Category Archives: myspace

ஒரு கைதியின் “மைஸ்பேஸ்’

knight1ஒரு கைதி நம்மிடம் இருந்து நகைச்சுவை உணர்வை எதிர்பார்க்க வாய்ப்பில்லை.அதிலும் அந்தக் கைதி மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளவராக இருக்கும் பட்சத்தில் மற்றவர்களிடம் இருந்து அவர் வேண்டுவது பரிவும், பட்சாதாபமுமாக தான் இருக்க வேண்டும். இப்படி நினைக்கத் தோன்றுவது இயல்பானதுதான்.
ஆனால் அமெரிக்க கைதி ஒருவரோ முற்றிலும் மாறுபட்ட வேண்டு கோளை முன் வைத்திருக்கிறார். “எல்லோரும் எனக்கொரு ஜோக் அனுப்பி வையுங்கள்’ என்னும் வேண்டுகோளை விடுத்திருக்கிறார். இதற்காக ஒரு போட்டியையும் அறிவித்திருக்கிறார்.
நிச்சயமாக மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள கைதியிடம் இருந்து எதிர்பார்க்க கூடியது அல்லதான் இது!
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் நீதியின் கால்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்பதை (அ) குற்றத்துக்கு மனம் வருந்தி தங்கள் கதையை டைரியாக எழுதுவதை தான் இதுவரை அறிந்திருக்கிறோம். டெக்சாஸ் சிறையில் தனது வாழ்க்கையின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் “பேட்ரிக் நைட்’ மன்னிப்பும் கோரவில்லை. டைரியும் எழுதவில்லை. அவர் மைஸ்பேஸ் பக்கத்தை அமைத்து சிறந்த ஜோக்கை தேர்வு செய்வதற்கான போட்டியை நடத்திக்கொண்டிருக்கிறார்.
பேட்ரிக்கின் கதையை கேட்டால் உள்ளம் கொதித்துப்போகும். தொடர் கொலைகளை செய்த ஈவு இரக்கமற்ற மனிதர்அவர். 1991ல் வால்டர் மற்றும் மேரி ஆன் வெர்னர் ஆகியோரை தூக்கிலிடுவது போல அவர் கொலை செய்து திடுக்கிட வைத்தார். விசாரணையின் போது குற்றவாளி என்பது நிரூபணமாகி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதிலிருந்து அவர் டெக்சாஸ் சிறையில் கழித்து வருகிறார்.
அமெரிக்கா முழுவதும் மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், நைட்டின் வழக்கு தேசத்தின் கவனத்தை பெரிதாக கவர்ந்து விடவில்லை. இதனிடையே அவரைப்பற்றி கவனிக்க வைத்தது. சிறையில் சக கைதிகளோடு நைட் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம்தான்.
மரண தண்டனை கைதிகளுக்கான வசதிகள் மிக மோசமாக இருப்பதை கண்டித்து நைட் உள்ளிட்ட பத்து கைதிகள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த போராட்டம் ஜனவரியில் நடந்தது. இந்த போராட்டம் எதனையும் மாற்றிவிடவில்லை. நைட்டுக்கு மரண தண்டனை நிறை வேற்றப்படும் நாள் நெருங்கிக் கொண்டு வந்த நிலையில் தான் அவர் அந்த விநோதமான வேண்டுகோளை வெளியிட்டார்.
சிறந்த ஜோக்கை அனுப்பி வைத்தால் அவற்றில் மிகச்சிறந்த ஜோக்கை தேர்வு செய்யப்போவதாக அவர் தெரிவித்தார்.
மரண தண்டனை கைதிகளிடம் கடைசி ஆசை கேட்கப்படும் அல்லவா, அப்போது இந்த ஜோக்கை தெரிவிப்பேன் என்று நைட் அறிவித்துள்ளார்.
மரண தண்டனை உறுதியாகி விட்டது. மறுபரிசீலனை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன. இந் நிலையில் நான் கோருவது கருணை யையோ அனுதாபத்தையோ அல்ல என்று கூறும் நைட், இறுதி நாட்களை லேசான மனத்துடன் கழித்து விடை பெறவே விரும்புகிறேன். அதற்காகவே ஜோக்குகளை அனுப்பி வைக்க கேட்கிறேன் என்று தனது செயலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
வெளி உலகுடன் தொடர்பு இல்லாமல் இருக்கும் கைதியான அவரது இந்த விருப்பம் பரவலாக மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக அவர் மைஸ்பேஸ் வழியை நாடியிருக்கிறார்.
இளைஞர்களின் இணைய இருப்பிடமாக விளங்கும் மைஸ்பேஸ் கருத்து பரிமாற்றத்திற்கும், நண்பர்களை தேடிக்கொள்வதற்கும் ஏற்ற இடமாக திகழ்கிறது. மைஸ் பேசில் ஒரு பக்கத்தை அமைத்துக் கொண்டால் மன உணர்வுகளை எளிதாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு பரிந்துரையின் அடிப்படை யில் புதிய நண்பர்களை சுலபமாக தேடிக்கொள்ளலாம்.
நைட்டும் தன் சார்பாக ஒரு மைஸ்பேஸ் பக்கத்தை உருவாக்கி கொண்டு அதன் மூலம் ஜோக் போட்டி வேண்டுகோளை விடுத்துள்ளார். (கைதிகளுக்கு இன்டெர்நெட்டை பயன்படுத்தும் வசதியில்லை என்பதால் அவர் சார்பாக வெளியே உள்ள நண்பர்கள் மைஸ்பேஸ் தளத் தில் பக்கத்தை அமைத்துள்ளனர்).
இந்த போட்டி பற்றி நண்பர்களுக்கு தெரிவியுங்கள் என்னும் அவருடைய வேண்டுகோளை ஏற்று பலர் ஜோக்குகளை அனுப்பி உள்ளனர். இதுவரை அவருக்கு 73 நண்பர்கள் கிடைத்துள்ளனர்.
டெட் மேன் லாஃபிங் என்னும் பெயரில் நைட் மைஸ்பேஸ் பக்கம் அடைக்கப்பட்டுள்ளது.
டெட் மேன் வாக்கிங் என்ற பெயரில் புகழ்பெற்ற நாவல் ஒன்று இருக்கிறது. ஹெலன் பிரிஜியன் என்னும் கன்னியாஸ்திரி எழுதிய அந்த நாவல் மரண தண்டனை தொடர்பானது. அந்த நாவல் தலைப்பை அடியொற்றி டெட்மேன் லாஃபிங் என தனது முயற்சிக்கு அவர் பெயர் சூட்டியுள்ளார். மரண தண்டனைக்கு எதிரான தளங்கள் நைட்டின் இந்த முயற்சியை குறிப்பிட்டு அவர் தளத்திற்கு இணைப்பும் வழங்கியுள்ளன.

—————–

(பேட்ரிக் நைட் மைஸ்பேஸ் பக்கத்தை அமைத்த போது எழுதப்பட்டது. அதன் பிறகு அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.அவருடைய மைஸ்பேஸ் பக்கம் இன்னமும் இருக்கிற்து. அவரைப்பற்றிய குறிப்புகள் பகுதியில் , தொழில் என்பத‌ற்கு அருகே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.)
————-

link;
http://www.myspace.com/prisonuprise

வீட்டுக்கு வீடு இணையதளம்-2

lifeat1குடியிருப்புக்கு என்று ஒரு வலைப்பின்னல் தளம் இருக்கும் பட்சத்தில் அங்கு வசிப்பவர்களின் பழக்க வழக்கங்களை அது முழுவதுமாக மாற்றி விடும் வாய்ப்பு இருப்பதாக சொல்லலாம்! மாற்றங்கள் என்றால் வெளிப்படையாக தெரியக் கூடிய தலைகீழ் மாற்றங்கள் அல்ல. மிகவும் நுட்பமான மாற்றங்கள்!
.
வலைப்பின்னல் தளம் வந்த பிறகும் கூட குடியிருப்பவர்கள் முன்போல சக குடியிருப்புவாசிகளை கண்டும் காணாமல் தங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தியபடி நகர வாழ்க்கைக்குரிய இயந்திரகதியில் தான் இருக்கப் போகிறார்கள்.
ஆனால் வலைப்பின்னல் தளத்தில் தங்களுக்கான இருப்பை ஏற்படுத்திக் கொண்டு விட்டார்கள் என்றால் அதன் பின்னர் தொடர்ச்சியாக பல மாயங்கள் நிகழலாம்-நிகழும்!

குறிப்பிட்ட ஒவ்வொருவரும் தங்களுக்கான உறுப்பினர் பக்கத்தை அமைத்துக் கொண்டு அதில் தங்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ளலாம். அறிமுகச் சித்திரத்தில் இருந்து தொடங்கி நேற்று பார்த்த சீரியலில் இருந்து படித்த புத்தகம், கேட்ட கிசுகிசு என எந்த தகவலை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம். விஷயம் என்ன வென்றால், நீங்கள் உங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறீர்கள் என்பதை இதன் வழியே உணர்த்தி விடுகின்றீர். அதாவது பேசத் தயாராக இருப்பதை தெரியப்படுத்துகிறீர்கள்!

இதே போல குடியிருப்பின் மற்ற வீடுகளில் வசிப்பவர்களும் அவர்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டிருப்பார்கள் அல்லவா? அவற்றை நீங்கள் படித்துப் பார்க்கலாம். அதில் ஏதாவது ஒரு விஷயம் உங்களை கவரும் அல்லவா, அது பற்றி உடனே ஒரு பின்னூட்டம் செய்யலாம்-பின்னூட்டம் என்றால் ஒரு கருத்துக்கு பதில் கருத்து தெரிவிக்கும் சம்பிரதாயம் என்று பொருள்-வலைப்பின்னல் உலகில் பிரபலமாக இருக்கும்“ வார்த்தை இது.

இப்படி வலைப்பக்கத்தை பார்ப்பதும், அதற்கு கருத்து சொல்வதும் ஒரு தொடர் உரையாடலுக்கு வழி வகுக்கும்.
இன்று எல்லோர் வீட்டிலும் கம்ப்யூட்டர் இருக்கிறது-கம்ப்யூட்டர் இருந்தால் இன்டெர்நெட் இணைப்பும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதே போல அலுவலகத்தில் இருந்தும் கூட இதற்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கலாம்.

குடியிருப்பில் வசிப்பவர்கள் நேரில் பார்த்துப் பேசி, சுக துக்கங்களை பரிமாறிக் கொள்ளத்தானே நேரம் இல்லாமல் இருக்கிறது. ஆனால் இன்டெர்நெட்டில் உலாவுவதற்கும், இ-மெயில் அனுப்புவதற்கும் பழகியவர்கள் வலைப்பின்னல் தளத்தில் இதற்காக கொஞ்சம் நேரத்தை செலவிடலாம் தானே!

சங்கீதத்தில் ஆர்வம் கொண்ட ஒருவர், ஏழாவது மாடியில் இருக்கும் பெண்மணிக்கும் இசையில் அதீத ஈடுபாடு இருப்பதை அவரது வலைப்பின்னல் பக்கத்தின் மூலம் தெரிந்து கொண்டால், அந்த ஆர்வமே அவர்களை இணைக்கும் பாலமாகி விடும் அல்லவா? தினந்தோறும் (அ) நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் பரஸ்பரம் இசையார்வம் பற்றிய தகவலை பகிர்ந்து கொள்ளலாம் இல்லையா? சங்கீத சீசனின்போது பேசி வைத்துக் கொண்டு ஒன்றாக கச்சேரிக்கு சென்று வரலாமே! இதே போல ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் பக்தி சார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டு கோயிலுக்கு ஒன்றாக போய் வரலாம். இந்த நட்புறவு கொஞ்சம் விரிவடைந்து இசையார்வம் கொண்ட ஏழெட்டு பேர் ஒரு குழுவை அமைத்துக் கொள்ளலாம்.

இது ஒரு உதாரணம்தான். வலைப் பின்னல் பக்கங்கள் இன்னும் எத்தனையோ விதங்களில் உறவுப் பாலம் அமைத்து தரவல்லவை! பிள்ளைகளின் படிப்பு மற்றும் வீட்டுப்பாடம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி விலை உயர்வு, நாட்டு நடப்பு விவாதம் என அவரவர் ஈடுபாட்டிற்கு ஏற்ப எண்ணற்ற விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை பகிர்ந்து கொள்வதற்கான வழியை வலைப்பின்னல் பக்கம் உருவாக்கித் தந்து விடுகிறது.

இன்னும் ஒரு படி முன்னேறி குடியிருப்பு சங்கத்திற்கான பொதுப் பக்கத்தை உருவாக்கி பராமரிப்பு, சங்க கூட்டம், பொது நிகழ்ச்சி போன்ற தகவல்களையும் பரிமாறிக் கொள்ளலாம். அலுவலகம் செல்பவர் களும், வீட்டில் உள்ள ஆண்களும், இளைஞர்களும் கூட வலைப்பின்னல் பக்கம் மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொண்டு நட்புறவை வளர்த்துக் கொள்ளலாம்.

பக்கத்து வீட்டில் இருப்பவருக்கு இ-மெயில் அனுப்பி தொடர்பு கொள்ள நேர்வது விசித்திரமாக தோன்றலாம். அதை விட மாடிப்படி ஏறும் போது மூன்றாம் மாடியில் இருப்பவரை சந்திக்கும் போது நேற்று ஒரு இ-மெயில் அனுப்பினேனே என்று கேட்பது எப்படி இருக்கும் நினைத்துப் பாருங்கள். இல்லை, நம்மை பார்த்ததுமே அவர் நேற்று உங்கள் வலைப்பின்னல் பக்கத்தை பார்த்தேன். விலைவாசி பற்றி சரியாக சொல்லியிருந்தீர்கள் என பேச ஆரம்பித்தால் எப்படி இருக்கும்!

