Tag Archives: record

யூடியூப் வீடியோக்களுக்கான டிஜிட்டல் ரெக்கார்டர்

http _peggo.co_யூடியூப்பில் பாடல்களை கேட்டு ரசிப்பவரா நீங்கள்? இப்படி யூடியூப்பில் கேட்டு ரசித்த பாடல்களை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திடுக்கிறீர்களா?
ஆம் எனில் , பெக்கோவை உங்களுக்கான இணையதளம் என்று சொல்லலாம்.

டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் சேவையான பெக்கோவில் எந்த யூடியூப் வீடியோவை வேண்டுமானாலும் பின்னர் கேட்டு ரசிப்பதற்காக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வது , மிகவும் எளிதானது. பெக்கோ முகப்பு பக்கத்தில் உள்ள கட்டத்தில் , வீடியோவுக்கான இணைய முகவரியை குறிப்பிட்டால் போதும் அதன் எம்.பி- 3 கோப்பு உங்கள் கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்டு விடும்.

வீடியோவில் முன்னும் பின்னும் உள்ள மவுனததை நீக்கி விட்டு சேமிக்கும் வசதி இருக்கிறது. ஒலியின் தரத்தையும் சீராக்கி கொள்ளலாம். பெக்கோவிலேயே தேடல் வசதியும் இருக்கிறது. தேடப்படும் வீடியோவுக்கு இணையான தொடர்புடைய வீடியோக்களையும் பட்டியலாக பார்க்கலாம்.

இசைப்பிரியர்களுக்கு ஏற்ற அருமையான இணையதளம்; http://peggo.co/

————-
பி.கு; வலைப்பதிவு பயிற்சி பற்றிய அறிவிப்புக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. வலைப்பதிவு தொடர்பான கேள்விகளை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன். பதிவர்கள் வெற்றி அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த பயிற்சியின் பிரதான நோக்கம் புதிய வலைப்பதிவர்களை ஊக்குவிப்பது. இதற்கு விதையிட்ட பல சம்பவங்களில் ஒன்று நான் இந்தியா டுடேவில் இருந்த போது நிகழ்ந்தது. அப்போது கோவையில் இருந்து வந்திருந்த வாசகர் ஒருவர் விவசாயம் சார்ந்த தனது கருத்துக்கள் மற்றும் ஆய்வுகளை வெளியிட முடியுமா? என எனது ஆசிரியரிடம் கேட்டுள்ளார். இதழின் வரம்பிற்குள் அதற்கான வாய்ப்பில்லை என்று குறியவர், நீங்கள் வலைப்பதிவு துவங்கி வெளியிடலாமே என்று யோசனை கூறியிருக்கிறார். கோவை பெரியவரோ, அப்படியா , வலைப்பதிவை நாமே துவங்கலாமா? இது சாத்தியமா என்றெல்லாம் ஆர்வத்துடன் கேட்டிருக்கிறார். எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் அளித்த பின் அவரும் நானும் இது பற்றி நீண்ட நேரம் விவாதித்தோம்.
வலைப்பதிவு பலருக்கு சாதாரணமாக இருந்தாலும் , வலைப்பதிவை இன்னும் முழுமையாக இருக்கும் அந்த கோவை பெரியவர் போன்றவர்களுக்கு வழிகாட்டுவதற்காக இந்த பயிற்சி உதவும் என்பது என் நம்பிக்கை.
வலைப்பதிவு பாடங்கள் பத்து அல்லது பதினைந்து நாட்களில் துவங்கும். பாடங்கள் இமெயிலில் தான் வரும். ஒரு வகுப்பின் தன்மை மற்றும் சீரான தன்மைக்காக இந்த ஏற்பாடு. ஆர்வம் உள்ளவர்கள் இங்கு பதிவு செய்யலாம்: http://valaipayirchi.wordpress.com/

பார்த்தேன் ரசித்தேன் பகிர்ந்தேன் இணையத‌ளம்

எல்லோருக்கும் ஒரு வகைப்பின்னல் தளம் இருக்கும் போது இயற்கை ஆர்வலர்களுக்கும் ஒரு வலைப்பின்னல் தளம் இருப்பது தேவை தானே.அந்த தேவையை போக்கும் வகையில் ஐநேச்சுரலிஸ்ட் டாட் ஆர்ஜி தளம் அமைந்துள்ளது.

இயற்கையில் காணும் காட்சிகளையும் பறவைகளையும் விலங்குகளையும் மலர்களையும் பதிவு செய்து பகிர்ந்து கொள்வதற்கான இருப்பிடமாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த தளத்தின் வாயிலாக இயற்கை ஆர்வலர்களை சந்திக்கலாம்,அவர்கள் மூலமாக உயிரினங்கள் பற்றிய புதிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

இயற்கை ஆர்வலர்கள் இந்த தளத்தை பார்த்தால் மெய்மறந்து போய் விடுவார்கள்.காரணம் இயற்கை மீதான ஆர்வத்தையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வதற்கான இடமாக இந்த தளம் இருப்பது தான்.இவ்வாறு இயற்கையை ரசித்தவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்கும் போது இயற்கையை ரசிக்கத்தெரிந்தவர்களின் மனது இற‌க்கை கட்டி பறக்கவே செய்யும்.

