Tag Archives: google.urls

முகவரி சுருக்க சேவைகளின் வளர்ச்சி

php-url-shortenerஇணைய பயன்பாடு மற்றும் இணைய போக்குகளில் உங்களுக்கு உள்ளொளியும், புரிதலும் தேவை என்றால் முகவரி சுருக்க சேவைகளின் வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்க்க வேண்டும்.
இணைய முகவரி சுருக்க சேவைகளை பற்றி விரிவாக கூட விவரிக்க வேண்டாம்; பிட்.லி அல்லது டைனியூ.ஆர்.எல் ஆகிய இணைய சேவைகளின் பெயரை குறிப்பிட்டாலே போதுமானது.இந்த இரண்டும் தான் இணைய முகவரி சுருக்க சேவைகளின் முன்னோடி தளங்கள்!

இவை சமுக வலைப்பின்னல் யுகத்தின் பகிர்தல் தாகத்தை தணிக்க பிறந்தவை.
நீளமாக இருக்கும் இணைய முகவரிகளை( யூ.ஆர்.எல் அல்லது உரலி)சின்னதாக சுருக்குத்தருவது தான் இவற்றின் பணி.இந்த சுருக்கங்களை எளிதாக பகிர்ந்து கொள்ளலாம்.இவற்றில் கிளிக் செய்தால் சுட்டிக்காட்டப்பட்ட தளங்களுக்கு சென்றுவிடலாம்.

இணையதளங்களை அல்லது இணைய பக்கங்களை பகிர்ந்து கொள்ளும் போது அவற்றின் முகவரி சற்றே நீளமாக அமைந்து விடுகின்றன.இந்த நீளத்தையோ அல்லது அவற்றின் சுமையையோ இமெயில் யுகத்தில் யாரும் உணர்ந்ததில்லை.ஆனால் சமூக வலைதளங்களில் அதிலும் குறிப்பாக 140 எழுத்து வரம்பு கொண்ட குறும்பதிவு சேவையான டிவிட்டர் வருகைக்கு பிறகு இந்த குறை உணரப்பட்டது.இணைப்பை சுட்டிக்காட்டும் போது முகவரியே இடத்தை அடைத்துக்கொண்டால் என்ன செய்வது?

இந்த சிக்கலுக்கு தீர்வாக தான் முகவரி சுருக்க சேவைகள் அறிமுகமாயின. 50-60 எழுத்துக்கள் கொண்ட நீளமான இணைய முகவரிகளை இந்த சேவைகளில் சமர்பித்தாலும் அழகாக அவற்றை சின்னதாக சுருக்கித்தந்துவிடும்.
இது இவற்றின் ஆரம்ப கால வரலாற்று சுருக்கம்.

2002 ல் டைனி யூ.ஆர்.எல் அறிமுகமானது.பின்னர் பிட்.லி வந்தது.தொடர்ந்து மழை கால காளான் போல நூற்றுக்கும் அதிகமான முகவரி சுருக்க சேவைகள் உதயமாயின.இவற்றில் பெரும்பாலானவற்றின் பெயர்கள் மட்டுமே மாறுபட்டிருந்தனவே தவிர அவற்றின் சேவையிலோ பயன்பாட்டிலோ எந்த புதுமையும் இருக்கவில்லை.
இந்த புற்றீசல் போட்டியை பிட்.லி,டைனியூ.ஆர்.எல் உள்ளிட்ட தளங்கள் சமாளித்து முன்னிலை பெற்றன.ஆனால் சற்ற்ம் எதிர்பாராத வகையில் டிவிட்டரே சொந்தமாக முகவரி சுருக்க சேவையை ஒரு கட்டத்தில் அறிமுகம் செய்தது.டிவிட்டரில் பகிரப்படும் முகவரிகளை தனியே சுருக்க வேண்டிய தேவையில்லாமல் அவை தானாகவே சுருக்கப்பட்டன.

இதே காலகட்டத்தில் முன்னணி தேடியந்திரமான கூகுளும் தன் பங்கிற்கு ஒரு முகவரி சுருக்க சேவையை அறிமுகம் செய்தது:https://goo.gl/
இணையத்தின் பகிர்தல் பிரச்ச்னைக்கான அழகான தீர்வை முன்வைத்து வளர்ச்சி வாய்ப்புகளை எதிர்நோக்கியிருந்த முகவரி சுருக்க சேவைகளுக்கு இதைவிட பெரிய சோதனை இருக்க முடியாது தான்.
இது இவற்றின் சோதனை!
ஆனால் முகவரி சுருக்க சேவைகள் இதனால் சுருங்கிவிடவில்லை.அவை சின்ன சின்ன புதுமைகளால் தங்களை புணரமைத்துக்கொண்டிருக்கின்றன.

இப்போது இந்த சேவைகள் முகவரி சுருக்கத்தை மட்டும் அளிப்பதில்லை.சுருக்கப்படும் முகவரிகளின் முன்னோட்டத்தை அளிக்கின்றன.அதாவது கிளிக் செய்வதற்கு முன்னரே அந்த இணைப்பின் பின்னே உள்ள இணையதளத்தின் தோற்றத்தை பார்க்கலாம். இந்த முன்னோட்ட வசதி மிகவும் முக்கியமானது.முகவரி சுருக்க வசதியை பயன்படுத்திக்கொண்டு ஒரு சிலர் மோசமான அல்லது மால்வேர் பாதிப்பை உண்டாக்க கூடிய தளங்களுக்கு கடத்திச்செல்லும் அபாயம் உண்டானதால்,கிளிக் செய்ய இருக்கும் தளம் உண்மையில் இணைப்பில் சுட்டிக்காட்டப்பட்டது தானா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நடுவே இணைப்புகளை பரிசோதித்து அவை மால்வேர் ஆபத்து இல்லாதவை தானா என்று உறுதிபடுத்தும் சேவையை பிரதானமாக வழங்கும் இணையதளங்களும் கூட அறிமுகமாயின.
அதோடு,இத்தகைய தவறான பயன்பாட்டை தவிர்ப்பதற்காக இந்த சேவைகள் முதலில் பயனாளிகளை நீங்கள் மனிதர்கள் தானா என்று நிருபித்துக்காட்டவும் சொல்கின்றன.கூகுள் இதற்கு கேப்ட்சா சோதனை வைக்கிறது என்றால் பிட்.லி அழகான சின்ன விளையாட்டை முன்வைக்கிறது.

இணையதளங்களை பகிர்ந்து கொண்டால் மட்டும் போதுமா? அவற்றை எத்தனை பேர் கிளிக் செய்து பார்த்தனர் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? இப்போது முகவரி சுருக்க சேவைகள் இந்த புள்ளிவிவரங்களையும் சேர்த்தே வழங்குகின்றன. பிட்.லி ஒரு படி மேலே சென்று பிராண்ட்கள் தங்களுக்கான முகவரி சுருக்கங்களை உருவாக்கி கொண்டு அவற்றின் வீச்சை அறிவதற்கான சேவையையும் வழங்குகிறது.

அதோடு இந்த சேவைகள் ஸ்மார்ட்போன் யுகத்திற்கு ஏற்ப செயலி வடிவமும் எடுத்துள்ளன.
டைனி.யூஆர்.எல் – பிரவுசர் நீட்டிப்பாகவே பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை அளிக்கிறது.
http://yourls.org/ சேவை பயனாளிகள் தங்களுக்கான முகவரி சுருக்க சேவையை சொந்தமாகவே உருவாக்கி கொள்ள வழி செய்கிறது.ஓபன் சோர்ஸ் அடிப்படையில் செயல்படும் சேவை இது.
முகவரி சுருக்க சேவைகளில் இப்போது எத்தனை தளங்கள் இருக்கின்றன என அறிய விரும்பினால் அந்த பட்டியலை http://bit.do/list-of-url-shorteners.php தளம் அளிக்கிறது.

http://longurl.org/ தளம் சுருக்கப்பட்ட முகவரிகளின் பின்னே உள்ள இணையதளம் பற்றிய முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ள வழி செய்கிறது.
http://is.gd/ தளம் இணைய முகவரிகள் தவறான நோக்கங்களுக்காக சுருக்கப்படுவதை தடுக்கும் வகையில் செயல்படுகிறது.
காலத்திற்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக்கொண்டுள்ள முகவரி சுருக்க சேவைகளின் அடுத்த பரிமானம் என்னவாக இருக்கும்.இப்போதே ஒரு முன்னோட்டம் பார்க்க் முடியுமா? என்பது சுவாரஸ்யமான கேள்வி!