Tag Archives: kickstarter

இணைய யுகத்தின் இளம் சாதனையாளர்கள்

img005நம் காலத்து நாயகர்கள் புத்தகம் வெளியாகி இருக்கிறது. இணைய யுகத்தின் இளம் சாதனையாளர்களின் அறிமுக சித்திரங்களின் தொகுப்பு இந்த புத்தகம். இதே தலைப்பில் புதிய தலைமுறை கல்வி இதழில் தொடராக வெளிவந்து, தற்போது புதிய தலைமுறை வெளியீடாக வந்திருக்கிறது.

யார் இந்த நாயகர்கள் என கேட்கலாம்? நவீன இணையத்தில் நாம் தவறாமல் பயன்படுத்தும் முன்னணி இணைய சேவைகளை உருவாக்கியவர்கள் இவர்கள்.

பெரும்பாலானோர் அறிந்த பேஸ்புக், வாட்ஸ் அப், ஸ்கைப், வேர்ட்பிர்ஸ், பிளாகர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சேவைகளை உருவாக்கியவர்கள் முதல், பரவலாக அறியப்படாத ஆனால் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய லைப்ரரிதிங், டக் டக் கோ, யெல்ப், பின்டிரெஸ்ட் உள்ளிட்ட சேவைகளை உருவாக்கியவர்கள் வரை பல இணைய சாதனையாளர்களை இந்த தொகுப்பின் மூலம் அறிமுகம் செய்து கொள்ளலாம்.

ஏர்பிஎன்பி, டிக், சவுண்ட்கிளவுட், டிராப்பாக்ஸ், பிளாகர், கிளவுட், டெலிஷியஸ், லிங்க்டுஇன், உபெர், டிவிட்ச், கிவா, கிக்ஸ்டார்ட்டர், ரெட்டிட், டம்ப்ளர், பயர்பாக்ஸ் என நவீன இணையத்தின் அடையாளமாக கருதப்படும் சேவைகளை உருவாக்கிய நாயகர்களாக இந்த பட்டியல் நீள்கிறது.

இந்த சேவைகள் அனைத்துமே இணையத்தின் ஆற்றலை புதுமையாக பயன்படுத்திக்கொள்ள முற்பட்டதன் மூலம் முன்னணி சேவையாக உருவானவை. இவை அனைத்துமே ஏதேனும் ஒரு வகையில் புரட்சிகரமானவையும் கூட! இணையம் மூலம் தொலைபேசி சேவையை பயன்படுத்த வழி செய்த ஸ்கைப், வீடியோக்களை எளிதாக பகிர வைத்த யூடியூப், சிக்கலான பிரவுசர் அனுபவத்தை எளிதாக்கிய பயர்பாக்ஸ், இணைய கடன் வழங்க வழி செய்த கிவா, இணைய நிதி திரட்டும் மேடையான கிக்ஸ்டார்ட்டர், செய்தி பகிர்வை ஜனநாயகமயமாக்கிய டிக்  என இவை அனைத்துமே ஏதேனும் ஒரு வகையில் புரட்சிகரமானவை.

இந்த புதுயுக இணைய சேவைகள் சமகால வாழ்க்கையில் ஏற்படுத்திருக்கும் தாக்கம் நினைத்து கூட பார்க்க முடியாதது. பேஸ்புக், யூடியூப் மட்டும் அல்ல, கோப்பு பகிர்வுக்கான டிராப்பாக்ஸ், தொழில்முறை வலைப்பின்னலான லிங்க்டுஇன் உள்ளிட்ட சேவைகளையும் நம்மால் பயன்படுத்தாமல் இருக்க முடியாது.

இந்த சேவைகளுக்கு பின்னே இருக்கும் சாதனையாளர்கள் இவற்றை எப்படி உருவாக்கினர் என்பதை அவர்களின் அறிமுக சித்திரம் விவரிக்கிறது. சேவைக்கான எண்ணம் உதித்த விதம், அதை செயல்படுத்துவதில் எதிர்கொண்ட சவால்கள், போராட்டங்களையும், தடைகளையும் வெற்றி கொண்ட விதம் என சுவாரஸ்யமாகவும், ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த சித்திரங்கள் அமைந்திருப்பதை உணரலாம்.img006

இவை வெறும் வர்த்தக வெற்றிக்கதைகளோ, தொழில் சாகசங்களோ கிடையாது. இவை தனிமனித புகழ்ச்சியும் அல்ல: இணையம் உண்டாக்கி தந்துள்ள எல்லையில்லா சாத்தியங்களையும், புதிய வாய்ப்புகளையும் இணம் கண்டு கொண்டதன் மூலம் அவற்றை நடைமுறை வாழ்க்கைக்கே ஏற்ப பயனுள்ள சேவையாக மாற்றித்தந்த முன்னோடிகளின் பதிவுகள் இவை.

பெரிய அளவிலான பண பலமோ, வலுவான பின்பலமோ இல்லாமல், தங்கள் மனதில் உதித்த எண்ணத்தின் ஆற்றலால் மட்டும் இந்த சேவைகளை உருவாக்கியவர்கள் ஜெயித்திருக்கின்றனர். இந்த எண்ணத்தை வெற்றிகரமாக மாற்றுவதில் அவர்கள் வெளிப்படுத்திய வேட்கையும், தொழில்நுட்ப புரிதலுமே வெற்றிக்கு வழி வகுத்திருக்கின்றன. இவர்கள் உருவாக்கிய நிறுவனங்கள் பல பெரிய ஜாம்பவான் நிறுவனங்களுக்கு சவால் விடும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றன. ஆனால் இத்தகைய புதுமையான சேவையை உருவாக்குவது என்பது ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள எந்த பெரிய நிறுவனத்திற்கும் சாத்தியமாகவில்லை.  அதனால் தான் இவர்கள் நம் காலத்து நாயகர்களாக மின்னுகின்றனர்.

 

close_up_5pntz-730x487

கிரவுட்சோர்சிங் முறையில் உருவான இணைய ஓவியம்

ணையத்தை கண்ணால் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? அதுவும் ஓவியமாக பார்க்கா, முடிந்தால் எப்படி இருக்கும்? இந்த கேள்வியும் ,எதிர்பார்ப்பும் உங்களுக்கு இருந்தால் அதற்கான பதிலை இண்டெர்நெட்டோபியா மூலம் அளித்திருக்கிறார் பிரிட்டன் ஓவியர் பெஞ்சமின் ரெட்போர்ட். தேர்ந்த ஓவியரான ரெட்போர்ட் இணையவாசிகளின் பங்களிப்போடு இணையத்தை ஓவியமான வரைந்து பிரம்மாண்டமான பிக்சல் ஓவியமாக வரைந்திருக்கிறார்.

கூட்டு முயற்சியின் அழகான அடையாளமாக திகழும் இந்த இணைய ஓவியம் வண்ணமயமாக வியக்கவும் வைக்கிறது. கிக்ஸ்டார்ட்டர் இணையதளம் மூலம் வெற்றிகரமான சாத்தியமான படைப்பூக்கம் மிக்க திட்டத்திற்கு உதாரணமாகவும் இருக்கிறது.

இனி ,இண்டெர்நெட்டோபியா உருவான வித்ததை பார்ப்போம்.

பெஞ்சமின் ரெட்போர்ட் பிரிட்டனின் மான்செஸ்டரை சேர்ந்த சுயேட்சை வடிவமைப்பாளர்.கோட்டோவியம் போன்றவற்றை வரைவதில் ரெட்போர்ட் கில்லாடி.

பெரும்பாலும் ஓவியங்களை தனக்குள் தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்ப வரைந்து கொண்டிருந்தவர் 2013 ம் ஆண்டில் கூட்டு முயற்சியாக ஒரு ஓவியத்தை உருவாக்க நினைத்தார். அந்த ஓவியத்தின் பெயர் தான் இண்டெர்நெட்டோபியா– அதாவது இணையவெளியை ஓவியமாக உருவகப்படுத்தும் முயற்சி.

அறிவியில் புனைகதைகளை படிப்படில் ஆர்வம் கொண்ட ரெட்போர்ட் ,சைபர்வெளி (cyberspace) பற்றிய வர்ண்னைகளால் வியந்து போயிருக்கிறார். ஆனால் விவரிக்கப்பட்ட வித்ததில் அத்தனை திருப்தி இல்லை என்கிறார். எல்லாமே முடிவில்லாத கிரிட் அமைப்பு போல இருந்ததன என்கிறார். இதற்கு மாறாக இணையத்தை மனிதன்மையுடன் உருவகப்படுத்தி பார்த்தால் என்ன என்று தோன்றியிருக்கிறது. இதை தனியே செய்யாமல் இணையவாசிகளுடன் இணைந்து கூட்டு முயற்சியாக செய்ய விரும்பினார்.இதற்காக தான் இணையம் மூலம் நிதிதிரட்டுவதற்கான கிக்ஸ்டாட்டர் இணையதளத்தை நாடினார்.

ஒரு மெகா டிஜிட்டல் போஸ்ட்டராக ஓவியத்தை வரைவது அவரது திட்டம். ஆனால் அதில் என்ன வரைவது என்பதை அவர் முடிவு செய்யமாட்டார். இணையவாசிகள் அதை தீர்மானிப்பார்கள். அவர்கள் சொல்லும் கருத்துக்கு ஏற்ப அவர் ஓவிய பகுதியை வரைவார்.

இதற்காக டிஜிட்டல் போஸ்ட்டரை கனசதுரங்களாக பிரித்துக்கொண்டார். ஒவ்வொரு கனசதுரமும் ஒரு டாலர். ஒருவர் எத்தனை சதுரங்கள் வேண்டுமானாலும் வாங்கி கொண்டு அவற்றில் என்ன வரைய வேண்டும் என்று குறிப்பிடலாம். இப்படி இணையவாசிகள் சொல்வதை எல்லாம் ரெட்போர்ட் வரைந்து முழு டிஜிட்டல் ஓவியத்தை உருவாக்க திட்டமிட்டார்.

இந்த புதுமையான கோரிக்கையை இணையவாசிகள் உற்சாகமாக ஆதரிக்கவே, ரெட்போர்ட் வெற்றிகரமாக 25 மீட்டர் மற்றும் 1.5 மீட்டர் நீள அகலம் கொண்ட ஓவியத்தை உருவாக்கினார். கிரவுட்சோர்சிங் முறையில் வரையப்பட்ட மிகப்பெரிய ஓவியமாகவும் இது கருதப்படுகிறது.

இணையத்தின் கூட்டு கற்பனையை பிரதிபலித்த அந்த ஓவியத்தை ரெட்போர்ட் தனது பாணியில் பென்சில் மற்றும் பேனா கொண்டு கருப்பு வெள்ளை காட்சியாக வரைந்திருந்தார். மூன்று மாத கால உழைப்பு மூலம் உருவான அந்த ஓவியம் மிகவும் நுட்பமாகவே உருவாகி இருந்தது. அதை ஆன்லைனில் பார்க்கும் போது ஒவ்வொரு பகுதிய நகர்த்தி, பெரிதாக கிளிக் செய்து அதன் நுணுக்கங்களை ரசிக்கலாம்.

இந்த ஓவியத்தை முடித்தவுடனே அடுத்ததாக என்ன செய்யலாம் என்று அவர் மீண்டும் தன்னை ஆதரித்த இணையவாசிகளிடமே கேட்டார். இதே ஓவியத்தை வண்ணத்தில் வரைய வேண்டும் என்பது அவர்களின் கட்டளையாக இருந்தது. அதன்படியே ரெட்போர்ட் முதலில் வரைந்த இணைய ஓவியத்தைற்கு வண்ணங்களை உயிர்கொடுத்திருக்கிறார். கருப்பு வெள்ளையில் கண்ணில் படாத நுட்பங்கள் கூட வண்ணத்தில் மிளிர்வதை இப்போது பார்க்க முடிகிறது.

தனது இணையதளத்தில் இந்த வண்ண இணைய ஓவியத்தை ரெட்போர்ட் இடம்பெற வைத்திருக்கிறார். கைவசம் நேரம் இருந்தால் அந்த ஓவியத்தை அங்குலம் அங்குலமாக நகர்த்தி அணுஅணுவாக ரசிக்கலாம். இல்லை ஒரு பறவை பார்வை போல பார்த்தாலும் பிரமிக்க வைக்கும்.

 

ரெட்போர்டின் கிக்ஸ்டார்ட்டர் பக்கம்; https://www.kickstarter.com/projects/benjaminredford/internetopia-the-supersized-internet-drawing

 

ரெட்பொர்டின் இண்டெர்நெட்டோப்பிய ஓவிய தளம்:http://www.internetopia.squarespace.com/

 

———