Tag Archives: drawing

1-veg

கலைவண்ண காய்கனிகள்; ஆன்லைனில் அசத்தும் பெண்மணி

பிரிட்டன் பெண்மணி ஆம்பர் லாக்கேவின் இணையதளத்தை பார்த்தால் அசந்து போய் விடுவீர்கள். அத்தனை கலைநயம் மிக்க படைப்புகள் அவரது இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. அந்த கலை படைப்புகளை பார்த்து ஆச்சர்யமும் கொள்வீர்கள்! ஏனெனில் அவரது கலைப்படைப்புகள் ஓவியமோ, சிற்பமோ அல்ல; அவை காய்கறிகளாலும் கனிகளாலும் உருவானவை.
ஆம், லாக்கே பல வண்ண காய்கனிகளை அழகாக அடுக்கி வைத்து அதன் அமைப்பையே ஒரு அழகான கலைபடைப்பாக ஆக்கிவிடுகிறார். காய்கறிகளையும் கனிகளையும் அடுக்கி வைப்பது என்ன அத்தனை பெரிய விஷயமா? அது அத்தனை அழகாக தான் இருக்குமா? என்று நினைப்பவர்கள் முதலில் அவரது படைப்புகளை பார்க்க வேண்டும்.
லாக்கே காய் கனிகளை அலங்காரமாக அமைப்பது வழக்கமாக பார்க்ககூடிய காட்சி போல் இருக்காது. மாறாக கெலைடாஸ்கோப் கருவியில் பார்க்கும் போது வித விதமான வண்ணங்களில், பலவித அமைப்புகளில் ஒவ்வொரு நொடிக்கும் ஒரு அலங்கார வடிவில் தோன்றும் அல்லவா? அதே போல தான் ஆம்பர் லாக்கேவின் காய்கனி அமைப்புகள் தோற்றம் தருகின்றன.

1-veg3
முதல் பார்வைக்கு ஏதோ சேலை அல்லது துணி ரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படமோ என்று நினைக்க வைக்கும் இந்த படைப்புகளை உற்று பார்த்தால் அவற்றில் இருப்பது எல்லாம் காய்கனிகள் என்ற விஷயம் புரிந்து வியக்க வைக்கும். இப்படி கூட காய்கறி மற்றும் கனி வகைகளை அழகாக தோற்றம் கொள்ள வைக்க முடியுமா? என்ற வியப்பும் உண்டாகும்.
காய்கனிகளை இப்படி வண்ண படைப்புகளாக அமைத்து அவற்றை புகைப்படம் எடுத்து தனது இணைட்யதளம் மூலம் வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களை அவர் குறைந்த எண்ணிக்கையிலான அச்சுகளாக விற்பனையும் செய்து வருகிறார். இந்த அச்சுகளை பலரும் ஆர்வத்துடன் ஆன்லைனில் வாங்கி வருவதுடன் , அவரது காய்கறி கலைக்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

1-veg2
பிரபல நிறுவனங்கள் மற்றும் ஆண்ட்ராய்டு செயலிகளுக்காக அவர் பிரத்யேகமாக காய்கறி கலையை உருவாக்கித்தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். அவரது செல்வாக்கும் அதிகரித்திருக்கிறது.
எல்லாம் சரி, அவருக்கு இந்த காய்கறி கலையில் ஆர்வம் எப்படி வந்தது ? இந்த ஆர்வத்தின் பின் உள்ள கதையை கேட்டால் இன்னும் உற்சாகமாக இருக்கும்.
ஆம்பர் கடந்த ஒன்னறை ஆண்டுகளுக்கு முன்னர் முழுக்க முழுக்க சைவ உணவுக்கு மாறினார். சைவ உண்வு என்றால் சமைத்த உணவு கூட இல்லை. பச்சை காய்கறிகளையும் ,கனிகளையும் சாப்பிடுவது. இவ்வாறு காய்கறிகளை மட்டுமே உணவாக சாப்பிட துவங்கிய பின் தன்னளவில் உற்சாகமான மாற்றத்தை உணர முடிந்ததாக அவர் சொல்கிறார். மிகவும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணரத்துவங்கியதாகவும் சொல்கிறார்.
அப்படியே காய்கறி உணவு பழக்கம் தொடரந்தது. ஒரு நாள் ஆசையோடு வாங்கிவந்த காய்கறிகளை தரையில் பரப்பி வைத்திருந்தார். அப்போது காற்றின் போக்கில் அடித்த வந்த சில இலைகளும் சேர்ந்து கொள்ள அந்த அமைப்பே ஒரு ஓவியம் போல் தோன்ற லாக்கே அதை கிளிக் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் சொக்கிப்போய் பாராட்டாக பின்னூட்டம் மூலம் கருத்து தெரிவிக்கவே அவர் உற்சாகமாகி தொடர்ந்து காய்கறிகளை அலக்கார சித்திரங்களாக்கி புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொள்ளத்துவங்கினார். இன்று இதுவே இவரை ஒரு கலைஞராக்கியுள்ளது.
இந்த படைப்புகள் தன்னை பிரபலமாக்கி இருப்பதால் மட்டும் அவர் மகிழவில்லை. இதன் மூலம் ஆரோக்கியமான உணவு முறை மீது பரவலான ஆர்வத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறார். இவை அழகை மட்டும் முன்வைக்கவில்லை,காய்கறிகள் ஆரோக்கியமானவை என்ற கருத்தையும் வலியுறுத்துகின்றன என்கிறார்.
பல நோய்களை பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவத்ன் மூலமே சரி செய்துவிடலாம் என்று சொல்பவர் காய்கனிகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்பது தான் எனது படைப்புகளின் நோக்கம் என்கிறார்.

ஆம்பர் லாக்கேவின் கலைவண்ண இணையதளம்: http://www.ambaliving.com/
——-

 

சுட்டி விகடனில் எனது தொடர்!

நீங்களும் பிக்காசோவாகலாம்!.

சுட்டீஸ் பிக்கோசாவை உங்களுக்கு தெரியுமா?மிகப்பெரிய ஓவிய மேதை அவர்.மாடர்ன் ஆர்ட் என்னும் நவீன பாணி ஓவியத்தின் தந்தையாக பிக்காசோ கருதப்படுகிறார்.

ஓவியத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பிக்காசோ மாதிரி புகழ் பெற வேண்டும் என்பது தான் கனவாக இருக்கும்.பிக்காசோ பாணியில் வரைய வேண்டும் என்பதும் இளம் ஓவியர்களின் விருப்பமாக இருக்கும்.

நீங்க நினைச்சாலும் கூட பிக்காசோ மாதிரி வரையலாம் தெரியுமா?

ஆம் பிக்காசோஹெட் என்னும் இணையதளம் பிக்காசோ மாதிரியே வரைய வழி செய்கிறது.

இந்த இணையதளத்தில் நுழைந்ததுமே அழகான ஓவியங்களை பார்க்கலாம்.எல்லாமே உங்களை போன்றவர்கள் இந்த தளத்தில் வரைந்த ஓவியங்கள் தான்.அந்த ஓவியங்களை எல்லாம் பாருங்கள்.அதே போலவே நீங்களும் வரையலாம்.

மற்ற வரைவதற்கான தளங்கள் போல இதில் தூரிகை எல்லாம் கிடையாது.அதை விட சுலபமாக ஓவியத்திற்கான எல்லாமே இதில் கொடுக்கப்பட்டுள்ளது.ஆம் வரையவும் என்னும் பகுதியை கிளிக் செய்ததுமே வெள்ளை பலகை ஒன்று வந்து நிற்கும்.அதில் தான் நீங்கள் வரைய வேண்டும்.

அதன் இடது பக்கத்தில் சின்ன சின்ன முகங்களாக கொடுகப்பட்டிருக்கும்.அந்த முகங்களில் ஒன்றை அப்படியே இழுத்து சென்று பலகையில் வைத்து விடலாம்.அதன் பிறகு பார்த்தீர்கள் என்றால் முகங்களுக்கு அருகே வரிசையாக கண்,காது,மூக்கு,உதடுகள்,புருவம் போன்றவை இருக்கும்.அவற்றில் பிடித்தமானதை இழுத்து சென்று ஏற்கனவே உள்ள முகத்தில் பொருத்த வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் அழகான மனித முகத்தை உருவாக்கி விடலாம்.இந்த கண்,காது,மூக்கு எல்லாமே பிக்காசோ பணியிலானவை என்பதால் ஓவியமும் பிக்காசோ வரைந்தது போலவே இருக்கும்.

ஓவியத்தை இன்னும் மெருகேற்ற வேண்டுமா? அப்படியே கீழே பார்த்தீர்கள் என்றால் ஒவியத்தில் திருத்தம் செய்வதற்கு தேவையான வசதிகள் இருப்பதை பார்க்கலாம்.கண்,காது,மூக்கு போன்றவற்றை திருப்பலாம்,பெரிதாக்கலாம்,மேலே கிழே மாற்றலாம்.வண்ணங்களையும் சேர்க்கலாம்.

வரைந்தது பிடிக்கவில்லை என்றால் எல்லாவற்றையும் ஒரே கிளிக்கில் அழித்து விட்டு மீண்டும் புதிதாக வரையலாம்.

புதிதாக வரைந்து முடித்த பின் ஓவியத்தின் கீழ் உங்கள் பெயரையும் கையெழுத்தாக போட்டுக்கொள்ளலாம்.

இப்போது நீங்கள் வரைந்த ஓவியம் இந்த தளத்தில் உள்ள ஓவிய கேலரியில் இடம் பெற்று விடும்.ஆக தளத்திற்கு வரும் மற்றவர்கள் உங்கள் ஓவியத்தையும் பார்த்து ரசிப்பார்கள்.

அது மட்டும் அல்ல நீங்கள் வரைந்த ஓவியத்தை இமெயில் மூலம் பிரன்ட்சுக்கு அனுப்பி வைக்கலாம்.பேஸ்புக் பக்கம் இருந்தால் அதிலும் பகிர்ந்து கொள்ளலாம்.

இது தான் பிக்காசோ போல வரைவதற்கான இணைய முகவரி;http://www.picassohead.com/

எல்லாம் சரி சுட்டீஸ் பிக்காசோ ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்.அவர் தேர்ந்த ஓவிய மட்டும் இல்லை;சிற்ப கலைஞ‌ரும் கூட.சின்ன வயதிலேயே அவருக்கு ஓவிய கலையில் ஆர்வம் வந்து விட்டது.

பிக்காசோ பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலோ அவர் வரைந்த அற்புத ஓவியங்களை பார்க்க நினைத்தாலோ இந்த இணையதளத்தை போய் பாருங்கள்;http://www.pablopicasso.org/
——————

சுட்டி விகடனில் வெளியாக துவங்கியிருக்கும் எனது தொடரின் முதல் பகுதி இது.சிறுவர்களுக்காக தனியே எழுத வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.இந்த அறிய வாய்ப்பை அளித்த சுட்டி விகடன் குழுவுக்கு மனமார்ந்த நன்றிகள்.

aww-logo-normal

வரையலாம்,பகிரலாம்;அழைக்கும் இணையதளம்.

இணைய வெள்ளை பலகை! இப்படி தான் அந்த ஏட்பில்யூட்பில்யூஆப் இணையதளம் த‌ன்னை வர்ணித்து கொள்கிறது.

இணைய வெள்ளை பலகை என்றால் வரைந்து தள்ளுவ‌தற்கான இடம் என்று வைத்து கொள்ளுங்கள்.வரைவதற்கான இடம்,தூரிகை,வண்ணங்கள், இன்னும் பிறவற்றை இந்த தளம் வழங்குகிற‌து.

ஒரு பலகையோடு இணைந்த மூன்றே கட்டங்களில் இந்த வசதியை மிக ழகாக இந்த தளம் அளிக்கிறது.இடது பக்கத்தில் உள்ள இந்த கட்டங்களில் நடுவில் உள்ள கட்டத்தை கிளிக் செய்தால் வரைவதற்கான இணைய‌ தூரிகை அல்லது பேனா வந்து நிற்கிறது.நமக்கு தேவையான் அளவுக்கு தூரிகையின் முனையை பெரிதாக்கி கொள்ளலாம்.இதனுடனே அழிக்கும் வசதியும் இருக்கிறது.

மேலே உள்ள கட்டத்தல் வண்ணங்கள் இருக்கின்றன.எந்த வண்ணம் தேவையோ அதனை தேர்வு செய்து கொள்ளலாம்.

மூன்றாவது கட்டம் வரைந்த சித்திரத்தை சேமித்து கொள்வது உள்ளிட்ட வசதியை த‌ருகிறது.

சித்திரத்தை பேஸ்புக் அல்லது டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.அதோடு இந்த முகவரியை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு அவர்களையும் வரைய சொல்லலாம்.

கம்புயூட்டர்,டேப்லெட்,ஸ்மார்ட்போன் என எதில் வேண்டுமானாலும் இதனை பயன்படுத்தலாம்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதியும்,அவர்களோடு சேர்ந்து வரையும் வசதியுமே இந்த தளத்தின் சிற‌ப்பம்சம்.

இப்படி வரைதல் மூலம் நட்பு வளர்த்து கொள்ள உதவும் தளங்கள் ஏற்கனவே உள்ளன.அந்த பட்டியலில் இத‌னையும் சேர்த்து கொள்ளலாம்.

இணைய‌தள முகவரி;http://awwapp.com/

ஒட்டகச்சிவிங்கி வரைய வாருங்கள்

gஉங்களுக்கு ஒட்டகச்சிவிங்கி வரையத்தெரியுமா? அழ‌காக வரைய வேண்டும் என்றில்லை. ஒட்டகச்சிவிங்கிப்போல இருந்தால் போதுமானது.

வரையும் திறமையை விட ஆர்வம் இருந்தால் போதும்.அந்த‌ ஆர்வ‌ம் இருந்தால் உட‌ன‌டியாக‌ ஒரு ஒட்டகச்சிவிங்கியை வ‌ரையுங்க‌ள். வ‌ரைந்த‌தும் ஒன்மில்லியன் கிராபே என்னும் இணையதளத்திற்கு அனுப்பி வையுங்கள்.

காரணம் இந்த தள‌ம் இப்படி 10 லட்சம் ஒட்டகச்சிவிங்கி ஒவியங்களை சேகரிப்பதற்காக துவக்கப்பட்டுள்ளது.அந்த‌ ப‌த்து ல‌ட்ச‌ம் ஒட்டகச்சிவிங்கிக‌ளில் உங்க‌ள் ஒட்டகச்சிவிங்கியும் ஒன்றாக‌ இருக்கும்.
எதற்கு இந்த வேலை என்று கேட்கலாம்.

இந்த‌ த‌ள‌த்தின் நோக்க‌ம் மிக‌வும் உய‌ர்வான‌து என்றோ ல‌ட்சிய‌ த‌ன்மை கொண்ட‌து என்றோ கூற‌ முடியாது.ஆனால் சுவார‌ஸ்ய‌மான‌து. இந்த‌ தள‌த்தை உருவாக்கிய‌ ந‌ப‌ருக்கு ஜோர்க‌ன் என்னும் பெய‌ரில் ஒரு ந‌ண்ப‌ர். இருவ‌ரும் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த‌ன‌ர்.அப்போது எப்ப‌டியோ ஒட்டகச்சிவிங்கி ப‌ற்றி பேச்சு வ‌ந்த‌து.ப‌த்து ல‌ட‌ச‌ம் ஒட்டகச்சிவிங்கிக‌ள் ப‌ற்றியு பேசியிருக்கின்ற‌ன‌ர்.

ஜோர்க‌ன் 10 ல‌ட்ச‌ம் ஒட்டகச்சிவிங்கிக‌ளை சேக‌ரிப்ப‌து சாத்திய‌மில்லை என்று கூறியுள்ளார். ஆனால் அவ‌ர‌து ந‌ண்ப‌ரோ இண்டெர்நெட் இருக்கும் போது எதுவும் முடியாத‌து இல்லை என்று ந‌ம்பினார். இண்டெர்நெட் மூல‌ம் இத‌னை சாதிப்ப‌து சாத்திய‌ம் என்றே நினைத்தார்.

உட‌னே ஒன்மில்லிய‌ன் கிராபே இணைய‌த‌ள‌த்தை அமைத்து ஒட்டகச்சிவிங்கிக‌ளை வரைந்து அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்த‌ கோரிக்கையை ஏற்று அனுப்ப‌ப்ப‌டும் ஒட்டகச்சிவிங்கிக‌ள் த‌ள‌த்தின் முக‌ப்பு ப‌க்க‌த்தில் இட‌ம்பெற்று வ‌ருகிற‌து.அவ‌ற்றோடு ஒட்டகச்சிவிங்கிக‌ள் வ‌ந்த‌ க‌தையும் த‌னியே வ‌லைப்ப‌திவு ப‌குதியில் இட‌ம்பெற்றுள்ள‌து.

நீங‌க‌ளும் உங்க‌ள் ஒட்டகச்சிவிங்கியை அனுப்பி வைக்க‌லாம். ஆனால் அத‌ற்கு முன் அத‌ற‌கான‌ நிப‌ந்த‌னைக‌ளை தெரிந்துகொள்ளுங்க‌ள்.ஒட்டகச்சிவிங்கி எப்ப‌டி வேண்டுமானால் இருக்க‌லாம்.ஆனால் க‌ம்ப்யூட்ட‌ர் உத‌வியோடு உருவாக்க‌ப்ப‌ட‌க்கூடாது.கையால் வ‌ரைய‌ப்ப‌ட்டிருக்க‌ வேண்டும்.
இவாறாக‌ 2011 ம் ஆண்டுக்குள் 10 ல‌ட்ச‌ம் ஒட்டகச்சிவிங்கிக‌ளை சேர்க்க‌ இல‌க்கு திட்ட‌மிட‌ப்ப‌ட்டுள்ள‌து.

அப்ப‌டி தான் ஜோர்க‌னிட‌ம் ச‌வால் விட‌ப்ப‌ட்டூள்ள‌து.

இன்டெர்நெட்டால் எதுவும் சாத்திய‌ம் என்று காட்டுவோம் வாருங்க‌ள் என‌ ஒட்டகச்சிவிங்கி த‌ள‌த்தை அமைத்த‌வ‌ர் அழைப்பு விடுக்கிறார்.ஏற்றுக்கொல்கிறிர்க‌ளா?
—-

link;
http://olahelland.net/giraffes/