Tag Archives: website

புதுமையான முறையில் தகவல் தரும் இனையதளம்

ageஉங்களுக்கு வயதாகி கொண்டிருக்கிறது என்பதை நினைவு படுத்துவது எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதை மிகவும் சுவாரஸ்யமான வகையில் செய்கிறது யூஆர்கெட்டிங்ஓல்ட் இணையதளம்.
இந்த தளத்தில் பயனாளிகள் தங்கள் பிறந்த தேதி விவரத்தை சமர்பித்தால், அவருக்கு எத்தனை வயதாகிறது எனும் விவரத்தை இந்த தளம் அளிக்கிறது. இது என்ன பெரிய விஷயமா? வயது விவரம் தெரியாதா என்று கேட்கலாம். விஷயம் என்ன என்றால், பயனாளியின் வயதை வருடங்கள், மாதங்கள், நாட்கள் என துல்லியமாக தெரிவிப்பதோடு, தொடர்புடைய வேறு பல புள்ளிவிரங்களையும் முனவைத்து வியக்க வைக்கிறது.
பிரபலங்கள் சிலரின் வயதுடன் ஒப்பிடப்படுவதோடு, பயனாளியின் இதயத்துடிப்புகளின் எண்ணிக்கை, மூச்சுக்காற்றின் எண்ணிக்கை, அவர் பிறந்த போது பூமியில் உயிருடன் இருந்தவர்களின் எண்ணிக்கை என வரிசையாக தகவல்கள் இடம்பெறுகின்றன. கடந்த காலங்களில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளும் பட்டியலிடப்படுகின்றன. உங்கள் சிறு வயதில் நடந்தவை, இளமை காலத்தில் நடந்தவை என இந்த நிகழ்வுகளை பார்க்கலாம். உங்களை முன்வைத்து பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள சுவாரஸ்யமான வழியாக இந்த தளம் அமைகிறது.

இணையதள முகவரி: http://you.regettingold.com/

செயலி புதிது: பழைய ஒளிப்படங்களை பாதுகாக்க!

photoscan-adjustஸ்மார்ட்போன் யுகத்தில் ஒளிப்படங்களை எடுப்பதும், பகிர்ந்து கொள்வதும் எளிதாக இருக்கிறது. எல்லாம் சரி, பழைய காலத்தில் எடுத்த ஒளிப்படங்களை என்ன செய்வது? அவற்றை டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பது தானே சரியாக இருக்கும். இதற்காக பழைய ஒளிப்படங்களை ஸ்கேன் செய்து டிஜிட்டல் வடிவிற்கு மாற்றலாம். ஆனால் இதற்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டும். இந்த பணியை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள கூகுள் புதிதாக ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளது.
போட்டோஸ்கேன் எனும் அந்த செயலி மூலம் ஒருவர் தன்னிடம் உள்ள ஒளிப்படங்களை எளிதாக ஸ்கேன் செய்து கொள்ளலாம். இந்த செயலியை திறந்து, வீட்டில் ஆல்பத்தில் உள்ள ஒளிப்படங்களை படம் பிடிக்கத்துவங்க வேண்டும். உடனே போன் திரையில் நான்கு வட்டங்கள் தோன்றும். நடுவே ஒரு வட்டம் இருக்கும். நான்கு வட்டங்களும் நடு வட்டத்தில் வரும் வகையில் செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த படம் முழுவதும் ஸ்கேன் ஆகிவிடும். அவற்றில் உங்களுக்கு தேவையான படத்தை சேமித்துக்கொள்ளலாம். இதன் மூலம் பழைய படங்களை எளிதாக டிஜிட்டல்மயமாக்கி விடலாம்.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இரண்டிலும் செயல்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு:https://support.google.com/photos/answer/7177983?visit_id=0-636153165166706948-363832123&p=scan_help&rd=1

