம்ப காலத்தை திரும்பி பார்த்தால் நம்ப முடியாமல் இருக்கும்.
நேற்றைய இணையத்தில் இருந்து இன்றைய இணையம் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இணைய வரலாற்றை சுருக்கமாகவேனும் திரும்பி பார்க்க வேண்டும்.

அர்பாநெட்:
பரவலாக அறியப்பட்டது போல இணையத்திற்கான மூல வித்து 1969 ம் ஆண்டு அமெரிக்காவில் அர்பாநெட் எனும் வலைப்பின்னல் வடிவில் விதைக்கப்பட்டது. அர்பாநெட் அடிப்படையில் ஆய்வு மற்றும் ராணுவ அமைப்பை மையமாக கொண்டிருந்தது. பூர்வாங்க வேலைகள் நடைபெற்று இணையத்தின் அடிப்படை அம்சங்கள் உண்டாக்கப்பட்டு விட்டாலும், மக்கள் பயன்பாட்டிற்கு இணையம் தயாராக இன்னும் பல ஆண்டுகள் இருந்தன. இவ்வளவு ஏன், அந்த கால கட்டத்தில் பர்சனல் கம்ப்யூட்டர்கள் வெகுஜன புழக்கத்திற்கு வராமல் இருந்தன. இணையம் என்பது ஆய்வும், ஆய்வாளர்களும் சார்ந்த விஷயமாக மட்டும் இருந்தது. அரசு அமைப்புகள், பெரிய பல்கலைக்கழங்கள் மட்டுமே இணையத்தை பயன்படுத்த முடிந்தது. அந்த கால கட்டத்தில் இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று கூட எத்தனை பேர் நினைக்கத்துணிந்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த பிரிட்டன் விஞ்ஞானி டிம் பெர்னர்ஸ் லீ தான் இதை மாற்றிக்காட்டினார். அவரது மனதில் சின்னதாக ஒரு பெருங்கனவு உருவானது. 1989 ம் ஆண்டு அவர் அந்த கனவுக்கான திட்டத்தை விரிவான அறிக்கையாக சமர்பித்தார். இணையத்தில் உள்ள பக்கங்கள் மற்றும் ஆவணங்களை யூ.ஆர்.எல் எனும் முகவரி மூலம் கண்டறிவது மற்றும் இணைய பக்கங்களை பரஸ்பரம் ஹைபர் லிங்குகளால் இணைப்பது ஆகிய இரண்டும் தான் அந்த திட்டத்தின் பிரதான அம்சங்களாக இருந்தன. இந்த இணைப்பிற்கான எச்.டி.எம்.எல் நுட்பத்தையும் அவர் முன் வைத்திருந்தார்.

இந்த இரண்டும் தான் நவீன இணையத்தின் அடிப்படையாக அமைந்தன. இன்று எளிதாக இணையத்தில் உள்ள தகவல்களை அடையாளம் காண்பதும், இணைப்புகளை கிளிக் செய்வதன் மூலம் தகவல் நெடுஞ்சாலையில் நினைத்த இடத்திற்கு தாவிச்செல்வதும் இவை மூலமே சாத்தியமாகின்றன. லீ முன்வைத்த இந்த திட்டமே வைய விரிவு வலையாக மலர்ந்தது. இந்த இடத்தில் கொஞ்சம் நிதானித்து இணையத்திற்கும் வலைக்குமான நுட்பமான வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். இணையம், வலை இரண்டும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டாலும் இரண்டும் ஒன்றல்ல. இணையம் என்பது வலைப்பின்னல்களின் வலைப்பின்னல். வலை அதன் ஒரு அங்கம். வலை இல்லாமல் இணையம் உண்டு. ஆனால் இணையம் இல்லாமல் வலை கிடையாது. வலைக்கு முன்னாள் இணையம் இருந்தது. ஆனால் எளிதில் பயன்படுத்தப்பட முடியாமல் இருந்தது. இணையம் என்பது கம்ப்யூட்டர்கள் இணைக்கப்பட்ட வலைப்பின்னலாக இருந்தாலும், ஒரு கம்ப்யூட்டரில் இருந்த தகவல்களை இன்னொரு கம்ப்யூட்டரில் அணுகுவது எளிதாக இருக்கவில்லை. கம்ப்யூட்டர்கள் மாறுபட்டிருந்ததோடு அவற்றில் செயல்பட்ட இயங்குதளங்களும் வேறுவேறாக இருந்தன. பல நேரங்களில் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்குமான புரோகிமிங்கையும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
next_3532448b
வலை எனும் அற்புதம்
இந்த சிக்கலான அமைப்பு அலுப்பூட்டுவதாக டிம் பெர்னர்ஸ் லீ உணர்ந்தார். தகவல்களை அணுக இதைவிட வேறு சிறந்த வழியில்லையா? என யோசித்தார். எல்லோரும் எளிதாக வாசிக்க கூடிய ஒரு தகவல் முறையை உருவாக்கும் வகையில், ஒவ்வொரு தகவல் அமைப்பையும் மாற்றி அமைத்தால் சரியாக இருக்கும் எனும் எண்ணம் அவருக்கு உண்டானது. இது தான் வைய விரிவு வலையாக விரிந்தது.
1990 ம் ஆண்டு வைய விரிவு வலை திட்டத்திற்காக வலைதளம் அமைக்கப்பட்டது. அதுவே உலகின் முதல் வலைதளமாக அமைந்தது. (http://info.cern.ch/hypertext/WWW/TheProject.html ) வலையின் அடிப்படை அம்சங்களை விளக்கும் வகையில் இந்த தளம் அமைந்திருந்தது.

