Category Archives: செல்பேசி

நோக்கியா 3310- ன் மறு அவதாரம்!

Nokia-3310-796x398புதிய அறிமுகங்கள் கோலோச்சும் செல்போன் உலகில், இப்போது பழைய போன் ஒன்றின் மறு அறிமுகம் தொடர்பான செய்தி தான் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நோக்கியாவின் 3310 மாடல் போன் தான் அது. ஒரு காலத்தில் அதிகம் விற்பனையான போனாக இருந்த இந்த போன், மீண்டும் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுவது உண்மை தானா? இந்த போன் அறிமுகமானால் அதன் விலை என்னவாக இருக்கும்? அதில் என்ன என்ன அம்சங்கள் இருக்கும்? என பலவித கேள்விகளோடு செல்போன் பிரியர்கள் மத்தியில் ஏற்படுத்திய இந்த போன் எதிர்பார்த்தபைடியே அறிமுகம் ஆகியிருக்கிறது. ஸ்மார்ட்போன் உலகில் இந்த பழைய போனால் வெற்றி பெற முடியுமா? எனும் கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும்,  அறிமுகமான 17 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த போன் இன்னமும் மறக்கப்படாமல் இருப்பதும், அதன் அறிமுகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதும் ஆச்சர்யமான விஷயம் தான்.

ஒரு காலத்தில் செல்போன் உலகில் நோக்கிய முன்னணி நிறுவனமாக கொடிகட்டிப்பறந்தாலும், ஸ்மார்ட் போன்களின் வருகைக்குப்பிறகு நிலைமை மாறியது. இதன் விளைவாக நோக்கியா முன்னணி இடத்தை இழந்து தடுமாறியதும், அதன் பிறகு அதன் செல்போன் வர்த்தகத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியதும், ஒரு கட்டத்தில் அதன் தயாரிப்பை நிறுத்திக்கொண்டதும் செல்போன் உலகின் பிளேஷ்பேக் தகவல்களாக நினைவுக்கு வரலாம். நோக்கியா போன்களை பயன்படுத்தியிருந்தவர்கள், என்ன தான் இருந்தாலும் நோக்கியா போன் போல வருமா என்று கூட அதன் புகழ் பாட முற்படலாம்.

நோக்கியா பற்றி பழம் பெருமை பேசலாமேத்தவிர, ஸ்மார்ட்போன் யுகத்தில் நோக்கியா போன்களுக்கு இடமில்லையே என்றும் நினைக்கலாம். ஆனால் நோக்கியா இரண்டாவது இன்னிசிற்கு தயாராகி வருகிறது. இம்மாத இறுதியில் நடைபெற உள்ள மொபைல் காங்கிரஸ் கண்காட்சியில் நோக்கியாவின் என் 3, 5 மற்றும் 6 போன்கள் அறிமுகமாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளன. இவை அனைத்தும், நோக்கியா பெயர் கொண்ட ஆண்ட்ராய்டு போன்களாக இருக்கும். இவற்றில் நோக்கியா 6 ஏற்கனவே சீனாவில் மட்டும் அறிமுகமாகி விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது.

நோக்கியா பிராண்டில் போன்களை அறிமுகம் செய்வதற்கான விநியோக உரிமை பெற்றுள்ள பின்லாந்து நிறுவனமான எச்.எம்.டீ. குளோபல் சார்பில் இந்த அறிமுகங்கள் நிகழ உள்ளன. இந்த புதிய மாடல்களோடு, பழைய 3310 மாடல் போனும் மறு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் உலகில் புதிய அறிமுகங்கள் தொடர்பான ரகசிய செய்திகளை கசிய விடுவதில் வல்லவராக கருதப்படும் தொழில்நுட்ப பத்திரிகையாளர் இவான் பிளாஸ் மூலம் வெளியான தகவல் என்பதால், இதை வெறும் வதந்தி என அலட்சியபடுத்த யாரும் தயாராக இல்லை. எனவே, நோக்கியா 3310 மாடல் மறு அவதார செய்தி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த பழைய போனின் வருகையை ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளனர். நவீன ஸ்மார்ட்போன் இருந்தால் என்ன, இரண்டாவது போனாக நோக்கியாவை வைத்துக்கொள்வேன் என்பது போல பலர் உற்சாகமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாவிட்டாலும், இதன் விலை உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக சூடான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், மொபைல் காங்கிரசில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது:  https://thenextweb.com/mobile/2017/02/26/the-nokia-3310-is-back-baby/#.tnw_yYfprOBn