இது ஆப்பிளின் ஸ்மார்ட் கண்ணாடி

apple-mirrorஸ்மார்ட்போன்கள் வரிசையில் ’ஸ்மார்ட் கண்ணாடிகள்’ உருவாகத்துவங்கியிருப்பது உங்களுக்குத்தெரியுமா? சந்தேகம் எனில் இணையத்தில் ஸ்மார்ட் கண்ணாடிகள் என ஆங்கிலத்தில் தேடிப்பாருங்கள், வரிசையாக ஆண்ட்ராய்டு கண்ணாடிகள் தொடர்பான முடிவுகளாக வந்து நிற்கும். எல்லாமே வழக்கமான முகம் பார்க்கும் கண்ணாடியை ராஸ்ப்பெரி பை போன்ற சின்ன கம்ப்யூட்டர்கள் மற்றும் ஆண்ட்ராய்டு இடைமுகத்தை கொண்டு ஸ்மார்ட் கண்ணாடியாக மாற்றி இருப்பவை. இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளில் நேரம் பார்க்கலாம், வானிலை அறியலாம். இன்னும் பலவற்றை செய்யலாம்.
இப்போது இந்த வரிசையில் ஆப்பிள் கண்ணாடியும் அறிமுகமாகி உள்ளது. ஆனால் ஒன்று, இந்த கண்ணாடி ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு அல்ல. ஆப்பிளின் சமீபத்திய ஐஓஎஸ் 10 இடைமுகத்தை கொண்டு ரபேல் டைமெக் என்பவர் உருவாக்கிய ஸ்மார்ட் முகம் பார்க்கும் கண்ணாடி.
பெரிய அளவிலான ஐபோன் அல்லது ஐபேடு தோற்றம் தரும் இந்த கண்ணாடியில் இரு பக்கமும் ஐபோனில் பார்க்க கூடிய ஐகான்கள் பலவற்றை பார்க்கலாம். அந்த ஐகான்களை தொட்டு இயக்கவும் செய்யலாம். இந்த ஐகான்கள் மூலம் உபெர் சேவையை அழைக்கலாம். நெட்பிளக்சில் படம் பார்க்கலாம். பேஸ்புக் பதிவுகளுக்கு பதில் போடலாம், குறுஞ்செய்திகளை படிக்கலாம். செய்திகளை அறியலாம், வீட்டில் உள்ள பொருட்களையும் இயக்கலாம்.
கொஞ்சம் நேரம் பயன்படுத்தாமல் விட்டால், கண்ணாடி தூங்கப்போய்விடும். அதாவது ஐகான்கள் எல்லாம் மறைந்து சாதாரண கண்ணாடியாகிவிடும். ஆனால் மறுபடியும் கண்ணாடியில் தொட்டால் போதும் எல்லா ஐகான்களும் மீண்டும் உயிர்பெற்றுவிடும். ஐகான்களை இஷ்டம் போல இடம் மாற்றிக்கொள்ளலாம்.
வடிவமைப்பாளாரான ரபேல் சொந்த ஆர்வத்தில் இந்த ஸ்மார்ட் கண்ணாடியை உருவாக்கி இருக்கிறார். இது வர்த்தக நோக்கிலானது அல்லம் தனிப்பட்ட திட்டம் என்று அவர் கூறுகிறார். இந்த கண்ணாடி பற்றி மேலும் அறிய:http://www.rafaeldymek.com/

ஸ்கைப் சேவையில் புதிய வசதி

ஸ்கைப் சேவைக்கான புதிய வசதியை மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதி மூலம் ஸ்கைப் சேவையில் உறுப்பினராக பதிவு செய்யாமலேயே அதை பயன்படுத்தி இணையம் முலம் உரையாடலாம். ஸ்கைப் இணையதளம் மூலம் இந்த வசதியை அணுகலாம். உடனே பிரத்யேகமான இணைய முகவரி ஒன்று அளிக்கப்படும். இதை யாருடன் வேண்டுமானாலும் பகிர்ந்து கொண்டு ஸ்கைப் மூலம் உரையாடலாம்.
இதன் மூலம் ஸ்கைப் விருந்தாளியாக ஸ்கைப் பயனாளிகளுடன் உரையாடலாம். ஆனால் இந்த முகவரி 24 மணி நேரம் தான் இருக்கும். டெக்ஸ் சாட், குரல் வழி உரையாடல், வீடியோ சேவை என எல்லாவற்றையும் பயன்படுத்தலாம். ஸ்கைப் திரை மற்றும் கோப்பு பகிர்வு வசதியையும் அணுக முடியும். எனினும் தொலைபேசி எண்களை அழைத்து பேச முடியாது.

இந்திய சட்டங்களை எளிதாக புரிய வைக்கும் இணையதளம்!

