Tag Archives: linkedin

வெற்றி நூலகம்: லிங்க்டுஇன் தொடங்கிய தத்துவ மாணவர்

linkedin_3150669fஇணையவாசிகள் முழுக்க முழுக்க தொழில்முறையாகத் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான இடமாக லிங்க்டுஇன் இருக்கிறது. வேலைவாய்ப்புக்குக் காத்திருக்கும் இளம் பட்டதாரிகளும், தங்கள் துறையில் முன்னேறத் துடிக்கும் பணியாளர்களும், வல்லுநர்களும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வலைப்பின்னலாகவும் விளங்குகிறது. நிறுவன விளம்பரங்களைப் பார்த்து விண்ணப்பிக்கும் பழைய முறைக்குப் பதிலாக, பயனாளிகள் தங்களுக்கான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் திறமைக்கேற்ற வாய்ப்புகளை அடையாளம் காண உதவுகிறது.

தொடர்புகளின் அருமையை உணர்ந்தவர்!

பயிற்சி மாணவர்களுக்கு அவர்களுடைய துறையில் வழிகாட்டும் வல்லுநர்களின் அறிமுகம் தேவையா? தற்போதைய வேலையிலிருந்து அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டுமா? சொந்தமாக நிறுவனம் தொடங்க ஆலோசனை தேவையா? எல்லாவற்றுக்கும் லிங்க்டுஇன் வலைப்பின்னல் மூலம் வழிகாணலாம். அதே நேரத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகளும், நிறுவன உயர் அதிகாரிகளும் திறமைமிக்க இளம் வல்லுநர்களை அடையாளம் கண்டுகொள்ளவும் லிங்க்டுஇன் வழிசெய்கிறது.

சமூக வலைப்பின்னல் யுகத்தின் தொடக்கப் புள்ளிகளில் ஒன்றாக லிங்க்டுஇன் விளங்குகிறது. ஃபேஸ்புக் அறிமுகமாவதற்கு முன்பே லிங்க்டுஇன் உதயமாகிவிட்டது. அதன் நிறுவனரான, ரீட் ஹாஃப்மன் (Reid Hoffman) தொடர்புகளின் அருமையை உணர்ந்திருந்ததே லிங்க்டுஇன் தோற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்தது. ஹாஃப்மன், கல்லூரிகாலத்தில் தத்துவ அறிஞராக வேண்டும் என விரும்பினார். உலகில் மாற்றத்தை ஏற்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் எனத் துடித்துக்கொண்டிருந்தவர், பின்னர்ச் சாஃப்ட்வேர் துறைக்கு வந்துவிட்டார்.

எப்படி, எதற்காகப் பகிரப்படுகின்றன?

ரீட் ஹாப்மன், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பாலே ஆல்டோவில் பிறந்து பெர்க்ளியில் வளர்ந்தவர். அவருடைய பெற்றோர் இருவருமே முற்போக்கு எண்ணம் கொண்ட வழக்கறிஞர்கள். குழந்தையாக இருக்கும்போதே பெற்றோர் அவரை ஆர்ப்பாட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் அழைத்துச் சென்றனர். பத்து வயதில் அவருக்குக் கணினி விளையாட்டு அறிமுகமானது.

தத்துவம், உளவியல், கணினி அறிவியல், மொழியியல் ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்த சிம்பாலிக் சிஸ்டம்ஸ் படிப்பை ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். அந்தப் பாடத்திட்டம் தத்துவம் மற்றும் உலக நடப்புகள் குறித்து அவரை யோசிக்கவைத்தது.

ஸ்டான்ஃபோர்டில் படித்தபோது தீவிரமாக அரசியல் சார்ந்த விவாதங்களில் ஈடுபட்டார். இங்குதான் அவருக்கு எதிர்காலத்தில் ‘பே பால்’ (Paypal) நிறுவனத்தைத் தொடங்கவிருந்த பீட்டர் தியலின் அறிமுகமும் கிடைத்தது. பொதுவாகவே எண்ணங்களை வெளிப்படுத்துவதிலும், கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. கருத்துகள் எப்படிப் பகிரப்படுகின்றன என்பதில் மட்டுமல்ல, எந்தக் கருத்துகள், எதற்காகப் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன என்பதிலும் கவனம் செலுத்தினார்.

