Category Archives: iphone

சமூக ஊடக மோகத்தை கேள்விக்குள்ளாகும் புதுமை செயலி!

8f95567489cd6b452c736829674bf0ae_originalஸ்மார்ட் போன் உலகில் ’இல்லாத போன்’ என்று ஒரு போன் இருக்கிறது தெரியுமா? அதாவது நோபோன்!. பெயர் மட்டும் அல்ல, உண்மையில் இது போனே அல்ல. ஆனாலும் இந்த போன் ஆயிரக்கணக்கில் விற்பனை ஆகியிருக்கிறது. பத்து டாலர் செலவிட தயார் என்றால் நீங்களும் கூட நோபோன்ஸ்டோர் தளத்தில் இந்த போனை வாங்கலாம்.

இந்த போனை வாங்கி எதுவும் செய்ய முடியாது. பேச முடியாது, நெட்டில் உலாவ முடியாது, பாட்டு கேட்க முடியாது… ஸ்மார்ட்போன்களில் செய்யும் எதையும் செய்ய முடியாது. ஸ்மார்ட்போன்களில் ஒருவர் எதிர்பார்க்க கூடிய எந்த அம்சமும் இந்த போனில் கிடையாது. அதனால் தான் இது நோபோன்.

இப்படி ஒரு போன் எதற்கு? ஸ்மார்ட்போன் மோகத்தில் இருந்து விடுபடுவதற்கு தான்!

ஆம், பேசுகிறோமோ இல்லையோ, அழைப்பு வந்திருக்கிறதோ இல்லையோ, சில நிமிடங்களுக்கு ஒரு முறை போனை எடுத்துப்பார்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறதே. காலையில் கண் விழித்ததும், பல் துலக்குவதற்கு முன்னர் போன் திரையை பார்த்து விட்டு தானே வேறு வேலை பார்க்கிறோம். இரவிலும் படுக்கச்செல்வதற்கு முன் போன் தான் பக்கத்தில் இருக்கும்.

இப்படி ஸ்மார்ட்போன் பாதிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். மானே தேனே போட்டுக்கொள்வது போல, வாட்ஸ் அப்பில் உலாவுவது, செல்பி எடுத்து தள்ளுவது என இதர பாதிப்புகளை நீங்களே சேர்த்துக்கொள்ளலாம்.

பஸ்சிலோ, ரெயிலிலோ பயணம் செய்யும் போதும் பலரும், ஸ்மார்ட்போனில் தான் மூழ்கியபடி தனி உலகில் சஞ்சரிக்கின்றனரேத்தவிர, பக்கத்தில் உள்ளவர்களை கவனிப்பது கூட இல்லை. இந்த பிரச்சனைக்கு எல்லாம் தீர்வாக அறிமுகமானது தான் நோபோன். ஸ்மார்ட்போன் போலவே தோற்றம் கொண்ட செவ்வக கட்டை என்று வைத்துக்கொள்ளுங்களேன். இதை கையில் வைத்திருந்தால், போனை வைத்திருக்கும் அதே உணர்வை பெறலாம் எனும் உத்திரவாதத்தை நோபோன் அளிக்கிறது.

சதா சர்வ நேரமும் போனை கையில் எடுக்கும் உணர்வுக்கு மாற்றாக அமையக்கூடிய தொழில்நுட்பம் சாராத இந்த தீர்வு நிஜ உலகுடனான உங்கள் தொடர்பை அதிகமாக்கி கொள்ள உதவும் என்பது தான் நோபோன் அறிமுகத்திற்கான முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. 2014 ம் ஆண்டு வாக்கில் இணைய நிதி திரட்டும் மேடையான கிக்ஸ்டார்ட்டர் மூலம் இந்த போனுக்கான நிதி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பேட்டரி இல்லை, காமிரா இல்லை, புளூடூத் இல்லை, உடையாது, நீர்புகாது என்றெல்லாம் இதன் சிறப்பம்சங்களாக முன்வைக்கப்பட்டன.

ஸ்மார்ட்போன் மோகத்தை நையாண்டி செய்யும் வகையில் அமைக்கப்பட்டாலும், இப்படி ஒரு இல்லாத போனுக்கான தேவையை பலரும் உணர்ந்ததால், நிதி உதவியும் குவிந்து போனும் விற்பனைக்கு வந்தது. இப்போது, நோபோன்ஸ்டோர் மூலம், அடிப்படையான நோபோன் மட்டும் அல்லாது நோபோஜீரோ போன்ற பிற மாதிரிகளையும் வாங்கலாம். நோபோஜீரோ என்றால், ஸ்மார்ட்போன் பட்டன் மாதிரிகள் எல்லாம் இல்லாத வெறும் செவ்வக பலகை அவ்வளவு தான். ஆனால் பாதி விலையில் வாங்கலாம். நோபோன் ஏர் மாதிரியும் இருக்கிறது. உள்ளே ஒன்றும் இல்லாமல் இருப்பது போன்ற வெற்றுத்தோற்றம் தான் இதன் சிறப்பம்சன். இது தவிர செல்பி நோபோனும் உண்டு. நோபோனில் காமிராவே இல்லையே எப்படி படம் எடுப்பது என்று கேட்கலாம். நல்ல கேள்வி? முகம் பார்க்கும் கண்ணாடி கொண்ட நோபோன் இதற்கு பதிலாகிறது.

கேலியும், கிண்டலும் கலந்த முயற்சி என்றாலும், நம் காலத்து ஸ்மார்ட்போன் மோகத்தின் மீதான நயமான விமர்சனமாக நோபோன் அமைந்துள்ளது. அதனால் தான் இன்னமும் அப்டேட்டாகி கொண்டே இருக்கிறது.- https://www.thenophone.com/

நிற்க, நோபோன் போலவே, இப்போது சமூக ஊடக செயலி ஒன்று அறிமுகமாகியுள்ளது என்பது தான் விஷயம்.

பிங்கி (binky. ) எனும் அந்த செயலி கொஞ்சம் புதுமையானது. வழக்கமாக சமூக ஊடக செயலிகளில் நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் இதிலும் செய்யலாம். அதாவது, நிலைத்தகவல்களை வரிசையாக பார்க்கலாம், அவறை லைக் செய்யலாம், பின்னூட்டம் அளிக்கலாம், இப்பக்கமும், அப்பக்கமும் நகர்த்திப்பார்க்கலாம். இவற்றில் என்ன புதுமை இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இவை எல்லாவற்றையும் நீங்கள் செய்யலாமேத்தவிர ஒருவரும் பார்க்க முடியாது!

ஆம், பிங்கி செயலியை தரவிறக்கம் செய்து நிறுவிய பிறகு, அதில் எப்போது நுழைந்தாலும் ஏதாவது உள்ளடக்கத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம். பேஸ்புக் அல்லது டிவிட்டரில் செய்வது போல இந்த தகவல்களை வரிசையாக பார்த்துக்கொண்டே இருக்கலாம். இடையே ஏதாவது படத்தை லைக் செய்யலாம். கருத்து தெரிவிக்க விரும்பினால், தட்டச்சு செய்யலாம். முதலெழுத்தை மட்டும் அடித்தால் போதும் மற்ற எழுத்துகள் தானாக தோன்றும்.

அவ்வளவு தான். ஆனால், நாம் தெரிவிக்கும் லைக்குகளும் கருத்துகளும் வேறு யாரையும் சென்றடையாமல் இணைய வெளியில் கரைந்து காணாமல் போய்விடும். இதில் தோன்றும் நிலைத்தகவல்கள் விலங்குகள் பறவைகள் சார்ந்தவை. நம்முடைய நண்பர்கள் மற்றும் அவர்களின் நண்பர்களுடையவை அல்ல. எதற்கு இப்படி ஒரு செயலி?

எல்லாம் சமூக ஊடக பழக்கத்திற்கு ஒரு மாற்று தேவை என்பதால் தான்!

எப்போதும் ஸ்மார்ட்போனை கையில் எடுத்து வைத்துக்கொண்டு அதில் சமூக ஊடக பதிவுகளை பார்த்தபடி இருக்கிறோம் அல்லாவா? அந்த பழக்கத்திற்கு மாற்று மருந்து தான் இந்த செயலி என்கிறார் இதை உருவாக்கியுள்ள மென்பொருளாலர் டான் கர்ட்ஸ்.

சமூக ஊடக உலகில் உலாவிய உணர்வை பெறலாம், ஆனால் அதே நேரத்தில் தேவையற்ற உரையாடல், லைக் கணக்கு, துவேஷம் போன்றவற்றை தவிர்த்து மன அழுத்தம் இல்லாமல் இருக்கலாம் என்கிறார் கர்ட்ஸ். ரெயிலில் செல்லும் போது ,அன்னிச்சையாக போனை எடுத்து சமூக ஊடக பதிவுகளை பார்க்கும் தனது சொந்த அனுபவம் குறித்து யோசித்த போது, தகவல் தேவை இருக்கிறதோ இல்லையோ போனை பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற உணர்வு இருப்பதாக தோன்றியதாக அட்லாண்டிக் இதழுக்கான பேட்டியில் கர்ட்ஸ் கூறியுள்ளார்.

போனை பார்த்துக்கொண்டிருக்கும் தேவையை உணர்ந்த போது, அதை நிறைவேற்றித்தரும் வகையில் பொய்யான ஒரு சமூக ஊடக செயலியை உருவாக்கும் எண்ணம் இவருக்கு ஏற்பட்டிருக்கிறது. துவக்கத்தில் விளையாட்டாக இந்த செயலிக்கு வடிவம் கொடுத்துள்ளார். ஆனால் இதை பார்த்தவர்கள் எல்லாம், இதன் சமூக ஊடகம் அல்லாத சமூக ஊடகத்தன்மையை விரும்பவே செயலியை முழு வீச்சில் உருவாக்கி ஐபோனுக்காக அறிமுகம் செய்துள்ளார். ஆண்ட்ராய்டு வடிவமும் வர உள்ளது. வேறு பல துணை அம்சங்களையும் அறிமுகம் செய்ய இருபதாக கர்ட்ஸ் கூறியிருக்கிறார்.

சமூக ஊடக செயல்பாடுகளுக்கு எந்த அளவு அடிமையாகி இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் பிங்கி செயலியை பயன்படுத்திப்பார்க்கலாம். ஆண்ட்ராய்டு பயனாளிகள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். அதற்குள் பேஸ்புக், டிவிட்டர் மோகம் குறித்து நன்றாக யோசிக்கலாம்.

பிங்கி செயலி இணையதளம்: http://www.binky.rocks/

 

நன்றி; தமிழ் இந்துவிற்காக இளமை புதுமையில் எழுதியது.

1-psmartphones

கேட்ஜெட் உலக செய்திகள்

ஸ்மார்ட்போன் சந்தையில் எப்படியோ, இப்போதைக்கு ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் சாம்சங் முதலிடத்தை பிடித்திருக்கிறது. புள்ளிவிவரங்களுக்காக அறியப்படும் இணையதளமான ஸ்டாஸ்டா இந்த தகவலை தெரிவித்துள்ளது.
2014 ம் ஆண்டியில் சாம்சங் 12 லட்சம் ஸ்மார்ட்வாட்ச்களை விற்பனைஉ செய்துள்ளதாக ஸ்டாடிஸ்டா தெரிவிக்கிறது. இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் நிறுவனம் கிக்ஸ்டாட்ர்ட்டர் செல்லப்பிள்ளையான பெப்பில். ஏழு லட்சம் வாட்ச்களை பெப்பில் விற்பனை செய்துள்ளது. ஃபிட்பிட் நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது. சோனி, லெனோனோ, எல்ஜி. போன்றவை வரிசையாக அடுத்த இடங்களில் உள்ளன்.
மொத்தமாக கடந்த ஆண்டு 68 லட்சம் ஸ்மார்ட்வாட்கள் விற்பனையாகி இருக்கின்றன. ஸ்மார்ட்வாட்சின் சராசரி விலை 189 டாலர் ( ரூ.11,800) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இறுதியில் ஆப்பிளின் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் ஆகும் போது இந்த நிலை மாறக்கூடும். இதனிடையே சீன சந்தையில் இப்போதே ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் போன்ற தோற்றம் கொண்ட போலி ஸ்மார்ட்வாட்ச்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. வடிவமைப்பில் ஆப்பில் வாட்ச் போலவே தோற்றம் கொண்ட இவை ஆண்ட்ராய்டில் இயங்குகின்றன. 35 டாலரில் இருந்து கிடைக்கும் இந்த போலி வாட்ச்கள் மின்வணிக தளங்களும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளன.
சீன சந்தையில் தயாரிப்புகள் நகலெடுக்கப்படும் வேகம் மிரள வைப்ப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிள் வாட்ச் ஏப்ரல் 24 முதல் விற்பனைக்கு வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை. ஆனால் இந்தியாவில் உள்ள ஆப்பிள் வாட்ச் ஆர்வலர்கள் கவலைப்பட வேண்டாம் ஜூன் மாத வாக்கிலேயே இந்தியாவிலும் ஆப்பிள் வாட்சி அறிமுகமாகலாம் என்பது லேட்டஸ்ட்டாக கசிந்திருக்கும் தகவல்.

சார்ஜர் மட்டும் அல்ல!

சின்ன பெட்டி போல இருக்கும் வொண்டர்கியூப் (WonderCube ) சாதனம் பற்றி அநேகமாக எல்லா முக்கிய தொழில்நுட்ப இணையதளங்களிலும் செய்தி வெளியாகியிருக்கிறது. என்கேட்ஜட் தளம் இதை சூப்பர் கியூப் என குறிப்பிட்டுள்ளது. அப்படி என்ன செய்கிறது இந்த வொண்டர்கியூப் ? உண்மையில் , ஒன்றல்ல பலவித பயன்பாடுகளை கொண்டிருக்கிறது இது. இந்த கன சதுர சாதனத்தை எந்தப்பக்கம் பிரித்தாலும் ஒரு பயன்பாடு இருக்கிறது. ஒரு பக்கத்தில் கேபிள் இணைப்பு வசதி கொண்டிருப்பதால், லேப்டாப் போன்ற மற்ற சாதனங்களுடன் இணைக்க பயன்படுத்திக்கொள்ளலாம். கோப்புகளை பேக் அப் எடுக்கவும் இது பயன்படும். இதே முறையில் போனை சார்ஜ் செய்யவும் பயன்படுத்தலாம். ஸ்மார்டிபோனில் வீடியோ அல்லது புகைப்படம் பார்க்க விரும்பினால், இதை போன் பின்னே வைத்து ஸ்டாண்டாக பயன்படுத்தலாம். யு.எஸ்பி சாதனமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். மெமரி கார்டையும் இதில் பொருத்திக்கொள்ளலாம். இருளில் டார்ச்சாகவும் ஒளி பாய்ச்சும்.
எல்லாவற்றுக்கும் மேல் ஸ்மார்ட்போனில் சார்ஜ் தீர்ந்து போய்விட்டால் ஒரு 9 வோல்ட் பேட்டரியை இணைத்து அவசரகால சார்ஜராகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். எட்டுவிதமான மொபைல் பயன்பாடுகள் ஒரே சாதனத்தில் இருப்பதாக வொண்டர்கியூப் பெருமைப்பட்டுக்கொள்கிறது.
அழகாக சாவிக்கொத்தில் கோர்த்துக்கொண்டு எங்கும் எடுத்துச்செல்லலாம். இதுவே அழகான சாவிக்கொத்தாகவும் இருக்கும்.
இணைய நிதி திரட்டும் மேடையான இண்டிகோகோவில் அறிமுகமாகி இருக்கிறது இந்த வொண்டர்கியூப். முயற்சியை ஆதரிக்க விரும்புகிறவர்கள் முன்பதிவு செய்து கொண்டால் 40 டாலருக்கு இந்த சாதனம் அனுப்பி வைக்கப்படுமாம்!.
மேலும் தகவல்களுக்கு: https://www.indiegogo.com/projects/wondercube-8-mobile-essentials-in-one-cubic-inch

