நட்புக்காக நான்கு விரல்கள்!

தி போர் பைன்டர் இணையதளம் விரும்புவது போல நான்கு விரல்களை காட்டுவது பிரபலமாகுமா என்று தெரியவில்லை.ஆனால் அவ்வாறு பிரபலமானால் சுவாரஸ்யமான நட்புகள் சாத்தியமாகலாம்.நிகழாதா என்று ஏங்கிய சந்திப்புகளும் நிகழலாம்.காதல் பூக்களும் மலரலாம்.வர்த்தக பாலங்களும் நம்மை நோக்கி நீண்டு வரலாம்.எல்லாவற்றுக்கும் மேல் கைகூடாத சந்திப்புகள் பழங்கதையாகலாம்.எல்லாமே இந்த தளம் எந்த அள‌வுக்கு வெற்றி பெறுகிறது என்பதை சார்ந்தே இருக்கிறது.

எப்படி இருந்தாலும் இந்த தளம் சுவாரஸ்யமானது என்பதை மறுப்பதற்கில்லை.அதன் நோக்கமும் பயன் மிக்கது தான்.

நிறைவேறா காதல்களை இல்லாமல் செய்வது தான் அந்த நோக்கம் என்று சொன்னால் ரொம்ப ரொமேன்டிக்காக இருக்கும்.உண்மையில் இந்த தளத்தின் நோக்கம் நிகழாமல் போகும் தொடர்புகளை சாத்தியமாக்குவது.காதல் கைகூடுவதும் அதில் நிகழலாம்.

பயணங்களின் போதோ அல்லது அலுவல் நிமித்தமாக வெளியே சென்று கொண்டிருக்கும் போது சந்தித்து பேசக்கூடிய யாரையாவது பார்ப்போம் அல்லவா?எல்லா நேர‌ங்களிலுமே இப்படி பார்ப்பவர்களை உடனே சந்தித்து கைகுலுக்கி பேசிவிடும் வாய்ப்பு கிடைக்காது.

மனதில் குறித்து வைத்து கொண்டு மறந்து விடுவோம்.பின் எப்போதாவது நினைத்து பார்த்து ஏங்கலாம்.அல்லது அதிர்ஷ்டவசமாக அவரையே சந்திக்கும் போது பார்த்ததையும் பேச நினைத்ததையும் சொல்லி மகிழலாம்.

இந்த சந்திப்பு மகிழ்ச்சியை நிரந்தரமாக்குவதையும் நிச்சயமாக்குவதையும் தான் போர் பைன்டர் தளம் சாத்தியமாக்க விரும்புகிறது.

எப்போது யாரை பார்த்தாலும் சரி பின்னர் அவரை சந்திக்கவோ தொடர்பு கொள்ளவோ விரும்பினால் இந்த தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.அதற்கு முன்பாக அவரை நோக்கி நான்கு விரல்களை காட்டிவிட வேண்டும்.நீங்கள் சந்திக்க விரும்புவதற்கான அடையாள சின்னம் தான் இந்த சைகை.

நான்கு விரல்களை காட்டிய பிறகு இந்த தளத்தில் நுழைந்து அதில் உள்ள வரைபடத்தில் ,நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபரை எந்த இடத்தில் பார்த்தீர்களோ அந்த இடத்தை குறிப்பிட்டு அவரை சந்திக்க விரும்பும் செய்தியை தெரிவிக்கலாம்.அப்படியே எப்போது பார்த்தீர்கள் என்ன நினைத்தீர்கள் என்ற விவர‌த்தையும் தெரிவித்து கூடவே புகைப்படத்தையும் இணைக்கலாம்.

உங்கள் தொலைபேசி எண் ,டிவிட்டர் முகவரி,பேஸ்புக் கணக்கு ஆகியவற்றையும் தொடர்புக்கு தரலாம்.

பின்னர் இந்த நண்பர் தொடர்பு கொண்டாரா என்பதையும் இந்த தளம் வாயிலாகவே தெரிந்து கொண்டு கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ளலாம்.

அதே போல யாராவது எப்போதாவது உங்களை பார்த்து நான்கு விரல்களை காண்பித்தால் உடனே இந்த தளத்தில் எட்டிப்பார்க்கலாம்.

நீருற்றின் அருகே உங்களை கண்டேன்,காதல் கொண்டேன் உங்களை சந்திகக்க விரும்புகிறேன் போன்ற செய்திகளையும் இந்த தளத்தில் பார்க்கலாம்.காலை நேர அவசர‌த்தின் போது நின்று பேச மறந்த நபரை தொடர்பு கொள்ள விரும்புவதையும் பார்க்கலாம்.

சந்திக்க நினைத்து முடியாமல் போன் அனுபவம் எல்லோருக்கும் இருக்கும் .அந்த ஏமாற்றத்தை இல்லாமல் செய்வது தான் இந்த தளத்தின் இலக்காக உள்ளது. இதே போன்ற சந்திப்புகளை சாத்தியமாக்கும் தளங்கள் ஏற்கனவே இல்லாமல் இல்லை.ஆனால் அவற்றில் எல்லாம் இல்லாத வசதியாக நான்கு விரல்களை காட்டுவது இதில் இருப்பதாக சொல்லப்படுகிற‌து.

ஆனால் இதே போன்ற உத்தியும் ஏற்கனவே கையாளப்பட்டுள்ளது.இருந்தாலும் என்ன எது எதற்கோ எத்தனையோ தளங்கள் இருக்கும் போது நிறைவேறாத சந்திப்புகளை ஏற்படுத்தி தருவதற்கு ஒன்றுக்கு பல‌ தளங்கள் இருந்தால் தான் என்ன?

இணையதள‌ முகவரி;http://www.thefourfinder.com/

0 thoughts on “நட்புக்காக நான்கு விரல்கள்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *