Tag Archives: rain

davek2

மறந்து வைத்தால் நினைவூட்டும் குடை!

நீங்கள் எடுத்துச்செல்லும் குடை உங்களுடன் பேசினால் எப்படி இருக்கும்? கிக்ஸ்டார்ட்டரில் அறிமுகமாகி இருக்கும் புதிய குடை இந்த கேள்வியை கேட்டு, குடை உங்களுடன் தொடர்பு கொள்வதற்கான புதிய வழியை உருவாக்கி இருப்பதாகவும் சொல்கிறது.
குடை எதற்கு நம்முடன் பேச வேண்டும்?
அதனை மறந்துவிட்டுச்செல்லாமல் நினைவூட்ட தான்!

ஆம், கொட்டும் மழையிலோ கொளுத்தும் வெய்யிலிலோ எடுத்துச்செல்லும் குடையை மறக்காமல் திரும்ப எடுத்து வருவதை உறுதி செய்யும் ஆற்றல் கொண்டதாக இந்த நவீன குடை உருவாக்கப்பட்டுள்ளது.
குடையை மறந்து வைத்து விட்டு அதன் பிறகு வருந்தும் அனுபவம் பெரும்பாலானோருக்கு இருக்கலாம். ஒவ்வொரு முறையும் குடையை மறக்காமல் இருக்க வேண்டும் என என்ன தான் உறுதி எடுத்திக்கொண்டாலும் மறதி வென்று வெறுப்பேற்றலாம்.

இந்த மறதி பிரச்சனையை வெல்வதற்கான வழியாக குடையே தன்னை நினைவு படுத்திக்கொள்ளும் சின்ன நடைமுறை அற்புதத்தை தான் டெவேக் அலர்ட் எனும் இந்த கிக்ஸ்டார்ட்டர் குடை சாத்தியமாக்குகிறது.
எப்படி?
இந்த குடையின் கைப்பிடியில் சின்னதாக ப்ளுடூத் வசதி கொண்ட அருகாமை உணரும் சிப் இருக்கிறது. இந்த சிப் சதா உங்கள் ஸ்மார்ட்போனுடன் தொடர்பில் இருக்கும். அதாவது நான் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கும்.

குடையை கையில் எடுத்ததுமே இந்த அம்சம் விழித்திக்கொள்ளும். குடையை விட்டு நீங்கள் குறிப்பிட்ட தொலைவு சென்றீர்கள் என்றால்,குடையை வைத்து விட்டு செல்கிறீர்களே என்று யாரோ சொல்வது போல குடையே உடனே போனுக்கு ஒரு நினைவூட்டல் அனுப்பி வைக்கும். ஆக, எங்கு சென்றாலும் குடையை மறந்துவிட்டு வரும் பிரச்சனையே இருக்காது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுடன் இணைந்து செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டது இது.
குடையில் உள்ள பேட்டரி அசைவற்று இருக்கும் போது ஸ்லீப் மோடில் இருக்கும் என்பதால் ஓராண்டுக்கும் மேல் பேட்டரியின் ஆயுல் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குடைக்கான நினைவூட்டும் செயலியை எளிதாக டவுண்லோடு செய்து கொள்ளலாம். குடைக்கான செயலி நினைவூட்டல் சேவை தவிர, வானிலை சேவையையும் வழங்க கூடியது.

இதைப்பார்த்தே இன்று மழை வருமா? குடையை எடுத்துச்செல்ல வேண்டுமா என தீர்மானித்துக்கொள்ளலாம்.
இந்த குடை சாதாரண குடையும் அல்ல; வழக்கமாக பயன்படுத்தி தூக்கியெறிந்து விடும் குடை போல அல்லாமல், நீண்ட காலம் பயன்படுத்த ஏற்ற வகையில் பல உறுதியான அம்சங்களை கொண்டது. எனவே இதன் விலையும் அதிகம். அமெரிக்க டாலர் கணக்கில் 100 டாலர். இந்த அளவுக்கு காஸ்ட்லியான குடையை தயங்காமல் வாங்க வைக்க எப்படி என யோசித்த போது, இதை மறக்காமல் எடுத்து வரும் வசதி நினைவில் வந்து இந்த நினைவூட்டும் அம்சத்தை உருவாக்கியதாக குடையின் பின்னே உள்ள நிறுவனத்தை நடத்தும் டேவ் காங் சொல்கிறார்.
ஆரம்பத்தில் ஜிபிஎஸ் மூலம் இதை செய்ய நினைத்தவர், பயன்படுத்தவும் எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக ப்ளுடூத் முறையை தேர்வு செய்திருக்கிறார்.

குடை பற்றி அறிய: https://www.kickstarter.com/projects/896798832/davek-alert-umbrella-never-lose-your-umbrella-agai?ref=mashable

——–

இன்று குடை தேவையா ? சொல்லும் இணையதளங்கள்!


ஜோதிடத்தை மதிக்கிறோம்.ஜோதிடர் சொல்வதெல்லாம் நூறு சதவீதம் பலிப்பதில்லை.இருந்தும் ஜோதிடம் தவறும் போது ஜோதிடரை பெரிதாக கேள்வி கேட்பதில்லை.ஆனால் வானிலை அறிக்கை சொல்பவர்களை மட்டும் வறுத்தெடுத்து விடுகிறோம்.வானிலை அறிக்கையில் மழை பெய்யும் என்று சொன்னால் வெய்யில் காயும் என கூசாமல் ஜோக் அடிக்கிறோம்.

