புதுமையான புத்தக பரிந்துரை தளம்

booksஆங்கிலத்தில் நல்ல புத்தகங்களை தேடித்தேடி வாசிக்க விரும்புகிறவர்களை உற்சாகத்த்தில் ஆழ்த்தும் வகையில் புக்சலேட்டர் இணையதளம் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த தளம் புதிய புத்தகங்களை பரிந்துரை செய்கிறது.

பரிந்துரைக்கப்படும் புத்தகங்களை தேர்வு செய்ய இந்த தளம் பயன்படுத்தும் முறை தான் சுவாரஸ்யமானது. புத்தக பரிந்துரை செய்யும் மற்ற தளங்களில் இடம்பெறும் பட்டியலை அலசி ஆராய்ந்து அதன் அடிப்படையில் புத்தகங்களை இந்த தளம் பரிந்துரைக்கிறது.

உதாரணமாக இணைய கண்டறிதல் சேவையான பிராடக்ட் ஹண்ட் தளத்தில் புத்தக பரிந்துரைகள் இடம்பெறுகின்றன. அதே போல மின்வணிக தளமான அமேசான் இணையதளத்தில் அதிகம் வரவேற்பை பெறும் புத்தகங்களுக்கு நட்சத்திர குறியீடு வழங்கப்படுகிறது. அமேசான் வாசகர்களும் புத்தகங்களை மதிப்பீடு செய்கின்றனர்.

புத்தக புழுக்களுக்கான வலைப்பின்னல் சேவை எனப்படும் குட்ரீட்ஸ் இணையதளத்திலும் புத்தக பரிந்துரை பட்டியல் இடம்பெறுகிறது. இவற்றை எல்லாம் தொகுத்து, படிக்க வேண்டிய சிறந்த புத்தகங்களை இந்த தளம் அடையாளம் காட்டுகிறது.

ஒவ்வொரு புத்தகத்துடனும், பல்வேறு தளங்களில் அதற்கு அளிக்கப்பட்ட மதிப்பெண்ணை பார்க்கலாம். புத்தகம் பிடித்திருந்தால் அதன் அட்டை படத்தில் கிளிக் செய்து அமேசான் தளத்திற்கு சென்று பார்க்கலாம்.

புத்தகத்தின் நீளம் பெரிதாக இருக்க வேண்டுமா? அல்லது சிறியதாக இருக்க வேண்டுமா? எனும் அடிப்படையிலும் பரிந்துரைகளை பார்க்கலாம்.

இவைத்தவிர, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் பரிந்துரைக்கும் புத்தகங்கள், தொழில்முனைவோர் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்பது போன்ற தலைப்புகளிலும் புத்தகங்கள் அடையாளம் காட்டப்படுகின்றன.

இணைய முகவரி: https://bookcelerator.com/

 

 

 

செயலி புதிது; செல்பிக்கு அலங்காரம்

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலருக்கும் செல்பி எனப்படும் சுயபடங்களை எடுக்கும் பழக்கமும் இருக்கலாம். இத்தகைய செல்பி பிரியர்களுக்கு என்றே உருவாக்கப்பட்டுள்ள செயலிகளில், மிகவும் சுவாரஸ்யமானதாக ஸ்வீட் செல்பி செயலி அமைகிறது.

ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படக்கூடிய இந்த செயலி மூலம் பயனாளிகள் தங்கள் செல்பிக்களை அட்டகாசமாக அலங்காரம் செய்து கொள்ளலாம்.

போனில் சுய படத்தை கிளிக் செய்ததும், அதில் ஸ்பெஷல் எபெக்ட் சேர்ப்பது போல பலவித அலங்காரங்களை சேர்த்துக்கொள்ளலாம். விதவிதமான அலங்காரங்களில் இருந்து தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்கிறது.

சுய படங்களை இன்னும் திருத்தி மேலும் அழகூட்டவும் செய்யலாம். ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை இணைத்து கொலேஜ் உருவாக்கலாம்.

40 க்கும் மேற்பட்ட நாடுகளில் காமிரா சார்ந்த செயலிகளில் அதிக வரவேற்பை பெற்ற செயலியாக இது இருக்கிறதாம்.

மேலும் விவரங்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=com.cam001.selfie

விக்கிபீடியா விளையாட்டும், வாசிப்பு சாகசமும்!

wபணி நிமித்தமாக தகவல்களை தேட இணையத்தை பயன்படுத்துவதை நீங்கள் வழக்கமாக கொண்டிருக்கலாம். இணைய ஆய்வில் களைப்பு ஏற்பட்டால் அல்லது பணிக்கு நடுவே ஒரு மாறுதல் ஏற்பட்டால் இணையத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து இளைப்பாறுதலையும் வழக்கமாக கொண்டிருக்கலாம். அது யூடியூப்பில் நகைச்சுவை வீடியோவாக இருக்கலாம் அல்லது பிரவுசரில் விளையாடும் விளையாட்டாக இருக்கலாம். ஆக, இணையத்தில் நீங்கள் தகவல்களை தேடிக்கொண்டே இருக்கலாம் அல்லது விளையாட்டாக பொழுதை போக்கலாம். எல்லாம் சரி, எப்போதாவது நீங்கள் விளையாட்டாக தகவல்களை தேடியது உண்டா?

அதாவது குறிப்பிட்ட தகவலை தேடாமல், அறிதல் நோக்கில் எதையாவது தேடிய அனுபவம் உண்டா? இத்தகைய அனுபவம் இருந்தாலும் சரி, அல்லது இப்படி எல்லாம் விளையாட்டாக தகவல்களை தேடியது இல்லை என்றாலும் சரி, விக்கிபீடியா கட்டுரைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய விளையாட்டு உங்களை நிச்சயம் கவர்ந்திழுக்கும். ஏனெனில், விக்கிபீடியா; தி டெக்ஸ்ட் அட்வன்சர் எனும் இந்த விளையாட்டு, விக்கிபீடியா கட்டுரைகளை விளையாட்டு வடிவில் படிக்க வைக்கிறது.

