Tag Archives: word

இணைய இசை அகராதி

OnMusicDictionary-webஇணையத்தில் இசை தொடர்பான இணையதளங்களும், சேவைகளும் அநேகம் உள்ளன. அதே போல புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உதவும் இணைய அகராரிதிகளும் நிறையவே இருக்கின்றன. இந்த இரண்டு அம்சங்களையும் ஒன்றாக இணைந்ததாக ஆன்மியூசிக் டிக்‌ஷனரி தளம் அமைந்துள்ளது. அதாவது இசைக்கான இணைய அகராதியாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

வழக்கமான இணைய அகராதிகள் போலவே இதிலும் சொற்களுக்கான பொருளை தேடலாம். ஆனால், இசை தொடர்பான சொற்களை மட்டுமே இதில் தேட முடியும். இசையில் ஆர்வம் கொண்டவர்கள் அல்லது புதிதாக இசை பயில்பவர்களுக்கு இந்த அகராதி பயனுள்ளதாக இருக்கும்.

ஏதேனும் ஒரு இசைச்சொல் தொடர்பான விளக்கம் தேவை எனில் இதில் தேடிக்கொள்ளலாம். தேடப்படும் சொல்லுக்கான விரிவான விளக்கத்துடன் அதற்கான இசைக்குறிப்பும் இடம்பெறுகிறது. பல சொற்களுடன் அதற்கான ஒலிக்குறிப்பை கேட்கும் வசதி இருக்கிறது. உதாரணமாக இசைக்கருவி தொடர்பான தேடலில், அந்த கருவியின் ஒலி நயத்தையும் அறியலாம்.

இசைக்கருவிகள், இசை அமைப்பாளர்கள் சார்ந்தும் தேடும் வசதி உள்ளது. அகர வரிசையிலும் தேடலாம். இவைத்தவிர முகப்பு பக்கத்திலேயே தினம் ஒரு இசைச்சொல் விளக்கப்படுகிறது.

இணைய முகவரி: https://dictionary.onmusic.org/

 

செயலி புதிது: தயக்கத்தை வெல்ல ஒரு செயலி

ஸ்டெப்ஸ் எனும் பெயரில் ஐபோனுக்கான புதுமையான செயலி ஒன்று அறிமுகமாகி உள்ளது. இந்த செயலி சமுக தயக்கங்களை உடைத்தெறிய உதவுகிறது.

அறிமுகம் இல்லாதவர்களுடன் பேச தயங்குவது, புதிய இடங்களுக்கு செல்வது, நிராகரிப்புகளை எதிர்கொள்ள அஞ்சுவது என ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான சமூக சங்கடம் அல்லது தயக்கம் இருக்கலாம். கூட்டுக்குள் அடைந்து கிடக்காமல் தைரியமாக இத்தகைய சூழலை எதிர்கொள்வதே இந்த தயக்கங்களை வெல்ல ஏற்ற வழி என சொல்லப்படுகிறது. இது வெளிப்படுத்திக்கொள்ளும் சிகிச்சை என அழைக்கப்படுகிறது.

ஒருவர் அஞ்சும் சூழல் தொடர்பான சிறிய செயல்களை மேற்கொள்வதன் மூலம் அந்த சூழலுக்கு பழகிக்கொள்ள தயார் செய்யும் வகையில் இந்த சிகிச்சை செயல்படுகிறது. ஆனால் இந்த சிகிச்சை முறையை சுவாரஸ்யமான வழியில் மேற்கொள்ள உதவும் வகையில் ஸ்டெப்ஸ் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.’

இந்த செயலி சமுக தயக்கங்களை வெல்ல வழி செய்யும் சிறிய செயல்களை பல்வேறு தலைப்புகளில் பரிந்துரைக்கிறது. அவற்றில் இருந்து விரும்பியதை தேர்வு செய்தால் அது தொடர்பாக நினைவூட்டி ஊக்கம் அளிக்கிறது. பின்னர் அந்த செயலில் ஈடுபட்டு அந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். நண்பர்களையும் இந்த செயலில் ஈடுபட அழைக்கலாம்.