1990-ல் பட்டப்படிப்பை முடித்தவுடன், புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஊக்கத்தொகை யுடன் மேற்படிப்பைத் தொடர்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. பேராசிரியராக, எழுத்தாளராக, தத்துவவாதியாக உருவாகும் எண்ணம் அப்போது ஏற்பட்டது. மேலும் உலகம் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினார். இதற்குக் கல்வித் துறையைவிட மென்பொருள் துறையே ஏற்றது எனத் தீர்மானித்தவர், ஆக்ஸ்ஃபோர்டில் படிப்பை முடித்தவுடன் ஸ்டான்ஃபோர்ட் திரும்பினார்.

பணமும் படிப்பினையும்

நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவது பற்றி நிறைய புத்தகங்களைப் படித்தார். மற்ற நேரங்களில் முக்கிய நிதி முதலீட்டாளர்களை சந்தித்தபோதெல்லாம், “முதலில் ஏதாவது சேவையை உருவாக்கிவிட்டு வா…” என்று அறிவுரை கூறி அனுப்பினர். இதனிடையே ஆப்பிளின் இணையப் பிரிவான இ-வேர்ல்டி வேலை கிடைத்தது. ஆப்பிளில் பணியாற்றியபோதே புதிய நிறுவனத்தைத் தொடங்கத் தனக்கு என்னவெல்லாம் தெரிய வேண்டும் எனப் பட்டியலிட்டு அதை நோக்கி உழைத்தார்.

1997-ல் தன்னுடைய முதல் ஸ்டார்ட் அப் நிறுவனமான சோஷியல்நெட்-ஐ தொடங்கினார். டேட்டிங் தளமாக இயங்கினாலும் எதிர்பார்த்த விதத்தில் அந்நிறுவனம் வளரவில்லை. அதில் கிடைத்த பணத்தையும் படிப்பினையையும் வைத்து அடுத்த ஸ்டார்ட் அப்புக்குத் தயாரானார். அப்போது இணையப் பணப் பரிவர்த்தனை நிறுவனமான பே பாலை அவருடைய நண்பர் பீட்டர் தியல் தொடங்கியிருந்தார். அதில் சில காலம் பணியாற்றிப் பணி அனுபவத்தைச் சேகரித்துக்கொண்டார்.

தொடர்பின் முக்கியத்துவம்

பே பாலில் இணையம் மூலமான பணப் பரிவர்த்தனை சேவை காலத்தால் முந்தையதாக இருந்ததோடு, கிரெடிட் கார்டு நிறுவனங்கள், வங்கி அமைப்புகளுடன் போராட வேண்டியிருந்தது. இத்தகைய சவால்களைச் சமாளிக்கும் பொறுப்பை ஹாப்மன் ஏற்றுக்கொண்டார். இந்த அனுபவம் அவருக்குத் தொடர்புகளின் முக்கியத்துவத்தை அழுத்தமாக உணர்த்தியது. 2002-ல் பே பால் நிறுவனத்தைப் பிரபல ஏல நிறுவனமான இபே விலைக்கு வாங்கியது.

அதன் மூலம் கையில் கணிசமான பணம் கிடைத்தது. அடுத்து, ஸ்டான் ஃபோர்ட் நண்பர்கள் உள்ளிட்ட நான்கு இணை நிறுவனங்களுடன் சேர்ந்து தொழில்முறையில் செயல்படக் கூடிய சமூக வலைப்பின்னல் சேவையான லிங்க்டுஇன் தளத்தைத் தொடங்கினார்.

ஆரம்பத்தில் அதன் வளர்ச்சி எதிர்பார்த்த வேகத்தில் அமைய வில்லை. பலருக்கும் லிங்க்டுஇன் சேவையின் பயன்பாடு சரியாகப் புரியவில்லை. பயோடேட்டா போன்ற விவரங்களைப் பதிவேற்றுவது தவிர, அதில் என்ன செய்ய முடியும் புரியாமல் தவித்தனர்.

இந்தக் கட்டத்தில்தான் ஹாப்மன், பயனாளிகள் தங்கள் இமெயில் தொடர்புப் பட்டியலை அப்படியே பதிவேற்ற வழிசெய்தார். இதன் வழியாகப் புதிய தொடர்புகள் கண்டறியப்பட வழி பிறந்தது. முன்பின் தெரியாதவர்களிடமிருந்து இ-மெயில்கள் வருவது எரிச்சலை ஏற்படுத்தினாலும், புதிய தொடர்புகளுக்கு இது வழி வகுத்தது.

தேவதை முதலீட்டாளர்

அடுத்ததாக, நிறுவனங்கள் வேலைவாய்ப்புத் தகவல்களைப் பறித்துக்கொள்ளும் வசதிகளையும் இத்தளத்தில் ஏற்படுத்தினார் ஹாஃப்மன். அதோடு லிங்க்டுஇன் தகவல்களை மற்றவர்கள் பொதுவில் பார்க்கவும் வழிசெய்தார். இதனால் கூகுளில் ஒருவரின் பெயர் தேடப்படும்போது, அவரது லிங்கடுஇன் பக்க விவரமும் தேடல் முடிவுகளில் தோன்றுவது சாத்தியமானது.

இதனை அடுத்து, அமெரிக்கா மட்டுமல்லாமல் 200-க்கும் அதிகமான நாடுகளில் வேலைவாய்ப்பு நாடுபவர்கள் மற்றும் தொழில்முறை தொடர்புகளை நாடுபவர்கள் விரும்பிப் பயன்படுத்தும் சேவையாக உருவெடுத்தது. 2016 மத்தியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் லிங்க்டுஇன் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது தொழில்முறை வலைப்பின்னல் சேவையாக அதன் முக்கியத்துவத்தை உணர்த்தியது.

லிங்க்டுஇன் நிறுவனராக அதன் வளர்ச்சிக்காகத் தீவிரமாகச் செயல் பட்டுக்கொண்டிருந்த அதே நேரத்தில் ஹாஃப்மன், தேவதை முதலீட்டாளராகப் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும் முதலீடு செய்துவருகிறார். சிலிக்கான் பள்ளத்தாக்கில் இளம் தொழில்முனைவோருக்கான வழிகாட்டியாகவும் விளங்குகிறார். அந்த வகையில் சிலிக்கான் பள்ளத்தாக்கின் வலைப்பின்னல் மனிதராகப் புகழப்படுகிறார்.

சைபர் சிம்மன் எழுதிய ‘நம் காலத்து நாயகர்கள்’ புத்தகத்தில் இடம்பெற்ற ‘ரீட் ஹாப்மன்’ கட்டுரையின் சுருக்கம். (புதிய தலைமுறை பதிப்பகம்)


தமிழ் இந்துவின் அறிமுகத்திற்கு நன்றி!

உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்!

googling

இணையத்தில் தகவல்கள் தேவை என்றால் நீங்கள் கூகுலில் தேடுவீர்கள் என்பது தெரிந்த விஷயம் தான்.தேடியந்திரமான கூகுலில் எந்த தகவலையும் தேடிப்பெறலாம். நீங்கள் கூகுலில் தகவல்களை தேடுவது இருக்கட்டும்,நீங்களும் கூகுலில் தேடப்படுகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம்,உண்மை தான்,நீங்களும் கூகிளில் தேடப்படுகிறீர்கள்.இப்போது கூட யாராவது உங்களைப்பற்றி கூகுலில் தேடிக்கொண்டிருக்கலாம்.ஆனால் இதில் வியப்பதற்கோ அதிர்ச்சி அடைவதற்கோ எதுவும் இல்லை.இணைய யுகத்தில் இது மிகவும் இயல்பானது தான்.

கூகுல் தேடலை எளிதாக்கி இருப்பதோடு பரவலாகவும் ஆக்கியிருக்கிறது.விளைவு எல்லாவற்றுக்கும் கூகுலை பயன்படுத்துகின்றனர். உங்களைப்பற்றிய தகவல் தேவை என்றாலும் கூகுலை பயன்படுத்துகின்றனர்.

சரி, இப்படி உங்களைப்பற்றி தேடுவது யார்? அவர்கள் நோக்கம் என்ன? அவர்கள் தேடலில் கிடைப்பது என்ன? சுவாரஸ்யமான கேள்விகள். அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கேள்விகள்.

கூகுலில் தேடப்படுகிறீர்கள் என்றதுமே ஏதோ குற்றவாளிக்கான வலைவீச்சு போல புரிந்து கொள்ள வேண்டியதில்லை. உங்களைப்பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு அல்லது சரி பார்த்து கொள்வதற்கானதேடல் தான் இது.யாருக்கெல்லாம் உங்களைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டால் இந்த தேடலை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

பெரும்பாலும் வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்களே இத்தகைய தேடலில் ஈடுபடுகின்றன.வழக்கமாக நிறுவனங்கள் புதியவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ள என்ன செய்யும் என்றால் விளம்பரம் கொடுத்து நேர்முகத்தேர்வுக்கு அழைத்து ஒருவரது திறமையை பரிசோதிக்கும். அவரது குணநலன்கள் குறித்த சான்றிதழ்களை சரி பார்க்கும்.தேவைப்பட்டால் யாரிடமாவது விசாரித்தும் பார்க்கலாம்.

இதெல்லாம் பழைய கால பழக்கங்கள். இன்று ஒருவரைப்பற்றிய தகவல்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றனவே. எனவே யாரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் இணையத்தில் தேடினாலே போதுமானது. அது தான் நிறுவனங்கள் கூகிளில் தேடிப்பார்க்கின்றன.

புதிய வேலைக்காக விண்ணப்பித்தவர்களின் திறமையை பரிசோதிக்கும் போது கூடுதல் தகவல் தேவைப்பட்டாலோ அல்லது விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் சரியானது தானா என்று தெரிந்து கொள்ள விரும்பினாலோ நிறுவன மேலதிகாரி உடனடியாகசெய்யக்கூடியது,கூகுலில் அந்த நபரின் பெயரை டைப் செய்து தேடிப்பார்ப்பது தான்.

இவ்வாறு தேடும் போது அந்த நபர் பெயரில் உள்ள தகவல்களை எல்லாம் பார்க்க முடியும்.உதாரனத்திற்கு அவர் பேஸ்புக் சேவையை பயன்படுத்துபவர் என்றால் அவரது பேஸ்புக் பக்கம் வந்து நிற்கும். வலைப்பதிவு வைத்திருப்பவர் என்றால் வலைப்பதிவு தோன்றும். அதே போலவே ட்விட்டர் பக்கம், தொழில் முறை வலைப்பின்னல் சேவையான லின்க்ட் இன் பக்கம் போன்றவையும் தேடலில் கிடைக்கலாம்.

இந்த தளங்களில் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ள தகவல்களை அலசுவதன் மூலம் நிறுவன அதிகாரி விண்ணப்பித்தவர் தெரிவித்த தகவல்கள் உண்மையாவவை தானா என்று சரி பார்த்து கொள்ள முடியும். அது மட்டும் அல்ல, விண்ணப்பதாரரின் தன்மை மற்றும் திறமை பற்றிய மேலதிக தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
விண்ணப்பதாரர்கள் பயோ டேட்டாவில் தங்களைப்பற்றிய தகவல்களை தெரிவித்திருப்பார்கள் தான் .ஆனால் அவை முழுமையானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது.குறைந்தபட்சம், வேலைக்கு பொருத்தமான நபர்களை தேடிக்கொண்டிருக்கும் நிறுவன மேலதிகாரியின் பார்வை

laud

தோழர்களை தட்டி கொடுக்க ஒரு இணையதளம்.


மனிதன் எத்தனை கம்பீரமான சொல் என்று மக்சிம் கார்க்கி வியந்தது போல பாராட்டு தான் எத்தனை மகத்தான செயல்.பாராட்டு அதனை பெறுபவரின் முகத்திலும் அகத்திலும் மலர்ச்சியை ஏற்படுத்துகிறது.அங்கீகரிக்கப்பட்ட உணர்வை தருகிறது.நல்ல பாராட்டு இன்னும் எத்தனையோ அற்புதங்களை செய்ய வல்லது.

நாம் எல்லோருமே பாராட்டுகிறோம்.பாரட்டப்படுகிறோம்.இதனை உலகறிய செய்தால் என்ன என்று கேட்கிறது லாடிட்ஸ் இணையதளம்.

நண்பர்களுக்கான பாராட்டை தெரிவிப்பதற்கான இணைய சேவையாக இந்த தளம் உருவக்கப்பட்டுள்ளது.அதன் மூலம் நண்பர்களுக்கு புதிய வாயில்களை திறந்து விடுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி தருவதாக சொல்கிறது இந்த தளம்.

நண்பர்கள் என்பது இங்கே அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்களை குறிக்கிறது.ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் பணியாற்றும் விதம் உங்களை கவ‌ர்ந்திருந்தால் அல்லது உங்கள் வேலையில் அவர்கள் திறம்பட உதவியிருந்தால் அதற்கான பாராட்டையும் நன்றியையும் இந்த தளம் வழியே பகிர்ந்து கொள்ளலாம்.

பொதுவாக இது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பலரும் செய்வது தான் .சிலர் செய்யாமல் இருப்பதும் உண்டு.அது அல்ல விஷயம்.சக ஊழிய‌ர்களை பாராட்டும் போது அது வெளியுலகிற்கு தெரியாமலேயே போய் விடுகின்றது.காரணம் ஒன்று நண்பரிடமே பாராட்டை தெரிவிப்போம் அல்லது அவரைப்பற்றி சக நண்பர்களிடம் பாராட்டுவோம்.எப்படி இருந்தாலும் மற்றவர்கள் இதனை அறிய நியாயமில்லை.

மற்றவர்கள் அறிய வேண்டிய அவசியமும் இல்லை தான்.ஆனால் அதே துறையில் இருப்பவர்கள் நண்பரின் இந்த திறமையை அறிந்திருப்பது அவசியம் தானே.காரணம் எந்த திறமையும் குன்றிலிட்ட விளக்காக சுருங்கி விடக்கூடாது தானே!

உதாரணத்திற்கு உங்கள் சகாக்களில் ஒருவர் எத்தனை நெருக்கடி வந்தாலும் அசராமல் பதட்டப்படாமல் வேலை பார்ப்பவராக இருக்கலாம்.நீங்களே கூட இக்கட்டான நிலையில் சிக்கி கொண்ட போது அவர் உதவிக்கு வந்து பக்கவாக அந்த வேலையை முடித்து கொடுத்திருக்கலாம்.அதே போல ஆவேசமாக வரும் வாடிக்கையாளர்களிடம் நேர்த்தியாக பேசி சமாளிக்கும் திறன் கொண்டவர்கள் இருக்கலாம்.யாரவது சொதப்பி விட்டால் அது வெளியே தெரியாமல் சமாளித்து காப்பாற்றும் நபர்களும் இருக்கலாம்.

தப்பே இல்லாமல் அடித்து தரும் டிடிபி ஆப்பரேட்டர்,ஒரே நேரத்தில் பல தொலை பேசி அழைப்புகள் வந்தாலும் எல்லா அழைப்புகளுக்கும் கச்சிதமாக பதில் சொல்லி அழைப்புகள் பற்றி உரியவர்களிடம் மறக்காமல் தகவல் சொல்லும் வரவேற்பாளினிகள்,கடைசி நேரத்திலும் பதட்டமே இல்லாமல் முக்கிய செய்தியை சட்டென அடித்து தரும் தலைமை நிருபர் என்று பாராட்டுக்குரியவர்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

துறைக்கு துறை நிறுவனத்திற்கு இது மாறுபடலாம்.ஆனால் வேலையில் அதீத திறமையை வெளிப்படுத்தி சபாஷ் வாங்கும் நபர்கள் எல்லா இடங்களிலும் உண்டு.இவர்களை பாராட்டும் தருணங்களும் உண்டு.

இந்த பாராட்டுக்களை எல்லாம் பகிரங்கமாக பகிர்ந்து கொள்ளுங்களேன் என்கிறது லாடிட்ஸ்.அப்படி பகிர்ந்து கொண்டால் அதே துறையில் இருப்பவர்கள் அந்த நண்பரின் திறமையை தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்குமே என்றும் லாடிட்ஸ் சொல்கிறது.அதோடு அவருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கவும் வழி செய்யக்கூடும்.