AAmS6buஐபோனுக்கும், விதவிதமான ஆண்ட்ராய்டு போனுக்கும் பழக்கப்பட்ட தலைமுறைக்கு நோக்கியா பழைய அற்புதமாகவே தோன்றும். ஆனால் 17 ஆண்டுகளுக்கு பிறகும் நோக்கியா 3310 மாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. முதல் விஷயம் இந்த போன் அது அறிமுகமான காலத்தில் அதன் விலைப்பிரிவில் மற்ற போன்களில் எல்லாம் இல்லாத மேம்பட்ட அம்சங்களை கொண்டிருந்தது. கால்குலேட்டர், நெட்வொர்க் மானிட்டர், ஸ்டாப் வாட்ச், நினைவூட்டல் வசதி உள்ளிட்ட அம்சங்களை இந்த போன் கொண்டிருந்தது. இப்போது இவை சாதாரணமாக தோன்றினாலும், புத்தாயிரமாண்டின் துவக்கத்தில் இந்த அம்சங்கள் பிரம்மிப்பை ஏற்படுத்தவே செய்தன.

இவைத்தவிர, செல்போன் பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய பாம்பு விளையாட்டையும் இந்த போன் பெற்றிருந்தது. மேலும் நாட்கணக்கில் தாக்கு பிடிக்க கூடிய இந்த பேட்டரியும், கீழே போட்டாலும் உடையாக இதன் உறுதியான தன்மையும், இந்த போனை விரும்பத்திற்கு உரியதாக்கின. நீளமான குறுஞ்செய்திகளை டைப் செய்யும் வசதி, மேல் உரையை மாற்றிக்கொள்ளும் தன்மை உள்ளிட்ட அம்சங்கள் பற்றியும் நோக்கிய பிரியர்கள் பேசித்தீர்க்க தயாராக இருக்கின்றனர்.

1999 ல் அறிமுகமான நோக்கியாவின் 3210 மாடலின் அடுத்த கட்டமாக 2000 மாவது ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போன் நோக்கியாவின் சூப்பர் ஹிட் போனாக அமைந்தது. மொத்தம் 126 மில்லியன் போன்கள் விற்பனையானது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதே வரிசையில் வேறு சில ரகங்களும் அறிமுகமாயின.

நம்பகமானது, நீடித்து உழைக்க கூடியது , உடையாத தன்மை கொண்டது என்றெல்லாம் பலவிதங்களில் பாராட்டப்பட்ட இந்த போன், ஸ்மார்ட்போன் காலத்தில் மீண்டும் அவதாரம் எடுக்க இருப்பதாக கூறப்படும் தகவல் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளே இதன் செல்வாக்கிற்கு சான்று.

இந்த போனின் செல்வாக்கிற்கு இன்னொரு உதாரணம், பின்லாந்து நாட்டில் நோக்கியா 3310 – தேசிய இமோஜிகளில் ஒன்றாக 2015 ல் தேர்வு செய்துள்ளனர். உடைக்க முடியாத தன்மையை உணர்த்தும் அந்த இமோஜிக்கு இந்த போன் தான் அடையாளம். இவ்வளவு ஏன், பிரிட்டனைச்சேர்ந்த டேவ் மிட்சல் என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக இந்த போனை தான் பயன்படுத்தி வருகிறாராம். 2000 மாவது வாங்கி போன் இன்னமும் இயங்கி கொண்டிருப்பதோடு நடுவே ஆப்கானிஸ்தான், ஜோர்டன் உள்ளிட்ட நாடுகளில் போர் சூழலை தாக்குப்பிடித்ததோடு, ஒரு முறை வாஷிங்மிஷினிலும் துணிகளோடு சுற்றுவிட்டு வந்திருப்பதாக மிட்சல் பெருமையோடு பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