கட்டற்ற இணைய களஞ்சியமான விக்கிபீடியா தகவல் சுரங்கமாக இருப்பது உங்களுக்கு தெரிந்த விஷயம் தான். குறிப்பிட்ட தலைப்பில் தகவல் தேவை எனில் நேராக விக்கிபீடியாவில் தேடிப்பார்க்கலாம். மேலும் பல நேரங்களில் கூகுளில் தகவல்களை தேடும் போதும் பெரும்பாலும் தேடப்படும் பதம் தொடர்பான விக்கிபீடியா பக்கம் முன் வந்து நிற்பதை பார்த்திருக்கலாம்.

புதிய தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள், விக்கிபீடியாவுக்குள் நுழைந்து எந்தவித இலக்கும் இல்லாமல் ஏதாவது ஒரு கட்டுரையில் இருந்து துவங்கி, தொடர்ந்து வெவ்வேறு கட்டுரைகளாக படிக்கும் வழக்கமும் கொண்டிருக்கலாம். ஆங்கில விக்கிபீடியாவில் மட்டும் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றிருப்பதால், இப்படி மனம் போன போக்கில் கட்டுரைகளை பின் தொடர்ந்து செல்வது மற்றபடி அறிந்து கொள்ள வாய்ப்பில்லாத புதிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள உதவும். விக்கிபீடியாவை சுவாரஸ்யமான மற்றும் விநோதமான கட்டுரைகளுக்கு குறைவில்லை என்பதால் இந்த தேடல் பயணம் சாகசம் மிக்கதாகவே இருக்கும்.

ஆனால், எல்லோருக்கும் இந்த பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. அதனால் என்ன, இந்த சாகசத்தை எல்லோருக்கும் சாத்தியமாக்குவதற்காக தான் விக்கிபீடியா கட்டுரைகள் சார்ந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. லண்டனைச்சேர்ந்த கேவன் டேவிஸ், இதை உருவாக்கியுள்ளார்.

விக்கிடெக்ஸ்ட் விளையாட்டிற்கான தளத்தில் (http://kevan.org/wikitext/) நுழைந்ததுமே, கட்டுரை தேடலை துவக்குவதற்கான குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த குறிப்புகள் ஒவ்வொன்றும் ஒரு இடத்தை குறிக்கும். அவற்றில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்தால், அந்த இடம் தொடர்பான விக்கிபீடியா கட்டுரையின் சுருக்கம் மற்றும் தொடர்புடைய ஒளிப்படம் இடம்பெறும். அந்த தகவல்களை படித்து முடித்தால், கீழே அடுத்த கட்டுரைக்கான இணைப்பு இடம் பெற்றிருக்கும். அந்த இணைப்பு இன்னொரு இடத்திற்கு அழைத்துச்செல்லும். பட்டியலில் உள்ள இடங்களை தவிர, பயனாளிகள் தங்கள் மனதில் உள்ள ஏதேனும் இடத்தை டைப் செய்தும் தேடலாம்.

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், குறிப்பிட்ட இடத்தில் இருந்து அடுத்த கட்டுரைக்கு எந்த திசையில் வேண்டுமானாலும் செல்லலாம். தேர்வு செய்யும் திசைக்கு ஏற்ப வெவ்வேறு இடம் தொடர்பான கட்டுரை சுருகங்களை படிக்கலாம். இதன் மூலம் முற்றிலும் புதிய இடங்கள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்த தேடலும் ஒரு சாகச விளையாட்டு போல சுவாரஸ்யமாகவே இருக்கும்.

உதாரணத்திற்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை கிளிக் செய்தால், அந்த மாளிகளையில் உள்ள ஒவ்வொரு அறை தொடர்பான விக்கிபீடியா தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அடுத்தடுத்து இடங்களுக்கு செல்வது அலுப்பாக இருந்தால், திடிரென ஏதாவது ஒரு இடத்திற்கு தாவிச்செல்லலாம். இதற்கு செல் (கோ) எனும் சொல்லை டைப் செய்து தொடர்ந்து இடத்தின் பெயரை டைப் செய்தால் போதுமானது. இன்னும் கூடுதல் தகவல்கள் தேவை எனில், ஆய்வு (எக்ஸ்) என டைப் செய்து ஏதேனும் தலைப்பை டைப் செய்தால் அது தொடர்பான தகவல்களை பெறலாம்.

இந்த விளையாட்டில் எதிர்கொள்ளும் தகவல் பக்கத்தை சமூகம் ஊடகம் வாயிலாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.

மிகப்பெரிய சாகச விளையாட்டு என்று சொல்ல முடியாவிட்டாலும், விக்கிபீடியா கட்டுரைகளை படித்து புதிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கான சுவாரஸ்யமான வழி இது. மேலும் விக்கிபீடியாவின் நீள அகலத்தையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். வரிசையாக கட்டுரைகளை படித்து பார்ப்பதை விட, இப்படி தகவல் தேடல் விளையாட்டில் ஈடுபடுவது புதிய அனுபவமாக இருக்கும்.

மென்பொருளாளரான டேவிஸ் இது போன்ற விக்கி விளையாட்டுகளை உருவாக்குவது புதிதல்ல. இவர் ஏற்கனவே கேட்பிஷிங் (http://kevan.org/catfishing.php) எனும் விக்கி விளையாட்டையும் உருவாக்கியிருக்கிறார். இந்த விளையாட்டில் குறிப்பிட்ட ஒரு கட்டுரை இடம்பெறும் வகைகள் அனைத்தும் வார்த்தைகளாக கொடுக்கப்பட்டிருக்கும். அந்த வார்த்தைகள் விவரிக்கும் கட்டுரை எது என்பதை ஊகிக்க வேண்டும். இதை தனியாகவும் விளையாடலாம், நண்பர்களுடன் இணைந்தும் விளையாடலாம்.

