அரசு அலுவகங்களுக்கு மட்டும் அல்ல, அரசு இணையதளங்களுக்கு என்றும் சில குணாதிசயங்கள் இருக்கின்றன. பழைய கால வடிவமைப்பு, உடனுக்குடன் புதுப்பிக்கப்படாத தன்மை, பயனாளிகள் எளிதில் அணுக முடியாத வகையிலான தகவல் அமைப்பு என அரசு தளங்களுக்கான அம்சங்களை பட்டியலிடலாம்.
’விகாஸ்பீடியா’ தளமும், அரசு இணையதளங்களுக்கான இந்த இலக்கணத்தை பிரதிபலிக்கிறது. விகாஸ்பீடியா தளத்தை எத்தனை பேருக்கு தெரியும் என தெரியவில்லை. இந்திய அரசின் விக்கிபீடியா என இந்த தளத்தை குறிப்பிடலாம்.
விக்கிபீடியாவுடனான ஒப்பீடு எளிதான அறிமுகத்திற்கு தானே தவிர, மற்றபடி எந்த விதத்திலும் விக்கிபீடியாவுக்கு நிகராக சொல்லக்கூடிய தளம் அல்ல இது. வேண்டுமானால் அரசு திட்டங்களுக்கான விக்கிபீடியா என்று சொல்லலாம்.
உண்மையில் இந்த தளம் அரசு திட்டங்களுக்கான இணைய களஞ்சியமாக உருவாக்கப்பட்டுள்ளது. சமூக வளர்ச்சியில் நாட்டின் குறிப்பிட்ட தேவைகளை நிறைவேற்றுவதற்கான அறிவு களஞ்சியம் என இதன் விகாஸ்பீடியாவின் அதிகாரப்பூர்வ அறிமுகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பன்மொழி வலைவாசல், தகவல்கள், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஒற்றை சாளர வசதியாக விளங்கும் வகையில் இந்த களஞ்சியம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இந்தியாவில் எளிதில் அணுக முடியாத மக்களுக்கானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கே உரிய மொழியில் அமைந்துள்ள இந்த அறிமுக விளக்கத்தை விட எளிதாக சொல்ல வேண்டும் என்றால், விவசாயம், சுகாதாரம், கல்வி, சமூக நலம், சுற்றுச்சூழல், மின் ஆளுகை உள்ளிட்ட ஆறு பிரிவுகள் தொடர்பான அரசு திட்டங்கள் தொடர்பான தகவல்களையும், கட்டுரைகளையும் அளிக்கும் களஞ்சியமாக இதை புரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பிரிவிலும் பல்வேறு தலைப்புகளில் தகவல்களையும்,கட்டுரைகளையும் காணலாம்.
அரசு திட்ட களஞ்சியம் என அழைப்பதற்கு மாறாக, விகாஸ்பீடியா என பெயரிடப்பட்டிருப்பதற்கு விக்கிபீடியாவின் செல்வாக்கு காரணமாக இருக்கலாம். அதோடு விக்கிபீடியாவின் அம்சங்கள் சிலவற்றையும் கொண்டுள்ளது. கட்டுரைகளின் அமைப்பு விக்கிபீடியா கட்டுரை அடுக்கு போலவே இருக்கின்றன. மேலும் பயனாளிகள் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டு கட்டுரைகளை பங்களிக்கும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
முகப்பு பக்கத்தில் கொஞ்சம் கவனமாக தேடினால், பங்கேற்பாளராக பதிவு செய்யும் வசதியை காணலாம். இதுவரை பதிவு செய்த உறுப்பினர்கள் எண்ணிக்கை, மொத்த கட்டுரைகளின் எண்ணிக்கை தொடர்பான தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அதிகம் பங்களிக்கும் நட்சத்திர பங்கேற்பாளர்களும் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.
ஆனால், கட்டுரைகளின் வகைகளிலோ அல்லது கட்டுரை தகவல்களிலோ விக்கிபீடியா கட்டுரைகளின் செறிவு இல்லை. தட்டையாக தகவல்கள் இடம்பெறுகின்றன. பல பங்கேற்பாளர்களின் கூட்டு முயற்சியால் கட்டுரைகள் செழுமையானதற்கான அடையாளமும் இல்லை. ( அத்தகைய வசதி இருக்கிறதா எனத்தெரியவில்லை).
ஆனால், அரசு திட்டங்கள் தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் அறியக்கூடிய தளமாக இருக்கிறது.
தலைப்புகள், செய்திகள் எனும் பிரிவுகள் முகப்பு பக்கத்தில் இருந்தாலும், தகவல்களில் ஈர்ப்போ, துடிப்போ இல்லை. கோவிட்-19 தொடர்பான அறிவிப்பு உள்ளிட்டவற்றில் காலாவதியான தன்மையை பார்க்கலாம். மீண்டும் வர வேண்டும் என ஈர்க்கும் வகையிலான துடிப்பான அம்சங்கள் வெகு குறைவு.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பாக நடத்தப்பட்டு வரும் இந்த தளத்தின் ஒரே குறிப்பிடத்தக்க அம்சம், பன்மொழி களஞ்சியம் எனும் வகையில், ஆங்கிலம் தவிர, தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் தகவல்களை பார்க்க முடிகிறது.
விக்கிபீடியா போன்ற கட்டற்ற களஞ்சியத்தை உருவாக்குவது என்றால் என்ன என்பதையும், பயனாளிகளின் கூட்டு முயற்சியின் அருமையையும் புரிந்து கொள்ள இந்த தளம் உதவுவதாக கருதலாம்.
நல்ல நோக்கம் கொண்ட முயற்சி என்பதால் அதிகம் விமர்சிக்காமல் வாழ்த்தி வரவேற்கலாம் என்றாலும், 2014 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த களஞ்சியம் இன்னமும் பரவலாக அறியப்படாமல் இருப்பதில் இருந்தே இதன் தன்மையை புரிந்து கொள்ளலாம்.
விகாஸ்பீடியா தளம் : https://vikaspedia.in/