இணைய வசதி கொண்ட புதிய போனை மகன் வாங்கித்தந்திருந்தாலும் தனக்கு இந்த போனே போதும் என்கிறார் மிட்சல். நெருக்கடிகள் மிகுந்த நவீன வாழ்க்கையில், மீண்டும் இயற்கைக்கு திரும்புதல் எனும் கருத்து முன்வைக்கப்படுவது போல, செல்போன் உலகிலும் கூட எண்ணற்ற அம்சங்களும், எல்லையில்லா வசதிகளும் கொண்ட நவீன ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கத்திற்கு மத்தியில், அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட பழைய போன்களே சிறந்தவை எனும் ஏக்கமும் வலுப்பெற்று வருகிறது. அதனால் தான் நோக்கியா 3310 இன்னமும் பேசப்படக்கூடிய போனாக இருக்கிறதோ!

 

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது. ( அறிமுக செய்தி அப்டேட் செய்யப்பட்டுள்ளது)

இசை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் இளையராஜா செயலி!

unnamed1இசைப்பிரியர்களையும், இளையராஜா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்தியாக, இளையராஜா இசைக்கான பிரத்யேக செயலி அறிமுகம் ஆகியுள்ளது. மாஸ்ட்ரோஸ் மியூசிக் எனும் இந்த செயலி இளையராஜாவின் அதிகாரபூர்வ செயலி என்பது தான் இன்னும் விசேஷமானது. இந்த பிரத்யேக செயலிக்கான அறிவிப்பை இளையராஜவே தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இசைஞானி, ராகதேவன், மேஸ்ட்ரோ என போற்றப்படும் இளையராஜாவின் இசை மீது ரசிகர்களுக்கு இருக்கும் அளவில்லா ஈடுபாடு பற்றி அனைவரும் அறிந்தது தான். ராஜாவின் இசை ஊக்கமளிக்கும் தாலாட்டாக, சோகங்களில் இருந்து ஆறுதல் அளிக்கும் மருந்தாக, உள்ளத்தை உற்சாகத்தில் ஆழ்த்தும் உத்வேக இசையாக என பலவிதங்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மணிக்கணக்கில் இளையராஜா பாடல்களை கேட்டு மெய்மறந்திருக்கும் ரசிகர்கள் அநேகம் பேர் உள்ளனர்.

யூடியூப் தளத்தில் அதிகம் கேட்டு பகிரப்படும் பாடல்களாக இளையராஜா இசையமைத்த பாடல்கள் அமைந்துள்ளன. சவுண்ட் கிளவுட் உள்ளிட்ட தளங்களிலும் அவரது பாடல்களை கேட்டு ரசிக்கலாம். ஸ்மார்ட்போனில் கேட்டு ரசிக்கும் வகையில் இளையராஜா பாடல்களுக்காக என்று பல செயலிகளும் இருக்கின்றன.

இந்நிலையில், இளையராஜா தனது ரசிர்களுக்காக என்று பிரத்யேக செயலியை உருவாக்கி அறிமுகம் செய்திருக்கிறார். ’என்னுடைய முதல் அதிகாரபூர்வ செயலிக்கு வரவேற்கிறேன்” என்று திங்கள் கிழமை அன்று தனது பேஸ்புக் பக்கத்தில் இளையராஜா, அறிவித்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தார். உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்கள், இசைத்திருட்டு இல்லாமல் எனது இசையை உள்ளங்கையில் அணுகலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த செயலி மூலம் என்னுடன் தொடர்பு கொள்ளலாம், என்றும் இசை உருவாக்கம் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பேஸ்புக் பதிவு வெளியான சில மணி நேரங்களில் எல்லாம் ரசிகர்கள் உற்சாகமாகி ஆயிரக்கணக்கில் கைல் தெரிவித்திருந்தனர். எண்ணற்றவர்கள் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளவும் செய்தனர். பல ரசிகர்கள் ,இது போன்ற ஒரு செயலியை தான் எதிர்பார்த்திருந்தோம் என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தனர்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுக்கான வடிவங்களில் வெளியாகியுள்ள இந்த செயலி தொடர்பான தகவல்களை அளிக்க தனி இணையதளமும் (http://www.maestrosmusic.net/ ) உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளேஸ்டோரில் இருந்து ஆண்ட்ராய்டு போனுக்கான செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

இளையராஜா ரசிகர்களுக்கு இசை விருந்தளிக்கும் வகையில் செயலி அமைந்துள்ளது. எளிமையான வடிவமைப்பு கொண்டுள்ள செயலியில் ராஜாவின் இசையை பல்வேறு தலைப்புகளின் கீழ் அணுக முடிகிறது. இந்த செயலியை முழுமையாக பயன்படுத்த இதில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும். பேஸ்புக் அல்லது கூகுள் கணக்கு மூலம் உள்நுழைந்து உறுப்பினராகாலம். அல்லது பொபைல் எண் மூலம் உறுப்பினராகலாம்.

இளையாராஜா இசையில் உருவான பாடல்கள் , கர்நாடக இசை, சாஸ்திரிய இசை, பக்தி இசை, நாட்டுப்புற இசை, கருவிகள், காதல், துடிப்பான பாடல்கள், சோகப்பாடல்கள், மேற்கத்திய பாணி மற்றும் மெல்லிசை பாடல்கள் ஆகிய தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் தேவையான பகுதியை கிளிக் செய்து பாடல்களை கேட்டு ரசிக்கலாம். பாடல்களை கேட்கவும், தரவிறக்கம் செய்யவும் வசதி இருக்கிறது. பாடல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.

இவைத்தவிர, மாஸ்ட்ரோஸ் வழங்குவது, முன்னணியில் உள்ள பாடல்கள், வாரத்தின் சிறந்த பாடல் , மாதத்தின் இனிமையான குரல் ஆகிய தலைப்புகளின் கீழும் தேர்வுகள் இருக்கின்றன. செயலி அறிமுகமான கட்டத்தில் மாதத்தின் இனிய குரலாக சின்னக்குயில் சித்ரா ஈர்க்கிறார். வாரத்தின் சிறந்த பாடகாக நான் மகான் அல்ல படத்தின் மாலை சூடும் வேளை’ பாடல் அமைந்துள்ளது.

இவைத்தவிர தனுஷ் விருப்பங்கள், கமல் விருப்பங்கள் உள்ளிட்ட பிரபலமான தேர்வுகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.

இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து எளிதாக பாடல்களை தேர்வு செய்ய விரும்பும் ரசிகர்கள் கவலைப்படவே வேண்டாம். இதற்காக என்றே நூகம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அவரது இசையில் உருவான படங்கள் அனைத்தும் அகரவரிசைப்படி வரவேற்கின்றன. விரும்பிய படத்தை தேர்வு செய்து அதில் உள்ள பாடல்களை கேட்டு மகிழலாம். திரைப்படங்களின் பாடல் ஆல்பத்தின் முகப்பு படங்கள் திரை நினைவுகளில் மூழ்க வைக்கின்றன.

முகப்பு பக்கத்தின் மேல் பகுதியிலேயே இளையராஜாவின் இணைய வானலியையும் கேட்டு ரசிக்கலாம். பாடல்களை குறிப்பிட்டு தேடும் வசதியும் இருக்கிறது. இதில் விருப்ப தேர்வுகளை கொண்ட பாடல்கள் பட்டியலையும் உருவாக்கி கொள்ளலாம்.

தீவிர இளையராஜா ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தக்கூடிய பகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளேஸ்டோரில் செயலி நல்ல வரவேற்பை பெற்றிருப்பதுடன், ரசிகர்கள் உற்சாகமாக கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். பலரும் இந்த செயலிக்காக நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். செயலியின் வடிவமைப்பு பரவலாக பாராட்டப்பட்டாலும், ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்பு தொடர்பான கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். இன்னும் பிரத்யேகமான தேடல் வசதி தேவை என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அறிவிக்கை வசதி தேவை என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். வேற்று மொழி பாடல்களையும் எளிதாக அணுகும் வசதி தேவை என்றும் குறிப்பிட்டுள்ளனர். மொதத்தில் இளையராஜா ரசிகர்களை இந்த செயலி உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த செயலியில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு மேலும் மெருகேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

 

மேலும் விவரங்களுக்கு: http://www.maestrosmusic.net/

 

 

சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்களிப்பை சொல்லும் செயலி

muslimஸ்மார்ட்போன் செயலிகளில் பலவிதம் இருக்கின்றன. செயலிகள் உருவாக்கப்படும் நோக்கத்திற்கு ஏற்ப அவற்றின் பயன்பாடும் பலவிதமாக அமைகின்றன. பொதுவாக பயன்பாட்டு வகை செயலிகள், பொழுதுபோக்கு சார்ந்தவை, கேம்கள் ஆகிய ரகங்கள் தான் அதிகம் அறியப்பட்டவையாக இருக்கின்றன. ஆனால், குறிப்பிட்ட விஷயம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செயலிகளை பயன்படுத்தலாம். இதற்கு அழகான உதாரணமாக அமைகிறது முஸ்லீம் ஃபிரிடம் பைட்டர்ஸ் செயலி (‘Muslim Freedom Fighters’).

பெயர் உணர்த்தக்கூடியது போலவே இந்த செயலி இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை எடுத்துச்சொல்கிறது.

பன்முகத்தன்மை தான் இந்தியாவின் பலமாக இருந்து வருகிறது. இந்திய சுதந்திர போராட்டமும் இதற்கு சாட்சியாக இருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரத்திற்காக போராடிய போது சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத வேறுபாடுகள் இன்றி அதில் பங்கேற்றனர். இக்கால தலைமுறைக்கு இதை எடுத்துச்சொல்லும் வகையில் இந்த செயலி அமைந்துள்ளது.

ஐதாராபாத்தை சேர்ந்த மென்பொறியாளரான சையது காலீத் சைபுல்லா (Syed Khalid Saifullah ) இந்த செயலியை உருவாக்கியுள்ளார். இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பை ஒரு சில குழுக்கள் இருட்டடிப்பு செய்ய முயன்று வருவதாகவும், அதில் அவர்கள் வெற்றியும் பெற்று வரும் நிலையில், முஸ்லிம்களின் பங்களிப்பை புரிய வைக்கும் வகையில் இந்த செயலியை உருவாக்கியதாக காலீத் கூறுகிறார். பொதுவாகவே முஸ்லிம் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாகவும் , ஐந்து முஸ்லிம் சுதந்திர போராட்ட வீரர்கள் பெயரை கூறுமாறு கேட்டால் 95 சதவீதம் பேருக்கு அது சாத்தியமாவதில்லை என்றும் கூறும் காலீத், இந்த நிலையை போக்கவே, இந்த விஷயம் தொடர்பாக விரிவான தகவல்களை அளிக்கும் செயலியை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டதாக கூறுகிறார்.

இந்த எண்ணத்துடன் ஆய்வு செய்வதவர் ஆரம்ப்பத்தில் போதிய தகவல்கள் கிடைக்காமல் அல்லாடினாலும், பின்னர் சையது நஸீர் அகமது எனும் பத்திரிகையாளர், எழுத்தாளர் இந்திய விடுதலை போராட்ட இயக்கத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றி விவரித்து எழுதிய தி இம்மார்டல்ஸ் புத்தகத்தை கண்டறிந்தார். நூலாசிரியர் 20 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியா முழுவதும் ஆய்வு செய்து அரிய தகவல்களை சேகரித்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு 155 முஸ்லிம் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய தகவல்களை செயலியாக அமைத்துள்ளார். இந்த செயலியை இவர் உருவாக்கியுள்ள விதம் இதை மிகவும் சுவாரஸ்யமாக ஆக்குகிறது. சுதந்திர போராளிகள் தொடர்பான தகவல்கள் பெண்கள், வழக்கறிஞர்கள், மன்னர்கள், தியாகிகள், பத்திரிகையாளர்கள், படைப்பாளிகள், மதகுருமார்கள் என பல்வேறு தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தலைப்பை கிளிக் செய்தவுடன் அதில் பட்டியலிடப்பட்டுள்ள வீர்ர்களின் சுருக்கமான வாழ்க்கை சித்திரத்தை அறிமுகம் செய்து கொள்ளலாம். அதோடு ஒவ்வொரு வீர்ர்கள் தொடர்பான தேர்விலும் பயனாளிகள் பங்கேற்கலாம். அதாவது அவர்கள் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் இந்த தேர்வில் பங்கேற்கலாம். ஒவ்வொரு தேர்வாக சரியாக பதில் அளித்து அடுத்த வீர்ர் தேர்வுக்கு முன்னேறலாம். தேர்வில் பங்கேற்காமலே கூட தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்றாலும், தேர்வில் பங்கேற்று சரியான பதில்களை அளித்தால் செயலி மூலம் அதற்கான சான்றிதழையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த விவரங்களை நண்பர்களுடன் சமூக ஊடகத்திலும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த செயலியை பயன்படுத்த முதலில் அதில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

