கூகுள் தேடலில் ஈடுபடும் போது, அதன் முடிவுகளை கண்ணை மூடிக்கொண்டு ஏற்காமல் சீர் தூக்கி பார்க்க வேண்டும் என்பது மட்டும் அல்ல, பல நேரங்களில் அது முன்னிறுத்தும் முதல் முடிவு எத்தனை அபத்தமானது அல்லது பொருத்தமற்றது என்பதை உணர்வதும் அவசியம்.இதற்கான காரணங்களை அறிய அல்டாவிஸ்டாவின் பேபல் பிஷ் சேவை தொடர்பாக கூகுளில் தேடிப்பார்க்கவும்.
பேபல் பிஷ் (Babel fish) என்பது பல ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட அல்டாவிஸ்டா தேடியந்திரம் சார்பில் அதற்கு முன் வழங்கப்பட்ட மொழிபெயர்ப்பு சேவை.
இந்த சேவைக்கான பெயர் காரணம் சுவாரஸ்யமானது என்பதோடு, இணையத்தில் அறிமுகமான முதல் மொழிபெயர்ப்பு சேவைகளில் ஒன்று என்பதும் கவனிக்க வேண்டியது. அதோடு, இந்த சேவை செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ நுட்பத்தை அடிப்படையாக கொண்டு இயங்கியது என்பதும் முக்கியமானது.
இப்போது எங்கும் ஏஐ அலை வீசிக்கொண்டிருக்கும் சூழலில், 1990 களின் இறுதியிலேயே இயந்திர கற்றல் மூலம் மொழிபெயர்ப்பு வசதியை சாத்தியமாக்கிய பேபல் பிஷ் சேவையை திரும்பி பார்ப்பது பொருத்தமானது.
எப்படி பார்த்தாலும் பேபல் பிஷ் முன்னோடி சேவை என்பதில் சந்தேகம் இல்லை. அதோடு, இணைய தேடல் பரப்பில் அல்டாவிஸ்டாவின் முன்னோடி தன்மைக்கான உதாரணங்களில் ஒன்றாகவும் அமைகிறது.
ஆம், கூகுள் எல்லாம் அறிமுகமாவதற்கு முன், இணையத்தின் முதல் முழு தேடியந்திரம் என அறியப்பட்ட அல்டாவிஸ்டா, இணைய பக்கங்களை மொழிபெயர்த்துக் கொள்ளும் வசதியை பேபல் பிஷ் வடிவில் 1997 ல் அறிமுகம் செய்தது.
அல்டாவிஸ்டா பேபல் பிஷ் சேவையின் முன்னோடித்தன்மையை மீறி, இந்த சேவை தொடர்பாக மேலும் அறிவதற்கான இணைய தேடல் அதிகம் ஏமாற்றத்தையே அளிக்கிறது.
அடைப்புக்குறிக்குள் இணையதளம் எனும் குறிப்புடன் சுட்டிக்காட்டப்படும் பேபல் பிஷ் தொடர்பான விக்கிபீடியா கட்டுரையில் கூட, அடிப்படை தகவலகளை கடந்து கூடுதல் விவரங்கள் இல்லை. இந்த தகவல்களும் கூட பெரும்பாலும், அல்டாவிஸ்டா மற்றும் யாஹுவின் சோக கதை சார்ந்தவையாக இருக்கின்றன.
பேபல் பிஷ் உருவாக்கப்பட்ட வரலாறு, அதன் பின்னணியில் உள்ள ஏஐ நுட்பம், அறிமுகமான காலத்தில் உண்டான அதிர்வுகள் தொடர்பான குறிப்புகள் இல்லை.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தலைப்பில், இப்படி ஏமாற்றம் தரும் விக்கி ஆங்கில கட்டுரைகள் அரிதானவை என்றே சொல்லலாம்.
விக்கிபீடியா கட்டுரையை விட, கூகுள் தேடல் தான் இன்னும் ஏமாற்றம் அளிக்கிறது. பேபல் பிஷ் சேவை அறிமுகமான காலத்தில் வெளியான கட்டுரை தொடர்பான இணைப்புகள் கூட பின்னுக்குத்தள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த தேடலுக்கான முதல் முடிவாக கூகுள் முன்னிறுத்தும் பேபல்பிஷ்.காம் இணையதளம் தான் இன்னும் குழப்பத்தையும், கூடுதல் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
பேபல் பிஷ் மொழிபெயர்ப்பு சேவையை இப்போதும் பயன்படுத்தலாம் எனும் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் இந்த இணையதளம், அதன் முதல் பார்வையிலேயே விளம்பர நோக்கிலான அதிக பயனற்ற தளம் என்பதை உணர்த்தி விடுகிறது.

