Category Archives: music

இசை கேட்கும் இணையதளம்

indexஇணையத்தில் உலாவும் போதும் சரி, கம்ப்யூட்டரில் பணியில் ஆழ்ந்திருக்கும் போதும் சரி, பின்னணியில் மெலிதாக ஒலிக்கும் இசையை கேட்டக்கொண்டே இருப்பது இனிமையான அனுபவம் தான். இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால், ஃபோகஸ்மியூசிக்.எப்.எம் இணையதளம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
ஏனெனில் இது இசை கேட்கும் இணைதளமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தளத்தில் உள்ள மியூசிக் பிளேயரை கிளிக் செய்தால் போதும் மேற்கத்திய இசை பாடல் ஒலிக்கத்துவங்கும். வரிசையாக பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். நாமும் கேட்டு ரசித்தபடி நமது வேலையில் மூழ்கி இருக்கலாம். எப்போதாவது வேறு பாடல் தேவை எனில், அடுத்த பாடலுக்கான பட்டனை கிளிக் செய்து கொள்ளலாம்.

பாடல்களையோ அதன் வகைகளையோ தேர்வு செய்யும் அவசியம் இல்லாமல் தொடர்ந்து இசை மழையில் நனைய இந்த தளம் வழி செய்கிறது.

இதில் தேர்வு செய்யப்பட்டுள்ள பாடல்கள் அனைத்தும், பணியின் போது கவனத்தை அதிகரித்து செயல்திறனை மேம்படுத்தக்கூடிய ரகத்தை சேர்ந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சேவையின் எளிமை கவர்ந்திழுக்கிறது. ஒரு கிளிக்கில் இசையமான சூழலில் ஆழ்ந்துவிடலாம்.
focus
பாப் இசையில் ஆர்வம் என்றால் இதே போல இன்னும் சில அருமையான இணையதளங்கள் இருக்கின்றன. கன்சோல்.எப்.எப் இணையதளம் மனதுக்கு ஆறுதல் அளிக்க கூடிய பாடல்களை வரிசையாக கேட்கச்செய்கிறது. இதன் முகப்பு பக்கத்தில் வரிசையாக பாடல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எந்த பாடலை வேண்டுமானாலும் கிளிக் செய்து கேட்டு ரசிக்கலாம். அருகிலேயே பிளேயர் இருப்பதால் கிளிக் செய்தவுடன் பாடல் ஒலிக்கத்துவங்கி விடுகிறது. பாடல்கள் அனைத்தும் சவுண்ட் கிளவுட் சேவையில் இருந்து தேர்வு செய்யப்படுபவை.

பிரைன்.எப்.எம் தளமும் இப்படி இதம் அளிக்கும் பாடல்களை கேட்க வழி செய்கிறது. செயற்கை அறிவு மூலம் தேர்வு செய்யப்பட்ட பாடல்களை வழங்குவதாக இந்த தளம் தெரிவிக்கிறது. பத்து நிமிடம் கேட்டால் போதும் உங்கள் மனச்சோர்வு எல்லாம் மாயமாகிவிடும் என்கிறது இந்த தளம். பாடல்கள் தேர்வு செய்யப்படும் விதம் பற்றி விரிவான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரி:http://focusmusic.fm/

2.http://console.fm/
3.https://www.brain.fm/

உங்கள் ‘பி.சி’‍ யில் பறவைகள் சங்கீதம் கேட்க!

originalமணிக்கணக்காக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து இடைவிடாம‌ல் வேலை செய்ய வேண்டியிருப்பவர்கள் நடுவே ரிலாக்ஸ் செய்து கொள்ள உதவுதற்கான இதமான வழியை பேர்ட்சாங்.எபெம் இணையதளம் வழங்குகிறது. எப்போதெல்லாம் கம்ப்யூட்டர் பணி சோர்வில் ஆழ்த்துகிறதோ அப்போதெல்லாம் இந்த தளத்தின் பக்கம் போனால் போதும் பின்னணியில் இனிமையான பறவைகள் சங்கீதத்தை கேட்டு ரசிக்கலாம். அப்படியே அந்த இனிய ஒலிகளை கேட்டு ரசித்தபடி எதோ பசுமையான மரங்கள் அடர்ந்த சூழலில் இருப்பது போன்ற உணர்வில் மிதக்கலாம்.

இந்த உணர்வு தரும் உற்சாகத்தோடு மீண்டும் பணியில் மூழகலாம்.இயற்கை எழில் கொஞ்சும் பின்னணியோடு எளிமையாக காட்சி தரும் இந்த தளத்தில் கொஞ்சம் கவனமாக பார்த்தால் கூடுதலாக பல வசதிகள் இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்தால் பறவைகள் ஒலிகளுக்கான பிரத்யேக‌ கூட்டில் இருந்து ஒலிகளை பெற முடியும். இந்த ஒலிகளை எம்பி3 கோப்புகளாகவும் தரவிறக்கம செய்து கொள்ளலாம்.இதே போல ஸ்மார்ட் போன்களுக்கான செயலியாகவும் தரவிறக்கம் செய்யலாம்.

ஐடியூன்ஸ், சவுன்ட் கிளவுட் உள்ளிட்ட சேவைகள் வாயிலாகவும் பறவைகள் சங்கீத்ததை கேட்க முடியும்.அப்படியே நீங்கள் கேட்டு ரசித்த ஒலிகளை பேஸ்புக் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளலாம்.

பறவைகள் பாடல்களை கேட்டு ரசிக்க: http://birdsong.fm/

புகைப்படத்திற்கு ஏற்ற பாடல்

ins

நீங்கள் இன்ஸ்டகிராம் பிரியர் என்றால் சாங் ஃபார் பிக் தளத்தை ரசித்து மகிழலாம். சாங் ஃபார் பிக்கை இணையதளம் என்பதை விட இணைய விளையாட்டு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.உங்கள் நண்பர்களோடு சேர்ந்து விளையாடும் விளையாட்டு.

புகைப்பட செயலியான இன்ஸ்டாகிராம் மூலம் செல்போனில் எடுத்த புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளாம்.இப்படி பகிர்ந்து கொள்ளும் படங்களை நணபர்கள் பார்த்து ரசித்து தங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.

இன்ஸ்டாகிராம் படங்களை பார்ப்பதே ஒரு சுவாரஸ்யம் தான். அதை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் ஆக்குகிறது சாங் ஃபார் பிக். இந்த தளம் நீங்கள் எடுத்த புகைப்படங்களில் ஏதாவது ஒரு படத்தை தேர்வு செய்து உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிற‌து.உடனே நண்பர்கள் அந்த புகைப்படத்திற்கு ஏற்ற பாடல் ஒன்றை தேர்வு செய்து சம‌ர்பிப்பார்கள்.இதற்காக என்று தேர்வு செய்யப்பட்ட நான்கு பாடல்களில் ஒன்றை அவர்கள் சம‌ர்பிக்கலாம்.

புகைப்படங்களுக்கேற்ற பாடலை கேட்பது பாடல்களை கேட்டு ரசிப்பதற்கான சுவாரஸ்யமான வழியாகலாம்.அதிலும் நீங்கள் எடுத்த படங்கள் என்னும் போது இன்னும் கூட சுவார்ஸ்யம்.

இன்ஸ்டாகிராம் பிரியர்கள் மட்டும் அல்ல இசைப்பிரியர்களும் பயன்படுத்தி மகிழலாம்.

இணையதள முகவரி;http://songforpic.com/

இசை கேட்கும் இணைய சுவர்.


இணையதில் இலவசமாக பாடல்களை கேட்டு ரசிக்க ஏராளமான இணையதளங்களும் சேவைகளும் இருக்கின்றன.பாடல்களை தேடித்திரும் தேடிய‌ந்திர சேவைகளும் இருக்கின்றன.இவற்றை இசை கண்டுபிடிப்பு தளங்கள் என குறிப்பிடலாம்.