மேலும் தகவல்களுக்கு: https://www.stepsapp.xyz/

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது.

menu

விண்டோசில் ஸ்டார்ட் மெனு பிறந்த கதை

விண்டோஸ் 10 இயங்குதளம் பற்றியும் அதன் பல்வேறு அம்சங்கள் பற்றியும் இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. பரவலாக எதிர்பார்க்கபட்ட புதிய பிரவுசர் எட்ஜ், டிஜிட்டல் உதவியாளர் கார்ட்னா ஆகிய அம்சங்களோடு, ஸ்டார்ட்மெனு வசதி அதன் பழைய வடிவில் விண்டோசுக்கு திரும்பியிருப்பதும் முக்கியமாக குறிப்பிடப்படுகிறது.

ஸ்டார்ட்மெனு வசதி விண்டோஸ் 95 –ல் முதலில் அறிமுகமானது.அதன் பிறகு கிட்டத்தட்ட விண்டோஸ் இயங்குதளத்தின் அடையாள அம்சமாகவே மாறிவிட்டது. கோடிக்கணக்கான விண்டோஸ் பயனாளிகளை பொறுத்தவரை ஸ்டார்ட்மெனு என்பது விண்டோசுக்கான நுழைவு வாயில் போன்றது தான். பழக்கமான வீட்டில் வாசல் கதவைத்திறந்து கொண்டு உள்ளே நுழைந்து ஒவ்வொரு அறையாக இயல்பாக செல்வது போல விண்டோசில் ஸ்டார்ட்மெனுவை வரவைத்து தாங்கள் விரும்பிய புரோகிராம்களையும், ஆவணங்களையும் எளிதாக அணுகுவதி பயனாளிகளுக்கு சாத்தியமானது. எத்தனை பேர் ஸ்டார்ட்மெனுவின் முக்கியவத்துவத்தை உணர்ந்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால், பயனாளிகளுக்கு நட்பான இயங்குதளம் என பாராட்டப்படும் விண்டோசுக்கு அந்த பெருமையை பெற்றுத்தந்ததில் ஸ்டார்ட்மெனு அம்சத்திற்கு கணிசமான பங்கு இருக்கிறது.
1993 முதல் மாறாமல் இருக்கும் இந்த அம்சத்தில் சின்னதாக புரட்சி செய்வதாக நினைத்து விண்டோஸ் 8-ல் மைக்ரோசாப்ட் கையை வைத்து ஸ்டார்ட் ஸ்கிரீன் வசதியை கொண்டு வந்த போது பயனாளிகள் ,அட நம்ம அபிமான அம்சம் எங்கே போச்சு என அதிருப்திக்கு இலக்கானார்கள். விண்டோஸ் -8 எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் போக இதுவும் முக்கிய காரணம்.

இப்போது, விண்டோஸ் 10 வெர்ஷனில் இந்த அம்சம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

விண்டோஸ் எவ்வளவோ மாறிவிட்டது. விண்டோஸ் மட்டும் கம்ப்யூட்டர் உலகமே மிகவும் மாறி முன்னேறி வந்துள்ளது. கையடக்க கம்ப்யூட்டர்களாக ஸ்மார்ட்போன்கள் அவதாரம் எடுத்து இணைய உலகம் ஆண்ட்ராய்டு மயமாகி கொண்டிருக்கிறது. அப்படி இருக்க ஒரு பழைய அம்சத்தில் கொண்டாட என்ன இருக்கிறது என கேட்கலாம்.
22 ஆண்டுகள் ஆன பிறகும் ஸ்டார்ட்மெனுவை விண்டோசில் இருந்து தூக்கி வீச முடியாமல் இருப்பது ஏன் என்றும் கேட்கலாம்.