—–
வாட்ஸ் அப் அழைப்பு சேவை

மெசேஜிங் சேவைகளில் பிரபலமாக இருக்கும் வாட்ஸ் அப் குரல் வழி வசதி பற்றி கொஞ்ச காலமாகவே பேசப்பட்டு வருகிறது. இந்த வாட்ஸ் அப் காலிங் வசதி இப்போது பயனாளிகளுக்கு அறிமுகமாகியுள்ளது. வாட்ஸ் அப் மெசஞ்சரின் சமீபத்தில் வடிவில் இதை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் பிளேவில் இருந்து இதை டவுண்லோடு செய்து கொள்ளலாம். (வர்ஷென் 2.11.561)
இந்த வசதியை நிறுவும் முறை சுபலமானது. முதலில் கூகுள் பிளேவில் இருந்து டவுண்லோடு செய்யவேண்டும். ஆனால் இதன் பிறகு வேறு ஒரு பயனாளியிடம் இருந்து அழைப்பு வந்தால் தான் இந்த சேவை ஆக்டிவேட் ஆகும். எனவே சக பயனாளிகளிடம் கோரிகை அவைத்து அவர்கள் அழைத்த பிறகு , வாட்ஸ் அப்பில் செய்லையில் அரட்டை வசதிக்கு அருகே கால் செய்யும் வசதியை பார்க்கலாம்.
அதிகார்பூர்வ செயலிகளை மட்டுமே வாட்ஸ் அப் அங்கீகரிப்பதால் கூகுளில் பிளேவில் இருந்து அல்லது வாட்ஸ் அப் இணையதளத்தில் இருந்து டவுண்லோடு செய்யவும்: இதனிடையே ஐபோனிலும் இந்த வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய ஆயுத்தமாகி கொண்டிருப்பதாக தகவல்!
டவுண்லோடு செய்ய; https://play.google.com/store/apps/details?id=com.whatsapp&hl=en

——-

போனுக்கு இரண்டாம் திரை

யோட்டோ போனி இரட்டைத்திரை அம்சம் பிடித்திருந்தால், அதே போன்ற அம்சத்தை மற்ற ஸ்மார்ட்போனிலும் கொண்டு வர வழி இருக்கிறது தெரியுமா? இன்க் கேஸ் பிளஸ் ( InkCase Plus) தான் அந்த வழி. இங்க் கேஸ் பிளஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான கேஸ் போன்றது. கேஸ் மட்டும் அல்ல, இதுவே இன்னொரு திரையாக இருக்கும். பிரதான திரையில் பேட்டரியை மிச்சம் செய்ய இதை பயன்படுத்தலாம். டிஸ்பிளேவில் நோட்டிப்பிகேஷன் தெரியும். முக்கிய செயலிகளை பயன்படுத்தலாம். புகைப்படங்களை பார்க்கலம். மின்னூல்களை படிக்கலாம்., 3.5 இன்ச் அகலம் கொண்டது. இதிலேயே பேட்டரி உள்ளது. ப்ளூடூத் வசதியும் கொண்டிருக்கிறது. பிடித்தமான புகைப்படங்களை இதில் தோன்றச்செய்யலாம். தனியே மின்னூல் வாசிப்பாகவும் ( இபுக் ரீடர்) பயன்படுத்தலாம். ஸ்மார்ட்போனுக்கான பாதுகாப்பாகவும் ஒருக்கும். இரண்டாம் திரையாகவும் இருக்கும். தனியாகவும் பயன்படுத்தலாம், பிட்கேசுடம் சேர்ந்தும் பயன்படுத்தலாம். கிக்ஸ்டார்ட்டர் இணைதளம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகமான இது இப்போது பொதுவான பயனாளிகளுக்கும் விற்பனைக்கு வந்திருக்கிறது. சிங்கப்பூரைச்சேர்ந்த ஆகிசிஸ் ( Oaxis) நிறுவன தயாரிப்பு; இதற்கான துணை செயலியும் இருக்கிறது.
மேலும் தகவல்களுக்கு: http://www.oaxis.com/shop/product_detail.php?id=16

