Tag Archives: sea

விஞ்ஞானத்தால் விளக்க முடியாத ஐந்து விநோத ஒலிகள்

GettyImages-165665968உலகில் புரியாத புதிர்களாக பல விஷயங்கள் இருக்கின்றன. இவற்றில் பல விநோதமானவை, பல நம்ப முடியாவை. இன்னும் சில வெறும் புனைவுகளாக உலாவிக்கொண்டிருப்பவை. அறிவியல் கண் கொண்டு பார்த்தால் இவற்றில் பலவற்றை விளங்கி கொண்டு விடலாம். ஆனால் அறிவியலால் கூட முழுமையாக விளக்க முடியாமல் இருக்கும் ஐந்து விநோதமான ஒலிகள் பற்றி காஸ்மோஸ் மேகஜைன் பத்திரிகை கட்டுரை ஒன்றை சுவாரஸ்யமாக விவரிக்கிறது.

 

ஹம்

மிகவும் குறைந்த அலைவரிசை கொண்ட ஒரு ஒலி உலகின் பல பகுதிகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. தூரத்து இடி முழக்கம் என்பதைப்போல, எங்கே இருக்கும் டிரக் இஞ்சின் அனைக்கப்படும் ஓசை போல ஒலிப்பாக அதை கேட்டவர்கள் சொல்கின்றனர். ஆனால் அந்த ஒலி இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருப்பது தான் பிரச்சனை. அது மட்டும் அல்ல, அந்த ஒலி எல்லோருக்கும் கேட்காமல் சிலருக்கு மட்டுமே கேட்டுக்கொண்டிருப்பது தான் அதைவிட பெரிய பிரச்சனை. உங்களை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் அமைதியாக உணரும் போது உங்களுக்கு மட்டும் ஒரு ஒலி கேட்டுக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும். அப்படி தான், ’ஹம்’ என குறிப்பிடப்படும் இந்த விநோத ஒலி, கனடா, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, நியூமெக்சிகோ உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிலருக்கு மட்டும் கேட்கிறது. உலக மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே இந்த ஒலி கேட்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

ஒலியை கேட்பவர்களுக்கு இது எங்கிருந்து வருகிறது என்பது தெரிவதில்லை. இந்த ஒலியால் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர், இரவு தூங்கும் போது படுக்கையில் துவங்கி வீடு முழுவதும் அதிர்வது போல இந்த ஒலி கேட்பதாக கூறியிருக்கிறார். அவரைத்தவிர மற்றவர்கள் அப்படி ஒரு ஒலியே கேட்கவில்லையே என கூறுவது தான் அவரது நிலைமைய மோசமாக்கி இருக்கிறது. இப்படி பலர் உலகம் முழுவதும் மற்றவர்களுக்கு கேட்காமல் தங்களுக்கு மட்டும் கேட்கும் ஒலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். காதில் பஞ்சை வைத்து அடைத்துக்கொண்டால் கூட இவை நிற்பதில்லை என கூறுகின்றனர். ஒலியை கேட்பதால மயக்கமும் தலைசுற்றலும் வருவதாகவும் பலரும் புலம்பியுள்ளனர். ஆனால், இதெல்லாம் மாயை அல்லது கற்பனை என மற்றவர்களால் கூறப்படுவது பாதிக்கப்பட்டவர்கள் நிலையை மேலும் மோசமாக்கிறது.

1960 கள் முதல் இந்த ஒலி கேட்கப்படுவதாக தகவல்கள் பதிவாகியுள்ளன. 1970 களில் பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பகுதியில் தான் இந்த ஒலியை கேட்டதாக சொல்பவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததாகவும் அறிய முடிகிறது. கடந்த நூற்றாண்டின் இறுதியிலேயே இந்த ஒலி பற்றிய பதிவுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவை அனைததையும் மீறி, இந்த ஒலி எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிய முடியவில்லை என்பது விநோதம். அறிவியலாலும் இந்த புதிருக்கு விடை அளிக்க முடியவில்லை. இருப்பினும் பலவிதமான விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. நெடுஞ்சாலை வாகனங்களோ. தொழிற்சாலை உபகரணங்களோ இதற்கு காரணம் அல்ல என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் கால்வாய் அமைக்கும் பணியின் ஒலி, மீன்கள் உறவு கொள்வதன் ஒலி, பூகம்பத்தின் அதிர்வு என்பது போன்ற விளக்கங்களும் கூறப்படுகின்றன.

ஒரு தரப்பினர் இந்த ஒலி உண்மையில் இல்லவே இல்லை, எல்லாம் உளவியல் தாக்கம் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர், இந்த ஒலி, செவியின் கேட்கும் திறன் சார்ந்த கோளாறு என்கின்றனர். ராணுவம் பயன்படுத்தும் குறைந்த அலைவரிசை உபகரகணங்களின் தாக்கமாக இது இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இப்படி பலவிதமான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டாலும், இன்னமும் உறுதியான காரணம் கண்டறியப்படவில்லை.

வானத்து பூகம்பம்

பூகம்ப அதிர்வுகள் போல வானத்திலும் ஒருவிதமான அதிர்வுகள் உலகம் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. இந்தியாவின் கங்கை நதிக்கரை முதல் ஜப்பான் கடல் பகுதி வரை பல இடங்களில் இந்த ஒலி, ஆகாயத்தில் இருந்து இறங்கி வரும் ஒளி பிழம்பின் வெடிப்பு போல கேட்டுக்கொண்டிருக்கிறது. பெரும்பாலும் நதிக்கரை அருகே இவை கேட்கின்றன. சில நேரங்களில் இதன் அதிர்வுகள் ஜன்னல்களையும், தட்டுகளையும் பதம் பார்க்கின்றன. இந்த ஒலி எங்கிருந்து வருகிறது என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது. ராணுவ விமானம் ஒலியின் வேகத்தைவிட சீறிப்பாய்வதால் உண்டாகும் பாதிப்பு என்று ஒரு விளக்கம் தரப்படுகிறது. ஆனால் இத்தகைய விமானம் கண்டுபிடிக்கப்படுபதற்கு பல் ஆண்டுகள் முன்பே இந்த ஒலி பல இடங்களில் கேட்டிருப்பது எப்படி என புரியவில்லை.

கடற்கரை அருகே ராட்சத அலைகள் மலைப்பாறைகள் மீது மோதுவதன் தாக்கமாக இது இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மணல் குன்றுகளும் இதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இவை சில நேரங்களில் வெடிப்பது போலவும் கேட்கலாம் என்கின்றனர். எரிகற்கள் பூமியின் காற்று மண்டலத்திற்குள் வேகமாக நுழைவதால் ஏற்படும் பாதிப்பும் என்றும் கூறப்படுகிறது. எங்கோ வெடித்து குமுறும் எரிமலை, பூமியின் ஆழத்தில் ஏற்படும் பூகம்பம் ஆகியவையும் இதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் எந்த காரணம் என்பது தான் உறுதியாக தெரியவில்லை.

தனியொரு திமிங்கல ஒலி

பெருங்கடல்களில் வாழும் திமிங்கலங்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள விசிலடிப்பது போல ஒலி எழுப்புகின்றன. இந்த ஒலிகளை விஞ்ஞானிகள் ஆழமாக ஆய்வு செய்திருக்கின்றனர். அவற்றின் பல தன்மைகளையும் கண்டறிந்துள்ளனர். ஆனால், இந்த ஒலிகளுக்கு மத்தியில் தனித்து கேட்ட ஒரு ஒலியை மட்டும் அவர்களால் முழுவதும் விளங்கி கொள்ள முடியவில்லை. 1992 ம் ஆண்டு முதல் வட பசுபிக் கடல் பகுதியில் இந்த ஒலி பதிவாகிறது. திமிங்க ஒலி போல இருந்தாலும், இந்த ஒலி வழக்கமாக திமிங்கிலங்கள் எழுப்பக்கூடிய ஒலி அளவை எல்லாம் விட அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் குழம்பித்தவிக்கின்றனர். பொதுவாக திமிங்கலங்கள் எழுப்பும் ஒலி 10 முதல் 39 ஹெட்ஸ் அளவு கொண்டதாக இருக்கும் எனில் இந்த ஒலி மட்டும் உச்சஸ்தானியில் 52 ஹெட்ஸ் கொண்டதாக பதிவாகிறது.

தனித்த ஒற்றை திமிங்கலத்தின் பாடல் என சற்றே சோகமாக குறிப்படும் இந்த ஒலி, திமிங்கல ஒலி வல்லுனர்களையே திகைக்க வைத்திருக்கிறது. அந்த தனித்த திமிங்கலம் எழுப்பும் இந்த ஒலி புரியாத புதிராக இருப்பதோடு, அதன் ஏக்க கீதத்திற்கு பதில் கிடைத்ததா என தெரியாததும் மனிதகுலத்தை பரிதவிக்கச்செய்கிறது.

கடலின் ஆவேசப்பாடல்

இதுவரை கேட்டறியாத ஒரு பெருங்கூச்சல் போல ஒரு ஒலி தொடர்ந்து கேட்டால் எப்படி இருக்கும். இப்படி தான் பசுபிக் கடல் பகுதியில் 1991 ல் ஒரு பேரொலி பதிவானது. குறைந்த அலைவரிசையில் துவங்கி மேலே செல்லும் அந்த ஒலி வருடம் முழுவதும் விதவிதமாக கேட்பதாக கருதப்படுகிறது. இந்த ஒலியின் தோற்றுவாயை மட்டும் அல்ல, அதில் ஏற்படும் மாற்றங்களையும் விஞ்ஞானிகளால் விளக்க முடியவில்லை. அப்ஸ்வீப் என சொல்லப்படும் இந்த ஒலிக்கு கடலுக்கு அடியில் குமுறும் எரிமலைகள் காரணமாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

அந்த கால ஒலி

இவை எல்லாம் இந்த காலத்து ஒலிகள் என்றால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் கேட்ட ஒலியும் இன்று வரை புதிராக இருக்கிறது. நைல் நதியின் மேற்கு பகுதியில் உள்ள பிரம்மாண்டமான இரட்டை கற்சிலையில் இருந்து விநோதமான பாடல் ஒலி கேட்பதாக அந்த காலத்து மனிதர்கள் கூறியிருக்கின்றனர். கி.மு 27 ம் ஆண்டில் பூகம்பத்தால் இந்த இரட்டை சிலைகளில் ஒன்று பாதிக்கப்பட்ட பிறகு அதிலிருந்து பாடல் கேட்கத்துவங்கியதாக வரலாற்று பதிவுகள் சொல்கின்றன. விஞ்ஞானிகள் இதற்கு வெப்பம் அதிகமானதால் உண்டான பாதிப்பாக இருக்கலாம் என விளக்கம் அளிக்க முற்பட்டாலும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிலை பழுதுப்பார்க்கப்பட்ட போது ஒலி நின்று போனதால் இதை உறுதிப்படுத்த வழியில்லை.

 

 

கட்டுரை மூலம்: https://cosmosmagazine.com/geoscience/5-sounds-science-can-t-explain

 

  • நன்றி; மின்னம்பலத்தில் எழுதியது.
Screen+Shot+2015-06-03+at+8.30.28+PM

கூகுள் மூலம் ஆழ்கடலில் உலாவுங்கள்!

உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு இந்திய பெருங்கடல் உள்ளிட்ட உலகின் முக்கிய அழகடல் பகுதிகளில் மூழ்கிப்பார்க்கும் வசதியை கூகுள் தனது ஸ்டிரீட்வியூ சேவை மூலம் வழங்கியிருக்கிறது. இந்த சேவை மூலம் கடல் ஆமைகளுடனும், அரிய ரக திமிங்களுத்துடனும் ஆழ் கடலில் நீந்தி உலா வரலாம்.

கூகுள் தனது வரைபட சேவையின் ஒரு பகுதியாக உலகில் உள்ள பல்வேறு இடங்களின் 360 கோணத்திலான தோற்றத்தை ஸ்டிரீட்வீயூ சேவையாக அளித்து வருகிறது. துருவ பிரதேசத்தின் பனிக்கரடிகள் முதல் அமேசான் மழைக்காடுகள் வரை பல அரிய இடங்களை ஸ்டிரீட்வியூவில் பார்க்கலாம்.

இப்போது கூகுள் கடலுக்கடியிலும் இந்த சேவையை கொண்டு சென்றுள்ளது. இந்திய பெருங்கடலில் உள்ள சகோஸ் தீவுகள் , டென் பசுபிக் பெருங்டலில் உள்ள அமெரிக்கன் சமோவா உள்ளிட்ட பல அரிய கடல் பகுதிகளை ஸ்டிரீட்வியூ காட்சியாக்கி இருக்கிறது. இந்த பகுதிகளுக்கான இணைப்பை கிளிக் செய்தால் அவற்றின் அழ்கடல் காட்சிகளை சுற்றிலும் பார்க்கலாம். அந்த அந்த பகுதியில் காணப்படும் அரிய விலங்குகளுடன் சேர்ந்து நீந்துவது போன்ற உணர்வுடன் இந்த காட்சிகளை காணலாம்.

நிலத்தில் பிரத்யேக் காமிரா கொண்டு 360 கோண காட்சிகளை படம் பிடிப்பது போல ஆழ்கடல் பகுதியில் இந்த காட்சிகளை கூகுள் குழு படம் பிடித்துள்ளது. உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்படும் நிலையில் இந்த காட்சிகளை கூகுள் பதிவேற்றியுள்ளது.

இந்த ஆழ்கடல் காட்சிகள் கடல் உயிரினங்களை கண்டு ரசிப்பதற்கு மட்டும் அல்ல; பருவநிலை மாற்றத்தால் கடல் பகுதியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்காக என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது.

பூமியின் பெரும்பகுதி உயிரினத்தை கொண்டிருக்கும் பெருங்கடல்கள் பருவநிலை முதல், மழை , பிராணவாயு என எல்லாவற்றையும் கட்டுப்படுத்தினாலும் மாசுபடுதல் மற்றும் அதிக மீன்பிடி காரணமாக அவற்றில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருவதாகவும் ,இது நம் காலத்தின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சனையாக இருப்பதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த காட்சிகள் எதிர்காலத்தில் ஆழ்கடலில் ஏற்படும் மாற்றங்களை ஒப்பிட்டு பார்ப்பதற்கான டிஜிட்டல் அடையாளமாக விளங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆக, உலக பெருங்கடல் தினத்தில் ஆழ்கடலில் ஒரு உலா வாருங்கள். பெருங்கடல் நிலை பற்றிய விழிப்புணர்வையும் பெறுங்கள்!.

ஆழ்கடலில் உலா வர;http://google-latlong.blogspot.fr/2015/06/explore-life-beneath-waves-in-honor-of.html

—–