44812-jxjagxhusx-1478365135இந்திய சட்டம் தொடர்பான தகவல்கள் தேவை எனில் கைகொடுக்க கூடிய  இணையதளங்கள் இருக்கின்றன. சட்டப்பிரிவுகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளிட்ட விவரங்களை கூட எளிதாக தேடிக்கொள்ளலாம். ஆனால், சாமானியர்களுக்கு சட்டம் நுணுக்கங்கள் மட்டும் அல்ல, சட்டப்பிரிவுகளின் வாசகங்களே கூட குழப்பத்தை அளிக்கலாம். சட்டங்கள் அவற்றுக்கே உரிய தனித்துவமான மொழியில் உருவாக்கப்பட்டிருப்பது தான் இதற்கு காரணம். சட்டம் தொடர்பான துறைகளில் புழங்கி கொண்டிருப்பவர்களுக்கு இவற்றை புரிந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை.

இந்த நிலையில் தான் நியாய.இன் எனும் புதிய இணையதளம் அறிமுகம் ஆகியிருக்கிறது. இந்திய சட்டங்களுக்கான இணைய களஞ்சியமாக விளங்க வேண்டும் எனும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தளத்தின் சிறப்பம்சம், சட்ட ஷரத்துக்களை எல்லோருக்கும் புரியக்கூடிய வகையில் எளிமையான ஆங்கில விளக்கத்துடன் புரிய வைப்பது தான். அதாவது சட்ட வாசகங்களை புரியக்கூடிய வாசங்களாக இது மொழிபெயர்த்து தருகிறது.

இதுவரை 773 மத்திய சட்டங்களுக்கான விளக்கம் மற்றும் குற்றவியல் சட்டங்களின் 10 பிரிவுகளுக்கான வழிகாட்டி விளக்கம் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளன. முகப்பு பக்கத்திலேயே இதற்கான ஐகான்கள் இடம்பெற்றுள்ளன. சட்டப்பிரிவுகளுக்கான பட்டியலும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பிரிவை கிள்க் செய்தவுடன், அதற்கான விளக்கத்தை காணலாம். சட்டப்பிரிவுகள் எனில் இடப்பக்கம் மூல ஷரத்துகளும், அருகே அவற்றுக்கான எளிய ஆங்கில விளக்கமும் இடம்பெறுகின்றன. முக்கியமான சொற்களுக்கான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன.

வழிகாட்டி பகுதியில், அனைவருக்கும் கல்வி உரிமை, குடும்ப வன்முறை, பாலியல் தொல்லை, ஊழலுக்கு எதிரான பிரிவு உள்ளிட்டவற்றுக்கான விரிவான விளக்கத்தை காணலாம். சட்டம் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களும் இடம்பெற்றுள்ளன.

இணைய உலகில் எல்லாமே பயனர் நோக்கிலேயே அமையும் போது சட்ட்த்திற்கான விளக்கத்தையும் பயனர் நோக்கில் அளிக்கிறது இந்த தளம். சட்டங்கள் பயனர்களை மனதில் கொண்டு எழுதப்படவில்லை, அந்தக்குறையை போக்கவே இந்த முயற்சி என்கிறார் இந்த தளத்தை உருவாக்கிய குழுவில் முக்கிய பங்கு வகிக்கும் தில்லியை சேர்ந்த வழக்கறிஞரான ஸ்ரீஜோனி சென். பெங்களூரு மற்றும் அமெரிக்காவில் சட்டம்க் பயின்ற சென், மெக்கின்ஸி நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். கடந்த ஆண்டு தில்லியில் சட்டம் தொடர்பான் ஆய்வு மையமான விதி செண்டரில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, சட்ட்த்தை எளிமையாக புரிய வைக்க உதவும் இணையதளத்தை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்ட்தாக ஸ்க்ரோல்.இன் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். நீர் தொடர்பான முக்கிய தகவல்களை அளிக்கும் இந்தியா வாட்டர் போர்ட்டல் தளத்தை நடத்தி வரும் ரோகினி நிலேகனியுடன் இது பற்றி விவாதித்து போது, சட்டத்துறைக்கான இதே போன்ற இணையதளம் தேவை எனும் உணர்வு வலுப்பட்டது.  அதன் பிறகு 3 வழக்கறிஞர்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் இணைந்து தளத்தை அமைத்துள்ளார். நாடு முழுவதும் உள்ள சட்ட மாணவர்கள், சட்ட வல்லுனர்கள் இதன் உருவாக்கத்தில் உதவியுள்ளதாக சென் குறிப்பிடுகிறார்.