———–

கார்பனின் புதிய போன்

கார்பன் நிறுவனம் தனது டைட்டானியம் ஸ்மார்ட்போன் வரிசையில் டைட்டனியம் மேக் டு ( Titanium Mach Two) புதிய போனை அறிமுகம் செய்துள்ளது. 112 கிராம் எடை கொண்ட இது கோரிங் கொரில்லா கிலாஸ் 3 கொண்டுள்ளது. இதனால் கீறல் விழ வாய்ப்பில்லை என்கிறது,.
5 இன்ச் டிஸ்பிளேவுடன் 8 மெகாபிக்சல் முன் பக்க மற்றும் பின் பக்க காமிரா இருக்கின்றன. 1.4GHz ஆக்டா கோர் பிராசஸர் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4. வர்ஷன் என்றாலும் ஆண்ட்ராய்டு லாலிபாப்பிற்கு மேம்படுத்திக்கொள்ளலாம். 8 ஜிபி சேமிப்புத்திறன் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு வசதியும் கொண்டுள்ளது. இரட்டை சிம்முடன் அடர் நீள நிறத்தில் கிடைக்கிறது. விலை. ரூ. 10,490.

—-

லாவாவின் புதிய அறிமுகம்

லாவா தனது பியல் சீரிசில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஐரிஸ் பியல் 10 மற்றும் ஐரிஸ் பியல் 25 (Iris Fuel 25 )ஆகிய் இஒந்த போன்கள் மேம்பட்ட பேட்டரி ஆற்றலை கொண்டிருப்பதாக லாவா தெரிவிக்கிறது. ஐரிஸ் பியல் 10 மாதிரி 4.5 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கிறது. நல்ல ரிசல்யூஷன் கொண்டது. 5 மெகாபிக்சல் பின் பக்க காமிரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் பக்க காமிரா கொண்டிருக்கிறது. இதன் பின் பக்கத்தில் செல்ஃபிக்கான தனி பட்டன் இருகிறதார். புகைப்படத்தை குரல் வழியே கட்டுப்படுதலாம்.
ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4. கொண்டுள்ளது.பின்னர் ஆண்ட்ராய்டு லாலிபாப்பிற்கு மேம்படுத்திக்கொள்ளலாம். 3ஜி வசதி கொண்டது.
ஐரிஸ் பியல் 25 மாதிரி 5 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கிறது. காமிரா சிப் சென்சார் கொண்ட பின் பக்க காமிரா மற்றும் முன் பக்க காமிரா உள்ளது. இதன் பேட்டரி 15 நிமிட தொடர் பேசும் ஆற்றல் கொண்டதாக லாவா சொல்கிறது. 4 ஜிபி சேமிப்புத்திறன் கொண்டது. ரூ.6,541 மற்றும் ரூ.5,666 விலையில் கிடைக்கின்றன.

—-

தமிழ் இந்துவில் எழுதியது

1look

கூட்டத்தில் நண்பர்களை தேட உதவும் எளிமையான செயலி

இதோ இன்னொரு முட்டாள்தனமான செயலி, ஆனால் இதை நிச்சயம் நீங்கள் விரும்புவீர்கள் – இப்படி தான் ஸ்மார்ட்போன் உலகிற்கான புதிய செயலியான லுக்பாரை (LookFor ) அதனை உருவாக்கியுள்ள லோகன் ரைலே அறிமுகம் செய்கிறார்.

எல்லாமே ஸ்மார்ட் அடைமொழியுடன் அறிமுகமாகி கொண்டிருக்கும் உலகில் ஸ்மார்ட்போன்களின் உலகில் மட்டும் முட்டாள்த்தனம் எனும் வர்னணை மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. பல வடிவமைப்பாளர்கள், புத்திசாலித்தனமானது என்றெல்லாம் மார்தட்டிக்கொள்ளாமல், இது கொஞ்சம் மடத்தனமான செயலி என்று சற்றே கூலாக தங்கள் புதிய செயலிகளை முன் வைக்கின்றனர்.

அதாவது, எங்கள் செயலி அதை செய்யும், இதை செய்யும் என்றெல்லாம் ஓவராக பேசமாமல், கொஞ்சம் விளையாட்டுத்தனமாக முட்டாள் செயலிகளாக இவை அறிமுகம் செய்யப்பட்டாலும் இவை முற்றிலும் பயனில்லாதவை என்று சொல்லிவிட முடியாது. இந்த செயலிகளும் நிச்சயம் பயனுள்ளவை தான்,.ஆனால் அந்த பயன்பாடு குறிப்பிட்ட நோக்கம் மற்றும் வரம்பு சார்ந்தது.