ஒரே இடத்தில் வசிப்பவர்கள், பரஸ்பரம் அறிந்து கொள்ளாமல் இருக்கும் நிலையை மாற்றி சுய அறிமுகத்தை சாத்தியமாக்கி தொடர்பு கொள்ள வலைப்பின்னல் தளம், சந்திப்பு மையமாக இருக்கும் என தாராளமாக நம்பலாம். இவையெல்லாம் சாத்தியமா? என்ற சந்தேகம் தேவையற்றது. காரணம் அமெரிக்காவில் உள்ள ‘லைப் அட்’ நிறுவனம் குடியிருப்புகள் தங்களுக் கான வலைப்பின்னல் தளங்களை உருவாக்கி கொள்ளும் சேவையை அளித்து வருகிறது. கட்டண அடிப்படையில் தன்னை நாடி வரும் குடியிருப்புகள் சார்பில் வலைப் பின்னல் தளத்தை அமைத்துக் கொடுத்து பராமரிப்பு சேவையையும் இந்நிறுவனம் வழங்குகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இந்த சேவையை விரும்பி பயன்படுத்தி வருகின்றன.

இதன் நிறுவனரான மேத்யூகோல்ஸ்டீன், ரியல் எஸ்டேட் துறையில் பணியாற்றியவர். புதிதாக குடியிருப்பு பகுதிகளுக்கு வருபவர்கள் அங்குள்ளவர்களை அறிமுகம் செய்து கொள்ள போதுமான வழிகள் இல்லாமல் இருப்பதை கவனித்த இவர், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பரஸ்பரம் தொடர்பு கொள்ள ஒரு வழி வேண்டும் என சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் ஒவ்வொரு குடியிருப்புக்குமான வலைப்பின்னல் சேவையை வழங்கும் எண்ணம் இவருக்கு ஏற்பட்டது.

———-

link;
www.lifeat.com

வீட்டுக்கு வீடு இணையதளம்-1

lifeatசொந்தமாக இணையதளம் அமைத்துக் கொள்வதன் அவசியத்தையும், அதனால் ஏற்படக் கூடிய அணுகூலங்களையும் விட்டுத் தள்ளுங்கள். தனிப்பட்ட இணைய தளங்களுக்கான மவுஸ் எல்லாம் மலையேறி விட்டது. இது மைஸ்பேஸ் காலம். ஃபேஸ்புக் யுகம் அல்லவா? இப்போது இணையதளங் களை விட வலைப்பின்னல் தளங்களுக்குத்தான் மதிப்பு அதிகம்.
.
வலைப்பின்னல் தளங்கள் சுயவெளிப்பாட்டிற்கு வழி செய்வதில் இருந்து (புதிய) நண்பர்களுடன் தொடர்பு கொள்ள உதவுவது வரை கைகொடுக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் நமக்கென வலைப்பின்னல் தளமொன்றை வைத்திருப்பதுதான் புதுமையானது. பயன்மிக்கது!

ஆனால் சொந்த இணையதளம் அமைப்பது போல சொந்த வலைப்பின்னல் தளம் அமைப்பது சுலபமானதல்ல! இத்தகைய சேவையை வழங்கும் நிறுவனங்களும் இன்னும் உருவாகவில்லை. அதே நேரத்தில் குடியிருப்புகளுக்கான வலைப் பின்னல் தளத்தை அமைத்துக் கொள்ளும் சேவையை அளிக்கும் நிறுவனம் அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவன சேவைதான் வலையால் ஏற்படக் கூடிய எதிர்கால சாத்தியங்களை நினைத்து வியக்க வைக்கிறது. லைப்அட் (lifeat) என்னும் அந்நிறுவனம் அளிக்கும் சேவையின் உதவியோடு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்களுக்கென தனி வலைப்பின்னல் தளத்தை உருவாக்கி கொள்ளலாம்.

உருவாக்கி கொண்டு… என்ன செய்யலாம் என்று கேட்க வேண்டியதில்லை! வலைப்பின்னல் தளங்கள் ஏற்படுத்தி தரும் வசதிகளை பயன்படுத்திக் கொண்டு புதிய வாய்ப்புகளை கொண்ட நட்புலகை நமக்கென உருவாக்கி கொள்ளலாம். அதில் பழைய உலகின் இறுக்கங்கள் தளர்ந்து போகும்.

நகரத்து நெரிசலில் பட்டுப்போன பக்கத்து வீட்டு மனிதர்கள் மீதான நேசமும் துளிர் விடும். நகர வாழ்வில் நீங்கள் காணக் கூடிய குறைகளுக்கு எல்லாம் வலைப்பின்னல் தளங்கள் சுவாரசிய மான தீர்வுகளை வழங்கலாம்.

கிராமத்து வாழ்க்கையின் நெருக்கமும், மனித நேயமும் சர்வம் துரித கதியில் இருக்கும் நகர வாழ்க்கையில் மருந்துக்கும் இல்லை என்னும் மனக்குறைக்கு இப்படி ஒரு தீர்வு பிறக்கக் கூடும் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.

நகர வாழ்க்கையின் மிகப் பெரிய குறை என்ன? பக்கத்து பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் கூட பரஸ்பரம் அறிந்திருப்பதில்லை. நட்பு பாராட்டுவதில்லை என்பதுதானே!

எல்லோரும் அவரவர் இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனரே தவிர சக மனிதர்களோடு இணக்கமான உறவு சூழலை உருவாக்கி கொள்ள மறந்து விடுகின்றனர் அல்லவா! ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தாலும் எதிர்வீட்டில் குடியிருப்பவரின் பெயரை கூட அறிந்திராமல் இருப்பது இப்போது சகஜமாக இருக்கலாம். ஆனால் வலைப்பின்னல் தளம் இதனை மாற்றி விடும் வாய்ப்பு இருக்கிறதே!

குறிப்பிட்ட ஒரு குடியிருப்புக்கு என்று தனியே வலைப்பின்னல் தளம் அமைக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். பொதுவாக வலைப்பின்னல் தளத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பவர்கள் என்ன செய்கின்றனர். தங்களுக்காக ஒரு தனி பக்கத்தை உருவாக்கி கொண்டு அதன் மூலம் தங்கள் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

தங்களுக்கு பிடித்தது, தாங்கள் பார்த்தது, படித்தது, கேட்டது, ரசித்தது போன்ற விஷயங்களை எல்லாம் தங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்கின்றனர். இவற்றுக்கெல்லாம் தனித்தனி தலைப்புகள் இருப்பதோடு ஒவ்வொருவரும் தங்களுடைய நண்பர்களை அடையாளப்படுத்திக் கொள்ள வழி செய்வதும் வலைப்பின்னல் தளத்தின் இலக்கண கூறுகளில் ஒன்றாக இருக்கிறது.

உறுப்பினரின் பக்கத்தின் கீழே நண்பர்கள் என புகைப்படத்துடன் அவர்களைப் பற்றிய விவரங்களும் இடம் பெற்றிருக்கிறது. உறுப்பினரின் பக்கத்தால் கவரப்படும் புதிய நபர் தன்னையும் இப்படி நண்பராக இணைத்துக் கொள்ள சம்மதிக்கலாம். இப்படித்தான் வலைப்பின்னல் தளங்களின் மூலம் புதிய நண்பர்களை தேடிக் கொள்வது சாத்தியமாகிறது.

இவ்வாறு விரிவடையும் நட்பு வட்டமே கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும், பார்த்து கேட்டு ரசித்தவற்றை பகிர்ந்து கொள்ளவும் உதவி செய்கிறது. இந்த தன்மையே “மைஸ்பேஸ்’ போன்ற தளங்களின் மூலம் புதிய இசைத்தட்டுக்கள் மற்றும் ஆல்பம் எந்தவித விளம்பர முயற்சியும் இல்லாமல் பரஸ்பர பரிந்துரைகளின் மூலமே பிரபலமாக வைத்திருக்கிறது.

இதனால்தான் இளைஞர்கள் “மைஸ்பேஸ்’ தளத்தை தங்களுக்கான இருப்பிடமாக விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளனர். மைஸ்பேசில் இருப்பை ஏற்படுத்திக் கொண்டு வலை மூலமே நட்புறவை வளர்த்துக் கொள்வதை இளைஞர்கள் இயல்பாக நினைக்கின்றனர்.

வலைப்பின்னல் தளங்களின் இந்த ஆற்றலை மேலும் பல துறையினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். சரி குடியிருப்புகளுக்கான வலைப்பின்னல் தளம் எப்படி அதில் வசிப்பவர்களுக்கு உதவக் கூடும்.

வலைப்பின்னல் தளங்கள் கருத்து பரிமாற்றத்திற்கும், நண்பர்களை தேடிக் கொள்வதற்கும் ஏற்றதாக இருப்பதும், இன்டெர்நெட் யுகத்தில் பலர் இதனை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருப்பதும், வலைப்பின்னல் தளங்களின் வலை மேலும் விரிவடைய உதவுகிறது.

அந்த வகையில்தான் குடியிருப்பு களும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. அது பற்றி பார்ப்போம்…

———–
link;
www.lifeat.com

கலைஞர்களின் மைஸ்பேஸ்

“மைஆர்ட் இன்போ’ என்றொரு இணையதளம் இருக்கிறது. அந்த தளத்தின் பக்கம் போனால் ஒரே நேரத்தில் பிரமிப்பும், ஏக்கமும் ஏற்பட்டு விடும். அதற்கு முன் ஒரு எச்சரிக்கை குறிப்பு. நீங்கள் கலை ஆர்வம் மிக்கவர் என்றால் இந்த தளம் உங்கள் நேரத்தை குடித்துவிடும். அது மட்டும் அல்ல, மீண்டும் மீண்டும் இந்த தளத்திற்கு விஜயம் செய்யும் அளவிற்கு இதற்கு அடிமையாகி விடுவீர்கள்.

