Tag Archives: police

காவலருக்கு உதவிக்கு வந்த இணையம்

Officer-Hickeyகாவல் அதிகாரி மேத்யூ ஹிக்கி இணையத்தின் உதவியால் நெகிழ்ந்து போயிருக்கிறார். அவர் மட்டு அல்ல, செல்லப்பிராணிகள் மீது பாசம் கொண்ட பலரும் நெகிழ்ந்து போயிருக்கின்றனர். ஹிக்கிக்கு இணையம் மூலம் முகம் தெரியாத பலர் உதவிய விதத்தை தெரிந்து கொண்டால் நீங்களும் கூட இதே உணர்வை பெறுவீர்கள்.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள மெரியேட்டா நகரில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருந்தார். 30 ஆண்டு கால பணிக்குப்பிறகு ஹிக்கி சமீபத்தில் ஓய்வு பெற்றார்.

ஹிக்கி தனது பணியை மிகவும் நேசித்தவர்.பணியில் தனது சகாவாக இருந்த அஜெக்சையும் மிகவும் நேசித்தார். ஓய்வுக்கு பிறகு அஜெக்சும்,தானும் இணைந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால் கவால்துறை விதிகளால் அது சாத்தியமில்லை என அறிந்த போது நொந்துபோனார்.

அஜெக்ஸ் அவருடன் பணியாற்றிய பயிற்சி நாய்.அஜெக்சை தனது சகாவாகவும், நண்பனாகவும் கருதியிருந்தார். அதனால் தான் ஓயவுக்குப்பின் அஜெக்சை தானே பரமரிக்க விரும்பினார்.
ஆனால் சட்டங்களும்,விதிகளும் சில நேரங்களில் விசித்திரமானவை அல்லவா?

ஹிக்கி பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாரே தவிர,அஜெக்ஸ் இன்னமும் ஓய்வு பெறாமல் பணியில் இருப்பதால் அதனை அவரிடம் ஒப்படைக்க முடியாது என காவல்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இத்தனைக்கும் ஹிக்கி, அந்த நாயை தன்னுடனே வைத்துக்கொள்வதற்காக அதை விலைக்கு வாங்கி கொள்ளவும் தயாராக இருந்தார். ஆனால் நாயை விற்பதாக இருந்தாலும் ஏலம் மூலம் மட்டுமே அளிக்க முடியும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிகாரி சிக்கி சோகத்தில் மூழகியிருந்த நிலையில் இந்த செய்தி உள்ளூர் வட்டாரங்கள் பரவிய போது, உள்ளூர்வாசிகள் அவரது ஏக்கத்தையும்,ஏமாற்றத்தையும் புரிந்து கொண்டு அவருக்கு மனமிறன்கினர். ஆனால் அத்துடன் நிற்கவில்லை, மாற்றத்திற்கான இணைய கோரிக்கைகளை சமர்பித்து ஆதரவு திரட்டுவதற்கான சேஞ்ச்.ஆர்க் தளத்தின் மூலம் ஹிக்கிக்கு ஆதரவாக ஒரு கோரிக்கை மனுவை உருவாக்கினார். ஹிக்கியிடமே அஜெக்ஸ் ஒப்படைக்கப்பட வேண்டும் என கோரிய அந்த மனுவில் 24,000 பேருக்கு மேல் கையெழுத்திட்டு இந்த கோரிக்கைய வலியுறுத்தினர்.

இதனிடையே உள்ளூர்வாசிகள் பலரும், பேஸ்புக் மூலமும் நகரசபை மற்றும் காவல்துறைக்கு எதிராக தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருந்தனர். இணையவாசிகள் இத்துடன் நிற்கவில்லை. ஒருவேளை அஜெக்ஸ் ஏலம்விடப்பட்டால், அதை அதிகாரி ஹிக்கியே வெற்றிகரமாக ஏலம் எடுக்க உதவுவதற்காக நிதி திரட்டித்தரவும் கோஃபண்ட் மீ இணையதளத்தில் ஒரு கோரிக்கை பக்கத்தை அமைத்து நிதி திரட்டினர்.