muslim2மிகவும் எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலி மூலம் நம்முடைய சுதந்திர போராட்ட வரலாற்று தகவல்களை சுவாரஸ்யமான முறையில் தெரிந்து கொள்ளலாம்.

முதல் சுதந்திர போர் என வர்ணிகப்படும் 1857 சிப்பாய் கிளர்ச்சியில் பங்கேற்ற பேகம் ஹஸ்ரத் மஹால், இந்தியாவின் முதல் பெண் அமைச்சரான மசுமா பேகம், பகத்சிங் விடுதலைக்காக சட்டப்போராட்டம் நடத்திய முகமது ஆசிப் அலி, இரு தேசம் கொள்கையை எதிர்த்த டாக்டர் சையது முகமது, மாணவராக இருக்கும் போதே சுதந்திர போராட்ட்த்தில் இணைந்த டாக்டர். சாதிக் அலி, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்ட டாக்டர்.குன்வர் முகமது அஷரப், சீர்திருத்த கருத்துக்களை முன்வைத்து போராடிய ஆகா சுல்தான் முகமது ஷா என சுதந்திர போராட்டத்தில் சுடர் விட்ட பல ஆளுமைகளை இந்த செயலி மூலம் அறிந்து கொள்ளலாம்.

மென்பொருள் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் மிக்க காலீத் 4 மாத காலம் முயற்சி செய்து இந்த செயலியை உருவாக்கியுள்ளார். இதில் உள்ள கேள்விகளை வடிவமைக்க அவரது நண்பரான அமானுல்லா கான் உதவியுள்ளார்.

மறக்கப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த விழிப்புணர்வை இந்த செயலி மூலம் ஏற்படுத்துவது மிகுந்த மனநிறைவை தருவதாக காலீத் சொல்கிறார். இந்த செயலியை உருவாக்குவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும், இதை மக்களிடம் கொண்டு செல்வது தான் சவாலாக இருக்கிறது என்கிறார். எனினும் இந்த செயலி மெல்ல கவனத்தை ஈர்த்து வருகிறது.

சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 6,400 பேருக்கு மேல் இதை தரவிறக்கம் செய்து பயன்படுத்தியிருப்பதாக சொல்கிறார். அதுமட்டும் அல்லாமல், பலரும் ஆர்வத்துடன் இதில் உள்ள தேர்வில் பங்கேற்று வருவதாகவும் அவர் உற்சாகத்துடன் சொல்கிறார்.

இந்த செயலிக்கு கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து தமிழ், உருது உள்ளிட்ட மொழிகளிலும் இதை கொண்டு வர இருப்பதாக சொல்கிறார். ஏற்கனவே பலரிடம் இருந்து இதற்கான கோரிக்கைகள் வரத்துவங்கியிருக்கின்றன.

அடுத்த கட்டமாக, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் செயலியை பிரபல சமூக செயற்பாட்டாளரான டாக்டர்.ராம் புனைனி (Dr.Ram Puniani) வழிகாட்டுதலுடன் உருவாக்கி இருப்பதாகவும், குடியரசு தினத்தன்று இதை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

 

ஆண்ட்ராய்டு போன்களில் தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.raylabs.muslimfreedomfighters

 

 

 

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது

 

மாற்று வழியில் ரெயில் டிக்கெட் அளிக்கும் செயலி

இந்திய ரெயில்வேடில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது சில நேரங்களில் ஜாக்பெட் அடித்தது போல ஆகிவிடும்.பல நேரங்களில் தேவையான டிக்கெட்டை முன்பதிவு செய்யமுடியாமல் அல்லாட நேரலாம்.அல்லது காத்திருப்பு பட்டியலில் தவிக்க வேண்டியிருக்கும்.

