வாசிக்காமல் வாசிப்பதற்கு…

புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட்டுவிடுங்கள். புத்தகங்களின் பக்கம் போகாமல் இருப்பது குறித்து கவலையில்லாமல் இருப்பவர்களையும் மறந்து விடுங்கள். புத்தகங்களை படிக்கும் பழக்கம் கொண்டவர்களை பற்றி மட்டும் இப்போது கவலைப்படுவோம்

அதிலும் குறிப்பாக மேசை நிறைய பத்திரிகைகளை அடுக்கி வைத்து கொண்டு அதில் படிக்க வேண்டியவற்றை குறித்து வைத்து கொண்டு கூடவே அலமாரி நிறைய புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பவர்கள்  பற்றி கொஞ்சம் நினைத்து பார்ப்போம். பெரும்பாலும்  இவர்கள், குறித்து வைத்த பத்திரிகை கட்டுரைகளையும், விரும்பி வாங்கிய புத்தகங்களையும் படிக்காமலேயே இருப்பார்கள். அல்லது படிக்க நேரம் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருப்பார்கள்.

நீங்களும் கூட இவர்களில் ஒருவராக இருக்கலாம். சோம்பல் அல்லது பணிச்சுமை அல்லது பிரிதோர் காரணத்தினால்  நினைத்த புத்தகம்/ கட்டுரைகளை படிக்காமலே தள்ளி  போட்டு கொண்டிருக்கலாம். அதே நேரத்தில் வாசிக்கும் ஆர்வத்தோடு மேலும், மேலும் புதிய பத்திரிகைகளை வாங்கி குவித்து கொண்டே இருக்கலாம்

இது போன்ற நிலையில் என்ன செய்வது? எப்படி எல்லாவற்றையும் படித்து முடிப்பது? இத்தகைய கேள்வியும், தடுமாற்றமும் உங்க ளுக்கு இருக்குமாயின், உங்களைப் போன்றவர்களுக்காகவென்றே  புதிதாக இணைய தளம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
இந்த தளம், வாசிக்க முடியாதவர் களுக்காக வாசிப்பு சேவையை வழங்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.

பிரிஜிட் டாட்காம் என்னும் இந்த தளம், உங்களுக்காக பத்திரிகை கட்டுரைகளின் சுருக்கத்தை வழங்குகிறது. முழுகட்டுரையை படிக்க முடியாதவர்கள்  அதன் சுருக்கத்தை மட்டுமேனும் படித்து கொள்ளலாம்.  அதற்கான வசதியைத் தான் இந்த தளம் வழங்குகிறது.
வாஷிங்டனில் உள்ள ஜெர்மி போரோஸ்கி என்னும் பத்திரிகையாளர் மிகுந்த எதிர்பார்ப்போடு இந்த தளத்தை அமைத்திருக்கிறார்.  அமெரிக்காவில் வெளியாகும் முன்னணி நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளில் இடம் பெற்றுள்ள சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள கட்டுரைகளை சுருக்கி தர வேண்டும் என்பதே இவரது நோக்கம்.

இவ்வாறு அட்லாண்டிக் மன்த்லி, டைம், மதர்ஜோன்ஸ், எக்னாமிஸ்ட் என 50க்கும் மேற்பட்ட பத்திரிகை களின் கட்டுரை சுருக்கத்தை இந்த தளத்தில் படித்துபார்க்கலாம். எல்லா சுருக்கங்களுமே 100 வார்த்தைகள் கொண்டதாக போகிற போக்கில் படித்து முடிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கும்.

நிறைய படிக்க வேண்டும். ஆனால் அதற்கேற்ப நேரத்தை ஒதுக்க முடியாதவர்கள் இந்த சுருக்கங்களை படித்து விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். சுருக்கங்களின் வாயிலாகவே மூலக்கட்டுரை எத்தகையதாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டு, தேவைப்பட்டால் மூலக்கட்டுரையை படித்து பார்க்கலாம்.