அந்த வகையில் யூவால்.டிவி தளத்தை இன்னொரு இசை கண்டுபிடிப்பு தளமாக கருத வேண்டியிருந்தாலும் இன்னொரு இசை சார்ந்த தளம் என்னும் அலுப்பை மீறி இசைப்பிரியர்களை முதல் பார்வையிலேயே கவர்ந்திழுக்க கூடிய இணையதளமாகவே இது இருக்கிறது.

முதல் பார்வையிலேயே என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.காரணம் இசைமயமான இந்த தளம் காட்சிமயமாக அமைந்திருப்பது தான்.அதாவது இசை தேவையை இந்த தளம் காட்சிரீதியாக நிறைவேற்றி தருகிறது.

பாடல்கள்,பாடக‌ர்கள்,இசை வகைகள் என எல்லாமே வரிசையாக பட்டியலிப்பட்டிருக்கும் முறை அலுப்பு தரக்கூடியது என கருதுபவர்கள் இதன் முகப்பு பக்கத்தில் நுழைந்ததுமே சொக்கிப்போய் விடுவார்கள்.அதற்கு காரணம் இந்த தளமே இசை சுவராக வண்ணமயமாக வரவேற்பது தான்.!.

ஆம் தளத்தின் முகப்பு பக்கம் முழுவதும் பாடகர்கள் ,இசை கலைஞர்களின் புகைப்படங்களாக நிறைந்திருக்கின்றது.எந்த படத்தை கிளிக் செய்தாலும் அந்த பாடகரின் பாடல்களுக்கான இணைய ஜன்னல் எட்டிப்பார்க்கிறது.பாடகரின் பாடலும் வீடியோ காட்சியோடு கேட்கத்துவங்கிறது.அந்த பாடகர் பிடித்தமானவர் என்றால் தொடர்ந்து அதே ஜன்னலில் அவரது பாடல்களை கேட்டு கொண்டே இருக்கலாம்.

இல்லை என்றால் வேறு பாடகரின் பாடலை கேட்க சென்று விடலாம்.பாடகரை தேர்வு செய்வது மிகவும் சுலபம்.இசை சுவற்றில் பாடகரின் படத்தை தேர்வு செய்து கிளிக் செய்தால் போதும்.

இந்த சுவர் பாடகர்களால் உருவாக்கியிருந்தாலும் இதில் நீங்கள் விரும்பிய பாடகர்கள் இல்லாமல் போகலாம்!அப்போதும் கவலைப்படவேண்டாம் உங்கள் மனதில் உள்ள பாடகரின் பெயரை டைப் செய்து தேடினால் அவருக்கான இசை ஜன்னல் வந்து நிற்கிறது.

முகப்பு பக்கத்தில் பெரும்பாலும் மேற்கத்திய பாடகர்களே ஆதிக்கம் செலுத்தினாலும் தேடல் பகுதியில் நமது இசைஞானியில் துவங்கி சித்ரா,யுவன்,ஹாரீஸ்,ரஹ்மான் என எல்லோரையும் கண்டுபிடிக்க முடிகிறது.பாடல் பட்டியல் முழுமையாக இருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும் ஏதுமில்லாத ஏமாற்றம் ஏற்படுவதில்லை.

அது மட்டும் அல்ல,ஒரு பாடகர் அல்லது இசையமைப்பாளரை தேடும் போது அவருடன் தொட‌ர்புடைய மற்றவர்களின் பெயர்களும் பரிந்துரைக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு ரஹ்மானை தேடும் போது யுவன் ,ஹாரீஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்படுகிறது.

பாடகர்களை கொண்டு தேடுவது மட்டும் அல்ல ஒவ்வொருவரின் மனநிலையை குறிப்பிட்டும் தேடும் வசதி இருப்பது கவரக்கூடியது.காதல் மனநிலைக்கேற்ற பாடல்கள்,உற்சாக மனநிலைக்கேற்ற பாடல்கள்,சோகமாக மூடுக்கேற்ற பாடல்கள் என்றும் தேர்வு செய்து கொள்ளலாம்.

இதைத்தவிர வழக்கமான இசை வகைகளுக்கேற்ற படி தேடிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.

பேஸ்புக் மூலம் பதிவு செய்து கொண்டால் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் கூடுதல் வசதியும் இருக்கிறது.

தோற்றம் உள்ளடக்கம் என்று இரண்டிலுமே கவர்ந்திழுக்கும் இசைமயமான இணையதளம் இது.இல்லை வண்ணமயமான இசை சுவர் இது.இதில் சாய்ந்தபடி இசை இளைப்பாறலாம்.இனிமையான உலகில் சஞ்சரிக்கலாம்.

இணையதள முகவரி;http://www.uwall.tv/

இசை வீடியோவை மெருகேற்றும் இணையதளம்.

45 சவுன்ட் இணையதளம் இசை பிரியர்களை பிரமிக்க வைத்து விடும்.அதே நேரத்தில் இசை குழுக்களையும் இந்த தளம் கவர்ந்திழுத்து விடும்.இரு தர்ப்பினராலுமே இந்த தளத்தை புறக்கணித்து விட முடியாது.இசையில் ஆர்வம் இருந்தால் இந்த தளத்தை விரும்பியே ஆக வேண்டும்.

இந்த தளம் அப்படி என்ன செய்கிறது என்றால் இசை நிகழ்ச்சிகளின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்களின் ஒலி தரத்தை மேம்படுத்தி தருகிறது.இதனை இந்த தளம் சாத்தியமாக்கி தரும் விதம் மிக எளிமையானது என்றாலும் சும்மா அற்புதமானது.

ரசிகர்களின் இசை வீடியோக்களுக்கு ஸ்ருதி பேதமில்லாத துல்லியமான ஒலியை இந்த தளம் வழங்குகிறது.

அதாவது ரசிகர்கள் படம் பிடித்து யூடியூப்பில் பதிவேற்றும் இசை நிகழ்ச்சிக்கான வீடியோவில் மூல ஒலி அமைப்பை இந்த தளம் இணைத்து தருகிறது.

இந்த அற்புதத்தை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

இந்த வீடியோ யுகத்தில் பெரும்பாலானோரிடம் வீடியோ கேமிரா இருக்கிறது அல்லது வீடியோ வசதி கொண்ட செல்போன் இருக்கிறது.ஆக எந்த நிகழ்ச்சிக்கு என்றாலும் அதனை படம் பிடிக்கும் ஆர்வமும் பழக்கமும் பலருக்கு இருக்கிறது.படம் பிடித்த பிறகு அதனை யூடியூப்பில் பதிவேற்றி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இக்கால இயல்பாக இருக்கிறது.

இசை பிரியர்கள் என்றால் இசை நிகழ்ச்சிகளை படம் பிடித்து அதனை யூடியூப்பில் பதிவேற்றி பகிர்ந்து இன்பம் காண்கின்றனர்.என்ன இருந்தாலும் அபிமான பாடகர் அல்லது அபிமான இசைக்குழுவின் கச்சேரியை லைவாக படம் பிடித்து பகிர்ந்து கொள்வது அலாதியான இன்பம் தானே.

முன்பெல்லாம் இசை நிகழ்ச்சிக்கு சென்று வந்தால் நண்பர்களிடம் நிகழ்ச்சியில் கேட்டு ரசித்த பாடல்கள் பற்றி வார்த்தைகளில் தான் வர்ணிக்க வேண்டும்.இப்போதோ நிகழ்ச்சியின் வீடியோ பதிவை கொடுத்து நமது ரசனையை பகிர்ந்து கொள்வது சாத்தியமாகி இருக்கிறது.

நிகழ்ச்சி பற்றிய வீடியோ பதிவோடு பேஸ்புக்கில் பேசலாம்,டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளலாம்.எல்லாமோ தொழில்நுட்பம் தந்த வரம்.

ஆனால் இந்த பகிர்வில் உள்ள ஒரே குறை ,நிகழ்ச்சியின் நேர்டையான பதிவு என்பதால் ஒலியின் தரம் தான் கொஞ்சம் ஏனோ தானோவென்று இருக்கும்.ரசிகர்களின் கூச்சல் மற்றும் பின்னணி இறைச்சலும் சேர்ந்து பதிவாகி இருக்கும் என்பதால் பாடலின் வரிகளையும் இசை கருவிகளின் நுட்பத்தையும் முழுவதுமாக ரசிக்க முடியாது.

ஒரு நல்ல பாடலை மோசமான ஒலி பதிவில் கேட்டு ரசிக்க நேர்வது கொஞ்சம் ஏமாற்றம் அளிக்ககூடியதே.ஆனால் என்ன செய்ய நிகழ்ச்சிகளின் நடுவே வீடியோவில் பதிவு செய்தால் அதன் தரம் குறைவாக தான் இருக்கும் என்று மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான்.

இந்த குறையை போக்க தான் 45 சவுண்ட் உருவெடுத்துள்ளது.

இந்த தளம் என்ன சொல்கிறது என்றால் நிகழ்ச்சிகளின் வீடியோ பதிவை வேறு எங்கும் பகிர்ந்து கொள்ளும் முன் இங்கே பதிவேற்றுங்கள் என்கிறது.அதன் பிறகு இந்த தளம் என்ன செய்கிறது என்றால் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியின் மூல ஒலிப்பதிவை எடுத்து வீடியோவுடன் இணைத்து தருகிறது.இந்த புதிய கோப்படை யூடியூப்பிலோ பேஸ்புகிலோ பகிர்ந்து கொண்டால் வீடியோவும் சூப்பராக இருக்கும் ,பாடல் ஒலியும் துல்லியமாக இருக்கும் .இசை பிரியர்களுககு இதைவிட வேறு என்ன வேண்டும்?

ரசிகர்கள் வீடியோவை சமர்பிப்பது போல இசை குழுக்கள் தங்கள் நிகழ்ச்சிகளின் ஒலிப்பதிவை இந்த தளத்தில் சமர்பிக்க வேண்டும்.அதிலிருந்து ரசிகர்களுக்கு பொருத்தமானதை இந்த தளம் தேடித்தருகிறது.

இசை குழுக்களை பொருத்த வரை ரசிகர்களை சென்றடைய இது மேலும் ஒரு வழி.அதிலும் வளர்ந்து வரும் இசை குழுக்கள் மற்றும் புதிய குழுக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

நிகழ்ச்சியின் ஒலிப்பதிவை பகிர்ந்து கொள்வதன் மூலம் இணையம் முழுவதும் ரசிகர்கள் அதனை பகிர்ந்து கொண்டு அதனை கேட்டு ரசிக்க வ‌ழி பிறக்கிறது.

எல்லா குழுக்களும் ,குறிப்பாக பிரபலமான குழுக்கள் இதில் ஒலிப்பதைவை சமர்பிக்க காலம் ஆகலாம்.ஆனால் இசைக்குழுக்களாக இதனை அலட்சியப்படுத்த முடியாது.காரணம் இந்த தளத்தில் தற்போதைய இசை நிகழ்ச்சிகளின் பட்டியலும் பிரபலமான நிகழ்ச்சிகளின் பட்டியலும் முகப்பு பக்கத்தில் இடம் பெறுகிறது.(நிகழ்ச்சிகளின் டிவிட்டர் பதிவுகளும் இடம் பெறுகின்றன.)

ரசிகர்களுக்கான வழிகாட்டியாக இந்த பட்டியல் அமைகிறது.அதே நேரத்தில் இசை நிகழ்ச்சிகளுக்கான இலவச விளம்பரமாகவும் அமைகிறது.ஆக இந்த தளத்தில் ஒலிப்பதிவை சம‌ர்பிக்க முன் வந்தால் நிகழ்ச்சிக்கு ரசிகர்களை கவர்ந்திழுக்கலாம்.

எனவே தான் இந்த தளம் அற்புதமானது என்று சொல்லத்தோன்றுகிறது.

பாப் இசையை மையமாக கொண்ட தளம் தான்.நம்மூருக்கும் இதே போன்ற தளம் தேவை!.

இணையதள முகவரி;http://45sound.com/