.
ஆனால் இதனால் ஒன்றும் பாதகமில்லை. உண்மையான கலா ரசிகனுக்கு இதைவிட மகிழ்ச்சியை தரக்கூடியது வேறு இல்லை. ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் விதவிதமான கலைஞர்களையும், அவர்கள் படைப்புகளையும் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைப்பதைவிட சந்தோஷமானது வேறு என்ன இருக்க முடியும்?

இதனால் பிரமிப்பு ஏற்படும் என்றால், அட நம்மூர் கலைஞர்களுக்கு என்று இப்படி ஒரு இணைய தளம் இல்லையே என்ற ஏக்கம் ஏற்படும்? அந்த அளவுக்கு கலைஞர்களுக்கான இருப்பிடமாக அவர்களின் படைப்பிற்கான கலைகூடமாக இந்த தளம் விளங்குகிறது.
இதில் மேலும் விஷேசமானது என்னவென்றால் “மை ஆர்ட் இன்போ’, கலா ரசிகர்களுக்கானது என்பதை விட கலைஞர்களுக்கானது தான்!.

மைஸ்பேஸ் மற்றும் பேஸ்புக் போன்றவை எப்படி இளைஞர்களுக்கான வலைப்பின்னல் தளமாக இருக்கின்றனவோ அதே போல் கலைஞர்களுக்கான வலைப்பின்னல் தளமாக மைஆர்ட் இன்போ டாட் காம் தளத்தை லூயிஸ் மெக்பெயின் என்னும் கனடா நாட்டு பிரமுகர் அமைத்திருக்கிறார்.

பதிப்பக அதிபரும், கொடை வள்ளலுமான மெக்பெயின் கலை ஆர்வம் மிக்கவர். ஓவியம் உள்ளிட்ட கலைகளில் பெருமளவு முதலீடும் செய்திருப்பவர். கலைஞர்களுக்காக என்று “ஆர்ட் இன்போ’ என்னும் பெயரில் இணைய வழிகாட்டியையும் நடத்தி வருபவர்.

“மைஸ்பேஸ்’ உள்ளிட்ட வலைப்பின்னல் தளங்கள் உண்டாக்கி விடும் அலைகளை உள்வாங்கி கொண்ட மெக்பெயின், கலைஞர்களுக்கும் இத்தகைய வலைப்பின்னல் தளம் இருக்க வேண்டும் என்னும் உந்துதலோடு “மைஆர்ட் இன்போ’ தளத்தை ஏற்படுத்தி யிருக்கிறார். கலைஞர்கள் குறிப்பாக இளம் மற்றும் புதிய கலைஞர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான உலகளாவிய தளமாக இந்த தளம் அமைய வேண்டும் என்பது அவரது விருப்பம்.

தளத்தின் வடிவமைப்பும், உள்ள டக்கமும் இந்த விருப்பத்தை கச்சிதமாக பிரதிபலிக்கிறது. மைஸ்பேசில் எப்படி, ஒருவர் தங்களுக்கான பக்கத்தை உருவாக்கி கொண்டு சுய அறிமுகம் செய்து கொண்டு நண்பர்களை தேடிக் கொள்ளலாமோ அவ்விதமே இதில் கலைஞர்கள் தங்கள் படைப்புகளை இடம் பெறச் செய்து, உலகின் பார்வைக்கு படைப்புத் திறனை காட்சிக்கு வைக்கலாம். மைஸ்பேஸ் மகத்தானதுதான். ஆனால் அதன் வடிவமைப்பில் கொஞ்சம் சிக்கலாக இருக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் தகவல்கள் கொட்டப்பட்டு ஒருவித குழப்பம் ஏற்படும். ஆனால் இந்த தளத்தில் அத்தகைய குழப்பம் இல்லாமல், மிக எளிமையாக ஒருவித நேர்த்தியோடு, முகப்புபக்கம் அமைந்துள்ளது.

அற்புதமான கலைப்படைப்புகள் மற்றும் அவற்றை உருவாக்கிய கலைஞர்களின் படங்கள், முகப்பு பக்கத்தில் பளிச்சிடுகின்றன. குறிப்பிட்ட தினத்திற்கான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு முகப்பு பக்கத்தில் முன்னிறுத்தப் படுவதோடு, மற்ற கலைஞர்கள் பற்றிய அறிமுகமும் பக்கத்திலேயே மின்னுகின்றன.

முதல் பார்வைக்கு ஓவியங்களே பிரதானமாக தோன்றினாலும் ஓவியம் மட்டும் அல்லாமல், புகைப்படங்கள், சிற்பங்கள், வீடியோ காட்சிகள், பேஷன், கட்டிட கலை, கவிதை, வடிவமைப்பு, கண்ணாடி வேலைப்பாடுகள் என சகலவிதமான கலைப்படைப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.

மேலோட்டமான ஒரு பார்வைக்கு பின், கண்ணை கவரும் ஏதாவது ஒரு படத்தை கிளிக் செய்யும் போது நீண்ட கலை பயணத்திற்கு தயாராகி விட வேண்டும். கிளிக் செய்த அந்த படம் பெரிதாகி அருகிலேயே அது பற்றிய குறிப்புகள் விரிவதோடு, அந்த கலைஞரின் மற்ற படைப்புகளும் வரிசையாக வந்து நிற்கும். ஒவ்வொரு படமும் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளன என்ற குறிப்புடன் கலைஞரைப் பற்றிய சுயசரிதை விவரங்கள் மற்றும் அவர் பங்கேற்ற கண்காட்சி தொடர்பான தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.

அவரது படைப்பு கருத்தை ஈர்த்தது என்றால் அந்த கலைஞரை பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அவரோடு தொடர்பு கொள்ள விரும்பினால், பிலாக் பதிவு எழுதி வைக்கலாம் (அ) உடனடியாக இன்டெர்நெட் மூலமே உரையாடலாம். பிலாக் பதிவில் மற்ற கலைஞர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கூடுதல் புரிதலை ஏற்படுத்தக் கூடியவையாக அமைந்திருப்பது மற்றொரு சிறப்பம்சம்.

ஒரு கலைஞரை பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டிருக்கும் போதே,அடுத்தடுத்த கலைஞர்களை அறிமுகம் செய்து கொண்டே போகலாம். படைப்புகளின் வண்ணமும், வகைகளும் வியக்க வைக்கும் கலை பயணமாக அது அமையும்.

இதைத்தவிர, கலைஞர்கள், கலைப்படைப்புகள் கலை கூடங்கள் என எந்த தலைப்பின் கீழும் புதிய கலைஞர்களை தேடும் வசதி உண்டு. மேலும் இந்த வார கலைஞர் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட கலைஞர் என்னும் அடைமொழியோடும், கலைஞர்கள் அறிமுகம் செய்யப்படுகின்றனர்.

தொடர்ந்து தளத்திற்கு விஜயம் செய்யும் போது, இந்த அம்சங்கள், புதிய கலைஞர்களை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். கலைஞர்கள் பரஸ்பரம் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்துக்கொள்ள உதவக்கூடிய இந்த தளம், அவர்களின் படைப்புகள் உலகளாவிய அறிமுகத்தை பெறவும் வழிசெய்கிறது.

அதிலும் குறிப்பாக புதிய கலைஞர்கள் தங்களை உலகிற்கு உணர்த்த இந்த தளம் சரியான நுழைவு வாயிலாக இருக்கும். இதுவரை 800க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதில் உறுப்பினர்களாகி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகளை இடம் பெற வைத்துள்ளனர். இன்னும் பெரிதாக இந்த தளம் வளரும் என்றே தோன்றுகிறது.
————
link;
www.myartinfo.com

மைஸ்பேஸ் இருக்க பயமேன்

வலைப்பின்னல் தளங்களின் விபரீத விளைவுகள் பற்றி  என்னன்னவோ சொல்கிறார்கள். இந்த தளங்கள் எல்லாம் ஆபத்தின் மறுவடிவம் என்பது போல, இவற்றால் ஏற்படும் தீமைகளும், பாதிப்புகளும் பெரிதாக பேசப்படுகிறது. இவற்றுக்கு நடுவே, வலைப்பின்னல் தளங்களின் ஆதார பலத்தையும் மறந்துவிடக்கூடாது. இந்த பக்க விளைவுகள் எல்லாம்  அலட்சியப்படுத்தக் கூடிய அங்கொன்றும், இங்கொன்றுமான நிகழ்வே  என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

.
இந்த கருத்தை உறுதிப்படுத்திக் கொள்ள விவாதத்தில் ஈடுபடாமல், வலைப் பின்னல் தளங்களினால்  உண்டாகக் கூடிய நல்ல பயன்களுக்கான அழகான உதாரணம் ஒன்றை பார்ப்போம்.  

அது, மைஸ்பேஸ் திறந்து விட்டிருக்கும் கூடுதல் கதவுகள் பற்றிய கதையாக விரிகிறது. இளைஞர்களின் இணைய கூடாரம் என்று  வர்ணிக்கப்படும் “மைஸ்பேஸ்’ வலைப்பின்னல் தளங்களின்  பிரதிநிதியாக அறியப்படுகிறது. இந்த தளத்தின் மூலம் அதன் உறுப்பினர்கள் இமெயிலில் தொடங்கி, செய்திகள், கருத்துக்கள் என சகலத்தையும் பரிமாறிக் கொள்கின்றனர்.
மைஸ்பேஸ் மூலம் எளிதாக  நண்பர்களை தேடிக்கொள்ளலாம். தவிர, மைஸ்பேஸ் வழியே வீடியோ கோப்புகளையும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இரண்டையும் இணைத்தால், உங்களுக்கான பிரத்யேக ரசிகர்கள்  கிடைத்து விட மாட்டார்கள்.  அதாவது நீங்கள் துடிப்பும், படைப்பாற்றல் மிக்க கலைஞராகவும் இருந்து, உங்கள் படைப்பை, ரசிக்கக் கூடியவர்களை (நீங்களே) தேடிக் கொள்ளும் ஆர்வமும் இருந்தது என்றால்!