இந்திய சட்டங்களுக்கான இணைய களஞ்சியமாக இந்த தளம் உருவாக வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்கிறார் அவர். இந்த தளத்தில் இணையவாசிகளும் பங்கேற்கலாம். இதில் உள்ள விளக்கத்தை மேம்படுத்த அல்லது திருத்தும் முயற்சியில் பங்களிப்பு செலுத்தலாம். இவை தளத்தின் குழுவால் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும். இந்த தளத்தில் இன்னமும் முழுமையாக எல்லா சட்டங்களும் இடம்பெறவில்லை. அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆங்கிலத்தில் அமைந்திருந்தாலும் எதிர்காலத்தில் மாநில மொழிகளிலும் சேவை வழங்கும் திட்டம் இருகிறது என்கிறார் சென். அதே போல மாநில சட்டங்கள் குறித்து தனி கவனம் செலுத்த இருப்பதாகவும், சட்டம் தொடர்பான அறிவிக்கைகள், சுற்றறிக்கைகள் போன்றவையும் இதில் இடம்பெறும் என்கிறார் அவர்.

சட்டம் தொடர்பான அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ள இந்த தளம் உதவியாக இருக்கும். ஒரு குற்றத்தை புகார் செய்வதுடன் என்ன நடக்கிறது, கைது செய்யப்படும் போது ஒருவரின் உரிமைகள் என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களையும் அறியலாம். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து பொதுவாக மக்கள் மனதில் எழக்கூடிய கேள்விகளை தேர்வு செய்துள்ளனர்.

ஆனால் இதில் உள்ள விளக்கங்கள் சட்ட ஆலோசனையும் அல்ல, அவற்றுக்கு மாற்றும் அல்ல, இவை தகவல் நோக்கிலானது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

இணையதள முகவரி: http://nyaaya.in/

 

 

ஆயிரம் இணையதளங்கள் காட்டும் இணையதளம்

fluckதளம் புதிது; ஆயிரம் இணையதளங்கள்

இணைய உலகில் பத்து முன்னணி இணையதளங்கள், 100 முன்னணி தளங்கள் போன்ற பட்டியலை பல முறை பார்த்திருக்கிறோம். புதிய இணையதளமான பிளக்.காம் ஒரே இடத்தில் ஆயிரம் இணையதளங்களை தொகுத்து தந்து வியக்க வைக்கிறது. இணையத்தில் இருந்து திரட்டப்பட்ட ஆயிரம் இணையதளங்கள் இதன் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. மேல் பாதியில் தளங்களின் முகவரிகள் அவற்றின் லோகோவாக கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், செய்தி, ஷாப்பிங், பொழுதுபோக்கு என பல்வேறு தலைப்புகளின் கீழ் இணையதளங்களின் முகவரிகள் மட்டும் வரிசையாக இடம்பெற்றுள்ளன. கீழ்ப்பகுதியில் மீண்டும் தளங்களின் லோகோக்கள் அணிவகுக்கின்றன. எந்த இணைப்பை கிளிக் செய்தாலும் அந்த இணையதளத்திற்கான பக்கம் அருகே திறக்கப்படுகிறது. மொத்தம் ஆயிரம் இணையதளங்கள் இப்படி முகப்பு பக்கத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. பிரபலமான யூடியூப், அமேசான், கூகுள்,டிவிட்டர் உள்ளிட்ட அனைத்து முன்னணி தளங்களையும் பார்க்க முடிகிறது. பெரிய சேவை என்று சொல்ல முடியாது. சின்ன புதுமை தான், ஆனால் அருமையாக இருக்கிறது.

இணையதள முகவரி: http://fulck.com/


unnamed
செயலி புதிது; தினம் ஒரு இலக்கு

பெங்களூருவைச்சேர்ந்த இளந்தளிர்கள் பிரதீக் மகேஷ்(12) மற்றும் ப்ரியால் ஜெயின்(13) இணைந்து சமூக நோக்கிலான செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். விபிளெட்ஜ் எனும் பெயரிலான அந்த செயலி, பயனாளிகளை சின்ன சின்ன சமூக நோக்கிலான செயல்களில் ஈடுபட வைக்கிறது. பத்து மரம் நடுவது, பொது போக்குவரத்தை பயன்படுத்துவது போன்ற செயல்களை சிறிய இலக்குகளாக முன்வைக்கிறது இந்த செயலி.
இவை ஒவ்வொன்றையும் நிறைவேற்றினால் அதற்கான பரிசுப்புள்ளிகள் அளிக்க்ப்படுகின்றன. ஒரு இலக்கை செய்து முடித்தவுடன் அதை பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் மற்றவர்களையும் சமூக நோக்கிலான செயல்களில் ஈடுபட வைக்கலாம். இதில் இலக்குகளாக அளிக்கப்படும் செய்லகளை பிரபலமாக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் திட்டமிட்டப்பட்டுள்ளது.
கல்வி சார்ந்த தொடக்க நிறுவனமான அகாட் கில்ட் (cadGild) வழங்கிய செயலி உருவாக்க பயிற்சியில் பங்கேற்றதன் மூலம் பிரதிக்கும் ,பிரியாவும் இந்த செயலியை உருவாக்கியுள்ளனர். ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்: https://play.google.com/store/apps/details?id=com.acadgild.vpledge&hl=en

வீடியோ புதிது; உடற்பயிற்சி மூலம் இயங்கும் கம்ப்யூட்டர்

figure1-01
கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கம்ப்யூட்டர் பயன்பாட்டை மேலும் சுவாரஸ்யமாக்கும் வகையில் புதிய முறை ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த முறைபடி கம்ப்யூட்டரை மவுஸ் கொண்டு இயக்குவதற்கு பதில், கால்களின் அசைவுகள் மூலம் இயக்க வேண்டும். அதாவது உடற்பயிற்சி செய்வது அசைவுகள் மூலமே கம்ப்யூட்டரை இயக்க முடியும்.
ஏற்கனவே கம்ப்யூட்டர் உலகில் நின்று கொண்டு கம்ப்யூட்டரை பயன்படுத்தும் ஸ்டாண்டிங் டெஸ்க் முறை பிரபலமாக இருக்கிறது. உட்கார்ர்ந்து கொண்டே கம்ப்யூட்டரை இயக்குவதால் ஏற்படக்கூடியா பாதிப்புகளை இது போக்குகிறது.
இதன் அடுத்த கட்டமாக, நின்று கொண்டே, கால்களால் கம்ப்யூட்டரை இயக்கும் முறையை கனடா ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதற்கான விஷேச மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் சென்சார் பொருத்தப்பட்ட ஷூக்களை அணிந்து கொள்ள வேண்டும். இந்த ஷூவால் ஆங்காங்கே தட்டினால் அது மவுஸ் கிளிக்காக புரிந்து கொள்ளப்பட்டு கம்ப்யூட்டர் இயங்கும். மேஜை கிழ் பொருத்தப்பட்டுள்ள காமீரா மூலம் கால் பாதங்களின் நிலை உணரப்பட்டு மென்பொருள் அதற்கேற்ப அனுமதி அளிக்கும்.கம்ப்யூட்டருக்குள் நுழைவும், வெளியேறுவும் இப்படி கால்களை பயன்படுத்துவது நல்ல உடற்பயிற்சியாக அமையும் என கருதப்படுகிறது. அது மட்டும் அல்ல, பேஸ்புக் போன்ற சமூக ஊடக தள பயன்பாட்டை குறைப்பதற்காக அந்த தளங்களை, நீண்ட நேரம் நின்று பயன்படுத்த முடியாத போசில் மட்டுமே பயன்படுத்தும்படி அமைத்துக்கொள்ளலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். எப்படி இருக்கிறது!

டேப்-கிலிக்-கிளிக் எனும் பெயரிலான இந்த முறை எப்படி செயல்படுகிறது என்பதற்கான வீடியோ விளக்கம்: https://youtu.be/pqycjWHoI2w

அகதிகளுக்கு நேசக்கரம் நீட்டும் தளம்

ewx
ஐரோப்பாவில் தஞ்சம் அடைந்துள்ள சிரியா அகதிகளுக்கு மனிதநேய அடிப்படையில் நேசக்கரம் நீட்டுவதற்காக இணையம் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்களால் இயன்ற சிறிய உதவிகளை அளிக்க தொழில்நுட்ப ஆர்வலர்கள் முயன்று வருகின்றனர்.இந்த நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள எக்ஸ்பாட்.ஆர்க்
(http://expatt.org/en/ )எனும் இணையதளம் அகதிகளுக்கான வேலைவாய்ப்பை பெற்றுத்தர முயல்கிறது.