துரித உணவு யுகத்தில் படிப்பதற்கும் இது போன்ற ஒரு வசதி தேவைதான்.  மேம்போக்காக விஷயங்களை தெரிந்து கொண்டு மற்றவர்கள் முன் தங்களது மேதாவிலாசத்தை காண்பிக்க விரும்புகிறவர்கள் தொடங்கி, உள்ளபடியே நேரம் கிடைக்காமல், ஆனால் நல்ல விஷயங்களை படித்து தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்ட உண்மையான வாசகர்கள் வரை அனைவரும் இந்த தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த தளத்தை முற்றிலும் புதுமையானது என்று சொல்லிவிடுவதற்கில்லை.  ரிடர்ஸ் டைஜிஸ்ட் காலம் காலமாக இதைத்தான் செய்து வருகிறது.  தற்போது இன்டெர்நெட் உலகில் பிரபலமாக இருக்கும் பிளாக் தளங்களும் இப்படி பல்வேறு சுவாரஸ்யமான  கட்டுரை மற்றும் தகவல்களுக்கு அறிமுக உரையை எழுதி கைகாட்டி விடுகின்றன.
இதே விஷயத்தை முழு மூச்சோடு வாசகர்களுக்கு அளிக்கும் சேவையாக போரோஸ்கி இந்த தளத்தை துவக்கி இருக்கிறார்.

34 வயதாகும் போராஸ்கி, தனிப்பட்ட அனுபவத்தின் பயனாக இந்த தளத்தை துவக்க நேர்ந்தது என்கிறார்.  வாசிப்பதில் ஆர்வம் கொண்ட அவர், தனது வீடு நிறைய  புத்தகங்களையும், பத்திரிகைகளையும் வாங்கி குவித்து வைத்திருக்கிறாராம்.
ஆனால் அவையெல்லாவற்றையும் படிப்பதற்கான  வாய்ப்பும், நேரமும் அவருக்கு கிடைத்தபாடில்லை.

சில நேரங்களில் இந்த பத்திரிகைகளில் கட்டாயம் படித்தாக வேண்டிய  5 கட்டுரைகளை யாரேனும் தேர்ந்தெடுத்து சொன்னால் நன்றாக இருக்கும் என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது உண்டாம்.  அதன் பயனாக தன்னை போன்ற  மற்ற வாசகர்களுக்கு இத்தகைய பரிந்துரையை செய்வதற்காக இந்த தளத்தை அவர் துவக்கியிருக்கிறார்.

குடும்பத்தை இணைக்கும் நெட்

 

பிரச்சனைகளை எதிர்கொள்ள எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது என்பதை வைத்தே நவீன தொழில்நுட்பத்தின் பயனை கணக்கிட வேண்டும். அந்த வகையில் பார்த்தால் வியட்நாம் நாட்டை பொறுத்தவரை இன்டெர்நெட் பேரூதவியாக அமைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். காரணம் அந்நாட்டில் நவீன வாழ்க்கையின் நெருக்கடி காரணமாக குடும்ப உறவுகளை பேணிக் காப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஆபத்பாந்தவன் போல இன்டெர்நெட் அமைந்திருக்கிறது.

சதாசர்வகாலம் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்கும் நிலையில் இது போல குடும்ப உறுப்பினர்கள் அன்பை பரிமாறிக் கொள்ள நேரமும், வாய்ப்பும் குறைந்திருக்கும் கால கட்டத்தில் இன்டெர்நெட் குடும்ப பந்தத்தை வளர்த்துக் கொள்வதற்கான வழியாக அமைந்திருக்கிறது.

வியட்நாமை சேர்ந்த பல தம்பதிகள், தங்களது குடும்ப வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்ள இன்டெர்நெட், இமெயில், எஸ்.எம்.எஸ். போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கு அழகான உதாரணமாக குயன் ஹாது எனும் பெண்மணியின் கதையை சொல்லலாம்.

இவர் வியட்நாமின் தலைநகரில் உள்ள தபால் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்.
இவர் தினமும் 9 மணிக்கு வேலைக்கு செல்கிறார். வாரத்தில் பல நாட்கள் இரவு நேரத்தில் பணி புரிய வேண்டும். இவரது மகனுக்கோ காலையில் பள்ளி நேரம் துவங்குகிறது.

இவரது கணவர் 6.30 மணிக்கு மகனை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்று அப்படியே வேலைக்கு போய் விடுகிறார். அவர் திரும்பி வரும் நேரத்தில் மனைவி இரவு ஷிப்ட் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். இப்படியிருந்தால் குடும்பம் என்ன ஆவது?

ஆனால் நல்லவேளையாக இன்டெர்நெட் உதவியோடு இந்த தம்பதி தங்களது உறவை உயிர்ப்போடு வைத்திருக்கின்றனர். கணவன் காலையில் புறப்பட்டுச் சென்றதும், மகனை பள்ளியில் விட்டு விட்டதாக ஒரு எஸ்எம்எஸ்சை தட்டி விடுகிறார்.

அதன் பிறகு மனைவி தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எஸ்எம்எஸ் மூலம் கணவன் மற்றும் மகன் பற்றி விசாரித்து செய்தி அனுப்புகிறார். இதற்கான பதிலும் எஸ்எம்எஸ் மூலமே வந்து சேர்கிறது.

இந்த உரையாடலை சுவாரசியமாக்குவதற்காகவும் சுலபமாக தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காகவும் ஸ்மைலி என்று சொல்லப்படும் இன்டெர்நெட் அடையாள குறிகளை இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

உதாரணமாக முரண்டு பிடிக்கும் ஒரு முகத்தை கணவர் அனுப்பி வைத்தார் என்றால் மகன் சாப்பிட மறுப்பதாக அர்த்தம். அதே போல பலமாக தலையசைக்கும் படம் வந்தது என்றால் இப்போது விவாதத்துக்கு நேரமில்லை என்று அர்த்தம்.

இப்படியாக வேலைப்பளுவுக்கு இடையே அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டு பரஸ்பரம் தொடர்பில் இருக்கின்றனர். சில நேரங்களில் மனைவி வழக்கத்தை விட முன்னதாக வீட்டுக்கு வந்து விட்டால் கணவனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி மகனை பள்ளியிலிருந்து தான் அழைத்து வந்து விடுவதாக கூறுகிறார்.

இமெயில் மூலமும் இந்த செய்திகளை பரிமாறிக் கொள்கின்றனர். கணவன், மனைவி இருவருமே அலுவலகம் சென்றதும் செய்யும் முதல் வேலை இன்டெர்நெட் முன் அமர்ந்து இமெயிலை அனுப்புவதாகத்தான் இருக்கிறது.

மனைவிக்கு செய்தித்தாள்களை படிக்க நேரமில்லை என்பதால் கணவன் சுவாரசியமான செய்திகள் இருந்தால் அதையும் இமெயிலில் அனுப்பி வைக்கிறார். இதே போல மற்றொரு தம்பதியினர் தங்களது மகளுக்கு செல்போனை வாங்கிக் கொடுத்து எஸ்எம்எஸ் அனுப்பும் கலையை கற்றுத் தந்து வருகிறார்கள்.

குடும்பத்தோடு தொடர்பு கொள்ள இதை விட வேறு சிறந்த வழியில்லை என்று இவர்கள் கருதுகின்றனர். எஸ்எம்எஸ் செய்தி மூலம் நேரில் பார்ப்பது போல தகவல்களை தெரிந்து கொள்ள முடியாது என்று ஒரு கருத்து இருக்கிறது.

ஆனால் இந்த தம்பதியோ மகள் எஸ்எம்எஸ் அனுப்ப எடுத்துக் கொள்ளும் நேரத்தை வைத்தே அவள் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறாள் என்பதை கண்டுபிடித்து விட முடிவதாக கூறுகின்றனர்.

அந்த அளவுக்கு இவர்கள் இடையே தொழில்நுட்பம் பற்றிய புரிதல் இருக்கிறது. கம்யூனிச நாடான வியட்நாம் ஆரம்பத்தில் இன்டெர்நெட்டுக்கு கட்டுப்பாடு விதித்திருந்தது. ஆனால் பிறகு அதனை தளர்த்திக் கொண்டது.

இதன் விளைவாக சில ஆண்டுகளுக்கு முன்னர் இன்டெர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5 ஆயிரமாகவே இருந்தது. தற்போது இது 50 லட்சத்தை தொட்டு இருக்கிறது.
வியட்நாமில் உள்ளவர்கள் தங்களது வாழ்க்கையை நடத்த இன்டெர்நெட்டை பெருமளவு பயன்படுத்திக் கொள்வதே இதற்கு முக்கிய காரணம்.

மலேரியா இனி இல்லை

கொடிது, கொடிது மலேரியா கொடிது என்று சொல்லப்படுவதன் தீவிரத்தை நம்மால் முழுமையாக உணர்ந்து கொள்ள வாய்ப்பில்லை.
.
குறைந்தபட்சம் நகர்புற வாழ் இந்தியர்களுக்கேனும் மலேரியா அச்சுறுத்தக் கூடிய நோயாக தோன்ற வாய்ப்பில்லை. மலேரியாவை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் போதிய மருந்துகள் இருக்கின்றன.

மலேரியா ஒரு காலத்தில் கொடிய நோயாக விளங்கியது என்னவோ உண்மைதான். மலேரியா என்றாலே அலறும் அளவுக்கு உயிரை பறிக்கும் நோயாக இருந்திருக்கிறது.
ஆனால் தற்போது மலேரியாவை குணமாக்குவதற்காக மருந்துகள் வந்துவிட்டன.
ஐரோப்பாவில், ஆசியாவின் பல பகுதிகளில் மலேரியா நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் ஏழைகள் நிறைந்த ஆப்பிரிக்க நாடுகளை பொறுத்த வரை இவ்வாறு கூற முடியவில்லை.

ஆப்பிரிக்காவில் மலேரியா இன்னமும் உயிர்க்கொல்லி நோயாக நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. மலேரியாவின் பிடியில் ஆப்பிரிக்க கண்டம் சிக்கித்தவிப்பதை பார்த்தால் ஐயோ பாவம் ஆப்பிரிக்கா என்றே சொல்ல தோன்றும்.

இந்த நோயினால் ஆப்பிரிக்கா படும் பாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நேஷனல் ஜியாகரபிக் இதழில் மலேரியா நோய் பற்றி வெளியாகி உள்ள முகப்பு கட்டுரையை படிக்க வேண்டும். அதற்கு நேரம் இல்லாதவர்கள் ஒரு சில புள்ளி விவரங்களையாவது தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் ஒவ்வொரு 30 விநாடிக்கும் ஒரு குழந்தை மலேரியாவுக்கு பலியாகி கொண்டிருக்கிறது.

ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள், மலேரியா தாக்குதலில் தப்பிப் பிழைப்பது என்பது அபூர்வமாகவே இருக்கிறது. அப்படியே தப்பிப் பிழைத்தாலும் அவர்கள் ஆயுள் முழுவதும் லேசான மூளைகோளாறு அல்லது கற்றுக் கொள்வதில் குறைபாடு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகின்றனர்.

கர்ப்பிணிகள் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டால் பிறக்கும் குழந்தை ரத்தச் சோகையோடு வளர நேர்கிறது. சுருக்கமாக சொன்னால் ஆப்பிரிக் காவில் குழந்தைகள் மத்தியில் ஏற்படும் அகால மரணத்திற்கு மலேரியாவே முன்னணி காரணமாக விளங்குகிறது.

இத்தோடு பாதிப்பு நின்று விடுவதில்லை. பொருளாதார மற்றும் சமூக ரீதியாகவும் பாதிப்புகள் தொடர்கின்றன. நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

மலேரியா நோய் அச்சத்தால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படுகிறது. வெளிநாட்டு முதலீடும் குறைந்து போகிறது. ஆப்பிரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 1200 கோடி டாலர்கள் பொருளாதார இழப்பை மலேரியா நோய் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
மலேரியாவுக்கு எதிரான தற்காப்பு வசதியோ அல்லது சிகிச்சைக்கான வாய்ப்போ இல்லாத ஏழைகளையே இந்த நோய் அதிகம் பாதிக்கிறது என்பதோடு, இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலையை இந்த நோயே குலைத்து விடுகிறது.

இந்த நோயை கட்டுப்படுத்துவது சாத்தியம் மற்றும் நோய்க்கான சிகிச்சையும் இருக்கிறது என்னும் நிலையில் ஆப்பிரிக்கா இப்படி படாதபாடுபடுவது வேதனை யானதுதான்.
இந்த வேதனையில் பங்கேற்க நினைத்தால் அதை விட முக்கியமாக இந்த பிரச்சனைக்கு உங்களால் முடிந்த அளவுக்கு தீர்வு காண நினைத்தால் நோ மோர் மலேரியா (nomoremalaria.com). இணையதளம் பற்றி தெரிந்து கொள்வது அல்லது ஆப்பிரிக்கா நாடுகளில் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்த நோய் தாக்காமல் தடுக்கவும் தேவையான உதவிகளை இந்த அமைப்பு செய்து வருகிறது.

மலேரியா நோய் ஏன் ஏற்படுகிறது. அது எப்படி பாதிப்பை செலுத்துகிறது போன்ற விளக்கங்களை சுருக்கமாக அளிக்கும் இந்த தளம் அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை யும் தெரிவிக்கிறது.

மலேரியாவை குணமாக்கு வதற்கான மருந்துகள் உலகின் மற்ற பகுதிகளில் எளிதாக கிடைக்கும் நிலையில் ஆப்பிரிக்க மக்கள் மட்டும் இந்த நோயின் பாதிப்புக்கு இலக்காகி உயிரை விடுவது பரிதாபத்துக்குரியது என்பதை உணர்த்தி அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த தளம் தூண்டுகோலாக விளங்குகிறது.

மலேரியாவை கட்டுப்படுத்த விரிவான செயல்பாடுகள் தேவை என்பதை விளக்கும் இந்த தளம், பிரதானமாக கொசு வலையில் வாங்கி கொடுப்பது பேரூதவியாக இருக்கும் என்று தெரிவிக்கிறது. பெரும்பாலும் மலேரியாவை பரப்பும் கொசுக்கள் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடிப்பதால் கொசு வலையை பயன்படுத்துவது இந்த நோய்க்கு ஆளாகும் வாய்ப்பை வெகுவாக குறைத்து விடுகிறது.

அதிலும் கொசுக்களை விரட்டும் தன்மை கொண்ட மருந்து தடவப்பட்ட கொசு வலை நோயின் தாக்கத்தை முற்றிலுமாக விலக்கி விடுகிறது.

இதை தவிர நோய் பாதிப்பவர் களுக்கு மருந்துகளை வழங்குவது, நோய் பரவாமல் தடுக்க தேவையான சூழ்நிலையை ஏற்படுத்துவது போன்ற விழிப்புணர்வு செயல் களையும் இந்த தளம் மேற்கொண்டு வருகிறது.

இந்த தளத்தின் மூலமே நன்கொடை வழங்கி இந்த முயற்சியில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். அது உயிர் காக்கும் சேவையாக இருக்கும்.

புள்ளி விவரங்களுக்கான பிரவுசர்

கட், காபி, பேஸ்ட்-இன்டெர்நெட் பயன்பாட்டை பொறுத்தவரை இதுதான் செயல்பாட்டு தத்துவமாக இருக்கிறது. எந்த இணையதளத்தில் எந்தவிதமான தகவல்களை பார்த்தாலும் சரி. பிற்பாடு படிப்பதற்காக அல்லது பயன்படுத்துவதற்காக அதனை அப்படியே கட், காபி செய்து பேஸ்ட் செய்து வைத்துக் கொண்டு விட்டால் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்

இப்படி தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி இன்டெர்நெட்டில் தகவல் வலை வீசும்போது பெரும்பாலானோர் பின்பற்றும் பழக்கமாக இருக்கிறது. இணையவாசிகளுக்கு இது பேருதவியாக இருக்கிறது என்றாலும், இதில் ஒரேயொரு குறை உண்டு. 

புள்ளி விவரங்கள் மற்றும் அட்டவணையில் இடம் பெற்றுள்ள தகவல்களை இப்படி சேமித்து வைத்துக் கொள்ள முடியாது. அப்படியே சேமித்து வைத்துக் கொண்டாலும், அட்டவணை பாணியில் அதனை தக்க வைத்துக் கொள்ள முடியாது.

பெரும்பாலானோர் அட்டவணை தகவல்களை பற்றி கவலைப்படாமல் விட்டு விடுவார்கள். ஆனால் புள்ளி விவரங்களில் முக்கியத்துவம் அறிந்தவர்களுக்கு இது மிகவும் சிக்கலாகி போய் விடுவதுண்டு.

அப்போதெல்லாம் அவர்களுக்கு அட்டவணைகளை உள்ளது உள்ளபடியே சேமித்து வைக்கும் வசதி இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். அது மட்டுமல்ல, அட்டவணை விவரங்களை தங்களது கோப்பில் தேவையான இடத்தில் இடம் பெற வைத்து அதன் விவரங்களை அலசி ஆராய முயன்றால் நன்றாக இருக்குமே என்று தோன்றும்.

இத்தகைய புள்ளி விவர பிரியர்களுக்காக என்றே புதியதோர் பிரவுசர் அறிமுகமாகி இருக்கிறது. எண்ணிக்கைகளில் கையாள்வதற்காக என்று உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரவுசரின் மூலம் புள்ளிவிவரங்கள் மற்றும் அட்டவணை தகவல்களை பயன்படுத்துவதும், கையாள்வதும் சுலபமாக்கப்பட்டுள்ளது.

கிரிக்ஸ் ஸ்டிராட்டா எனும் பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த பிரவுசரை பயன்படுத்தும் போது எண்ணிக்கை தொடர்பான விஷயங்களை கையாள்வது மிகவும் எளிதாகி விடுகிறது. இந்த பிரவுசரை பல விதங்களில் பயன்படுத்தலாம்.

உதாரணத்திற்கு ஒரு பிரபல நடிகரின் திரைப்படம் தொடர்பான வசூல் விவரங்களை சேகரித்து அதற்கு முன்னர் வந்த 5 படங்களின் வசூல் விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்து ஒரு பட்டியல் தயாரிக்கலாம்.

இதே போல, அந்த நடிகரின் குறிப்பிட்ட எந்த படம் பிரபலமாக இருக்கிறது என்பதை புள்ளி விவரங்கள் மூலம் அட்டவணையாக மாற்றியும் பார்த்துக் கொள்ளலாம். இந்த புள்ளி விவரங்களை எந்த குறிப்பிட்ட தளத்திலிருந்து வேண்டுமானாலும் எடுத்து நம் இஷ்டம் போல பயன்படுத்திக் கொள்ளலாம்.

த்தனை இணையதளங்களிலிருந்து வேண்டுமானாலும் புள்ளி விவரங்களை எடுத்து பயன்படுத்தலாம். அவற்றை கொண்டு புதிய அட்டவணையை உருவாக்குவதும் மிகவும் சுலபமானது.

தகவல்களை டைப் செய்யும்போது, அட்டவணையை தயார் செய்வதுதான் உள்ளபடியே மிகவும் கடினமானது. அந்த செயலை இந்த பிரவுசர் மிகவும் சுலபமாக்கி விடுகிறது.

புள்ளி விவரங்கள் மட்டுமல்லாமல் செய்தியோடை (ஆர்எஸ்எஸ்) வசதி மூலம் பெறப்படும் செய்திகளையும் இப்படி அட்டவணைப்படுத்தி குறிப்பிட்ட எந்த செய்தி அதிகம் படிக்கப்படுகிறது என்பது போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

நேட் வில்லியம்ஸ் என்பவர் தனது நண்பர்களோடு சேர்ந்து இந்த பிரவுசரை உருவாக்கியுள்ளார். புள்ளி விவரங்கள் தொடர்பான சிக்கலை நன்கு அறிந்திருந்த அவர், முதலில் வர்த்தக நிறுவனங்களில் தகவல் தொகுப்புகளில் உள்ள சிக்கல்களை சரி செய்வதற்கான சாப்ட்வேரை உருவாக்கினார். அதன் பிறகே அவருக்கு இந்த சாப்ட்வேர் இன்டெர்நெட் முழுவதற்கும் பயன்படுத்த முடிந்தால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது.

அதன் அடிப்படையில் அந்த சாப்ட்வேரின் மேம்பட்ட வடிவை உருவாக்கி அதனையொரு முழு வீச்சிலான பிரவுசராக மாற்றினார். தற்போது அந்த பிரவுசர் இணையவாசிகளின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற எந்த பிரவுசரை போலவே இதனை பயன்படுத்தலாம்.

