Tag Archives: cat

பயனில்லாத இணையதளங்களை பார்க்க ஒரு இணையதளம்.

இணையதளங்கள் என்றதும் பொதுவாக பயனுள்ள இணையதளங்களையே நினைக்கத்தோன்றும்.அதற்கேற்ப கோடிக்கணக்கான இணையதளங்களில் இருந்து பயன் மிகுந்த நல் முத்துக்களையும் மாணிக்கங்களையும் தேடி பட்டியலிடும் இணைய சேவைகளும் பல இருக்கின்றன.

இப்படி பரிந்துரைக்கப்படாத இணையதளங்களை கண்டு கொள்ளாமலே விட்டு விடலாம்.அவை பெரும்பாலும் விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டும் நோக்கத்தோடு தகவல்கள் என்ற போர்வையில் ஏதாவது குப்பைகளின் தொகுப்பாக இருக்கும்.

இந்த வகை தளங்களை பயனில்லாத தளங்கள் என்று குறிப்பிடலாம் என்றாலும் பயனில்லாத தளங்களிலேயே இன்னொரு சுவாரஸ்யமான வகை இருக்கின்றன.

இவை பயனில்லாத தளங்கள் என்ற போதிலும் பார்க்க தேவையில்லாத தளங்கள் என்று புறக்கணித்து விட முடியாதவை.எந்த வித பயனை அளிக்ககூடியதாக இல்லாமால் இருந்தாலும் இவை ஏதோ ஒரு சின்ன நோக்கம் அல்லது விஷயத்தை அடிப்படையாக கொண்டிருக்கும்.

அந்த நோக்கமே இந்த தளங்களை சுவாரஸ்யம் மிக்கதாக மாற்றிவிடுகிறது.

இந்த வகை தளங்களுக்கு அழகாக உதாரணம் தேவை என்றால் டக்ஸார்திபெஸ்ட் என்று ஒரு தளம் இருக்கிறது.இந்த தளத்தில் நுழைந்தால் அழகான மஞ்சள் நிற வாத்துகள் ஒரு கோடு போல வரிசையாக தோன்றுகின்றன.வாத்துக்கள் வரிசையின் சித்திரம் லேசாக மாறிக்கொண்டே இருக்கும்.அவ்வளவு தான் இந்த தளம்.

இதே போல கேட் பவுன்ஸ் என்றொரு தளம் இருக்கிறது.பெயருக்கேறப இந்த தளத்தில் பல வித பூனைகள் குத்திப்பதை பார்த்து கொண்டே இருக்கலாம்.அவ்வளவு தான்!

மேலும் கார்ட்டூன் நாயகனான ஹீமேன் சிரிப்பை காண்பதற்கென்றே ஒரு இணையதளம் இருக்கிறது.ஹேயாயாயாயா என்று விநோதாமாக அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

பாலிங்பாலிங் என்று இன்னொரு தளம் இருக்கிறது.இதில் நுழைந்தால் திரையில் பல வண்ண வடிவங்கள் சரிந்து விழுந்து கொண்டிருப்பதை பார்த்து கொண்டே இருக்கலாம்.வண்ணங்கள் மாறி வடிவங்கள் மாறி அவை விழுந்து கொண்டே இருப்பது லேசான மயக்கத்தை தரலாம் என்றாலும் சுவாரஸ்யமான அனுபவம் தான்.

இப்படி குறிப்பிட்ட எந்த பலனும் இல்லாத ஆனாலும் சுவாரஸ்யமாக விளங்ககூடிய இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.

இந்த தளங்களை எல்லாம் பட்டியலிடுவதற்கு என்றே ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.அந்த தளத்தின் பெயரே பனில்லாத வலை என்பது தான்.ஆங்கிலத்தில் தி யூஸ்லஸ் வெப்.

இந்த தளத்தின் உள்ளடக்கமும் எளிமையாக சுவாரஸ்யமாகவே இருக்கிறது.இதில் எந்த பட்டியலும் கிடையாது.முகப்பு பக்கத்தில் ‘தயவு செய்து பயனில்லாத தளத்திற்கு அழைத்து செல்லவும்’ என்ற கோரிக்கை வாசகம் வரவேற்கிறது.அந்த வாசகத்தில் கிளிக் செய்தால் ஏதாவது ஒரு பயனில்லாத தளத்திற்கு அழைத்து செல்கிறது.

மாறி மாறி கிளிக் செய்து கொண்டிருந்தால் வரிசையாக பயனில்லாத தளங்களாக பார்த்து கொண்டே இருக்கலாம்.

பயனில்லாத தளங்களை இணையவாசிகளும் சமர்பிக்கலாம்.

டிம் ஹால்மன் என்பவர் இந்த தளத்தை உருவாக்கியுள்ளார்.

இணையதள முகவரி;http://www.theuselessweb.com/

பூனைகளுக்காக ஒரு இணைய பட விழா.

மனிதர்களின் சிறந்த தோழன் என்ற பட்டத்தை வேண்டுமானால் நாய்கள் தட்டிச்சென்றிருக்கலாம்.ஆனால் இணையத்தை பொருத்தவரை சிறந்த தோழன் என்ற பெருமை பூனைகளுக்கே சொந்தமானது.