இதற்கும் ஆதரவு குவிந்தது. நான்கே நாட்களுக்களில் 68,000 டாலர்களுக்கு மேல் நிதி குவிந்துவிட்டது. ( ஏலம் போக எஞ்சிய தொகை நாய்களின் நலனுக்கான அமைப்பிற்கு நன்கொடையாக அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது).
நிச்சயம் ஹிக்கி இப்படி ஒரு ஆதரவை முகம் தெரியாத மனிதர்களிடம் இருந்து எதிர்பார்த்திருக்க மாட்டார்.
இந்த இணைய பக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் அஜெக்சை ஹிக்கியே தொடர்ந்து வளர்க்கும் உரிமையும்,நியாயமும் உள்ளவர் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மனிதர்களுக்கும், அவர்களால் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஏற்படும் விஷேச பிணைப்பையும், அதற்கு குறுக்கே விதிகள் நிற்க கூடாது எனும் கருத்தையும் அவை பலவிதங்களில் பிரதிபலிக்கின்றன.

இந்த பிரச்சனையில் தற்போதைய நிலை என்ன என்ற அப்டேட்டும் அந்த பக்கத்தில் இடம்பெற்று வருகின்றன.
இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் எண்ணற்ற உதாரணங்களில் இந்த நிகழ்வும் இணைந்துள்ளது.
ஹிக்கிக்காக நிதி திரட்ட உருவாக்கப்பட்ட இணைய பக்கம்; https://www.gofundme.com/yumeagsk

———–
regret
வீடியோ புதிது; வாழ்க்கை பாடம்

வாழ்க்கையில் செய்யத்தவறியதற்காக நீங்கள் மிகவும் வருந்தும் விஷயம் எது? இந்த கேள்வி எப்போதாவது உங்கள் மனதில் தோன்றியதுண்டா? இந்த கேள்வி கேட்கப்பட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?
யூடியூப் வீடியோ ஒன்று இதே கேள்வியை கேட்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் உள்ள சமூக செய்தி நிறுவனமான ஏபிளஸ் இந்த வீடியோவை உருவாக்கி பதிவேற்றியுள்ளது.

இந்த வீடியோவுக்காக நியூயார்க் நகரின் மையப்பகுதியில் பெரிய கரும் பலைகை வைக்கப்பட்டு அதில், உங்கள் வாழ்க்கையில் செய்யத்தவறியதற்காக நீங்கள் மிகவும் வருந்தும் விஷயம் எது? எனும் கேள்வி எழுதப்பட்டிருந்தது.
இந்த பலைகையை பார்க்கத்துவங்கும் நபர்கள் ஆர்ம்ப தயக்கத்திற்கு பிறகு அதில் வந்து தங்களி மனதில் உள்ள வருத்தங்களை எழுதத்துவங்கினர்.

கனவுகளை பின் தொடரமால் போனது, மருத்துவக்கல்லூரியில் சேராமல் போனது,மேலும் தீவிரமாக அன்பு செலுத்த தவறியது… என வரிசையாக ஒவ்வொருவரும் தங்கள் மனதில் உள்ள வருத்தங்களை வார்த்தைகளாக எழுதுகின்றனர்.

வீடியோவின் நடுவில், எல்லோரு மனதிலும் உள்ள வருதங்களில் உள்ள பொதுத்தன்மை சுட்டிக்காட்டப்படுகிறது. செய்யத்தவறிய செயல்களும்,பேசத்தவறிய வார்த்தைகளும் ,மேற்கொள்ள மறந்த கனவுகளும் தான் அவை என குறிப்பிடப்படும் போது உள்ளத்தை லேசாக அசைத்து பார்க்கவே செய்கிறது.

இப்படி வருத்தமாக நினைவுகளில் மூழ்கச்செய்யும் வீடியோவில் அதன் பிறகு ஒரு சின்ன திருப்பம் வருகிறது.
அந்த கரும்பலகையில் உள்ளவை எல்லாம் அழிக்கப்பட்டு முற்றிலும் புதிய கரும் பலைகை தோன்றுகிறது. அதைத்தொடந்து ஒவ்வொரு தினமும் ,அதில் நீங்கள் செய்யாததற்கு வருந்தும் விஷயங்களை செய்யுங்கள் எனும் ஊக்கம் தரும் வாசகத்துடன் வீடியோ முடிகிறது.இது போல மேலும் பல வீடியோக்கள் இந்த சமூக செய்தி தளத்தின் யூடியூப் சேனலில் உள்ளன.

நீங்களும் பார்த்து ஊக்கம் பெறுங்கள்; https://www.youtube.com/watch?v=R45HcYA8uRA

தளம் புதிது; கோப்பு நோக்கி

இணையத்தில் உலாவும் போது குறிப்பிட்ட வடிவிலான கோப்புகளை பார்ப்பதில் சிக்கலை உணர்ந்த அனுபவம் உங்களுக்கு இருக்கலாம். வழக்கமான வடிவிலான கோப்புகள் எனில் கிளிக் செய்தவுடன் திறக்கப்பட்டுவிடும். ஆனால் ஜிபி பைல் போல வேறு விதமான வடிவங்களில் இருந்தால் அவற்றை திறப்பதற்காகவே தனி மென்பொருளை நாட வேண்டும். இமெயிலில் வரும் கோப்பு வடிவங்களில் கூட இது போன்ற சிக்கலை நீங்கள் உணர்ந்திருக்கலாம்.

