Tag Archives: isp

அவர் பாடகர் மட்டும் அல்ல; இணைய முன்னோடியும் தான்!

பாடகர் டேவிட் போவியை அறியாமல் இருந்துவிட்டோமே என்று வருத்தமாக இருக்கிறது.போவியின் மரணம் ஏற்படுத்திய இழப்பின் வலியும்,வேதனையில் இருந்து இசை உலகமும்,இணைய உலகமும் இன்னமும் மீளாமல் தவிக்கும் நிலையில் அவரை சரியாக அறியாமல் போனேமே என்ற கவலை என்னை பிடித்து வாட்டுகிறது.

ஓராண்டுக்கும் மேலாக புற்றுநோயுடன் போராடி கடந்த வாரம் மறைந்த பிரிட்டனைச்சேர்ந்த ராக் பாடகர் மற்றும் பாடலாசிரியரான டேவிட் போவி (David Bowie) போன்ற இசைக்கலைஞரை அவரது மரணத்தின் மூலம் அறிந்துகொள்வது துரதிர்ஷ்டவசமானது.போவி பற்றி அறியாவதவன் என்ற முறையில் அவரைப்பற்றி நான் எழுதாமல் இருப்பதே சரியாகும்.அது தான் எழுத்து அறமும் கூட!

ஆனாலும், போவி என்னை பிடித்து ஆட்டுகிறார்.அவரைப்பற்றி சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. அவரது இசையை அறிந்திராத என்னையே ,என்னை மாதிரியான கலைஞர் நம்மிடையே இருந்து மறைந்திருக்கிறார் என்ற பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். போவியை பற்றி இணையத்தில் வெளியான கட்டுரைகள் தான் இதற்கு காரணம் என்றாலும், உண்மையில் அவற்றை படிக்கும் போதே மனிதர் தனது இசையால் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என புரிந்து கொள்ள முடிகிறது.

போவியையும் அறியாத நிலையில் அவரது இசை பற்றி நான் பேசப்போவதில்லை. ஆனால்,மிக தாமதமாக அறிந்து கொண்டாலும் கூட போவியை உடனடியாக நெருக்கமாக உணர வைத்த ஒரு விஷயம் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். அது போவியின் இணைய தொலைநோக்கு.

ஆம்,போவி இணைய முன்னோடிகளில் ஒருவராக விளங்கியிருக்கிறார். ஒரு பாடகராக,இசைக்கலைஞராக இணையத்தை எப்படி சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்று அறிந்தவராக இருந்திருக்கிறார்.
ஜெஸ்டின் பெய்பர்,டெய்லர் ஸ்விப்ட் போன்ற பாடகர்கள் இணையத்தை பயன்படுத்தும் கலையில் வல்லனர்களாக இருப்பதை இன்று பார்க்கிறோம்.ஆனால், இணையத்தின் ஆற்றல் பலருக்கும் வெறும் புதுமையாக கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்த காலத்தில்,கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே போவி இணையத்தின் அருமையை உணர்ந்திருந்தார் என்பதை உணரும் போது வியப்பாகத்தான் இருக்கிறது.அதுவும் எப்படி, 1998 ம் ஆண்டு அவர் தனக்கென சொந்தமான இணைய சேவை நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
போவி நெட் எனும் பெயரிலான அந்த இணைய சேவை அவரது ரசிகர்களுகாகவே அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது தான் உருவாகி கொண்டிருந்த ஆன்லைன் உலகில் உள்ளே நுழைவதற்காக சந்தா அடிப்படையிலான இணைய சேவையை போவி அறிமுகம் செய்தார் என குறிப்பிடும் கார்டியன் நாளிதழ் கட்டுரை,பெரிய வர்த்தக நிறுவனங்களே கூட இணையத்தின் தாக்கம் மற்றும் முக்கியத்துவத்தை கணிக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்த காலத்தில் போவி இதை செய்ததாக குறிப்பிடுகிறது.

அப்போதே டேவிட் போவி தனக்கென சொந்தமாக இணையதளம் உருவாக்கி வைத்திருந்தார் என்பதை இங்கே குறிப்பிட வேண்டியதில்லை. அந்த இணையதளம் மூலம் அவர் போவிநெட் இணைய சேவைக்கான திறவுகோளை வழங்கினார்.
ஒரு பாடகர் ஏன் இணைய சேவையை வழங்க வேண்டும்?

போவி தனது இசை உலகிற்குள் ரசிகர்கள் எளிதாக பிரவேசித்து தன்னுடன் உரையாடி மகிழ்வதற்கான மாபெரும் மேடையாக இணையத்தை பார்த்திருக்கிறார். போவிநெட் இணையதளத்தில் ரசிகர்கள் அவரது புகைப்படங்களை பார்க்கலாம்.வீடியோக்களை காணலாம்.அவரது வலைப்பதிவை வாசிக்கலாம்.அவரைப்பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ளலாம். அதோடு தனது இசை பயணங்களில் இருந்து பிரத்யேக காட்சிகளையும் வழங்குவதாக கூறியிருந்தார்.போனசாக ரசிகர்களுக்கு போவிநெட்டின் இமெயில் முகவரியும் வழங்கப்பட்டது.