இதே போல நாவல் எழுதும் மாதத்தை முன் வைத்து விக்கிபீடியா கட்டுரைகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.

டேவிஸ் இணையதளத்தில் அவர் உருவாக்கிய மேலும் பல இணைய விளையாட்டுகளை பார்க்கலாம். வகை வகையான விளையாட்டுகளை மனிதர் உருவாக்கியிருக்கிறார். எல்லாம் தனித்தனி தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. குறும்பதிவு சேவையான டிவிட்டர் சார்ந்த விளையாட்டுகள் மட்டுமே பல உள்ளன. தேடியந்திரம் சார்ந்த விளையாட்டுகளும் இருக்கின்றன. இவைத்தவிர கலை மற்றும் சோதனை முயற்சி சார்ந்த விளையாட்டுகளும் இருக்கின்றன. வார்த்தை விளையாட்டு மற்றும் வினாடிவினா ரக விளையாட்டுகளும் கூட இருக்கின்றன.

இணையம் எத்தனை சுவாரஸ்யமானது என்பதை டேவிஸ் இணைய பக்கம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்: http://kevan.org/

பிளேஷ் மூடுவிழா அறிவிப்பும், இணைய வரலாறு கவலையும்!

960x0பழையன கழிதல் என்பது மென்பொருள் சேவைகளுக்கும் பொருந்தும் தான். அதிலும் இணைய தொழில்நுட்பம் வெகு வேகமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், பழைய மென்பொருள் சேவைகள் காலாவதியாகி கைவிடப்படும் நிலை ஏற்படுவது இயற்கையானது தான். இணையத்தின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் அடோப் பிளேஷ் மென்பொருளுக்கும் இது தான் நிகழ இருக்கிறது. பிளேஷ் மென்பொருளுக்கு விடை கொடுக்க இருப்பதாக அடோப் நிறுவனம் அண்மையில் அறிவித்ததை நீங்களும் கவனித்திருக்கலாம். இது தொடர்பாக அடோப் வெளியிட்ட அறிவிப்பில், பிளேஷ் மென்பொருள் வாழ்க்கையை முடிக்க இருப்பதாக தெரிவித்திருந்தது. 2020 ம் ஆண்டு வாக்கில் பிளேஷ் பிளேயர் மென்பொருளை வெளியிடுவது மற்றும் அதற்கான அப்டேட்கள் நிறுவத்தப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் பொருள் பிளேஷ் மென்பொருள் மெல்ல கொல்லப்படும் என்பதாகும்.

இந்த அறிவிப்புக்கான எதிர்வினைகளை பார்க்கும் போது, பிளேஷ் மென்பொருளுக்கு விடை கொடுக்க பெரும்பாலானோர் தயாராகிவிட்டது போலவே தோன்றுகிறது. பிளேஷ் மென்பொருளின் முடிவு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டது தான் என்றும், இப்போதாவது அடோபிற்கு இதை அறிவிக்க மனம் வந்ததே என்பது போலவும் தான் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப செய்தி தளங்கள் கூட, பிளேஷின் தவிர்க்க இயலாத மரணம் என்பது போல தலைப்பு வெளியிட்டிருந்தன. கிஸ்மோடோ இணையதளம் பிளேஷை கருணக்கொலை செய்ய அடோப் முன்வந்துள்ளது என வர்ணித்திருந்தது. இன்னும் சிலர், தவிர்க்க இயலாத பிளேஷ் முடிவு இப்போதாவது அறிவிக்கப்பட்டுள்ளதே என நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். பல தளங்கள் பிளேஷ் மென்பொருளுக்கு இறங்கற்பா எழுதிக்கொண்டிருக்கின்றன.

பிளேஷ் மீது ஏன் இத்தனை வெறுப்பும், விமர்சனமும் இருந்தாலும் ஒரு காலத்தில் அது கொண்டாடப்பட்ட மென்பொருளாக இருந்ததை மறந்துவிடக்கூடாது. பிளேஷ் அடிப்படையில் இணையத்திற்கான மல்டிமீடியா சேவைகளை உருவாக்க பயன்படும் மென்பொருள். அனிமேஷன், வீடியோகேம் மற்றும் வீடியோக்களை உருவாக்க பிளேஷ் பயன்படுத்தப்படுகிறது. கிராபிக் தான் இதன் பலம் என்பதால், இணையதளங்களை செழுமையாக்க கூடிய செயலிகளையும், சேவைகளையும் பிளேஷ் கொண்டு எளிதாக உருவாக்க முடிந்தது. அது மட்டும் அல்ல இணையத்தில் வீடியோக்களை எளிதாக பார்க்கவும் பிளேஷ் கைகொடுத்தது. வீடியோ பகிர்வு சேவை பிரிவில் முன்னோடியான யூடியூப் 2005 ல் அறிமுகமான போது பிளேஷ் பிளேயர் மூலமே வீடியோக்களை பார்க்க வழி செய்ததாக விக்கிபீடியா கட்டுரை குறிப்பிடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அது மட்டும் அல்ல, பிளேஷ் கொண்டு எண்ணற்ற கேம்களும், அனிமேஷன்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

இப்படி கோலோச்சிய பிளேஷ் முடுவிழாவை நோக்கி தள்ளப்பட இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், பிளேஷ் தொழில்நுட்பம் காலாவதியாகவிட்டது என்பது. ஒரு காலத்தில் இணையதளங்களுக்கான சுவாரஸ்யமான உள்ளடக்கத்தை உருவாக்க பிளேஷ் தேவைப்பட்டது என்றாலும், அதன் பின் நிகழ்ந்த பாய்ச்சலில் அதைவிட மேம்பட்ட தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அதோடு பிரவுசர்களில் பயன்படுத்தப்படும் எச்டிஎம்.எல் தொழில்நுட்பத்திற்கு பிளேஷ் அந்நியமாகிவிட்டது. எனவே மென்பொருளாளரகள் பிளேஷுக்கு குட்பை சொல்லி வருகின்றனர்.

பிளேஷை பொருத்தவரை இன்னொரு பிரச்சனை, அதில் உள்ள பாதுகாப்பு பிரச்சனைகள். பிளேஷ் மென்பொருள் கொண்டு உருவாக்கப்படும் பல சேவைகள் மால்வேர் எனப்படும் வில்லங்க வாகனங்கள் மறைந்திருக்கும் இடமாக கருதப்படுகிறது. பிளேஷில் உருவாக்கப்பட்ட எட்டிப்பார்க்கும் விளம்பரங்கள் அல்லது வீடியோக்கள் மால்வேர்களின் உரைவிடமாக அமைவது உண்டு. அதோடு, உங்கள் பிளேஷ் பிளேயர் காலாவதியாகிவிட்டது, அப்டேட் செய்யவும் எனும் அறிவிப்பையும் பிளேஷ் சார்ந்த தளங்களில் அடிக்கடி பார்த்திருக்கலாம். பெரும்பாலும் இதுவும் வில்லங்க அறிவிப்பாக அமைந்து, இதை கிளிக் செய்தால் மால்வேருக்கான ஜன்னல் திறக்கப்பட்டு அவை கம்ப்யூட்டருக்குள் புகுந்துவிடும். இதற்கு பிளேஷை குற்றம் சாட்ட முடியாது என்றாலும், மால்வேரை உருவாக்கும் விஷமிகளின் பயன்பாட்டால் பிளேஷ் பாதுகாப்பு ஓட்டைகள் நிறம்பியதாக கருதப்பட்டு வருகிறது.

மேம்பட்ட தொழில்நுட்பம் வந்துவிட்டதாலும், மால்வேர் வாகனமாக இருப்பதாலும் பிளேஷுக்கு எதிராக வலுவான விமர்சனங்கள் தொடர்ந்து கூறப்படுகின்றன. பல பிரவுசர் நிறுவனங்களும், பிளேஷை கழற்றிவிட்டுள்ளன. இவ்வளவு ஏன், ஆப்பிள் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ், ஐபோனில் இதற்கு இடமே கொடுக்கவில்லை. பிளேஷ் மறைந்தாக வேண்டிய மென்பொருள் என முதலில் அறிவித்தது ஜாப்ஸ் தான். பிளேஷ் டெஸ்க்டாப் காலத்திற்கான மென்பொருள், ஸ்மார்ட்போன யுகத்தில் அதற்கு தேவையில்லை என ஜாப்ஸ் காட்டமாக கூறியிருந்தார்.

ஏதோ ஒரு விதத்தில் பலரும் இப்போது இதை ஏற்கத்துவங்கிவிட்டனர். அதன் விளைவு தான் அடோப் நிறுவனம், பிளேஷை கைவிடும் முடிவை அறிவித்துள்ளது: https://blogs.adobe.com/conversations/2017/07/adobe-flash-update.html

நிற்க இந்த செய்திக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. பிளேஷ் மென்பொருளுக்கு ஆதரவாளர்கள் இருக்கின்றனர் என்பதும், அவர்களில் பலர் பிளேஷ் நீடுழி வாழ வேண்டும் என கோரிக்கை எழுப்பியிருப்பதும் தான் அது. மென்பொருளாலரான ஜுஹா லின்ஸ்டெட் (Juha Lindstedt ) என்பவர் பிளேஷை கைவிடக்கூடாது என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் ஒன்றை துவக்கியிருக்கிறார். அவரது கோரிக்கை ஒரளவு வரவேற்பை பெற்றிருப்பதோடு காரசாரமான விவாதத்தையும் துவக்கி வைத்திருக்கிறது.

லின்ஸ்டெட் பிளேஷை காப்பற்ற வேண்டும் என்பதற்காக எடுத்து வைக்கும் வாதம் மிகவும் முக்கியமானது. பிளேஷுக்கு முடிவிழா என்பது ஒரு மென்பொருள் சார்ந்த முடிவு மட்டும் அல்ல, அது இணைய வரலாறு சார்ந்ததும் கூட என்பது தான் அவரது வாதத்தின் முக்கிய அம்சம். அதாவது பிளேஷ் கொண்டு உருவாக்கப்பட்ட இணையசேவைகளும், கேம்களும், அனிமேஷன்களும் தொடர்ந்து பயன்படுத்தப்படா முடியாமல் போய்விடும் என்று அவர் கவலைப்படுகிறார். இந்த சேவைகளும், கேம்களும் இணைய வரலாற்றின் அங்கமாக இருப்பதால் அவை காணாமல் போவது இணைய வரலாற்றின் ஒரு பகுதி அழிந்து போவதற்கு சமம் என்கிறார் அவர்.

இதற்காக கித்ஹப் எனும் தொழில்நுட்ப தளத்தில் கோரிக்கை மனு அளித்து ஆதரவு கோரியுள்ளவர், பிளேஷ் பிளேயர் என்பது இணைய வரலாற்றின் முக்கிய துண்டு, அதை கொல்வது எதிர்கால தலைமுறை கடந்த காலத்தை அணுக முடியாமல் செய்துவிடும் என்று தெரிவித்துள்ளார். கேம்கள், இணையதளங்கள், இணைய சோதனை முயற்சிகள் எல்லாமே மறக்கப்பட்டுவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மென்பொருளில் ஏற்படும் முன்னேற்றம் என்பது கடந்த காலத்தை அழிப்பதாக அமைய வேண்டுமா என்பது தான் அவர் கேட்கும் கேள்வி. ஆம், சில ஆண்டுகள் கழித்து மென்பொருள் வரலாறு பற்றி விவாதிக்கும் போது பிளேஷ் மென்பொருள் தொடர்பாக பேசும் போது, அதற்கான உதாரணங்களை காண முடியாமல் வெறும் விக்கிபீடியா கட்டுரையை தகவலை மட்டும் காண்பது என்பது வரலாற்று வெறுமையாகி விடலாம் அல்லவா? இந்த கவலையினால் தான் லின்ஸ்டெட் பிளேஷை காப்பாற்ற குரல் கொடுக்க கோரியிருக்கிறார். ஆனால், பிளேஷ் தொடர்பான நிதர்சனத்தை அவர் உணராமல் இல்லை. எனவே தான், பிளேஷ் மென்பொருளை கொலை செய்துவிடாமல், அதை ஓபன் சோர்ஸ் முறையில் வெளியிட்டு இணையவாசிகள் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். இது சரியா? பலன் தருமா? எனும் நோக்கில் மென்பொருள் உலகில் விவாதம் நடைபெற்று வருகிறது.: https://github.com/pakastin/open-source-flash

இணைய யுகத்தின் பழைய சேவைகளையும், தளங்களையும் தக்க வைத்து, இணைய வரலாற்றை காக்க வேண்டும் எனும் இயக்கத்தின் பாதையில் பிளேஷுக்கான போராட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்ப்பாக்கலாம். இந்த செய்திக்கு வாலாக ஒரு தகவலையும் நினைத்துப்பார்ப்பது பொருத்தமாக இருக்கும். அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் வரைவதற்கான எம்.எஸ் பெயிண்ட் மென்பொருளுக்கு விடை கொடுப்பதாக அறிவித்தது. ஆனால் அந்த எளிமையான மென்பொருளுக்கு ஆதரவாக பயனாளிகள் டிவிட்டரில் பொங்கியதை அடுத்து, பெயிண்ட் மென்பொருள் விண்டோஸ் ஸ்டோரில் தொடரும் என அறிவித்தது. 32 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான மென்பொருளுக்கு இத்தனை அபிமானிகளா என்றும் வியந்து போவதாக மைக்ரோசாப்ட் தெரிவித்திருந்தது. கம்ப்யூட்டரில் வரைவதை எளிதாக்கிய அந்த மென்பொருளும் இணைய வரலாற்றின் அங்கம் தான்.

 

தளம் புதிது: அந்த நாள் இணையதளங்கள்

இணைய வரலாற்றை திரும்பி பார்க்க இணையதளங்களை திரும்பி பார்ப்பதைவிட சிறந்த வழி வேறில்லை. அதாவது, சில ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்ட இணையதளங்கள் எப்படி இருந்தன என்பதை திரும்பி பார்ப்பது. குறிப்பிட்ட கால கட்டத்தில் இணையதளங்கள் எப்படி தோற்றம் அளித்த என தெரிந்து கொள்ள முடிவது இணைய வடிவமைப்பு பற்றி மட்டும் அல்ல, உள்ளடக்கத்தின் போக்கு பற்றியும் புரிய வைக்கும்.

அந்த வகையில், இணையத்தின் முன்னணி இணையதளங்கள் பத்தாண்டுகளுக்கு முன் எப்படி இருந்தன என்பதை தெரிந்து கொள்ள வழி செய்கிறது டென் இயர்ஸ் அகோ இணையதளம்.

இதன் முகப்பு பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ரெட்டிட், யூடியூப், அமேசான், பிபிசி, டைம், ஆப்பிள் உள்ளிட்ட இணையதளங்களின் லோகோ மீது கிளிக் செய்தால் அவை 10 ஆண்டுகளுக்கு முன் எப்படி காட்சி அளித்தன என்பதை பார்க்கலாம்.

இணையதளங்களின் பழைய வடிவங்களை சேமித்து காப்பாற்றிவரும், வெப் ஆர்கேவ் தளத்தில் சேமிக்கப்பட்ட இணைய பக்கங்களை கொண்டு இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. நீல் அகர்வால் என்பவர் இந்த சுவாரஸ்மான இணையதளத்தை அமைத்திருக்கிறார்.

இணைய முகவரி: http://tenyearsago.io/

 

செயலி புதிது; புத்தக குழுக்களை உருவாக்கலாம் வாங்க!

நல்ல புத்தகத்தை படித்தால் மட்டும் போதுமா என்ன? அது பற்றி சக வாசகர்களுடன் விவாதித்தால் தான் வாசிப்பு அனுபவம் இன்னும் விசாலமாகும் அல்லவா? ஸ்மார்ட்போன் யுகத்தில் இத்தகைய பகிர்தலுக்கு உதவும் வகையில் புக்டிரைப்ஸ் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

ஐபோனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில், புத்தக புழுக்கள் தாங்கள் படித்த ரசித்த புத்தகம் தொடர்பான குழுவை உருவாக்கி கொண்டு அது பற்றி விவாதிக்கலாம். இந்த குழுவில் சேருமாறு நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கலாம். நமக்கு பிடித்த புத்தகம் தொடர்பான குழுவில் சேர்ந்து கருத்து தெரிவிக்கலாம்.

நாம் விவாதிக்க விரும்பும் புத்தகங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு கருத்து சொல்ல அழைக்கலாம். ஒவ்வொரு புத்தகம் பின்னும் ஒரு குழு இருக்கிறது என்பதை சாத்தியமாக்க விரும்புகிறது இந்த செயலி.

மேலும் விவரங்களுக்கு: http://booktribes.us/

 

 

நன்றி; தமிழ் இந்து இளமை புதுமையில் எழுதியது.

உங்களை செதுக்கி கொள்ள உதவும் யூடியூப் சானல்கள்

youயூடியூப் வெறும் பொழுதுபோக்கு வீடியோக்களின் இருப்பிடம் மட்டும் அல்ல. பாடம் பயில உதவும் கல்வி சார்ந்த வீடியோக்கள் முதல், விஞ்ஞான தகவல்களை எவருக்கும் புரியும் வகையில் எளிதாக விளக்கும் வீடியோக்கள் வரை பயனுள்ள சேனல்கள் பல இருக்கின்றன. ஆர்வம் மட்டும் இருந்தால், போட்டோஷாப் முதல், புகைப்படக்கலை வரை எல்லாவற்றையும் யூடியூப் வீடியோக்களை பார்த்து கற்றுக்கொள்ளலாம்.

கட்டுரைகள் அல்லது புத்தகங்களை வாசிப்பதைவிட வீடியோவாக பார்த்து தெரிந்து கொள்வது சுவாரஸ்யமாக இருக்கிறது என நினைப்பவர்களுக்கு யூடியூப் ஒரு பல்கலைக்கழகம் தான். அந்த வகையில், உங்களை நீங்களே செதுக்கி கொள்ள விரும்பினாலும் சரி, அதற்கேற்ற வீடியோ சேனல்கள் அநேகம் இருக்கின்றன. அதாவது செயல்திறன் மேம்பாட்டிற்கு வழிகாட்டும் வீடியோ சேனல்கள்.

செயல்திறன் மேம்பாடு என்பது நிறுவனங்களுக்கு மட்டும் உரித்தானதா என்ன? தனிமனிதர்களுக்கும் செயல்திறன் மேம்பாடு முக்கியம் தான். சோம்பலை வெல்ல, எதையும் தள்ளிப்போடாமல் குறித்த நேரத்தில் முடிக்க, நினைத்ததை செய்து இலக்கை நோக்கி முன்னேற செயல்திறன் மேம்பாட்டு உத்திகள் அவசியம். இதற்கு வழிகாட்டும் புத்தகங்களும் அநேகம் இருக்கின்றன. கட்டுரைகளும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.

இந்த புத்தகங்கள் கட்டுரைகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துக்கொண்டு, அதில் உள்ள வழிகளை சுவாரஸ்யமாக வீடியோ வடிவில் விளக்கும் சேனல்கள் சிலவற்றைப்பார்க்கலாம்:

வாரம் ஒரு வீடியோ: (http://www.productivitygame.com/ )

’புரடக்டிவிட்டி கேம்’ யூடியூப் சேனலில் வாரம் ஒரு வீடியோவை பார்க்கலாம். ஒவ்வொரு வீடியோவும், புகழ்பெற்ற செயல்திறன் மேம்பாட்டு புத்தகத்தின் சாரம்சம் அல்லது அதில் உள்ள முக்கிய வழிகளை விளக்கும் வகையில் அமைந்துள்ளன. அனிமேஷன் முறையில் சுவாரஸ்யமாக கருத்துக்கள் விவரிக்கப்படுகின்றன. இந்த சேனலுக்கு புதியவர்கள் ஏற்கனவே பதிவேற்றப்பட்ட வீடியோக்களையும் பார்க்கலாம். செயல்திறன் மேம்பாட்டு நுணுக்கங்களை அறிந்து கொள்ள சிறந்த வழி என்பதோடு, அடுத்ததாக என்ன புத்தகம் படிக்கலாம் என்பதற்கான வழிகாட்டியாகவும் இவற்றை கருதலாம். இந்த வீடியோ விளக்கத்திற்கு பிறகு மூல நூலை படிப்பது இன்னும் சுவாரயமாக இருக்கும். இதே பெயரிலான இணையதளும் இருக்கிறது. வீடியோவில் இடம்பெறும் புத்தகக சுருக்கடத்தின் பிடிஎப் வடிவங்கள் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளன.

மேதைகளின் பாதை (http://www.evancarmichael.com/ )

புத்தகங்களை பார்த்து கற்றுக்கொள்வது முன்னணி தொழிலதிபர்கள் வாழ்க்கையில் இருந்தும் செயல்திறனுக்கான வழிகளை கற்றுக்கொள்ளலாம். அதை தான் இவான் கார்மைக்கேலின் யூடியூப் சேனல் செய்கிறது. ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் வாரன் பப்பே வரை பலரது வாழ்க்கையில் இருந்து முன்னேற்றத்திற்கான வழிகளை தனது வீடியோக்கள் மூலம் இவர் தொகுத்தளிக்கிறார். கனடாவைச்சேர்ந்தவரான இவானும் ஒரு தொழில்முனைவோர் தான். தொழில்முனைவோர்களை நான் நம்புகிறேன் என்றும் சொல்லும் இவான், அவர்கள் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ளக்கூடியவற்றை வீடியோ வழியில் விளக்கி ஊக்கம் அளிக்கிறார். யூடியூப் சேனலில் இவருக்கு ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் இருக்கின்றனர். இவரது இணையதளம் மூலமும் வீடியோக்களை அணுகலாம். அமைதியான தூக்கம், முடிவெடுக்கும் ஆற்றல், வெற்றிக்கான வழிகள் என பல்வேறு விஷயங்களில் வழிகாட்டுகிறார். தொழில்முனைவில் ஆர்வம் கொண்டவர்களுக்கு கூடுதலாக ஊக்கம் அளிக்கும் இந்த இணையதளம்.

கேரியை கேளுங்கள்  (https://www.garyvaynerchuk.com/ )

அமெரிக்கரான கேரி வெயன்ர்செக் தொழில் நிறுவனங்களை துவக்குவதையே தொழிலாக வைத்துக்கொண்டிருப்பவர். தொடர் தொழில்முனைவாளர் என்று வர்ணிக்கப்படுகிறார். இணைய ஆற்றலை புரிந்து கொண்டு அவற்றை தொழில் வாய்ப்புகளாக மாற்றுவது கேரிக்கி கைவந்த கலை. தொழில் அனுபவத்தில் தான் கற்ற பாடங்களை கேரி வீடியோவாக பகிர்ந்து கொள்கிறார். தானே ஒரு தொடர் நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். என் வாழ்க்கையின் வெற்றிக்கு பொறுமை தான் முக்கிய காரணம் என ஒரு வீடியோவில் உற்சாகமாக சொல்கிறார். இவரது வாழ்க்கை பாடங்கள் உங்களுக்கும் ஊக்கம் அளிக்கலாம். 7 லட்சத்திற்கு மேற்பட்ட சந்ததாரர்களை கொண்ட யூடியூப் சேனல் தவிர தனது பெயரில் சுறுசுறுப்பான இணையதளத்தையும் நடத்தி வருகிறார்.

இணைய நுணுக்கங்கள் (https://www.youtube.com/user/dottotech )

செயல்திறன் மேம்பாட்டு குறிப்புகள் இணைய பயன்பாடு சார்ந்ததாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் ஸ்டீவ் டோட்டோவின், டோட்டோடெக் சேனலை நாடலாம். கூகுள் வரைபட சேவையை பயன்படுத்தும் வழிகள், இணைய குறிப்பேடு சேவையான எவர்நோட்டை இன்னும் சிறப்பாக பயன்படுத்துவது எப்படி? ஜிமெயிலில் நீங்கள் அறிய வேண்டியவை என பல்வேறு விதமான இணைய நுணுக்கங்களை இவர் வீடியோவில் விளக்குகிறார். பிரவுசர் குறிப்புகள் முதல் பாஸ்வேர்டு பாதுகாப்பு வரை எண்ணற்ற விஷயங்களை அறியலாம். தினம் ஒரு வீடியோவாக பார்த்து வந்தால் கூட போதும் நீங்கள் இணைய பயன்பாட்டில் கில்லாடியாகிவிடலாம். தொழில்நுட்ப சந்தேகங்கள் இருந்தாலும் இவரிடம் கேட்டு தெளிவு பெறலாம்.

மாணவர்களுக்கு.. (https://collegeinfogeek.com/ )

நீங்கள் மாணவராக இருந்து கற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என விரும்பினால் காலேஜின்போகீக் யூடியூப் சேனல் அதற்கு வழிகாட்டுகிறது. படித்தவற்றை எப்படி மறக்காமல் நினைவில் நிறுத்திக்கொள்வது, அதிகாலை பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வது எப்படி? சுய ஒழுக்கத்தை உருவாக்கி கொள்வது எப்படி? வகுப்பில் குறிப்புகள் எடுப்பது எப்படி? என பலவகையான தலைப்புகளில் வீடியோக்கள் வழிகாட்டுகின்றன. அமெரிக்கத்தன்மை இருந்தாலும் இதில் இடம்பெறும் குறிப்புகள் பொதுவானவை. தாமஸ் பிராங்க் என்பவர் இந்த சேனலை நடத்தி வருகிறார். இவருக்கும் தனியே இணையதளம் இருக்கிறது.

சுய முன்னேற்றக்குறிப்புகள் (https://www.youtube.com/channel/UCRI6t05DNVlV0XhdI7hx_iw)

ஒன்பர்செண்ட்பெட்டர் சேனல், சுய முன்னேற்ற நூல்களில் இடம்பெற்றிருக்கும் குறிப்புகளை அழகிய அனிமேஷன் வீடியோக்களாக வழங்குகிறது. வாரம் நான்கு புத்தகங்கள் படிப்பது எப்படி? புதிய பழக்கங்களை உருவாக்கி கொள்வது எப்படி? போன்ற விஷயங்களையும் கற்றுக்கொள்ளலாம். பல பெஸ்ட்செல்லர் புத்தகங்களின் முக்கிய வழிகளையும் அனிமேஷன் வீடியோவாக பார்க்கலாம்.

பணியிட வழிகாட்டி (https://www.youtube.com/channel/UCAp3b6zIvS8ct4yci-GwxIg/videos )

சிம்ப்ளிவிட்டி வீடியோ சேனல் அலுவலக சூழலில் செயல்திறனை மேம்படுத்திக்கொள்வதற்காக வழிகாட்டுகிறது. இமெயில் பயன்பாடு, இணைய குறிப்பேடு சேவைகளை பயன்படுத்தும் வழி என எல்லாமே பணி சார்ந்த வீடியோக்களாக அமைகிறது. குறிப்பாக இமெயில் பயன்பாட்டில் நேரத்தை வீணாக்காமல் மேலும் சிறந்த முறையில் அவற்றை கையாளும் வழிகளை விளக்கும் பல வீடியோக்கள் இருக்கின்றன. இணையம் சார்ந்த பல நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ளலாம்.

 

தளம் புதிது; வீடியோக்களை திருத்த உதவும் சேவை

இணையவாசிகள் பலரும் இப்போது ஸ்மார்ட்போனில் இருந்து தான் இணையத்தை அதிகம் அணுகுகின்றனர். பேஸ்புக் பதிவுகளை பார்ப்பது முதல், ஒளிப்படங்களை பார்ப்பது, வீடியோக்களை கண்டு ரசிப்பது என எல்லாவற்றுக்கும் ஸ்மார்ட்போனை நாடுகின்றனர். ஸ்மார்ட்போன் உள்ளங்களையில் இணையத்தை கொண்டு வந்தாலும் அதில் சின்ன சின்ன சிக்கல்கள் இல்லாமல் இல்லை. உதாரணத்திற்கு வீடியோக்களையே எடுத்துக்கொள்வோம். இணைய வீடியோக்கள் முழுவதும், அகல வடிவில் எடுக்கப்பட்டவை. இவற்றை ஸ்மார்ட்போன் திரையில் பார்க்கும் போது பொருத்தமில்லாமல் இருக்கும்.

ஸ்மார்ட்போன் திரையில் ஒளிப்படங்களோ, வீடியோக்களோ சதுர வடிவில் அல்லது, நீள் வடிவில் இருந்தால் நல்லது. ஒளிப்படம் என்றால், ஸ்மார்ட்போன் திரைக்கு ஏற்ப திருத்திக்கொள்ளலாம். ஆனால் வீடியோக்களை என்ன செய்வது?

இந்த கேள்விக்கு பதிலாக அமைகிறது கிராப்.வீடியோ இணையதளம். அகல வடிவிலான வீடியோக்களை ஸ்மார்ட்போன் திரைக்கு ஏற்ப இந்த தளம் திருத்தி தருகிறது. அடிப்படை சேவை இலவசமானது. ஆனால் கூடுதல் வசதிக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

இணையதள முகவரி: https://crop.video/

 

 

 

——-

செயலி புதிது: பழக்கங்களை கற்றுத்தரும் செயலி

பழக்க வழக்கங்கள் தான் சாதனையாளர்களை உருவாக்குகின்றன என்கிறது டைனிகெயின் செயலி. ஆண்ட்ராய்டு போன்களுக்கான இந்த செயலி, நீங்களும் இது போன்ற வெற்றிகரமான பழக்க வழக்கங்களை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது. மற்றவர்கள் பின்பற்றும் வெற்றிகரமான பழக்கங்களை அறிந்து கொண்டு பின்பற்றுவதோடு, பிரபலமானவர்களின் அதிகாலை பழக்கங்களையும் கற்றுக்கொள்ளலாம்.

அதிகாலை பழக்கங்களை மேலும் மேம்படுத்திக்கொள்வதற்கான குறிப்புகளையும் அளிக்கிறது. அதற்கேற்ப நன்றாக தூங்குவதற்கான வழிகளையும் முன்வைக்கிறது. உங்கள் வாழ்க்கையை மேலும் ரசிக்க, மேலும் மகிழ்ச்சியாக இருக்க இந்த குறிப்புகள் வழி காட்டும் என இந்த செயலி தெரிவிக்கிறது. பணியிடத்தில் மேலும் கவனத்தை மேம்படுத்திக்கொள்ளவும் இந்த செயலியை நாடலாம்.

மேலும் விவரங்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=com.ziggycrane.tinygain

 

–=

நன்றி; தமிழ் இந்து இளமை புதுமையில் எழுதியது.

 

 

 

 

 

 

பயனுள்ள பிடிஎப் கருவிகளை அளிக்கும் இணையதளம்

CleverPDFபிடிஎப் கோப்பு வடிவத்தை நீங்கள் பலவிதங்களில் எதிர்கொள்ளலாம். இணையத்தில் உலாவும் போது, பல தகவல்கள் பிடிஎப் கோப்பு வடிவில் இருப்பதை பார்க்கலாம். பணி நிமித்தமாக நீங்களே கூட, பிடிஎப் கோப்புகளை உருவாக்கும் பழக்கம் கொண்டிருக்கலாம். பிடிஎப் கோப்பு பயன்பாடு தொடர்பான உங்களுக்கு தேவைப்படக்கூடிய பலவிதமான இணைய கருவிகளை ஒரே இடத்தில் வழங்குகிறது கிளவர்பிடிஎப் இணையயதளம்.

பிடிஎல் கோப்பை உருவாக்குவது எளிதானது. அதற்குறிய மென்பொருள் இருந்தால் போதும். ஆனால் பல நேரங்களில் பிடிஎப் கோப்பை வேறு வடிவங்களுக்கு மாற்றும் தேவை ஏற்படலாம். உதாரணத்திற்கு பிடிஎப் கோப்பை சாதாரன வேர்டு கோப்பாக மாற்ற வேண்டியிருக்கலாம். இத்தகைய மாற்றங்களை செய்வதற்கான கருவிகள் அனைத்தும் இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு ஐகான் இருக்கிறது. அதில் கிளிக் செய்தால் விரும்பிய கோப்பு வடிவத்திற்கு மாற்றிக்கொள்ளலாம்.

இதே போல பிற கோப்பு வடிவங்களில் இருந்தும் பிடிஎப் கோப்பாக மாற்றிக்கொள்ளலாம். இதற்கான கருவிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. பவர்பாயிண்ட் அல்லது உருவப்படத்தை பிடிஎப் கோப்பாக மாற்றிக்கொள்ளலாம்.

இவற்றைத்தவிர, பிடிஎப் கோப்புகளை இணைப்பது, பிடிஎப் கோப்புகளை பிரிப்பது, சுருக்குவது போன்ற தேவைகளுக்கான இணைய கருவிகளும் இடம்பெற்றுள்ளன. இப்படி பிடிஎப் தொடர்பான 19 வகையான பயன்பாட்டிற்கான இணைய கருவிகளை இந்த தளத்தில் அணுகலாம்.

இணைய முகவரி: https://www.cleverpdf.com/

 

செயலி புதிது; ஜிப் வடிவில் செய்திகள்

செய்திகள் சார்ந்த செயலிகளில் மிகவும் வித்தியாசமான செயலியாக ஸ்னிப்ட் அமைந்துள்ளது. இந்த செயலி செய்திகளை சுருக்கமாக மட்டும் அல்ல, சுவாரஸ்யமான முறையிலும் வழங்குகிறது. அதாவது செய்திகளை ஜிப் மற்றும் வீடியோ மீம்கள் வடிவில் வழங்குகிறது.

இந்த செயலியில், விளையாட்டு, தொழில்நுட்பம், அறிவியல், இந்தியா, சர்வதேசம் என பல பிரிவுகளில் உங்களுக்கு விருப்பமான பகுதிகளை தேர்வு செய்து கொள்ளலாம். அதன் பிறகு அந்த பிரிவு செய்திகளை ஜிப் வடிவில் அல்லது 4 நொடி சுருக்கமான வீடியோ மீம்களாக பார்க்கலாம்.

செய்திகள் தொடர்பான வீடியோ மீம்கள் அல்லது ஜிப்களை ஒரே இடத்தில் அணுகுவதையும் இந்த செயலி எளிதாக்குகிறது எனலாம்.

ஜிப்களை கண்டு ரசித்த பிறகு மேற்கொண்டு தகவல்கள் தேவை எனில், 150 வார்த்தை சுருக்கத்தையும் வாசிக்கலாம்.

மேலும் தகவல்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=com.mysnippt.snippt&hl=en