இங்கு தான் விஷயமே இருக்கிறது. ஸ்டார்ட்மெனு வெறும் ஒரு அம்சம் மட்டும் அல்ல; அது மென்பொருள் வடிவமைப்பின் முக்கியத்துவத்தை அழகாக உணர்த்தும் ஒரு அம்சம்; அதோடு பயன்பாட்டுத்தன்மை எனும் கோட்பாட்டின் அடையாளம் என்றும் சொல்லலாம்.
விண்டோஸ் மென்பொருள் வடிவமப்பில் இது சின்ன விஷயம் தான்; ஆனால் இந்த சின்ன விஷயம் பின்னே ஒரு சுவாரஸ்யமான கதை இருப்பது தெரியுமா?

அந்த கதையின் நாயகன் வடிவமைப்பாளரான டேனி ஆரன்.முன்னால் மைக்ரோசாப்ட் ஊழியரான இவர் தான் ஸ்டார்ட்மெனுவின் பிரம்மா. 1993 ல் இவர் மைக்ரோசாப்டில் பணிக்கு சேர்ந்தார். பழக்கவழக்க உளவியல் வல்லுனராக பயிற்சி பெற்ற செழுமையான ஆரனிடம் விண்டோஸ் இயங்குதளத்தின் பயனர் இடைமுகத்தை மெருகேற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதன் பொருள் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துவதை சகலமானவருக்கும் மேலும் எளிமையாக்கி தரும் பணியாக இது அமைந்தது.
ஆரன் ஏற்கனவே சிம்பென்சி குரங்குகளுக்கு பேசும் திறன் பயிற்சில் ஈடுபட்டவர். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக அவர் சிம்பென்சிகளுடன் தொடர்பு கொள்வதற்கான சாதனம் ஒன்றை உருவாக்கினார். சிம்பென்சிகளுக்கு அவரால் எதையும் கற்றுத்தர முடியவில்லை என்றாலும் , இந்த ,முயற்சியின் மூலம் அவர் பயன்பாட்டுத்தன்மை பற்றிய முக்கிய குறிப்புகளை தெரிந்து கொண்டிருந்தார்.

விண்டோஸ் இயங்குதளம் தொடர்பான பயனாளிகள் அனுபவம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்த போது இந்த பாடம் தான அவருக்கு கைகொடுத்தது.
அவரின் கீழ் பணியாற்றிய குழுவினர் விண்டோஸ் இயங்குதளத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளிடம் கொடுத்து சோதனை செய்து கொண்டிருந்தனர்.அநேகமாக எல்லா பயனாளிகளுமே ஒரு சின்ன டாஸ்க்கை கூட செய்து முடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தனர். அதாவது அவர்களால் விண்டோசில் இருந்த அம்சங்களுக்குள் எளிதாக சென்றடைய முடியவில்லை. இந்த தடுமாற்றத்தை பார்த்த மற்ற புரோகிராமர்கள் நொந்து போயினர். பயனாளிகள் இவ்வளவு முட்டாள்களாக இருக்கின்றனரே என கோபம் அடைந்தனர்.
ஆனால் ஆரன் மட்டும் பிரச்சனை பயனாளிகளிடம் அல்ல; விண்டோசில் என புரிந்து கொண்டார். அதிலும் சோதனையில் பங்கேற்ற ஒருவரிடம் பேசிப்பார்த்த போது அவர் விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கில் பொறியாளராக இருப்பவர் என தெரிந்து கொண்டார். போயிங் பொறியாளரே விண்டோஸ் உள்ளே எளிதாக உலா வர முடியாமல் தடுமாறினால் மற்றவர்கள் கதி என்ன யோசித்த ஆரன், இயங்குதளத்தின் அடிக்கடி பயன்படுத்தும் அம்சங்களை எல்லாம் எப்படி பயனாளிகள் கைகளில் எப்படி எளிதாக கிடைக்கச்செய்வது என தீவிரமாக யோசித்தார்.விண்டோசில் இருந்த்து வடிவமைப்பு கோளாறு என உணர்ந்தவர் ஒற்றை பட்டனில் எல்லாவற்றையும் பயனாளிகளுக்கு கிடைக்கச்செய்ய வேண்டும் என நினைத்தார்.

இந்த யோசனையின் பயனாக தான், ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டிருக்கும் புரோகிராம்கள் அனைத்தும் விண்டோஸ் கீழே கட்டம் கட்டமாக தோன்றச்செய்யும் டாஸ்க் பார் வசதியை உருவாக்கினார். அதன் பிறகு எந்த புரோமிராமையும் எளிதாக சென்றடையும் வகையில் டாஸ்க் பார் அடியில் ஸ்டார்ட்மெனுவை வைத்தார். அவ்வளவு தான் வடிவமைப்பு முழுமையாயிற்று. விண்டோசின் இடது மூளையில் ஆரம்ப கட்டம் போல இருக்கும் இந்த அம்சத்தை கிளிக் செய்தால் போதும் ஏணியில் ஏறுவது போல சரசரவென்று விண்டோசுக்குள் சென்றுவிடலாம்.

இப்படி தான் ஸ்டார்ட்மெனு விண்டோசில் அறிமுகமானது.
ஆரன் பின்னர் மைக்ரோசாப்டில் இருந்து விலகிச்சென்றுவிட்டார். ஆனால் இந்த சின்ன கண்டுபிடிப்பிற்கான காப்புரிமை அவரிடம் தான் இன்னமும் இருக்கிறது. இந்த கண்டுபிடிப்பு பற்றி அவர் தனது குறிப்புகளை சமீபத்தில் இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். பயனாளிகள் அனுபவத்தில் பாடமாக விளங்க கூடிய அந்த குறிப்பைக்காண: https://881f64c278cb1349c96072c92810513d84a02339-www.googledrive.com/host/0ByD4nlnF8T9Takl3eGFxQTlrNWM

oran
தளம் புதிது; வீடியோ துண்டு

இணையத்தில் பார்க்க கூடிய பெரும்பாலான வீடியோக்கள் குவிக் பைட் ரகம் தான். அதாவது நிமிடக்கணக்கில் ஓடக்கூடியவை தான். யூடியூப்பை எடுத்துக்கொண்டால் அதன் வீடீயோக்களின் சராசரி நேரம் 3 முதல் 5 நிமிடங்கள் தான். அதிகபட்சம் போனால் பத்து நிமிடங்களில் அநேக வீடியோக்களை பார்த்து ரசித்துவிடலாம். விஷயம் என்ன என்றால் சில நேரங்களில் வீடியோக்களை பகிரும் போது , முழு வீடியோவையும் பார்க்கச்சொல்வதை விட ,அதில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் அடையாளம் காட்டினால் போதும் என்று தோன்றும். இது போன்ற நேரங்களில் கைகொடுக்கிறது வைப்பி இணையதளம் .
வைப்பி தளத்தில் ஒரு வீடியோவின் குறிப்பிட்ட பகுதியை சுட்டிக்காட்டி, அதை மட்டும் பகிர்ந்து கொள்ளலாம். அதுனுடன் கருத்து தெரிவிக்கும் வசதியும் இருப்பதால் , வீடியோவை பார்த்து ரசிப்பவர்கள் உரையாடலிலும் ஈடுபடலாம். வீடியோவுடன் இணைக்கப்பட்ட சின்ன பெட்டியில் டைப் செய்து கருத்துக்களை தெரிவிக்கலாம்.
வைப்பி தளத்தில் ,நீங்கள் விரும்பும் வீடியோவின் இணைய முகவரியை டைப் செய்து அதன் குறிப்பிட்ட பகுதியை அடையாளம் காட்டி பகிர்ந்து கொள்ளலாம்.
பலவிதங்களில் இந்த வீடியோ மெருக்கூட்டல் சேவையை பயன்படுத்தலாம். ஆசிரியர்கள் , கல்வி சார்ந்த வீடியோக்களை பகிர்ந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடலாம்.
வைப்பி தளத்தில் இவ்வாறு ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள வீடியோக்களையும் பார்க்கலாம். இத்தகையை வீடியோக்களை இமெயிலில் அனுப்பி வைக்கவும் கோரலாம்.

இணையதள முகவரி: https://www.vibby.com/

——-
unnamed
செயலி புதிது; குறுஞ்செய்தி பேக்-அப்

வாட்ஸ் அப் வந்த பிறகு குறுஞ்செய்திகளின் (எஸ்.எம்.எஸ்) பயன்பாடு குறைந்துவிட்டது. இருந்தாலும் குறுஞ்செய்திகளை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் எஸ்.எம்.எஸ் பேக்-அப் செயலி அதற்கு உதவுகிறது. இந்த செயலி மூலம் போனில் வரும் குறுஞ்செய்திகளை உங்கள் ஜிமெயில் கணக்கில் சேமித்து கொள்ளலாம். இதற்காக முதலில் ஜிமெயில் செட்டிங்கில் ஐ.எம்.ஏ.பி அம்சத்தை இயக்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு செயலியை இயக்கி இமெயில் முகவரியை சமர்பித்து இயக்க வேண்டும். கொஞ்சம் பழைய செயலி தான். ஆனால் குறுஞ்செய்தி பிரியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதே பணியை செய்யும் வேறு பல செயலிகளும் இருக்கின்றன.
ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=tv.studer.smssync

ஜிமெயிலில் இரட்டை இமெயில்

நீங்கள் ஜிமெயில் பயனாளியா? அப்படி என்றால் உங்களுக்கு இன்னொரு இமெயில் முகவரியும் இருப்பது உங்களுக்குத்தெரியுமா? இதென்ன புதிதா( ரா)க இருக்கிறதே என குழம்ப வேண்டும். ஜிமெயிலில் கணக்கு துவக்கும் எல்லோருக்குமே, அவர்கள் வழக்கமான இமெயில் முகவரியுடன் உதாரணம்@gmail.com அதே பெயரில் உதாரணம்@googlemail.com என இன்னொரு முகவரியும் இருக்கும். உங்கள் சொந்த மெயிலை கொடுக்க வேண்டாம் என நினைக்கும் இடங்களில் இந்த கூகுல்மெயில் முகவரியை சமர்பிக்கலாம். இதற்கு வரும் மெயில்களும் உங்கள் இன்பாக்சில் தான் வந்து சேரும். அதற்கேற்ப ஜிமெயிலில் உள்ள பில்டர் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த இரட்டை இமெயில் முகவரி வசதி பற்றி லேப்னால் தளத்தில் அமீத் அக்ர்வால் விரிவாக எழுதியிருக்கிறார்; http://www.labnol.org/internet/email/gmail-email-alias-two-separate-gmail-address/2388/

—–

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது

oxford

2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’

vape-200x125கடந்த ஆண்டு செல்ஃபீ ஆண்டு என்றால் இந்த ஆண்டு வேப் ஆண்டு தெரியுமா? ஆக்ஸ்போர்ட் அகராதி இப்படி தான் அறிவித்திருக்கிறது. அதாவது 2014 ம் ஆண்டின் சிறந்த சொல்லாக வேப் எனும் வார்த்தையை ஆக்ஸ்போர்ட் அகராதி அங்கீகரித்து மகுடம் சூட்டியுள்ளது.

வேப் (vape) என்றால் என்ன பொருள் என்று பார்ப்பதற்கு இந்த வார்த்தை மகுடம் சூடிய விதம் பற்றி சில தகவல்கள்.
2014 ம் ஆண்டிற்கு குட்பை சொல்லும் கட்டத்தில் இருப்பதால், இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான பட்டியல்களும் வெளியாகத்துவங்கியிருக்கின்றன. ஆண்டு முடிவில் வெளியாகும் பட்டியல்களில் , ஆக்ஸ்போர்டு அகராதியில் ஆண்டின் சிறந்த வார்த்தை பட்டியலும் முக்கியமானது.

புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழககத்தால் நிர்வகிக்கப்படும் ஆக்ஸ்போர்டு அகராதி ஆண்டுதோறும் புதிய வார்த்தைகளை சேர்த்து வருவதுடன் இவற்றில் முன்னிலை பெறும் வார்த்தைக்கு ஆண்டின் சிறந்த சொல்லாக மகுடமும் சூட்டுகிறது.