இந்த தளத்தின் மூலம் அகதிகள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் திறன்களை பதிவு செய்து கொள்ளலாம். அகதிகளை பணிக்கு அமர்த்திக்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் இவர்களில் பொருத்தமானவர்களை தேர்வு செய்து வாய்ப்பு அளிக்கலாம். தாய்நாட்டை விட்டு வெளியேறி பிற நாடுகளில் தஞ்சம் அடைபவர்களுக்கு அடைக்கலம் கிடைப்பது முதல் பிரச்சனை என்றால் அதன் பிறகு வாழ்வதாரத்தை தேடிக்கொள்வது பெரும் பிரச்சனையாக அமையலாம். அடைக்கலம் தரும் நாடுகளுக்கும் இது சவால் தான்.
இந்த இரண்டையுமே குறைக்கும் வகையில் கடினமாக உழைக்கத்தயாராக உள்ள அகதிகளையும், நிறுவனங்களையும் இணைத்து வைக்கும் இந்த தளத்தை நல்ல இதயம் கொண்ட ஆர்வலர்கள் உருவாக்கியுள்ளனர்.

emford

இணைய விஷமிகளும் வீடியோ பதிலடியும்

இணையம் அற்புதமான அனுபவங்களை தரக்கூடிய அருமையான இடம் தான். ஆனால் எல்லா நேரங்களிலும் இப்படி இருப்பதில்லை. சில நேரங்களில் மனங்கொத்திப்பறவைகளாக மாறும் மனிதர்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள் இதயத்தை நொறுக்கிவிடக்கூடியதாக அமைந்துவிடுகின்றன. டிரால்கள் என சொல்லப்படும் இந்த இணைய விஷமிகள் தனியேவும் தாக்குதல் நடத்துவதுண்டு; குழுவாக சேர்ந்துக்கொண்டு கூட்டுத்தாக்குதல் நடத்துவதும் உண்டு. எப்படி இருந்தாலும் தாக்குதலுக்கு இலக்காகும் அப்பாவிகளுக்கு இதனால் ஏற்படக்கூடிய மன உளைச்சல்களும் பாதிப்புகளும் எல்லையில்லாதது. இதனால் பலர் தூக்கத்தை இழந்து தவித்துள்ளனர். சிலர் இணையத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். இணையத்தின் இருண்ட பக்கத்திற்கான இந்த கசப்பான உதாரணங்கள் நீண்டு கொண்டே இருக்கின்றன.

லண்டனைச்சேர்ந்த இளம் பெண்ணான எம் ஃபோர்ட் அன்மையில் இந்த வகையான கசப்பான அனுபவத்திற்கு இலக்கான போது இணைய விஷமிகளுக்கு பதிலடி தரும் வகையில் வீடியோ ஒன்றை உருவாக்கி பதிவேற்றினார். சபாஷ் சரியான பதிலடி என பாராட்டப்படும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி 60 லட்சம் முறைக்கு மேல் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. அதைவிட முக்கியமாக அந்த வீடியோ இணைய தாக்குதலுக்கு இலக்காக கூடிய எவருக்கும் நம்பிக்கையையும் துணிச்சலையும் தரக்கூடியதாக இருக்கிறது.