இந்த சிக்கலுக்கான தீர்வாக ஒரு புதிய செயலியை இரண்டு பொறியில் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
டிக்கெட் முன்பதிவை எளிதாக்கும் செயலிகள் ஏற்கனவே இருந்தாலும் இந்த செயலி கொஞ்சம் புதுமையாக செயல்பட்டு டிக்கெட் கிடைக்காத நேரங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக வழி செய்கிறது. அது எப்படி சாத்தியம் எனில் இந்த செயலி மாற்று வழியில் டிக்கெட்கள் இருக்கின்றனவா என்று கண்டறிந்து அவற்றை முன்பதிவு செய்ய வழிவகுக்கிறது.

இந்திய ரெயில்வே டிக்கெட் முன்பதிவு வசதியில் உள்ள பலரும் அறிந்திராத ஒரு சின்ன ரகசியத்தை அடிப்படையாக கொண்டு இதை சாத்தியமாக்கித்தருகிறது டிரைன் ஜுக்கட் ( ‘Ticket Jugaad’) எனும் இந்த செயலி.
பொதுவாக டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் இருந்து நாம் செல்ல வேண்டிய ரெயில் நிலையத்திற்கான தகவலை சமர்பிக்க வேண்டும்.அதன் பின் அந்த இடத்திற்கான டிக்கெட் இருக்கிறதா எனும் தகவல் தெரிவிக்கப்படும். அதிக தேவை இருந்தால் டிக்கெட் கிடைக்காமல் போகலாம்.

ஆனால், அதே நாளில் அதே ரெயிலில் முன்பதிவாகாத டிக்கெட்களும் இருக்கலாம் தெரியுமா? எப்படி என்றால், டிக்கெட் முன்பதிவில் ஒவ்வொரு ரெயில் நிலையத்திற்குமான ஒதுக்கீடு இருக்கிறது.எனவே நீங்கள் குறிப்பிட்ட நிலையத்தில் இருந்து பதிவு செய்யும் போது காத்திருப்பு பட்டியல் தோன்றினாலும் அதே நேரத்தில், அதே பாதையில் அந்த நிலையத்திற்கு முன்னதாக அல்லது அடுத்ததாக உள்ள ரெயில் நிலையத்தின் ஒதுக்கீட்டில் டிக்கெட்கள் காலியாக இருக்கலாம்.

இதை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்த செயலி, குறிப்பிட்ட பாதையில் மாற்று ரெயில் நிலையங்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியுமா என பார்த்து அதற்கு வழி செய்கிறது.
ஒரு சில ஏஜெண்ட்கள் இந்த முறையின் மூலம் தாங்களே டிக்கெட்கள் வேறு ஏதேனும் நிலையத்தில் உள்ளனவா என கண்டறிந்து முன்பதிவு செய்து தருவதும் உண்டு. ஆனால் இதற்காக அதிக கட்டணமும் வசூலித்துக்கொள்வார்கள்.

இந்த செயலி, இத்தகைய மாற்று நிலையங்களில் டிக்கெட்களை நிலையை தேடி ஒப்பிட்டு முன்பதிவு நிலையை அளிக்க முற்படுவதால் பல நேரங்களில் காத்திருப்பு பட்டியலை தாவி குதித்துவிடலாம்.
ஐஐடி காராக்பூர் மாணவரான ரூணால் ஜாஜு தனது சகோதரர் பல்ட்வாவுடன் சேர்ந்து இந்த செயலியை உருவாக்கியுள்ளார்.

ஜாஜு ஒருமுறை மேற்குவங்கத்தின் கராக்பூரில் இருந்து சொந்த ஊரான அவுரங்காபாத்திற்கு சென்ற போது டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் அல்லாடியிருக்கிறார். ஆனால் பயண நாளில் பார்த்தால் அதே ரெயிலில் இருக்கைகள் காலியாக இருந்திருக்கின்றன. இந்த அனுபவத்திற்கு பிறகே பலருக்கு தேவை இருக்கும் நிலையில் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்படாமல் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் டிரைன் ஜுக்கட் செயலியை உருவாக்கினார். அவரது சகோதராரான என்.ஐ.டி மாணவர் இதற்கான கோடை உருவாக்கிதந்தார்.