உலகின் முதல் வெப் சர்வர் மற்றும் வலை தளங்களை பார்வையிடுவதற்கான முதல் பிரவுசரையும் லீ உருவாக்கினார். 1993 ல், வலையின் மென்பொருள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது. வலைதளங்களை உருவாக்குவதற்கான வழி செய்யப்பட்டது. வலை தொடர்பான அனைத்தையும் திறவு மூல கொள்கை அடிப்படையில் வெளியிடப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் வலை வளர்ச்சிப்பெற்று இணையமாக மக்கள் மத்தியில் அறிமுகமானது. ஆய்வு அமைப்புகள் மட்டும் அல்லாமல் கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் வலைதளங்களை உருவாக்கத்துவங்கின.

ஆரம்ப கால இணையதளங்கள் பெரும்பாலும் ஒற்றை பக்கங்கள் கொண்டவையாக, கருப்பு வெள்ளையில், வரி வடிவத்திலேயே அமைந்திருந்தன. புகைப்படங்கள் கூட அரிதான இருந்தன. ஆனால் ஜாவா ஸ்கிரிப்ட் மற்றும் பிளாஷ் மென்பொருளின் அறிமுகம் மேம்பட்ட இணையதளங்களை வடிவமைக்க உதவின.

பழைய முன்னோடிகள்
இதன் பிறகு இணையத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை புரிந்து கொள்ள நாம் மறந்து விட்ட பல பெயர்களை நினைவில் கொண்டு வர வேண்டும். முதல் நெட்ஸ்கேப் பிரவுசர் அறிமுகமானது. இது தான் இணையதளங்களை பார்ப்பதை எளிதாக்கி, வெகுஜனமயமாக்கியது. இணைய சேவையை வழங்கும் ஏ.ஒ.எல் போன்ற நிறுவனங்கள் பிரபலமாயின. திரைப்படங்களுக்கும், நட்சத்திரங்களும் தனி இணையதளங்கள் உருவாகத்துவங்கின. செய்தி நிறுவனங்கள் சார்பிலும் தளங்கள் அமைக்கப்பட்டன. எல்லா வகையான தகவல்களையும் இணையத்தில் பெற முடியும் எனும் வியப்பு பொதுமக்களிடம் உண்டாது. இணையத்தில் முளைத்துக்கொண்டிருந்த தளங்களை அடையாளம் காண உதவும் வலைவாசலாக யாஹு உருவானது. இணைய கடலில் தகவல்களை எளிதாக தேட அல்டாவிஸ்டா, லைகோஸ், இன்போசீக் போன்ற தேடியந்திரங்கள் அறிமுகமாயின. தனிநபர்கள் இணையபக்கங்களை அமைத்துக்கொள்ளும் வசதியை ஜியோசிட்டிஸ் வழங்கியது. இனி எளிதாக இமெயில் அனுப்பலாம் என ஹாட்மெயில் அசத்தியது. இணையம் மூலம் புத்தகங்களை வாங்கலாம் என அமேசான்.காம் வியக்க வைத்தது. இபே.காம் இணையம் மூலம் ஏலத்தை சாத்தியமாக்கியது. புத்தாயிரமாண்டை நெருக்கும் போது இணையம் முழுவீச்சில் தயாராகி இருந்தது. அறிமுகம் இல்லாதவர்களுடன் அரட்டை அடிக்கும் வசதி, ஒத்த கருத்துள்ளவர்கள் குழுக்களை அமைத்துக்கொள்ளும் சாத்தியம் என இணையம் விரிவடைந்து கொண்டே இருந்தது. புதிது புதிதாக இணைய நிறுவனங்கள் அறிமுகமாக டாட்காம் அலை வீசத்துவங்கியது. இந்த பரபரப்புக்கு நடுவே சத்தமில்லாமல் புதிய தேடியந்திரமான கூகுள் அறிமுகமானது.
இதுவே விஸ்வரூப வளர்ச்சி தான்! ஆனால், இப்போது நமக்கு அறிமுகமாகி இருக்கும் இணைய வசதிகளுடன் ஒப்பிட்டுப்பார்த்தால், அந்த கால இணையம் வியப்பையே ஏற்படுத்தும்.