கடந்த ஆண்டு (2013) சுயபடங்களை குறிக்கும் செல்ஃபி எனும் வார்த்தைக்கு இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு மொத்தம் 900 க்கும் மேற்பட்ட புதிய வார்த்தைகள் அகராதியில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் வேப் எனும் வார்த்தையை ஆண்டின் சிறந்த வார்த்தையாக ஆக்ஸ்போர்ட் அகராதி அறிவித்துள்ளது.

வேப் எனும் வார்த்தைக்கு இ-சிக்ரெட்டால் உண்டாகும் புகையை நுகர்வது என்று ஆக்ஸ்போர்டு அகராதி பொருள் தருகிறது. இ-சிகிரெட்டையும் இந்த சொல் குறிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு ஆங்கில மொழியின் காவலன் என்றும் பிரபலமாக குறிப்பிடப்படுகிறது. புதிய சொற்களை அரவணைத்துக்கொள்வது தான் ஆங்கில மொழியின் பலமாக இருக்கிறது. பொதுவாக பாப் கல்சர் என்று சொல்லப்படும் பேச்சு வழக்கில் பிரபலமாகும் வார்த்தைகளை ஆங்கிலம் தயங்காமல் தன்னோடு சேர்த்துக்கொள்கிறது. இப்படி மொழியில் புதிதாக சேரும் சொற்களை அகராதியில் சேர்த்து அங்கீகாரம் அளித்து மொழியை புதுப்பிக்கும் பணியை ஆக்ஸ்போர்ட் அகராதி உள்ளிட்டவை சிறப்பாகவே செய்து வருகின்றன.

வேப் வார்த்தையில் என்ன சிறப்பு, அது ஏன் ஆண்டின் சிறந்த சொல்லானது என ஆக்ஸ்போர்டு அகராதி வலைப்பதிவில் அழகாக விளக்கப்பட்டுள்ளது. இந்த மகுடத்திற்காக போட்டியிட்ட மற்ற சொற்களிடன் பட்டியலையும் அளித்துள்ளது.

வேப் வார்தையின் பயன்பாடு பொதுமக்கள் உரையாடலில் கணிசமாக அதிகரித்து கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை தொட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் முதல் வேப் கஃபே துவக்கப்பட்டதோடு இதே மாதத்தில் வேப்பிங் எனும் பதம் வாஷிங்டன் போஸ்ட், பிபிசி மற்றும் டெலிகிராப் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

வேப் எனும் வேர்ச்சொல்லின் வரலாறு பற்றியும் கோடிட்டு காட்டி விட்டு, பே (bae ), பட்டெண்டர்(budtender), ஐடிசி (IDC: I don’t care. ) ஸ்லேக்டிவிசம் (slacktivism, ) ஆகிய வார்த்தைகளையும் போட்டியாளராக குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு செல்ஃபீ வார்த்தையை தேர்வு செய்து, அதன் பூர்வீகம் பற்றி எல்லாம் ஆக்ஸ்போர்டு அகராதி விரிவாக குறிப்பிட்டிருந்தது. 2002 ல் ஆஸ்திரேலிய அரட்டை அறையில் தலைகாட்டிய இந்த வார்த்தை 2012ல் இணையத்தில் விஸ்வரூபம் எடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டு செல்ஃபீ என்பது ஸ்மார்ட்போனோடு பிரிக்க முடியாத வார்த்தையாகிவிட்டது.

2014 ல் சிறந்த சொல்லாக தேர்வாகி இருக்கும் வேப் அடுத்த ஆண்டு என்ன ஆகிறது பார்ப்போம்!

ஆக்ஸ்போர்டு ஆண்டின் சிறந்த வார்த்தை பதிவு: http://blog.oxforddictionaries.com/2014/11/oxford-dictionaries-word-year-vape/

——-

ஆங்கில உச்சரிப்பை அறிய ஒரு இணையதளம்.