வானிலை அறிக்கையின் துல்லியத்தை என்ன தான் கிண்டல் அடித்தாலும் வானிலை கணிப்புகள் நமக்கு தேவைப்படத்தான் செய்கிறது.அதிலும் குறிப்பாக மழை காலத்தில் இன்று மழை பெய்யுமா?என்ற கேள்விக்கான பதிலை தேடத்தான் செய்கிறோம்.

அப்போதெல்லாம் டிவியில் வானிலை அறிக்கையில் என்ன சொல்கின்றனர் என்று அறிய ஆர்வம் காட்டவே செய்வோம்.

இப்போதெல்லாம் வானிலைக்காக டிவி செய்திக்கு காத்திருக்க வேண்டாம்.வானிலை விவரங்களை அளிக்கும் இணையதளங்கள் இருக்கவே இருக்கின்றன.

வானிலை விவரங்களை தரும் இணையதளங்களில் மிக மிக எளிமையான தளம் என்று அம்பிரல்லா டுடே தளத்தை குறிப்பிடலாம்.எளிமையான தளம் மட்டும் அல்ல சுவாரஸ்யமான தளமும் கூட!

இந்த தளம் இன்று மழை பெய்யுமா? என்ற கேள்விக்கு மிகவும் சுவாரஸ்யமான முறையில் பதில் அளிக்கிறது.அதாவது இன்று குடையை எடுத்து செல்ல வேண்டுமா என்னும் கேள்விக்கு இந்த தளம் ஆம் அல்லது இல்லை என்று பதில் தருகிறது.

மற்ற வானிலை தளங்களை போல இதில் உங்கள் நகரத்தை தேடி அதற்கான வானிலை குறிப்புகளை எல்லாம் படித்து பார்த்து கொண்டிருக்க வேண்டும் என்ர தேவையில்லை.மாறாக இதில் உள்ள தேடல் கட்டத்தில் உங்கள் நகரத்தை டைப் செய்தால் போதும் ,குடை தேவையா இல்லையா என்று பதில் சொல்லிவிடும்.

அதாவது இன்று மழை பெய்யுமா என்று உணர்த்திவிடும்.குடை தேவை என்று வந்தால் மழை பெய்யப்போகிறது என்பதை புரிந்து கொண்டு விடலாமே.

வானிலை சார்ந்த போரடிக்கும் வறட்டுத்தனமான புள்ளிவிவரங்களுக்கு பதிலாக இப்படி நேரடியாக வானிலை பற்றிய நிலையை நச்சென ஒரே வார்த்தையில் பெற முடிவது சுவாரஸ்யமானது தானே!.தளத்தின் முகப்பு பக்கமும் அழகான குடையோடு வரவேற்கின்றது.

உலகின் எந்த மூளையில் இருந்தும் இந்த தளத்தை பயன்படுத்தலாம்.(ஆரம்பத்தில் அமெரிக்காவுக்கான தளமாக இருந்தது)

அது மட்டும் அல்ல இதில் உங்கள் நகரத்தின் பெயரை சமர்பித்து அதற்கான வானிலை முன்னெச்சரிக்கையை குறிப்பிட்ட தினத்தன்று இமெயில் அல்லது எஸ் எம் எஸ் எச்சரிக்கையாக பெற்று கொள்ளும் வசதி இருக்கிறது.

டூ ஐ நீட் ஆன் அம்பிரல்லா இணையதளமும் இதே போன்ற சேவையை வழங்குகிறது.இன்னும் கூட எளிமையான தளம் இது.ஒரு குடை அதன் அருகே நகருக்கான தேடல் கட்டம் .அதில் நகரின் தபால் குறியீட்டை டைப் செய்தால் குடை தேவையா என பதில் சொல்லி விடுகிறது. ஆனால் அமெரிக்காவில் மட்டுமே செயல்படக்கூடிதாக இருக்கிறது.

ஈஸ் இட் ரெயினிங் இணையதளம் இன்னும் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கிறது.இந்த தளம் இப்போது எந்த நகரத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது என சுட்டிக்காட்டுகிறது.குறிப்பிட்ட நகரின் பெயரை டைப் செய்தால் அங்கு மழை பெய்கிறதா இல்லையா என சொல்வதோடு அந்த நகருக்கான வெப்பநிலையையும் வழங்குகிறது.முகப்பு பக்கத்தில் உலக நகரங்களின் மழை விவரம் வரிகளாக இடம் பெறுகிறது.

ஸ்லீவ்ஸ் தளம் இதே கேள்விக்கு சட்டையை வைத்து பதில் சொல்கிறது.அதாவது இன்று எந்த மாதிரியான சட்டை அணிந்து செல்லாம் என்று சொல்லி அதன் வாயிலாக மழை பற்றிய தகவலை தருகிறது.ஆனால் இதுவும் அமெரிக்காவுக்கு மட்டுமான தளம்.

பெரும்பாலான நேரங்களில் மிகவும் அலுப்பூட்டக்கூடிய வானிலை விவரங்களை எந்த அளவுக்கு சுவாரஸ்யமானதாகவும் எளிமையானதாகவும் மாற்ற முடியும் என்பதற்கான அழகான உதாரணங்களாக இவை இருக்கின்றன அல்லவா!

இணையதள முகவரி;http://umbrellatoday.com/

http://www.doineedanumbrella.com/

http://isitraining.in/
………

http://gotsleeves.appspot.com/