இந்த செயலிக்காக ஸ்டார்ட் அப் போட்டியில் பரிசும் வென்றுள்ளார். ஆண்டாய்டுக்கு முதலில் அறிமுகமாகியுள்ளது. டிக்கெட் பதிவுக்கு கிளியர்டிப்புடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி இரண்டு விதமான முன் பதிவு விவரங்கள் அளிக்கிறது. குறிப்பிட்ட இடத்திற்கான மாற்றுவழிகள் மற்றும் அங்குள்ள டிக்கெட்களை காட்டுகிறது.அதே போல ரெயில் மார்கத்தில் உள்ள மாற்று வழிகளை அதில் உள்ள நிலையங்கள் மற்றும் ரெயில் நேரங்களை காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு:https://play.google.com/store/apps/details?id=com.ticketjugaad

wa1

தண்ணீர் குடிக்க மறக்கிறீர்களா? நினைவூட்ட ஒரு செயலி

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் நாம் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்வது எப்படி? வேலை பளு, மறதி என பல காரணங்களினால் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் நிலையை எப்படி தவிர்ப்பது?
இந்த கேள்வி உங்கள் மனதிலும் இருந்தால் அதற்கான பதில் அழகான செயலி வடிவில் இருக்கிறது தெரியுமா?
ஆம்,மறக்காமல் தண்ணீர் குடிக்க நினைவூட்டுவதற்காக என்றே வாட்டர் யுவர் பாடி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் செயல்படு இந்த செயலி நீங்கள் எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவூட்டுக்கிறது.

இதை கச்சிதமாக செய்ய முதலில் இந்த செயலியில் உங்கள் உடல் எடையை சமர்பிக்க வேண்டும். அதனடைப்படையில் உங்களுக்கு தேவையான தண்ணீர் அளவை தீர்மானித்துக்கொள்கிறது.
அடுத்ததாக செயலியில் உள்ள தண்ணீர் பாட்டில் மற்றும் கிளாஸ்களின் அளவை தேர்வு செய்ய வேண்டும். இந்த அளவை கொண்டு நீங்கள் ஒவ்வொரு வேளையும் பருக வேண்டிய தண்ணீரின் அளவை செயலி புரிந்து கொண்டு, அதற்கான நேரம் வந்ததும் சரியாக நினைவூட்டும். செயலியில் தோன்றும் கிளாஸ் அளவு பொருத்தமாக இல்லை என்றால், உங்களிடம் உள்ள கிளாஸ் அளவை குறிப்பிடுவதற்கான வசதியும் இருக்கிறது. கிளாஸ் அளவை மட்டும் அல்லாமல், எப்போது தண்ணீர் குடிக்க துவங்குகிறீர்கள் , நாள் முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட வேண்டுமா? போன்ற விவரங்களையும் நாமே செட் செய்து கொள்ளலாம்.

காலையில் 10 மணிக்கு முதல் கிளாஸ் தண்ணீர் குடித்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அதன் பிறகு உங்களுக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ இந்த செயலி அடுத்ததாக எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என நினைவூட்டும்.
கோடை காலம் என்றால் அடிக்கடி தாகம் எடுத்துக்கொண்டே இருக்கும் என்பதால் தண்ணீர் குடிக்க மறக்க மாட்டோம். ஆனால் மற்ற காலங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் இந்த செயலியை ஸ்மார்ட்போனில் வைத்திருந்தால் அது உற்ற நண்பன் போல சரியான நேரங்களில் நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.

தண்ணீர் குடிப்பது இயல்பான தேவையாக இருந்தாலும் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது என்பது ஒரு பிரச்சனையாகவே இருக்கிறது. சீரான அளவு தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தும் நிலையில் இதற்காக என்றே ஒரு செயலி இருப்பது நல்ல விஷயம் தான். தண்ணீர் குடிப்பதை மறக்காமல் இருக்க உதவுவதோடு அதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகிறது இந்த செயலி. சும்மா இல்லை, தண்ணீர் அளவு பற்றிய விவரங்களை வரைபட அறிக்கையாக தந்து அசத்துகிறது. எனவே பிடன்ஸ் செயலிகள் பட்டியலில் இந்த செயலியையும் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.northpark.drinkwater&hl=en

——-