இது போன்ற நேரங்களில் குறிப்பிட்ட அந்த கோப்பு வடிவத்தை திறந்து பயன்படுத்த ஏற்ற மென்பொருளை இனி நீங்கள் தேடி அலைய வேண்டாம்.டாக்ஸ் ஆல்லைன் வியூவர் மூலம் எந்த வடிவிலான கோப்பையும் நீங்கள் எளிதில் பயன்படுத்தலாம். இதற்காக எந்த மென்பொருளும் தேவையில்லை. இந்த தளத்தில் இருந்து கோப்புகளை திறப்பதற்கான சேவையை டவுண்லோடு செய்து நிறுவிக்கொண்டால் போதும். உங்கள் பிரவுசரில் நீட்டிப்பு சேவையாக இது செயல்படும். அதன் பிறகு எந்த வடிவில் கோப்பை பெற்றாலும் அதன் மீது, இந்த சேவையின் ஐகானை கிளிக் செய்தால் போதும் அது திறக்கப்பட்டுவிடும். பிரவசரில் இருந்தே இதனை பயன்படுத்தலாம்.

இணையதள முகவரி: dov.parishod.com/

செயலி புதிது; செய்திகளை டாஸ் செய்யவும்

indexஇன்ஷார்ட்ஸ் செயலியை நீங்கள் அறிந்திருக்கலாம்; பயன்படுத்தியும் வரலாம். செய்தி திரட்டி வகையை சேர்ந்த இந்த செயலி, முக்கிய செய்திகளை 60 வார்த்தைகளில் சுருக்கமாக தெரிந்து கொள்ளும் சேவையை அளித்து செய்திப்பசியை தீர்க்கிறது;நேரத்தையும் மிச்சமாக்கி தருகிறது.

இப்போது இன்ஷார்ட்ஸ் தனது வாசகர்களுக்காக டாஸ் எனும் புதிய வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. வாசகர்கள் தாங்கள் முக்கியமாக கருதும் செய்தியை டாஸ் செய்யலாம்.அதாவது அந்த செய்தியை தங்கள் தொடர்பு பட்டியலில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ( அவர்களும் இன்ஷார்ட்ஸ் பயனாளிகளாக இருக்க வேண்டும்).

நண்பர்களுக்கு முக்கிய செய்திகளை நோட்டிபிகேஷன் வடிவில் தெரிவிக்கும் வசதி இது.
பொதுவாக எல்லா செய்தி தளங்களுமே வெளிடத்தக்க செய்திகளை தேர்வு செய்ய ஒரு அளவுகோள் வைத்திருக்கின்றன.அதனடிப்படையில் தான் செய்திகளை தேர்வு செய்கின்றன,நிராகரிக்கின்றன; முன்னிறுத்துகின்றன.

இந்த தேர்வை கொஞ்சம் ஜனநாயகமயமாக்கும் வகையில், பயனாளிகள் தாங்கள் முக்கியமாக கருதும் செய்திகளை நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து கொள்ளும் வகையில் டாஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளதாக் இன்ஷார்ட்ஸ் வலைப்பதிவு தெரிவிக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் செயல்படும் இந்த வசதியை பயன்படுத்த முதலில் பயனாளிகள் தங்கள் மொபைல் எண் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: http://blog.inshorts.com/2016/01/introducing-toss-without-the-jargon/

பாஸ்வேர்டு எச்சரிக்கை

மோசமான பாஸ்வேர்டுகளின் பட்டியல் மீண்டும் வெளியாகி இருக்கிறது. இந்த பட்டியல் இணைய உலகின் மோசமான பாஸ்வேர்டுகளை அடையாளம் காட்டுகிறது. அதோடு கடந்த ஆண்டு போலவே 12346 என்பதும் பாஸ்வேர்டு என்பதுமே மிக மோசமான பாஸ்வேர்டாக இருப்பதையும் உணர்த்துகிறது.ஸ்பிலேஷ் டேட்டா எனும் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக இந்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. இணையத்தில் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டுகள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பது பலவிதங்களில் வலியுறுத்தப்படுகிறது. இல்லை என்றால் தாக்காளர்கள் மற்றும் இதர இணைய களவாணிகள் கைகளில் சிக்கும் வாய்ப்பு இருப்பது பற்றியும் தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.

இந்த எச்சரிக்கையை மீறி பலரும் பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியமாகவே இருக்கின்றனர். அதன் விளைவு தான் மிக மிக எளிதாக ஊகித்துவிடக்கூடிய எண்களின் வரிசை, வெல்கம், பேஸ்பால் மற்றும் பாஸ்வேர்டு போன்றவற்றை பாஸ்வேர்டாக பயன்படுத்தும் பழக்கமும் தொடர்கிறது.

இது போன்ற பலவீனமான பாஸ்வேர்டுகளையே மோசமான பாஸ்வேர்டுகளாக ஸ்பிளேஷ் டேட்டா பட்டியலிட்டுள்ளது. கடந்த ஆண்டில் இணையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பாஸ்வேர்டு திருட்டுகளின் போது பகிரங்கமாக தெரியவந்த பாஸ்வேர்டுகளில் இருந்து இந்த பட்டியல் தயாரிக்ப்பட்டுள்ளது என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம். எனவே உங்கள் பாஸ்வேர்டு நிலை குறித்தி அறிய இந்த பட்டியலையுக் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள்; https://www.teamsid.com/worst-passwords-2015/

பேஸ்புக் பயன்படுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.

facebook_laptop_generic_295பேஸ்புக் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தும் திகைக்க வைக்கும் சம்பவம் இது. பேஸ்புக பயன்படுத்த பெற்றோர் தடை விதித்தால் 17 வயதான அந்த இளம்பெண் தனது வாழ்க்கையையே முடித்து கொண்டிருக்கிறார். இந்த சோக சம்பவம் நிகழ்ந்திருப்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில்.
மகாராஷ்டிராவில் உள்ள பர்பானி எனும் இடத்தை சேர்ந்த ஐஸ்வர்யா தஹிவால், இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி. புதன் கிழமை இரவு பேஸ்புக் பயன்படுத்த ஐஸ்வர்யா பெற்றோர் அனுமதி கேட்டிருக்கிறார். பெற்றோரோ , அவர் பேஸ்புக்கிலும் ,போனிலும் நேரத்தை வீணடித்து படிப்பை கவனிக்கவில்லை என்று கடிந்து கொண்டுள்ளனர். பேஸ்புக் பயன்பாட்டிற்கும் அனுமதி மறுத்துள்ளனர்.

மறுநாள் ஐஸ்வர்யா பிணமாக கண்டெடுக்கப்பட்டார். பேஸ்புக்கை பயன்படுத்த முடியததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். “ பேஸ்புக் என்ன அத்தனை மோசமானதா? இது போன்ற கட்டுப்பாடு உள்ள வீட்டில் என்னால் இருக்க முடியாது.பேஸ்புக் இல்லாமல் என்னால் வாழ முடியாது’ என்று அவர் தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மகளின் இந்த விபரீத முடிவால் ஐஸ்வர்யா பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ’ இதை எங்களால நம்ப முடியவில்லை. இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவளை படிப்பில் கவனம் செலுத்த தான் சொன்னோம்.  இப்படி ஒரு விபரீத முடிவு எடுப்பாள் என நினைத்து கூட பார்க்கவில்லை’ என ஐஸ்வர்யா தந்தை சுனில் தஹிவால் வேதனையோடு கூறியுள்ளார்.

பேஸ்புக் பழக்கம் மோகமாக மாறுவதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. இது பல விபரீதங்களுக்கு வித்திடலாம் என்பதற்கான வேதனையான உதாரணம் இந்த சம்பவம்.
பேஸ்புக் பயன்பாட்டில் பெற்றோர் கட்டுப்பாட்டைவிட சுயகட்டுப்பாடே சிறந்தது என்பதை பயனாளிகள் உணர்ந்து கொண்டால் நல்லதஉ

———–

http://blogs.wsj.com/indiarealtime/2013/10/25/indian-teen-barred-from-facebook-kills-herself/


http://www.ndtv.com/article/cities/prevented-from-using-facebook-maharashtra-girl-ends-life-436973

உதவிக்கு வந்த டிவிட்டர்.

காணாமல் போனவர்களை தேடும் படலத்தில் இப்போது டிவிட்டர் மூலமும் வேண்டுகோள் விடுப்பது மிகவும் இயல்பானதாக மாறியிருக்கிறது.பயன் மிகுந்ததாகவும் ஆகியிருக்கிறது.

இதற்கு சமீபத்திய உதாரணமாக அமெரிக்காவில் காணாமல் போன பெண்மணி டிவிட்டர் குறிப்பு மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்.

அந்த பெண்மணிக்கு 77 வயதாகிறது.சமீபத்தில் தான் ஜப்பானில் இருந்து அமெரிக்க வந்திருந்தார்.அவருக்கு ஆங்கிலம் பேசத்தெரியாது.

சசக்ஸ் வே என்னும் பகுதியில் தங்கியிருந்த அவர் காலையில் வாக்கிங் சென்ற போது குறித்த நேரத்தில் வீடு திரும்பவில்லை.அநேகமாக அவர் வழி தவறி சென்று அலைந்து கொண்டிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்பட்டது.அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை நிலைமை மேலும் மோசமாக்கியது.

அவர் காணாமல் போனது உடனடியாக போலீசுக்கு தெரிவிக்கப்பட்டு,அப்புகுதியை சேர்ந்த போலீசார் விசாரணையை மேற்கொள்ளத்துவ‌ங்கினர்.வழக்கமான முறையில் தகவல்களை பகிர்ந்து கொண்ட போலீசார் இந்த பெண்மணி காணாமல் போன விவரத்தை தங்களது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு அவரை பார்த்தால் தகவல் தெரிவிக்குமாறு கேட்டிருந்தனர்.

இந்த குறும்பதிவு அந்த டிவிட்டர் கணக்கின் ஆயிரத்துக்கும் அதிகமான பின் தொடர்பாளர்களை சென்ற‌டைந்தது.

அடுத்த 15 நிமிடங்களில் டிவிட்டர் பயனாளி ஒருவர் குறும்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த வயதான பெண்மணியை தங்கள் பகுதியில் பார்த்ததாக தகவல் தெரிவித்தார்.அதனடிப்படையில் போலீசார் விரைந்து சென்று விசாரனை நடத்திய போது அந்த பெண்மணி தான் காணாமல் போனவர் என்பது உறுதியானது.

உடனடியாக அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

————-

இதற்கு முன்னர் டிவிட்டர் உதவிக்கு வந்த நிகழ்வு;

டிவிட்டர் மூலம் கிடைத்த குழந்தை

டிவிட்டர் மூலம் கிடைத்த குழந்தை.


ஷார்ஜாவை சேர்ந்த தம்பதி காரோடு குழ்ந்தையை தொலைத்து விட்டு டிவிட்டர் உதவி மூலம் அந்த குழந்தையை கண்டெடுத்த கதை இது.

ஷார்ஜாவின் சனையா 6 என்னும் பகுதியில் அந்த தம்பதி காரை இயங்கிய நிலையில் விட்டு சென்றிருக்கின்றனர்.காரின் பின் சீட்டில் அவர்களின் குழந்தையும் இருக்கிறது.உள்ளே குழந்தை இருப்பதை கவனிக்கமாலே அந்த காரை யாரோ திருடிச் சென்று விட்டனர்.

குழந்தையையும் காரையும் காணாதது கண்டு திடுக்கிட்ட தம்பதி உடனே போலிசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.போலீசாரும் டேடலில் ஈடுபட்டுள்ளனர்.

அதோடு குழந்தை காரோடு காணாமல் போன விவரத்ததை டிவிட்டரிலும் வெளியிட்டு உதவி கோரியுள்ளனர்.அந்த குறும்பதிவை பார்த்த ஷார்ஜாவின் டிவிட்டர் பயனாளிகள் அதனை தங்கள் பக்கத்தில் ரீடிவீட் செய்தனர்.

இப்படியாக அந்த தேடல் செய்தி ஷார்ஜா டிவிட்டர் பயனாளிகள் வட்டாரத்தில் ப்ரவியது.

சில மணி நேரங்கள் கழித்து அகமது இப்ராகிம் என்பவர் காரை ஓரிடத்தில் பார்த்ததாக டிவிட்டர் மூலம் தெரிவித்தார்.

போலீசார் விரைந்து சென்று பார்த்த போது காரு இருந்தது.காரில் குழந்தையும் பத்திரமாக இருந்தது.

குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து டிவிட்டரில் இந்த செய்தியை பகிர்ந்து கொண்டவர்களுக்கும் சரியான தகவல் கொடுட்த இப்ராகிமுக்கும் போலீசார் நன்றி தெரிவித்து கொண்டனர்.

அதோடு குழந்தை காரில் இருப்பதை கவனிக்காமல் இருந்த அலட்சிய தந்தைக்கும் அட்வைஸ் செய்துள்ளனர்.

இப்படி தேடலில் டிவிட்டர் கைகொடுத்த உதாரணங்கள் பல உண்டு.இது லேட்டஸ்ட்.