எம் போர்ட் பற்றி முதலில் ஒரு சிறு குறிப்பு. மாடலிங் துறையில் இருந்துள்ள அவர் 20 வயதிலேயே அதிலிருந்து ஓய்வு (!) பெற்று திரைப்பட உருவாக்கத்தின் பக்கம் வந்தவர். தன்னை இயல்பான கதை சொல்லி என குறிப்பிடும் இவர் 2014 க்கு பிறகு வீடியோ வலைப்பதிவாளராகி யூடியூப் நட்சத்திரமாக பிரபலமானார். மை பேல் ஸ்கின் எனும் அந்த வலைப்பதிவு மூலம் அவர் அழகு கலை குறிப்புகளை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் போர்ட் மேக்கப் இல்லாத தோற்றத்தில் தனது புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றினார். முகப்பருக்களுடன் தோன்றும் அந்த புகைப்படத்தில் இயல்பாக காட்சி தருவதற்காக அவர் பாராட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக இணைய வெளியில் வறுத்தெடுக்கப்பட்டார். மேக்கப் இல்லாத கோலத்திற்காகவும் ,முகப்பரு தோற்றத்திற்காகவும் அவர் கடுமையாக வசைபாடப்பட்டார். இவரது முகத்தை நேராக பார்க்க கூட முடியவில்லை, இவர் முகத்தை கழுவவே மாட்டாரா? என்பது போல மிக மோசமான வகையில் கருத்துக்கள் அமைந்திருந்தன. இது போல ஆயிரக்கணக்கில் கருத்துக்கள் குவிந்தன. இந்த கருத்துக்களை படிக்க கூட வேண்டாம், பார்த்தாலே மனதை வலிக்கச்செய்யும் வகையில் இருந்தன.

இவற்றை தொடர்ச்சியாக படித்துக்கொண்டிருந்த போர்ட் எந்த அளவுக்கு வேதனைக்கு ஆளாகியிருப்பார் என புரிந்து கொள்ளலாம். ஆனால் அவர் கண்ணீர் வீட்டு கதறவில்லை; ஆவேசமாக பதில் தாக்குதல் நடத்தவில்லை. இந்த வேதனையை மற்றவர்களுக்கும் குறிப்பாக , வசைபாடியவர்களுக்கு உணர்த்தும் வகையில் ஒரு வீடியோ படத்தை உருவாக்கினார். முகப்பரு கோலத்துடன் அவர் காட்சி அளிக்கும் அந்த வீடியோவில், அதைப்பார்த்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் வரிசையாக வாசகங்களாக இடம்பெற்றன. அந்த கருத்துக்களால் ஏற்படக்கூடிய வலியை அவரது முகபாவனைகள் உணர்த்தின. அதன் பிறகு அவர் மேக்கப் சாதானங்கள் மூலம அழகு செய்து கொண்டார். அப்போது அவரது அழகை பாராட்டும் வகையிலான கருத்துக்கள் திரையில் தோன்றின. ஆனால் அதன் பிறகு எல்லாவற்றுக்கும் மேக்கப் தான் காரணம், அழகில்லாத தோற்றத்தை மறைக்கிறார் என்பது போல மோசமான கருத்துக்கள் தோன்றின. அப்போது அவரது முகத்தில் கண்ணீர் வழிகிறது. இதை பார்க்கும் போது பார்வையாளர்கள் நெஞ்சமும் உலுக்கப்படுகிறது.

இறுதிக்காட்சியில் அவர் கண்களை துடைத்துக்கொள்கிறார். அப்போது ,நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் எனும் வாசகம் திரையில் தோன்றுகிறது. உங்கள் அழகை மற்றவர்கள் தீர்மானிக்க அனுமதிக்காதீர்கள் எனும் ஊக்கமான வரிகளுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.
சமூக ஊடகங்கள் உண்டாகும் மிதமிஞ்சிய எதிர்பார்ப்பின் பாதிப்பு பற்றி உணர்த்துவதற்காக இந்த வீடியோவை உருவாக்கியதால் போர்ட் கூறியிருக்கிறார்.
நீங்கள் அருவறுப்பாக இருக்கிறீர்கள் (YOULOOKDISGUSTING ) எனும் தலைப்பிலான வீடியோ மூலம் அவர் மற்றவர்கள் தோற்றத்தை விமர்சிப்பவர்களுக்கு எல்லாம் அழகாக பதிலடி கொடுத்திருப்பதாக பாராட்டப்படுகிறார்.

எம் போர்ட் உருவாக்கிய வீடியோ: http://mypaleskin.blogspot.com.au/2015/07/you-look-disgusting.html#.VZt_7bV6fCP

silicon
தளம் புதிது; சிலிக்கான் அகராதி

இணைய அகராதிகளுக்கு குறைவில்லை. ஆங்கில அகராதிகளும் அநேகம் இருக்கின்றன. தமிழ் அகராதிகளும் இருக்கின்றன. இப்போது புதிதாக ஒரு இணைய அகராதி உருவாகி இருக்கிறது- சிலிக்கான் வேலி டிக்‌ஷனரி!
சிலிக்கான் வேலி எல்லோருக்கும் தெரியும். தொழில்நுட்ப நிறுவனங்களின் இருப்பிடம் இது. சிலிக்கான் வேலிக்கு என்று பிரத்யேக கலாச்சாரம் உண்டு. அதற்கென தனி மொழி பிரயோகங்களும் உண்டு. இப்படி சிலிக்கான் வேலியில் புழங்கும் வார்த்தைகளுக்கும் , பதங்களுக்கும் பொருள் சொல்லும் அகராதியாக இந்த தளம் விளங்குகிறது. அப்படியே அகராதி நோக்கிலான விளக்கம் என்று சொல்வதற்கில்லை. கொஞ்சம் கேலியும், கிண்டலும் கலந்து சற்றே விமர்சன ரகமாக இவை அமைந்துள்ளன. ஆனால், ரசிக்கும்படி இருக்கிறது.

இணையதள முகவரி: http://svdictionary.com/செயலி புதிது; அலர வைக்கும் அலாரம்

ஸ்மார்ட்போனுக்குள் இருந்தபடி துயிலெழுப்ப உதவும் அலாரம் செயலிகள் தான் எத்தனை வகை. இப்போது அலார்மி எனும் புதியதொரு அலாரம் செயலியும் சேர்ந்திருக்கிறது. உலகிலேயே மிகவும் எரிச்சலுட்டக்கூடிய துயிலெழுப்பும் செயலி என இது தன்னை வர்ணித்துக்கொள்கிறது.
இந்த அலாரம் செயலி தினமும் காலையில் துயிலெழுப்பும் நேரத்திற்கு சரியாக ஒலிக்கும். அந்த வகையில் இது மற்ற செயலிகள் போன்றது தான். ஆனால் இது ஒலிக்கத்துவங்கிய பின் இதை சாதாரணமாக நிறுத்திவிட முடியாது. போனில் ஒரு புகைப்பட்த்தை எழுத்து பதிவேற்றிய பிறகு தான் இது மெளனமாகும். அதுவும் எப்படி தெரியுமா? அலாரமை அமைக்கும் போது நீங்கள் தேர்வு செய்து புகைப்படமாக சமர்பித்த இடத்திற்கு சென்று படமெடுத்தால் தான் இதை நிறுத்த முடியும். அது வரை கத்திக்கொண்டே இருக்கும்- அதனால் அதான் எரிச்சலூட்டும் செயலி என்கிறது. பொறுப்பாக அலாரம் வைத்துவிட்டு அதைவிட பொறுப்பாக அதை அனைத்து விட்டு தூங்கி விடுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=droom.sleepIfUCan&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImRyb29tLnNsZWVwSWZVQ2FuIl0.

யூடியூப் ரகசியம்

டிவியையே கூட கம்ப்யூட்டர் மானிட்டராக மாற்றிக்கொள்ளும் வசதி வந்துவிட்டது. ஆனால் கம்ப்யூட்டர் மானிட்டருக்கு பழக்கப்பட்டவர்களுக்கு டிவி திரையில் மெனுவை பார்த்து பயன்படுத்துவது சிக்கலாக இருக்கலாம். ஆனால் டிவி திரையில் யூடியூப் வீட்டியோக்களை பார்க்க விரும்பினால் இந்த பிரச்சனைக்கு சுலபமான தீர்வு இருக்கிறது. https://www.youtube.com/tv#/browse-sets?c=FEwhat_to_watch எனும் முகவரிக்கு சென்று டிவிக்கு பொருத்தமான இடைமுகத்தை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

கேட்ஜெட் புதிது; கம்ப்யூட்டர் ஸ்டிக்
சிப் தயாரிப்பில் பிரபலமாக இருக்கும் இண்டெல் நிறுவனம் தனது பிசி ஆன் எ ஸ்டிக் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பெண்டிரைவ் போல இருக்கும் இந்த சாதனத்தை டிவி திரை அல்லது மானிட்டருடன் இணைத்து கம்ப்யூட்டர் போல பயன்படுத்திக்கொள்ளலாம். சேமித்திறன், வை-பை வசதி என எல்லாமும் இருக்கிறது. லேப்டாப் போல எங்கும் பயன்படுத்தலாம், ஆனால் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சென்று விடலாம். மின் வணிக தளம் மூலம் வாங்கலாம் என இண்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது. +