எல்லாவற்றுக்கும் மேல் இந்த செயலிகள் நிச்சயம் முதல் பார்வையில் உங்களை கவர்ந்திழுத்து குறைந்தபட்சம் அட போட வைக்கும்.
சமீபத்திய அறிமுகமான லுக் பார் இதற்கு அழகான உதாரணம்.
உலகின் மடத்தனமான இந்த செயலி, எந்த கூட்டத்திலும் உங்கள் நண்பர்களை அடையாளம் காண உதவுகிறது. எப்படி?
1look1
இந்த செயலியை பயன்படுத்த தீர்மானித்து அதை டவுன்லோடு செய்து கொண்டால் அதில் தேர்வு செய்ய அதிக அம்சங்க்ள் கிடையாது.அதில் இருப்பதெல்லாம் வண்ணங்கள் தான். அந்த வண்ணத்தில் ஒன்றை தேர்வு செய்து கொண்டால் உங்கள் போன் திரை அந்த வண்ணத்தில் பளிச் என கண் சிமிட்டும். அவ்வளவு தான் இந்த செயலி!
இதனால் என்ன பயன்? கூட்டமான இடங்களில் உங்கள் நண்பர்களை தேட இதை பயன்படுத்தலாம். அதாவது, பலர் கூடியுள்ள இடங்களில் இந்த செயலியை கிளிக் செய்து போனை கையுயர்த்தி காட்டினால், கூட்டத்தில் எங்கோ இருக்கும் நண்பர்களுக்கு, இதே நானிருக்கிறேன் என வண்ண போன் சிமிட்டல் மூலம் உணர்த்தலாம்.
இதெல்லாம் ஒரு செயலியா என கேட்கத்தோன்றுகிறதா? உண்மை தான் என இதன் உரிமையாளர் ரைலேவும் ஒப்புக்கொள்கிறார். ஆனாலும், கூட்டம் நிறைந்த இசை கச்சேரிகளிலோ, திரையரங்களிலோ உங்களை நண்பர்களுக்கு உணர்த்த இது கைகொடுக்கும் என்று நம்புகிறார்.

தேவைப்பட்டால் நண்பர்களுக்கு இந்த செயலி பற்றி குறுஞ்செய்தி அனுப்பி அதில் வண்ணத்தையும் குறிப்பிட்டு பின்னர் போனை உயர்த்தி காட்டலாம் என்கிறார்.
கூட்டம் நிறைந்த இடங்களில் நண்பர்களை தேட இது நிச்சயம் பயன்படும் என்று ரைலே உறுதியுடன் சொல்கிறார். ஏனெனில் அவருக்கு இப்படி ஒரு தேவை ஏற்பட்டதால் தான் இந்த செயலியை உருவாக்கும் எண்ணமே உண்டானதாம்.

இசை விழா ஒன்றில் பங்கேற்ற போது அந்த கூட்டத்தில் நண்பர்கள் இருக்கின்றனரா என தேடிப்பார்க்க ஒரு எளிய வழி தேவை என உணர்ந்த போது , இப்படி போனை உயர்த்தி காட்டி உணர்த்தலாம் என தோன்றியதாக ரைலே கூறியுள்ளார்.

அதன் பிறகு இந்த எண்ணத்துடன் இணைய நிதி திரட்டும் மேடையான கிக்ஸ்டார்ட்டரில் இரு பக்கத்தை அமைத்து ஆதரவு திரட்டி இப்போது ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டிற்காக லுக் பார் செயலியை அறிமுகம் செய்துள்ளார்- மிகவும் புத்திசாலித்தனமாக முட்டாள் செயலி எனும் வர்னணையுடன்!.

லுக் பார் செயலி:https://play.google.com/store/apps/details?id=lookfor.retroproof.net.lookfor

——

உள்ளங்கையில் திரையுலகை கொண்டுவரும் செயலி !

எல்லாவற்றுக்கும் ஒரு செயலி உண்டு என்பது ஆப்பிளின் ஐபோன் செயலிகளுக்கான விளம்பர வாசகம் மட்டும் அல்ல!இன்றைய மொபைல் உலகின் நிதர்சனமும் அது தான்.

எந்த துறையை எடுத்து கொண்டாலும்,எந்த சேவையை எடுத்து கொண்டாலும் அதற்கென ஒரு செயலி இருக்கிறது.பிரச்ச‌னைகளுக்கு தீர்வு தர செயலி இருக்கிறது.நட்சத்திரங்களுக்கு செயலி இருக்கிறது.

ஐபோன்,மற்றும் ஆன்ட்ராய்டு போன் உள்ளிட்ட ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் உள்ளங்கையில் இருந்தே எல்லாவற்றையும் அணுக உதவும் செயலிகளும் பிரபலமாக வருகின்றன.

இந்தியாவிலும் இப்போது விதவிதமான செயலிகள் உருவாக்கப்பட்டு வருகின்ற‌ன.

செல்போன் செயலிகளின் முக்கியத்துவத்தையும் தேவையையும் உணர்ந்தவர்களின் பட்டியலில் திரைப்படத்துறை மக்கள் தொடர்பாளர் நிகில் முருகனும் சேர்ந்திருக்கிறார்.சினிமா தகவல்கள் மற்றும் செய்திகளை உள்ளங்கக்கே கொன்டு வரும் வகையில் நிகில்ஸ்சினிமா என்ற பெயரில் செல்போன் செயலியை அவர் உருவாக்கி உள்ளார்.

நிகில் மக்கள் தொடர்பாளர்களில் ஒரு நட்சத்திரமான கருதப்படுபவர்.நட்சத்திரங்களை கையாளுவதில் அவரது சுறுசுறுப்பும் செயல்திற‌னும் இந்த அந்தஸ்தை பெற்று தந்துள்ளது என்றாலும் தொழில்நுட்பத்தில் அவருக்கு உள்ள பரிட்சயமும் அவற்றை பயன்படுத்துவதில் உள்ள ஆர்வமும் இதற்கு முக்கிய காரணம்.

தகவல்களை தருவதில் தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக தனது காரை அலுவலகமாக மாற்றி செயல்பட்டு வரும் நிகில் இணையத்தின் முக்கியத்தையும் நன்கறிந்திருப்பவர்.

வீடியோ பகிர்வு தளமான யூடியூப்பில் அவருக்கென தனி சேனல் இருக்கிற‌து.நிகில்ஸ் சினிமா என்ற பெயரில் இணையதளமும் வைத்திருக்கிறார்.

இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் தனக்கென தனி செல்போன் செயலியை உருவாக்கியுள்ளார்.


ஆப்பிளின் ஐபோன்,ஐபாட் டச்,ஐபேட், மற்றும் ஆன்டிராய்டு வசதி கொண்ட செல்போன்களில் இந்த செயலி செயல்படக்கூடியது.

திரைப்படத்துறை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் வழகும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய சினிமா செய்திகள்,திரைப்பட நட்சத்திரங்களின் புகைப்பட கேலரி,நிகழ்ச்சிகளின் நாட்காட்டி,பேட்டிகள்,முன்னோட்டங்கள் என தனித்தனி பகுதிகளை கொண்டுள்ள இந்த செயலியில் குறும்படங்களுக்கான பகுதியும் புதுமுகங்களுக்கான அறிமுக பகுதியும் இடம் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் செயல்பட்டு வரும் இந்திய சாப்ட்வேர் நிறுவனமான ஒய்2ஜிஸ்மீ லேப்ஸ் நிறுவனம் இதனை உருவாக்கி தந்துள்ளது.அர்ச்சனா பட்சிராஜனை இணை நிறுவனராக கொண்ட இந்நிறுவனம் இது.

செல்போனில் திரைப்படத்துறை தகவல்களை தருவதில் முன்னோடி முயற்சியான இந்த செயலியை சமீபத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் வெளியிட்டார்.

இண்டெர்நெட்டே கூட செல்போன் திரைக்கு இடம் பெயர்ந்து வருவதாக கருதப்படும் காலத்தில் சினிமா செய்தி மற்றும் தகவல்களை வழங்கும் இந்த செயலி வரவேற்புக்கிறியது.

ஆப்பிளின் ஆப் ஸ்டோர் மற்றும் ஆன்ட்ராய்டு ஸ்டோரில் இதனை டவுண்லோடு செய்யலாம்.

———-
iPhone, iPad and iPod touch download Link – http://bit.ly/MfesRa
Android Link – http://bit.ly/NWq2yY

—————-

இணையதள முகவரி;http://nikhilscinema.com/

டிவி பார்ப்பதை மாற்றிக்காட்டும் அற்புத செயலி.

செயலிகளில் சில அற்புதமானவை என்று வியக்க வைக்கும்.ஒரு சில செயலிகளோ மாயஜாலத்தன்மை மிக்கவையாக அதிசயிக்க வைத்துவிடும்.இன்டுநவ் செயலி இப்படி தான் அதிசயத்தில் ஆழ்த்துகிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஆட்டிடியூட் நிறுவனத்தின் துணை நிறுவனமான இன்டுநவ் இந்த செயலியை உருவாக்கியுள்ளது.

தொலைக்காட்சி ரசிகர்கள் தாங்கள் பார்த்து ரசிக்கும் நிகழ்ச்சிகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவும் இந்த செயலி அதனை செய்யும் விதம் தான் மாயஜாலமாக இருக்கிறது.

அதாவது டிவி பார்த்து கொண்டிருப்பவர்கள் தாங்கள் பார்க்கும் நிகழ்ச்சியை குறிப்பிட வேண்டிய தேவை கூட கிடையாதௌ.இந்த செயலியே அந்த நிகழ்ச்சி என்ன என்பதை தெரிந்து கொண்டு அது பற்றிய தகவலை நண்பர்களுக்கு தெரிவிக்கும்.நேயர்கள் பார்ப்பது என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி செயலி அதனை கண்டுபிடித்து விடும்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாடல் காட்சியை பார்த்ததுமே அந்த பாடலின் படம் எது என்பதை சிலர் சொல்லிவிடுவது உண்டல்லவா?அதே போலவே இந்த செயலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நொடிப்பொழுதில் கண்டு பிடித்து சொல்லி விடும்.

டிவி பார்த்து கொண்டிருக்கும் போது இந்த செயலியில் உள்ள பச்சை பட்டனை ஆன் செய்தால் போதும் அப்போது ஒளிபரப்பாவது என்ன நிகழ்ச்சி என்பதை செயலி கண்டுபிடித்து விடும்.

சில நேரங்கள் நிகழ்ச்சியை பார்ப்பவரே கூட பாதியில் இருந்து பார்ப்பதால் அது என்ன நிகழ்ச்சி என்று தெரியாமல் முழிக்ககூடும்.ஆனால் இந்த செயலி எந்த நிகழ்ச்சியையும் நச் என சொல்லிவிடும்.எந்த சேனலை மாற்றி எந்த நிகச்சியை காட்டினாலும் சரி இந்த செயலி சளைக்காமல் பதில் சொல்லும்.

எப்படி இது சாத்தியம்?

இன்டுநவ் உருவாக்கியுள்ள சவுண்டு பிரிண்ட் என்னும் தொழில்நுட்பமே இந்த மாயத்தின் பின்னே உள்ளது.செல்போன்களில் பயன்படும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் எப்படி இருப்பிடத்தை உணர்ந்து சொல்கிறதோ அது போலவே இந்த தொழில்நுட்பமும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒலி அலைகளை அலசி அந்த ஒலி அலைகளில் உள்ள தனித்தன்மைகளின் அடிப்படையில் ஒளிப்பரப்பாகு நிகழ்ச்சி எது என்பதை உணர்ந்து கொள்கிறது.

பிரித்து மேய்வது என்று சொல்வது போல சவுண்ட் பிரிண்ட் தொழில்நுட்பம் நிகழ்ச்சி ஒலிகளை சின்ன சின்ன பகுதிகளாக பிரித்து கொண்டு அதனை தன்வசம் உள்ள தகவல் பேழையில் ஒப்பிட்டு பார்த்து செயல்படுகிறது.இவ்வாறு கடந்த 5 ஆண்டுகளில் அமெரிக்க தொலைகாட்சிகளில்  ஒளிபரப்பான  அனைத்தையும் தனது தகவல் பேழையில் சவுண்ட்பிரிண்ட் கொண்டுள்ளது.அதாவது 14 கோடி நிமிடங்களுக்கு நிகரான நிகழ்ச்சி தகவல்கள் இதனிடம் உள்ளது.

எனவே எந்த சேனலில் எந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானலும் சவுண்ட பிரிண்ட அறிந்து கொள்ளும்.

இதன் பயனாகவே டிவி பார்ப்பவர்கள் அந்த நிகழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால் நிகச்சியின் பெயரை கூட குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.செயலியை ஆன் செய்தால் அதுவே நிகழ்ச்சி பற்றிய தகவலை தெரிவித்துவிடும்.

எல்லாம் சரி,இப்படி பகிர்ந்து கொள்வதால் என்ன பயன்?

எதையும் நண்பர்களோடு பகிரும் பேஸ்புக் யுகத்தில் இந்த கேள்வியே அர்த்தமற்றது தான்.

டிவி நிகழ்ச்சிகளை தனியே பார்த்து ரசிப்பதைவிட நாம் பார்த்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி பற்றிய விவரத்தை நண்பர்களுக்கு தெரிவிப்பது சுவாரஸ்யமானது தானே.அப்படியே நாம் டிவி பார்க்க அமரும் போது நண்பர்கள் எந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருக்கின்றனர் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

இதன் மூலம் புதிய நல்ல நிகழ்ச்சிகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்படலாம்.நம்முடைய நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் பரிந்துரைக்கும் பல நிகழ்ச்சிகள நமக்கு பிடித்தமானதாக இருக்கும் அல்லவா?ஆனால் பல நேரங்களில் நண்பர்கள் பாராட்டி சொல்லும் நிகழ்ச்சியை நாம் பார்க்க மற்ந்திருப்போம்.பின்னர் அடடா பார்க்கமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவோம்.

இந்த செயலியை பயன்படுத்தும் போது இத்தகைய ஏமாற்றம் ஏற்பட வழியே இல்லை.நம் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளை அப்போதே தெரிந்து கொண்டு விரும்பினால் பார்த்து ரசிக்கவும் செய்யலாம்.

மேலும் நம்முடைய சமூகத்தில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகலையும் சுலபமாக இனம் கண்டு கொள்ளலாம்.இதன் காரணமாக விளம்பர நிறுவங்கள் சொல்லும் பொய்யை கேட்டு ஏமாறவும் தேவையில்லை.

நம்மூரில் இது போன்ற செயலி வந்தால் அப்புறம் டிஆர்பி ரேட்டிங் கதைகள் எல்லாம் எடுபடாது.

இந்த செயலியை பயன்படுத்தும் போது நாம் பார்க்கும் நிகழ்ச்சிகள் தொடர்பான கூடுதல் விவரங்களை இனையம் மூலம் பெறவும் முடியும்.அதே போல நண்பர்கள் பார்த்த நிகழ்ச்சிகளை நெட்பிலிக்ஸ் போன்ற தளங்களில் இருந்து டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

ஆக டிவி பார்ப்பதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறது இந்த செயலி.