சந்தேகம் இருந்தால் பூனை வீடியோக்களை தேடிப்பாருங்கள்.அதாவது இது வரை யூடியூப் மூலமோ அல்லது நண்பர்கள் அனுப்பி வைத்த பூனை வீடியோவையோ இது வரை நீங்கள் பார்த்து ரசித்ததில்லை என்றால்!

காரணம் இணையம் பூனைகளால் நிரம்பியிருக்கிறது.பூனைகள் வீடியோ பூனைகள் புகைப்படங்கள் என்று இணையத்தில் எங்கு திரும்பினாலும் பூனைகள் தான்.அதிலும் அழகான பூனை வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன.

பியானோ வாசிக்கும் பூனை,கம்ப்யூட்டர் இயக்கும் பூனை என விதவிதமான பூனை வீடியோக்கள் உருவாக்கப்பட்டு பலட்சக்கணக்கானோரால் பார்த்து ரசிக்கப்பட்டு நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் என்று சொல்வது போல இண்டெர்நெட்டுக்கு முந்திய யூஸ்நெட் காலத்திலேயே பூனை புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் பழக்கம் உருவாகி விட்டதாக பூனைகளுக்கான வரலாற்று பக்கம் சொல்கிறது.(ஆம் பூனைகளுக்கும் இணையத்திற்குமான வரலாற்றை விளக்குவதற்கு என்றே ஒரு நீளமான கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.)

அதன் பிறகு வீடியோ பகிர்வை சுலபமாக்கிய யூடியூப் 2006 ல் அறிமுகமான போது பூனைகள் தோன்றும் வீடியோ காட்சிகள் தலை காட்டத்துவங்கின.

பூனைகளுக்கும் நகைச்சுவை உணர்வு உண்டா என்று தெரியவில்லை.ஆனால் பூனை வீடியோ காட்சிகள் எல்லாமே செம கியூட்டாக ரசித்து சிரிக்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றன.இதன் காரணமாக பூனை வீடியோக்கள் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன.

பேஸ்புக் வருகைக்கு பிறகு பூனை வீடியோக்கள் நண்பர்கள் மத்தியில் பகிர்ந்து கொள்வது இன்னும் அதிகரித்தது.

இதனிடையே புனைகளை வைத்து நகைச்சுவையை ஏற்படுத்தும் போக்கிற்கு எல் ஒ எல் கேட்ஸ் என பட்டப்பெயரும் சூட்டப்பட்டது .

எல் ஓ எல் கேட்ஸ் என்று இணையத்தில் தேடிப்பாருங்கள் அதன் பின்னர் சிரித்து கொண்டே இருப்பீர்கள் .

பிரபல அமெரிக்க நாளிதழான நியுயார்க் டைம்ஸ் இது பற்று பூனைகள் ஏன் இணையத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன? என்று ஒரு கட்டுரையே வெளியிட்டிருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.டைம் பத்திரிகையும் இணையத்தில் பூனைகள் இல்லாமல் ஒரு நாள் என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளது.

பூனைகள் வீடியோக்கள் யூடியூப்பில் உடனே ஹிட்டாவது ஏன் என்று எல்லாம் ஆய்வு செய்துள்ளனர் தெரியுமா?

இந்த திடீர் பூனை புராணம் எதற்கு என்று கேட்கலாம்.பூனைகளுக்காக என்றே ஒரு திரைப்பட விழா நடைபெற்று இருப்பதை தெரிவிக்க தான் இந்த முன்னோட்டம்.

இணைய பூனை வீடியோ பட விழா என அழைக்கப்படும் அந்த பட விழா ஆகஸ்டு 30 ம் தேதி நடைபெற்றுள்ளது.அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இந்த பட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட‌து.கேத்தே ஹால் என்பவர் இந்த படவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

திரைப்பட விழாக்கள் போலவே இந்த பட விழாவிற்கான பூனை வீடியோ ப்டங்களையும் சமர்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்ட்டிருந்தது..இணையவாசிகள் தங்கள் அபிமான பூனை வீடியோவை சமர்பிக்கலாம் என கேட்டு கொள்ளப்பட்டிருந்தது.இந்த பட விழாவிற்கான இணையதளமும் அமைக்கப்பட்டுள்ளது.

எல்லோரும் தனிமையில் அனுபவிக்கும் பூனை வீடீயோ ரசனையை பொது அரங்கிறகு கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைவதாக இந்த பட விழாவை நடத்தும் ஹில் உற்சாகமாக கூறியுள்ளார்.

பூனைகள் ரசிகத்தக்கவை,அவற்றின் வீடியோ காட்சிகள் எளிதில் நகைச்சுவை உணர்வை அள்ளித்தருபவை என்றெல்லாம் சொல்லப்படுவதன் அடையாளமாகவே இந்த பட விழா உருவாகியுள்ளது.

பூனைகளுக்கெல்லாம் ஒரு பட விழாவா என நம்ப முடியாவிட்டால் இப்போதே பூனைகள் பற்றி கூகுலில் தேடிப்பாருங்கள்.அந்த சந்தேகம் இல்லாவிட்டால் பூனை படவிழா தளத்திற்கு சென்று பாருங்கள்.

இணையதள முகவரி;http://www.walkerart.org/openfield/event/internet-cat-video-film-festival/