அந்த கால இணையம்
அப்போது டயல் அப் இணைப்பு மூலம் தான் இணையத்தை அணுக முடியும். தொலைபேசியில் இணையத்தை தொடர்பு கொள்ள முயன்றதும் பழைய தொலைபேசியில் மட்டுமே கேடக்கக்கூடிய விநோத ஒலி கேட்கும். இணைப்பு கிடைக்குமா? கிடைக்காத என பரபரப்பான நிமிடங்களுக்கு பிறகு தொடர்பு ஏற்படுத்தப்படும். அதன் பிறகு, இணைய முகவரியை டைப் செய்து விட்டு காத்திருந்தால் அதன் பக்கங்கள் தோன்றுவதற்கு நிமிடக்கணக்கில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். இணையத்தை பாய்ந்தோடச்செய்த அகண்ட அலைவரிசை எனும் அற்புதம் இன்னமும் பரவலாகாத நிலையில், வீடியோக்களை பார்ப்பது, பெரிய கோப்புகளை டவுண்லோடு செய்வது எல்லாம் பொறுமையை சோதிக்க கூடியதாக இருந்தன. இணைய வசதி தேவை என்றால் அதற்கான உருவாக்கப்பட்ட நெட் கபே என அழைக்கப்பட இணைய மையங்களை தேடி செல்ல வேண்டியிருந்தது.
இன்று கையில் ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு உள்ளங்கைக்குள் இணையத்தை அணுகும் வசதியுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் அந்த கால இணையம் நம்ப முடியாமல் தான் இருக்கும்.

இந்த பாய்ச்சலுக்கு பல தொழில்நுட்பங்கள் உதவியிருக்கின்றன. முதல் மாயம் சிப்பால் நிகழ்ந்தது. வருங்காலத்தில் மைக்ரோசிப்கள் அளவில் சிறிதாகி கொண்டே போகும் நிலையில் அவற்றின் ஆற்றல் இரு மடங்காக அதிகரித்துக்கொண்டே இருக்கும் எனும் தொழில்நுட்ப முன்னோடி கார்டன் மூர் கணிப்புக்கு ஏற்ப மைக்ரோசிப்கள் விஸ்வரூபம் எடுத்ததால், கம்ப்யூட்டர்களின் செயல்திறனும் அதிகரித்து, ஸ்மார்ட்போன்களும் சாத்தியமாயின. இந்த இடத்தில் வேப் தொழில்நுட்பத்தை நினைவு படுத்திக்கொள்வது சுவாரஸ்யமாக இருக்கும். வயர்லஸ் அப்ளிகேஷன் புரோடோகால் என்பதன் சுருக்கமே வேப் என கூறப்பட்டது. இந்த நுட்பம், வயர்லெஸ் உதவியோரு செல்போன்களில் இணையத்தை அணுகுவதை சாத்தியமாக்கியது. செல்போனில் இணைய வசதி என்பது பெரும் மாயமாக தோன்றினாலும், அதன் சின்னத்திரையில் இணையதளங்களை பார்ப்பது எப்படி சாத்தியம் எனும் கேள்வி யோசிக்க வைத்தது. அது மட்டும் அல்ல,கையடக்க கம்ப்யூட்டர் என்று வர்ணிக்கப்பட்ட பாம்டாப் போன்ற சாதனங்களில் கூட இணைய வசதி சாத்தியமாகவில்லை. இப்போதோ ஆண்ட்ராய்டும், ஐபோனும் கையில் இருந்தால் இணையம் நாம் செல்லுமிடம் எல்லாம் உடன் வருகிறது. பென் டிரைவை கழுத்தில் மாட்டிக்கொண்டு, தேவையான இடத்தில் மானிட்டரில் பொருத்தினால் கம்ப்யூட்டரும், இணையமும் தயாராகி நிற்கிறது.