தொழில் துறையினருக்கான பேஸ்புக்காக கருதப்படும் லின்க்டுஇன் தளத்தின் உறுப்பினர் கணக்கை கொண்டு இதில் உறுப்பினராக சேர வேண்டும்.அதன் பிறகு எந்த சகாவை பாராட்ட விரும்புகிறிர்களோ அவர்களை பயரை குறிப்பிட்டு பாராட்டிற்கான காரணங்களையும் எழுதி அவ்ருக்கு இமெயில் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த பாராட்டு நண்பரின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதோடு இந்த பாராட்டு பத்திரத்தை அவர் தனது லின்க்டுஇன் பக்கத்தில் பெருமிதத்தோடு இடம் பெறவும் வைக்கலாம்.

லின்க்டுஇன் தொழில் ரீதியாக பயன்படுத்தப்படும் சமூக வலைப்பின்னல் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.நிறுவனங்களில் பணியாற்றுபவர்களே அதில் உறுப்பினராக இருக்கின்றனர்.அது மட்டுமா வேலை வாய்ய்பு தேடுபவர்களும் சரி வேலைக்கு பொருத்தமானவர்களை தேடுபவர்களும் சரி இந்த வலைப்பின்னலை தான் பயன்படுத்துகின்றனர்.

எனவே நண்பர்களின் வேலை திறமை பற்றிய உங்களின் மனந்திறந்த பாராட்டு நல்ல சம்பளத்தோடு பெரிய நிறுவனங்கள் அவர்களை கொத்தி கொண்டு போக வைக்கலாம்.அந்த வகையில் உங்கள் பாராட்டு மிகச்சிறந்த சிபாரிசாக அமையலாம்.

இப்படி பாராட்டுவது தொழில்முறையாக நன்றி சொல்லுதல் என்று லாடிட்ஸ் தளம் குறிப்பிடுகிறது.அதோடு உங்கள் அலுவலக நண்பர்களின் நற்திறமையை பாராட்டி நன்றி சொல்லுங்கள் வாருங்கள் அழைக்கிறது லாடிட்ஸ்.

பாராட்டுங்கள்! நீங்களும் பாராட்டப்படலாம்!

இணையதள முகவரி;http://www.laudits.com/

பயனுள்ள சந்திப்புகளுக்கான இணையதளம்.

இணையமே சந்திப்புகளுக்கும் பகிர்வுகளுக்குமான இடமாகி கொண்டிருக்கிறது.புதிய நண்பர்களை தேடிக்கொள்வதும் நண்பர்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்வதும் சுலபமாகி இருக்கிறது.எல்லாம் சமூக வலைப்பின்னல் தளங்களின் தயவு.

இந்த வகையில் தொழில் முறையிலான தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள உதவும் நோக்கத்தோடு எய்ட்டிபை பை பிப்டிபை என்னும் தளம் உதயமாகியிருக்கிறது.

இந்த தளத்தை சாட் ரவுலெட்டும் லின்க்டு இன்னும் இணைந்த கலவை என்று வர்ணிக்கலாம்.அதன் பயனாக மிகவும் சுவாரஸ்யமான முறையில் அதே நேரத்தில் பயனுள்ள தொட்ர்புகளை இந்த தளம் தேடித்தருகிறது.

லின்க்டு இன் தொழில் முறையினருக்கான பேஸ்புக்.இதன் மூலம் வர்த்தக பிரமுகர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு தொழில் முறையிலான நட்பை வளர்த்து கொள்கின்றனர்.

சாட் ரவுலெட் குலுக்கல் முறையில் புதியவர்களோடு தொடர்பு கொண்டு இணைய அரட்டையில் ஈடுபட உதவும் தளம்.அடிப்படையில் இந்த சேவை மிகவும் சுவாரஸ்யமானது.எப்போது இந்த தளத்தில் நுழைந்தாலும் குத்து மதிப்பாக யாராவது ஒரு உறுப்பினரோடு வெப்கேம் வழியே இணைய அரட்டையில் ஈடுபடலாம்.ஒவ்வொரு முறையும் அரட்டை அறையில் தோன்றும் நபர் மாறிக்கொண்டே இருப்பார்.இப்படி முற்றிலும் அறிமுகம் இல்லாவதவரோடு எந்தவித திட்டமிடலும் இல்லாமல் அரட்டை அடிக்க வாய்ப்பு உண்டாக்கி தருவதே இந்த தளத்தின் சுவாரஸ்யம்.