அமெரிக்காவைச் சேர்ந்த மார்ஷல் ஹெர்கோவிம்ப்  மற்றும் எட்வர்டு விக் ஆகியோர் இதைதான் செய்திருக்கின்றனர். இருவரும் சேர்ந்து இயக்கியுள்ள  தொலைக்காட்சி தொடரை “மைஸ்பேஸ்’ தளத்தில் வெளியிட்டிருக்கின்றனர்.  மைஸ்பேஸ் தளத்தில் வீடியோ கோப்புகளை  பதிவேற்ற முடியும் என்னும் போது, தொலைக்காட்சி தொடரின் நிகழ்ச்சிகளையும் ஒவ்வொன்றாக இந்த தளத்தின் மூலமே ஒளிபரப்பலாம் தானே!
ஆக, இந்த தொடரை  பார்க்க எந்த சேனலின் தயவும், தேவை இல்லை. மைஸ்பேஸ் தளத்தில் இதற்கென துவக்கப்பட்டுள்ள  பக்கத்திற்கு போனால் பார்த்து ரசிக்கலாம். மைஸ்பேஸ் இலக்கணப்படி உறுப்பினர்கள் இதை பார்த்து ரசித்த கையோடு, மற்ற உறுப்பினர்களோடு   நிகழ்ச்சி பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். இப்படி பகிர்ந்து கொள்வதன்  மூலம்  புதிய நண்பர்களையும் தேடிக் கொள்ளலாம்.  தொடர்பு சங்கிலி பெரிதாக, பெரிதாக  நண்பர்கள்  எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, நிகழ்ச்சிக்கான புதிய ரசிகர்கள்  கிடைக்கப் பெற்று, எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகும். இந்த நம்பிக்கையில்தான் ஹெர்கோவிம்ப்  மற்றும் விக் ஆகிய இருவரும் எந்த சேனலையும் சார்ந்திருக்காமல் நேரிடையாக மைஸ்பேஸ் தளத்தில் தங்கள் படைப்பை இடம் பெற வைத்திருக்கின்றனர்.

உண்மையில் தொலைக்காட்சி சேனல்  ஒன்றுடன் ஏற்பட்ட மோதலின் விளைவாகவே இவர்கள் மைஸ்பேசிடம் வந்திருக்கின்றனர். கால் வாழ்க்கை என்னும் பெயரில் ஏபிசி தொலைக்காட்சிக்காக இவர்கள்  நிகழ்ச்சியின் சில பகுதியை தயாரித்துக் கொடுத்தனர். ஆனால் தொலைக்காட்சி நிர்வாகம் கதைக் கருவில் கைவைத்து, படைப்பாளி என்ற முறையில் ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளை  ஆலோசனைகள் என்னும் பெயரில் முன்வைத்ததால் இருவரும் வெறுப்புற்று வெளியே வந்து விட்டனர்.

அதன் பிறகு இந்த நிகழ்ச்சியை முழுத்தொடராக உருவாக்கி, “கால் வாழ்க்கை’ என்னும் பெயரில் மைஸ்பேஸ் தளத்தில் வெள்ளோட்டம்   விட்டிருக்கின்றனர். நிகழ்ச்சியை மைஸ்பேஸ் உறுப்பினர்கள் வீடியோ கோப்பாக பார்க்க முடியும் என்பதோடு, அவர்களின் கூடுதல் கவனத்தையும், ஆர்வத்தையும் ஈர்க்கும் வகையில், நிகழ்ச்சிக்கான பக்கத்தில் அதன் கதாபாத்திரங்கள் மற்றும் கதைப்போக்கு பற்றிய விவரங்களும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
கதாபாத்திரங்கள் பேசுவது போன்ற இந்த தகவல்கள், நிகழ்ச்சி மீது பற்று கொண்ட ரசிகர்கள்  வட்டத்தை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி மைஸ்பேஸ் தனித்தன்மையை பயன்படுத்திக் கொள்வதோடு, இதே பாணியில் இந்த நிகழ்ச்சிக்காக என்றே தனியே ஒரு வலைப்பின்னல் தளமும் (quaterlife.com) என்னும்  பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.
படைப்பாற்றல் பாதிக்கப்படாமல், கலைஞனுக்குரிய முழு சுதந்திரத்தோடு, நிகழ்ச்சிகளை தயாரித்து வெளியிட இது சிறந்த வழி என்று கருதப்படுகிறது.