தொழில்நுட்பம் புதிது!
இதனிடையே இணையத்தில் இன்னும் பல அற்புதங்கள் அரங்கேறி இருக்கின்றன. யூடியூப்பை வீடியோ பகிர்வை சாத்தியமாக்கியது. நெட்பிளிக்ஸ் ஸ்டீரீமிங் மூலம் திரைப்படங்களை கட்டணம் செலுத்தி பார்க்கும் வசதியை கொண்டு வந்தது. ஸ்மைக் இணையம் மூலமே தொலைபேசியில் பேசலாமே என அசர வைத்தது. அமேசான்.காம் பூமியில் உள்ள எல்லாவற்றையும் விற்பனை செய்யும் மின் அங்காடியாகி இருக்கிறது. எதை கேட்டாலும் தேடி த்தரும் அலாவூதின் பூதமான கூகுள் வளர்ந்திருக்கிறது. வலைப்பதிவுகளும், தற்பதிப்பு வசதியும், வெளியீட்டையும், கருத்து பகிர்வையும் ஜனநாயகமயமாக்கி இருக்கிறது. இணையம் என்பது ஒரு வழி பாதை அல்ல, பயனாளிகளும் பங்கேற்கும் வசதியை அளிக்கும் வெளி என்பதை உணர்த்தும் வகையில் இரண்டாம் அலை இணையதளங்கள் உருவாயின. பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் சாமானியர்களின் புதிய குரலாக உருவெடுத்துள்ளன. கருத்துக்களை வெளியிடும் வசதி, அரபு வசந்தம் போன்ற மக்கள் புரட்சிக்கு வித்திட்டு ஆட்சி மாற்றத்தை கூட கொண்டு வந்துள்ளன. உரிமைக்காக குரல் கொடுப்பதையும், அடக்குமுறைக்கு எதிராக போராடவும் இணையம் கைகொடுக்கிறது. அதற்கான ஜனநாயக தொழில்நுட்ப ஆயுதங்களை உருவாக்கி கொடுத்திருக்கிறது. கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது போல, இணைய யுகத்தில் ஹாஷ்டேகுகளை உருவாக்கி சமூக ஊடகங்களில் ஆதரவு திரட்ட முடிகிறது. பேரிடர் காலங்களிலும் நேசக்கரம் நீட்டவும் சமூக ஊடகங்கள் கைகொடுக்கின்றன. கூட்டத்தின் மூலம் நிதி திரட்டும் கிரவுட் பண்டிங் போன்ற கருத்தாக்கங்களையும் இணையம் உருவாக்கி கொடுத்திருக்கிறது.

இனணைய மறுபக்கம்
இன்னொரு பக்கத்தில் மனித குல வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தனியுரிமை மீதான ஊடுருவல் அதிகரித்துள்ளது. கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் இணையவாசிகள் பற்றிய தகவல்களை திரட்டி, அவர்களின் ரசனை மற்றும் விருப்பங்களை வரையறை செய்து விளம்பரங்களையும், செய்திகளையும் முன்வைக்கின்றன. இணையத்தில் விளம்பரங்கள் பின் தொடரும் விதம் புதிய வகை திணிப்பாக மிரட்டிக்கொண்டிருக்கிறது. அரசு அமைப்புகளும் இணையவாசிகள் பற்றிய தகவல்களை சேகரித்து கண்காணிப்பு சமூகத்தை உருவாக்கி கொண்டிருக்கின்றன. தாக்காளர்களின் கைவரிசை, மால்வேர்களின் தாக்குதல் போன்ற புது யுக அச்சுறுத்தல்களும் அதிகரித்துள்ளன.