இயற்கையில் தான் எத்தனை வகையான எழில்கள்! எத்தனை விலங்கினங்கள்! எத்தனை பறவையினங்கள்!எத்தனை தாவரங்கள்!அவற்றையெல்லாம் இந்த தளத்தில் காணலாம். கூடவே அவை தொடர்பான விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.எல்லாமே சக இயற்கை ஆர்வலர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டவை.

இங்கு இயற்கையில் உலா வரலாம்;இயற்கையை அறிந்து கொள்ளலாம்;இயற்கையை பகிர்ந்து கொள்ளலாம்!.

பொதுவாகவே இயற்கை ஆர்வலர்கள் குறிப்பேடும் காமிராவுமாக திரிபவர்கள்.எந்த இடத்தில் புதிதாக ஒரு தாவிரததையோ விலங்களையே பார்த்தால் உடனே அதனை குறிப்பெடுத்து கொள்வார்கள்.காமிராவில் கிளிக் செய்தும் கொள்வார்கள்.இதற்காக என்றே நேரம் கிடைக்கும் போது இயற்கையை பார்த்து ரசிக்க புதிய இடங்களுக்கு செல்வதும் உண்டு.

இத்தகைய இயற்கை ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர்.இவ்வளவு ஏன் நாம் எல்லோருக்குள்ளேயும் ஒரு இயற்கை ரசிகன் இல்லாமல் இல்லை.அந்த ரசிகன் எட்டிப்பார்க்க எத்தனை பேர் அனுமதிக்கிறோம் என்பதே கேள்வி.

இயற்கையை ரசித்து மகிழ்பவர்கள் சேகரிக்கும் குறிப்புகளை எல்லாம் அவற்றுக்குறிய புகைப்படங்களோடு ஒரே இடத்தில் பகிர்ந்து கொண்டால் எப்ப‌டி இருக்கும்?அந்த இடமாக தான் இந்த தளம் திகழ்கிறது.

பறவைகளையோ மலர்களையோ அல்லது விலங்குகளையோ எந்த இடத்தில் எப்போது பார்த்தோம் என்பது இயற்கை ஆர்வலர்கள் பதிவு செய்யலாம்.இதற்காக என்று ஒவ்வொருவரும் தங்களுக்காக இணைய பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம்.

ஒவ்வொரு உறுப்பினரின் பக்கத்திலும் அவர் பார்த்து ரசித்த காட்சிகளின் எண்ணிக்கை,அவர் பகிர்ந்து கொண்ட விவரங்களின் பட்டியல் போன்ற விவரங்களோடு அவரைப்பற்றிய அறிமுகமும் இடம் பெறுகின்றன.டைரி குறிப்பு போல விரிவான விளக்க குறிப்புகளையும் எழுதலாம்.

இப்படி உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை பலவிதங்களில் அணுகலாம்.முகப்பு பக்கத்தில் நுழைந்ததுமே சமீபத்திய பகிர்வுகளின் பட்டியல் வரவேற்கிறது.அதன் மூலம் எந்த இடத்தில் யார் எதனை பார்த்து ரசித்துள்ளனர் என்று தெரிந்து கொள்ளலாம்.

இதை தவிர பார்வைகள்,இடங்கள்,உயிரின‌ வகைகள் என தனித்தனி பிரிவுகளின் கீழும் தகவல்களை அணுகலாம்.

பார்வைகள் பகுதியில் உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்ட குறிப்புகளின் பட்டியலை காணலாம்.உயிரின வகைகள் பகுதியில் உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்ட குறிப்புகளின் விவரங்களை ஒவ்வொரு உயிரின வகைகளுக்கேற்ப பார்க்கலாம்.

எந்த உயிரினத்தின் மீது ஆர்வமுள்ளதோ அதற்கான புகைப்படத்தை கிளிக் செய்தால் அந்த உயிரினம் பற்றிய விரிவான விவரங்களுக்கான பக்கத்தை காணலாம்.அதில் விக்கிபீடியாவின் அறிமுகம் உட்பட சகலவிதமான விவரங்களையும் காணலாம்.

மேலும் அந்த குறிப்பிட்ட உயிரினம் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்ட விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

அதே போல இடங்கள் பகுதியில் உலக வரைபடத்தில் உள்ள இடங்களில் கிளிக் செய்து அந்த இடத்தில் பார்க்கப்பட்ட பகிரப்பட்ட உயிரினங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப சக உறுப்பினர்களை பின்தொடர்ந்து நட்பை வளர்த்து கொள்ளலாம்.உதாரணத்திற்கு பற்வை ஆரவலர்கள் தங்களை போன்ற பறவை ஆர்வலர்களை பின் தொடரலாம்.

இயற்கை களங்கியமாக உருப்பெற்று வரும் இந்த தளம் உயிர்களை நேசிக்க வைக்கிறது உயிரியலை அறிய வைக்கிறது.

இணையதள முகவரி;http://www.inaturalist.org/