அது மட்டும் அல்ல, போவி இந்த மேடையை ரசிகர்களுடன் தொடர்பு கொள்வதற்கான வழியாக நம்பியிருந்தார். புதிய பாடல்களை கேட்கும் வசதியுடன், ரசிகர்கள் தங்களுக்கான சொந்த இணையதளம் அமைத்துக்கொள்ளவும் வழி செய்திருந்தார். அவரே இணைய அரட்டைகளிலும் நேரடியாக பங்கேற்றார். ரசிகர்களுக்கு இசையை மையமாக கொண்ட சமூக வலைப்பின்னலாக அது இருந்தது. சமூக வலைப்பின்ன தளங்களான பிரன்ஸ்டர்,மைஸ்பேஸ்,பேஸ்புக் எல்லாம் உதயமாவதற்கு முன்னரே போவி தனது ரசிகர்களுக்கு என்று இணைய உலகில் ஒரு வெளியை உருவாக்கி கொடுத்திருந்தார்.

போவி ரசிகர்களுடன் தொடர்பு கொள்வதற்கான அருமையான வழியாக இணையத்தை பார்த்தார்.அப்படியே பயன்படுத்திக்கொண்டார். சும்மாவா,1996 லேயே தன்னுடைய ஒற்றை பாடலை இணையத்தின் மூலம் வெளியிட்டு ரசிகர்கள் டவுண்லோடு செய்து கொள்ள வைத்தார்.அதற்கு முன்பாக 1994 ல் ரசிகர்கள் தங்கள் சொந்த இசையை உருவாக்கி கொள்ள வழிசெய்யும் சிடி ஒன்றை வெளியிட்டிருந்தார். 1997 ல் தனது இசை நிகழ்ச்சியை இணையம் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்தார்.

போவி தனது இசையை சந்தைப்படுத்துவதற்கான வழியாக மட்டும் இணையத்தை பார்க்கவில்லை. மாறாக ரசிகர்களை தொடர்பு கொள்வதற்கான சிறந்த வழியாக பார்த்தார்.ரசிகர்களின் பங்கேற்பு இல்லாமல் இசை படைப்பு முழுமையடைவதில்லை என்பதை உணர்ந்த கலைஞராக அவர் இருந்தார். அதை இணையம் சாத்தியமாக்குவதாக உணர்ந்ததே அவரை இணைய முன்னோடியாக உயர்த்தியது.

1999 ல் அளித்த ஒரு பேட்டியில், உற்சாகம் அளிக்க கூடிய மற்றும் நம்ப முடியாத ஒன்றின் துவக்கத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம் என்று ஆர் இணையத்தின் புகழ் பாடியிருக்கிறார்.
இந்த நொடியில் நாம் நினைத்துபார்க்க கூடியதில் இருந்து மிகவும் மாறுபட்ட வகையில் உள்ளடக்கம் மற்றும் அதன் நோக்க்த்தை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டது இணையம் என கூறியிருக்கிறார். பேட்டி கண்டவர் போவி சொல்வதை நம்ப முடியாமல் இருப்பதை அந்த பேட்டியில் பார்க்கும் போது, அவர் எத்தகைய தொலைநோக்கு கொண்டிருந்தார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எத்தனை பாடகர்கள் பற்றி இப்படி சொல்ல முடியும்.

வால்
ரசிகர்கள் மத்தியில் போவியின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்தை இணைய வெளியில் பெருகிக்கொண்டிருக்கும் கண்ணீர் நினைவலைகளில் இருந்து உணர முடிகிறது. டிவிட்டர் ,இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் எண்ணற்ற ரசிகர்கள் போவி தொடர்பாக தங்கள் நினைவுகளை பகிர்ந்து இழப்பை பகிர்ந்து கொண்டுள்ளனர். பலரும் போவியின் பாட்டை முதலில் கேட்டது, முதல் ஆல்பம் வாங்கியது போன்ற நினைவுகளை வெளியிட்டு அவர் இழப்பின் ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளனர். போவிக்கு இரங்கள் தெரிவிக்கும் ஹாஷ்டேகுகள் இந்த உணர்வுகளை ஒருக்கிணைக்கின்றன.

இப்படி இணைய வெளியே போவிக்காக பொங்கி கொண்டிருக்கும் நிலையில் பத்திரிகையாளர் கமிலா லாங் என்பவர், இந்த உணர்ச்சி வெளிப்பாடு மிகையானது மற்றும் போலியானது என விமர்சனம் செய்துள்ளார்.
அவரது கருத்தை முன்வைத்து அட்லாண்டிக் பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையில், இவை முதலைக்கண்ணீர் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.டிவிட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் ரசிகர்கள் தங்கள் சோகத்தை நினைவலைகளாக பகிர்ந்து கொள்கின்றனர் என்றும் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு பொதுவெளியில் துக்கத்தை பகிர்ந்து கொள்வது குறைந்து அது தனிப்பட்ட அனுபவமாக மாற்றப்பட்ட நிலையில் இணையம் சோகத்தை பகிர்ந்து கொள்வதை மீண்டும் பொது நிகழ்வாக்கி இருப்பதாகவும் அந்த கட்டுரை வாதிடுகிறது.
டேவிட் போவிக்கான ஹாஷ்டேகுகள் வெறும் ஹாஷ்டேக் மட்டும் அல்ல; அவை இறுதிச்சடங்கும் தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையத்தின் மூலம் கண்ணீரை வெளிப்படுத்தி சோகத்தை பகிர்ந்து கொள்வது சோகத்தை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதற்கான அடையளமாகவும் விளங்குகிறது என்றும் அந்த கட்டுரை குறிப்பிடுகிறது.
ரசிகர்கள் வடிப்பது முதலைக்கண்ணீர் அல்ல அது உணர்வின் வெளிப்பாடு எனும் புரிதலை தரும் இந்த க்கட்டுரை டேவிட் போவியை மையமாக வைத்து எழுதப்பட்டது பொருத்தமானது மட்டும் அல்ல;அதன் மையக்கருத்தையும் எளிதாக புரிய வைக்கிறது.

(உதவிய கட்டுரைகள்)

1.http://www.theguardian.com/technology/2016/jan/11/david-bowie-bowienet-isp-internet

2.http://www.theatlantic.com/entertainment/archive/2016/01/enter-the-grief-police/424746/

—-
நன்றி; தமிழ் யுவர்ஸ்டோரியில் எழுதியது; கொஞ்சம் தாமதமாக இங்கு பதிவிடுகிறேன்;

டிவிட்டர் வழியே ஒரு புதுமையான முறையீடு

comவர்த்தக நிறுவனங்களின் மோசமான சேவைக்கு எதிராக டிவிட்டரை பயன்படுத்துவது வழக்கமான உத்தி தான்.சொல்லப்போனால் குறும்பதிவு சேவையான டிவிட்டர் பிரபலமானதில், நுகர்வோர் குரலாக அது பயன்படும் விதமும் ஒரு முக்கிய காரணம்.விமான பயணிகளில் துவங்கி பல வகையான நுகர்வோர் மோசமான சேவை குறித்த அதிருப்தியை டிவிட்டரில் வெளிப்படுத்து வர்த்தக நிறுவனங்களை வழிக்கு கொண்டு வர முடியும் என உணர்த்தியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்,பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் தனது லக்கேஜை சரியாக கையாளத்தவறியது குறித்து டிவிட்டரில் முறையிட்ட சம்பவமும் அதனால் ஏற்பட்ட விளைவும் உங்களுக்கு நினைவிருக்கலாம். ஏர்வேஸ் தரப்பில் , உங்கள் முழுபெயரையும் தெரிவித்தால் என்னவென்று கவனிக்கிறோம் என டிவிட்டரில் பதில் சொல்லப்பட,சச்சினை தெரியவில்லையா? என டிவிட்டரில் அவரது ரசிகர்கள் பொங்கியெழுந்து பிரிட்டிஷ் ஏர்வேசை ஒருவழி செய்துவிட்டனர்.

இது கொஞ்சம் பழைய கதை.இது போன்ற நிறைய கதைகள் உள்ளன. இப்போது லேட்டஸ்ட் கதையை பார்ப்போம்.
அமெரிக்காவின் இணைய சேவை வாடிக்கையாளர் ஒருவர் அந்நாட்டின் இணைய சேவை நிறுவனமான காம்கேஸ்ட்டிற்கு எதிராக டிவிட்டரில் புகாரை தெறிக்கவிட்டிருக்கிறார். அலெக்சே எனும் பெயர் கொண்ட அந்த வாடிக்கையாளர் தனது புகாரை தானியங்கிமயமாக்கியிருப்பதும் அதற்காக என்றே தனியே ஒரு டிவிட்டர் கணக்கை துவக்கியிருப்பதும் தான் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.

இணையத்தில் புழங்குபவர்களுக்கு இணைய சேவை நிறுவனமான காம்கேஸ்டிற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அத்தனை நல்ல பெயர் இல்லை என்பதை கவனித்திருக்கலாம்.நுகர்வோர் அடிக்கடி காம்கேஸ்ட்டுடன் மல்லுக்கட்டு தொடர்பான செய்திகளை பார்க்கலாம்.விளம்பரத்தில் அது சொல்வது ஒன்றாகவும் ஆனால் வழங்கும் சேவை அதற்கு மாறாக இருப்பதால் ஏற்படும் ஏமாற்றம் அல்லது அதிருப்தி இதற்கு காரணமாக இருப்பதையும் உணரலாம்.