இதில் காணப்படும் ஆன்லைன் மொழிபெயர்ப்பு வசதியை மீறி, இந்த தளம் எந்தவிதத்திலும் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.
இதில் இணைய மொழிபெயர்ப்பு வசதி என்பது விளம்பரத்திற்கான தூண்டிலாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதோடு, அல்டாவிஸ்டாவின் பேபல் பிஷ் சேவைக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் புரிகிறது.
அல்டாவிஸ்டா தேடியந்திரமே ஒரு கட்டத்தில் யாஹுவால் வாங்கப்பட்டு, அதன் பிறகு யாஹுவின் மொழி பெயர்ப்பு சேவையாக இருந்த நிலையில், யாஹுவும் பிங் மொழிபெயர்ப்புக்கு மாறி, 2013 ம் ஆண்டு இந்த சேவை முற்றிலும் கைவிடப்பட்டதை விக்கிபீடியா கட்டுரை மூலம் அறிய முடிகிறது.
அதோடு, எந்த கட்டத்திலும் பேபல் பிஷ் சேவைக்கான தனி இணையதளம் இருந்ததில்லை என்றும் அறிய முடிகிறது. துவக்கத்தில் அல்டாவிஸ்டா.பேபில் பிஷ் என்றும் பின்னர் பேபில் பிஷ். யாஹு. என்றுமே இந்த சேவை செயல்பட்டிருக்கிறது.
அப்படியிருக்க, அல்டாவிஸ்டா பேபில் பிஷ் எனும் தேடலுக்கு, பேபல் பிஷ்.காம் எனும் நேரடி தொடர்பில்லாத ஒரு இணையதளத்தை கூகுள் முதல் முடிவாக பட்டியலிடுவதை எப்படி புரிந்து கொள்வது?
கூகுள் தேடலில் இத்தகைய பல அனர்த்தங்களை எதிர்கொள்ளலாம் தான். பேபல் பிஷ் சேவை கைவிடப்பட்ட நிலையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வார்த்தைகள், இணைய தேடலில் கொண்டு வரக்கூடிய போக்குவரத்தை கணக்கில் கொண்டு, யாரேனும் இதே பெயரில் விளம்பர நோக்கில் இணையதளம் அமைத்திருப்பதை புரிந்து கொள்ளலாம். இதற்கு மேலும் எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன.
ஆனால், இத்தகைய விளம்பர குப்பை தளங்களை கூகுள் முதல் முடிவாக முன்னிறுத்துவதன் நியாயம் என்ன?
பேபல் பிஷ் தளத்தை பொருத்தவரை, அதே பெயரிலான தளம் 1995 முதல் செயல்பட்டு வருவதாக அறிய முடிகிறது. இதே பெயரிலான கனடா நிறுவனத்திற்கு சொந்தமாக இந்த தளம் இருந்ததாகவும் தெரிய வருகிறது. ஆனால் தளத்தின் தற்போதைய வடிவில் இந்த தகவல்கள் தொடர்பான குறிப்போ, விளக்கமோ கிடையாது.
அல்டாவிஸ்டாவின் பேபில் பிஷ் சேவைக்கும் இந்த தளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவாக தெரிந்தாலும், பேபல் பிஷ் எனும் பெயரில் இயங்கிய கனடா தளத்திற்கும் தற்போதைய தளத்திற்குமான தொடர்பும் உறுதியாக தெரியவில்லை. ஆனால், இந்த தளம் விளம்பர நோக்கிலான ஏமாற்று வேலை என்பதை மட்டும் தெளிவாக அறியலாம்.
இப்படி ஒரு இணையதளத்தை முதல் முடிவாக கூகுள் முன்னிறுத்துவதும் இது தொடர்பான சிவப்பு கொடிகள் காண்பிக்க கூடிய எந்த குறிப்பும் இல்லாத நிலையில் தான் இணைய தேடல் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
இதே பொருள் தொடர்பான ஏஐ தேடலில் ஈடுபட்டால் இன்னும் அதிர்ச்சியாக இருப்பதை உணரலாம்.
வால்: பேபல் பிஷ் மொழிபெயர்ப்பு சேவை அல்டாவிஸ்டாவின் மூல சேவை அல்ல. அல்டாவிஸ்டாவை நடத்திய டிஜிட்டல் நிறுவனம், சிஸ்ட்ரான் எனும் நிறுவனத்துடன் இணைந்து வழங்கிய சேவை. இந்த சிஸ்ட்ரான் தான் இயந்திர மொழிபெயர்ப்பின் முன்னோடி என்பதோடு, கூகுள் அதன் சொந்த மொழிபெயர்ப்பு சேவையை வழங்கத்துவங்குவதற்கு முன்பாக சிஸ்ட்ரான் நுட்பத்தையே பயன்படுத்தி வந்தது.