ஆங்கில மொழியில் புலமையை வளர்த்து கொள்ள விரும்புகிறவர்களுக்கான உப சேவை என்று ஹவ் ஜேசே தளத்தை கொள்ளலாம்.

அதாவது ஆங்கில சொற்களுக்கான அர்தத்தையும் அவற்றின் பயன்பாடு குறித்த விளக்கத்தையும் தரும் இணையதளங்களோடு சேர்த்து இந்த தளத்தையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த தளம் ஆங்கில சொற்களை உச்சரிக்க கற்றுத்தருகிறது.இணைய அகராதிகளில் அப்படி வார்த்தையை அடித்து விட்டு அதற்கான அர்தத்தை பெருகிறோமோ அதே போல இதில் உச்சரிப்பு தேவைப்படும் சொல்லை சமர்பித்தால் அந்த வார்த்தையின் உச்சரிப்பை கேட்க முடியும்.

சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில் சமர்பிக்கப்படும் வார்த்தை ரோஜா வண்ணத்தில் தோன்றுகிறது.அதன் பிறகு அதன் மீது மவுசை நகர்த்தினால் உச்சரிப்பை கேட்கலாம்.

ஒரு சொல் உச்சரிக்கப்படும் விதத்தை அறிந்திருப்பது பேசும் போதும் பேரூதவியாக இருக்கும் தானே.

இணையதள முகவரி;http://www.howjsay.com/

—————–

செல்போனில் வரும் உச்சரிப்பு

ஆங்கில சொற்களின் சரியான உச்சரிப்பை அறிய இன்னொரு சுவாரஸ்யமான சேவை இருக்கிறது. சே இட் என்னும் அந்த சேவை எந்த சொல்லுக்கான உச்சரிப்பு தேவையோ அந்த சொல்லை எஸ் எம் எஸ் வாயிலாக தெரிவித்தால் அதற்கான உச்சரிப்பை செல்போன் அழைப்பு வழியே கேட்டு மகழலாம்.

உச்சரிப்போடு பொருள் விளக்கத்தையும் கோரலாம்.அமெரிக்காவை மையமாக கொண்ட சேவை என்பது தான் ஒரே குறை.

உச்சரிப்பு தொடர்பான மேலும் ஒரு சுவாரஸ்யமான சேவையும் இருக்கிறது.எவால்விங் இங்கிலிஷ் என்னும் இந்த தளத்தில் உலகின் பல பகுதிகளின் ஆங்கில கேட்டறிய முடியும்.

கூகுல் உலக வரைபடத்தின் மீது கிளிக் செய்தால் அந்த பகுதியில் உள்ளவர்களின் ஆங்கில உச்சரிப்பை கேட்க முடியும்.அந்த இடத்தில் பச்சை நிற புள்ளி இருந்தால் ஆறு சொற்களிம் உச்சரிப்பை கேட்கலாம்.சிவப்பு வண்ண புள்ளி என்றால் ஒரு கதை கேட்கலாம்.

பிரிட்டிஷ் நூலகம் உலகம் உழுவதும் உள்ளவர்களை இப்படி ஆங்கில உச்சரிப்புகளை சமர்பிக்க சொல்லி இந்த தளத்தை உருவாக்கியுள்ளது.

இப்போது சம‌ர்பிக்கும் வசதி இல்லாவிட்டலும் உச்சரிப்பை கேட்கலாம்.

இணையதள முகவரி;http://www.bl.uk/evolvingenglish/maplisten.html

———–

ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.

பிடிக்காத சொற்களை பிலாக் செய்யும் சேவை.

கவிஞர் விக்கிரமாதித்யன் இண்டெர்நெட் மீதோ தொழில்நுட்பம் மீதோ அதிக ஆர்வம் கொண்டவர் இல்லை.ஆனால் கூகுல் குரோம் அறிமுகம் செய்துள்ள புதிய வசதியை பார்க்கும் போது அவர் தான் நினைவுக்கு வருகிறார்.அதாவது அவரது கவிதை தான் நினைவுக்கு வருகிறது.