ரெட்டிட் பயனாளியான அலெக்சேவும் இப்படி தான் ஏமாற்றத்திற்கு இலக்கானார். நிறுவனத்திடம் இருந்து அவர் பெற்ற இணைய இணைப்பின் வேகம் 150 எம்பிஎஸ் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் பலமுறை இணைய இணைப்பு மந்தமாகி அதன் வேகம் 50 எம்பிஎஸ்-க்கும் குறைவாக இருப்பதாக அலெக்ஸே உணர்ந்திருக்கிறார்.
இதனால் நொந்து போனவர் காம்கேஸ்ட்டிடம் டிவிட்டர் வழியே முறையிட தீர்மானித்தார்.

ஆனால் பலரும் எதிர்பார்க்ககூடியது போல, எனது இணைய சேவை மோசம் என ஒரு குறும்பதிவுடன் புகார் செய்வதோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை.
மாறாக இதற்காக என்றே ஒரு டிவிட்டர் கணக்கை உருவாக்கினார். அதற்கு முன்பாக தன்னிடம் இருந்த ராஸ்பெரி பை கம்ப்யூட்டர் உதவியுடன் சின்னதாக ஒரு புரோகிராம் எழுதினார்.

எப்பொழுதெல்லாம், அவரது இணைய இணைப்பின் வேகம் 50 எம்பிஎஸ்-க்கு குறைவாக செல்கிறதோ அப்போதெல்லாம் அதை கவனித்து தெரிவிக்கும் வகையில் அந்த புரோகிராம் அமைந்திருந்தது. இதற்காக அந்த புரோகிராம் அடிகக்டி வேகப்பரிசோதனையை நடத்திக்கொண்டிருக்கும். வேகம் குறைவது நிகழும் ஒவ்வொரு முறையும், டிவிட்டரில் இது பற்றி முறையீடு செய்யும் வகையில் தானியங்கி புரோகிராம் ஒன்றையும் எழுதினார்.
ஆக, இந்த டிவிட்டர் பாட், காம்கேஸ்ட் இணைய இணைப்பின் வேகம் குறையும் போதெல்லாம் அதை டிவிட்டர் பக்கத்தில் குறும்பதிவாக வெளியிடும்.

காம்காஸ்ட் நிறுவனமே, நான் 150 எம்பிஎஸ் வேகத்திற்கு கட்டணம் செலுத்தும் போது, அதன் வேகம் 18 எம்பிஎஸ்சாக குறைந்தால் எப்படி என கேட்பது போல அந்த குறும்பதிவுகள் அமைகின்றன.
இந்த புதுமையான முறையீடு பற்றிய விவரத்தை ரெட்டிட் இணையதளம் மூலம் பகிர்ந்து கொண்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

காம்கேஸ்ட் சேவைக்கு எதிராக புகார் செய்வதற்காகவே அவட் ஒரு டிவிட்டர் கணக்கை துவக்கி அந்த பணியை திறம்பட செய்து முடிக்க டிவிட்டர் பாட் ஒன்றையும் உருவாக்கி இருப்பது பல நுகர்வோரை சபாஷ் போட வைத்துள்ளது.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்ன என்றால், அலெக்சே டிவிட்டர் பக்கத்தில் தான் யார் என்பதை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. முறையீடு செய்யும் ஒவ்வொரு முறையும் தான் யார் என்பதை காம்கேஸ்ட்டிற்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்கிறார் அவர். ஏனெனில் இந்த முறையீட்டின் பலன் தனக்கு மட்டும் கிடைக்காமல், மோசமான சேவையால் அவதிப்படும் ஒவ்வொரு காம்கேஸ்ட் பயனாளிக்கும் கிடைக்க வேண்டும் என்கிறார். அதனால் தான் நான் ஒரு காம்கேஸ் பயனாளி எனும் பெயரில் அந்த பக்கத்தை அமைத்திருக்கிறார்.

எப்படி இருக்கிறது இந்த இணைய போராட்டம்!

காம்காஸ்ட் பயனாளியின் டிவிட்டர் முகவரி: @A_Comcast_User

ரெட்டிட் விவாதமும் (https://www.reddit.com/r/technology/comments/43fi39/i_set_up_my_raspberry_pi_to_automatically_tweet/ )அடையாளம் காட்டிய மதர்போர்ட் இணையதளமும்:http://motherboard.vice.com/read/this-bot-will-tweet-at-comcast-whenever-your-internet-is-slower-than-advertised

—–

——