ஏறக்குறைய இதே தன்மையை தொழில் முறையிலான நண்பர்களை தேடிக்கொள்வதற்காக பயன்படுத்தி கொள்கிறது எய்ட்டிபை பை பிப்டிபை இணையதளம்.

எப்படி சாட் ரவுலெட் அறிமுகம் இல்லாத புதியவர்களோடு தொடர்பு ஏற்படுத்தி தருகிறதோ அதே போல இந்த தளம் அறிமுகம் இல்லாத நபர்களை இணையம் மூலம் சந்தித்து பேச வைக்கிறது.ஆனால் இந்த அறிமுகம் இல்லாதவர்கள் ‘யாரோவாக’ இல்லாமல் தொழில் முறையிலானவர்களாக இருப்பார்கள்.அதாவது லின்க்டு இன் உறுப்பினர்கள் என்றும் வைத்து கொள்ளலாம்.(லின்க்டு இன் அல்லது வர்த்தக நிறுவன இமெயில் முகவரி மூலம் தான் இதில் உறுப்பினராக முடியும்)

அதாவது வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்தி தரும் உத்தியை இந்த தலம் கொஞ்சம் தலை கீழாக திருப்பி போட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.

வழக்கமாக தொழில் முறையிலான தொடர்புகளை விரும்புகிறவர்கள் ஒத்த கருத்து அல்லது பொது தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே புதியவர்களை சந்திக்க விரும்புவார்கள்.ஆனால் இந்த தளமோ அதற்கு நேர் மாறாக தொழில் முறையிலானவர்களில் யாரோ ஒருவரோடு தொடர்பு ஏற்படுத்தி தருகிறது.

இப்படி அறிமுகம் செய்யப்படும் நபரோடு வெப்கேம் வழியே அரட்டை அடிக்கலாம்.இந்த அரட்டையின் மூலம் இருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டு நண்பர்களாகலாம்.இந்த நட்பு தொழில் ரீதியாக பயனுள்ளதாகவும் அமையலாம்.ஆக நட்புக்கு நட்பும் கிடைக்கும் வர்த்தக தொடர்பும் சாத்தியமாகும்.

அறிமுகமாகும் நபர்களோடு அதிக பட்சம் இரண்டு நிமிடங்களே அரட்டை அடிக்க முடியும் என்பது தான் முகவும் சுவாரஸ்யமானது.அதோடு இந்த தளத்தின் நோக்கத்தோடும் பொருத்தமானது.பெரும்பாலும் பிசியாக இருப்பவர்களே இந்த சேவையை பயன்படுத்த போவதால் அவர்களால் அரட்டை அடிப்பதில் அதிக நேரத்தை செலவிட முடியாது .புதிய நண்பர்கள் கிடைத்தாலும் வெட்டிக்கத்தை பேச அவர்களுக்கு நேரம் இருக்காது.எனவே இரண்டு நிமிடம் என்ற கட்டுப்பாட்டை அவர்கள் விரும்பக்கூடும்.

இரண்டு நிமிடத்திற்குள் பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டு விட வேண்டும்.அதன் பிறகு விருப்பம் இருந்தால் அந்த புதிய நண்பரை தொடர்பு கொள்வதற்கான வசதியும் இருக்கிறது.அதே போல யாரை எல்லாம் சந்தித்தோம் என்னும் விவரம் உறுப்பினர்களின் தகவல் பக்கத்தில் சேமித்து வைக்கப்படும்.எப்போது விரும்பினாலும் அரட்டை அடித்தவரை தேடி கண்டு பிடித்து விடலாம்.

இந்த தளத்தில் ஒவ்வொரு முறையும் ஒருவரை சந்திக்கலாம்,ஆனால் ஒரு முறை சந்தித்தவரை மறுமுறை சந்திக்க முடியாது.அது தான் இதன் தனித்தன்மை.

யாரை சந்திக்க போகிறோம் என்று தெரியாமல் இருப்பது இந்த சேவையின் சிறப்பு .ஆனால் யாரை சந்தித்தாலும் பயனுள்ளதாக இருக்கும் என்பது இன்னும் சிறப்பு!.

இணையதள முகவரி;http://85by55.com/