அது மட்டுமல்லாமல் இந்த பிரவுசரை நமது கம்ப்யூட்டரில் உள்ள கோப்புகளை கையாள்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். எண்ணிக்கை தொடர்பான விஷயங்களை பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரவுசர் மிகவும் ஏற்றதாக இருக்கும்.

பின்னணியில் ஒரு தேடல்

சும்மாதானே இருக்கிறீர்கள். பயனுள்ளதாக ஏதாவது செய்ய கூடாதா? என்று யாரிடமாவது கேட்டால் (யாரிடம் கேட்டாலும்) உங்களுக்கு வேறு வேலை கிடை யாதா? எனும் பாணியில் கோபமாக திருப்பி கேட்டு விடுவார்கள். ஆனால் உங்கள் கம்ப்யூட்டர் சும்மாதானே இருக்கிறது. சும்மா இருக்கும் நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்ள சம்மந்தமா என்று கேட்டால் யார் வேண்டு மானாலும் சம்மதிக்கக் கூடும்.

 

இப்படி உலகம் முழுவதும் பலர் சம்மதித்திருக்கின்றனர். அவர்களின் கம்ப்யூட்டர்கள் சும்மா இருக்கும் நேரத்தில் மகத்தான செயலின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகின்றன.
பொதுவாக மிகப் பெரிய அளவில் கம்ப்யூட்டரில் செயலாற்றல் தேவைப்படும் பிரம்மாண்டமான திட்டங்களை சிறுசிறு பகுதியாக பிரித்து தனித்தனி கம்ப்யூட்டர்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் இவை செயல்பட்டு வருகின்றன.
பூமிக்கு வெளியே உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் உள்ளதா என்பதை அறிவதற்கான பிரம்மாண்ட சாப்ட்வேர் இந்த முயற்சியை துவக்கி வைத்தது. 

அதன் பிறகு புற்றுநோய்க்கான ஆதார மரபணுவை கண்டறியும் சாப்ட்வேர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இப்படி சிதறிக் கிடக்கும் கம்ப்யூட்டர் களின் ஆற்றலை பயன்படுத்தி வருகின்றன.

இதே பாணியில் ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் ஸ்கிரீன்சேவரை நுழைத்து தூங்கிக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டர்களை நல்ல காரியங்களுக்காக பயன்படுத்தலாம்.
இதற்கான உயிர்த் துடிப்பு மிக்க உதாரணமாக மிஸ்சிங் கிட் சேவர் திட்டத்தை குறிப்பிடலாம். உண்மையிலேயே இந்த திட்டத்தின் பின்னே உள்ள யோசனை அற்புத மானது; நிகழ வைக்கக் கூடியது. நடைமுறையில் மிகவும் அவசிய மானது.

குழந்தைகள் பல்வேறு காரணங் களால் காணாமல் போகின்றனர். காணாமல் போகும் குழந்தைகளை தேடி கண்டுபிடிப்பது கடினமான காரியம்தான். குழந்தைகள் காணாமல் போகும் துரதிருஷ்டவசமான அனுபவத்திற்கு ஆளாகும் பெற்றோர்களில் எத்தனை பேருக்கு அவர்கள் திரும்பி கிடைக்கும் பாக்கியம் சாத்திய மாகிறது என்று தெரியவில்லை.
இந்த நிலைக்கு குறிப்பிட்டு யாரையும் குற்றம் சொல் வதற்கில்லை. விஷயம் என்னவென்றால் குழந்தை காணாமல் போன உடனேயே அது பற்றிய தகவல் பரவலாக்கப்பட்டு அனைத்து முனைகளிலும் 

யாராவது ஒருவர் தேடும் நிலை இருந்தால் அநேக குழந்தைகளை கண்டு       பிடித்து விடலாம். இல்லை யென்றால் காணாமல் போன குழந்தை கிடைப்பது என்பது அதிர்ஷ்டத்தை சார்ந்ததே! காணாமல் போன விவரத்தை தெரிவிப்பதற்காக இப்போது புகைப் படங்களை சுவரொட்டிகளாக ஒட்டுவது, விளம்பரம் செய்வது, டிவியில் காண்பிப்பது போன்ற யுக்திகள் பின்பற்றப்படுகின்றன.

இதெல்லாம் விட சக்தி வாய்ந்த யுக்தி உங்கள் கம்ப்யூட்டரில் குவிந்து இருக்கிறது. அதனை ஒரு அற்புதமான ஸ்கிரீன் சேவரின் மூலம் தட்டி எழுப்பி விடலாம். ஸ்கிரீன் சேவர் பொதுவாக அழகானதாகவும், அலங்காரமான தாகவும் மட்டுமே கருதப்படுகிறது. அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஸ்கிரீன் சேவர் காணாமல் போன குழந்தைகளை தேடி கண்டுபிடிக்கக் கூடிய ஆயுதமாகவும் மாறலாம். அதற்கு ஒருவர் செய்ய வேண்டிய தெல்லாம் காணாமல் போன குழந்தைகளை தேடி கண்டு பிடிப்பதற்கான அமைப்பு வெளியிட்டுள்ள ஸ்கிரீன் சேவரை பயன்படுத்த சம்மதிப்பது மட்டுமே.

கனடாவை சேர்ந்த குளோபல் சாப்ட்வேர் அப்ளிகேஷன்ஸ் எனும் அமைப்பு, காணாமல் மற்றும் சுரண்டப்படும் தேசிய மையத்தின் ஆதரவோடு இந்த ஸ்கிரீன் சேவரை உருவாக்கியுள்ளது.  இந்த ஸ்கிரீன் சேவரில் என்ன விசேஷமென்றால் சமீபத்தில் காணாமல் போன குழந்தைகளின் புகைப்படங்கள் இதில் இடம் பெற்றிருக்கும். அவ்வப்போது புதிய படங்கள் மாறிக் கொண்டே  இருக்கும்.

இந்த ஸ்கிரீன் சேவரை பயன்படுத்துவதன் மூலமாக நமது கம்ப்யூட்டரில் இந்த காணாமல் போன குழந்தைகளின் படங்கள் வரிசையாக வந்து கொண்டே இருக்கும். இப்படி நாடெங்கும் இருக்கும் கம்ப்யூட்டர்களில் காணாமல் போன குழந்தைகளின் படங்கள் தென்பட்டு கொண்டே இருக்கும்போது தற்செயலாக குழந்தையை பார்த்த/ பார்க்க வாய்ப்புள்ள யார் கண்ணிலாவது அந்த படம் பட்டு அக்குழந்தை மீட்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
பெரும்பாலான நேரங்களில் காணாமல் போன குழந்தை நம்மை கடந்து போயிருக்கலாம். ஆனால் நமக்கு அது தெரிய வாய்ப்பில்லை. 

இப்போது இந்த ஸ்கிரீன் சேவர் அந்த வாய்ப்பை உண்டாக்கி விடும் சாத்தியமிருக்கிறது.
கனடாவில் உள்ள காவல் நிலையம் ஒன்று தங்கள் கம்ப்யூட்டர்களை அனைத்து கிரிமினல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களையும் வரிசையாக சுற்றி வரும் வகையில் ஏற்பாடு செய்திருந்தது. 

அதனை பார்க்க நேர்ந்த காவலர்கள் தீர்க்கப்படாமல் இருக்கும் வழக்குகள் தொடர்பான விழிப்புணர்வை பெற்று செயல்பட்டனர். இதனால் பல தீர்க்கப்படாத வழக்குகள் முடிவுக்கு வந்தன. இந்த சம்பவத்தால் ஏற்பட்ட உத்வேகத்தின் விளைவாக காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்கவும் இதே விதமான வழியை பயன் படுத்திக்கொள்ள மேற்சொன்ன ஸ்கிரீன் சேவர் உருவாக்கப்பட்டுள்ளது.

கனடா மற்றும் அமெரிக்காவை மனதில் கொண்டு இந்த ஸ்கிரீன் சேவர்  உருவாக்கப் பட்டுள்ளது.  உண்மை யில் ஒவ்வொரு நாட்டுக்கும் இப்படியொரு ஸ்கிரீன் சேவர் வேண்டும்.