‘அருவியை நீர்விழிச்சி என்று யாரேனும் சொல்லி விட்டால் மனம் பதறுகிறது’என்பது தான் அந்த கவிதை.விக்கிரமாதித்யனின் கவிதைகளில் தமிரபரணியின் சலசலப்பையும் குற்றாலத்தின் சாரலையும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

அலங்கார பூச்சு இல்லாமல் அவர் பயன்படுத்தும் எளிய சொற்களில் கவிதையின் உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தி விடுவார்.இயற்கை மற்றும் மண் மனத்தின் தன்மைகளில் அவரது வரிகளில் காணலாம்.

அதனால் தான் அருவி என்று சொல்லும் போது கிடைக்க கூடிய அனுபவம் நீர்விழிச்சி என்று சொல்லும் போது கிடைக்காமல் போவதாக அவர் பதறுவதை உணரலாம்.

அருவி என்றால் குற்றாலம் தான்.குற்றாலத்தை அருவி என்று தான் சொல்ல வேண்டும்.

கவிஞர் என்றில்லை,எல்லோருக்குமே சொற்களின் பிரயோகத்திலும் பயன்பாட்டிலும் விறுப்பு வெறுப்பு உண்டு.

குறிப்பிட்ட சொற்களை பயன்படுத்துவதையோ ஏன் பார்ப்பதை கூட பலர் வெறுக்கலாம்.சில சொற்கள் உச்சரிக்கப்படும் விதம் அல்லது அவற்றுக்கான எழுத்துக்கள் எழுதப்படுவதை பார்த்து சிலர் ஆவேசப்படலாம்.உதாரண‌த்திற்கு ஆங்கிலத்தில் கலர் எனும் சொல்லை எழுதும் போது நடுவே வரவேண்டிய யு எழுத்தை விடப்படுவது ஆங்கில தூய்மை விரும்பிகளுக்கு அதிருப்தி தரலாம்.

இப்படி எண்ணற்ற உதாரணங்களை சொல்லலாம்.

இது போல எரிச்சல் தரும் சொற்களை இணையத்தில் உலாவும் போது கண்ணில் படக்கூடாது என நீங்கள் நினைத்தால் அத்தகைய சொற்களை அப்படியே தடுத்து நிறுத்தி அதற்கான மாற்றும் சொல்லை தோன்றச்செய்யும் வசதியை குரோம் பிரவுசர் மூலம் கூகுல் வழங்குகிறது.

இதற்காக இன் மை வேர்ட்ஸ் என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள பிரவுசர் நீட்சி வசதியை டவுண்லோடு செய்து கொண்டால் பார்க விரும்பாத சொற்களை அதில் குறிப்பிட்டு அவற்றை தடுக்க கேட்டுக்கொள்ளலாம்.அதன் பிறகு அந்த சொற்கள் எங்கே தோன்றினாலும் அவை மறைக்கப்பட்டு அதற்கு பதிலாக நீங்கள் குறிப்பிட்ட சொல்லே தோன்றும்.

எடுத்துகாட்டாக பேஸ்புக் என்ற சொல் உங்களுக்கு பிடிக்கவில்லை என்று வைத்து கொள்ளுங்கள் அதன் பிறகு பேஸ்புக் தொடர்பான கட்டுரை அல்லது செய்திகளில் அத‌ற்கு பதிலாக புக்பேஸ் என்ற வார்த்தை வருமாறு கூட செய்து கொள்ளலாம்.இவ்வளவு ஏன் கூகுல் பெயரை கூட மாற்றிக்கொள்ளலாம்.

ஆங்கில மொழிக்கான வசதி தான் என்றாலும் தமிழிலும் இது போன்ற வ‌சதி இருந்தால் நீர்விழிச்சி எல்லாம் அருவியாகட்டும்.

இணையதள முகவரி;https://chrome.google.com/webstore/detail/in-my-words/ifallpipodahhpbnemkhiddofdkhlekg