Tag Archives: usefull

us1

புதிய இணையதளங்களை அடையாளம் காட்டும் புதுமையான தளம்

புதிய பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வது எப்போதுமே இனிமையான அனுபவம் தான்.இதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகிறது ’ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’ இணையதளம்.
புதிய இணையதள அறிமுக தளங்கள் பல காலமாக இருக்கின்றன என்றாலும், இதை முற்றிலும் புதுமையாக செய்கிறது இந்த தளம். வழக்கமாக பார்க்க கூடியயது போல, இணையதளங்களை பட்டியல் போடாமல், அவற்றை பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தாமல் ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு பயனுள்ள புதிய இணையதளத்தை தோன்றச்செய்கிறது இந்த தளம்.

அதாவது, இணையதளங்களை எந்தவித வரையறைக்கும் உட்படுத்தாமல்,ஒவ்வொரு தளமாக எட்டிப்பார்க்க செய்கிறது. இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் இதன் முகப்பு பக்கத்தில் உள்ள, என்னை பயனுள்ள இணையதளத்திற்கு அழைத்துச்செல்லவும் எனும் கட்டளைக்கு கீழ் இருக்கும் பட்டனை கிளிக் செய்வது தான் – கிளிக் செய்ததுமே தானாக ஒரு டேப் ஓபனாகி அதில் புதிய இணையதளம் தோன்றுகிறது.
இப்படி ஒவ்வொரு முறை கிளிக் செய்யும் போது புதிய இணையதளத்துடன் புதிய டேப் ஓபனாகும். அடுத்த வரும் தளம் என்னவாக இருக்கும் , எந்த வகையை சேர்ந்ததாக இருக்கும் என்று தெரியாது;ஆனால் பயனுள்ளதாக இருக்கும்.

புதிய தளங்களை அறிமுகம் செய்து கொள்வது என்பதே இணையத்தில் மூழ்கி முத்தெடுப்பது போலதானே. இந்த கண்டறிதலை கொஞ்சம் புதுமையான முறையில் சாத்தியமாக்குகிறது ’ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’ .
பயன்படுத்திப்பாருங்கள்; பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
புதிய தளங்களை இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இந்த தளத்தில் இடம் பெறக்கூடியது என நீங்கள் தரும் இணையதளங்களையும் சமர்பிக்கலாம்.

டான் வாக்கர் மற்றும் மாட் கார்பெண்டர் ஆகிய இரு மென்பொருளாளர்கள் உருவாக்கியுள்ள இந்த தளம் தான் இப்போது இணையத்தில் லட்சக்கணக்கானோரை கவர்ந்துள்ளது.

இணையதள முகவரி: http://randomusefulwebsites.com/

——–

பயனில்லாத இணையதளங்களை பார்க்க ஒரு இணையதளம்.

இணையதளங்கள் என்றதும் பொதுவாக பயனுள்ள இணையதளங்களையே நினைக்கத்தோன்றும்.அதற்கேற்ப கோடிக்கணக்கான இணையதளங்களில் இருந்து பயன் மிகுந்த நல் முத்துக்களையும் மாணிக்கங்களையும் தேடி பட்டியலிடும் இணைய சேவைகளும் பல இருக்கின்றன.

இப்படி பரிந்துரைக்கப்படாத இணையதளங்களை கண்டு கொள்ளாமலே விட்டு விடலாம்.அவை பெரும்பாலும் விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டும் நோக்கத்தோடு தகவல்கள் என்ற போர்வையில் ஏதாவது குப்பைகளின் தொகுப்பாக இருக்கும்.

இந்த வகை தளங்களை பயனில்லாத தளங்கள் என்று குறிப்பிடலாம் என்றாலும் பயனில்லாத தளங்களிலேயே இன்னொரு சுவாரஸ்யமான வகை இருக்கின்றன.

இவை பயனில்லாத தளங்கள் என்ற போதிலும் பார்க்க தேவையில்லாத தளங்கள் என்று புறக்கணித்து விட முடியாதவை.எந்த வித பயனை அளிக்ககூடியதாக இல்லாமால் இருந்தாலும் இவை ஏதோ ஒரு சின்ன நோக்கம் அல்லது விஷயத்தை அடிப்படையாக கொண்டிருக்கும்.

அந்த நோக்கமே இந்த தளங்களை சுவாரஸ்யம் மிக்கதாக மாற்றிவிடுகிறது.

இந்த வகை தளங்களுக்கு அழகாக உதாரணம் தேவை என்றால் டக்ஸார்திபெஸ்ட் என்று ஒரு தளம் இருக்கிறது.இந்த தளத்தில் நுழைந்தால் அழகான மஞ்சள் நிற வாத்துகள் ஒரு கோடு போல வரிசையாக தோன்றுகின்றன.வாத்துக்கள் வரிசையின் சித்திரம் லேசாக மாறிக்கொண்டே இருக்கும்.அவ்வளவு தான் இந்த தளம்.

இதே போல கேட் பவுன்ஸ் என்றொரு தளம் இருக்கிறது.பெயருக்கேறப இந்த தளத்தில் பல வித பூனைகள் குத்திப்பதை பார்த்து கொண்டே இருக்கலாம்.அவ்வளவு தான்!

மேலும் கார்ட்டூன் நாயகனான ஹீமேன் சிரிப்பை காண்பதற்கென்றே ஒரு இணையதளம் இருக்கிறது.ஹேயாயாயாயா என்று விநோதாமாக அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

பாலிங்பாலிங் என்று இன்னொரு தளம் இருக்கிறது.இதில் நுழைந்தால் திரையில் பல வண்ண வடிவங்கள் சரிந்து விழுந்து கொண்டிருப்பதை பார்த்து கொண்டே இருக்கலாம்.வண்ணங்கள் மாறி வடிவங்கள் மாறி அவை விழுந்து கொண்டே இருப்பது லேசான மயக்கத்தை தரலாம் என்றாலும் சுவாரஸ்யமான அனுபவம் தான்.

இப்படி குறிப்பிட்ட எந்த பலனும் இல்லாத ஆனாலும் சுவாரஸ்யமாக விளங்ககூடிய இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.

இந்த தளங்களை எல்லாம் பட்டியலிடுவதற்கு என்றே ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.அந்த தளத்தின் பெயரே பனில்லாத வலை என்பது தான்.ஆங்கிலத்தில் தி யூஸ்லஸ் வெப்.

இந்த தளத்தின் உள்ளடக்கமும் எளிமையாக சுவாரஸ்யமாகவே இருக்கிறது.இதில் எந்த பட்டியலும் கிடையாது.முகப்பு பக்கத்தில் ‘தயவு செய்து பயனில்லாத தளத்திற்கு அழைத்து செல்லவும்’ என்ற கோரிக்கை வாசகம் வரவேற்கிறது.அந்த வாசகத்தில் கிளிக் செய்தால் ஏதாவது ஒரு பயனில்லாத தளத்திற்கு அழைத்து செல்கிறது.

மாறி மாறி கிளிக் செய்து கொண்டிருந்தால் வரிசையாக பயனில்லாத தளங்களாக பார்த்து கொண்டே இருக்கலாம்.

பயனில்லாத தளங்களை இணையவாசிகளும் சமர்பிக்கலாம்.

டிம் ஹால்மன் என்பவர் இந்த தளத்தை உருவாக்கியுள்ளார்.

இணையதள முகவரி;http://www.theuselessweb.com/