புத்தாயிரமாண்டின் துவக்கத்தில் கூட இவை எல்லாம் சாத்தியமாகும் என பெரும்பாலானோர் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பல நூற்றாண்டுகளில் நிகழ்க்கூடிய மாற்றங்களை இணையம் பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குள் கொண்டு வந்து, செயற்கை அறிவு பற்றியும், பொருட்களின் இணையம் பற்றியும் பேச வைத்திருக்கிறது. எதிர்கால இணையம் எப்படி இருக்கும் என நினைத்துப்பார்த்தாலே இன்னும் பிரமிப்பாக இருக்கிறது. வருங்காலத்தில் பல மாயங்களை யதார்த்தமாக்க கூடிய தொழில்நுட்பங்கள் இப்போது பிள்ளை பருவத்தில் தான் இருக்கின்றன. வர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் தன்மை, திரைப்படம் துவங்கி மருத்துவம் வரை எல்லாத்துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் வல்லுனர்கள். நம்மைச்சுற்றி நடக்கும் காட்சிகளை 360 கோணத்தில் பார்த்து ரசித்தபடி, மெய்நிகர் உலகிற்குள் நம்மை மூழ்கடித்து கொள்வதை எப்படி எல்லாம் பயன்படுத்தி புதிய சேவையை உருவாக்கலாம் என பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. இன்னொரு பக்கம் பாட்கள் எனும் அரட்டை இயந்திரங்கள் அடுத்த பெரிய விஷயமாக உருவாகும் என்கின்றனர். ஸ்மார்ட்போன் மூலம் உரையாடல் நடத்தக்கூடிய இந்த அரட்டை இயந்திரங்கள் செயற்கை அறிவு திறனோடு புத்திசாலி உதவியாளராக வழிகாட்டும் என்கின்றனர்.

வருங்கால இணையம்

இவைத்தவிர, எல்லா பொருட்களும் இணையத்துடன் இணைக்கப்பட்டு வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் கூட இணையத்துடன் தொடர்பு கொண்டு தகவல் அனுப்பும் வசதி கொண்டிருக்கும் என்கின்றனர். இதனால், நாம் வீட்டின் வாயில் கதவை அடைந்ததுமே, நம் வருகையை உணர்ந்து கதவு தானாக திறப்பதும் , குளிர்சாதன வசதி இயங்கத்துவங்குவதும் சாத்தியமாகலாம் என்கின்றனர். இவற்றோடு இயந்திரன்கள் நம்மை மிஞ்சும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கின்றனர்.

இதுவரை மனித குலத்திற்கு அறிமுகமான தொழில்நுட்பங்களிலேயே ஜனநாயகத்தன்மை மிக்கது என்பது தான் இணையத்தின் தனிச்சிறப்பாக இருக்கிறது. இந்த தன்மையே மனித குலத்திற்கு நன்மை உண்டாக்கும் பல ஒப்பற்ற சேவைகளை உண்டாக்கியிருக்கிறது. இணையம் மூலம் போராடலாம், புதிய இயக்கம் உருவாக்கலாம், பரஸ்பரம் நேசக்கரம் நீட்டலாம், மனித நேயம் தழைக்கச்செய்யலாம் என்பதை உணர்த்தியிருக்கிறது. இந்த ஆதார தன்மையை தக்க வைத்துக்கொள்வதே எதிர்கால இணையத்தை உருவாக்குவதில் நமக்குள்ள சவாலாகும்.

——
நன்றி: புதிய தலைமுறை வார இதழில் வெளியானது .முதல் வலை தளத்தின் 25 வது ஆண்டை முன்னிட்டு எழுதியது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

1 Comments on “இணையம் ; நேற்று, இன்று, நாளை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *