பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும் அற்புதமான செயலி

இது எல்லோருக்குமான செயலி அல்ல.ஆனால் எல்லோரும் பாரட்டக்கூடிய செயலி.எல்லோரும் பங்களிக்க கூடிய செயலி.செல்போன்களின் ஆற்றலையும் வீச்சையும் உணர்த்தக்கூடிய செயலி.பிரிந்தவர்கள் சேர உதவும் அற்புதமான செயலி.

பிரிந்தவர்கள் என்றால் சொந்த நாட்டில் இருந்து பல்வேறு காரணங்களினால் அகதிகளாக்கப்பட்டவர்கள்.உயிரை காப்பாற்றிக்கொள்ள பிறநாடுகளில் தஞ்சம் அடைந்த அகதிகள் தங்கள் சொந்த பந்தங்களை தேட கைகொடுப்பதற்காக என்று உருவாக்கப்பட்டுள்ள செயலி இது.

பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க இணையத்தின் மூலம் முயனறு வரும் ரெப்யூஜிஸ் ரீயுனைடெட் என்னும் தன்னார்வ தகவல் தொகுப்பை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பிரிவு மற்றும் செல்பொன்ன் நிறுவனம் ஒன்றும் இணைந்து செல்போனில் இயங்க கூடிய செயலியாக உருவாக்கியுள்ளது.அடிப்படையில் இந்த தளம் தொலைந்து  போனவர்களின் தகவல் பெட்டகமாக விளங்கி வருகிரது. இந்த தகவல்களை கொண்டு அகதிகள் தங்கள் பிரிந்து வந்த சொந்தங்களை தேட முடியும்.அதே போல சொந்தங்களுக் தாங்கள் பிரிந்தவர்களை தேட முடியும்.

அகதிகளாக பரிதவிப்பவர்களுக்கு இந்த தகவல்கள் எத்தனை உதவியாக இருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.சொல்ல முடியாத வேதனை மற்றும் முடிவில்லா தேடல் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய சேவை இது.

உலகின் பல நாடுகள் பிரச்சனை பூமியாக தகித்துக்கொண்டிருக்கின்றன.இந்த நாடுகளில் உள்நாட்டு போர் மற்றும் தீவிரவாத மோதல்களில் சிக்கி கொண்டவர்கள் ஊயிரை காப்பாற்றிக்கொள்ள சொந்த நாட்டை விட்டு வெளியேறி பிற நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் பெறும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.குறிப்பாக பல ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இப்படி அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

இப்படி வெளியேறும் போது சொந்தங்களை பிரிந்து வர நேரலாம்.உயிரை காப்பாற்றிக்கொள்ளும் ஓட்டத்தில் குடும்பத்தினரே கூட பிரிந்து விடலாம்.எப்படியும் இந்த பிரிவு வேதனையானது.

அடைக்கலம் தந்த தேசத்தில் ஒரளவு நிலைப்பெற்ற பின்னர் மனது பிரிந்த சொந்தங்களை தேடி பரிதவிக்கும்.விட்டு வந்தவர்களை மீண்டும் காணமுடியாதா என்ற ஏக்கம் வாட்டியெடுக்கும்.

இந்த தவிப்புக்கும் ஏக்கத்திற்கும் ஆளாகும் அகதிகளின் நிலை மிகவும் பரிதாபமானது.பிரிந்தவர்களை தேடி கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்களும் சவால்களும் சோதனையானது.பிரிந்தவர்களை தேடி அகதிகள் முகாம் மற்றும் நிவாரண முகாம்களில் தேடி அலைய வேண்டும்.உள்நாட்டு போர் உருக்குலைத்த தேசத்தில் யார் எங்கே இருக்கின்றனர் என்ற விவரங்களை கேட்டு பெறுவது என்பது மிகவும் கடினமானது.

இப்படி முகாம் முகாமாக  அலைந்து திரியும் அகதிகள் இருக்கின்றனர்.

இத்தகைய அகதிகளுக்கு அவர்களின் உறவினர்கள் பற்றிய விவரங்கள் உள்ளங்கையிலேயே கிடைத்தால் எப்படி இருக்கும்?அதனை தான் ரெபியூஜீஸ் ரியுனைடெட் செய்ய முயல்கிறது.

அதாவது பிரிந்தவர்கள் மற்றும் அவர்களை தேடும் அகதிகளை இணைக்கும் பாலமாக இந்த செயலி உருவக்கப்பட்டுள்ளது.முதலில் சொன்னது போல இந்த செயலி பிரிந்தவர்களின் தகவல் தொகுப்பாக விளங்குகிறது.

இரண்டும் முனைகளில் இது செயல்படுகிறது.பிரிந்தவர்களை தேடிக்கொண்டிருப்பவர்கள் தங்களைப்பற்றிய விவரங்களை   பதிவு செய்து கொள்ளலாம்.அல்லது ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்களில் தங்களுக்கு வேண்டியவர்கள் உள்ளனரா என்று தேடிப்பார்க்கலாம்.

ஆக பிரிந்தவர்கள் பரஸ்பரம் தேடி கண்டு பிடித்து தொடர்பு கொள்ளக்கூடிய தகவல் பலகையாக இது செயல்படுகிறது.இதற்காக என்று எளிமையாக உருவாக்கப்பட்டுள்ள செயலி சாதரண செல்போன்களில் கூட செயல்படக்கூடியது.எனவே முகாம்களில் தங்கியிருப்பவர்கள் தங்களைப்பற்றிய விவரங்களை இதில் எளிதாக சமர்பிக்கலாம்.அதே போல தேடுபவர்களும் சுலபாமாக தேடலாம்.பிரிந்தவர்களின் பெயர்,செல்லப்பெயர்,இருப்பிடம் என பலவித குறிப்புகளை பயன்படுத்தி தேடலாம்.

ஆப்பிரிக்க நாடுகளில் இண்டெர்நெட் வசதி என்பது கைக்கெட்டாததாகவே இருக்கிறது.ஆனால் செல்போன்கள் பலரிடம் உள்ளன.எனவே இண்டெர்நெட் மூலம் தகவல்களை திரட்டுவதை விட செல்போனில் திரட்டுவது சுலபமானது மற்றும் சாத்தியமானது.

எனவே தான் பிரிந்தவர்கள் ஒன்று சேர இணைய பாலமாக செய‌ல்பட்டு வந்த ரெப்யூஜீஸ் யுனைடெட் தளத்தின் தகவல்களை செல்போன் மூலம் அணுக கூடிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.எஸ் எம் எஸ் வாயிலாகவே இதில் தகவல்களை சமர்பித்துவிட முடியும் என்பது தான் குறிப்பிடத்தக்க விஷயம்.

முதல் கட்டமாக உகன்டா ,சூடான்,கென்யா ஆகிய நாடுகளில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிப்பவர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு தொகுக்கப்பட்டு வருகின்றன.

ரெப்யூஜீஸ் யுனைடெட் அமைப்பும் எரிக்ஸன் செல்போன் நிறுவனமும் ஐ நா சபை மூலமாக அகதிகளிடம் இலவசமாக செல்போன்களை விநியோகித்து அவர்களை பற்றீய விவரங்களை சேகரித்து வருகிறது.இந்த பட்டியல் பெருக பெருக பிரிந்தவர்கள் தாங்கள் தேடிக்கொண்டிருக்கும் சொந்தங்களை கண்டுபிடித்து ஒன்று சேரும் வாய்ப்பு அதிகருக்கும்.

இந்த சேவை இலவசமாந்து மட்டும் அல்ல;பாதுகாப்பானதும் கூட.அகதிகள் தங்களைப்பற்றிய தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுமே என்ற அச்சம் இல்லாமல் இதில் பங்கேற்கலாம்.அங்கும் இங்கும் அலையாமல் எந்த அமைப்பில் பதிவு செய்வது,யாரிடம் விசாரிப்பது என்ற குழப்பம் இல்லாமல் செல்போன் மூலமே விவர‌ங்களை [பதிவு செய்யலாம்.

அதே போல தன்னார்வம் மிக்கவர்களும் இந்த திட்டத்தில் பங்கேற்று பிரிந்தவர்கள் சேர உதவலாம்.

யோசித்து பாருங்கள் செல்போன் மூலம் மற்றும் பிரிந்தவர்கள் மற்றும் தேடுபவர்கள் பற்றிய தகவல்களை திரட்டி ஒரே இடத்தில் தொகுத்து அளிப்பதன் மூலம் பாச நெஞ்சங்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கான அருமையான வாய்ப்பை ஏற்படுத்திவிடலாம் தானே.

0 thoughts on “பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும் அற்புதமான செயலி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *